Sep 11, 2006

மூடப் பழக்கங்கள் 2

">Link
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்
பாகம் 2
ஜாதகமும் - ஜோதிடமும்

எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஏக இறைவனைத் தவிர வேறு எவருமே அறிய முடியாது என்று இறைமறை குர்ஆன் கூறுகிறது. (இன்னும் நபியே) நீர் கூறுவீராக. அல்லாஹ்வைத் தவிர்த்து வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார். இன்னும் (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். ( அல் குர்ஆன் 27 65) ஜாதகம் எழுதி வைப்பதும், ஜோதிடத்தை நம்புவதும், பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கும் புறம்பானவை. இஸ்லாத்திற்கு முரணான இக்கொடிய குற்றங்கள் இன்று பல்வேறு பெயர்களில் பாமரர்கள் மட்டுமின்றி படித்தவர்களிடமும் பரவி விட்டன. பெயர் ராசி, பிறந்தநாள் ராசி, பெண் ராசி, கல் ராசி, கலர் ராசி, இட ராசி, இனிஷியல் ராசி, என்று எத்தனைப் பெயர்களில் அவதாரம் எடுத்தாலும், கைரேகை ஜோதிடம், கம்ப்யூட்டர் ஜோதிடம், கிளி ஜோதிடம், பால் கிதாபு ஜோதிடம், என்று எத்தனைப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இவை அத்தனையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இவை அனைத்துமே மூட நம்பிக்கை மட்டுமல்ல, மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள். எவர் குறி சொல்பவனிடம் சென்று அவன் சொல்வதை உண்மையென நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர் அபூ ஹூரைரா. ஆதாரம் முஸ்லிம்) நமது எதிர் காலத்தைக் கணித்துச் சொல்வதாகக் கூறி ஏமாற்றுகிறவன், நாள் முழுவதும் வீதிக்கு வீதி காத்துக் கிடக்கிறான். வீடு வீடாக ஏறி இறங்குகிறான். அன்றைய தினத்தில் எத்தனை பேர் தன்னிடம் ஜோதிடம் பார்ப்பார்கள் என்பதைக்கூட அவனால் கணிக்க முடியவில்லை. தன்னுடைய ஒரு நாள் பொழுதைப் பற்றிக் கூட அறிந்துக் கொள்ள முடியாதவன் அடுத்தவருடைய எதிர்காலத்தை கணித்துச் சொல்வான் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்? ஜோதிடம் என்றதும், பிற மத ஜோதிடக் காரர்களை மட்டும் என்று பலரும் கருதுகின்றனர். பால் கிதாபும் ஒரு வகை ஜோதிடமே! பால் கிதாபு பார்க்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் ஜோதிடக் காரர்களே! என்பதை மறந்து விடக்கூடாது. பால் கிதாபு பார்த்துப் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்பவர்களின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் கவனித்தால் ஏராளமான பிரச்சினைகள் இருக்கும். தமக்குத் தாமே பால் கிதாபு பார்த்து பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வக்கற்றவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்துவார்கள் என்று எப்படி நம்புகிறிர்கள்? ஒவ்வொருவரும் பிறக்கும்போது ஏற்படும் கோள்களின் சஞ்சாரமே நல்லதும் கெட்டதும் நடப்பதற்குக் காரணம் என்று நம்பும் புத்தி கெட்டவர்கள், புயல் வெள்ளத்திலும், பூகம்பத்திலும் ஒட்டு மொத்தமாக ஒரு ஊரே அழியும் போது, அந்த ஊரில் வாழ்ந்த, பல்வேறு காலங்களில் பிறந்த அனைவருக்குமே எப்படி ஒரே ஜாதகம் அமைந்தது? என்பதைக் கூட சிந்திக்க வேண்டாமா? ஜாதகமும் ஜோதிடமும் மூட நம்பிக்கைகளில் முதலிடம் வகிப்பவை என்பதை உணர்ந்து, முஸ்லிம் சமுதாயம் முற்றிலும் விடுபட வேண்டும். இறை நம்பிக்கையில் இன்னும் உறுதி வேண்டும்.

