ஏகஇறைவனின் திருப்பெயரால்....
விதியின் அமைப்பு ஓர் நினைவூட்டல்
நான் ஒரு நாள் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அவர்கள் சிறுவரே! உமக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிரேன்.
அல்லாஹ்வின் கட்டளைகளை பேனிக் கொள்ளும். அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அல்லாஹ்வின் கட்டளைகளை பேணிக் கொள்ளும் அல்லாஹ் உமக்கு உதவுவான், எதைக்கேட்டாலும் அல்லாஹ்விடம் கேட்பீராக ! உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடுவீராக !
அறிந்து கொள்க !
மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஏதாவதொரு பொருள் கொண்டு உமக்கு பயன் வழங்க நாடினாலும், அல்லாஹ் உமக்கு எதை எழுதியுள்ளானோ அப்பொருளைக் கொன்டேத் தவிர வேறு எதனை கொண்டும் அவர்களால் உமக்கு பயன் அளிக்கவும், முடியாது இடர் இழைக்கவும் முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன, ஏடுகள் காய்ந்து விட்டன, தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நூல்- திர்மிதி
மற்றொரு அறிவிப்பில்
அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணிக்கொள் !
அவனை உமக்கு முன்னால் பெற்றுக்கொள்வாய் !
உமது செழிப்பான காலங்களில் அவனுக்கு நன்றி செலுத்துவாயாக !
உமது கஸ்ட்டமான காலத்தில் அவன் உமக்கு உதவுவான்.
அறிந்து கொள்க !
உம்மை எது வந்தடையாமல் சென்று விட்டதோ, அது உமக்கு சேர வேண்டியதல்ல.
உம்மை எது வந்தடைந்து விட்டதோ அது உம்மை விட்டு தவறி சென்று விடக் கூடியதுமல்ல.
அறிந்து கொள்க !
நிச்சயமாக உதவி பொருமையுடன் உள்ளது,
நிச்சயமாக மகிழ்ச்சி கஸ்டத்துடன் உள்ளது,
நிச்சயமாக துன்பம் இன்பத்துடன் உள்ளது,
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி ) அவர்கள். நூல் திர்மிதி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இதைப் படிப்பவர்களில் அனேகர் இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை ஏற்கனவே அறிந்தவர்களாக இருந்தாலும் அற்ப உலகின் இன்ப வாழ்வு சிலநேரம் விதியின் அமைப்பை மறக்கடிக்கச் செய்து வரம்பு கடக்கச் செய்து விடுவதால் இம்மடல் ஓர் நினைவூட்டல் மட்டுமே.
முந்தவும் செய்யாது...
மனிதன் உயிர் வாழும் கால அளவு அவனுடைய விதியில் எழுதப்பட்டதிலிருந்து வினாடிப் பொழுதுக் கூட முந்தவும் செய்யாது, பிந்தவும் செய்யாது என்பதை நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே நடந்த பல அதிசயத்தக்க சம்பவங்களின் மூலமாக மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
அறவே ஆக்ஸிஜன் புக முடியாத 200அடி, 300அடி அதள பாதாளத்தின் கும்மிருட்டுக்குள்; சிறு குழந்தைகள் விழுந்து இரண்டு, மூன்று நாட்கள் வரை மயங்கிய நிலையில் கிடந்து வெளியில் கொண்டு வந்து உயிர் பிழைத்த அதிசயத்தைக் கண்டு மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
சமீபத்தில் ஏமன் நாட்டு விமானம் ஒன்று காமரோஸ் நாட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது கடலில் விழுந்து நொருங்கி அனைவரும் உயிரிழந்து சில சடலங்கள் கடலுக்கு மேல் மிதந்து கொண்டிருந்த பொழுது அதனூடே 14 வயது சிறுமி பல மணிநேரம் மிதந்து உயிர் பிழைத்த அதிசயத்தைப் படித்து மெய்சிலிர்த்திருக்கின்றோம்.
ஒரே ஒரு இரவு இறந்த சடலத்துடன் பொழுது விடியும் வரை எவராலும் தணித்து உறங்கி எழ முடிவதில்லை. நேற்று வரை உயிருக்குயிராய் உற்ற துணையாய் இருந்தவர் இன்று செத்த சடலம் அதுவும் பேயாக மாறிப் பிடித்து விடுவாரோ என்ற பீதியில் உறைந்து இவரும் சேர்ந்து இறந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
நடுக்கடலில் நள்ளிரவு நேரத்தில், சடலங்களுக்கு மத்தியில் கழுத்து எலும்பு முறிவுடனும், தீக்காயங்களுடனும் கை கால்களை அசைத்துக் கொண்டு பல மணி நேரம் அந்த சிறுமிப் போராடி இருக்கின்றார் என்றால் அது அந்த சிறுமியால் அதுவும் அந்த நிலையில் முடிகின்றக் காரியமா ?
முடியாது !
காரணம் !
கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்ததால் நிமிர்ந்து நீச்சலடிக்க முடியாது,
நிமிறாமல் படுத்த நிலையில் நீச்சலடித்தால் வாய் வழியே உப்பு நீர் உட்புகுந்து மூச்சுத் திணறி உடல் கடலுக்கடியில் தாமாக இழுத்துச் சென்று விடும்.
நீச்சலடிக்க முடிந்தாலும்
எத்தனை மணிநேரம் ?
எவ்வளவு தூரம் ?
எந்த திசை அறிந்து எங்கே செல்வது ?
மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும் வரை அச்சிறுமி மிதந்து கொண்டிருந்த இடத்தில் அலைகள் அடங்கிக் கொண்ட அதிசயம், அலைகள் அடித்திருந்தால் பிணங்களுடன் சேர்ந்து சிறுமியும் இழுத்துச் செல்லப்பட்டிருப்பார்.
மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும் வரை கடல்வாழ் உயிரிணங்கள் தடுக்கப்பட்ட அதிசயம், கடல்வாழ் உயிரிணங்கள் அங்கு வந்திருந்தால் இரத்த ஓட்டம் நின்று விட்ட செத்த சடலங்களை விட்டு விட்டு இரத்த ஓட்டமுள்ள சிறுமியை கொத்தி கடலுக்குள் இழுத்து சென்றிருக்கும்.
பாலுங் கிணற்றில் வீசப்பட்ட சிறுவர் யூசுப் நபியை வழிப்போக்கர்கள் அக்கிணற்றில் தண்ணீருக்காக வாளியை விடும்வரை பாதுகாத்து வைத்திருந்து வாளியை பற்றிப் பிடித்துக் கொண்டு மேலெழச் செய்த வல்லமை மிக்க இறைவனுக்கு (அல்குர்ஆன் 12:9 ) இதுப் பெரிய விஷயமல்ல மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும்வரை அலைகளையும், மீன்களையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.
உயிரிணங்களைப் படைத்து அவைகள் வாழ்வதற்கு ஏற்றாற்போல் பிரபஞ்சத்தை வடிவமைத்த படைப்பாளன் அல்லாஹ் இந்த பிரபஞ்சத்தையும், அனைத்து உயிரினங்களையும் அழித்து மீண்டும் எழுப்பும் சர்வ சக்தி படைத்தவன். என்பதை உறுதியாக நம்புகிறோம்.