திருக் குர்ஆன்-சில தேன் துளிகள்
A.முஹம்மது இப்ராஹீம் பிகாம்
மதிப்புரை
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும். ஸலவாத்தும், ஸலாமும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் உற்றார் உறவினர், உற்ற தோழர்கள் மற்றும் நன்னெறி நடந்த நல்லோர் அனைவர் மீதும் உலகம் உள்ளளவும் உண்டாகட்டும். பொதுவாக அறிஞர்கள் எழுதும் நூலுக்கு அவர்களை விடப் பேரறிஞர்கள் தான் மதிப்புரை எழுதுவது மரபு. அதுவே முறையும் கூட. விதி முறை எதுவானாலும் அதற்குச் சில விதி விலக்கு இருப்பதுபோல், இங்கே ஒரு பேரறிஞர் எழுதிய நூலுக்கு, ஒரு சாதாரணமானவன் மதிப்புரை எழுதப் பணிக்கப் பட்டுள்ளேன். இந்நூலாசிரியர் அவர்கள், தாம் தொகுத்து வைத்திருந்த, கருத்துக் கருவூலங்களை நூலாக வெளியிடும் மேலான பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்த போது அவர்களின் இதய சிம்மாசனத்தில் எமக்கொரு இடம் அளித்து இருக்க வைத்ததை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன். எங்கள் ஊரின் 'நடமாடும் பல்கலைக் கழகம்' என்று பலராலும் வர்ணிக்கப்படும் பெருந்தகை எழுதிய 'திருக் குர்ஆன் சில தேன் துளிகள்' என்னும் இந் நந்நூல் அளவிற் சிறிதானாலும் திருக்குர்ஆன் பற்றிய கருத்துக்களின் கலைக் களஞ்சியம் என்று சொல்வது மிகையாகாது. தேன் துளிகளைச் சுவைத்துப் பாருங்கள். தெவிட்டாத பேரின்பம் பெருவீர்கள். இந் நூலாசிரியர், இது போன்று இன்னும் பல நூல்கள் எழுதவும், இவர்களின் சீரிய முயற்சிகளை எல்லாம் வல்ல இறைவன் அங்கீகரிக்கவும் பிரார்த்திக்கிறேன். அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்......... (திருமறை குர்ஆனின் முதல் வசனமும் இதுவே) ---------------------------------------- இன்றைக்கு சுமார் 3300 ஆண்டுகளுக்கு முன்பு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தவ்ராத் வேதம் ஹீப்ரு மொழியில் அருளப்பட்டது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸபூர் வேதம் யூனானி மொழியில் அருளப்பட்டது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இன்ஜீல் வேதம் சுரியானி மொழியில் அருளப்பட்டது. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கு திருமறை குர்ஆன் அரபி மொழியில் அருளப்பட்டது.
குர்ஆன் என்னும் அரபிச் சொல்லுக்கு, ஓதப்பட்டது, ஓதக்கூடியது, ஓதவேண்டியது, எனப் பொருள்களுண்டு. வானவர் தலைவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் 'ஓதப்பட்டது'. உலகின் அதிகமான மக்களால் 'ஓதக் கூடியது'. மனித குல மேன்மைக்காக 'ஓத வேண்டியது'.
-----------------------------
திருக் குர்ஆன் மக்காவில் 13 ஆண்டுகளும், மதீனாவில் 10 ஆண்டுகளும், ஆக 23 ஆண்டுகளில், கொஞ்;சம் கொஞ்சமாக, காலத்திற்கும், சூழ் நிலைக்கும் ஏற்றவாறு 486 தடவைகளில் அருளப்பட்டது.
-------------------------------
திருக் குர்ஆன் வசனங்கள் ஒவ்வொரு முறை இறங்கும் போதும், அவற்றை எழுதிப் பாதுகாக்க ஏற்பாடு செய்;யப் பட்ட எழுத்தாளர்களில், அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி), ஆகிய 10 பேர் குறிப்பிடத் தக்கவர்கள் திருக் குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டபோது, உடனுக்குடன் பேரீச்ச மரப் பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப் பட்;ட தோல்களிலும், கால் நடைகளின் அகலமான எலும்புகளிலும், எழுதி வைக்கப் பட்டன.