தாயத்தும் தகடுகளும்

அல்லாஹ்வின் வசனங்களை, அரபி எண்களாக உருமாற்றி அப்படியே சுருட்டி அலுமினியக் குழாய்களில் அடைத்து, கருப்பு நூலில் கோர்த்துக் கழுத்திலும், கைகளிலும், இடுப்பிலும் கட்டீக் கொண்டால், பில்லி சூனியம் பேய் பிசாசுகளை விட்டும் பாதுகாப்புக் கிடைக்கும் என்று சில அரைக் கிறுக்குகள் சொன்னதை நம்பி, ஆயத்துகளைத் தாயத்துகளாக்கித் தொங்க விட்டுக் கொண்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ நிச்சயமாக அவர் இறைவனுக்கு இணை வைத்துவிட்டார். (ஆதாரம்: அஹ்மத்) தற்காப்புக்காகப் பலரும் கராத்தே கற்றுக் கொண்டிருக்கும்போது - வெறும் தாயத்துகளில் தற்காப்புத் தேடும் இவர்களின் மடமையை என்னவென்பது? தாயத்துகளை நியாயப் படுத்துவோர், அதில் குர்ஆன் வசனங்கள் தானே எழுதப்படுகின்றன என்று கூறுவர். அப்படியானால், குர்ஆன் ஆயத்துகளைக் கட்டிக் கொண்டு மலம் கழிக்கச் செல்லலாமா? என்று கேட்டால், ஆயத்துகளுக்கு பதிலாக அரபி எண்கள் தானே எழுதப்படுகின்றன என்று பதில் கூறுவர். இதிலிருந்து எண்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எண்கள் எப்படிப் பாதுகாக்கும்? என்பதைப் புரிந்துக் கொள்வதில்தான் முட்டாள்களாக இருக்கின்றனர். சில தாயத்துகளைப் பிரித்துப் பார்த்தால், சினிமா டிக்கட்டுகளும், பஸ் டிக்கட்டுகளும் கூட இருக்கும். இவை அவசரமாகத் தயாரிக்கப்பட்ட 'அர்ஜன்ட்' தாயத்துகள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம் தான். தங்கள் வயிற்றை நிரப்ப, கயிற்றை விற்று ஏமாற்றுகிறார்கள். இன்னுமா நீங்கள் ஏமாறப் போகிறீர்கள்? ஷிர்க்கை ஏற்படுத்தும் தாயத்துகளை அறுத்து எறியுங்கள். அரபி எண்களை குறுக்கெழுத்துப் போட்டிக் கோடுகளில் அடக்கிப் பித்தளைத் தகடுகளை பிரேம் போட்டு மாட்டி வைத்தால், வீட்டுக்குப் பாதுகாப்பு என்று மூளையற்றவர்கள் சொன்னதை நம்பி மூலைக்கு மூலைத் தொங்க விட்டவர்கள் - இறை வணக்கங்களால் தங்கள் இல்லங்களை நிரப்புவதை விட்டு, ஈயம் பித்தளைத் தகடுகளில் தங்கள் ஈமானைப் பறி கொடுத்தவர்கள் - பில்லிச் சூனியத்திலிருந்து பாதுகாக்கும் என்று நம்பிப் படிகாரக் கற்களை வீட்டுப் படிகளில் மாட்டி வைத்தவர்கள்- கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று புத்தி கெட்டுப் போய் பூசணிக்காயைக் கட்டி வைத்தவர்கள் - இனியேனும், இவைகள் யாவும் இஸ்லாத்திற்கு முரணான மூடப் பழக்கங்கள் என்பதை உணர வேண்டும். வீடுகளில் மட்டுமின்றி, வியாபார நிறுவனங்களிலும் இந்த அஸ்மாத் தகடுகளை மாட்டி வைத்தால், வியாபாரம் பெருகும் என்று மூட நம்பிக்கைக் கொண்டவர்கள் - இந்தத் தகடுகளை விற்பனை செய்வோர், தாங்கள் தயாரித்தத் தகடுகள் முழுவதும் விற்றுத் தீரும்படித் தங்களுக்குத் தாங்களே தகடு செய்துக் கொள்ளாமல், கடைக் கடையாய் அலைவதைக் கண்ட பிறகாவது, இது ஏமாற்று வேலை என்பதை உணர வேண்டாமா? தரமானப் பொருளும், நியாயமான விலையும், கனிவானப் பேச்சும் தான் வியாபாரத்தைப் பெருக்குமே தவிர, பித்தளைத் தகடுகளும், பிரேம் போட்ட அஸ்மாக்களும் ஒரு போதும் வியாபாரத்தைப் பெருக்காது, மாறாக பாவப் படுகுழியில் கொண்டு போய் தள்ளும் என்பதை உணர வேண்டும்.

