Nov 30, 2006

கடன் கிடைக்கும்

">Link
என்னும் தலைப்பைப் பார்த்தவுடன் மிகவும் ஆர்வமாகப் படிக்க ஆரம்பிப்பவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் அவசியம் இந்தக் கட்டுரையை படிக்கத்தான் வேண்டும்.
-------------------------------------------------
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் பிறருக்குக் கடன் பட்டிருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாலும் தீராத கடன், பத்து மாதம் சுமந்து, படாத பாடுபட்டு நம்மைப் பெற்றெடுத்த நம் தாயிடம் நாம் பட்ட கடன். கண்ணை இமை காப்பது போல் மழலைப் பருவத்தில் காத்து வளர்த்து நம்மை அவர் ஆளாக்கிய கடன். குடும்பத்தைக் காப்பாற்ற, குழந்தைகளை வளர்க்கப் பாடுபட்டு உழைத்த தந்தையின் கடன்.இது போக அறிவைப் புகட்டிய ஆசிரியர் கடன், உள்ளத்தில் இடம் பெற்ற உடன் பிறந்தோர் கடன், நம்மையே நாடி வந்து நமக்காகத் தம்மையே அர்ப்பணித்த மனைவியின் கடன், நல்லொழுக்கத்தாலும், நன்னடத்தையாலும், நானிலம் போற்ற வாழ்ந்து பெற்றோருக்குப் பெருமை சேர்த்த பிள்ளைகள் கடன், ஆபத்து சமயங்களில் உதவி அனைத்து நேரங்களிலும் ஆறுதலாக இருந்த நண்பர்கள் கடன், இப்படி இந்தக் கடன் பட்டியல் நீண்டுக் கொண்டே போனாலும், இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவருக் கொருவர் உதவும் பொருளாதாரக் கொடுக்கல் வாங்கலின் போது ஏற்படும் கடனைப் பற்றி.
நாட்டை வளப்படுத்த அரசாங்கமே கடன் வாங்குகிறது. பெரும் தொழிலதிபர்களான செல்வந்தர்கள் கூடத் தம் தொழிலை விரிவு படுத்தக் கடன் வாங்குகின்றனர். அப்படியிருக்க தனி மனிதன் தம் தேவைகளுக்காகக் கடன் வாங்குவது தவறில்லை.வட்டியை அடிப்படையாகக் கொண்ட கடனை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் ஒருவருக் கொருவர் கடன் பெறுவதையும் தருவதையும் இஸ்லாம் தடை செய்ய வில்லை. கடன் கொடுக்கல் வாங்கலின் போது முறையாக எழுதி வைத்துக் கொள்ளும்படியும், தகுந்த சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளும்படியும் திருமறை குர்ஆனின் 2:282 வசனம் எடுத்தியம்புகிறது.
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தம் கேடயத்தை அடமானம் வைத்துக் கோதுமையைக் கடனாகப் பெற்றதாக ஆதாரப்பூர்வமான நபி மொழி நமக்கு அறிவிக்கிறது.
பரஸ்பரம் ஒருவருக் கொருவர் கடன் கொடுத்து உதவுவது அன்பை அதிகப் படுத்தும். கடன் வாங்குவது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் அடுத்தவருக்குத் தேவைப் படும்போது கொடுத்து உதவவும் மனம் வரவேண்டும். அப்போது தான் நமக்குத் தேவை ஏற்படும் போது பிறரிடம் கேட்கவும் முடியும்.
'கடன் கிடைக்கிறது என்பதற்காக வாங்காதே! 'தேவைப்படுகிறது' என்பதற்காக வாங்கு' என்பது ஓர் அறிஞரின் கூற்று. ஆம்! ஒருவர் நம்மிடம் 'பணம் தேவைப்பட்டால் கேளுங்கள்' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உடனேயே அவரிடம் 'சரி தாருங்கள்' எனக் கேட்கக் கூடாது. உண்மையிலேயே நமக்கு அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும்.
நமக்குக் கடன் கொடுத்து உதவ பலர் தயாராக இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் நாம் நற்பெயர் எடுத்திருக்கிறோம் என்று பொருள்.அந்த நற்பெயரை முடிந்த வரைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். இது வரை வாங்கிய கடன்களை ஒழுங்காக நாம் திருப்பிச் செலுத்தியிருந்தால் மட்டுமே இப்படி ஒரு நற்பெயர் நமக்குக் கிடைக்கும். இந்த நற்சான்றிதழுக்கு நாம் தகுதியானவர் தானா என்பதை, கடந்த காலங்களில் நாம் வாங்கிய கடனை முறையாக உரிய நேரத்தில் ஒழுங்காக நாம் திருப்பிக் கொடுத்திருக்கிறோமா என்பதை வைத்து நாம் தான் முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.
'இவர் மிகவும் நல்லவர், ஆனால் கடன் வாங்கினால் மட்டும் சீக்கிரம் தரமாட்டார்' என்று ஒருவரைப் பற்றி சிலர் கூறுவதுண்டு. இந்த விமர்சனம் அர்த்தமற்றது. இது அவரைப் பற்றிய புகழ்ச்சியா? அல்லது இகழ்ச்சியா? என்பது புரியவில்லை. வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பித் தராதவர் எப்படி நல்லவராக இருக்க முடியும்?
கடன் வாங்கிய ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருப்பித் தர இயலாமற் போவதுண்டு. ஆனால் அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட நபர் இப்படி விமர்சிக்கப் படுவதில்லை. வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பித் தருவதில்லை என்பதை வாடிக்கையாகக் கொண்டவர் தான் இப்படி விமர்சிக்கப் படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
'ஒருவரை நல்லவர் என்று சொல்ல வேண்டுமானால், அவர் அண்டை வீட்டுக் காரராக இருக்க வேண்டும், அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும், அல்லது அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்க வேண்டும்' என்னும் ஒரு பேரறிஞரின் கூற்று மிகவும் சிந்திக்கத் தக்கதாகும். இந்த மூன்று நிலைகளிலும் ஒருவரின் சுயரூபம் ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் வெளிப்பட்டு விடும்.
எதிர்பாராத ஒரு செலவு ஏற்படுகிறது. கையில் அறவே பணம் இல்லை. யாரிடமாவது கடன் வாங்கலாம். ஆனால் கடன் வாங்கி இதைச் செலவை செய்யத்தான் வேண்டுமா? என்று ஒன்றுக்குப் பலமுறை நன்றாகச் சிந்திக்க வேண்டும். தவிர்க்கவே முடியாது என்கிற சூழ்நிலை ஏற்படும் போது மட்டுமே கடைசி ஆயுதமாகக் கடனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை.
பொதுவாகவே சிக்கனமாகச் செலவு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை ஏற்படுவதில்லை. ஊதாரித்தனமான செலவுகளால் தான் பெரும்பாலானோர் கடனாளி ஆகின்றனர். தேவையற்ற செலவுகளைக் குறைத்தாலே கடன் இல்லாமல் வாழலாம். அபூர்வமாகத் தான் அவசிய செலவுகளுக்கு கடன் வாங்க நேரிடும். கடன் வாங்கி பிரியானி சாப்பிடுவதை விட கடன் வாங்காமல் கஞ்சி குடித்தாலும் அந்தப் பொழுது போய்விடும். கஞ்சி குடிப்பதற்கும் வழியில்லாத போது கடன் வாங்குவது குற்றமில்லை.
ஒருவரிடம் கடன் கேட்கும் நிர்ப்பந்தம் ஏற்படும் போது நமது தேவையையும் நிலையையும் சொல்லி கடன் கேட்க வேண்டும். திருப்பித் தரும் காலக் கெடுவையும் சொல்ல வேண்டும். சொன்ன காலக் கெடுவுக்குள் கடனை திருப்பிக் கொடுக்கவும் வேண்டும்.
நமக்குக் கடன் கொடுத்தவருக்கு எதிர்பாராத அவசரத் தேவை ஏற்பட்டு அவர் சிரமப் படுகிறார் என்பது நமக்குத் தெரிய வந்தால், எந்த வகையிலாவது ஒரு மாற்று ஏற்பாடு செய்து, அவர் கேட்பதற்கு முன்பே, அவரிடம் நாம் வாங்கிய கடனை தவணைக்கு முன்னரே கொடுக்க முயற்சிக்க வேண்டும். நாம் சொன்ன கெடு தான் இன்னும் இருக்கிறதே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. அவர் நிலைமையை உணர்ந்து கெடுவுக்கு முன்னரே திருப்பிக் கொடுப்பது, நமக்கு உதவி செய்தவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்.
வாங்கிய கடனை சந்தர்ப்ப சூழ்நிலையால் குறிப்பிட்ட காலத் தவணையில் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டு விடுமானால், கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து நமது இயலாமையை எடுத்துச் சொல்லி இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கேட்கலாம். எக்காரணம் கொண்டும் சம்பந்தப் பட்டவரை சந்திப்பதைத் தவிர்த்து ஓடி ஒளியக்கூடாது. அது கடன் கொடுத்தவருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும். நேரில் சந்தித்து ஆறுதலான வார்த்தைகள் சொன்னால் அவர் மனம் குளிரும். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கிடைக்கும். இடைப்பட்ட காலத்திலாவது எப்படியும் கடனைத் திருப்பிக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.மனம் குளிரப் பேசி மேலும் மேலும் தவணை கேட்பதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.
சிலர் கடன் வாங்கும் போது இனிக்க இனிக்கப் பேசுவார்கள். கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால் கோபம் பொத்துக் கொண்டு வரும். கொடுத்த கடனைக் கேட்டால் கோபப்படுகிறவர்கள் மனித இனத்தின் நச்சுப் பாம்புகள். 'கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை' என்று முன்னோர்கள் சரியாகத் தான் சொன்னார்கள்.
ஒருவர் பணம் வைத்திருப்பது நமக்குத் தெரியும், நமக்குத் தெரியும் என்பது அவருக்குத் தெரியும் என்றால் அப்படிப்பட்ட சூழ் நிலையில் அவரிடம் கடன் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் அவரிடம் கேட்டு அவர் 'இல்லை' என்று சொன்னால் அதற்காக அவர் மீது வருத்தப்படக் கூடாது. அவருக்கு வேறு ஏதேனும் செலவுகள் இருக்கலாம் அல்லது நமக்கு கடன் கொடுத்தால் ஒழுங்காகத் திருப்பிக் கிடைக்காது என அவர் கருதியிருக்கலாம். அவருடன் ஏற்கனவே நாம் கொடுக்கல் வாங்கல் செய்த போது நாம் நாணயத்துடன் நடந்துக் கொண்டோமா என்பதை நினைவு படுத்திப் பார்க்க வேண்டும்.
சிலரிடம் கொடுத்த கடனைக் கேட்டால், கேட்கும் போதெல்லாம் 'ஆம்! நான் உங்களுக்குத் தரவேண்டும் என்பது உண்மை தான், இல்லை என்று சொல்ல வில்லை, ஆனால் இப்போது என்னிடம் பணம் இல்லையே! கிடைக்கட்டும் தருகிறேன்' என்று வாரக் கணக்கில் மாதக் கணக்கில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். 'தரமுடியாது' என்று சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. மாதக் கணக்கில் அவர்களிடம் பணம் வராமலா இருக்கிறது? அவர்கள் செலவு செய்யாமலா இருக்கிறார்கள்? அவர்களுடைய வழக்கமான ஆடம்பரச் செலவுகள் படு ஜோராய் நடந்துக் கொண்டு தானிருக்கும். வாங்கிய கடனைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர்கள் இதயத்தில் தோன்றுவதே இல்லை.
கை நீட்டிக் கடன் வாங்கி விட்டால் திருப்பிக் கொடுக்கும் வரை, கடன் கொடுத்தவரைக் கண்டால் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போகிறவர்களும் உண்டு. இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் வாங்குகிறார்களே தவிர விரும்பி வாங்குகிறவர்கள் அல்ல. இப்படிப் பட்டவர்களை பேச்சிலும் நடத்தையிலும் அடையாளம் காண முடியும். இப்படிப் பட்டவர்களுக்குக் கடன் கொடுக்கலாம்.
மாதச் சம்பளம் பெறுவோர் சிலர் சம்பளம் வாங்கிய மறு நாளிலிருந்தே கடன் வாங்க ஆரம்பித்து விடுவார்கள். கடைக் காரர்களுக்கு வாடிக்கை யாளர்களைப் போல், கடன் வாங்குவதில் இவர்கள் வாடிக்கையாளர்கள். சம்பளம் வாங்கும் போது சரியாகத் திருப்பிக் கொடுத்தாலும், மறுபடியும் மறுபடியும் மாதாமாதம் கடன் வாங்கிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒரு மாதம் மட்டும் தங்கள் செலவினங்களை மட்டுப்படுத்திக் கொண்டால் அடுத்த மாதம் முதல் கடன் வாங்காமல் தங்கள் சம்பளத்திலேயே காலம் கழிக்கலாம். அந்த அளவுக் கெல்லாம் இவர்கள் சிந்திப்பதில்லை. வாங்கும் சம்பளத்திற்கேற்ப இவர்களிடம் சரியானத் திட்டமிடுதல் இல்லை. வருமானத்தில் ஒரு பகுதியை அடுத்த மாத சம்பளம் வரை அன்றாடச் செலவினங்களுக்கு ஒதுக்கிக் கொண்டால், அநாவசியமாக அடுத்தவரிடம் கடன் கேட்டுக் கையேந்த வேண்டிய அவசியம் ஏற்படாது. எதிர்பாராமல் ஏற்படும் அவசரத் தேவைகளுக்கு மட்டும் கடன் வாங்கிக் கொள்ளலாம். இப்படித் திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு அப்படிப்பட்ட 'எதிர்பாராதச்' செலவுகள் அபூர்வமாகவே ஏற்படும்.
கடைகளில் கணக்கு வைத்து காலமெல்லாம் கடன் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் பல வகைகளிலும் நஷ்டப்படுகிறார்கள் என்பதை அவர்கள் பெரும்பாலும் உணருவதில்லை. பணம் கொடுத்துப் பொருள் வாங்கும் போது பல இடங்களிலும் விசாரித்து, குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும். கடனுக்கு வாங்கும்போது விலை எல்லாம் விசாரித்துக் கொண்டிருக்க முடியாது.பணம் கொடுத்து பொருள் வாங்கும்போது தரமான பொருளைத் தேடிப்பார்த்து வாங்கலாம். கடனுக்கு வாங்கும்போது கிடைப்பதைத் தான் வாங்க வேண்டும். பணம் கொடுத்து பொருள் வாங்குபவர்களுக்குத் தான் முன்னுரிமை கிடைக்கும்.
கடனுக்கு வாங்குபவர்கள் தன்மானத்தைக் கூட சில சமயம் இழக்க வேண்டிவரும்.கடன் வாங்கிவிட்டு உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்காத போது கடன் கொடுத்தவர் சில சமயம் கோபத்தில் ஏதாவது பேசி விடக் கூடும். இச்சமயத்தில் கடன் வாங்கியவர் பொறுமையைத் தான் கடைப் பிடிக்க வேண்டும். உரிய நேரத்தில் திருப்பிக் கொடுத்திருந்தால் அவர் தவறாகப் பேசியிருக்கமாட்டார் என்பதை உணர வேண்டும். நமது தேவைக்குக் கடன் கொடுத்து ஆபத்தான நேரத்தில் உதவிய அவரது நல்ல குணத்தை மட்டுமே நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நாம் ஒருவருக்குக் கடன் கொடுத்து, உண்மையிலேயே அவரால் உரிய நேரத்தில் திருப்பித் தரஇயலாத சூழ்நிலை இருப்பது நமக்குத் தெரியவந்தால், இயன்றவரை தவணையை நீட்டிப்பதும், அவர் தரும் வரை பொறுமை காப்பதும், மிகவும் நன்மையான காரியங்களாகும்.
கடன் வாங்குவதை இயன்றவரைத் தவிர்க்க வேண்டும். இயலாதபோது மட்டுமே கடன் வாங்க வேண்டும். இயன்றவரைக் குறைவாக வாங்க வேண்டும். அதையும் தவிர்க்க முடியுமானால் அதுவே சிறந்தது.
கடன் பட்டோனாய்க் காலையிலே
கண் விழிப்பதினும் மேலாகும்
உடன் பட்டிரவுப் பசியுடனே
உறங்கச் செல்லல் பொன் மொழியாம்
என்று கவிஞர் அப்துல் கபூர் அழகாகச் சொல்வார்.
கடனாளியாக ஒருவர் மரணித்தால் அவருடைய சொத்துக்களிலிருந்து முதலில் அவருடைய கடன்களை அடைத்த பிறகு தான் எஞ்சிய சொத்துக்களை வாரிசுகள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று இறைவனின் திருமறை எடுத்தியம்புகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இறந்தவர்களின் உடல் ஜனாஸா தொழவைப்பதற்காகக் கொண்டு வரப்படும் போது 'இறந்த இவருக்கு கடன்கள் இருக்கின்றனவா? என்றும் அப்படி கடன்கள் இருந்தால் கடன்களை அடைக்கும் அளவுக்கு சொத்துக்கள் எதுவும் இவர் விட்டுச் சென்றுள்ளாரா? என்றும் விசாரித்து அப்படி இருந்தால் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அந்த ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்துவார்கள், இல்லை யென்றால் 'உங்கள் சகோதரருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றும் கூறிவிடுவார்கள்.
மரணம் எந்த நேரமும் யாருக்கும் ஏற்படலாம். வாங்கிய கடனைப் பற்றி வாரிசு தாரர்களிடம் 'வஸிய்யத்' (மரண உபதேசம்) செய்து வைக்க வேண்டும். வாங்கிய கடன்களையும், கொடுத்த கடன்களையும் எழுதி வைத்துக் கொள்வதை வழக்காகக் கொள்ள வேண்டும். கடனாளியாக இறப்பதை விட்டும் பாதுகாக்கும்படி அடிக்கடி இறைவனிடம் பிரார்த்திக் வேண்டும்.
இயன்றவரை கடன் வாங்காதவர்களாக, இயலாத சூழ்நிiயில் வாங்க நேர்ந்து விட்டால் முறையாகத் திருப்பிக் கொடுப்பவர்களாக, அடுத்தவர்களுக்கு அவசரத் தேவைகள் ஏற்படும்போது கொடுத்து உதவுபவர்களாக, கடன் பெற்றவர் திருப்பித்தர இயலாத சிரமத்தில் இருப்பது தெரியவந்தால் இயன்றவரை பொறுமை காப்பவர்களாக, கடன் வாங்கியவர் இறந்து போய்விட்டால், அவரின் வாரிசுதாரர்கள் தரமுடியாத வறுமையில் இருக்கும் போது மனப்பூர்வமாக மன்னிப்பவர்களாக, இறைவன் நம்மை ஆக்கிவைக்க பிரார்த்திப்போமாக. அதற்கேற்ற வகையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக.

