Apr 8, 2010

விதியின் அமைப்பு ஓர் நினைவூட்டல்‏

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
விதியின் அமைப்பு ஓர் நினைவூட்டல்
நான் ஒரு நாள் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அவர்கள் சிறுவரே! உமக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிரேன்.
அல்லாஹ்வின் கட்டளைகளை பேனிக் கொள்ளும். அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அல்லாஹ்வின் கட்டளைகளை பேணிக் கொள்ளும் அல்லாஹ் உமக்கு உதவுவான், எதைக்கேட்டாலும் அல்லாஹ்விடம் கேட்பீராக ! உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடுவீராக !
அறிந்து கொள்க !
மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஏதாவதொரு பொருள் கொண்டு உமக்கு பயன் வழங்க நாடினாலும், அல்லாஹ் உமக்கு எதை எழுதியுள்ளானோ அப்பொருளைக் கொன்டேத் தவிர வேறு எதனை  கொண்டும் அவர்களால் உமக்கு பயன் அளிக்கவும், முடியாது இடர் இழைக்கவும் முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன, ஏடுகள் காய்ந்து விட்டன, தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நூல்- திர்மிதி
மற்றொரு அறிவிப்பில்
அல்லாஹ்வின் கட்டளைகளைப்  பேணிக்கொள் !
அவனை உமக்கு முன்னால் பெற்றுக்கொள்வாய் !
உமது செழிப்பான காலங்களில் அவனுக்கு நன்றி செலுத்துவாயாக !
உமது கஸ்ட்டமான காலத்தில் அவன் உமக்கு உதவுவான்.
அறிந்து கொள்க !
உம்மை எது வந்தடையாமல் சென்று விட்டதோ, அது உமக்கு சேர வேண்டியதல்ல.
உம்மை எது வந்தடைந்து விட்டதோ அது உம்மை விட்டு தவறி சென்று விடக் கூடியதுமல்ல.
அறிந்து கொள்க !
நிச்சயமாக உதவி பொருமையுடன் உள்ளது,
நிச்சயமாக மகிழ்ச்சி கஸ்டத்துடன் உள்ளது,
நிச்சயமாக துன்பம் இன்பத்துடன் உள்ளது,
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி ) அவர்கள். நூல் திர்மிதி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இதைப் படிப்பவர்களில் அனேகர் இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை ஏற்கனவே அறிந்தவர்களாக இருந்தாலும் அற்ப உலகின் இன்ப வாழ்வு சிலநேரம் விதியின் அமைப்பை மறக்கடிக்கச் செய்து வரம்பு கடக்கச் செய்து விடுவதால் இம்மடல் ஓர் நினைவூட்டல் மட்டுமே.
முந்தவும் செய்யாது...
மனிதன் உயிர் வாழும் கால அளவு அவனுடைய விதியில் எழுதப்பட்டதிலிருந்து வினாடிப் பொழுதுக் கூட முந்தவும் செய்யாது, பிந்தவும் செய்யாது என்பதை நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே நடந்த பல அதிசயத்தக்க சம்பவங்களின் மூலமாக மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
அறவே ஆக்ஸிஜன் புக முடியாத 200அடி, 300அடி அதள பாதாளத்தின் கும்மிருட்டுக்குள்; சிறு குழந்தைகள் விழுந்து இரண்டு, மூன்று நாட்கள் வரை மயங்கிய நிலையில் கிடந்து வெளியில் கொண்டு வந்து உயிர் பிழைத்த அதிசயத்தைக் கண்டு மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
சமீபத்தில் ஏமன் நாட்டு விமானம் ஒன்று காமரோஸ் நாட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது கடலில் விழுந்து நொருங்கி அனைவரும் உயிரிழந்து சில சடலங்கள் கடலுக்கு மேல் மிதந்து கொண்டிருந்த பொழுது அதனூடே 14 வயது சிறுமி பல மணிநேரம் மிதந்து உயிர் பிழைத்த அதிசயத்தைப் படித்து மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
ஒரே ஒரு இரவு இறந்த சடலத்துடன் பொழுது விடியும் வரை எவராலும் தணித்து உறங்கி எழ முடிவதில்லை. நேற்று வரை உயிருக்குயிராய் உற்ற துணையாய் இருந்தவர் இன்று செத்த சடலம்  அதுவும் பேயாக மாறிப் பிடித்து விடுவாரோ என்ற பீதியில் உறைந்து இவரும் சேர்ந்து இறந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
நடுக்கடலில் நள்ளிரவு நேரத்தில், சடலங்களுக்கு மத்தியில் கழுத்து எலும்பு முறிவுடனும்தீக்காயங்களுடனும் கை கால்களை அசைத்துக் கொண்டு பல மணி நேரம் அந்த சிறுமிப் போராடி இருக்கின்றார் என்றால் அது அந்த சிறுமியால் அதுவும் அந்த நிலையில் முடிகின்றக் காரியமா
முடியாது !