செய்வினையும் - பொய்வினையும்

உடல் நில சரியில்லை என்றால், உரிய மருத்துவம் செய்ய வேண்டும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். அதை விட்டு விட்டுச் சிலர், மந்திரவாதிகளையும், மலையாளத் தங்கள் களையும் அணுகிப் பரிகாரம் தேடுகின்றனர். ஏமாற்றிப் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்ட எத்தர்களுக்கு இவர்களைக் கண்டால் கொண்டாட்டம் தான். நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லை, எல்லா வகையான மருத்துவமும் பார்த்தாகி விட்டது என்று இவர்களே வாக்கு மூலம் கொடுக்க - சரியான இளிச்சவாயன் கிடைத்து விட்டான் என்று மந்திரவாதி அசரத்துகளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. 'உங்களுக்கு செய்வினை செய்யப் பட்டுள்ளது' 'நீங்கள் எந்த டாக்டரைப் பார்த்தும் ஒரு பயனும் இல்லை' என்று சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குக் கொஞ்சம் செலவு ஆகும் என்று அவர் தனது முதல் வியாபாரத்தை ஆரம்பிக்க - கொஞ்சம் கொஞ்சமாக இருக்கின்ற பணத்தையெல்லாம் இழந்து - கடனும் வாங்கிகிச் செலவு செய்துக் கடைசியில் கண்ட பலன் ஒன்றும் இருக்காது. இழந்தது பணத்தை மட்டுமல்ல, ஈமானையும் கூட என்பதை இந்தப் பாவிகள் உணர மாட்டர்கள். யாரோ யாருக்கோ செய்து வைத்தது இவனுக்கு எப்படித் தெரியும்? என்பதைக் கூட இந்த மூடர்கள் சிந்திப்பதில்லை. இவர்களுக் கெல்லாம் தலையில் மூளைக்கு பதில் வேறு என்னவோ இருக்கின்றது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. செய்வினை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னவன் அத்துடன் நிறுத்திக் கொள்ள மாட்டான். அவனது ஈனத்தனமான பிழைப்பும் வருமானமும் தொடர வேண்டுமே! 'உங்களுக்கு வேண்டியவர் - உறவினர் தான் செய்து வைத்திருக்கிறார்கள்' என்று அந்த அயோக்கியன் சொல்ல - தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், இப்படி ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்பட்டு வீண்பழி சுமத்தி, இதன் காரணமாக நெருங்கிய சொந்த பந்தங்கள், உடன்பிறந்தவர்,அண்டை அயலார், அனைவர் மீதும் பகைமைகொண்டு பிரிந்து போன குடும்பங்கள் எத்தனையோ ஒரு தாய் வயிற்றில் பிறந்து - உயிருக்குயிராய் நேசித்து அன்பு செலுத்தி - ஆதரவாய் அணுசரனையாய் இருந்த சகோதர சகோதரிகள் கூட, கண்ட கண்ட கழிசடைகளின் பேச்சையெல்லாம் நம்பி, செய்வினை என்னும் பொய் வினையில் மூழ்கிப் போய் இரத்த பந்தங்களை முறித்துக் கொள்கின்றனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இரத்த பந்த உறவு அல்லாஹ்வின் அர்ஷைப் பிடித்துக் கொண்டு கூறும். யார் என்னை சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். என்னை யார் துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான். யாரும் யாருக்கும் எதுவும் செய்யலாம் என்று நம்புபவர்கள், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச் செயல்படுபவர்களுக்கும், பேசுபவர்களுக்கும், எதிராகச் செய்து வைக்க வேண்டியது தானே! செயல்பட முடியாமல் கை கால்களை முடக்க வேண்டிளது தானே! பதவிப் போட்டியிலும், அரசியல் போட்டியிலும், தொழில் போட்டியிலும், ஒருவரையொருவர் வீழ்த்த தங்கள் ஆற்றலையும் திறமையையும், பொருளாதாரத்தையும், வீணடிப்பதை விட்டு விட்டுச் செய்வினையையும், பில்லி சூனியத்தையும் பயன்படுத்த வேண்டியது தானே! இவை அனைத்தும் எமாற்று வேலை என்பதற்குச் சிறிதளவேனும் சிந்திப்பவர்களுக்கு - இந்த உதாரணங்கள் போதும்.