அப்துஸ் ஸலாம் மஸ்தூக்காOct 25, 2006

எழுத்துக் கடலில்

">Link எழுத்துக் கடலில் என் பயணம்

எழுத்து' என்னும் பரந்து விரிந்த பெருங்கடலில் பலரும் பயணம் செய்கின்றனர். பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரும் கப்பல்கள் நீலத் திரை கடலை நீந்நி வரும்போது நானும் என் பங்காக ஒரு சின்னஞ் சிறு படகினை மிதக்க விட்டிருக்கிறேன். மாபெரும் கப்பல்கள் மிதக்கும் கடலில் சிறு படகுகளும் கூட தம் பணியை செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கின்றன.

எழுத்துக்கலை என்பது ஓர் அற்புதமான கலை. அதிலும் பத்திரிக்கைத் துறை பல அறிஞர்களை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறது, பல இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறது. இந்த எழுத்துலகில் சாதித்தவர்கள் பலர். சாதித்துக் கொண்டிருப்பவர்கள் அநேகம்.நான் சாதித்தவனும் அல்ல, சாதித்துக் கொண்டிருப்பவனும் அல்ல. சாதிக்கத் துடிப்பவன். எனது எழுத்துப் பசிக்குத் தீணி போட்டவர்களுக்கு நன்றிக் கடனாக இந்தக் கட்டுரை.

அதிகமதிகம் நூல்களைப் படிக்கும் போது நாமும் ஒரு நூல் எழுத வேண்டும் என்னும் ஆவல் பிறந்தது. அதிகமதிகம் பத்திரிக்கைகள் படிக்கும் போது இந்தப் பத்திரிக்கைகளில் நமது பெயரும் வராதா? என்று ஏங்கியது உண்டு.பத்திரிக்கைகளில் நமது பெயர் வரும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. நமது பெயரில் உள்ள யாரோ ஒருவர் எழுதியிருந்தால் அதுவே நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அது நாமாகவே இருந்தால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற சாதாரண மான(ண)வர்களுக்கு இது சந்தோஷமானது.

1977 ஆம் ஆண்டு நான் பி.யு.சி படித்துக் கொண்டிருந்த போது, தான் எனக்கும் எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது திருச்சியிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த முபாரக் என்னும் வார இதழுக்கு 'ரமளானின் சிறப்பு' என்னும் தலைப்பில் சிறு கட்டுரை ஒன்று எழுதி அனுப்பினேன். அது ரமளான் மாதம் என்பதால் அந்த ரமளான் முதல் வாரத்தில் எனது கட்டுரையை அந்த வார இதழ் பிரசுரித்து என்னை கௌரவித்தது. இது தான் பத்திரிக்கையில் நான் எழுதிய முதல் கட்டுரை.அதே முபாரக் வார இதழில் அடுத்தடுத்து 'ஆஷூரா தினத்தின் சிறப்பு' என்னும் கட்டுரையும் 'உலகில் மிகப் பெரியவர்கள்' என்னும் கட்டுரையும் எழுதினேன்.

1978 ஆம் ஆண்டு உமராபாத்தில் பயின்றுக் கொண்டிருந்தபோது, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு வெளியிடும் omiet journal மாத இதழின் தமிழ்ப் பிரிவு எனது 'அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி' என்னும் எனது நீண்ட கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அதற்குப் பரிசும் வழங்கியது.

உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் பயின்றுக் கொண்டிருந்த போது தமிழ் மாணவர் அமைப்பின் சார்பாக முதன் முதலாக 'அந்நஸீம்' (தென்றல்) என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிக்கை வெளியிட்டோம். இந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிடும் முழுப் பொறுப்பும் எனக்குத் தரப்பட்டிருந்தது. நானும் ஒரு பத்திரிக்கையாளன் ஆக வேண்டும் என்னும் எனது தீராத தாகத்தை இதன் மூலம் தணித்துக் கொண்டேன்..

கல்லூரியில் அவ்வப்போது நடைபெறும் மாபெரும் விழாக்கள் பற்றிய செய்திகளை, அப்போது சென்னையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த அறமுரசு நாளிதழுக்கு எழுதி அனுப்புவேன். நான் அனுப்பிவைக்கும் செய்திகளை உடனுக்குடன் அந்த நாளிதழ் வெளியிடும்

இது வரை நான் பத்திரிக்கைளுக்கு அனுப்பிய கட்டுரைகள் செய்திகள் அனைத்தும் எனது இயற் பெயரிலேயே எழுதி வந்தேன். 1980 ஆம் ஆண்டு குமுதம் வார இதழுக்கு 'திருப்பந்துருத்தி மஸ்தூக்கா' என்ற புணைப் பெயரில் ஒரு துணுக்கு அனுப்பினேன். சவூதி அரேபியாவில் தொழுகைக்கு அழைப்பதற்கென்றே ஒரு தனித் துறை இருப்பதைப் பற்றி நான் எழுதிய அந்தத் துணுக்குச் செய்தியை குமுதம் வார இதழ் வெளியிட்டிருந்தது. புணைப் பெயரில் எழுதிய முதல் ஆக்கம் இது தான்

1981 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து வெளியிடப்பட்ட 'புரட்சி மின்னல்' மாத இதழ் எனது எழுத்துப் பசிக்குச் சரியாகத் தீணி போட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மாதந்தோறும் பல் வேறு கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள், எழுதுவேன். எழுத்துத் துறையில் என்னை ஊக்கப்படுத்திய பெருமை 'புரட்சி மின்னல்' மாத இதழையே சாரும். தமிழகத்தில் ஏகத்துவக் கொள்கை வேரூன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்த புரட்சி மின்னல் இதழ் தான் பின்னர் அல் முபீன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஏகத்துவக் கொள்கையை ஓங்கி ஒலித்தது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

தமிழ் முஸ்லிம் பத்திரிக்கை உலகில் மிகச் சிறப்பாக இடம் பிடித்த மாதம் இருமுறை இதழான சமரசம் இதழில் எனது கட்டுரைகள் இடம் பெற்று சிறந்த வரவேற்பைப் பெற்றன.

1984 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல ஆண்டுகள் மறுமலர்ச்சி வார இதழில் அடிக்கடி கட்டுரைகள் எழுதினேன். ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பற்றிய செய்திகளையும், மற்றும் சவூதியில் வெளிவரும் பல்வேறு அரபி ஆங்கில நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளையும் தமிழில் மொழி பெயர்த்து அனுப்பிவைப்பேன். 'சவூதியிலிருந்து எமது சிறப்பு நிருபர்' என்று போட்டு எனது செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து மறுமலர்ச்சி வார இதழ் என்னை கௌரவித்தது.

மாத்யமம் மலையாள நாளிதழ் பிரபோதனம் மலையாள மாத இதழ் ஆகியவற்றில் வெளிவரும் மிக முக்கியமான பயனுள்ள கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து மறுமலர்ச்சி வார இதழுக்கு அனுப்பி வைப்பேன். எனது கட்டுரைகளை எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிடும் மறுமலர்ச்சி வார இதழ் அந்தக் காலகட்டத்தில் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரே முஸ்லிம் வார இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முஸ்லிம் மத்தியில் காணப்படும் மூடப் பழக்கங்களைக் கண்டித்து 'கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் போகட்டும்' என்னும் தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிட்டேன். 1986 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற முதல் 'அந்நஜாத்' மாநாட்டில் இது விநியோகிக்கப்பட்டு பரவலாக தமிழகம் முழுவதும் சென்றடைந்தது. கூத்தாநல்லூர் இஸ்லாமியப் பிரச்சார அமைப்பும் மற்றும் சில ஊர்களில் இயங்கும் அமைப்புகளும் இதனை மறுபிரசுரம் செய்தன.

இறையருளால் புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் பெரும் பாக்கியம் கிடைக்கப் பெற்று புனித ஹஜ் செய்து வந்த இனிய அனுபவங்களை 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' என்னும் தலைப்பில் 1987 ஆம் ஆண்டு ஒரு பயணக் கட்டுரை நூலாக எழுதி வெளியிட்டேன். நான் எழுதிய முதல் நூல் இது தான்.எனது திருமணத்தின் போது இது விநியோகிக்கப்பட்டது. எனது வாழ்க்கையில் நானும் ஒரு நூலாசிரியர் ஆக வேண்டும் என்னும் எனது கனவு இறையருளால் நிறைவேறியது. அல்ஹம்து லில்லாஹ்.

பிரசித்தி பெற்ற உணர்வு வார இதழிலும் கட்டுரைகள் புனித ஹஜ் பற்றிய செய்தித் தொகுப்புகள் அடிக்கடி எழுதியிருக்கிறேன். ஆசிரியர்க் குழு தவிர மற்றவர்கள் எழுதும் எதையும் பிரசுரிக்காத உணர்வு இதழ் கூட சில இதழ்களில் எமது ஆக்கங்களைப் பிரசுரித்திருக்கின்றது.

மதுரையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் டைம்ஸ் மாத இதழ் மார்க்கம் சார்ந்த எமது பல்வேறு கட்டுரைகளுக்கு முக்கித்துவம் தந்து பிரசுரித்துள்ளது.

சென்னையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த சாந்தி வளாகம் மாத இதழ் தொடர்ந்து மாதந்தோறும் எமது கட்டுரைகளைப் பிரசுரித்து எமது சொந்த ஊர்க்காரர்கள் பலரும் எமது ஆக்கங்களைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி மகிமைப் படுத்தியதை மறக்க முடியாது.

ஏற்கனவே எழுதிய 'கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் மண்மூடிப் போகட்டும்' என்னும் பிரசுரத்தைப் பார்வையிட்ட பல்வேறு அன்பர்கள் அதை இன்னும் விரிவு படுத்தி தனியொரு நூலாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க 2002 ஆம் ஆண்டு அதே தலைப்பில் 80 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப் பட்டது. தமிழகத்தின் பல ஊர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்நூல் இரண்டே மாதங்களில் 2000 பிரதிகள் தீர்ந்து போயின.

2003 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பும், 2004 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பும் வெளிவந்து சாதனை படைத்தது.மிகக் குறுகிய காலத்தில் 3 பதிப்புகள் கண்ட இந்நூல் இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் 4 ஆம் பதிப்பு வெளிவர உள்ளது. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாகட்டும்.

1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எமது முதல் நூல் 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' புனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனையாக 2004 ஆம் ஆண்டு சில மாற்றங்களுடனும் புதுப் பொலிவுடனும் வெளியிடப்பட்டது.இந்நூல் புனித ஹஜ்ஜின் சிறந்த வழிகாட்டியாக பல்வேறு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு இணைய தள உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. புகழும் பெருமையும் இறைவனுக்கே சொந்தம்.

ஊடகத் துறையில் இப்போது உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் இணைய தளம் மூலம் எமது ஆக்கங்களை உலகத் தமிழர்களுக்கு மத்தியில் கொண்டு சேர்த்த பெருமை இதுதான் இஸ்லாம் டாட் கம் இணைய தளத்தையே சாரும். இஸ்லாமிய தமிழ் இணைய தளங்களிலேயே உலகெங்கும் மிகவும் பிரபல்யமான இந்த இணைய தளம் எமது ஆக்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு எம்மை கௌரவிப்பதை இங்கு நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும்.

எமது ஆக்கங்கள் இடம் பெறும் பிற இணைய தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளின்முகவரிகள்

www.idhuthanislam.com
www.tamilmuslim.com
www.otrumai.com
www.abumuhai.blogspot.com
www.amtc-france.blogspot.com
Oct 8, 2006

ஆக்கூர் ஓரியண்டல்

;
">Link எல்லையில்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும். ஸலவாத்தும் ஸலாமும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் அடியொற்றி வாழ்ந்த நல்லோர் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக ஆமீன்.
உலகில் வாழ்ந்த பல்வேறு அறிஞர்கள் தங்கள் சுய சரிதையை எழுதியிருக்கின்றனர். அவர்கள் தம் இறுதிக் காலத்தில் தங்கள் மலரும் நினைவுகளை மனதில் அசை போட்டவர்களாக, தங்கள் வாழ்வில் தாங்கள் சந்தித்த இன்ப துன்பங்களையும், தாங்கள் பெற்ற படிப்பினைகளையும், எழுத்தில் வடித்திருக்கின்றனர். அடுத்தத் தலைமுறையினருக்கு அதில் பல்வேறு படிப்பினைகள் இருக்கின்றன. அது போல் நானும் எனது சுய சரிதையை எழுதியிருக்கிறேன். அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா

எனது சுய சரிதையிலிருந்து ஒரு பகுதி

பிறந்த மண்ணைப் பிரிந்து...

எனது வெளி உலக வாழ்க்கை முதன் முதலில் ஆக்கூரில் ஆரம்பமாகின்றது. 1970 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல் வாரம் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.
ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் 5 ஆம் வகுப்பு வரை என்னுடன் பயின்ற நண்பர்களின் வாழ்க்கை அதே சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவர்களின் உயர் நிலைப்பள்ளியின் காலகட்டத்திலும் கழிந்திருக்கலாம். ஆனால் அது போல் சுதந்திரமும் மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்க வில்லை என்பது தான் உண்மை.

அந்தப் பள்ளிக்கூட நாட்களில் அப்படி ஒரு சுதந்திரம் எனக்குக் கிடைக்க வில்லை என்று நான் ஏங்கியிருக்கிறேன். ஆனால் கட்டுப்பாடான அந்த ஆக்கூர் வாழ்க்கை எனக்கு அறிவைத் தந்தது, அனுபவங்களைத் தந்தது, அநேக நண்பர்களைத் தந்தது, மனப் பக்குவத்தைத் தந்தது, மார்க்க ஞானத்தைத் தந்தது. இவையெல்லாம் எனது ஆரம்பப் பள்ளித் தோழர்கள் அனைவருக்கும் கிடைத்ததா என்பது எனக்குத் தெரியாது.

மார்க்க விஷயங்களில் ஓரளவேனும் ஞானம் பெறுவதற்கு அந்த ஆக்கூர் வாழ்க்கை தான் எனக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. தமிழில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதும் அளவுக்கு எனக்கு தமிழ் அறிவை ஊட்டியதும், நான் ஒரு எழுத்தாளன் ஆவதற்கு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதும் இந்த ஆக்கூர் வாழ்க்கை தான் என்றால் அது மிகையாகாது.

ஆக்கூரில் பயின்ற 6 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அங்கு பயின்றுக் கொண்டிருந்த காலத்தில் அது ஒரு சிறை வாழ்க்கையாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் அது ஒரு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். மறுபடியும் அந்த வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டோமா? என்று தான் ஏக்கம் வருகின்றது.

மிகவும் கண்டிப்பு நிறைந்த நிர்வாகம், கடுமையான சட்டதிட்டங்கள், மனிதாபிமானம் கொண்ட ஆசிரியர்கள், சிறந்த கல்வி, சிறப்பான நல்லொழுக்கப் பயிற்சி இவற்றின் ஒட்டு மொத்தக் கலவை தான் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி. 'கற்க வாரீர்! சேவை செய்யத் திரும்புவீர்!' என்னும் அற்புதக் கொள்கையை குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஓர் அற்புத நிறுவனம்.

ஆக்கூர் ஓரியண்டலைப் பற்றி நினைத்துப் பார்க்கும் மாணவர் எவருக்கும் மறக்க முடியாத ஒரு ஆசிரியர் என்றால் சங்கைக் குரிய இக்பால் சார் அவர்கள் தான். மிகச் சில நாட்கள் மட்டுமே இருந்து விட்டுச் சென்ற மாணவனும் நினைவில் வைத்திருக்கும் ஒரு ஆசிரியர் உண்டென்றால் அது இந்த நல்லாசிரியரைத் தான். எங்கள் மீது பரிவும் பாசமும் காட்டிய, நற்கல்வியையும் நல்லொழுக்கத்தையும் போதித்த நல்லாசிரியர் பலர் இருந்தனர். ஒவ்வொருவரைப் பற்றியும் ஓராயிரம் வரிகள் எழுதலாம். ஆனாலும் இக்பால் சார் அவர்களைப் பற்றிக் குறிப்பிடாவிட்டால் ஓரியண்டல் பள்ளி வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிலிருந்தும் நண்பர்கள் கிடைத்தார்கள். 6 ஆம் வகுப்பு என்னும் வண்டி புறப்படும் போது பயணத்தைத் தொடங்கியவர்கள் 90 பேர். வழி நெடுகிலும் பல ஊர்களில் (வகுப்புகளில்) சிலர் தம் பயணத்தை நிறுத்திக் கொண்டனர். சிலர் புதிதாக வண்டியில் ஏறிக் கொண்டனர். போக வேண்டிய ஊராகிய பள்ளி இறுதி வகுப்பை அடையும் போது முதலில் ஏறிய 90 பேர்களில் வெறும் 16 பேர் மட்டுமே எஞ்சினர். இடையில் ஏறிக் கொண்ட 8 பேரையும் சேர்த்து 24 பேர் மட்டுமே 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினோம். அனைவருமே வெற்றி அடைந்து நூறு சதவிகித தேர்ச்சியைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தோம்.

மற்ற மாணவர்கள் இடையில் எங்களை விட்டுச் சென்றதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அதிகமான கட்டுப் பாடுகள், கடுமையான தண்டனை ஆகிய காரணங்கள் இருந்தாலும், மாணவர்கள் சீர் கெட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக இவற்றைக் குறை கூற முடியாது. ஆனால் இதையெல்லாம் விட முக்கிய காரணம் உணவு என்பதில் சந்தேகமில்லை.

ஆக்கூர் ஓரியண்டலின் மகிமையைப் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதாது. அங்கு நாங்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் குறிப்பிட்டாக வேண்டும். குறை சொல்வது எனது நோக்கமல்ல வெனினும் எனது வாழ்க்கையில் நான் பட்ட பாடுகள், சந்தித்த இன்ப துன்பங்கள் அனைத்தையும் எழுத்தில் வடிக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதுகிறேன்.

பொதுவாக 10 வயது முதல் 20 வயது வரை உள்ள பருவம் தான் நன்றாக சாப்பிடவேண்டிய பருவம். ஆனால் அந்தக் கால கட்டத்தில் 6 ஆண்டுகள் வயிற்றுக்குப் போதுமான உணவோ, சத்துள்ள உணவோ எனக்குக் கிடைக்கவில்லை.

ஆரம்பக் காலத்தில் காலை உணவாகக் கஞ்சி கொடுப்பார்கள். அதுவாவது கொஞ்சம் வயிறு நிரம்பும் அளவுக்கு இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு கஞ்சியை நிறுத்தி விட்டு பழைய சோறு (நீராகாரம்) கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு அகப்பை சோறும் ஒரு அகப்பை தண்ணீரும் கிடைக்கும். தொட்டுக் கொள்ள பொட்டுக் கடலை சட்னி தருவார்கள்.தட்டில் நீராகாரத்தை வாங்கிக் கொண்டு நடந்தபடியே குடித்துக் கொண்டு போனால், சட்னி கொடுக்கும் இடம் வரும் போது தட்டில் சோறு தீர்ந்து விடும். சட்னியை கையில் வாங்கி, ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வருவது போல், 'நான் அப்படியே சாப்பிடுவேனே' என்று அப்படியே சாப்பிட்டு விட வேண்டியது தான். 'சட்னி இங்கே சோறு எங்கே?' என்றெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க முடியாது.

