கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்
பாகம் 3
முரீது வாங்க வேண்டுமா?
பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர்.'ஆன்மீகப் பாட்டை' என்பார்கள், 'ஆத்மீகப் பக்குவம்' என்பார்கள், 'அந்தரங்கக் கல்வி' என்பார்கள், 'ரகசிய ஞானம்' என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள்.எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்.இஸ்லாத்தில் இல்லாத இந்த கிரேக்க அத்வைத தத்துவத்தை இவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உருவாக்கி ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுகிறார்கள்.இவர்களில் பல்வேறு பிரிவினர்கள் உண்டு. சில ஷெய்குகள் தம்மை அண்டி வந்து நெருக்கமானவர்களுக்கு, தனித்தனியாக சில திக்ருகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஒருவருக்கு சொல்லிக் கொடுத்ததை பிறருக்கு சொல்லக்கூடாது என்பார்கள்.இல்லற வாழ்க்கை முதற் கொண்டு தௌ;ளத் தெளிவாக பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தில் 'ரகசிய ஞானம்' என்று ஏமாற்றுகிறார்கள்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் 'நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?' என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் 'ஆம்! அல்லாஹ்வின் தூதரே' எனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நீயே சாட்சி!' என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி)இவ்ளவு தெளிவாக, தாம் எதையும் மறைக்கவில்லை என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்திய பிறகு - போலி ஷெய்குமார்கள் ரகசிய ஞானம் என்று ரீல் விடுகிறார்கள்.ஆன்மா பக்குவப்பட்டதாகச் சொல்லப் படுபவர்கள் ஆடம்பரப் பங்களாக்களில் வசிக்கின்றனர். உல்லாசக் கார்களில் பவனி வருகின்றனர். ஊருக்கு ஊர் வசூல் வேட்டைக்குப் போகும்போது கூடப் பணக்கார முரீதகளின் பங்களாக்களில் தான் தங்குவர். ஆன்மா பக்குவப்பட்ட(?) இந்த அடலேறுகள் ஏழைகளின் குடிசையில் தங்கலாமே!எந்த உழைப்பும் இல்லாமல் பிறரிடம் யாசகம் வாங்கித் தின்றே வயிறு வளர்ப்பவர்களுக்கு ஆன்மா பக்குவப்பட்டு விட்டதாம். ஏழ்மையில் வாழ்ந்துக் கொண்டு தம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, இந்த ஷெய்குமார்களுக்கு தட்சனையும் கொடுத்துக் கொண்டு, இறை வணக்கங்கள் புரிந்து வாழ்பவர்களுக்கு இன்னும் ஆன்மா பக்குவப்படவில்லையாம்.இஸ்லாத்திற்கு விரோதமான - குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படாத- புதுப்புது தத்துவங்களைக் கண்டுபிடித்து உளரிக் கொண்டிருப்பவர்கள், மறுமையை மறந்து விட்டார்கள். மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய இந்த மாபாதகர்கள் நிரந்தர நரகத்தில் வீழ்ந்துக் கிடப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இந்த போலி ஷெய்குமார்கள் சொன்னதை யெல்லாம் வேத வாக்காகக் கருதியவர்கள், திக்ரு என்னும் பெயரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் மந்திரங்களாக மொழிந்துக் கொண்டிருந்தவர்கள், இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ஸஜ்தாவை- தம்மைப் போன்ற சக மனிதர்களுக்குச் செய்து- சிரம் தாழ்த்தி வணங்கியவர்கள், அனைவரும் அல்லாஹ்வை அஞ்சவேண்டும்.அறியாமையால் பாமர மக்கள் காலில் விழுந்த போது அதனைத் தடுக்காமல் அகம்பாவத்துடன் ரசித்து வேடிக்கை பார்த்தவர்களே!, நாளை மறுமையில், படைத்த இறைவனுக்கு முன்னர் நிறுத்தப் படுவீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தப்பிக்க முடியாத அந்த நாளை மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
மீலாது விழா