பேயும் இல்லை பிசாசும் இல்லை

இறந்து போனவர்களின் ஆன்மா மறுபடியும் வரும் என்றும் மனிதர்களைத் தீண்டும் என்றும், இவை தான் பேய் என்றும், பிசாசு என்றும் சில மூடர்கள் நம்புகின்றனர்;. இந்த மூட நம்பிக்கையை மூட்டை கட்டி வைத்து விட்டு, முதலில் இறந்தவர் ஆத்மா குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது? என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டால், பேய் பிசாசுகளின் பெயரால் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது. ஒருவர் மரணித்து விட்டால், மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்ட பின் மலக்குகள் அவரிடம் விசாரனை நடத்துவர். அவர் நல்லவராக இருந்தால்- 'புது மாப்பிள்ளையைப் போல் உறங்குவீராக' என்று கூறப்படும். அல்லாஹ் அவரை மண்ணறையிலிருந்து எழுப்பும் நாள் வரை அவர் உறங்கிக் கொண்டே இருப்பார். கெட்டவராக இருப்பின் மறுமை நாள் வரை மண்ணறையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டே இருப்பார் என்பதை ஆதாரப்பூர்வமான நபி மொழிகளின் மூலம் அறியலாம். உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்கு காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்தில் இருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்) மேலும் 'அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்றவரை இதுவே (கப்ரே) உனது தங்குமிடம்' என்று கூறப்படும். என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம் புகாரி) இதிலிருந்து நல்லவர்களோ, கெட்டவர்களோ, எவருமே மறுபடியும் இவ்வுலகுக்குத் திரும்பி வர முடியாது என்பதை அறியலாம். இவ்வளவு தெளிவாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்து விட்ட பிறகு - இறந்தவர்கள் மறுபடியும் எழுந்து வருவார்கள் என்றோ - பேய் பிசாசுகளாக உலவுவார்கள் என்றோ நம்புவதற்கு இஸ்லாத்தில் இடமேயில்லை. சரி, அப்படியானால் பேய்களைப் பார்த்ததாகப் பலரும் சொல்கிறார்களே! இதற்கு என்ன பதில்? பேயைப் பார்த்ததாகச் சொல்பவரிடம், துருவித் துருவிக் கேளுங்கள் இறுதியில் அவர் தாம் பார்க்கவில்லை (இருந்தால் அல்லவா பார்ப்பதற்கு?) தமக்குத் தெரிந்த ஒருவர் பார்த்ததாகத்தான் தம்மிடம் சொன்னார் என்பார். சொன்னவரைத் தேடிச் சென்று அவரிடம் விசாரித்தால் அவரும் இதே பதிலைத்தான் சொல்வார். இது சங்கிலித் தொடர் போல் நீண்டுக் கொண்டே போகும். இவ்வளவுக் கெல்லாம் யாரும் முயற்சிகள் எடுப்பதில்லை. பேய் பிசாசுகள் பகலில் வந்ததாகவோ, இரவில் வெளிச்சம் உள்ள இடங்களில் இருப்பதாகவோ யாரும் சொல்வதில்லை. இருளில் தெளிவாகத் தெரியாத எதையேனும் பார்த்து விட்டு - ஏற்கனவே அடி மனதில் தங்கிவிட்ட பேய்க் கதைகள் நினைவுக்கு வர - இல்லாத பேய்களுக்கு கையும் காலும் வைத்து கதை அளக்க ஆரம்பித்து விடுவார்கள். பேய்களைப் பற்றிக் கதைகளில் படித்தவைகளும், படங்களில் பார்த்தவைகளும் ஒன்று சேர, யாராவது கதைவிட்டால் அதுவும் இதில் சேர, பேய்கள் இப்படித்தான் கற்பனைகளால் உருவாக்கப்படுகின்றன. பேய் பிசாசு பற்றிய மூட நம்பிக்கையில் பலரும் மூழ்கிக் கிடப்பதற்குக் காரணம் - சிறு வயதிலிருந்தே அந்த நம்பிக்கை வளர்க்கப்பட்டு விட்டதால் - வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகும் கூட மனதில் அப்படியே நிலைத்து விடுகின்றது. எனவே பெற்றோர்கள், இனியாவது தம்; குழந்தைகளின் பிஞ்சு நெஞ்சங்களில் கோழைத் தனத்தை விதைக்காமல், தைரியத்தையும் துணிச்சலையும் ஊட்டவேண்டும். அப்போதுதான் எதிர்காலச் சமுதாயம் வீரமுள்ள சமுதாயமாக உருவெடுக்கும். அச்சம் பயம் கோழைத்தனம் என்னும் பேய்களை ஓட்டுவோம். கற்பனைப் பேய்கள் தாமாக ஓட்டமெடுக்கும்.

ஒழிக்கபபட வேண்டிய ஒடுக்கத்துப் புதன்.

அரபி வருடத்தின் இரண்டாவது மாதமாகிய சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதும், அந்த மாதத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் தவிர்ப்பதும், அறியாமைக் காலத்தில் அரபிகளின் வழக்கம். ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அப்படி நியதி எதுவும் இல்லை. சபர் மாதத்தின் இறுதி புதன் கிழமைக்கு ஒடுக்கத்துப் புதன் என்று பழந்தமிழில் பெயர் சூட்டி அன்றைய தினத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், கடற்கரையிலும், பூங்காக்களின் புல்வெளிகளிலும் பொழுதைக் கழிப்பதும், அன்றைய தினத்தில் முஸீபத்துகள் இறங்கும் என்று நினைப்பதும், இலைகளிலும் தட்டுக்களிலும் எதையெதையோ எழுதிக் கரைத்துக் குடிப்பதும், அன்றைய தினத்துக்காகவே வீடு முழுவதையும் கழுவிச் சுத்தப்படுத்துவதும், இவை அனைத்தும் அறிவுக்கும் பொருந்தாத செயல். அல்லாஹ்வின் மார்க்கத்திலும் இல்லாத செயல். குடி இருக்கும் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சரிதான். ஆனால் அதை ஒடுக்கத்துப் புதனுக்காக மட்டும் செய்வது மூடப் பழக்கம். ஒடுக்கத்துப் புதனை கொடிய நகசு என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுவதாக சில அண்ணடப் புளுகர்கள் அரபுத் தமிழ் நூல்களில் எழுதி வைத்திருக்கின்றனர். திருமறை குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புகள் வந்து விட்டன. முழக் குர்ஆனையும் படித்துப் பாருங்கள். குர்ஆனின் ஒரு இடத்தில் கூட ஒடுக்கத்துப் புதனைப் பற்றி குறிப்பிடப்படவேயில்லை. புதன் கிழமை என்னும் வார்த்தைக் கூட இல்லை. அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன், அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன், இவர்களை விட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி அடைய மாட்டார்கள்.(அல் குர்ஆன் 10 : 17)