மதிய உணவு சாப்பிடும்போது எந்த மாணவனுக்கும் வீட்டு நினைவு வராமல் இருக்காது. அரை வயிற்றுக்குத் தான் உணவு. 'அரை வயிறு உணவு கால் வயிறு தண்ணீர் கால் வயிறு காலி, இது தான் ஆரோக்கியம்' என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதைச் சரியாகக் கடைப் பிடித்தது நாங்கள் தான்.

கட்டி கட்டியாக சோற்றை வெட்டி எடுத்து வைப்பார் எங்கள் சமையல் காரர் கலிய மூர்த்தி. கட்டியை உடைத்துப் பார்த்தால் உள்ளே வேகாத அரிசி இருக்கும். இப்படி ஒரு நூதனமான முறையில் அவரைத் தவிர வேறு யாருக்கும் சமைக்கத் தெரியாது.உலையில் போடுவதற்கு முன் அரிசியல் கல்லைப் பொறுக்க அவருக்கு நேரம் இருக்காது. சாப்பிடும் போது நாங்கள் தான் சாப்பாட்டில் இருக்கும் கல்லை மிகவும் லாவகமாக நாக்கால் எடுத்து விடுவோம். ஆக்கூர் மாணவர்களுக்கு இந்தக் கலை அத்துப்படி.

வருடம் முழுவதும் பருப்புக் குழம்பு தான். அந்த கலர் தண்ணீருக்கு பருப்புக் குழம்பு என்று நாங்கள் தான் பெயர் வைத்துக் கொண்டோம். விஞ்ஞானப் பாடத்தில் படித்த 'வடித்தெடுத்தல்' முறையை எங்கள் விடுதி பருப்புக் குழம்பில் சோதனை செய்து பார்த்தால் இறுதியில் எதுவும் மிஞ்சாது.

தட்டில் சோற்றை வாங்கிக் கொண்டு அடுத்த கவுண்டருக்குச் சென்றால் அங்கே குழம்பு என்று நாங்கள் பெயர் வைத்த கலர் தண்ணீர் ஊற்றுவார்கள். நமக்கு ஒரு துண்டு உருளைக் கிழங்கு விழாதா? என்று துஆச் செய்துக் கொண்டே தட்டை நீட்டினால், துஆ கபூலானவர்களின் தட்டில் ஒரு துண்டு உருளைக் கிழங்கு வந்து விழும். ஒரு துண்டு உருளைக் கிழங்கு கிடைக்கப் பெற்றவன் பெரிய அதிர்ஷ்டசாலி. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவன் நடக்க, பின்னால் வருபவர்களுக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.

அது சரி, தொட்டுக் கொள்ள என்ன என்று தானே கேட்கிறீர்கள்? பக்கத்தில் உள்ளவரைத் தான் தொட்டுக் கொள்ள வேண்டும். பொரியல், கூட்டு என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம். நாங்கள் பார்த்தது கூடக் கிடையாது. கறி, மீன் என்பதெல்லாம் கனவில் கூடக் கண்டது கிடையாது.

இரவு சாப்பாட்டுக்கு வருடம் முழுவதும் ரசம் தான். எங்கள் விடுதி ரசம் வெள்ளையாக இருக்கும். அது தேங்காய்ப்பால் ரசம் என்று எங்கள் சமையல் காரர் சொல்வார். ஒரு நாள் மாலை நேரத்தில் சோறு சமைக்க அரிசி களையும் போது சமையல்காரர் தன் உதவி ஆளிடம் 'தேங்காய்ப்பால் எடுத்து வைக்க ஒரு பாத்திரம் கொண்டு வா' என்று சொன்ன போது தான், தேங்காய்ப்பால் எதிலிருந்து எடுக்கப்படுகிறது என்னும் உண்மையைப் புரிந்துக் கொண்டோம்.

பல்வேறு சுக துக்கங்களுடன் ஆக்கூர் வாழ்க்கை மெது வாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இடையிடையே மகிழ்ச்சியான நாட்கள் என்றால் ஆக்கூரின் பணக்கார வீடுகளில் நடக்கும் திருமணம் நடக்கும் நாட்கள் தான். பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருத்தளிப்பார்கள். மிகப் பிரமாதமான 5 கறிச் சோறு. இன்றும் அதன் ருசி மறக்கவில்லை. வாழ்க அந்தப் பேருள்ளங்கள்.

இறந்தவர்களின் வீடுகளில் குர்ஆன் மௌலூது ஓதக் கூப்பிடுவார்கள். நன்றாக ஓதும் சில மாணவர்களுக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும். வகைவகையான திண்பண்டங்களும் வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். இடையிடையே கிடைக்கும் இது போன்ற விருந்துகள் தான் அந்தப் பாலைவன வாழ்க்கையில் வசந்தமாக வீசும்

ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் எங்களுக்குக் கொண்டாட்டம் தான். தினமும் இரவில் பெரியப் பள்ளிவாசலிலிருந்து அனைவருக்கும் நெய்ச்சோறு வந்து விடும். களி போன்ற சோற்றுக்கும் கண்ணீரை வரவழைக்கும் ரசத்துக்கும் 12 நாட்கள் விடுதலை. நபி (ஸல்) அவர்களுக்காக வருடமெல்லாம் மௌலூது ஓத மாட்டார்களா? எனத் தோன்றும். இது மார்க்கத்திலேயே இல்லாத செயல் என்றும் மாபெரும் பாவம் என்றும் அப்போது தெரியாதல்லவா?

ஆறு ஆண்டுக் காலம் உணவுக்காக நாங்கள் பட்ட பாட்டை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இதையெல்லாம் எழுதியிருக்கிறேன தவிற எங்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல ஆறு ஆண்டுகள் இலவசமாக சோறு போட்டு வளர்த்த ஒரு நிறுவனத்தைக் குறை கூறுவது எனது நோக்கமல்ல.

ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு உணவளிக்கவே பல பெற்றோர்கள் படாத பாடு படும்போது, கிட்டதட்ட 400க்கும் அதிகமான மாணவர்களுக்கு தினமும் மூன்று வேளை காலமெல்லாம் சோறு போடுவதற்கு அந்த நிர்வாகம் தான் என்ன செய்யும். அவர்களைச் சொல்லிக் குறற்மில்லை.

இப்போதாவது மதிய உணவை அரசாங்கம் தருகிறது. அப்போது அதுவும் இல்லை. முழுக்க முழுக்க நிர்வாகம் தான் பொறுப்பு. ஒரு நாள் கூட எங்களைப் பட்டினி போடாமல் ஒவ்வொரு வேளையும் உணவளிக்க அதன் நிர்வாகிகள் என்ன பாடுபட்டிருப்பர்கள்! ஓரியண்டலின் தாளாளர்களாக தன்னலம் கருதாது பாடுபட்ட கண்ணியத்திற்குரிய ஜனாப், ஓஜே முஹம்மது காசிம், மற்றும் சங்கைக்குரிய ஜனாப் அப்துல் ஹமீத் போன்றவர்களின் சேவைக்கு அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுமையில் நற்கூலி தருவானாக என்று அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக துஆச் செய்வார்கள்.

சமுதாயத்தின் பெரும் செல்வந்தர்கள் எவரேனும் இக்கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் தயவு செய்து இது போன்ற தரமான மார்க்கக் கல்வி ஸ்தாபனங்களுக்கு உங்கள் ஜகாத் ஸதகா போன்ற தருமங்களைச் செய்யுங்கள். ஏழை மாணவர்களின் துஆ எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும்.'

ஆக்கூரில் ஆறு வருடங்கள் பயின்ற மாணவன் உலகின் எந்தத் தீவுக்குப் போனாலும் பிழைத்துக் கொள்வான்' என்று தலைமை ஆசிரியர் முருகேசன் அய்யா அவர்கள் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. அதன் பிறகு சென்ற எந்த இடத்திலும் நாங்கள் உணவை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. எங்களை இப்படி ஒரு பக்குவத்துக்கு ஆளாக்கியது ஆக்கூர் வாழ்க்கை.

சாப்பிடுவதற்காக வாழ்பவர்கள் இந்த உணவை காரணம் காட்டி வெளியேறி விட்டனர். வாழ்வதற்காக சாப்பிடும் கொள்கையைக் கொண்டவர்கள் இந்த உணவுப் பிரச்சினையை ஒரு பொருட்டாக நினைக்காமல் தாங்கள் வந்த நோக்கமாகிய கல்வியைக் கற்பதில் கவனம் செலுத்தினார்கள். ஏனெனில் அவ்வளவு தரமாக கல்வி அந்த ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியில் எங்களுக்குக் கிடைத்தது. ஆக்கூரில் கற்று வெளியேறியவர்கள் பெரும் பாலும் நல்ல நிலையியே இருக்கின்றனர் என்பதைப் பிற்காலத்தில் காண நேர்ந்தது.

சமீபத்தில் சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துக் கொள்ள ஆக்கூர் சென்றிருந்தேன். இப்போதைய தாளாளர் சங்கைக்குரிய ஜனாப் அல்ஹாஜ் முஹம்மது இக்பால் அவர்களின் நிர்வாகத்தின கீழ் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. மிகவும் தரமான உணவு. சகல வசதிகளுடன் கூடிய விடுதி. சிறப்பான கவனிப்பு. பல்வேறு புதிய கட்டடங்கள். பள்ளியின் முன்னேற்றத்தைக் கண்டு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

'மன்பவுல் பயான் மாணவர் மன்றம்' என்ற பெயரில் இயங்கி வந்த மன்றத்தின் வாரந்திரக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவுகளில் நடக்கும். ஒவ்வொரு வாரமும் பேச வேண்டிய மாணவர்களின் பட்டியல் அறிவிப்புப் பலகையில் எழுதி ஒட்டப்படும். பல மாணவர்கள் பெயர் வரும் போது லீவு போட்டு விடுவார்கள். 8 ஆம் வகுப்பு வரை நானும் அப்படித்தான்.

9 ஆம் வகுப்பு படிக்கும் போது, முதல் வாரமே மன்றத் தலைவரிடம் சென்று நானாகவே என் பெயரைப் போடும்படிச் சொன்னேன். 'நபிகள் நாயகம்' என்ற தலைப்பைத் தேர்வு செய்திருந்தேன். பேச வேண்டிய நாள் வந்தது. என் பெயர் கூப்பிடப்பட்டது. மேடையில் ஏறினேன். கை கால்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன. நாக்கு உலர்ந்து போனது. ஒரு வாறு சமாளித்துக் கொண்டு என் உரையைத் தொடங்கினேன்.

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். அவர்களது தாயார் பெயர் ஆமினா. தந்தை பெயர் அப்துல்லா. 25 ஆம் வயதில் திருமணம் செய்தார்கள். 40 ஆம் வயதில் நபிப்பட்டம் பெற்றார்கள். 53 ஆம் வயதில் ஹிஜ்ரத் சென்றார்கள். 63 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன்'

என்று சொல்லி விட்டு ஓடிப் போய் உட்கார்ந்துக் கொண்டேன்.எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்தார்கள். ஒவ்வொரு மாணவரும் பேசிய பிறகு தலைவர் விமரிசனம் செய்வது வழக்கம். நான் பேசிய பின்னர் தலைவர் எழுந்தார், அவர் செய்த விமரிசனம் அற்புதமானது. 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பலர் பேச நான் கேட்டிருக்கிறேன், ஆனால் இதைவிடச் சுருக்கமாக வேறு யாரும் பேச முடியாது' விமரிசனத்தைக் கேட்டு எனக்கே சிரிப்பு வந்து விட்டது. அன்று முதல் ஒரு வைராக்கியம் பிறந்தது. நானும் ஒரு பேச்சாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

வாரம் தவறாமல் பெயர் கொடுத்து பேசினேன். அதன் பின்னர் 3 ஆண்டுகள் தொடர்ந்து பேசினேன். நான் எப்போது பேசுவேன் என்று சக மாணவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு என் பேச்சின் தரம் உயர்ந்தது. இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் பேசத் தொடங்கினேன். பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றேன்.

பள்ளிக்கூடம் விடுமுறை விடும் போது ஊருக்கு வருவதற்கு ஆக்கூரை விட்டு பஸ் புறப்படும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். கனத்த இதயம் இலேசானது போல் தோன்றும். அது போல் விடுமுறை முடிந்து மறுபடியும் ஆக்கூர் திரும்பும் போது பஸ் ஆக்கூரை நெருங்க நெருங்க உலகத்து வேதனையும் ஒன்றாக மனதில் வந்து சேரும். இது வெல்லாம் அங்கு படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தான்.

ஆக்கூரில் நாங்கள் கற்ற கல்வியால் அளப்பெரும் நன்மைகளை பிற்காலத்தில அடையப் பெற்றோம். உயர் கல்வி கற்க அடுத்தடுத்து பல்வேறு கல்வி நிலையங்களுக்கு நாங்கள் சென்ற போது, மற்ற கல்வி நிறுவனங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களை விட உயர்ந்த அந்தஸ்தில் மதிக்கப்பட்டோம்.ஆக்கூர் ஓரியண்டலில் கற்ற கல்வியின் மகிமையை அப்போது தான் நாங்கள் புரிந்துக் கொண்டோம். நாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நொடிப் பொழுதில் எங்களுக்கு மறந்து போனது.

உலகக் கல்வியையும், மார்;க்கக் கல்வியையும் ஒரு சேரப் பயிலும் அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது போல் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. 11 ஆம் வகுப்பை முடித்து நாங்கள் வெளியேறிய போது கிட்டத்தட்ட அரபிக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற ஒரு மௌலவியின் தரத்தில் பாதியாவது எங்களிடம் இருந்தது என்று சொல்லாம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் வந்து ஆக்கூரில் சங்கமித்த நாங்கள், ஒருவருக் கொருவர் உறுதுணையாய், உற்ற நண்பர்களாய், அண்ணன் தம்பிகளாய், காலம் கழித்தோம். நட்பின் உண்மையான பொருள் புரிந்து நண்பர்கனைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் இந்த வயதில் தானே வரும்.எத்தனையோ நண்பர்களுடன் பழகும் வாய்;ப்பு கிடைத்தது. அந்த நண்பர்கள் அனைவரைப் பற்றியும் எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. பள்ளி வாழ்க்கை முடிந்த பின்னர் அவரவரும் தம் எதிர் காலக் கனவுகளுடன் வாழ்க்கை எனும் வானத்தில் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விட்டனர்.

சிலர் மனதில் நின்றனர். சிலர் மறந்து போயினர். சிலரைப் பார்த்தால் ஞாபகம் வரும், சிலரின் பெயர்கள் மட்டும் நினைவில் நின்றன, நிகழ்வுகள் மறந்து போயின. பிரிந்து சென்று 30 ஆண்டுகள் ஆனபின்பும் இன்றளவும் தொடர்;ந்து தொடர்பு வைத்திருக்கும் அற்புத நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

என் வாழ்க்கையில் முதன் முதல் நட்பு என்ற வார்த்தைக்குப் பொருள் சொன்ன வித்தகன், இன்றளவும் என்னால் மறக்க முடியாத நண்பன்,என்றென்றும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ஏற்காட்டுச் செம்மல் எஸ்ஸென்கே என்று நான் அன்புடன் அழைக்கும் காஜா மைதீன்,வகுப்பில் தொடர்ந்து முதல் ரேங்கைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்த, தற்சமயம் பிரான்ஸில் குடும்பத்துடன் வசிக்கும் கோட்டைக்குப்பம் நூஹ், மறக்காமல் அடிக்கடி கடிதம் எழுதும் சேலம் உஸ்மான், ஜமால் முஹம்மது கல்லூரில் பெருமைப் படத்தக்க விதத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் நல்லொழுக்கத்திற்குப் பேர் போன முஹ்யித்தீன் அப்துல் காதர், எழுத்துத் துறையில் எனக்கு ஆர்;வமூட்டிய கோட்டைக்குப்பம் அக்பர் அலி, ரியாதில் ஒரு பெரும் நிறுவனத்தில் உயர்ந்த பதவி வகித்துக் கொண்டு இன்றளவும் என் மீது உயர்வான அபிப்பிராயம் வைத்திருக்கும் திண்டுக்கல் சுகர்னோ என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீத், குடும்பத்தில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொண்டு விட்ட அப்துல் ஹாதி, பள்ளப்பட்டி உபைதுர்ரஹ்மான்.உயர்ந்த நிலையை அடைந்தும் உள்ளத்தால் மறக்காத முத்துப் பேட்டை ஷாஹ-_ல் ஹமீத், மாபெரும் தொழில் அதிபராக வளர்;ந்த பின்னும் நட்பை மறக்காத திருமுல்லைவாசல் அலி ஹூஸைன் என இந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.
சம காலத்தில் பயிலாவிட்டாலும் சநதிக்கும் நேரமெல்லாம் தாமும் ஆக்கூரில் பயின்ற இன்ப நினைவுகளை எமக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கும் அன்பு நண்பர் திண்டுக்கல் சேக் அலி போன்றவர்களையும் மறக்க முடியாது.

ஏகப்பட்ட சோகங்களுடனும் இடையிடையே சில சந்தோஷங் களுடனும் ஒரு வாராகப் பள்ளி இறுதி வகுப்பாகிய 11 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாகிவிட்டது. இது தான் இறுதி ஆண்டு எங்கள் படிப்புக்கும் சரி நாங்கள் பட்;ட சிரமங்களுக்கும் சரி. அதிலும் அரசாங்கப் பொதுத் தேர்வல்லவா? வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர் அனைவரும் பாடம் மட்டும் எடுக்க வில்லை. எங்களைப் பிழிந்தும் எடுத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது எங்கள் நன்மைக்குத் தானே என்று இப்போது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அப்போது எங்களுக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு பாட நேரமும் மாற மாற வௌ;வேறு ஆசிரியர்கள் வருவார்கள். வருபவர்கள் அனைவருமே ஒருவருக் கொருவர் சளைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருக்கும் மாணவர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும்.தமிழ் ஆசிரியர் வரும் போது மட்டும் கொஞ்சம் எங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வோம். அந்த வருடம் எங்கள் தமிழாசிரியர் சிவசங்கரன் அய்யா அவர்கள் டாக்டர் பட்டம் பெற சென்று விட்டதால் புதிதாக ஆபிரகாம் லிங்கன் அய்யா அவர்கள் வந்தார்கள். என்னமோ தெரிய வில்லை தமிழாசிரியர் அனைவருமே மென்மையாகத் தான் இருப்பார்களோ! இவரும் எங்களை அன்புடன் நடத்தினார். தமிழ் வகுப்பைத் தவிர மற்ற வகுப்புகள் அனைத்தும் போர்க்களத்தைத் தான் நினைவு படுத்தும்.