அரசியல் தலைவர்களுக்கும் சினிமா நடிகர்களுக்கும் பிறந்த நாள் விழா கொண்டாடும்போது, உலகத்தின் எல்லா தலைவர்களையும் விட எல்லா வகையிலும் உயர்வான அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் (மீலாது) விழா கொண்டாடுவது எப்படித் தவறாகும்?வருடந்தோறும் ரபீவுல் அவ்வல் 12 ஆம் நாள்- மீலாது விழா கொண்டாடுவோரின் வாதம் இது. தாய் தந்தையை விட, மனைவி மக்களை விட, இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் விட, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு தான் இந்த மீலாது விழா என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மார்க்கத்தில் இதற்கு அனுமதி உண்டா? நம்மை விட பன்மடங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்திருந்த - தம் இன்னுயிரைக் கூட அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருந்த - நபித் தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தபோதோ அல்லது அவர்கள் இம் மண்ணுலகை விட்டு மறைந்த பிறகோ இப்படி மீலாது விழா கொண்டாடினார்களா?அண்ணல் நபி (ஸல்) அவர்களை மகிமைப் படுத்த வேண்டும், எனில் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல7;வது தான். அவர்களின் அங்கீகாரம் இல்லாத மீலாது விழாவை கொண்டாடுவது அவர்களை மகிமைப் படுத்துவதாகாது.தம் மீது ஸலவாத் சொல்லும்படி கேட்டுக் கொண்ட அண்ணல் நபி (ஸல்), தமக்காக மீலாது விழா கொண்டாட வேண்டும் என்றால் அதையும் சொல்லியிருப்பார்கள்.மீலாது விழா கொண்டாடுவது நபி (ஸல்) அவர்களை மகிமைப் படுத்தும் என்றிருந்தால், நபித் தோழர்கள் நம்மை விட இச்செயலில் முந்தியிருப்பார்கள்.வருடத்தில் ஒரு நாள் மீலாது விழா கொண்டாடி விட்டு மற்ற நாட்களில் அவர்களை மறந்து விடுவதை விட- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் அவர்களை நினைக்கவேண்டும். அவர்களின் பொன்னான போதனைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும். அமிகமதிகம் அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும். இதுவே அவர்களை மகிமைப் படுத்தும்.
சந்தனக் கூடும் - சமாதி வழிபாடும்
நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுதளில் மக்கள் எழுச்சி பெற்றனர். ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.'எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை.பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அலல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர். அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்)நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.
எங்கே போனது மனித நேயம்?
மன நிலை சரியில்லாதவர்களையும், நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டவர்களையும், உரிய மருத்துவம் செய்யாமல் தர்காக்களில் கொண்டு போய் தங்கவைப்பதற்கும், இறுதியில் நல்லவர்கள் கூட பைத்தியங்கள் ஆக்கப் படுவதற்கும், மூட நம்பிக்கைகளே முக்கிய காரணம்.சிகிச்சை என்ற பெயரில் தர்காக்களில் நடக்கும் சித்திரவதைகள் கல் நெஞ்சத்தையும் கரைய வைக்கும்.ஏர்வாடி தர்காவில் மனநோய்க்காகச் சிகிச்சைக்கு(?) வந்து, தனியார் காப்பகம் ஒன்றில் இரும்புச் சங்கிலிகளால் கட்டப் பட்ட நிலையில் மன நோயாளிகள் தங்கியிருந் கூடாரம் நள்ளிரவில் தீப்பிடிக்க, கதறிக் கதறிக் கூக்குரலிட்டு, காப்பாற்ற யாருமின்றி, கடைசியில் கரிக் கட்டைகளாய் கருகிப் போனவர்களின் கதறல் சப்தமும், ஓலக் குரல்களும், இன்னுமா உங்கள் இதயங்களைப் பழியவில்லை? எங்கே போனது மனித நேயம்?தர்காக்கள் என்னும் கல்லறைகளில் - மீண்டும் எழ முடியாத நீண்ட நித்திரையில் உறங்கிக் கொண்டிருக்கும் உத்தம இறை நேசர்கள், பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்ப்பதாக எந்தப் பைத்தியங்கள் கூறின?உண்மையில், இப்படிச் சொன்ன பைத்தியங்கள் தான் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப் படவேண்டும். அப்போது தான் மனநலம் குன்றியவர்களின் மரண வேதனை இந்த மனித மிருகங்களுக்குப் புரியும்.நீண்ட நாட்கள் மருத்துவம் செய்தும் நோய் குணம் அடையவில்லை என்றால், இன்னமும் என்ன நோய் என்பது சரியாகக் கண்டறியப் படவில்லை என்றும், உரிய மருத்துவம் செய்யப் படவில்லை என்று தான் பொருள்.'அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள். எந்த ஒரு நோய்க்கும் மருந்தில்லாமல் அல்லாஹ் வைக்கவில்லை' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) ஆதாரம்:புகாரி)
வலிமார்கள் நமக்கு வக்கீல்களா?