----------------------------
எழுதி வைக்கப் பட்டிருந்த திருக் குர்ஆன் வசனங்கள், அனைத்தையும் ஒன்று திரட்டி, முழுமையான மூலப் பிரதியை உருவாக்கிய பெருமை, உஸ்மான் (ரலி) அவர்களைச் சாரும். உஸ்மான் (ரலி) உருவாக்;கிய முழுமையான மூலப் பிரதிகளில் ஒன்று, துருக்கியின் இஸ்தான்புல் நகர அருங்காட்சி யகத்திலும், மற்றொன்று ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகர அருங்காட்சி யகத்திலும் இன்றளவும் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.
உஸ்மான் (ரலி) அவர்கள் உருவாக்கிய இந்த மூலப் பிரதிகளின் அடிப்படையில் தான், இன்றளவும் உலகம் முழுவதும் திருக் குர்ஆன் பிரதிகள் அச்சிடப் படுகின்றன.
--------------------------
உலகில் மிக அதிகமான அளவில், பல இலட்;சக் கணக்கானோர், மூல மொழியாகிய அரபி மொழி யிலேயே முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருக் கின்றனர். வேதங்களில் திருக் குர்ஆனுக்கு மட்டுமே இத் தனிச் சிறப்பு உண்டு.
-----------------------------
அருளப்பட்டு 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும், இன்;று வரை ஒரு எழுத்தோ, புள்ளியோ, மாற்றப் படாமல், பாதுகாக்கப்பட்டு வரும் வேதம் திருக் குர்ஆன் மட்டுமே. ஏனெனில் இதனைப் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டான். நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்;தை (உம் மீது) இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (திருக் குர்ஆன் 15;:9) ----------------------------
திரு மறை குர்ஆனில், இவ் வேதத்தின் பெயர் 'குர்ஆன்' என்று 15 இடங்களிலும், 'அல் குர்ஆன்' என்;று 50 இடங்களிலும், குறிப்பிடப் பட்டுள்ளது. இது போக இன்னும் பல் வேறு சிறப்புப் பெயர்களில் இவ் வேதம் அழைக்கப் படுகிறது. அவற்றின் விபரமும், பொருளும், இடம் பெற்றுள்ள வசனங்களும்-
1. அல் கிதாப் ¬-திரு வேதம்(2:)
2. அல் பயான் -தெளிவான விளக்கம்(3:138)
3. அல் புர்ஹான் -உறுதியான அத்தாட்சி(4:174)
4. அத் திக்ரு -ஞானம் நிறைந்தது, நினைவூட்டுவது(3:58)5. அல் ஃபுர்கான் -நன்மை தீமைகளை பிரித்தறிவிப்பது (2:185)6. அந் நூர் -பேரொளி (4:174)
7. அல் ஹக்கு -மெய்யானது(2:91)
8. அல் கரீம் -கண்ணியமானது(56:77)
9. அல் முபீன் -தெளிவானது(5:17)
10. அல் ஹகீம் -ஞானம் மிக்கது(36:2)
11. அல்அஜீஸ்-சங்கையானது, வல்லமையுடையது(41:41)
12. அல் ஹுதா -நேர்வழிகாட்டி(3:138)
13. அர் ரஹ்மத் -அருள்(6:157)
14. அஷ் ஷிஃபா -அருமருந்து(10:57)
15. அல் மவ்இளத் -நற்போதனை(3:138)
16. அல் ஹிக்மத் -ஞானம் நிறைந்தது(2:151)
17. அல் முஹைமின் -பாதுகாப்பது(5:48)
18. அல் கய்யிம் -உறுதியானது,நிலை பெற்றது(2:151)
19. அந் நிஃமத் -அருட் கொடை(93:11)
20. அர் ரூஹ் -ஆன்மா(42:52)
21. அத் தன்ஸீல் -இறக்கியருளப் பெற்றது(20:4)
22. அல் ஹுக்மு -சட்ட திட்டங்கள்(13:37)
23. அல் முபாரக் -நல்லாசிகள்(6:92)
24. அல்முஸத்திக்-முன்வேதங்களை மெய்ப்பிப்பது(6:92)
25. அல் பஷீர் -நன் மாராயங் கூறுவது(41:4)
26. அந் நதீர் -அச்சமூட்டி எச்சரிப்பது(41:4)
27. அல் முதஹ்ஹர் -பரிசுத்தமானது(80:14)
28. அல் முகர்ரமா -சங்கையானது(80:13)
29. அல் மஜீத் -கண்ணியம் மிக்கது(50:1)
30. அல் அரபிய்யு -அரபி மொழியிலுள்ளது(12:2)
31. அல் மர்ஃபூஆ -உயர்வானது(80:14)
32. அல் அஜப் -ஆச்சரியமானது(72:1)