பூரியான் பாத்திஹா

பணக்காரர் ஆக வேண்டும் என்னும் ஆசை அனைவருக்கும் உண்டு. அதற்குப் பாடுபட்டு உழைக்க வேண்டும். அதை விட்டு விட்டு முன்னோர்கள் செய்தவை என்று மூட நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு, ரஜப் மாதம் வந்து விட்டால் - பூரியானை பாயசத்துடன் சேர்த்து வைத்துப் பாத்திஹா ஓதி, விறகு வெட்டி கிஸ்ஸாவை விடிய விடியப் படித்து விட்டால் பணக்காரர் ஆகிவடலாம் என்று சிலர் பகல் கனவு காண்கிறார்கள். பூரியானை நினைத்துப் பூரித்துப் போகிறார்கள். வீடு வீடாகச் சென்று பூரியானுக்குப் பாத்திஹா ஓதியவர்களும் பணக்காரர் ஆகவில்லை. புத்தி கெட்டு பூரியானுக்கு பணத்தை செலவு செய்து பாத்திஹா ஓத வைத்தவர்களும் பணக்காரர் ஆகவில்லை. காலமெல்லாம் ஓதியவர்கள். இப்போதும் கடன் வாங்கி ஓதிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணெயில் போட்ட பூரியான்கள் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை போலும். பூரியான் பாத்திஹா ஓதாமலேயே பணக்காரர் ஆனவர்களும் உண்டு. பூரியானுக்குச் செலவு செய்து கடனாளி ஆனவர்களும் உண்டு. அப்படியே பணக்காரர் ஆகியிருந்தாலும் பூரியானின் புண்ணியத்தால் பணக்கரர் ஆனதாக நம்பிக்கை வைத்தால் - இறை நம்பிக்கையை (ஈமானை) குழி தோண்டிப் புதைத்ததாகப் பொருள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக. மார்க்கத்தில் உள்ள அனைத்து வணக்க வழிபாடுகளும் மறுமையில் கிடைக்கும் பலனை அடிப்படையாகக் கொண்டவை. இறை வணக்கத்தின் நோக்கம் இவ்வுலக வாழ்வாக இருக்குமானால் நம்மை விடச் சிறந்த இறை நேசர்கள் அனைவருமே செல்வந்தர்களாக இருந்திருக்க வேண்டும். அல்லாஹ் தான் நாடியவருக்கு ஏராளமாகக் கொடுக்கிறான். (தான் நாடியவருக்கு) அளவோடு கொடுக்கிறான்.எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் அற்பமேயன்றி வேறில்லை. (அல் குர்ஆன் 13:26)