அவ்லியாக்கள் பெயரால் நடைபெறும் அநாச்சாரங்கள் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்ந்து ஒதுக்கித் தள்ளிய உத்தமர்களிலும் கூடச் சிலர், தர்காக்களுக்குச் செல்வதையும், வலிமார்கள் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதையும், நியாயம் என்று நினைக்கின்றனர்.தமது தேவைகளை அவ்லியாக்கள் மூலம் கேட்பதற்குச் சில உதாரணங்களை ஆதாரங்களாக அள்ளி வீசுவார்கள்.முதலமைச்சரை நாம் நேரடியாகச் சந்திக்க முடியுமா? நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரை முதலில் சந்திக்க வேண்டும். அவர் நம்மை அழைத்துச் சென்று முதலமைச்சரிடம் அறிமுகப் படுத்தி வைப்பார். அதன் பிறகுதான் முதலமைச்சரிடம் நமது தேவையைக் கேட்க முடியும்.இதே உதாரணம், முதலமைச்சருக்குப் பதிலாக மன்னர், பிரதமர், கலெக்டர், என்று இடத்துக்குத் தக்கபடி மாறுவது உண்டு.நீதி மன்றத்தில் நீதிபதியிடம் நாமே சென்று வாதாட முடியுமா? நமக்காக வாதாட திறமையுள்ள ஒரு வக்கீல் தேவையல்லவா? இது போல் தான் வலிமார்கள் நமக்கு வக்கீல்களைப் போன்றவர்கள்.இப்படி இன்னும் இதுபோன்ற ஏராளமான உதாரணங்களைச் சொல்வார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது இவை அனைத்தும் நியாயமாகத் தான் தோன்றும்.முதலமைச்சரையோ, பிரதமரையோ, நாம் நேரடியாகச் சந்திக்க முடியாது என்பதும், இடையில் சபாரிசுக்கு ஒருவர் அவசியம் என்பதும் உண்மை தான். ஏனென்றால் முதலமைச்சருக்கோ பிரதமருக்கோ நாம் யார் என்பது தெரியாது. எனவே நமக்கு அறிமுகமான ஒருவர் நம்மை அறிமுகப் படுத்தி வைப்பது முக்கியம்.ஆனால் அல்லாஹ், அப்படிப்பட்ட பலகீனம் உடையவன் அல்லவே! நாம் யார் என்பதும், நமது செயல்கள் எப்படிப் பட்டவை என்பதும் நம்மைப் படைத்து பாதுகாத்து வரும் அல்லாஹ்வுக்குத் தெரியாதா? (நவூது பில்லாஹ்)நாம் செய்கின்ற செயல்களை மட்டுமல்ல, நமது உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களைக் கூட அவன் அறிபவன் ஆயிற்றே!மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்.அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம். (அல் குர்ஆன் 50: 16) என்று திருடறை குர்ஆன் பறை சாற்றுகின்றது.நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்ற போது 'நடந்தது என்ன' என்பது பற்றி நீதிபதிக்கு எதுவும் தெரியாது. வக்கீல்களின் வாதத்தின் அடிப்படையில்தான் நீதிபதி தீர்ப்பு வழங்குவார்.செய்த குற்றத்தை மறைத்து - குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவும் வக்கீல்களால் முடியும். எசய்யாத குற்றத்தைச் செய்ததாகப் போலி ஆதாரங்களுடன் நிரூபிக்கவும் வக்கீல்களால் முடியும். அப்டியானால் நாம் செய்து விட்ட தவறான செயல்களுக்காகவும் வக்கீல்களாகிய அவ்லியாக்கள் இறைவனிடம் வாதாடுவார்களா? வக்கீல்கள் என்று இவர்கள் கருதும் அவ்லியாக்களின் வாதத்தைக் கேட்டுத்தான் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவானா? அல்லாஹ்வுக்கு எதுவும் தெரியாதா? (நவூது பில்லாஹ்) உதாரணங்களைச் சொல்லும் கேடு கெட்டவர்களின் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருக்கின்றதா? அல்லாஹ்வின் தனித்தன்மைக்கே இந்த உதாரணங்கள் களங்கத்தை எற்படுத்து கின்றனவே இதையெல்லாம் கொஞ்சமும் சிந்திக்க மாட்டார்களா?