அந்த ஒரு வருடம் நாங்கள் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னர் பொதுத் தேர்வு வரும் வரை நாங்கள் நிம்மதியாக உண்டதும் இல்லை, உறங்கியதும் இல்லை. இரவும் பகலும் படித்தோம். எதிர் காலத்தை நினைத்துப் படித்தோம். எங்களைக் கசக்கிப் பிழிந்த ஆசிரியர்கள் மீது எங்களுக்கு கோபம் வரவில்லை. நாங்கள் நல்ல மதிப்பெண் பெற்று எங்கள் எதிர் காலம் சிறப்பாக அமைய எல்லா வகையிலும் பாடுபட்ட அந்த ஆசான்களை இன்றளவும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

ஒரு வழியாக பொதுத் தேர்வு எழுதி முடித்து நிம்மதிப் பெரு மூச்சு விட்டோம். நாங்கள் பட்ட சிரமங்களிலிருந்தும், ஆறு ஆண்டுக் காலம் உடலாலும் உள்ளத்தாலும் நாங்கள் பட்ட வேதனை களிலிருந்தும், விடுதலைக் கிடைத்து விட்டது. அன்றை தினம் நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போல் ஒரு மகிழ்ச்சயை அது வரை எங்கள் வாழ் நாளில் நாங்கள் அனுபவித்ததே கிடையாது.

சிரமங்களிலிருந்து விடுதலைப் பெற்ற மகிழ்ச்சி ஒரு புறம் என்றால் நண்பர்கள் அனைவரும் பிரியப் போகிறோம் என்னும் வேதனை மறுபுறம். ஆறு ஆண்டுக் காலம் ஒன்றாக உண்டோம், உறங்கினோம், கூடிக் களித்தோம், சுக துக்கங்களைப் பகிர்ந்துக் கொண்டோம், இன்று இதோ இன்னும் சிறிது நேரத்தில் பிரியப் போகிறோம். இனி எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பறந்து செல்கின்றோம்- நாமே
பிரிந்து செல்கின்றோம்
இவை எங்களுக்காகவே எழுதப்பட்;ட வரிகளோ!

பிரியா விடை பெற்றோம். ஒருவரையொருவர் ஆரத்தழுவியபடி அழுதோம். அவ்வப்போது ஏற்பட்ட மனக்கசப்புகளுக்காக மன்னிப்புக் கேட்டோம். மாலைக் கதிரவன் மறைந்துக் கொண்டிருக்கிறான். எவரும் புறப்பட்டதாகத் தெரியவில்லை. எங்களுக்கு அறிவமுதூட்டிய அன்னையைப் போன்ற எங்கள் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியை விட்டு, நாங்கள் ஓடி விளையாடிய திடலை விட்டு, உட்கார்ந்து படித்த இடத்தை விட்டு, உறங்கிய அறையை விட்டு, தொழுத பள்ளியை விட்டு, பேசப்பழகிய மாணவர் மன்றத்தை விட்டு, அறிவுக் குருடர்களாக வந்த எங்களின் அகக் கண்களைத் திறந்து வைத்த ஆசிரியப் பெருந்தகைகளை விட்டு, ஆயிரமாயிரம் கனவுகளுடன் இதோ புறப்பட்டு விட்டோம்.
கற்க வந்தோம் சேவை செய்யத் திரும்புகிறோம்

அபுல் கலாம் ஆஸாத் கிராமம்
ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி
ஆக்கூர்
என்னும் கண்ணைப் பறிக்கும் அழகிய தோரண வாயில் வளைவு எங்கள் கண்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. எங்கள் இதயத்திலிருந்து அல்ல.
பின் குறிப்பு:1976 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவு வெளியானபோது தேர்வு எழுதிய அனைவருமே வெற்றி அடைந்து நூறு சதவிகித தேர்ச்சி பெற்று எங்கள் பள்ளிக்குப் பெருமை சேர்த்தோம். அல்ஹம்து லில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Sep 22, 2006

ஒரு நல்லடக்கம்

">Link

நானிலம் அதிசயித்த ஒரு நல்லடக்கம்

உலகின் மிகப் பெரிய எண்ணெய் வள நாட்டின் மன்னராக ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் ஆட்சி புரிந்த மன்னர் பஹத் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் மரணித்து விட்டார். அரபு நாடுகளிலேயே மிகப் பெரியதும், மக்கா மதீனா ஆகிய இரு புண்ணியத் தலங்களை உள்ளடக்கியதும், இஸ்லாமிய நாடுகளில் உலக அளவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நாடுமாகிய சவூதி அரேபியாவின் மன்னர் மரணித்து விட்டார் என்றால் இந்த நாடே ஸ்தம்பித்திருக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்களும், கடை அடைப்புகளும், மௌன அஞ்சலி ஊர்வலங்களும், அஞ்சலி செலுத்தி ஆளாளுக்கு அடித்த சுவரொட்டிகளும், பதாகைகளுமாக நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடக்க வில்லை.

முழு சவூதி அரேபியாவும் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தது. வியாபார நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தன. வழக்கமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து திருமறை குர்ஆன் ஓதப் பட்டுக் கொண்டிருந்ததைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. தலை நகர் ரியாதில் மட்டும் அடக்கம் நடைபெறுவதற்குச் சற்று முன் கப்ருஸ்தானை அடுத்துள்ள பகுதிகளில் மட்டும் போக்கு வரத்து திருப்பி விடப்பட்டிருந்தது. அதுவும் சில மணி நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டது.
தேசிய அளவில் அல்ல, மாநில அளவில் ஒரு அரசியல் தலைவர் இறந்து விட்டால் கூட அந்த மாநிலம் முழுவதும் தலை கீழாகப் புரட்டப்படுவதையும் பந்த்களையும் தர்ணாக்களையும் பார்த்தும் கேட்டும் பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு, சவூதி மன்னரின் மரணமும், அதனைத் தொடர்ந்து மறு நாள் நடைபெற்ற நல்லடக்கமும், ஆச்சரியத்தைத் தந்திருக்கும்.

மன்னரின் மரணம் குறித்து அதிகாரப் பூர்வமாக சவூதி தொலைக் காட்சியில் அறிவிக்கப்பட்ட அன்றைய தினம் காலையிலிருந்து அடக்கம் செய்யப் படும் மறுநாள் மாலை வரை மன்னரின் ஜனாஸாவோ, ஜனாஸா இருந்த இடமோ கூட தொலைக் காட்சியில் காண்பிக்கப்படவே இல்லை.
மன்னர் இறந்த மறு நாள் அஸர் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா தொழ வைக்கப்படும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஜனாஸா கொண்டு வந்து இறக்கப்பட்டபோது தான் மன்னரின் ஜனாஸா முதன் முதலாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. அதுவும் மன்னர் வழக்கமாக அணியும் மேலங்கியால் முழுவதும் மூடப்பட்ட நிலையில். இந்தக் காட்சியை நேரடி ஒளிபரப்பில் கண்ணுற்ற உலக மக்கள் அனைவரும் அதிசயித்திருப்பர்.

அலங்ஙார ஊர்தி இல்லை. மலர் வளையங்கள் இல்லை. மனங்கமழும் சந்தனப் பெட்டியில்லை. ஆம்புலன்ஸ் வண்டி திறக்கப்பட்டு அதிலிருந்து மன்னரின் புதல்வர்கள். இறங்கி தங்கள் தந்தையின் ஜனாஸாவைத் தம் தோள்களில் சுமந்த வண்ணம் பள்ளியின் உள்ளே எடுத்துச் சென்றனர்.
மன்னரின் ஜனாஸாவை வைத்து எடுத்துச் சென்ற சந்தூக் பெட்டிக் கூட வழக்கமாக அனைத்து ஜளாஸாக்களையும் வைத்து எடுத்துச் செல்லப் பயன்படுத்தப் படும் ஒரு சாதாரண பழைய சந்தூக் தான். பார்த்தவர்கள் அசந்து போனார்கள்.

அஸர் தொழுகை முடிந்த பிறகு அனைவரும் அப்படியே எழுந்து நிற்க, சவூதியின் தலைமை முப்தி அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள அப்துல்லாஹ் அவர்கள் உட்பட பல இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களும் அணிவகுத்து நின்று தொழுகையை நிறைவேற்றினர்.
இஸ்லாமிய முறைப்படி இறந்தவருக்காகச் செய்யப்படும் இறுதி அஞ்சலி, கண் இமைக்கும் நேரத்தில் கனகச்சிதமாக நடந்து முடிந்தது. தொழுகை முடிந்ததும் அருகில் உள்ள அல்ஊத் பொது மைய வாடிக்கு அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

பீரங்கி வண்டி இல்லை.ராணுவ மரியாதை இல்லை. அதிர்; வேட்டுக்கள் வெடிக்கப்படவில்லை. ஆகாயத்தை நோக்கி குண்டுகள் முழங்கவில்லை. எவ்வித ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியான முறையில், இஸ்லாமிய வழியில் எல்லோருக்கும் பொதுவான மைய வாடியில் எளிமையாக அடக்கம் செய்யப் பட்டதை இந்த உலகமே கண்டு வியந்தது.

தகவல்: அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

Sep 19, 2006

மாபெரும் பாவம் 2

மன்னிப்பே இல்லாத
மாபெரும் பாவம் பாகம் 2

அண்ணல் நபி (ஸல்) அவர்களை
அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவது ஷிர்க்

நம்பிக்கை (ஈமான்) கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். (திருக் குர்ஆன் 33:6)அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் அளவு கடந்த அன்பு கொண்டிருக்கிறோம். நமது தாய் தந்தையை விட, மனைவி மக்களை விட, உடன் பிறந்தோரை விட, உற்றார் உறவினரை விட, ஏன் நமது உயிரை விடவும் மேலாக, நாம் அவர்களை மதிக்க வேண்டும்.அப்படித் தான் நாம் அவர்களை மதிக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.ஆனால், அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதுவதோ, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித் தன்மைகள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருப்பதாக நம்புவதோ கூடாது. அது ஷிர்க் ஆகும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு நபித் தோழர் வந்து, 'அல்லாஹ்வும் அவனது தூதரும் நாடியபடி' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், முதலில் அல்லாஹ் நாடியபடி, அதன் பிறகு அவனது தூதர் நாடியபடி என்று தனித் தனியாகக் கூறும்படி திருத்தினார்கள்.மக்கள் எந்த வகையிலும் அல்லாஹ்வுக்குச் சமமாகத் தம்மை ஆக்கி விடக் கூடாது, என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.நம்மில் எவருமே, நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவராகக் கருதுவதும் கிடையாதே! என்று வாதிடலாம்.ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் அணுளவும் அப்படி ஓர் எண்ணமோ, கொள்கையோ இல்லை என்பது உண்மை தான்.ஆனால் நம்மில் பலரிடம், அவர்களையும் அறியாமல் அப்படி ஒரு விபரீதக் கொள்கைக் குடி கொண்டிருப்பதை அவர்கள் உணருவதில்லை. உணர்ந்து விட்டால் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பெருமானார் (ஸல்) அவர்கள் மீது புகழ் மாலை பாடுகிறோம் என்று, பொருள் புரியாமல் பாடுகின்ற மவ்லிதுப் பாடல்களிலும், பொழுது போக்காகப் பாடுகின்ற இஸ்லாமியப் பாடல்கள் என்னும் இன்னிசை கீதங்களிலும், ஷிர்க்கான கருத்துக்கள் மலிந்துக் கிடக்கின்றன.அன்த ஷம்சுன் அன்த பத்ருன் அன்த நூருன் ஃபவ்க நூரி நீங்களே சூரியன், நீங்களே சந்திரன், நீங்களே ஒளி, ஒளிக்கும் மேல் ஒளி, என்னும் சுப்ஹான மவ்லிதின் வார்த்தை ஜாலங்களில் மயங்கிப் போனவர்கள்,அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவான் (திருக் குர்ஆன் 24:35) என்னும் திரு மறை வசனத்தை நினைவிற் கொள்ள வேண்டாமா?வானங்கள் மற்றும் பூமியின் ஒளி, தானே என்று அல்லாஹ் கூறும் போது அவனது அடியாரும் தூதருமாகிய நபி (ஸல்) அவர்களை 'ஒளிக்குமேல் ஒளி' எனக் கூறுவது
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
அன்த கஃப்பாருல் கதாயா வத் துனூபில் மூபிகாத்திபாவங்களை மன்னிப்பவர் நீங்களே! என்று அரபியில் நீட்டி முழக்கிப் பாடுபவர்கள், அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யார்? (திருக் குர்ஆன் 3:135) என்று அதிகாரத்துடன் அல்லாஹ் கேட்பதை எப்படி மறந்தார்கள்? பாவங்களை மன்னிப்பவன் தன்னைத் தவிர யாரும் இல்லை என்று அல்லாஹ் கூறும் போது, 'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிப்பவர்' என்று சொல்வது மன்னிக்க முடியாத குற்றமல்லவா?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
அரபிக் கவிதைகளின் அர்த்தம் தெரியாமல், ஆர்வமேலீட்டால், அப்படியே பாடியிருந்தாலும், பொருள் புரிந்த பிறகேனும், இந்த ஷிர்க்கான பாடல்களையும், மவ்லிதுகளையும், விட்டொழிக்கா விட்டால், அல்லாஹ்வின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். எச்சரிக்கை!மவ்லிதுப் பாடல்களில் பரவிக் கிடக்கும் ஷிர்க்கான கருத்துக்களைப் பட்டியலிட்டால், அதுவே ஒரு தனி நூலாக விரியும். மவ்லிது கிதாபுகளில் காணப்படும் பெரும்பாலான கருத்துக்கள் ஷிர்க்கானவை. உதாரணத்திற்கு மட்டுமே ஒன்றிரண்டை தொட்டுக் காண்பித்தோம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈசா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்.அல்லாஹ்வின் அடியார் என்றும் தூதர் என்றுமே கூறுங்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி)இறைத் தூதர் என்னும் உயர்ந்த பதவியை விட இறைவனின் அடியார் என்று தம்மைக் கூறுவதற்கே முன்னுரிமை அளித்து, கிறிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்கள் விஷயத்தில் வரம்பு கடந்து விட்டதையும் உதாரணம் கூறி, ஷிர்க்கின் நிழல் கூட விழாமல் எவ்வளவு தெளிவாக எச்சரித் திருக்கிறார்கள்.

இறை நேசர்களை இறைவனுக்குச்
சமமாகக் கருதுவது ஷிர்க்

அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள், எல்லாக் கால கட்டத்திலும் வாழ்ந்திருக்கின்றனர். இப்போது வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களிலும் எத்தனையோ இறை நேசர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று, அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் அடியொற்றி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் அனைவருமே இறை நேசர்கள் தான்.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட தர்காக்களில், அடக்கப் பட்டுள்ளவர்கள் மட்டும் தான், 'இறை நேசர்கள்' என்று எண்ணி விடக் கூடாது. வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டாமலேயே, வாழ்ந்து மறைந்த பண்பாளர்கள் எத்தனயோ? பாரெங்கும் யாரெல்லாம் அப்படி இறை நேசர்களாக வாழ்ந்து மறைந்தார்கள் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அண்ணல் நபி (ஸல்) அவர்களின்; உயரிய குடும்பத்தாரும், உற்ற தோழர்களும், பாரெங்கும் இஸ்லாம் பரவ பாடுபட்ட அனைவருமே, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள் தான்.அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) போன்றவர்களை விடச் சிறந்த இறை நேசர்கள் இருக்க முடியுமா? இவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, யாரோ ஒரு சிலரை மட்டும், அவ்லியாக்களாகக் கருதி, அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, அவர்களின் பெயரால் கற்பனைக்கு அப்பாற் பட்ட கட்டுக் கதைகளை இட்டுக் கட்டி, அவர்களைப் புகழ்வதாக நினைத்து, அவர்களின் தூய இறை நேச வாழ்க்கையை களங்கப் படுத்துவது வேதனையிலும் வேதனை.அந்த அவ்லியாக்கள் என்னும் இறை நேசச் செல்வர்களை அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவர்களாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தனித் தன்மைகள் அந்த இறை நேசர்களுக்கும் இருப்பதாக நம்புவதும் ஷிர்க் ஆகும்.எந்த மகானையும் யாருமே அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவதில்லையே! அவர்களின் அடக்கத் தலங்களுக்குச் சென்று அவர்களை ஸியாரத் செய்வதைத் தவிர, அவர்களை அல்லாஹ்வாகவோ அல்லாஹ்வுக்குச் சமமானவராகவோ கடுகளவும் மனதால் கூட யாரும் நினைப்பதில்லையே! என்று வாதிடலாம்.ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் இப்படி ஒரு எண்ணம் இருக்க முடியாது என்பது உண்மை தான்.ஆனால் அப்படிச் சொல்பவர்கள், தங்கள் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும், எண்ணங்களையும், காய்தல் உவத்தலின்றி, நடு நிலையோடு சிந்தித்துப் பார்த்தால், அவர்களது கொள்கையில் ஷிர்க் குடி கொண்டிருப்பது அவர்களுக்குத் தெளிவாக விளங்கும்.