காரணம் !
கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்ததால் நிமிர்ந்து நீச்சலடிக்க முடியாது,
நிமிறாமல் படுத்த நிலையில் நீச்சலடித்தால் வாய் வழியே உப்பு நீர் உட்புகுந்து மூச்சுத் திணறி உடல் கடலுக்கடியில் தாமாக இழுத்துச் சென்று விடும்.
நீச்சலடிக்க முடிந்தாலும்
எத்தனை மணிநேரம் ?
எவ்வளவு தூரம்
எந்த திசை அறிந்து எங்கே செல்வது ?   
மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும் வரை அச்சிறுமி மிதந்து கொண்டிருந்த இடத்தில் அலைகள் அடங்கிக் கொண்ட அதிசயம், அலைகள் அடித்திருந்தால் பிணங்களுடன் சேர்ந்து சிறுமியும் இழுத்துச் செல்லப்பட்டிருப்பார்.
மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும் வரை கடல்வாழ் உயிரிணங்கள் தடுக்கப்பட்ட அதிசயம், கடல்வாழ் உயிரிணங்கள் அங்கு வந்திருந்தால் இரத்த ஓட்டம் நின்று விட்ட செத்த சடலங்களை விட்டு விட்டு இரத்த ஓட்டமுள்ள சிறுமியை கொத்தி கடலுக்குள் இழுத்து சென்றிருக்கும்.
பாலுங் கிணற்றில் வீசப்பட்ட சிறுவர் யூசுப் நபியை வழிப்போக்கர்கள் அக்கிணற்றில் தண்ணீருக்காக வாளியை விடும்வரை பாதுகாத்து வைத்திருந்து வாளியை பற்றிப் பிடித்துக் கொண்டு மேலெழச் செய்த வல்லமை மிக்க இறைவனுக்கு (அல்குர்ஆன் 12:9 ) இதுப் பெரிய விஷயமல்ல மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும்வரை அலைகளையும், மீன்களையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.
தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதால் அந்த சிறுமி உலகில் உயிர் வாழும் கால அளவு மீதமிருந்ததால் அவளை மட்டும் காப்பாற்றி கரை சேர்ப்பது இறைவனின் பொறுப்பில் உள்ளது என்பதால் அதிசயமாய் உயிர் பிழைத்த சிறுமி என்ற தலைப்பிட்டு உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.http://www.tamilnews.cc/index.php?option=com_content&view=article&id=1530:2009-07-02-05-34-49&catid=35:world-news&Itemid=61  http://www.meelparvai.net/index.php?view=article&catid=115%3A2009-02-12-05-17-06&id=719%3A2009-07-15-10-24-17&option=com_content&Itemid=322
உயிரிணங்களைப் படைத்து அவைகள் வாழ்வதற்கு ஏற்றாற்போல் பிரபஞ்சத்தை வடிவமைத்த படைப்பாளன் அல்லாஹ் இந்த பிரபஞ்சத்தையும், அனைத்து உயிரினங்களையும் அழித்து மீண்டும் எழுப்பும் சர்வ சக்தி படைத்தவன். என்பதை உறுதியாக நம்புகிறோம்.
பிந்தவும் செய்யாது... 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதீனாவிலிருந்து மக்காவிற்கு வருகை தந்திருந்த ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்கள் உமையா என்ற இறைமறுப்பாளரை சந்தித்து நீ விரைவில் கொல்லப்படவிருப்பதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன் என்றுக்கூறினார். அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார் புகாரி 3632.
இதைக் கேட்டதும் இறைத்தூதர் அவர்களுடைய தூதுத்துவத்தை அதுவரை மறுத்து வந்த உமையா இறைத்தூதர் அவர்களுடைய முன்னறிவிப்பு நிகழ்ந்தே தீரும் என்று உறுதியாக நம்பினார்.
இனி மக்காவை விட்டு வெளியில் போக மாட்டேன் என்று தன் மனையிவிடம் சத்தியம் செய்துக் கூறி விட்டு மரணப் பிடியிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்தினார்.