அவனுக்கு நிகராக யாருமே இல்லை (அல் குர்ஆன் 112; :5) என்று குர்ஆன் கூறுகின்றது. ஒவ்வாருவரும் தமக்கு விருப்பமான அவ்லியாக்கள் தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ குர்ஆன் கூறகிறது.சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.(74 :48) எவர்கள் பரிந்து பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்களோ அவர்களையே அங்கு காண முடியாது.....எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ உங்களுக்குப் பரிந்துப் பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுடன் இருப்பதை நாம் காணவில்லை. உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது.உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன.(என்று கூறுவான்.) அல் குர்ஆன் (6:94)
கராமத்துகளும் - கட்டுக்கதைகளும்
இறைத் தூதர்கள் பலருக்கும், இறைவன் அளித்த அற்புதங்கள் அனைத்தும், இறைவனின் அனுமதியுடன் நடத்தப் பட்டதாக இறை மறை குர்ஆன் கூறுகிறது.உதாரணத்திற்கு ஒரு வசனம்.ஈஸா நபி (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும்போது.... இன்னும் நீர் களி மண்ணால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போல் உண்டாக்கி, அதில் நீர் ஊதிய போது, அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும், சுகப் படுத்தியதையும், இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்து) வெளிப் படுத்தியதையும், (நினைத்துப் பாரும்.).... (அல் குர்ஆன் 5 : 10)இந்த வசனத்தைக் கொஞ்சம் கவனித்தால், ஒவ்வொரு அற்புதத்தைப் பற்றிக் குறிப்பிடும் போதும், மீண்டும் மீண்டும் என் உத்தரவைக் கொண்டு என்னும் வார்ர்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான் என்பதும், நபிமார்கள் கூட தம் விருப்பத்துக்கு எதையும் செய்ய வில்லை என்பதும், அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டே அனைத்து அற்புதங்களும் நிகழ்ந்தன என்பதும் புரியும்.ஆனால் அவ்லியாக்கள் பெயரால் இட்டுக் கட்டப்பட்ட கட்டுக் கதைகள் பெரும்பாலும் அவ்லியாக்கள் அவரவர் விருப்பப்படி தாமே நிகழ்த்தியவையாகவும், மார்க்கத்திற்கு முரணானவையாகவும் இருக்கும். அவ்லியாக்களின் சரித்திரங்களை எழுதியவர்கள் அப்படித்தான் கதைகளை சித்தரிக்கின்றனர்.அவ்லியாக்களின் பெயரால் கூறப்படும் கதைகளைக் கவனித்தால்- இந்தக் கதைகளுக்கும் அந்த இறை நேசர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும், இந்தக் கதைகள் அனைத்தும் அந்த இறை நேசர்களைக் கேவலப் படுத்தும் கதைகள் தானே தவிர, இறை நேசர்கள் புகழை உயர்த்தும கதைகளல்ல என்பதும் புரியும்.அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) தம் சீடர்களுடன் சென்றுக் கொண்டிருந்தார்களாம். சீடர்கள் 'பசிக்கிறது' என்று கூற அங்கிருந்த ஒரு சேவலைப் பிடித்து அறுத்து அனைவரையும் சாப்பிடச் சொன்னார்களாம். சேவலுக்கு உரிமையாளர் வந்து 'எனது சேவல் எங்கே?' என்று கேட்க, தின்று விட்டுப் போட்ட சேவலின் எலும்புகளை ஒன்று கூட்டி கும் பி இத்னில்லாஹ் என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூற சேவல் உயிர் பெற்று எழுந்நததாம்.இது ஒரு பிரபல்யமான கதை. பல் வேறு இடங்களிலும் இந்தக் கதையின் நாயகர்கள் மாறுவார்கள். அல்லது பிராணிகள் மாறும்.கதை என்னவோ ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.