இறை நேசர்களைஅழைத்துப்
பிரார்த்திப்பது ஷிர்க்

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்(திருக் குர்ஆன் 7:194)அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறிர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவிட முடியாது. (திருக் குர்ஆன் 7:197)அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அழைக்கக் கூடாது என, அல்லாஹ்வின் திரு மறை தெளிவாகக் குறிப்பிடும் போது, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்களை அழைத்துப் பிரார்த்தித்தால், ஓடி வந்து உதவுவார்கள் என நம்புவது
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
இந்த வசனங்கள் அனைத்தும், மக்கத்துக் காஃபிர்கள், அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்துப் பிரார்த்தித்தைத் தான் கண்டித்து அல்லாஹ் அருளிய வசனங்கள் என்று, இறை நேசர்களை அழைத்துப் பிரார்த்திப்போர் வாதம் புரிகின்றனர்.இவ்விதம் வீண் விவாதம் புரிபவர்களின் வாயை அடைக்கும் விதமாகத் திரு மறை குர்ஆன் மேலும் சில வசனங்களின் மூலம் இன்னும் தெளிவு படுத்துகிறது. அந்த வசனங்கள் இதோ!அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப் படுகின்றனர். (திருக் குர்ஆன் 16:20)இதிலும் தெளிவு பெறாதவர்களுக்கு இன்னும் தெளிவாக அல்லாஹ் விளக்குகிறான்.அவர்கள் இறந்தவர்கள். உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 16:21)'எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்' எனக் குறிப்பிடுவது காஃபிர்கள் வணங்கிக் கொண்டிருந்த கற் சிலைகளை அல்ல என்பதும் தர்காக்கள் என்னும் கல்லறைகளில் மீளாத் துயில் கொண்டிருப் போரைப் பற்றித் தான் என்பதும் இன்னுமா புரியவில்லை? அல்லாஹ்வின் வசனங்களை அலட்சியம் செய்து விட்டு, இன்னும் கெடுவேன் என்ன பந்தயம்? என்பது போல் விதண்டாவாதம் புரிவோரும்,இறந்து போய் மண்ணில் அடக்கப்பட்டு விட்ட, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்களை அழைத்துப் பிரார்த்திப்போரும், அதுவே சரி என்று நியாயம் கற்பிப்போரும், இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

இறை நேசர்கள் துன்பத்தைப் போக்குவார்கள்
என நம்புவது ஷிர்க்

அல்லாஹ் உமக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்தினால், அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தி விட்டால், அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். (திருக் குர்ஆன் 6:17)அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக! (திருக் குர்ஆன் 17:56)மனிதர்களுக்கு ஏற்படும் துன்பத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே நீக்க முடியாது என்று அல்லாஹ் கூறும் போது, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள், துன்பத்தைப் போக்குவார்கள் என்றும், தீங்கிலிருந்துக் காப்பாற்றுவார்கள் என்றும் நம்புவதும், இருட்டறையில் இருந்துக் கொண்டு 'குத்பிய்யத்' என்னும் கொடுமையை அரங்கேற்றுவதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் குழந்தையைத்
தருவார்கள் என நம்புவது ஷிர்க்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். (திருக் குர்ஆன் 42:49)அல்லது ஆண்களையும் பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன்.(திருக் குர்ஆன் 42;:50)ஆண் குழந்தைகளைத் தருவதும், பெண் குழந்தைகளைத் தருவதும், இரண்டையும் சேர்த்துத் தருவதும், குழந்தையைத் தராமல் இருப்பதும், அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.அப்படியிருக்க, இறந்து போன இறை நேசர்கள் குழந்தை வரம் தருவார்கள் என்று தர்காக்களில் தவம் இருக்கும் தம்பதிகள் நம்புகிறார்களே!
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் பெயரால்நேர்ச்சை செய்வது ஷிர்க்

நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத் தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. (திருக் குர்ஆன் 2:270)இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன், அறிந்தவன், என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக! (திருக் குர்ஆன் 3:35)நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே என்றும், மர்யம் (அலை) அவர்கள் பிறந்த போது அவரது தாய் செய்த நேர்ச்சையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாகவும் அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.
திருமணம் விரைவில் நடை பெறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வெளி நாடு செல்ல விசா கிடைக்கவும், இன்னும் இது போன்று பல்வேறு நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக, பிற சமயத்தவர் தங்கள் குல தெய்வங்களுக்கு நேர்ச்சை செய்வது போல் தர்காக்களுக்கு நேர்ச்சை செய்யும் பாவிகளே!அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சையை அவனது அடியார்களாகிய அவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் பெயரால் செய்வதும், தர்காக்களில் தவம் கிடப்பதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

இறை நேசர்கள் பெயரால்
அறுத்துப் பலியிடுவது ஷிர்க்

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை, உங்களுக்குத் தடை செய்யப் பட்டுள்ளன. (திருக் குர்ஆன் 5:3)அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப் பலியிடுவதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அல்லாஹ் தடை செய்திருக்கும் போது அவ்லியாக்களுக்காக அறுப்பது,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப் பட்டதைத் தான் விலக்கப்பட்டதாக இந்த வசனம் கூறுகிறது. 'நாங்கள் அவ்லியாக்களுக்காக அறுத்தாலும், பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வின் பெயர் கூறித்தானே அறுக்கிறோம்' என்று வாதிடலாம்.இதோ! திரு மறையின் இன்னொரு வசனம் இன்னும் தெளிவாக அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதை வலியுறுத்துகிறது.'எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! (திருக் குர்ஆன் 108:2)தொழுகை என்னும் வணக்கம் எப்படி அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதோ, அது போல அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.
நாகூர், ஏர்வாடி என்று ஊர் ஊராகச் சென்று ஆடு அறுக்க நேர்ச்சை செய்து பணத்தைச் செலவு செய்து பாவத்தை விலை கொடுத்து வாங்கும் பாவிகளே! சிந்திக்க மாட்டீர்களா? அல்லாஹ் அல்லாதவருக்காக தொழுதால், அது ஷிர்க் என்று தெளிவாகத் தெரிகிறது. தொழுகையும் நேர்ச்சையும் தனக்குரியது எனக் கூறும் அல்லாஹ்வின் வார்த்தைகளை அலட்சியப் படுத்தி விட்டு, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிட்டால்?
அது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாதவருக்கு
ஸஜ்தாச் செய்வது ஷிர்க்

தொழுகை என்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இறை வணக்கத்தின் ஓர் அங்கமாகிய ஸஜ்தா என்னும் சிரம் பணிதலைச் சிலர் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்கின்றனர்.அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்து வணங்குங்கள். (திருக் குர்ஆன் 53:62)இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக! நீண்ட இரவு அவனைத் துதிப்பீராக! (திருக் குர்ஆன் 76:28)ஸஜ்தா என்னும் சிர வணக்கம் தனக்கு மட்டுமே உரியது, என்று அல்லாஹ் உரிமை கொண்டாடும் போது, பெரியார்களுக்கும், மகான்களுக்கும், இறந்து போன நல்லடியார்களின் கப்ருகளுக்கும், ஸஜ்தாச் செய்கின்றனரே!
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

மார்க்கம் அறியாத பாமர மக்கள் சிலர் தங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாகக் கருதும் ஷெய்கு மார்களுக்கு மரியாதை செய்வதாக நினைத்துக் கொண்டு அறியாமையால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குகின்றனர்.ஸஜ்தா என்னும் சிர வணக்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை அந்தப் பாமர மக்கள் அறியாதிருக்கலாம். தங்கள் மரியாதையை வெளிப்படுத்த இதுவும் ஒரு வழி என்று கருதி அந்த மக்கள் இச் செயலைச் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அந்த ஷெய்கு மார்களுக்கு புத்தி எங்கே போனது?அறியாமையால் தங்கள் கால்களில் விழும் மக்களைத் தடுத்து நிறுத்தாமல் அகம்பாவத்துடன் ரசித்துக் கெண்டிருப்போர், நாளை மறுமையில் தாங்கள் இது குறித்து விசாரிக்கப் படுவோம் என்பதை எப்படி மறந்தார்கள்?பெற்றோரிடமும், பெரியார்களிடமும், அடக்கத்தையும் பணிவையும் கடைப்பிடிக்க வேண்டும். இயலாத முதியோரை கண்ணியப் படுத்த வேண்டும். ஆனால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
முஆத் (ரலி) அவர்கள் தமக்குச் சிரம் பணிந்து மரியாதை செய்ய முன் வந்த போது, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதை அங்கீகரிக்க வில்லை என்பது மட்டுமல்ல தடுத்து விட்டார்கள்.'ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணிவதை நான் வெறுக்கிறேன். அது ஆகுமாக்கப் பட்டிருந்தால் மனைவி கணவனுக்கு சிரம் பணிய அனுமதித்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ்வின் திருமறை தெளிவாகக் கூறகின்றதுஇரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள். (திருக் குர்ஆன் 41:37)


இறை நேசர்கள் இறந்த பின்பும்
உயிருடன் உள்ளனர் என நம்புவது ஷிர்க்

உலகில் பிறந்த அனைவருமே இறக்கக் கூடியவர்கள் தான். ஈஸா (அலை) அவர்கள் மட்டுமே இன்றளவும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் இறுதி நாளின் அடையாளம் என்று அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார் (திருக் குர்ஆன் 43:61)அந்த ஈஸா (அலை) அவர்களும் கியாமத் நாள் சமீபம் பூமிக்கு வந்து, வாழ்ந்து, மரணம் அடைவார் என ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களிலிருந்து அறிகிறோம்.அண்ணல் நபி (ஸல்) அவர்களும் மரணித்து விட்டார்கள். அவர்கள் மரணிக்க வில்லை என்றால் அடக்கம் செய்யப் பட்டிருக்க மாட்டார்கள்.(முஹம்மதே) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில் வழக்குரைப்பீர்கள். (திருக் குர்ஆன் 39:30,31)நபி (ஸல்) அவர்களே இறந்து விட்டார்கள் எனும் போது, இறை நேசர்கள் எனக் கருதப்பட்டோர் மரணிக்காமல் இன்றளவும் மண்ணறையில் உயிருடன் உள்ளனர் என்று நம்புவதற்கு இஸ்லாத்தில் இடமில்லை.அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். (திருக் குர்ஆன் 3:2)மரணிக்காது உயிருடன் இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றி புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன். (திருக் குர்ஆன் 25:58)அவனே (என்றும்) உயிருடன் இருப்பவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (திருக் குர்ஆன் 40:65)மரணமே இல்லாது என்றென்றும் உயிருடன் இருப்பவன், தான் மட்டுமே என்று அல்லாஹ் கூறும்போது 'மண்ணறை வாழும் அவ்லியாக்களுக்கு மரணம் என்பது கிடையாது' என்று ராகம் போட்டுப் பாடுவது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் உயிருடன் இருப்பதாக வாதிடுவோர் அதற்குச் சான்றாக கீழ்க்காணும் இறை வசனத்தைக் கூறுவர்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீhகள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.(திருக் குர்ஆன் 2:154)இறை நேசர்களின் நேசர்களாகத் தங்களை இனம் காட்டிக் கொள்வோரில் பெரும்பாலானவர்களுக்கு, இறை மறை குர்ஆனின் இந்த வசனம் மட்டும் நன்றாகத் தெரியும். அரபி மூலத்துடன் எழுத்துப் பிசகாமல் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். 'குர்ஆன் நமக்குப் புரியாது' எனக் கூறுபவர்கள் கூட பொருளுடன் இந்த வசனத்தை ஒப்பு விப்பார்கள்முதலில் இந்த வசனம், இறை நேசர்களாகிய அவ்லியாக்களைக் குறிக்கும் வசனமே அல்ல என்பதை வசனத்தை நன்றாகக் கவனித்தாலே புரியும்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள், என்று இந்த வசனமே வியாக்கியானத் தேவையின்றி விளக்கி விடுகிறது. இறந்தோர் எனக் கூறாதீர்கள் என்னும் வாசகத்தையும், மாறாக உயிருடன் உள்ளனர் என்னும் வாசகத்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பவர்களுக்கு 'எனினும் உணர மாட்டீர்கள்' என்னும் வாசகத்தை உச்சரிக்கும் போது மட்டும் சுருதி சற்றுக் குறைந்து விடும்.'உயிருடன் உள்ளனர்' என்று அல்லாஹ் குறிப்பிடுவது, இவர்கள் நினைப்பது போல் தர்காக்களின் உள்ளே உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்தில் அல்ல என்பதை, திரு மறை குர்ஆனில் பிரிதொரு இடத்தில் இன்னும் தெளிவாகவே அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப் படுகின்றனர். (திருக் குர்ஆன் 3:169)இறை வழியில் தங்கள் இன்னுயிரை நீத்த ஷுஹதாக்கள் என்னும் உயிர்த்தியாகிகள்- அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர் எனவும், அல்லாஹ்விடமிருந்து கிடைத்த பாக்கியம் மற்றும் அருள் பற்றியும்- நம்பிக்கை (ஈமான்) கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றி அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அடுத்தடுத்த வசனங்களில் இன்னும் விரிவாக அல்லாஹ் எடுத்தியம்புகிறான். ஆக, இறந்த பின்பும் உயிருடன் இருப்பதாக இறைவன் கூறுவது, இறை வழியில் போரிட்டுத் தம் இன்னுயிரை நீத்த 'ஷஹீத்' என்னும் உயிர்;த்தியாகிகளைப் பற்றித் தானே தவிர, தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டு, இறை நேசர்கள் என மக்கள் கருதிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி அல்ல என்பதை, முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
பல்வேறு ஊர்களிலும், கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆண்டு தோறும் ஆடல் பாடல் கச்சேரிகளால் உற்சவம் கொண்டாடி பக்தர்களை(?) உற்சாகப் படுத்தும் தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு, உயிர்த்தியாகம் செய்தவர்களா என்ன? இஸ்லாமிய யுத்தத்தில் கொல்லப்பட்டு ஷஹீதானவர்களா என்ன?அப்படியே ஷஹீத் ஆனவர்களும் அவர்களில் உள்ளனர் என்று வைத்துக் கொண்டாலும், அல்லாஹ்வைப் பொருத்தவரைத் தான் அவர்கள் உயிருடன் உள்ளனர். நம்மைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டவர்களே!ஏனெனில் அவர்கள் மரணித்து விட்டதால் தான் மண்ணுக்கடியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளனர். அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர்களின் சொத்துக்களை, அவர்களின் வாரிசு தாரர்கள் பங்கிட்டுக் கொண்டுள்ளனர் என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?


இறை நேசர்களுக்கு இறந்த பின்பும்
ஆற்றல் இருப்பதாக நம்புவது ஷிர்க்

ஒரு மனிதர் உயிர் வாழும் போது, பல் வேறு ஆற்றல்களைப் பெற்றிருக்கலாம். அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், செயலாற்றல், சிந்தனையாற்றல் போன்ற பல் வேறு ஆற்றல்கனைப் பெற்ற அறிஞர்களாயினும், அவர்கள் பெற்ற ஆற்றல்கள் அனைத்தையும் அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் மட்டுமே செயல் படுத்த முடியும்.உயிர் வாழ்ந்த போது இருந்த ஆற்றல்களே, இறந்த பின்பு இருக்க முடியாது என்கிற போது, இறந்த பின்பும் ஆற்றல் இருப்பதாக நம்புவது, அறிவுக்கும், அல்லாஹ்வின் ஏற்பாட்டுக்கும் எதிரானதல்லவா? இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?கல்வியை நமக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் இறந்து போய் விட்ட பின்னர், அவர்களுடைய கப்ருகளுக்கு அருகில் நின்று கொண்டு நமது பாடங்களில் நாம் சந்தேகம் கேட்பதில்லை. வாழ்ந்த போது சிறந்த அறிஞர்களாக அவர்கள் திகழ்ந்திருந்தாலும், இறந்த பின்னர் நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்பதும், இருக்க முடியாது என்பதும், நமக்குத் தெரியும்.அப்படியிருக்க, மரணித்து தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டவர்களுக்கு, இறந்த பின்பும் ஆற்றல் இருப்பதாக நம்புவது மட்டும் எப்படிச் சரியாகும்? திரு மறை குர்ஆனின் எந்த வசனத்திலாவது- திரு நபி (ஸல்) அவர்களின் எந்நத பொன் மொழியிலாவது அப்படிச் சொல்லப் பட்டுள்ளதா?அவ்லியாக்களுக் கெல்லாம் தலைவர் என்று கூறப்படுபவராகவும், இறை நேசர்களிலேயே மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் பலரால் கருதப் படுபவராகவும் உள்ளவரின் அடக்கத்தலம் அமையப் பெற்றுள்ள அந்த பக்தாத் நகரத்திலேயே அக்கிரமக்காரர்கள் அத்து மீறி நுழைந்து துவம்சம் செய்துக் கொண்டிருக்கும் போது,
அண்டமோர் ஏழினையும் ஆடுங்கரங்கு போல்
ஆட்டி விளையாட வல்லீர்
கண்டித்த கடுகில் எழு கடலைப் புகட்டி
கலக்கி விளையாட வல்லீர்
ஏழு உலகங்களையும் பம்பரம் போல் சுற்ற வைக்க ஆற்றல் பெற்றவரே! கடுகை இரண்டாகப் பிளந்து அதில் ஏழு கடல்களைப் புகுத்த ஆற்றல் பெற்றவரே! என்றெல்லாம் அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவராக வர்ணிக்கப் பட்டவரால், எழுந்து வந்து எதுவும் செய்ய முடியவில்லையே! இது இறந்தவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை நமக்கு உணர்த்த வில்லையா?

இறை நேசர்களை அழைத்தால் ஓடி வந்து
உதவுவார்கள் என நம்புவது ஷிர்க்

தங்களது முன்னோர்களில், நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த நல்லடியார்களுக்கு சிலை வடித்து, அவற்றை வணங்கி வந்தவர்களும், அல்லாஹ்வையே இறைவனாகக் கருதினாலும், இந்த முன்னோர்கள் தங்களை அல்லாஹ்வின் பால் சமீபமாக்கி வைப்பார்கள் என்று நம்பி முன்னோர்களையும் வழிபாடு செய்தவர்களுமாகிய, மக்கத்துக் காஃபிர்கள் கூட சாதாரண நேரங்களில் தான், தங்கள் தேவைகளை நிறைவேற்றித் தரும்படி முன்னோர்களின் சிலைகளுக்கு முன் மண்டியிட்டனர். ஆனால், ஆபத்தான நேரங்களில் அல்லாஹ்விடமே பிரார்த்தித்தனர். இதை நாம் சொல்லவில்லை, அல்லாஹ்வின் திரு மறையே அறிவிக்கிறது.
கடலில் பயணம் செய்யும் போது காற்றும் அலையும் அவர்களைச் சூழ்ந்து தாம் சுற்றி வளைக்கப் பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்தால், வழிபாட்டை உளத் தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி 'இதிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் நன்றியுடையோராக ஆவோம்.' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். (திருக் குர்ஆன்10:22)ஆபத்திலிருந்து காப்பாற்றப் பட்ட பிறகு அவர்கள் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள் என்று அடுத்த வசனம் கூறுகிறது.அவர்களை விடவும் மோசமாக, சாதாரண நேரங்களில் அல்லாஹ்வைத் தொழுது பிரார்த்திப்பவர்கள், ஆபத்தான நேரங்களில் அல்லாஹ்வின் அடியார்களை அழைத்துப் பிரார்த்திக்கின்றனரே! இது மக்கத்துக் காஃபிர்களின் செயலை விட மோசமான செயல் அல்லவா?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