மதீனாவின் பெயரில் மாபெரும் பொய்

மதீனாவில் நடந்த உண்மை என்று தலைப்பிட்டு, மக்கள் மறந்திருக்கும் சமயங்களில், அவ்வப்போது ஒரு பிரசுரம் சில விஷமிகளால் வெளியிடப்படும். அதில், மதீனாவில் வசிக்கும் ஷேக் அஹமத் தெரிவிப்பது என்னவென்றால், நான் ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு கனவு கண்டேன்.... என்று துவங்கி ஏதேதோ எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு பிரசுரத்திலும் அவரவர் மனதில் தோன்றியதை சேர்த்தும் குறைத்தும் எழுதிவிட்டு. இது போல் 1000 பிரதி அச்சிட்டு வெளியிட்டால், நினைத்தது நடக்கும். செல்வம் பெருகும். பம்பாயில் ஒருவர் அச்சிட்டு வெளியிட்டார். கோடீஸ்வரர் ஆனார். கல்கத்தாவில் ஒருவர் கிழித்துப் போட்டார். கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார்.என்றெல்லாம் ரீல் விடப்பட்டிருக்கும். இதைப் படித்து விட்டு,பணக்காரர் ஆகலாம் என்று இது போல் அச்சிட்டு வெளியிட்டு ஏமாந்தவர் பலர். இதை மறுத்தால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அல்லாஹ்வை மறந்து அஞ்சியவர்; பலர். இந்தப் பித்தலாட்டப் பிரசுரங்களில் காணப்படும் கருத்துக்கள் அனைத்தும் தவறானவை. அச்சிட்டு விநியோகிக்கக் கூறப்படும் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை. ஆரம்ப காலத்தில் மக்காவில் நடந்த உண்மை என்று தலைப்பிட்டு இப்பிரசுரம் வெளியானது. அதில் 'நான் ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது' என்று தொடங்கியதைப் பார்த்து ரவுலா ஷரீப் மதீனாவில் அல்லவா உள்ளது? என்று சிலர் கேட்க - அடுத்தடுத்த பிரசுரங்களில் மாற்றிக் கொண்டார்கள். இதிலிருந்தே மக்காவுக்கும் மதீனாவுக்கும் வித்தியாசம் தெரியாத எவனோ ஒரு மடையன் எழுதியுள்ளான் என்பதை உணரலாம். 'ரவுலா ஷரீபில் தூங்கிக் கொண்டிருந்த போது' என்ற வாசகமும் பொய்யானது. ஏனனில் ரவுலா ஷரீபில் யாரையும் தூங்க அனுமதிப்பதில்லை. பெருமானார் (ஸல்) அவர்களின் ரவுலா ஷரீபை ஸியாரத் செய்து விட்டு வந்தவர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும். பல்வேறு தர்காக்களைப் பார்த்துப் பழகிப் போனவர்கள் அதே கண்ணோட்டத்தில் அண்ணல் நபி (ஸல்)அவர்களின் அடக்கஸ்தலத்தையும் கருதி விட்டார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தை அல்லாஹ் எல்லா அசுத்தங்களிலிருந்தும் பாதுகாத்து வைத்திருக்கின்றான். ஒரு ஜூம்ஆவிலிருந்து மறு ஜூம்ஆ வரை 60 ஆயிரம் முஸ்லிம்கள் இறப்பதாகவும், அதில் ஒருவருக்குக் கூட ஈமான் இல்லை என்பதாகவும் அப்பிரசுரத்தில் ரீல் விடப்பட்டுள்ளது. ஈமான் என்பது உள்ளம் சம்பந்தப்பட்டது. உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. இன்னும் இது போன்ற ஏராளமான தவறுகள் அப்பிரசுரத்தில் காணப்படுகின்றன. இதே போன்ற பிரசுரம் திருப்பதியின் பெயரால் ஒரு சாராரும், வேளாங்கன்னியின் பெயரால் ஒரு சாராரும் வெளியிடுகின்றனர்;. அவற்றின் ஆரம்பத்தில் காணப்படும் செய்திகளில் மாற்றங்கள் இருந்தாலும் - இறுதியில் காணப்படும் எச்சிக்கைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இதிலிருந்தே இவை திட்டமிட்டு கட்டி விடப்பட்ட கதைகள் என்பதை உணரலாம். இது போன்ற முட்டாள்தனமான பிரசுரங்களில் ஈமானை இழக்காமல் அல்லாஹ் நம்மைக் காப்பானாக. இறுதியாக, பெருமானார் (ஸல்) அவர்களின் ஓர் எச்சரிக்கை : யார் வேண்டுமென்றே என் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: புகாரி)

பஞ்சா எடுப்பதும்- தீ மிதிப்பதும்

முஹர்ரம் மாதம் 10 ஆம் நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது ஷியாக்களின் வழக்கம். முஹர்ரம் பண்டிகை என்னும் பெயரில் நம்மில் சிலர், மார்க்கத்தில் இல்லாத இப் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்;. பிற மதத்தவரின் தீ மிதித் திருவிழாவைப் பின் பற்றி அன்றைய திpனம் சில மூடர்கள் பக்திப் பரவசத்துடன் யாஅலி. யாஹூஸைன் எனன்ற கோஷத்துடன் தீயில் நடப்பதும், புலி வேஷம் போட்டு ஆடுவதும், என்று இன்னும் பல்வேறு அநாச்சாரங்களையும் அரங்கேற்றுகின்றனர். இப்படிப்பட்ட காட்டுமராண்டித் தனத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. இவை யாவும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட கொடிய பாவங்களாகும். பக்தியின் பெயரால் தீ மிதிக்கும் செயலை - கடவுள் பக்தி அறவே இல்லாத நாத்திகர்களும் கூட செய்து காட்டுகின்றனர். பஞ்சா என்ற பெயரில் அன்றைய தினம் கைச் சின்னத்தைக் கையிலேந்தி மாலை மரியாதையுடன் பவனி வருவதும் மார்க்கத்தில் மாபெரும் பாவச் செயலாகும். பஞ்சா என்பதற்கு பாரசீக மொழியில் ஐந்து என்று பொருள்.நபி(ஸல்), அலி (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன்(ரலி), ஹூஸைன்(ரலி), ஆகிய ஐந்து பேருக்கும் தெய்வீகத் தன்மை இருப்பதாக நம்புவது ஷியாக்களின் கொள்கை. இதன் அடையாளமாகத் தான் பஞ்சா எடுக்கும் மாபாதகச் செயலை பஞ்சமா பாதகர்கள் செய்கிறார்கள். ஓரிறைக் கொள்கையை வேறுக்கும் இது போன்ற கொடிய குற்றங்கள் ஈமானுக்கே ஆபத்தானவை. எச்சரிக்கை. ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின் பற்றாதீர்கள். இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத் தக்கவற்றையும் (செய்ய) நிச்சயமாக ஏவுவான்.(அல் குர்ஆன்:24:21)

