வலைப்பதிவு தொடங்கியாகிவிட்டது. தமிழில் இடுகைகளைப் பதிந்தாகி விட்டது. பல்வேறு வலைப்பதிவுகளைப் பாக்கிறோம். விதவிதமாக அவற்றை வடிவமைத்திருக்கின்றனர். நமது வலைப்பதிவில் அத்தகைய மாற்றங்களை எப்படி செய்வது? என்பதை இனி காண்போம்.
முதலில் வலைப்பதிவின் அமைப்பில் எவ்வாறு மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து காண்போம்.
வலைப்பதிவில் புதிய இடுகைகள் இடுவதானாலும், பழைய இடுகைகளைத் திருத்துவதானாலும் முதலில் உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி உள் நுழைய வேண்டும் என்று பார்த்தோம்.
அது போலவே உங்கள் பதிவின் அமைப்பை மாற்றவும், தளவமைப்பை மாற்றவும், உங்கள் பதிவை அழகுபடுத்தவும், பல்வேறு அம்சங்களை இணைக்கவும், தவறாக இணைக்கப்ட்டவற்றை திருத்தவும் நீக்கவும் இவை அனைத்துக்குமே கூகுள் கணக்கைப் பயன்படுத்தி முதலில் உள் நுழைய வேண்டும். உள்ளே நுழைய நுழைவாயில் எங்குள்ளது? உங்களுக்குத் தான் தெரியுமே. மறந்திருந்தால் கீழ்க்காணும் சுட்டியை கிளிக்குங்கள்.
வழக்கம் போல் உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி பாஸ்வேர்டைக் கொடுத்து உள் நுழைக என்பதை கிளிக் செய்து விட்டீர்களா? டாஷ்போர்டு பக்கத்திற்கு வந்து விட்டீர்கள் தானே. இப்போது அமைப்புகள் என்பதை கிளிக் செய்யவும். இதில் பல்வேறு அம்சங்கள் இருக்கும் குழப்பம் அடைய வேண்டாம். இப்போதைக்கு அவசியமானவற்றை மட்டும் காண்போம்.
1.அடிப்படைகள்
வலைப்பதிவு என்பதை அப்படியே விட்டுவிடுங்கள்தலைப்பு கட்டத்தில் உங்கள் வலைப்பதிவுக்கான தலைப்பை இடுங்கள். முதல் பாடத்தில்
5.இதில் (வலைப்பதிவு தலைப்பு) என்னும் இடத்தில் உங்கள் வலைப்பதிவுக்கான ஒரு தலைப்பை இடுங்கள். இப்போதைக்கு ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தி தலைப்புக்கு பெயரிடுங்கள். உதாரணமாக YENATHU VALAIP PATHIVU. இத் தலைப்பை தமிழில் எப்படி இடுவது என்பதை பிரிதொரு பாடத்தில் பார்க்க இருக்கிறோம். இக்கட்டத்தில் நீங்கள் இடும் உங்கள் பதிவின் தலைப்பை வேண்டுமானால் பிறகு மாற்றிக் கொள்ளலாம்.
என்று படித்தது நினைவிருக்கிறதா? ஆம் இப்போது உங்கள் வலைப்பதிவுக்கு தமிழிலேயே தலைப்பிட வேண்டுமா,? யுனிகோட் தமிழில் 'எனது வலைப்பதிவு' என்று தட்டச்சுங்கள். இதில் நீங்கள் இடும் தலைப்பை பிறகு மாற்ற வேண்டுமானால் இதே முறையைப் பின்பற்றி மறுபடியும் மாற்றிக் கொள்ளலாம்.
விளக்கம் கட்டத்தில் உங்கள் பதிவைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை தரலாம். உதாரணமாக, எனது எண்ணங்கள் இங்கே எழுத்துக்களாக......என்று கொடுக்கலாம்.(உங்களுக்கு விருப்பமான வாசகங்களை எழுதிக் கொள்ளுங்கள்.) இந்த குறிப்பும் உங்கள் வலைப்பதிவின் தலைப்புப் பக்கத்தில் காட்சி அளிக்கும்.