சிறிது நாட்களில் பத்ரு யுத்தம் முடிவானதும் இந்த யுத்தத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று ஓடி ஒளியத் தொடங்கினார் ஆனால் விதி அவரை விடாமல் விரட்டியது. நபிகள் நாயகத்தின் முன்னறிப்பை நம்பி இன்னார் ஓடி ஒளிகிறார் என்றத் தகவல் அபூஜஹ்லுக்கு தெரியப்படுத்தியதும் அபூஜஹ்லே அவரை நேரடியாக சென்று சந்தித்து நரேந்திர மோடி ஸ்டைலில் பேசி யுத்தத்திற்கு தயார் படுத்தி விடுகிறார்.
மன்னரே நேரடியாக வந்து மதவெறியூட்டியதால் வேறுவழியின்றி ஒத்துக்கொண்டவர் மரண பாதுகாப்பு வளையத்தை யுத்தகளத்தில் போட்டுக் கொள்வதற்கான தீவிர ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து கொண்டார். தோல்வியைத் தழுவும் நிலை உருவானால் யுத்த களத்திலிருந்து விரைந்து தப்பித்து விடுவதற்காக பயிற்சி அளிக்கபட்ட விலை உயர்ந்த ஒட்டகம் ஒன்றையும் வாங்கிக் கொண்டார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) வாயிலாக இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார் நூல் புகாரி 3950.
யுத்தகளத்தில் மிகவும் கவனமாக நடந்து கொண்ட பொழுதிலும் இவருடைய முன்னாள் அடிமை உறுதி மிக்க ஏகத்துவ வாதியாகிய பிலால்(ரலி) அவர்களின் பார்வையை இவர் மீது இறைவன் திருப்பி விட்டான். பிலால்(ரலி) அவர்களின் பார்வை உமையாவின் மீதுப் பட்டதை அறிந்த உமையாவின் பாதுகாப்பு ஒப்பந்ததாரர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் குறுக்கிட்டு பிலால் (ரலி) அவர்கள் எறியும் ஈட்டியோ, அம்போ அவரைத் தாக்கி விடாமல் இருப்பதற்காக உமையாவைக் கட்டி அனைத்து கீழே தள்ளி மேலேப் படுத்து மறைத்துக்கொள்கிறார் இவரும் மரண பீதியில் தப்பித்தால் போதும் என்று ஆடாமல் அசையாமல் கிடக்க அவரது விலாப் புறத்தின் சிறிய இடைவெளியில் பிலால்(ரலி) அவர்கள் ஈட்டியை சொருகக் கதை முடிந்து விடுகிறது. அப்துர்ரஹ்மான் இப்னுஅவ்ஃப்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 2301.
தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதால் அவர் கொல்லப்படவிருக்கும் செய்தியை இறைத்தூதர் வாயிலாக முன்கூட்டியே அறிந்து தனது வாழும் காலஅளவை நீட்டித்துக் கொள்வதற்காக அவர் செய்துகொண்ட முன்னேற்பாடுகள் அனைத்தும் விழலுக்கு இரைக்கும் நீராகியது.
மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி...
பெருமானார்(ஸல்) அவர்கள் மக்கத்துக் குறைஷிகளின் துண்புருத்தலில் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மதீனத்து மக்களில் சிலர் பெருமானார்(ஸல்) அவர்களை சந்தித்து பாதுபாப்பு வழங்குவதாக வாக்குறுத்தி அளித்து மதீனாவிற்கு அழைத்தனர் பெருமானார்(ஸல்) அவர்கள் இறைவனின் உத்தரவு வந்ததும் மதீனா சென்றார்கள் மதீனா வாசிகள் வாக்குறுதிக்கு மாற்றம் செய்யாமல் பாதுகாப்பு வழங்கினார்கள் அதனாலேயே அன்சாரிகள் (உதவியாளர்கள்) என்ற சிறப்புப் பெயரை அவர்களுக்கு பெருமானார்(ஸல்) அவர்கள் சூட்டி அழைத்தனர். 
பெருமானார்(ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின் அவர்களது பேரர் ஹூசைன்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் கூபா வாசிகளில் சிலர் அவர்களை சந்தித்து நாங்கள் முழு ஒத்துழைப்புத் தருகிறோம் யஜீதுடைய ஆட்சியை அகற்றவதற்காக படையெடுத்து வாருங்கள் என்று வாக்குறுதி அளித்து கூபாவிற்கு அழைத்தனர் அவர்களின் வாக்குறுதியைமட்டும் நம்பி குடும்பத்தார்களுடன் ஹூசைன்(ரலி) அவர்கள் படைநடத்தி கூபாவிற்குச் சென்றனர் ஆனால் வாக்குறுதி அளித்த கூபாவாசிகள் ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்துப் பின்வாங்கி விட்டனர் அதனால் கர்பாளாவில் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஷஹீதாக்கப்பட்டனர். அல்லாஹ் உமக்கு எதை எழுதியுள்ளானோ அதைத் தவிர வேறு எதனைக் கொண்டும் அவர்களால் உமக்கு பயன் அளிக்கவும், முடியாது இடர் இழைக்கவும் முடியாது.