புதுக்கணக்கும் பொய்க்கணக்கும்

வீடுகளில் மூடப் பழக்கங்கள் வியாபார நிறுவனங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன. அவற்றில் ஒன்று தான் புதுக் கணக்கு எழுதுதல். தொழிலில் ஏற்படும் லாப நஷ்டங்களை அறிந்துக் கொள்ளவும் வருமானக் கணக்கை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கவும் கணக்கு எழுதி வைக்க வேண்டும். அரசாங்கத்தை ஏமாற்றப் பொய்க்கணக்கு எழுதுபவர்களும் உண்டு. இவர்கள் கூடப் புது வருடத் துவக்கத்தில் புதுக் கணக்கு எழுத, சிலச் சடங்கு சம்பிரதாயங்களைக் கடைப் பிடிக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பாத்திஹா ஓதுவதற்குத்தான் சில அசரத்துமார்கள் இருக்கின்றார்களே! கூப்பிட்டதும் ஓடி வந்து ஒரு அவசர பாத்தியாவை ஓதிவிட்டு தட்சனையை பெற்றுக் கொள்வ தோடு அவர்கள் வேலை முடிந்து விட்டது. இப்படியெல்லாம் மார்க்கத்தில் இல்லை என்று எப்படி சொல்வார்கள்.புதுக் கணக்கு எழுதினால் நமக்கென்ன, பொய்க் கணக்கு எழுதினால் நமக்கென்ன? மதது வருமானகக் கணக்கு சரியானால் போதும் என்று இருந்து விடுகிறார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை மறைத்த குற்றத்துக்கு ஆளாவதை அவர்கள் உணரவில்லை. பாத்திஹா ஓதி சடங்கு சம்பிரதாயங்களுடன் புதுக் கணக்கு எழுதிவிட்டால் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும் என்றால்- நஷ்டத்தில் நடந்துக் கொண்டிருக்கின்ற அல்லது மூடப்பட்டு விட்ட கம்பெனிகளும், வியாபார நிறுவனங்களும், அசரத்தைக் கூப்பிட்டு அல்பாத்திஹா ஓதி புதுக் கணக்கு எழுதிவிட்டால் புத்துயிர் பெற்று விடுமே! தொழிலில் நேர்மையும், ஹலாலான முறையும், தரமான பொருளும், கனிவான பேச்சும், நியாயமான விலையும், வியாபாரத்தைப் பெருக்கும். புதுக் கணக்கு பூஜைகள் வருமானக் கணக்கில் எவ்வித மாற்றத்தையும் எற்படுத்திவிடாது.

786 எழுதுவது கூடுமா?

சிலர் கடிதம் எழுதும் போதும், அல்லது ஏதேனும் எழுதத் தொடங்கும் போதும், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று தொடங்குவதற்குப் பதிலாக 786 என்று எழுதுகின்றனர். நியூமராலஜி என்னும் எண் கணித முறையில், ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக எண்களைப் பயன்படுத்துவர். இதே முறையைப் பின்பற்றி அரபி எழுத்துக்களுக்குப் பதிலாக எண்களைப் பயன்படுத்தும் முறை சில வழிகேடர்களால் உருவாக்கப் பட்டது. ஜோதிடத்தில் ஒரு வகையான பால் கித்தாபு பார்க்கும் கொடிய யூத கலாச்சாரத்திற்கு இந்த அரபி நியூமராலஜி தான் அடிப்படை காரணமாகும். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்... என்னும் அழகான பொருள் கொண்ட திருமறையின் உன்னத வாக்கியத்தை- இறைவன் கற்றுத் தந்த இனிய வாசகத்தை, சில வழிகேடர்கள் 786 என்னும் எண்ணாக மாற்றி வேத வரிகளுடன் விளையாடுகின்றனர். இது மிகவும் தவறு. கடிதங்களில் பிஸ்மில்லாஹ்வை எழுதும் போது தவறுதலாகக் கண்ட இடங்களிலும் விழுந்து விடலாம். எனவே தான் 786 எழுதுவதாகச் சிலர் கூறலாம். அப்படியானால் 786 என்பதில் புனிதம் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். புனிதம் இல்லாததை ஏன் எழுத வேண்டும்? எவரேனும் தமது பெயருக்குப் பதிலாக இவ்விதம் பெயரில் உள்ள எழுத்துக்களை எண்களாக்கி அழைக்கப் படுவதை விரும்புவாரா? அப்படியிருக்க அல்லாஹ்வின் திருநாமத்தை எப்படி எண்களாக்குகிறார்கள்? அரபியில் ஹரே கிருஷ்னா என்று எழுதி அதன் எண்களைக் கூட்டினாலும் இதே கூட்டுத் தொகை தான் வரும். எனவே இது போன்ற மூடப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும். அல்லாஹ்வின் அழகிய திருப் பெயரால் எதையும் தொடங்க வேண்டும்.