33. அல் பஸாயிர் -அறிவொளி(7:203)
34. அத் திக்ரா -நல்லுபதேசம்(7:2)
35. ஹப்லுல்லாஹ் -அல்லாஹ்வின் கயிறு(3:103)
-------------------------------------
திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் 'லைலத்துல் கத்ர்' என்னும் புனித இரவில் தான் முதன் முதல் இறங்கத் தொடங்கியது. நிச்சயமாக நாம் அதை(குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர் என்ற) இரவில் இறக்கினோம்.(97:1)
-----------------------------------
திருக் குர்ஆனில் முதன் முதல் அருளப்பட்;ட வசனங்கள் 96 ஆம் அத்தியாயத்தின் முதல் 5 வசனங்களாகும்.முதல் வசனம் இப்படித் தொடங்குகிறது.'(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக' (96:1)
----------------------------
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது, அரபாத் பெரு வெளியில், துல் ஹஜ் 9 ஆம் நாள் சட்டங்கள் பற்றிய இறுதி வசனம் இறங்கியது. இத்துடன் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டது. அந்த இறுதி வசனம் இதோ!
....இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்;கள் மீது என் அருட் கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன். (5:3)
--------------------------------
திருக் குர்ஆனில் 103,108,110 ஆகிய மூன்று அத்தியாயங்கள் மூன்று வசனங்களை மட்டுமே கொண்டவை. அல் பகரா என்னும் இரண்டாவது அத்தியாயம் தான் மிகப் பெரியது. இவ் வத்தியாயத்தில் 286 வசனங்கள் உள்ளன.
--------------------------------
இரண்டாவது அத்தியாயத்தின் 282 ஆவது வசனம் தான் குர்ஆனிலேயே மிக நீண்ட வசனம் ஆகும். இந்த ஒரு வசனம் மட்டுமே ஒரு பக்கம் வரும். கடன் கொடுக்கல் வாங்கலின் போது எழுதி வைத்;துக் கொள்வதைப் பற்றி இவ்வசனத்தில் அறிவுறுத்தப் படுகிறது.
------------------------------
அல் ஃபத்ஹு(வெற்றி) என்னும் 48 ஆவது அத்தியாயத்தின் இறுதி வசனம், 'முஹம்மத் ரசூலுல்லாஹ்' எனத் தொடங்குகிறது. இந்த வசனத்தில் அரபி மொழியின் 28 எழுத்துக்களும் இடம் பெற்றுள்ளன. திருக் குர்ஆனின் மொத்த வசனங்கள் 6666. முழுக் குர்ஆனும் 114 அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இவற்றில் மக்காவில் அருளப்ப பட்டவை 86 அத்தியாயங்கள், மதீனாவில் அருளப்பட்டவை 28 அத்தியாயங்கள்.
-----------------------------------
திருக் குர்ஆனை மாதம் ஒரு முறை ஓதி முடிக்;க வசதியாக 30 சம பாகங்களாகவும், வாரம் ஒரு முறை ஓதி முடிக்க வசதியாக 7 மன்ஸில்களாகவும் மார்க்க அறிஞர்கள் பிரித்து வைத்துள்ளனர்.
----------------------------------
மதீனாவின் திருக் குர்ஆன் பதிப்பகத்தில் அச்சிடப்படும் அனைத்து வகை திருக் குர்ஆன் பதிப்புகளிலும், ஒவ்வொரு பக்கத்தின் இறுதி வரியில் வசனம் சிதைவு படாமல் மிகச் சரியாக நிறைவு பெறும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
-------------------------------
திருக் குர்ஆனின் மூலப் பிரதிகளிலோ, அரபி மொழியிலோ, ஜபர், ஜேர், பேஷ் போன்ற உயிர் மெய்;க் குறியீடுகள் இருக்க வில்லை. அப்துல் மலிக் பின் மர்வான் உடைய ஆட்சியில், ஹஜ்ஜாஜ் பின் யூசூப் என்ற அதிகாரியின் மேற் பார்வையில் அரபி மொழியில் உயிர் மெய்க் குறியீடுகள் உருவாக்கப் பட்டன. உலக மக்கள் அனைவரும் திருக் குர்ஆனை பிழையின்றி எளிதாக வாசிக்க இந்த எழுத்துச் சீர்;த் திருத்தம் உதவியாக அமைந்தது.