இனி அடுத்தடுத்துள்ள அனைத்து குறிப்புக்களுக்கும் ஆம் என்பதை தேர்வு செய்யுங்கள். ஆனால் பாலியல் உள்ளடக்கம் என்பதற்கு மட்டும் இல்லை என்பதை தேர்வு செய்யுங்கள்
ஒலி பெயர்ப்பை செயல்படுத்த வேண்டுமா? என்பதற்கு முடக்கு என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.அனைத்தும் முடிந்த பின் மறக்காமல் அமைப்புகளை சேமி என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
இந்த அமைப்புகள் பக்கத்தில் உள்ள
வெளியிடுதல், வடிவமைத்தல், கருத்துரைகள் ,காப்பகப்படுத்துதல், தளஓடை, மின்னஞ்சல் ,OPEN ID,அனுமதிகள் ஆகிய அனைத்தையும் இப்போதைக்கு அப்படியே விட்டு விடுங்கள். ஒரே சமயத்தில் அனைத்தையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்போதைக்கு அடிப்படைகள் பகுதியில் இந்த மாற்றங்கள் மட்டும் போதும்.
----------------------------------------------------------
தளவமைப்பு
உங்கள் வலைப்பதிவை அழகுபடுத்தவும் பல்வேறு சிறப்பம்சங்களை சோக்கவும் இந்த தளவமைப்பு தான் மிக முக்கியமானது. இதுவரை உங்கள் வலைப்பதிவில் இடுகைகள் இடவும், இட்ட இடுகைகளத் திருத்தவும், அடிப்படை அம்சங்களை உருவாக்கவும் கற்றுக் கொண்டிருப்பீர்கள். இப்போது உங்கள் வலைப்பதிவை அழகுற எப்படி வடிவமைப்பது? பயனுள்ளவற்றை எப்படி சேர்ப்பது என்பது பற்றி காண்போம்.
உங்கள் டாஷ்போர்டில் தளவமைப்பு என்பதை கிளிக் செய்யுங்கள்.
தளவமைப்பில் பக்க உறுப்புகள் என்னும் பகுதி தானாகத் திறக்கும். இதில் முதலில் தெரியும் நீல நிறப்பட்டையில் navbar என இருக்கும் அதன் ஓரத்தில் திருத்து என்பதை கிளிக்கினால் அந்தப்பட்டையின் வண்ணத்தை மாற்ற வழி பிறக்கும்.
கொடுக்கப்பட்டுள்ள 4 வண்ணப் பட்டைகளில் உங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்து அதாவது குறிப்பிட்ட சிறு வட்டத்தில் மவுஸால் கிளிக்கி விட்டு பிறகு சேமி என்பதை கிளிக்கினால் உங்களுக்கு விருப்பமான தலைப்பு வண்ணம் தயார்.
அடுத்த கட்டத்தில் உங்கள் வலைப்பதிவின் தலைப்பு காணப்படும். இடது மூலையில் காணப்படும் திருத்து என்பதை கிளிக்கினால் மேற்குறிப்பு உள்ளமை என்னும் பக்கம் திறக்கும். இதில் உங்களுக்கு வேண்டிய மாற்றங்களைச் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் வலைப்பதின் தலைப்பில் அழகான படம் ஒன்றை வைக்க விரும்பினால் படம் என்னும் இடத்திற்கருகில் உள்ள Brows என்பதை கிளிக்குங்கள். உங்கள் கணிணியில் உங்களுக்கு விருப்பமான படம் இருக்கும் இடத்தைத் தேர்வு செய்து கொண்டால் படம் இப்போது தானாக தரவேற்றப்படும்.
