Jul 28, 2011

தவ்ஹீத் கொள்கையை உங்கள் ஊரில் எதிர்த்தால்?

Jul 18, 2011

பராஅத் இரவு ‍- பாவமா புண்ணியமா?

நம் இஸ்லாமிய மக்களில் இன்னும் அறியாத நிலையிலுள்ளவர்களுக்கு, ஷஃபான் மாதம் 15ஆம் இரவு, "ஷபே பராஅத்" அல்லது "பராஅத் இரவு" என்று மிக கோலாகலமாக கண்ணியப்படுத்தப்படும் ஒரு விழா கொண்டாட்டம்! இதை கொண்டாடுவதில் அறியாத மக்களோடு சேர்ந்து, ஹஜ்ரத்மார்கள் என்று சொல்லப்படும் ஆலிம்களும்(?) ஆர்வத்துடன் முன்னின்று நடத்தி வருகின்றனர். மார்க்கத்தின் பெயராலும், அமல்களின் பெயராலும் முன்னோர்கள் ஏற்படுத்தியவற்றை எல்லாம், அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொல்லியவைதானா என்று பார்க்காமல், இதற்கும் நன்மையுண்டு என்று தாங்களே தீர்மானித்துக் கொண்டு, அவற்றை குறிப்பிட்ட சில தினத்தில் நம் சமுதாய மக்கள் செய்து வருகின்றனர்.

அன்று காலையிலேயே நம் பெண்கள் வீடு வாசல் கழுவி, கறி வாங்கி சமைத்து வைத்து, ரொட்டி சுட்டு ரெடி பண்ணி, மஃக்ரிப் ஆனவுடன் (காலம் முழுக்க ஃபர்ளான தொழுகையில் அலட்சியம் செய்தவர்கள் கூட‌) ஃபாத்திஹா ஓதும் இடத்தில் பயபக்தியோடு அமர்ந்து, ஃபாத்திஹாவை ஆரம்பித்து, யாஸீன் மூன்று முறை ஓதி முடித்து, துஆ செய்வார்கள். பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் மின் விளக்குகளின் அலங்காரமாக காட்சியளிக்கும். ஆண்களும் சிறுவர்களும் புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று, அங்கே அரங்கேறும் மார்க்கத்திற்கு முரணான இந்த வழிபாட்டில் கலந்துக்கொள்வார்கள். சிலர் அதற்கும் அந்த ஹஜ்ரத்மார்களை எதிர்ப்பார்த்து வீட்டில் காத்திருப்பார்கள். மூன்று தடவை ஓதக்கூடிய யாசீன் சூராவில், முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும், இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், இருப்பவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும், மூன்றாவது யாசீன் பரக்கத் கிடைப்பதற்காகவும் என்று ஓதுவார்கள்.

இந்த நாளை "சீட்டுக் கிழிக்கப்படும் நாள்" என்றும் சொல்வார்கள். அதாவது, இந்த நாளில்தான் அடுத்த ஒரு வருஷத்தில் இறக்கக்கூடியவர்கள் மற்றும் பிறப்பவர்களின் லிஸ்ட்டையும், அந்த வருடத்திற்கான ரிஸ்க்கையும் அல்லாஹ் தீர்மானிப்பானாம்! இந்த இரவுக்கு முந்திய நாளில் யாரும் மரணித்துவிட்டால், இவர்கள் சென்ற வருஷ லிஸ்ட்டின் கடைசி நபர் என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். இந்த நம்பிக்கைகளை ஊட்டியது யார்? இதற்கு வழிகாட்டியது யார்? மேலும் வல்ல அல்லாஹ் வணக்கங்களை இலகுவானதாகவும் வழமையாக செயல்படுத்தும் விதத்திலும் மக்களுக்கு ஆக்கியிருக்கும்போது, இந்த இரவிலோ இதற்காக 100 ரக்அத்கள் கொண்ட விசேஷத் தொழுகைகளையும் தொழுதுக்கொள்வார்கள்.