ஆபத்தான நேரங்களில் யா முஹ்யித்தீன்! என்று ஓலமிட்டால், அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஓடி வந்து உதவுவார்கள் என்று நம்புவது அப்பட்டமன ஷிர்க் என்பதில் என்ன சந்தேகம்?எத்தனை பேர் எங்கிருந்து அழைத்தாலும், அழைப்பை செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே அல்லவா? அல்லாஹ்வைப் போலவே அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் செவியேற்பார்கள் என நம்புவதும், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்கள் என்று காத்திருப்பதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ்வே செவியுறுபவன். அறிந்தவன். (திருக் குர்ஆன் 5:76)தானே செவியுறுபவன் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் மனிதர்களாகிய நாமும் ஒருவர் அழைப்பதையும் பேசுவதையும் செவியுறுகின்றோமே என்று சிலர் கேட்கலாம்.செவியுறும் தன்மையில் மனிதர்களாகிய நமக்கும் அல்லாஹ்வுக்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு பேர் நம்மை அழைத்தால், ஒருவரின் அழைப்புக்கு பதிலளித்து விட்டுத் தான் மற்றவரின் அழைப்புக்கு நம்மால் பதிலளிக்க முடியும். பலர் ஒரே சமயத்தில் அழைத்தாலோ, பேசினாலோ நம்மால் புரிந்துக் கொள்ளவும் முடியாது. பதிலளிக்கவும் முடியாது. ஆனால் அல்லாஹ்வின் செவியுறும் தன்மை அப்படிப்பட்டதல்ல. ஒரே நேரத்தில் கோடானு கோடி பேர் அழைத்தாலும், அத்தனை பேரின் அழைப்பையும் ஏக காலத்தில் செவியுறவும், பதிலளிக்கவும் அல்லாஹ்வால் முடியும்;. அல்லாஹ்வினால் மட்டுமே முடியும். இது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மை.ஒரே நேரத்தில் பலரும் 'யா முஹ்யித்தீன்!' என்று அழைக்கும் போது, அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் செவியுறுவார்கள் என்றால், அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான செவியுறுதல் என்னும் தனித்தன்மை, அப்துல் காதிர் ஜீரானி (ரஹ்) அவர்களுக்கும் இருப்பதாக அல்லவா அர்த்தமாகிறது?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

எங்கிருந்து அழைத்தாலும் செவியேற்பவன் அல்லாஹ் மட்டுமே! இது அவனுக்கு மட்டுமே உரிய தனித் தன்மை. நாம் ஒருவரை உரக்கக் கூவி அழைத்தால், நமது சப்தம் எவ்வளவு தொலைவுக்குக் கேட்குமோ அவ்வளவு தொலைவில் உள்ளவர் மட்டுமே செவியேற்க முடியும். அதுவும் உயிருடன் இருக்கும் போது மட்டுமே சாத்தியம்.ஒலி பெருக்கி மூலம் அழைத்தால் இன்னும் சற்று தொலைவில் உள்ளவர் கேட்க முடியும். தொலை பேசி மூலம் அழைத்தால் தொலைவில் உள்ளவர் கேட்க முடியும்.எவ்வித தொலைத் தொடர்பு சாதனமும் இல்லாமல் அழைத்தாலும், மனதிற்குள் மெத்தப் பணிவுடன் அழைத்தாலும் செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அப்படியிருக்க அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் அதே போல் செவியேற்பார்கள் என நம்புவது அறிவீனம் மட்டுமல்ல, அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத பெரும் பாவம் என்பதை இன்னமும் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றால், அந்த அறிவீனர்களை என்ன வென்பது?அவர்களின் உள்ளங்களிலும், செவியிலும், அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வையில் திரை உள்ளது. அவர்களுக்கு கடும் வேதனையுண்டு.(திருக் குர்ஆன் 2:7)

மனிதர்கள் யாராக இருப்பினும், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பேசினால் மட்டுமே அவர்களுக்குப் புரியும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல. அவர்களுடைய தாய் மொழியாகிய அரபியைத் தவிர வேறு மொழி அவர்களுக்குத் தெரியாது. அது போல் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தாய் மொழியாகிய அரபியைத் தவிர, வேறு மொழிகள் அவர்களுக்குத் தெரியும் என்பதாக அவர்களது வரலாற்றில் நம்மால் காண முடியவில்லை. அவர்கள் அறியாத மொழியில் அழைத்தாலும் அவர்களுக்குப் புரியும் என்பது அவர்கள் உயிர் வாழ்ந்த போதே சாத்தியமில்லை. அப்படியிருக்க அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு எல்லா மொழிகளும் புரியும் என்று சொல்வது அறிவீனம்.
பிரசவ வேதனையில் துடிக்கும் போது, 'யா முஹ்யித்தீன்' என ஓலமிடும் தாய்க் குலமே! அல்லாஹ்வை அஞ்சுவீராக. ஒருகால் இறுதி வார்த்தை இதுவாக இருப்பின் சென்றடையும் இடம் நரகமே! (அல்லாஹ் காப்பானாக) இனியேனும் 'யா அல்லாஹ்' என்று அல்லாஹ்வையே அழைப்பீராக!அறியாமையால் சிலர் தவறான கொள்கையில் இருக்கக் கூடும். அறிவுப் பூர்வமாகச் சிந்தித்து விளங்குவதற்காக, தர்க்க ரீதியான சில காரணங்களை இது வரைத் தெளிவு படுத்தினோம்.ஆனால் அல்லாஹ்வின் வேத வசனங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டோருக்கு கீழ்க் காணும் சில வசனங்கள் மட்டுமே போதும். தெளிவான வழி காட்டுதல் கிடைத்து விடும்.
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும், உங்களுக்கு பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீ;ங்கள் இணை கற்பித்ததை மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (திருக் குர்ஆன் 35:14)
உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள். (திருக் குர்ஆன் 13:14)இவ்வளவு தெளிவாக அல்லாஹ் அறிவித்து விட்ட பின்னரும், கப்ருகளில் உறங்கிக் கொண்டிருக்கும் நல்லடியார்கள், நமது அழைப்பை செவியுறுவார்கள், அழைப்புக்கு பதிலளிப்பார்கள், ஓடி வந்து உதவுவார்கள், நோய்களை நீக்குவார்கள், துன்பங்களைப் போக்குவார்கள், என்று நம்புவதும்,
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்கும் மறைவான
ஞானம் உண்டு என்று நம்புவது ஷிர்க்

மறைவானவற்றின் திறவுகோள்கள் அவனிடமே உள்ளன.அவனைத் தவிற யாரும் அறிய மாட்டார். (திருக் குர்ஆன் 6:59)வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 27:65)மறைவானவற்றை தன்னைத் தவிர யாரும் அறிய முடியாது, என்று கூறும் அல்லாஹ், தனது திருத் தூதர் அவர்கள் கூட அறியமாட்டார்கள் என்பதை, அவர்களையே கூறச் சொல்லி தனது தனிச் சிறப்பை உறுதிப் படுத்துகிறான். இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன, மறைவானதை அறிவேன், என்று நான் உங்களிடம் கூற மாட்டேன்.நான் வானவர் என்றும் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே) கூறுவீராக! (திருக் குர்ஆன் 6:50)
'மறைவான ஞானம்' என்பது சிலருக்குப் புரியாத வார்த்தையாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்பதும், எங்கோ தொலை தூரத்தில் நடப்பதை இங்கிருந்துக் கொண்டே கண்களால் காணாமல், யாரும் அறிவிக்காமல், கூறவதும் தான் 'மறைவான ஞானம்'. இது அல்லாஹ் ஒருவனால் மட்டுமே சாத்தியம்.கண்களால் காணாததையும், எதிர் காலத்தில் நடக்க இருப்பவை குறித்தும், ஏராளமான செய்திகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பது உண்மை தான். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை, அப்போது வாழ்ந்த மக்களும், அதற்குப் பின் வரக் கூடிய சமுதாயமும் உறுதியாக நம்புவதற்காக, சில சமயங்களில் சிலவற்றை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான்.இனி வரும் தலைமுறையினரும், அவர்களை உண்மையான இறைத் தூதர் தான் என்று நம்பும்படி, அவர்களின் எத்தனையோ முன்னறிவிப்புகள் இன்றளவும் மெய்ப்பிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இறைவனே அறிவித்துக் கொடுத்தவை.இறைவனே அறிவித்துக் கொடுத்த ஒரு சில, மிகவும் சொற்பமான விஷயங்களைத் தவிர, மற்றபடி மறைவான ஞானம் அவர்களுக்கு இல்லை என்பதற்கு, அவர்கள் வாழ்வில் எதிரிகளால் அவர்கள் அடைந்த இன்னல்களும், அவர்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களும், சில போர்க் களங்களில் சந்தித்த தோல்விகளும் சான்று பகர்கின்றன. மறைவான ஞானம் அவர்களுக்கு இருந்திருக்குமானால் தமக்கு ஏற்பட்ட துன்பங்களிலிருந்து அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.
எதிர் காலம் குறித்து குறிகாரன் சொல்வதை நம்புவதும், ராசி பலன் பார்த்து காரியங்கள் செய்வதும், மாந்திரீகத்தில் மனதைப் பரிகொடுப்பதும், பால் கிதாபு பார்த்து பரிகாரம் காண்பதும், மறைவான ஞானம் இந்த குடுகுடுப்பைக் காரனுக்கும், பால் கிதாபு பார்த்து பிழைப்பு நடத்தும் முஸ்லிம் பெயர் தாங்கிய பித்தலாட்டக் காரனுக்கும் இருப்பதாக நம்புவதாகாதா?
இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?

தாயத்து அணிவது ஷிர்க்

அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவருக்குச் செய்வதும், அல்லாஹ்வுக்குச் சமமாக மற்றவர்களைக் கருதுவதும், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதும், தான் ஷிர்க் என்று நினைக்கிறோம்.சாதாரணமாவை என்று நாம் கருதும், சில சாதாரணமான சின்னஞ்சிறு செயல்கள் கூட ஷிர்க் என்னும் மன்னிக்க முடியாத மாபெரும் பாவத்தை ஏற்படுத்தி விடும்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ அவர் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டார்.(ஆதாரம்:அஹ்மத்)'தாயத்து அணிந்துக் கொள்வது தவறில்லை' என்ற கொள்கையுடைய எந்த ஒரு முஸ்லிமும், இரண்டு இறைவன்கள் இருப்பதாக நம்புவதோ, அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் இந்த தாயத்துக்கும் உண்டு என்று நம்புவதோ இல்லை. அப்படி ஒரு எண்ணம் கடுகளவும் எவர் மனதிலும் இருப்பதில்லை.ஆனாலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தாயத்தை அணிந்துக் கொண்டவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டதாகக் கூறுகிறார்கள்.நோய் நொடிகள் ஏற்பட்டால், அல்லாஹ் சுகமளிப்பான் என்று நம்புவதற்கு பதிலாக, இந்தத் தாயத் சுகமளிக்கும் என்று நம்புவதும், துன்ப துயரங்களிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான் என்று நம்புவதற்கு பதிலாக, இந்தத் தாயத் காப்பாற்றும் என்று நம்புவதும்
ஷிர்க் இல்லாமல் வேறு என்ன?
அப்படியானால் நோய் நொடி ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று மருத்துவம் செய்கிறோமே, மருத்துவர் நோயை நீக்குவார் என்று நம்புகிறோமே இது ஷிர்க் ஆகாதா? என்று சிலர் கேட்கக் கூடும்.நோய்க்கு மருத்துவம் செய்யாமல், கடவுளையே நம்பியிருக்க வேண்டும் என்று வேறு மதங்களில் ஒரு சாராரின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை.நோயைத் தீர்ப்பவன் இறைவனே என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.அதே சமயம் வைத்தியமும் செய்ய வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள். எந்த ஒரு நோய்க்கும் அல்லாஹ் மருந்தில்லாமல் வைக்க வில்லை.(அறிவப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி)
நமது கொள்கை கோட்பாடுகளில், வணக்க வழிபாடுகளில், சிந்தனை செயல்பாடுகளில், எள்ளளவும் ஷிர்க் என்னும் இணை வைத்தல் இல்லாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இது வரை நாம் கொண்டிருந்த கொள்கைகளில், நமது செயல் முறைகளில், ஷிர்க் என்னும் இணை வைத்தல் இருந்தால், எவ்வித தயக்கமும் இன்றி அவற்றை விட்டொழிக்க முன் வர வேண்டும்.காலங்காலமாக செய்துக் கொண்டிருந்தோம், நமது முன்னோர்கள் இப்படித் தான் செய்தார்கள், உலகில் பெரும் பாலானவர்கள் இப்படித் தான் செய்துக் கொண்டிருக்கின்றனர், என்பன போன்ற எந்த வாதமும் நாளை மறுமையில் பயனளிக்காது.காலங்காலமாக என்று நாம் கூறுவது, சில நூற்றாண்டுகளைத் தான். ஆனால் இணை வைத்தல் என்னும் கொள்கையில் பல்லாயிரம் ஆண்டுகள் ஊறித் திளைத்த ஸஹாபாக்கள், ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையை விளங்கிக் கொண்ட போது, எல்லா விதமான ஷிர்க்கையும் வேரோடும், வேரடி மண்ணோடும், களைந் தெறிய வில்லையா?அல்லாஹ்வின் திரு மறையும், அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல்களாகிய ஹதீஸ்களும், நம் தாய் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு, வழி காட்டும் ஒளி விளக்குகளாக நம் முன்னே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.அறியாமை என்னும் இருளில் இருந்தோம், என்று அல்லாஹ்விடம் பொய் சொல்லித் தப்பிக்க முடியாது. ஆராய்ந்து பார்க்கும் அறிவை அல்லாஹ் நமக்கு தந்திருக்கிறான். நமக்கு வழங்கப்பட்ட அறிவு குறித்தும் நாளை மறுமையில் நாம் விசாரிக்கப் படுவோம்.இனியேனும் சிந்தித்து, நமது எண்ணங்களையும், செயல்களையும் சீர் திருத்திக் கொள்ள வில்லையென்றால், இறைவனின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.ஏனெனில் ஷிர்க் என்னும் பாவம் அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத மாபெரும் பாவமாகும்.இனியும் சரியான வழியை அறிந்துக் கொள்ளாமலும், அறிந்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளாமலும், இருந்தால் அதன் விளைவுகளை அடுத்து வரும் வசனங்களில் அல்லாஹ்வின் திரு மறை இறுதி எச்சரிக்கை விடுக்கிறது.
அவர்கள் வேதனையைப் பார்த்த போது 'அல்லாஹ்வை மட்டுமே நம்பினோம். நாங்கள் எதை இணையாகக் கருதினோமோ அதை மறந்து விட்டோம்' என்றனர்.நமது வேதனையைப் பார்த்த போது அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயன் தரவில்லை. சென்று விட்ட தனது அடியார்களிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அப்போது (நம்மை) மறுத்தோர் நஷ்டமடைந்தார்கள். (திருக் குர்ஆன் 40:84,85)
-----------------------------

">Link


மாபெரும் பாவம் 1

மன்னிப்பே இல்லாத
மாபெரும் பாவம் பாகம் 1

முன்னுரை

எல்லையில்லா அருளாளன், இணையில்லா அன்புடையோன்,அல்லாஹ்வின் திருப் பெயரால்..........
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், தரணியெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் ஏற்பட்;ட ஏகத்துவ மறுமலர்ச்சி, வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது காலம் வரை மூடி மறைக்கப் பட்ட, கருத்துக் கருவூலங்கள், தௌ;ளிய தமிழில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. கேட்டவர் பலரும்,அதிசயித்தனர். ஆகா! இப்படியா மார்க்கம் சொல்கிறது! இதையெல்லாம் எங்களுக்கு மார்க்க அறிஞர்கள் சொல்லித் தரவில்லையே! என்று ஆதங்கப் பட்டனர். மார்க்க ஆதாரங்கள் என்றால், அது அல்லாஹ்வின் திரு மறை குர்ஆனும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளாம் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் தான் என்று பாமர மக்கள் கூட அறிந்துக் கொண்டனர். ஏகத்துவம் என்னும் இஸ்லாத்தின் ஆணி வேர், கற்பாறைகளைப் போல் இறுகிப் போன இதயங்களிலும் ஊடுருவியது. இதற்கு மேலும் இவர்களை ஏமாற்ற முடியாது என்று உணர்ந்துக் கொண்டவர்களின், ஆர்த்தெழுந்த ஆவேசம் அடங்கிப் போனது. அதற்காக பேச்சாலும், எழுத்தாலும், உழைப்பாலும், அறிஞர்கள் ஆற்றிய பணி மகத்தானது. அறியாமை இருளிலிலிருந்து வெளியேறி, அற்புத ஏகத்துவத்தை ஆரத்தழுவிய நெஞ்சங்கள், அந்த அறிஞர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்துக் கொண்டிருக்கின்றன. அத்தகையப் பேரறிஞர்களிடமிருந்து பெற்ற கருத்துக்களை, குர்ஆன், ஹதீஸின் ஒளியில் சரிகண்டு, இந்த எளியேனும் இச்சிறு நூலை வெளியிட்டுள்ளேன்.இந் நூலைப் படிக்கும் அன்பர்கள், இதில் காணும் குறை நிறைகளை எனக்குத் தெரிவித்தால், நன்றி உடையவனாவேன். நன்றியுடன்,
Aஅப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா

எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும்
இணை வைத்தலைத் தவிர

இவ்வுலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! சந்தர்ப்ப சூழ் நிலையாலும், ஷைத்தானின் தூண்டுதலாலும், அலை பாயும் மனதாலும், அறியாமையாலும், அநேக பாவங்களைச் செய்து விடுவது அனைவருக்கும் இயல்பு.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடக் கூடியவர்.(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்:திர்மிதி) உலகில் பிறந்த அனைவருமே பாவம் செய்யக் கூடியவர்கள் தான், என்பதை மேற்கண்ட நபி மொழியின் மூலம் அறியலாம்.மனிதர்கள் தாம் செய்து விட்ட பாவங்களை உணர்ந்து திருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். இதை திரு மறை குர்ஆனின் ஏராளமான திரு வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு (மறைத்தவற்றைத்) தெளிவு படுத்தியதைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 2:160)அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 16:119)திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்து பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன். (திருக் குர்ஆன் 20:82)இன்னும் இவை போன்ற எண்ணற்ற வசனங்களில், தன் அடியார்கள் செய்யும் பாவங்களை மன்னிப்பதாகக் கூறும் மாபெரும் கருனையாளனாகிய அல்லாஹ், ஒரே யொரு பாவத்தை மட்டும் 'மன்னிக்கவே மாட்டேன்' என்று மிகவும் கண்டிப்புடன் கூறுகிறான். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஆகும்.தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (திருக் குர்ஆன் 4:48)தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) வெகு தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)இணை வைத்தல் என்னும் பாவத்தை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறும் அல்லாஹ் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெளிவாகக் கூறுகிறான். அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லை என்றாகி விட்ட பிறகு இணை வைத்தல் என்னும் பாவத்தை செய்தவருக்கு ஏற்படவிருக்கும் கதி என்ன? என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