சிறிது நேரம் காத்திருக்கவும். படம் ஏற்றப்பட்டவுடன் ஏற்றப்பட்ட படம் அப்பகுதியில் தெரியும் அதன் பின்னர் சேமி என்பதை கிளிக்கவும். இப்போது உங்கள் வலைப்பதிவு முகப்பில் நீங்கள் விரும்பிய படம் காட்சி அளிக்கும்.
அடுத்து கேஜட்டைச் சேர் என்பதை கிளிக்குங்கள். பல்வேறு கேஜட்டுகளைச் சேர்க்கும் வழிமுறையை காணலாம். கேஜட்டைச் சேர் என்னும் தலைப்பில் 19 வகையான கேஜட்டுகள் பற்றிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான விளக்கங்களும் தமிழிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் உங்கள் வலைப்பதிவில் அவற்றை எப்படிச் சோப்பது? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
இணைப்பு பட்டியல்
இதன் மூலம் உங்களுக்குப் பிடித்தமான வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்களின் தொகுப்பை உங்கள் பதிவில் இடம் பெறச் செய்யலாம். வாசகர்கள் உங்கள் வலைப்பதிவிலிருந்தே நேரடியாக அந்த பதிவுகளுக்கும் தளங்களுக்கும் செல்ல முடியும்.
இதைப் பயன்படுத்த இணைப்பு பட்டியல் என்பதை கிளிக்குங்கள்.
இணைப்பு பட்டியல் உள்ளமை என்னும் பக்கம் திறக்கும். இதில் தலைப்பு என்னும் இடத்தில் இந்த தொகுப்புக்கான தலைப்பு ஒன்று கொடுங்கள். உதாரணமாக தமிழ்ப்பதிவுகள் என்று கொடுப்போம்.
அடுத்து புதிய தள URL என்னும் கட்டத்தில் நீங்கள் விரும்பும் வவைலப்பதிவின் URL முகவரியைக் கொடுக்கவும்.
இந்த யுஆர்எல் முகவரியைக் கொடுக்கும்போது கவனம் தேவை. ஒரு புள்ளி வித்தியாசம் இருந்தாலும் லிங்க் கிடைக்காது. எனவே இந்தப் பக்கத்தை அப்படியே மினிமைஸ் செய்து வைத்துக் கொண்டு நீங்கள் இணைக்க விரும்பும் பதிவு அல்லது தளத்தை திறந்து அதன் மேற்பகுதியில் காணப்படும் யுஆர்எல் முகவரியை காப்பி செய்து பின்னர் மறுபடியும் இந்தப் பக்கத்தை திறந்து புதிய தள URL என்னும் கட்டத்தில் இருக்கும் http:// என்பதை நீக்கிவிட்டு அதன் பிறகு பேஸ்ட் செய்து விடவும்.
புதிய தளப் பெயர் என்னும் கட்டத்தில் அந்த வலைப்பதிவு அல்லது வலைத் தளத்தின் பெயரை தமிழில் தட்டச்சவும்.
பல்வேறு பதிவுகள் மற்றும் தளங்களை இணைக்க இணைப்பைச் சேர் என்பதை கிளிக்கி பின்னர் இதே முறையைக் கையாளவும். அனைத்தும் முடிந்த பின் சேமிக்க மறக்க வேண்டாம்.
HTML/JavaScript
இது ஒரு முக்கியமான பகுதி. நீங்கள் பார்வையிடும் வலைப்பதிவுகளில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கலாம். உதாரணமாக, வலைப்பதிவுக்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை அறியும் கவுண்டர்கள், நேரம் காட்டும் கடிகாரம்., இப்படி பலவகையான சிறப்பம்சங்களைக் காணும்போது இது போல் நம் பதிவிலும் இணைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறீர்களா, இதற்குப் பயன்படுவது தான் இந்த HTML/JavaScript என்னும் கேஜட்.