அடுத்தவர் பிராணியை அவரின் அனுமதியின்றி எந்த இறை நேசராவது அறுத்துச் சாப்பிடுவாரா? அறுத்துச் சாப்பிட்டது உண்மையென்றால் அவர் எப்படி அவ்லியாவாக இருக்க முடியும்? இந்த அளவுக் கெல்லாம் யாரும் சிந்திப்பதில்லை. அடுத்தவர் பிராணியை அனுமதியின்றி அறுத்துச் சாப்பிடுவது ஹராம் ஆயிற்றே! ஹராமானதைச் சாப்பிட்டு விட்டு கும் பி இத்னில்லாஹ் என்று சொன்னால், அல்லாஹ் எப்படி எற்றுக் கொள்வான்? அடுத்தவர் பிராணியைத் திருடிச் சாப்பிட்டு விட்டுத் தனது அற்புதத்தை நிரூபிப்பதை விட, தனது மந்திரச் சக்தியால் ஒரு பிராணியையே வரவழைத்திருக்கலாமே!நாகூரில் அடக்கமாகி இருப்பதாகக் கூறப்படும் இறை நேசர், வெற்றிலையை மென்று ஒரு பெண்ணுக்குக் கொடுத்துக் குழந்தை பிறக்க வைத்தாராம்! இயற்கை நியதிக்கும், இறைவனின் ஏற்பாட்டுக்கும், முரணான இது போன்ற முட்டாள் தனத்தை எல்லாம் அற்புதம் என்று நம்புவது மிகப் பெரும் பாவம்.உலக வரலாற்றிலேயே அற்புதமாகக் குழந்தை பிறந்தது மர்யம் (அலை) அவர்களுக்கு மட்டும் தான். ஈஸா நபி (அலை) அவர்கள் பிறந்த அற்புதத்தை இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.இதைத் தவிர, மற்ற அனைத்தும் கட்டுக் கதைகளே! இது போன்றக் கதைகளை நம்புவது இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஷிர்க் ஆகும். ஷிர்க்கை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். ஜாக்கிரதை!
குத்பிய்யத் ஒரு கொடும் பாவம்'
யார் தனிமையில் அமர்ந்து ஆயிரம் முறை என் பெயரைக் கூறி என்னை அழைக்கிறாரோ அவரது அழைப்பின் அவசரத்திற்கேற்ப ஓடி வந்து உதவி செய்வேன்' என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறினார்களாம்.யா குத்பா என்னும் நச்சுக் கவிதையில் வரும் ஷிர்க்கான இந்த வார்த்தைகளை, ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் வாழ்ந்த ஒரு இறை நேசர் ஒரு போதும் கூறியிருக்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகிறோம்.இந்த நச்சுக் கவிதையை ஆதாரமாகக் கொண்டு சில கொடியவர்கள், 'குத்பிய்யத்' என்னும் பெயரில் இருட்டறையில் நின்று கொண்டு 'யா முஹ்யித்தீன்' என்று ஆயிரம் முறை ஓலமிடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய ஷிர்க் என்பதை இவர்கள் உணரவில்லை.எத்தனை பேர் எங்கிருந்து எந்நேரம் அழைத்தாலும் அனைவரின் அழைப்பையும் ஒரே நேரத்தில் செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. இது அவனுக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு.அல்லாஹ்வைப் போலவே அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் செவியேற்பார்கள் என்று கருதுவதும் - ஓடி வந்து உதவுவார்கள் என்று நம்புவதும், எவ்வளவு பயங்கரமான ஷிர்க் என்பது இன்னுமா புரியவில்லை? இந்த ஷிர்க்கை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.ஷிர்க்கின் பித்தம் தலைக்கேறிப் போனவர்களால் மட்டுமே அல்லாஹ்வையும் அப்துல் காதிர் ஜீலானியையும் சமமாகக் கருதமுடியும். இது போன் ஷிர்க்கிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக.பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் சிலர் அல்லாஹ்வை அழைப்பதற்குப் பதிலாக யா முஹ்யித்தீன் என்று அபயக் குரல் எழுப்புகின்றனர். இது மிகப் பெரிய பாவம் என்பதை என்பதை தாய்மார்கள் உணர வேண்டும்.உண்மையான அழைப்பு அவனுக்கே உரியதாகும். எவர் அவனையன்றி (மற்றவர்களை) அழைக்கிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்.(அல் குர்ஆன் 13 : 14)