நல்லறங்கள் அழிந்து போகும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (திருக் குர்ஆன் 6:88)நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)சொர்க்கம் செல்லவே முடியாது'இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை' என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)நரகமே நிரந்தரம்(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)இறைமறை குர்ஆனும், இறைத் தூதர்(ஸல்) அவர்களின் அறிவுரைகளும், அறிவித்துத் தந்த கொடிய பாவங்களாகிய கொலை, கொள்ளை, விபச்சாரம், மது, சூது, வட்டி, ஆகிய அனைத்துப் பாவங்களையும் விடக் கொடிய பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல்.எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும், தான் நாடியோருக்கு மன்னிப்பு வழங்குவதாகக் கூறும் அல்லாஹ், ஷிர்க் என்னும் பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்று தௌ;ளத் தெளிவாக அறிவித்து விட்டதிலிருந்தே, இந்த ஷிர்க் என்னும் பாவம் எவ்வளவு கொடியது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத-நல்வறங்கள் அனைத்தையும் பாழ்படுத்தக் கூடிய- சொர்க்கத்தை விட்டும் தூரப் படுத்துகின்ற- நிரந்தர நரகில் வீழ்ந்துக் கிடக்கக் காரணமாகிய- அந்த ஷிர்க் என்னும் மாபெரும் கொடிய பாவம் குறித்துத் தெளிவாக அறிந்துக் கொண்டால் அல்லவா அந்தப் பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்?
இவ்வளவு அதி பயங்கரப் பாவமாகிய 'ஷிர்க்' என்றால் என்ன? என்பதைப் புரிந்துக் கொள்வதில் தான் பலரும் தவறிழைக்கின்றனர்.அநியாயமாக ஒரு உயிரைப் பறிப்பது கொலை என்பதிலும்- அடுத்தவர் பொருளை அபகரிப்பது கொள்ளை என்பதிலும்- போதை தருவது மது என்பதிலும்- மனைவியைத் தவிர மற்ற பெண்களை நாடுவது விபச்சாரம் என்பதிலும், கொடுத்ததை விடக் கூடுதலாகக் கேட்டுப் பெறுவது வட்டி என்பதிலும், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இவை அனைத்தும் பெரும் பாவங்கள் என்பதற்கு விளக்கமும் வியாக்கியானமும் தேவையில்லை.ஆனால் இவை அனைத்தையும் விpடக் கொடிய பாவமான ஷிர்க் என்னும் பாவம் குறித்து போதிய தெளிவையும் விளக்கத்தையும் பலரும் பெறவில்லை என்றே சொல்லலாம்.
பெரும் பாவங்கள் குறித்துப் புரிந்துக் கொண்டவர்கள், அந்தப் பாவங்களை விட்டும் தம்மைக் காத்துக் கொண்டவர்கள், அறியாமையால் செய்து விட்ட பாவங்கள் குறித்து வருந்தி- திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடியவர்கள் கூட-தங்களையும் அறியாமல், தங்களிடம் குடி கொண்டுவிட்ட இந்த ஷிர்க் என்னும் கொடிய பாவத்தை உணராமல் இருப்பது தான் வேதனையிலும் வேதனை.தங்கள் எண்ணத்தில், செயல்களில், நம்பிக்கையில், இறை வணக்கத்தில், இந்த ஷிர்க் என்னும் பாவம் எள்ளளவும், எள்ளின் முனையளவும், இல்லாமல் பார்த்துக் கொள்வதும், காத்துக் கொள்வதும், இறை விசுவாசியாகிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் ஏவிய அனைத்து நற் காரியங்களையும் செய்து, அனைத்துத் தீய காரியங்களிலிருந்தும் விலகி, எவ்வளவு தான் நல்லவராக ஒருவர் வாழ்ந்தாலும்,அவரிடம் ஷிர்;க் என்னும் இணை வைத்தல் இருந்தால், அவர் மறுமையில் வெற்றி பெற முடியாது. அவரின் நல்லறங்கள் அனைத்தும் பாழாகும். நல்லறங்கள் பாழானால் நரகமே நிரந்தரம் என்பதில் சந்தேகமில்லை.

கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம்'

அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது' என்பது அடிக்கடி ஜும்ஆப் பிரசங்கங்களிலும், மார்க்க மேடைகளிலும், நாம் கேட்ட எச்சரிக்கை தான். இந்த எச்சரிக்கையின் உண்மைப் பொருளை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான், முஸ்லிம்களுக்கு மத்தியில் கொள்கையளவில் ஏற்பட்டப் பிரிவுகளுக்கு ஒரு வகையில் முக்கிய காரணம் என்று கூடச் சொல்லலாம். சரியாக விளங்கிக் கொண்டால் சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லை.ஒரு சாராhர் மற்றொரு சாராரிடம் காணப்படும் செயல்களை, கொள்கைகளை, வணக்கங்களை, ஷிர்க் என வாதிடுகின்றனர். மற்ற சாரார் தமது செயல்களும், வணக்கங்களும், ஷிர்க் அல்ல என்று மறுக்கின்றனர். அப்படி மறுப்பவர்கள் கூட தமது செயல்கள் ஷிர்க்கானவை என்பதை உணராமல் தான் மறுக்கின்றனரே தவிர, ஷிர்;க்கை அவர்கள் நியாயப் படுத்தவில்லை என்பது முக்கியம்.ஒவ்வொருவரும் தமது கொள்கையும், செயல்களும், திரு மறை குர்ஆனின் அடிப்படையிலும், திருத் தூதர் (ஸல்) அவர்களின் அழகான வழிகாட்டுதல் அடிப்படையிலும், ஒப்பிட்டுப் பார்த்தாலே தெளிவு கிடைத்து விடும். பிரிவினைகள் நீங்கி விடும்.நமது செயல்களிலும், சிந்தனையிலும், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஊடுருவி, நமது நல்லறங்கள் பாழாகி நரகப் படுகுழிக்கு நாம் சென்று விடக் கூடாதே என்னும் கவலையிலும் நம் மீது கொண்ட கரிசனத்திலும், நம்மை எச்சரித்துக் காப்பாற்ற தெளிவான ஆதாரங்களுடன் களமிறங்கியுள்ள நல்லோர்களின் நோக்கத்தைப் புரிந்துக் கொண்டால், நமக்கிடையே இருக்கும் மனக்கசப்பு மறைந்து விடும். மாச்சரியங்கள் மாய்ந்து போகும்.

ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் என்னும் அரபி வார்த்தை, திரு மறை குர்ஆனிலும், திரு நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளாம் ஹதீஸ்களிலும், பல்வேறு இடங்களில் பயன் படுத்தப் பட்டிருப்பதும், அது மிகப் பெரும் பாவம் என்பதும், அதற்கு மன்னிப்பே இல்லை என்பதும், கொடிய நரகத்திற்குக் கொண்டு போய் சேர்க்கும் என்பதும், எல்லோருக்கும் தெரியும். இந்த ஷிர்க் என்னும் அரபி வார்த்தைக்கு தமிழில் இணை வைத்தல் அல்லது இணை கற்பித்தல் என்று பொருள் என்பதும், கூட அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனாலும் இவை நாம் சாதாரணமாகப் பேசும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை அல்ல என்பதால், இது குறித்துத் தெளிவாக அறிந்துக் கொண்டால் தானே அந்த ஷிர்க் என்னும் மாபெரும் பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். ஷிர்க் அதாவது இணை வைத்தல் என்றால், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை - அவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், ஏன் நபியாகவே இருந்தாலும், - அல்லாஹ்வுக்கு இணையாக அதாவது சமமாகக் கருதுவதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித் தன்மைகள்- சிறப்புத் தன்மைகள் மற்றவர்களுக்கும் உண்டு என எண்ணுவதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் தனி ஆற்றல், மற்றவர்களுக்கும் இருப்பதாக நம்புவதும்-அல்லாஹ்வினால் மட்டுமே ஆகக் கூடிய காரியங்கள், மற்றவர்களாலும் ஆகும் என நம்புவதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை, மற்றவர்களுக்கும் செய்வதும்-அல்லாஹ்வை அழைத்துப் பிராhர்த்திப்பது போல் மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சைகளை, மற்றவர்களுக்கும் செய்வதும்- அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதும்-ஆகிய இவை யாவும் ஷிர்க் என்று அல்லாஹ்வின் திரு மறையும், அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன.இவற்றுக்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக ஆராய்வதற்கு முன், இணை வைத்தல் அல்லது இணை கற்பித்தல் என்றால் என்ன? என்பது குறித்து சில உதாரணங்கள் மூலம் புரிந்துக் கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.
ஒரு நிறுவனத்தின் முதலாளி தம்மிடம் பணி புரியும் ஊழியர்களுக்கு உணவும், உடையும், உறையுளும் இன்னும் சகல வசதிகளும் செய்து கொடுத்து சம்பளமும் தருகிறார். அவரிடம் பணிபுரியும் ஒருவர், தன்னுடன் பணிபுரியும் சக தொழிலாளி ஒருவரை முதலாளி என்று சொன்னால், அதை அந்த முதலாளி அறிந்தால், ஏற்றுக் கொள்வாரா? எவ்வளவு கோபப்படுவார்? அந்தத் தொழிலாளி எவ்வளவு தான் நல்லவராக, வல்லவராக இருப்பினும் அந்த முதலாளி சகித்துக் கொள்ள மாட்டார் அல்லவா?அப்படியிருக்க, அல்லாஹ் தனது அடியார்களில் ஒருவர், மற்றவரை தனக்குச் சமமாகக் கருதினால் எப்படி ஏற்றுக் கொள்வான்? இன்னும் தெளிவாகப் புரியும்படி மற்றொரு உதாரணமும் சொல்லலாம்.ஒரு பெண் தனது கணவர் அல்லாத மற்றொருவரை 'தனது கணவர் மாதிpரி' என்று கூறினாலோ அல்லது நினத்தாலோ, அதை அந்தக் கணவர் அறிந்தால், அந்தக் கணவருக்கு எவ்வளவு கோபம் வரும்? அது போன்று தான், தான் அல்லாத மற்றவரைத் தனக்கு இணையாக ஒருவர் கருதினால், அதைவிடவும் அதிகமாக அல்லாஹ் கோபப்படுவான் அல்லவா? இணை வைத்தல் என்பது எவ்வளவு பெரிய பாவம் என்பது இப்போது புரிகிறதா?
அல்லாஹ் அல்லாத மற்றவரைக் கடவுளெனக் கருதுவதும், அல்லாஹ் அல்லாத மற்றவரை வணங்குவதும், ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுளர்கள் இருப்பதாக நம்புவதும், மட்டுமே ஷிர்க் என்று நம்மில் பலரும் நினைக்கின்றனர்.இவை யாவும் ஷிர்க் தான் என்பதில் யாருக்கும் கடுகளவும் சந்தேகமில்லை. ஆனால் இவை மட்டுமே ஷிர்க் என்றிருந்தால், மக்காவில் வாழ்ந்த காஃபிர்களை, முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டிருக்க மாட்டான். மக்கத்துக் காஃபிர்களை 'இணை கற்பித்தோர்' என்று அல்லாஹ் கூறுவதன் காரணம் என்ன? என்பதை சிந்தித்தால் பல்வேறு உண்மைகள் புரியவரும். மக்கத்துக் காஃபிர்கள் அனைவரும் அல்லாஹ்வை ஏற்க மறுத்தவர்கள் என்று தான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவறு.மக்காவில் வாழ்ந்தவர்களில் சிலர், இறை மறுப்பாளர்களாக இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் இறைவனை மறுத்தவர்கள் அல்ல என்பதும், அல்லாஹ்வையே இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதும் ஆச்சரியமான உண்மை. இது நமது சொந்தக் கருத்தல்ல. இதோ இறைவனின் திரு மறை சான்று பகர்கிறது.வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப் படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்றும் கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா? என்று நீர் கேட்பீராக. (திருக் குர்ஆன் 10:31)வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன், செவிப் புலனையும் பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப் படுத்துபவன், காரியங்களை நிர்வகிப்பவன், ஆகிய அனைத்துமே அல்லாஹ் தான் என்று அந்த மக்கத்துக் காஃபிர்கள் தெளிவான நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.'வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களிடம் கேட்டால், 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 31:35)வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் என்று தான் அம்மக்கள் நம்பினார்கள். இருந்தும் அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.'பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்) என்று (முஹம்மதே) கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள்.';சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக!ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்? எனக் கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள்.'அஞ்சமாட்டீர்களா?' என்று கேட்பீராக!'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்) என்று கேட்பீராக! 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்' என்று கேட்பீராக! (திருக் குர்ஆன் 23:84-89)இவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.இவை யாவும் அல்லாஹ்வின் திரு மறையே எடுத்து வைக்கும் ஆதாரங்களாகும். என்றாலும் அந்த மக்கத்துக் காஃபிர்கள், அல்லாஹ்வைத்தான் இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை, எல்லோருக்கும் தெரிந்த மிகவும் எளிமையான ஆதாரத்துடன் புரிந்துக் கொள்ள வேண்டுமா? இதோ!அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே- தாயின் வயிற்றில் இருந்த போதே- அவர்களின் தந்தை அவர்கள் இறந்து விட்டார்கள் என்பது வரலாற்று உண்மை.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து, தமது 40 ஆம் வயதில்தான் இறைச் செய்தியைப் பெற்று ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையை வெளி உலகத்துக்கு கூறத் தொடங்கினார்கள்.ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்ட அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் தமது மகனுக்கு அப்துல்லாஹ் அதாவது அல்லாஹ்வின் அடியார் என்று பெயர் சூட்டியிருப்பதிலிருந்தே அந்த மக்கள் அல்லாஹ்வைத்தான் இறைவனாக ஏற்றிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?இருப்பினும் அந்த மக்களை முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனென்றால் அந்த மக்கள், அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள வேண்டிய விதத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான சிறப்புத் தன்மைகளை தங்கள் முன்னோர்களில், நல்லோர் பலருக்கும் பங்கு வைத்தனர். அல்லாஹ்வை வணங்கினர். அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்கள் வழிபட்ட சிலைகளையும் வணங்கினர்.அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்தித்தனர். அல்லாஹ்வுக்கு இணையாக தங்கள் முன்னோர்களில், நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த நல்லடியார்களையும் அழைத்துப் பிரார்த்தித்தனர்.அல்லாஹ்வுக்கு ஆற்றல் உண்டு என்று நம்பினர். அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்களில் இறந்து போய்விட்ட நல்லோர்களுக்கும் ஆற்றல் உண்டு என்று நம்பினஅல்லாஹ்வுக்கு அறுத்து பலியிட்டனர். அல்லாஹ்வுக்கு இணையாக நல்லடியார்களின் உருவச் சிலைகளுக்கும் அறுத்து பலியிட்டனர். அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்தனர். அல்லாஹ்வுக்கு இணையாக தம் இஷ்ட தெய்வங்களுக்கும் நேர்ச்சை செய்தனர்.அல்லாஹ்வைத் தான் வணங்கினர். தமது முன்னோர்களில் நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த பெரியார்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பினர். அல்லாஹ்விடம் தங்களை சமீபமாக்கி வைப்பார்கள் எனக் கருதினர். இவற்றைத்தான் ஷிர்க் என்று அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வுக்குச் சமமாக மனிதர்களில் எவரையும் கருதக் கூடாது என்பதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக நம்புவது கூடாது என்பதும், அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் மனிதர்கள் எவருக்கும் பங்கிருப்பதாக நினைப்பது கூடாது என்பதும், அல்லாஹ்வுடைய தனித் தன்மைகள் மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக எண்ணுவது கூடாது என்பதும், மார்க்கம் அறியாத பாமர முஸ்லிமுக்கும் தெரியும்.இப்படியெல்லாம் முஸ்லிம்கள் எவரும் கருதுவதில்லையே என்று தான் அனைவருமே கூறுவர். ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் எள்ளளவும் இப்படி ஒரு எண்ணம் இருக்கமுடியாது என்பது உண்மை தான். இது தானே தவ்ஹீத் என்னும் ஏகத்துவக் கொள்கை! இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் தானே முஸ்லிமாக இருக்க முடியும்.இதற்கு மாற்றமான எந்த ஒரு கொள்கையையும் எந்த ஒரு முஸ்லிமும் கொண்டிருக்க முடியாதே! ஆனால் நம்மில் பலர், தம்மையும் அறியாமல் தங்களுக்கே தெரியாமல் அல்லாஹ்வுக்குச் சமமாக மனிதர்களில் சிலரைக் கருதிக் கொண்டிருப்தும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மனிதர்களில் சிலருக்கு இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பதும், அதிர்ச்சி தரும் உண்மைகளாகும்.அறியாமல் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான் என்பது சரி தான்.ஆனால் அறிந்துக் கொள்வதற்கான சகல வழிகளும் திறந்திருக்கும் போது- தெளிவான பாதை கண் முன்னே பளிச்சிடும் போது கண்களை இறுக மூடிக் கொண்டு, கரடு முரடான பாதையில் தான் பயணிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற (தெளிவான) பாதையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.நமது கொள்கை கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், சிந்தனை செயல்பாடுகள்,சரியானவை தானா? என்பதை இறைமறை குர்ஆனின் அடிப்படையிலும், இறைத் தூதர் (ஸல்) அவர்களின் தெளிவான வழகாட்டுதல் அடிப்படையிலும், மறு பரிசீலனை செய்து பார்த்தால், நம்மில் பலர் தாங்கள் எவ்வளவு பெரிய ஷிர்க் என்னும் வழிகேட்டில் போய்க் கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவத்திலிருந்து மீட்சி பெறலாம்.இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன் அவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள். (ஒன்று) அல்லாஹ்வின் திரு மறை. (மற்றொன்று) எனது வழி முறை.(அறிப்பவர்:இப்னு அப்பாஸ்,நூல்:புகாரி) அல்லாஹ்வின் திரு மறை குர்ஆனையும், சின்னஞ்சிறு விஷயங்களைக் கூடத் தெளிவாக விளக்கும் ஆதாரப் பூர்வமான நபி மொழித் தொகுப்புகளையும், அறிஞர்கள் நமக்கு அருந் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர்.இனி நமக்குத் தேவை சிந்திக்கும் ஆற்றல் மட்டும் தான். அல்லாஹ் நமக்கு ஐம்புலன்களுடன் சேர்த்து அறிவையும் தந்திருக்கிறான். அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கவும் சொல்கிறான்.அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (திருக் குர்ஆன் 47:24)இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பின பெறுவார்உண்டா? (திருக் குர்ஆன் 54:17)நமது கொள்கை கோட்பாடுகளை, வணக்க லழிபாடுகளை, அருள் மறை குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபி மொழிகளின் அடிப்படையில் ஒப்பிட்டு ஷிர்;க் என்னும் இணை வைத்தல் எள்ளளவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இவ்வுலகில் நாம் புரிந்த இறை வணக்கங்;கள் யாவும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிப் போகும்.நம்மையும் அறியாமல் நமது இறை வணக்கத்தில், மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங்களில், ஷிர்க் என்னும் கொடிய பாவம் கடுகளவும் கலந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் எல்லாமே பாழாகிப் போகும். மீள முடியாத நரக நெருப்பில் ஊழியூழி காலம் உழன்றுக் கொண்டிருக்க வேண்டியது தான். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக)
நல்லவையும் தீயவையும் மார்க்கத்தில் தெளிவாக்கப் பட்டு விட்டன. இரண்டையும் பிரித்தறிய தெளிவான வழிகாட்டுதல் இருக்கிறது. மார்க்க விஷயத்தில் ஒரு செயல் நல்லதா- கெட்டதா என்பதை நம் விருப்பத்துக்கு முடிவு செய்யக் கூடாது.இறை வணக்கத்திலிருந்து இல்லற வாழ்க்கை வரை ஆகுமானவற்றையும் ஆகாதவற்றையும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவாக விளக்கி விட்டார்கள். அதற்கு மேலும் மார்க்க விஷயத்தில் நமது சுய அபிப்பிராயத்திற்கு முடிவு செய்வது, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் குறை காண்பதாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக)தீமைகள் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி குர்ஆனும் ஹதீஸ்களும் நமக்கு விரிவாக விளக்கி விட்டன. அவற்றைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டவர்கள், அவற்றிலிருந்து முற்றிலும் விலகி, பாவத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்வார்கள், எனவே தீயவற்றைக் குறித்து நாம் அலசி ஆராயத் தேவையில்லை.ஆனால் நன்மைகள் என்ற பெயரில் தீமைகளை நியாயப் படுத்தி ஷைத்தான் நம்மை வழி கெடுப்பான். நன்மையான காரியங்கள் என்ற பெயரில் நம்மிடையே வழக்கத்தில் உள்ளவற்றில் தான் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. நல்ல பொருட்கள் என்று நம்பப் பட்டவைகளில் தான் போலிகள் உருவாகி விற்பனைக்கு வரும்.நல்லவர்களை வழி கெடுப்பதில் தான் ஷைத்தானுடைய வெற்றி இருக்கிறது. ஏற்கனவே தனது கட்சியில் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பவர்கள் குறித்து எந்தக் கட்சித் தலைவரும் அதிக அக்கரைச் செலுத்துவதில்லை. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில்தான் கட்சித் தலைவரின் முழு கவனமும் இருக்கும்.இறைவனும், இறைத் தூதர் (ஸல்) அவர்களும் எவற்றையெல்லாம் 'நன்மை' என்று நமக்கு அறிமுகம் செய்தார்களோ அவை தான் நன்மை. அவை மட்டுமே நன்மைகளாகும்.அவற்றைத் தவிர, வேறு எவரேனும் தம் சுய விருப்பத்திற்கு 'நல்லவை' என்று பட்டியலிட்டவை எவையும் நல்லவையாகாது. பட்டியலிட்டவர் எவ்வளவு பெரிய பண்டிதராயினும் சரியே.நமது கொள்கைகளில், எண்ணங்களில், செயல்களில், சிந்தனைகளில், நமக்கே தெரியாமல் இணை வைத்தல் என்னும் ஷிர்க் எந்த வகையிலெல்லாம் ஊடுருவி இருக்கலாம் என்பதை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

