Oct 31, 2011

ஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது.

இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்லவிருக்கும் முஸ்லிம்கள் மஷாயிர் ரெயில்வேயின் முழுஅளவு பயனையும் பெறலாம் என்று மக்கா நகர ஆளுநர் இளவரசர் காலித் அல் ஃபைசல் அறிவித்துள்ளார். மஷாயிர் ரெயில்வே திட்டமானது ஹஜ் கிரியைகளுக்கான புனித இடங்களாக அறியப்படும் மினா, அரஃபாத், முஜ்தலிஃபா, பகுதிகளை இணைக்கும் புதிய ரெயில்வே திட்டமாகும்.
சவூதி அரேபியாவின் மஷாயிர் ரெயில்வே  குறித்து மக்கா ஆளுநரும், சவூதி அரேபிய மத்திய ஹஜ் கமிட்டியின் தலைவருமான இளவரசர் காலித் அல்ஃபைசல் செய்தியாளர்களிடம் விளக்கினார். “அரஃபாத்திலிருந்து மினா வரை இத்திட்டம் பூர்த்தியடைந்துவிட்டது. மேலும், வெகுவிரைவில்,  ஹரமிலிருந்து அல்ஹரமைன் தொடர் வண்டி நிலையம் வரையிலான இணைப்பும் பூர்த்தி செய்யப்படும். இந்த வருடம் ஹஜ் யாத்ரிகர்கள் முழுவீச்சில் இதன் பயனைப் பெறலாம்” மேலும், “மினாவில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் யோசனையும்  ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார் ஆளுநர் காலித்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முஸ்லிம் பொறிஞர் பால் ஆண்டர்சன், ரியாத்-தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறுகையில், “ஒருமணிநேரத்திற்கு 72,000 பயணிகளைச் சுமந்து செல்லும் இந்தத் தொடர்வண்டி, உலக அளவில் பிரயாண வசதிகளில் முதன்மையானது” என்றார். ஜப்பான், சைனாவில் மேம்படுத்தப்பட்ட தொடர்வண்டிகள் 56,000 பேர் வரை சுமந்துசெல்கின்றன”.

மஷாயிர் ரெயில்வே திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றும் பால் ஆண்டர்சன், “இது ஹஜ் புனிதப் பயணியருக்கு மிகுந்த உதவிகரமானது மட்டுமின்றி காற்று மாசுபடுவதை பெருமளவு குறைக்கிறது “ என்றும் தெரிவித்தார். மேலும், ஹஜ்ஜுக் காலத்தில்,சுமார் 120,000 பேருந்துகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் 30டன் கெடுதியான வாயுக்களிலிருந்து பாதிப்படைவதினின்றும் சுற்றுப்புற சூழல் இனி பாதுகாக்கப்படும் என்றும், இதனால் யாத்ரிகர்களுக்கு இதயப் பிரச்னைகள், ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்க முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

“ஹஜ்ஜுக் காலங்களில் இதுவரை பேருந்துகள் ஒருமணிநேரத்துக்கு ஐந்து கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் தான் சென்றுவந்துகொண்டிருக்கின்றன, இதனால் குறிப்பிட்ட இடங்களை அடைய நான்கு(அ) ஐந்து மணி நேரங்கள் தேவைப்பட்டன.  ஒருமணிநேரத்துக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்தத் தொடர்வண்டிகள் அந்தத் தூரத்தை இனி எட்டே நிமிடங்களில் அடைந்துவிடும். மேலும் சாலைப் போக்குவரத்தால் ஏற்படும் நிறுத்துமிடப் பிரச்னைகளையும் இந்தத் தொடர்வண்டிகளைக் கொண்டு தீர்த்துவிட முடியும்” என்றார் ஆண்டர்சன்.

0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்