---------------------
கொடியை வணங்கும் கொடிய பழக்கம்
ஊருக்கு ஊர் கொடி மரங்கள் நட்டு பச்சைக் கொடியை அதில் பறக்க விட்டு. புனிதம் என்று கருதி பூமாலைப் போட்டு பூரண கும்ப மரியாதை செலுத்தி, ஆண்டு தோறும் கொடியேற்று விழா நடத்துவது பல் வேறு ஊர்களிலும் பழக்கத்தில் உள்ளது.அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் தான் பெரும்பாலும் இந்தக் கொடிகள் ஏற்றப் படுகின்றன. அப்துல் காதிர் ஜீலான் (ரஹ்) அவர்களுக்கும் இந்தக் கொடிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்கிற சாதாரண அறிவு கூடச் சமுதாய மக்களிடம் இல்லாமல் போனது எப்படி?கொடியை வணங்கும் இக் கொடிய பழக்கம், இஸ்லாமிய சமுதாயத்தில் இடம் பிடித்தது எப்படி?பெருமானார் (ஸல்) அவர்கள் பெயரால் கூட உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத கொடிகள் அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறியது எப்படி?நாட்டுக்கு நாடு கொடிகள் உண்டு. கோட்டை கொத்தளங்களில் கொடியேற்றுவது உண்டு. போர்க் களங்களிலும்;, போராட்டக் களங்களிலும் கொடிகள் உண்டு. அரசியல் கட்சிகளுக்குக் கொடிகள் உண்டு.அவ்லியாக்கள் பெயரால் கொடிகளை எந்தக் கொடியவர்கள் இஸலாமிய சமுதாயத்தில் ஏற்றி வைத்தார்கள்?இவர்கள் கொடி மரங்களில் கொடிகளை ஏற்ற வில்லை. ஏதுமறியா பாமர மக்களின் ஈமானைக் கழுவில் ஏற்றி விட்டார்கள். மார்க்கம் அறியாத மக்களின் பக்தியை மரத்தில் ஏற்றி விட்டார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் கூண்டில் ஏற்றி விட்டார்கள். இறையச்சத்திற்குப் பதிலாக இணை வைத்தல் என்னும் ஷிர்க்கை இதயத்தில் ஏற்றி விட்டார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நினைவாக, அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர்கள் மண்ணுலகை விட்டு மறைந்த பிறகும் சரி, எந்த நபித் தோழரும் இப்படிக் கொடியேற்றிக் குதூகலிக்க வில்லை.பெருமானார் (ஸல்) அவர்களிடம் சில நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்தனர். வரலாற்றுப் புகழ் பெற்ற இச்சம்பவம் ஒரு மரத்தடியில் நடை பெற்றது. நாளடைவில் அந்த மரத்தை மக்கள் புனிதமாகக் கருதலாயினர். ஹஜ்ரத் உமர் (ரலி) உடனே அந்த மரத்தை வெட்டி எறியும்படி உத்தரவிட்டார்கள்.மூட நம்பிக்கையின் வாயில்கள் எல்லா வகையிலும் மூடப்பட்ட ஒரு மார்க்கத்தில், சின்னஞ்சிறு விஷயத்தில் கூட ஷிர்க் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்ட ஒரு மார்க்கத்தில் சில கொடியவர்கள் இந்தக் கொடியேற்றப் பழக்கத்தைக் கொண்டு வந்து புகுத்திவிட்டனர்.புகழ் மிக்க இறை நேசர்கள் பெயரால் - ஊருக்கு ஊர் தர்காக்களை உருவாக்க முடியாமல் கொடி மரங்கள் வைத்துக் கொள்ளிக் கட்டைகளால் தம் அரிப்பைச் சொரிந்துக் கொள்ளும் கொடியவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும்.கொடி மரங்களுக்கு மகிமை உண்டென்று மனதால் கூட நம்புவதும், அவற்றைப் புனிதம் என்றுக் கருதி சுற்றி வருவதும், தொட்டு முத்தமிடுவதும். கொடியேற்ற நிகழ்ச்சிக்கு நேர்ச்சை செய்வதும், காணிக்கை செலுத்துவதும், மார்கத்தில் கொடிய குற்றம் என்பதை இனியேனும் உணர வேண்டும்.இறை நேசர்கள் மீதுள்ள கண்ணியம் நமது இதயத்தில். கொடிய குற்றத்தை ஏற்படுத்தும் கொடிகள் இனி நமது காலடியில்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
">Link
0 comments:
Post a Comment