கர்பளா யுத்தம் முழு விபரம் கீழ்காணும் லிங்கை சொடுக்கவும். http://onlinepj.com/audio_uraikal/ramalan_thodar_sorpolivugal/72_koottam/
உம்மை எது வந்தடையாமல் சென்று விட்டதோ... . உம்மை எது வந்தடைந்து விட்டதோ
சிலர் தனது தி றமையினால் சாதித்து விட்டதாக பீற்றிக் கொள்வர்.
பலர் தனக்கு திறமை இருந்தும் சாதிக்க முடிய வில்லையே என்று ஏங்கித் தவிப்பர். 
இரண்டும் தவறு !
யாருடைய தனித் திறமையினாலும் எதையும் சாதிக்க முடியாது,
எண்ணங்கள் மட்டும் அலைபாயும்,
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்.
ஆயிரத்தில் ஒன்றுக் கூட எண்ணிய படி நிகழ்வதில்லை, நிகழாது. 
ஏற்கனவே இறைவனால் எழுதி அனுப்பியது மட்டுமே நிகழ்ந்துள்ளது, நிகழும்.
கோடி கோடியாய் சொத்துக்களைக் குவித்து வைத்திருந்தும் அதை ஆள்வதற்கு ஒரே ஒரு வாரிசுக் கூட இல்லாமல் ஏங்கிக் கொண்டிருப்பவரின் பக்கதில் வாடகை குடியிருப்புகளில்  பரம ஏழைகள் பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள்.  
நோயும் பாயுமாய் பல வருடங்கள் மல,ஜலத்துடன் மரணத்தைக் கூவி அழைத்தும் அவரது அழைப்பை ஏற்றுத் தழுவிக் கொள்ள மறுத்து, நோய் நொடி இல்லாமால் வாட்ட சாட்டமாக இருந்த  பக்கத்து வீட்டு வாலிபனை வாரி சுருட்டிக் கொண்டு சென்று விடும்  அகால மரணம். 
பல லட்சத்தை முடக்கி பல வருடங்கள் மருத்துவம், பொறியியல் என்றுப் படித்து விட்டு அவர்கள் ஈட்டும் வருமானத்திற்கு நிகரான வருமானத்தை பாலர் பள்ளியில் கூட சென்றுப் பயிலாத பக்கத்து வீட்டுக்காரர் ப்ளாட்பாரக் கடை நடத்தி ஈட்டிடுவார். 
சமீபத்தில் பங்குசந்தைகளில் முதலீடுசெய்த ஏராளமான திறமைசாலிகளின் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவை அடைந்தது.
பல்லாயிரம் கோடிகளைக் கொண்டு ஏற்கனவே உலக பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் அம்பானி சகோதரர்களின் பொருளாதாரம் கடந்த பட்ஜெட்டில் மட்டும் தாமாக பலகோடிகளை அதிகரித்துக் கொண்டன.
வாழ்ந்தவர்கள், வீழ்ந்தவர்களின் வரலாற்றைப் புரட்டினால் வாழ்ந்தவர்கள் புத்திசாலிகளாகவும், வீழ்ந்தவர்கள் முட்டாள்களாகவும்  இருந்ததாக அதிகபட்சம் வரலாற்றில் இருக்காது.
என்ன தான் எண்ணெயைத் தடவிக் கொண்டு மண்ணில் உருண்டுப் புரண்டாலும் ஒட்டுகிற மண்ணு தான் ஒட்டும் என்று (இறைவனால் எழுதப்பட்டதையே அடைந்து கொள்ள முடியும் எழுதப்பட்டதற்கு மேல் அதிகமாக எதையும் அடைந்து கொள்ள முடியாது என்பதை விளங்கும் விதமாக) இன்றுக் கூறுகின்றனர்.  
இதையே 1400 வருடங்களுக்கு முன்பு ஏகஇறைவனின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் எளிய நடையில் மிக அழகாக உம்மை எது வந்தடையாமல் சென்று விட்டதோ, அது உமக்கு சேர வேண்டியதல்ல. உம்மை எது வந்தடைந்து விட்டதோ அது உம்மை விட்டு தவறி சென்று விடக் கூடியதுமல்ல. என்று எடுத்துக் கூறினார்கள்.