நீங்கள் எந்த வலைப்பதிவில் ஒரு சிறப்பம்சத்தைப் பார்க்கிறீர்களோ, அதில் மவுஸை வைத்து டபுள் கிளிக் செய்யுங்கள். அது உருவாக்கப்பட்ட தளத்தக்கு இட்டுச் செல்லப்படுவீர்கள். அல்லது Google search மூலமாகவும் தேவையானதை தேடிப்பிடியுங்கள்.
உதாரணமாக உங்கள் பதிவில் வருகையாளர்கள் எண்ணிக்கை அறிய உதவும் கவுண்டரை சேர்க்க விரும்பினால் Free web counter என்று Google search ல் இட்டு தேடுங்கள். கிடைக்கும் தளத்தில் உங்களுக்கு விருப்பமான கவுண்டரை தேர்வு செய்த பிறகு அதன் HTML கோட் கிடைக்கும். அதை காப்பி செய்து இந்த பகுதியில் பேஸ்ட் செய்து விடுங்கள். இதற்கு ஒரு தலைப்பு கொடுத்து விடுங்கள். 'வருகையாளர்கள்' என்று கொடுக்கலாம். இறுதியில் சேமிக்க மறக்க வேண்டாம்.
பிறகு உங்கள் வலைப்பதிவைத் திறந்து பாருங்கள். கவுண்டர் உங்கள் பதிவில் காட்சி அளிக்கும். இதே முறையைப் பின்பற்றி உங்களுக்கு விருப்பமானதை யெல்லாம் இணைத்துக் கொள்ளுங்கள்.
லேபிள்கள்
இதை இணைப்பதன் மூலம் உங்கள் பதிவில் இதுவரை எந்தெந்த லேபிள்களில் உங்கள் கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவோ அவை அனைத்தையும் அந்தந்த லேபிள்களில் எத்தனை கட்டுரைகள் பதியப்பட்டுள்ளன என்னும் விபரங்களுடன் காட்டும்.
தலைப்பு என்னும் கட்டத்தில் labels என்று ஆங்கிலத்தில் காண்பிக்கும் அதை நீக்கிவிட்டு தமிழில் ஒரு தலைப்பு கொடுத்து கொள்ளுங்கள். சேமிக்க மறக்காதீர்கள்.
புதிய இடுகைகளை இடுவது பற்றிய பாடத்தில் உங்கள் ஆக்கங்களுக்கு எப்படி லேபிள் இடுவது என்பது குறித்து விளக்கியுள்ளோம் மறந்திருந்தால் மறுபடியும் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த கேஜட்டைச் சேர் என்னும் பகுதியில் சில வற்றைப் பற்றி மட்டுமே விளக்கியுள்ளோம் புதிதாக வலைப்பதிவு தொடங்கியிருப்பதால் அனைத்தையும் படித்து அதிகம் குழப்பிக் கொள்ள வேண்டாம்.. தொடர்ந்து நீங்கள் வலைப்பதிவில் அதிகமதிகம் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போது நீங்களாகவே புரிந்து கொள்வீர்கள்.
பிளாக்கர் பதிவு பற்றிய சந்தேகங்கள் குறித்து தெளிவு பெறவும் தமிழிலேயே விளக்கங்கள் பெறவும் பிளாக்கர் உதவியைப் பெறவும் அதற்கு உங்கள் டேஷ்போர்டின் தலைப்புப் பகுதியில் உதவி என்பதை கிளிக்கவும். அல்லது கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்.
ஓரளவு அடிப்படை விஷயங்களை பற்றி மட்டும் இப்பதிவில் தெரியப்படுத்தியுள்ளோம். இவை போதும் என நினைக்கிறோம். மேற்கொண்டு சந்தேகங்கள் எழுந்தால் எமது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
தமிழ் இணைய உலகில் புதிய வலைப்பதிவராக அடியெடுத்து வைத்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்கள் புதிய தமிழ் வலைப் பதிவுக்கு எமது வாழ்த்துக்கள்.
அன்புடன்
மஸ்தூக்கா