ஒரு தினத்தை சிறப்பான தினம் அல்லது சிறப்பான இரவு என்று நாம் கூறவேண்டுமானால், அதை நம்மைப் படைத்த இறைவன் நமக்கருளிய வேதத்தில் கூறியிருக்கவேண்டும். அல்லது அவனது திருத்தூதர் நபி(ஸல்) அவர்கள் அதற்கு வழிகாட்டியிருக்க வேண்டும். ஆனால், குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இவற்றுக்கு ஆதாரமிருக்கிறதா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட யோசிக்க‌வில்லை. அதற்காக முயற்சிகளையும்கூட‌ எடுப்பதில்லை. ஏழு வருடங்கள் படித்த ஆலிம்களின் நிலைமையே இப்படியென்றால், மார்க்கத்தை படிக்காத மக்கள் எப்படிதான் உண்மையை உணர்வார்கள்? "பராஅத்" இரவு என்றால், பாவம் நீக்கப்படும் இரவு, அதனால் இரவு முழுதும் இறைவனை வணங்கி, பகல் முழுதும் நோன்பு வைக்கவேண்டும் என்று மக்களுக்கு அந்த ஆலிம்கள் சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால், இந்த நாளுக்கு இப்படியொரு பெயரை அல்லாஹ்வோ, அவனது தூதர்(ஸல்) அவர்களோ சூட்டியதற்கு ஆதாரம் எதுவுமே இல்லை. மாறாக, சுன்னத் என்ற பெயரில் நம் முன்னோர்களில் யாரோ சிலர் பிற்காலத்தில் இதனை உருவாக்கி வைத்த ஒரு பித்அத்தாகும்.

சகோதர, சகோதரிகளே! சற்று சிந்தித்து பாருங்கள்! லைலத்துல் கத்ர் இரவை மகத்தான இரவாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் கூறியிருக்கிறார்கள். அதுபோல், ஜும்ஆ தினத்தை சிறந்த தினமாக அறிவித்துக் கொடுத்த இறைவன், ஹஜ்ஜுடைய தினங்களை கண்ணியமானது என்று அறிவித்த‌ இறைவன், குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதத்தின் சிறப்பை விவரித்த இறைவன், போர் செய்யக்கூடாத மாதங்களை, புனிதமாதங்கள் என்று வரையறுத்துச் சொன்ன இறைவன், இந்த பராஅத் இரவைப்பற்றி எங்காவது சொல்லியிருக்கிறானா?

இரு பெருநாட்களுடைய தினங்களை புனித நாட்களாக அறிவித்த நபி(ஸல்), ஆஷூரா தினத்தின் சிறப்பை பற்றிக்கூறியுள்ள நபி(ஸல்), ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு பற்றி சிலாகித்துச் சொன்ன நபி(ஸல்), பராஅத் இரவு என்ற ஒரு இரவைப்பற்றி எங்குமே ஏன் சொன்னதில்லை? சிந்தித்து பார்க்கவேண்டாமா, என் இஸ்லாமிய‌ சொந்தங்களே?

நன்மை என்ற பெயரில் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட, அல்லாஹ்வும் ரசூலும் காட்டித்தராத‌ நாம் செய்யும் எந்த அமலாக இருந்தாலும், அவை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்றால், நிச்சமயமாக இல்லை. மாறாக அப்படிப்பட்ட அமல்களுக்கு நரகமே கூலி என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:

"செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகளாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்."

(அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560)

"எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது" என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

(அறிவிப்பவர்: அலி (ரழி) நூல்: அபூதாவூது, நஸயீ)

"எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

குர்ஆனில் சொல்லப்படாத‌, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த அமல்களும் இறைவனால் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ்கள் தெளிவாக அறிவிக்கின்றன‌. 'இதில் என்ன தப்பு இருக்கிறது, நல்ல அமல்கள்தானே செய்கிறோம்' என்று சிலர் கூறுகிறார்கள். எதை, எப்படி, எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுவதற்காக‌தான் அல்லாஹ்தஆலா நபி(ஸல்)அவர்களை அனுப்பி வைத்தானே தவிர, அமல் என்றாலே அது எதுவாக இருந்தாலும், எப்படியிருந்தாலும், எந்த நேரத்தில் செய்தாலும் நன்மைதான் என்று நாமாக தீர்மானிப்பதற்கு எந்த அதிகாரத்தையும் இறைவன் நமக்கு வழங்கவில்லை.

ஆனால், பராஅத் இரவு என்பது மார்க்கத்தில் இல்லாத‌ ஒரு புதுமை என்று இவ்வளவு தெளிவாக தெரிந்த பின்னும், பராஅத் இரவுக்கு ஆதாரங்கள் இருப்பதாக, சுன்னத் ஜமாஅத்தின் ஆலிம்கள் கூறிவருகிறார்கள். அவர்கள் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் இஸ்லாம் கூறும் அளவுகோல்களின்படி சரியான ஆதாரங்களாக இல்லை என்பதை சற்று நிதானமாக படித்து சிந்தித்துக்கொள்ளுங்கள். அவர்கள் காட்டும் ஆதாரங்கள் எப்படி உருப்படியில்லாதவை என்பதை அடுத்த பதிவில் தொடர்கிறேன், இன்ஷா அல்லாஹ்!

நன்றி- பயணிக்கும் பாதை

Jul 8, 2011

தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்கள்விருப்ப மொழியில் குர்ஆன்