உமது செழிப்பான காலங்களில்...
நம்முடைய வளமான காலங்களில் இறைவனுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபட்டால் நம்முடைய நெருக்கடியான காலங்களில் இறைவன் நமக்கு துணைப் புரிவான்.
பெருமானார்(ஸல்) அவர்களுடைய வளமான காலங்களில் இறைவழியில் வாரி வழங்கினார்கள்இளமைக் காலத்தில் இறைவணக்கத்தில் மூழ்கித்திளைத்தார்கள், எளிமையையும், தன்னடக்கத்தையும் பேணினார்கள் அதனால் அவர்களின் நெருக்கடியான காலங்களாகிய பத்ரு, கைபர் போன்ற காலங்களில் அவர்களது பிரார்த்தனையை ஏற்று இறைவன் உதவிப் புரிந்தான், உஹதில் உயிரைக் காப்பாற்றினான், யூதப்பெண் உணவுக்கழைத்து இரைச்சியில் கலந்துகொடுத்த விஷத்தின் வீரியத்தை கட்டுப்படுத்தினான். உமது செழிப்பான காலங்களில் அல்லாஹ்வை அறிந்து கொள். அவனுக்கு நன்றி செலுத்துவாயாக !  உமது கஸ்ட்டமான காலத்தில் அவன் உம்மை அறிவான் உமக்கு உதவுவான்.
படைப்பாளன் அல்லாஹ் மனிதனைப் படைக்கும் பொழுதே அவன் உலகில் உயிர் வாழும் கால அளவு, அடைந்துகொள்ளும் பொருள்வளங்கள் போன்றவைகள் துல்லியமாக எழுதப்பட்டே உலகுக்கு அனுப்பப்படுகின்றான். உயிர் வாழும் கால அளவிலிருந்து அவனால் முந்தவும் முடிவதில்லை,  பிந்தவும் முடிவதில்லை அதேப்போல் பொருள் வளங்களை அதிகரிக்கச் செய்யுவும் முடியவில்லை, அதுக் குறைவதை நிருத்தவும் முடிவதில்லை விதியில் எழுதப்பட்டுள்ளதை விட எண்ணியப் படி எதையும் அடைந்துக் கொள்ள முடியவதில்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களுடைய தோழர்களுடைய இதயத்தில் விதியின் அமைப்பை உறுதியாகப் பதிய வைத்தக் காரணத்தால்  உயிருக்கு பயந்து எவருடைய அச்சுருத்தலுக்கும் அஞ்சாமல் சத்தியத்தில் நிலைத்து நின்றார்கள், இறைவனால் நமக்கு விதியாக்கப்பட்டதை நாம் அடைந்தே தீருவோம் அது நம்மை விட்டுத் தவறிச் செல்லாது என்ற உறுதியான நம்பிக்கையில் பொருளாதாரம் ஈட்டுவதில் ஹராம் - ஹலால் பேணினார்கள்.
சுரண்டலில் ஈடுபடவில்லை.
அரசப் பதவிக்காக தன்மானத்தை இழக்க வில்லை,
துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அஞ்சி தற்கொலைக்கு முயற்சிக்க வில்லை,
வறுமைக்கும், வரதட்சனைக்கும் பயந்து பெண் சிசுவை கருணை கொலை செய்ய முயற்சிக்க வில்லை,
படிப்பினைகள்.
நாமும் நம்முடைய வளமான காலங்களில் ஆரோக்கியமான உடல் நிலையில் இருக்கும் போதே இறைதிருப்பியைப பெறும் விதம் நற்செயல்கள் புரிய வேண்டும்.
நல்லவற்றயே எண்ண வேண்டும்,
இறைவன் நமக்கு உதவிப் புரிவான்.
நாம் எண்ணியதற்கு மாறாக நடந்துவிட்டால் விதியின் அமைப்பை நினைத்து சகித்துக்கொள்ள வேண்டும்.
அதிருப்தி அடையும் காரியம் நிகழ்ந்து விட்டால்
அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்.
ஒவ்வொரு நிலையிலும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. எனக்கூற வேண்டும் என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - நூல் - ஹாகிம்
இன்னும் விதியை உறுதியாக நம்புவதற்கு கீழ்காணும் லிங்கை சொடுக்கவும்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்.


நன்றி-அதிரை ஃபாரூக்

0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்