பள்ளிகளில் உண்டியல் வசூல்

புதிய பள்ளிவாசல் கட்டட நிதிக்காகவும் ஏழை மாணவர்கள் பயிலும் இஸ்லாமியக் கல்விக் கூடங்களுக்காகவும் வெள்ளிக் கிழமைகளில் அதிகமானோர் தொழுகைக்குக் கூடுவதால் ஜூம்ஆத் தொழுகைக்குப் பிறகு சில சமயம் நிதி வசூல் செய்வது வழக்கத்தில் உள்ளது. இது தவறும் அல்ல. ஆனால் எந்தக் காரணமும் இல்லாமல் பல பள்ளிவாசல்களில் இதையே வழக்கமாக்கிக் கொண்டுவிட்டனர். ஜூம்ஆத் தொழுகை முடிந்து சலாம் கொடுத்ததும் இந்த வசூல் வேட்டையில் இறங்கி விடுகின்றனர். சமூகத்தில் ஏற்பட்ட மூடப் பழக்கங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் இப்படித்தான் சிறுகச் சிறுக மூக்கை நுழைத்தன. போகப் போக பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன. முதலில் பெருநாளைக்கு மட்டும் என்று என்றிருந்த இப்பழக்கம், இப்போது ஒவ்வொரு ஜூம்ஆவுக்கும் என்ற நிலைக்கு வந்து விட்டது. பிறகு தினமும் ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் என்று தொடர ஆரம்பித்து விட அதிக காலம் பிடிக்காது. இதன் மூலம் கிடைக்கும் கிடைக்கும் தொகையைக் கொண்டு பள்ளிகளைப் பரிபாலனம் செய்வதாகப் பள்ளி நிர்வாகிகள் கூறலாம். பைத்துல்மால் என்னும் இஸ்லாமியப் பொது நிதி இல்லாத பள்ளிகளை நிர்வகிக்க பொருளாதாரம் தேவைதான் என்பமை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கு வழி இதுவல்ல. அந்தந்த ஊரில் உள்ள செல்வந்தர்களிடம், அல்லாஹ்வின் பள்ளிக்காக செலவுச் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துச் சொன்னால் வாரி வழங்க எத்தனையோ தயாள மனம் கொண்ட செல்வந்தர்கள் தயாராக இருக்கின்றனர். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிச் சொத்துக்களை அல்லாஹ்வுக்கு அஞ்சிய நல்லவர்களிடம் ஒப்படைத்து ஹலாலான முறையில் வருமானம் கிடைக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து நிரந்தர வருமானத்திற்கு வழி வகை செய்யவேண்டும். வாரந்தோறும் ஜூம்ஆத் தொழுகையை வசூலுக்கு பயன்படுத்தும் வன் கொடுமையை பள்ளி நிர்வாகிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் இப்பழக்கம் எதிர் காலத்தில் பெரும் விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். எச்சரிக்கை!

இன்ஷா அல்லாஹ் தொடரும்

2 comments:

Hisham Mohamed - هشام said...

உங்ஙளுடைய இறை பணி தொடர வாழ்த்துக்கள்..
எல்லார் இடத்திலும் தெய்வமுண்டு....... அந்த சிந்தனையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் என்ன செய்வது.....
தெய்வத்தை அதிகம் நினையுங்கள் என்பதை பொதுவாகச் சொன்னேன் காரணம் என்னுடைய தளத்தை எல்லா மத நண்பர்களும் பார்வையிடுகிறார்கள்...

மஸ்தூக்கா said...

தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ஹிஷாம் அவர்களே!
தங்களுடைய வலைப்பதிவை எல்லா மத நண்பர்களும் பார்வையிடுவது பற்றி மகிழ்ச்சி. தெய்வத்தை அதிகம் நினையுங்கள் என்னும் கருத்து பொதுவதானது தான்.
ஆனால் எல்லார் இடத்திலும் தெய்வம் உண்டு என்னும் கருத்து கிரேக்க அத்வைதக் கொள்கை. இஸ்லாத்திற்கு இது ஏற்புடைய கருத்தல்ல. பிற மத நண்பர்களை நாம் மதிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அதற்காக இஸ்லாத்தின் ஆணிவேராகிய ஏகத்துவக் கொள்கையிலிருந்து நாம் தடம் புரளக் கூடாது. ஏனெனில் நாம் மறுமை வாழ்வை நம்புகிறோம். நளை இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும். 'உனது மாற்றுமத நண்பர்களை திருப்திபடுத்துவதற்காக என்னைப் பற்றிய கொள்கையையே மாற்றிவிட்டாயா?' என்ற இறைவன் நம்மிடம் கேள்வி கேட்பான்.

விருப்ப மொழியில் குர்ஆன்