">Link

Sep 16, 2006

இங்கிதம் வேண்டும்


மனித வாழ்க்கையில் நட்பு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. உற்றார் உறவினரிடமும், உற்ற நண்பர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும், நட்பை வளர்த்துக் கொள்ள மிக முக்கியமானது 'இங்கிதம்'.
நமது பேச்சில், செயலில், பழக்க வழக்கங்களில் இங்கிதத்தைக் கடைப் பிடித்தால், நம்மீது பிறருக்குள்ள மதிப்பு உயரும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். கிடைத்த நட்பு நிலைத்து நிற்கும். உறவினர்களின் நெருக்கம் அதிகமாகும். உறவுகள் பலப்படும். உயர் அதிகாரிகளின் இதயத்தில் இடம் பிடித்துக் காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ள முடியும். இவை யாவும் உருப்படாத 'ராசிபலன்' வார்த்தைகள் அல்ல. உணர்ந்து அனுபவித்த உண்மைகள்.
அலுவலகம் ஒன்றின் மேலாளர் அறையின் நுழைவாயிலில், 'உத்திரவின்றி உள்ளே வரக் கூடாது' என எழுதி வைக்கப் பட்டிருந்தது. அந்த அலுவலகத்திற்குப் புதிதாக மாற்றலாகி வந்த மேலாளர், தம் உதவியாளரை அழைத்து அந்த அறிவிப்புப் பலகையை அகற்றும் படியும், அதற்குப் பதிலாக 'உத்திரவு பெற்று உள்ளே வரவும்' என எழுதி வைக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.இரு வாசகங்களின் கருத்தும் ஒன்று தான். முதல் வாசகத்தின் எதிர்மறை அணுகுமுறை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இரண்டாம் வாசகத்தின் நேர்மறை அணுகுமுறை அனைவர் மனதிலும் அற்புதமான ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும். இதுவும் ஓர் இங்கிதமே!.
ஒருவரைச் சந்திக்க நாம் செல்வதாக இருந்தால், அதுவும் ஏதேனும் ஒரு வகையில் அவர் நம்மை விட உயர்ந்தவராக இருந்தால், நமக்கு வசதிப்பட்ட நேரத்தில நாம் செல்லக் கூடாது. 'எந்த நேரத்தில் வந்தால் தங்களைச் சந்திக்கலாம்?' என்று அவரிடம் முன் கூட்டியே கேட்டறிந்து, நம்மால் அவருடைய வழக்கமான அலுவல்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணமும், அவருக்கு வசதிப்பட்ட நேரத்திலும் சந்திப்பை வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நம் மீது அவருக்கு ஓர் ஈர்ப்பு உண்டாகும். நம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதும் சுலபமாகும்.
பொதுவாக உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கு நாம் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்ல நேர்ந்தால், நமது வருகையை முன் கூட்டியே அவர்களுக்குத் தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும். சர்வ சாதாரணமாகத் தொலைபேசி உபயோகம் வந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் எளிது. தொலைபேசி வசதி இல்லாத இடங்களுக்கு கடிதம் மூலமாகவேனும் தெரிவித்து விட்டுச் செல்லவேண்டும். முன் அறிவிப்பின்றி திடீரெனப் போய்ச் சேருவது அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது நேரத்தில் அவர்கள் தம் சொந்த வேலையாக வெளியில் செல்லத் திட்டமிட்டிருக்கலாம். எதிர் பாரா விதமாக திடீரென நாம் போய் நிற்கும் போது அவர்களின் அவசியமான அலுவல்கள் திட்டங்கள் பாதிக்கப் படலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் நற்குணம் கொண்டவர்களைக் கூட இது போன்ற திடீர் வருகை சில சமயம் எரிச்சல் படவைக்கும்.
தம் வீட்டை எப்போதும் தூய்மையாகவும், பொருட்களை ஒழுங்கு முறையுடன் அழகு படுத்தியும் வைத்திருப்பதைச் சிலர் விரும்புவர். ஆனாலும் விளையாட்டுக் குழந்தைகள் உள்ள வீடுகளில் பொருட்கள் சிதறிக் கிடக்கும். சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் இது தவிர்க்க முடியாதது. இது போன்ற சந்தர்ப்பங்களில் முன் அறிவிப்பின்றி விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் உள்ளவர்கள் அவமானப்பட்டதைப் போல் உணருவார்கள்.அப்படி ஒரு தர்ம சங்கடத்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. எனவே விருந்தினராக நாம் எந்த வீட்டுக்குச் சென்றாலும் முதலில் அறிவித்து விட்டுச் செல்வது மிக முக்கியம். இதுவும் ஓர் இங்கிதம்.
எந்த வீட்டுக்குச் சென்றாலும் வீட்டாரின் அனுமதி கிடைத்த பின்னரே உள்ளே செல்ல வேண்டும். உள்ளே இருப்பவரோ அல்லது வெளியிலிருந்து நம்மை உள்ளே அழைத்துச் செல்பவரோ 'உள்ளே வாருங்கள்' என்று அழைக்கும் வரை நாமாக அவசரப்பட்டுச் செல்லக் கூடாது. நமது சொந்த வீட்டைத் தவிர வேறு எவர் வீட்டிலும் அவர் எவ்வளவு தான் நெருங்கிய உறவினராகவோ நண்பராகவோ இருப்பினும் அவர்கள் வீட்டில முழு உரிமை எடுத்துக் கொண்டு சமையலறை வரை சர்வ சாதாரணமாகச் செல்வதைத் தவிர்க்கவேண்டும். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
விருந்தினராக அடுத்தவர் வீட்டுக்குச் சென்றால் வீட்டுக் காரர்களே சலிப்படையும் அளவுக்குத் தங்குவது கூடாது. முதல் நாள் உபசரிப்பு தடபுடலாக இருக்கும். அடுத்தடுத்த நாட்களில் வித்தியாசத்தை நாமே உணரலாம். எனவே பலமான உபசரிப்பு முடிந்ததுமே கௌரவமாக விடை பெற்றுக் கொள்ள வேண்டும். 'விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான்' என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?
விருந்தினராக அடுத்தவர் வீடுகளுக்குச் செல்லும் போது அவ்வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பின் நம்மால் இயன்ற அன்பளிப்புப் பொருட்களை, குறிப்பாக இனிப்புப் பண்டங்களை வாங்கிச் செல்வது சிறந்தது. அது ஒன்றிரண்டு மிட்டாய்களாகக் கூட இருக்கலாம். அவ்வீட்டின் குழந்தைகள் நமது வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள். ஒன்றுமே வாங்கமல் வெறுங்கையுடன் எப்போதும் ஒரு வீட்டிற்குச் செல்லும் வழக்கமுடைய ஒருவர் ஒரு முறைச் சென்ற போது கதவைத் திறந்த அவ்வீட்டுக் குழந்தை தனது தாயிடம் ஓடிச் சென்டறு 'ஒன்றுமே வாங்காமல் சும்மா வருமே அந்த மாமா வந்திருக்கிறது' என்று சப்தம் போட்டுச் சொல்ல, வந்தவர் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போயிருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இரண்டு நண்பர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் நாமும் சேர்ந்துக் கொள்ள வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டால், நமது வருகையை அவ்விருவரும் அறிந்துக் கொள்ளும் விதத்தில் அறிவித்து விட்டு அவர்களுடன் இணைந்துக் கொள்ளவேண்டும். நமக்குத் தெரிவிக்க விரும்பாத இரகசியம் எதுவும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். அது வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்த தலைப்பை விட்டு வேறு தலைப்புக்கு அவர்கள் திடீரென மாறினால், அதைக் கொண்டு நாம் புரிந்துக் கொள்ளலாம். பிறகு சந்திப்பதாகச் சொல்லி விட்டு நாம் நாகரிகமாக நகர்ந்துக் கொள்வது தான் இங்கிதம்.
பலர் சேர்ந்து இருக்கும் இடத்தில் ஒருவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பேசுவதும், மற்றவர்களுக்குப் புரியாத மொழியில் ஒருவருடன் உரையாடுவதும் முறையற்ற செயல்.
பலருடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் போது நாம் அவசரமாகச் செல்ல நேரிட்டால், மற்றவர்களிடம் நமது அவசரத்தை அறிவித்து விட்டுத் தான் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்.
நம்மால் செய்ய இயலாத ஒரு காரியத்தில் நமக்கு உதவும் நோக்கத்துடன் ஒருவர் வந்து உதவி செய்தால் முழு வேலையையும் அவர் தலையில் கட்டி விட்டு நாம் ஒதுங்கி விடக் கூடாது. அவருடன் கூடவே இருந்து சின்னஞ்சிறு ஒத்தாசைகளை செய்ய வேண்டும். அதுபோல் அவருடைய காரியங்களில் நம்மால் இயன்ற வரை நமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
பிறருக்கு நாம் உதவி செய்யும் போது அது பிரதி பலன் எதிர்பாராத உதவியாக இருக்க வேண்டும். அதே சமயம் பிறர் நமக்காக உதவி செய்தால் நம்மால் இயன்ற பிரதி பலனை நாம் செலுத்த வேண்டும்.
நமக்காக ஒருவர் செலவு செய்தால் அதற்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ பிரிதொரு சமயத்தில் அவருக்காக நாம் செலவு செய்ய வேண்டும். அதை உடனுக்குடன் செய்தால் நாகரிகமாக இருக்காது. எனவே அதற்கான தருணத்தை எதிர் பார்த்து காத்திருக்க வேண்டும்.
நண்பர்கள் உறவினர்கள் யாராக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் மிகவும் நேர்மையாகவும் நாணயத்துடனும் நடந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நட்பும் உறவும் நீடிக்கும். மிகச் சாதாரணமாக நாம் நினைக்கும் சின்னஞ்சிறு கொடுக்கல் வாங்கல்கள் தான் நம்மைப் பற்றிய அபிப்பிராயத்தை பிறர் மனதில் பதிய வைக்கும்.
'ஒருவரை நல்லவர் என்று சொல்வதற்கு நீர் அவருடன் மூன்று விஷங்களில் சம்பந்தப் பட்டிருக்க வேண்டும். நீர் அவருடயை அண்டை வீட்டுக்காராக இருக்க வேண்டும், அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும், அல்லது அவருடன் கொடுக்கல் வாங்கல் நடத்தியிருக்க வேண்டும்' என்னும் ஒரு பேரறிஞரின் கூற்று மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.
பலர் சேர்ந்து அமர்ந்திருக்கும் போது பிறர் முகம் சுளிக்கும் படியான காரியங்களைச் செய்யக் கூடாது. தும்முதல் கொட்டாவி விடுதல் போன்ற இயற்கையான, நம்மால் கட்டுப் படுத்த முடியாத செயல்கள் ஏற்படும் போது பிறர் அருவருப்பு அடையாத வகையில் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள வேண்டும்.
நமது மிக நெருங்கிய நண்பராக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவருடன் மிகவும் இயல்பாகப் பேசும் பழக்கம் நமக்கு இருந்தாலும் கூட அவரை உயர்வாக மதிப்பவர்களிடம் குறிப்பாக அவரது மனைவி, குழந்தைகள், மற்றும் அவருக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரிடம் அவரைப் பற்றி விசாரிக்கும் போது கண்ணியமான வார்த்தைகளைப் பயன் படுத்த வேண்டும்.
சிறு குழந்தைகள் செய்யும் சின்னஞ்சிறு செயல்களைக் கூட நாம் அங்கீகரித்து அவர்களைப் பாராட்ட வேண்டும். குழந்தை தவழ்வதற்கும், எழுந்து நிற்பதற்கும், நடப்பதற்கும் தன் முதல் முயற்சியைத் தொடங்கும் போது, அவர்களுக்குப் புரியும் விதத்தில் அவர்களுடைய மொழியாகிய புன்னகை மொழியில் நம் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்.
படிக்கும் குழந்தைகள் அனைவரும் அறிவாற்றலிலும், நினைவாற்றலிலும் சமமாக இருப்பதில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளில் ஆற்றலில் ஒருவருக் கொருவர் வித்தியாசப் படுவதுண்டு. நன்றாகப் படிக்கும் குழந்தைகளைப் பாராட்டும் அதே சமயம், குறைவான மதிப் பெரும் குழந்தையை மற்ற குழந்தைகளுக்கு முன்னால் வைத்து மட்டம் தட்டக் கூடாது. தனிப்பட்ட முறையில் அக் குழந்தையின் படிப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.இந்த ஆலோசனைகள் பெற்றோர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.
ஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருக்கும் போது ஒரு குழந்தைக்கு மட்டும் தனியாக எதுவும் வாங்கிக் கொடுப்பதோ, அதிக சலுகைகள் கொடுப்பதோ கூடாது. அது மற்ற குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
தொலை தூரத்தில் இருப்பவர்கள் தம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போது, தவிர்க்கவே முடியாத அவசியம் ஏற்பட்டாலன்றி, அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு நேரங்களில் தொடர்பு கொள்ளக் கூடாது. சொந்தக் குடும்பத்தினருக்காயினும் சரியே. அகால நேரங்களில் ஒலிக்கும் தொலைபேசி ஒலி பலருடைய உறக்கத்தை கெடுப்பது மட்டுமல்ல, சிலருக்கு திடுக்கத்தையும் திகிலையும் ஏற்படுத்தும்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போது முதலில் நாம் யாருடன் தொடர்புக் கொள்ள வேண்டுமோ அவர்தான் தொடர்பில் வந்திருக்கிறாரா? என்பதை நன்றாக உறுதிப்படுத்திக் கொண்டு தான் பேசத் தொடங்க வேண்டும். உரையாடலைத் தொடங்கும் போது அழகிய முகமன் கூறி, நலம் விசாரித்த பின்னர் தான் சொல்ல வந்த செய்திகளையோ கேட்க வந்த விபரங்களையோ தொடங்க வேண்டும்.
தொலைபேசியில் முடிந்தவரை சுருக்கமாகப் பேச வேண்டும். விரிவாகப் பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது மறுமுனையில் இருப்பவரிடம் முன் கூட்டியே தெரிவித்து அவர் அதற்கேற்ற சூழ்நிலையில் இருக்கின்றாரா என்பதை கேட்டறிந்துக் கொண்டு நமது உரையாடலைத் தொடரலாம். பேசிக் கொண்டிருக்கும் போது மறுமுனையில் இருப்பவர் நமது பேச்சில் கவனம் செலுத்தாமல் 'சரி வேறு எதுவும் செய்தி உண்டா?' என்று கேட்க ஆரம்பித்து விட்டாலே, அவர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்துக் கொண்டு நமது பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.
பேசிக் கொண்டிருக்கும் போது தொலைத் தொடர்பு கோளாறு காரணமாகத் தொடர்பு திடீரெனத் துண்டிக்கப் பட்டுவிட்டால் மறுபடியும் தொடர்புக் கொண்டு வருத்தம் தெரிவித்தபின் உரையாடலைத் தொடரவேண்டும்.
மரணம் போன்ற துக்கம் ஏற்பட்ட இடங்களுக்குச் சென்றால், அங்கு அமர்ந்துக் கொண்டு ஊர்க் கதைகள் பேசுவதும், சிரித்துப் பேசி குதூகலிப்பதும் கூடாது. மரண துக்கத்தில் இருப்பவர்களின் மன வேதனையைப் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் நம்மைப் பற்றியும் நமது குடும்பத்தைப் பற்றியும் சுய புராணம் பாடிக் கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
பலருடன் சேர்ந்திருக்கும் போது நாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. மற்றவர்கள் பேசவும் வாய்ப்பளிக்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதையும் செவி தாழ்த்திக் கேட்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கும் நம் பேச்சைக் கேட்பதற்கு ஆர்வம் பிறக்கும்.
பிரபலப் பேச்சாளர் வரும் வரை சிறிது நேரம் பொது மேடைகளில் பேச வாய்ப்பு கிடைத்தால், சுருக்கமாகப் பேச வேண்டும். எவ்வளவு தான் நாம் அருமையாகப் பேசினாலும் பிரபலப் பேச்சாளரின் உரைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நமது பேச்சு 'அறுவையாக'த் தான் தெரியும். இன்னும் கொஞ்ச நேரம் இவர் பேசமாட்டாரா? என மற்றவர்கள் எதிர்பார்க்கும் போது நம் உரையை முடித்துக் கொள்ள வேண்டும்.
இங்கிதத்தைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது. இதுவும் ஓர் இங்கிதமே!
------------------------------------


">Link

விருப்ப மொழியில் குர்ஆன்