-------------------------------
அரபி மொழியின் மிகச் சிறந்த இலக்கிய நடையில் அமைந்துள்ள இத் திருக் குர்ஆனை, இறை வனிடமிருந்து பெற்று இவ்வுலகுக்கு அறிவித்த நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்;கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை. அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின் பற்றுங்கள். நேர் வழி பெறுவீர்கள். (7:158)
-----------------------------
திருக் குர்ஆனில் அல்லாஹ் என்னும் சொல் 2584 தடவை இடம் பெற்றுள்ளது. நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பெயர் 52 இடங்களிலும், நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பெயர் 5 இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.
ஜகாத் குறித்து 19 அத்தியாயங்களில், 30 இடங்களில் வலியுறுத்தப் பட்டுள்ளது. அவற்றில் 28 இடங்களில் தொழுகையுடன் இணைத்தே சொல்லப் படுகிறது.
-------------------------
திருக் குர்ஆனில் கீழ்க் காணும் எதிர் மறையான சொற்கள் சம அளவில் இடம் பெற்றுள்ளன.
துன்யா(இம்மை) 115 ஆகிரத்(மறுமை) 115
மவ்த்(இறப்பு) 145 ஹயாத்(வாழ்வு) 145
நஃப்வு(பயன்) 50 ஃபஸாத்(இடர்) 50
ஹர்கு(வெப்பம்) 4 பர்த்(குளிர்) 4
ஸாலிஹாத்(நல்லவை)167 ஸய்யிஆத்(தீயவை) 167
குஃப்ர்(இறை மறுப்பு) 25 ஈமான்(இறை நம்பிக்கை25
ஷைத்தான் 88 மலாயிகா 88
----------------------------------
இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை என்றாலும், முஸ்லிம்களுக்கிடையே தங்கள் வணக்க வழிபாடு களின் செயல் முறைகளில் சில பிரிவுகள் இருப்பதை மறுப்பதற் கில்லை. அப்படிப்பட்ட பிரிவினர் எவருமே குர்ஆனுடைய விஷயத்தில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்;லை என்பது மிக முக்கியம்.
--------------------------
உலகில் 22 நாடுகளின் தேசிய மொழி அரபி எனினும்;, ஒவ்வொரு நாட்டினரின் பேச்சு வழக்கும், உச்சரிப்பும் வித்தியாசப்படும். ஆனாலும், உலகெங்கும் வாழும் அரபியர், மற்றும் அரபியர் அல்லாதோர் அனைவரும் அரபியில் குர்ஆனை ஓதும் முறையும் உச்சரிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்.
------------------------------------------
மனித சமுதாயத்தை நேர் வழிப் படுத்த ஏராளமான இறைத் தூதர்கள் இவ்வுலகில் அவதரித்தனர் என்றாலும் அவர்களில் 25 இறைத் தூதர்களிக் பெயர்கள் மட்டுமே திருக் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. 1. ஆதம் அலைஹிஸ்ஸலாம்2. நூஹ் அலைஹிஸ்ஸலாம் 3. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்4. இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்5. இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம்;6. இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் 7. இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் 8. அய்யூப் அலைஹிஸ்ஸலாம் 9. அல்யஸஃ அiஹிஸ்ஸலாம் 10 யூசூஃப் அலைஹிஸ்ஸலாம் 11. யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்12. தாவூத் அலைஹிஸ்ஸலாம் 13. சுலைமான் அலைஹிஸ்ஸலாம்14. மூஸா அலைஹிஸ்ஸலாம்15. ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்16 யஹ்யா அலைஹிஸ்ஸலாம்17. ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம்18 யஃகூப் அலைஹிஸ்ஸலாம் 19. லூத் அலைஹிஸ்ஸலாம்20. ஹுத் அலைஹிஸ்ஸலாம்21. ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம்22. ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்23. துல் கிப்ல்அலைஹிஸ்ஸலாம்24. ஈஸாஅலைஹிஸ்ஸலாம்25. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாம் அனுப்பிய இறைத்) தூதர் உண்டு(10:47) என்று அறிவிக்கும் அல்லாஹ்வின் திருமறை, அனைத்து மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப் பட்டதாகவும் அறிவிக்கிறது.
ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பி வைத்தோம். திருக்குர்ஆன்(14:4) அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அகில உலகத்துக்கும் அருட் கொடையாக அனுப்பப் பட்டவர்கள்(21:107) என்று கூறும் அல்லாஹ்வின் திருமறை, இது உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்ட வேதம் எனவும் அறிவிக்கிறது. உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ் வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்(திருக் குர்ஆன் 25:1)
---------------------
கணிசமான மக்களால் பேசப்படும், உலகின் பெரும்பாலான மொழிகளில் திருக்குர்ஆன் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மதீனா நகரில் அமைந்துள்ள மன்னர் ஃபஹத் திருக் குர்ஆன் பதிப்பக வளாகம், இந்திய மொழிகளில் தமிழ், மலையாளம், இந்தி, உருது உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் திருக் குர்ஆன் மொழியாக்கத்தைப் பிரசுரித்து ஆண்டு தோறும் புனித ஹஜ்ஜுக்கு வருகின்ற அந்தந்த மொழி பேசும் மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
--------------------------
இத் திருக் குர்ஆன் பதிப்பக வளாகத்தில், திருக் குர்ஆன் பிரதிகள் அச்சிடுவது தவிற, ஒலி ஒளி நாடாக்கள்,மற்றும் குறுந்தகடுகள் (சிடி) ஆகிவற்றில் பதிவு செய்யும் பணியும் நடைபெறுகிறது. இவ்வளாகத்தில் பணி புரியும் பல் வேறு நாடுகளைச் சேர்ந்த பெரும் பாலான ஊழியர்கள் ஹாஃபிஸ்கள் அதாவது முழுக் குர்ஆனையும் மனனம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பல் வேறு அளவுகளிலும், வடிவங்களிலும் திருக் குர்ஆன் பிரதிகளை பதிப்பிக்கும் இத் திருக்குர்ஆன் பதிப்பக வளாகம், கண் பார்வையற்றவர்கள் தங்;கள் விரல்களால் தடவிப் படிக்கும் பிரெய்லி முறையிலும் திருக் குர்ஆன் பிரதிகளை வெளியிட்டுள்ளது. DAEWOO என்னும் கொரிய நிறுவனம் தயாரித்து இஸ்லாமிய நாடுகளில் விற்பனையாகும் தொலைக் காட்சிப் பெட்டிகளை இயக்கியதும் முதலில் திரு மறை குர்ஆனின் முதல் அத்தியாயம் 'சூரத்துல் ஃபாத்திஹா' சின்னத் திரையில் சில நொடிகள் பளிச் செனத் தோன்றும். இத் தயாரிப்பு முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
-------------------------------
திருக் குர்ஆனின் புகழ் பெற்ற ஆங்கில மொழி பெயர்ப்பு THE MEANING OF THE QURAN என்ற பெயரில் வெளிவந்தது. மொழி பெயர்த்தவர் 'மார்மடியூக் பிக்தால்' என்னும் இங்கிலாந்நு அறிஞர். இவர் கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர் என்பதும், இவரது தந்தை 'சார்லஸ் ஜி. பிக்தால்' என்பவர் ஒரு புகழ் பெற்ற கிறிஸ்தவப் பாதிரியார் என்பதும் ஆச்சரியப் படவைக்கும் உண்மைகளாகும்.
----------------------
திருக் குர்ஆனுக்கு தமிழ் மொழியில் பல மொழி பெயர்ப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன என்றாலும், முதல் முழுமையான தமிழ் மொழிபெயர்ப்பு 'தர்ஜுமத்;துல் குர்ஆன்' என்ற பெயரில் வெளி வந்தது. மொழி பெயர்த்தவர் ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி என்னும் பெருமேதை. இவர்கள் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ அப்துஸ்ஸமது சாஹிப் அவர்களின் தந்தையாவார்.
---------------------------
ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் 'தர்ஜுமத்துல் குர்ஆன்' என்னும் தமிழ் மொழி பெயர்ப்பில், திருமறை வசனங்களின் நேரடித் தமிழ் மொழி பெயர்ப்பும், அடைப்புக் குறிக்குள் அதற்கான விளக்கமும் இடம் பெற்றுள்ளது. அடைப்புக் குறிக்குள் இடம் பெற்றுள்ள விளக்கத்தைச் சேர்த்துப் படித்தாலும், விட்டு விட்டு நேரடி மொழி பெயர்ப்பை மட்டும் படித்தாலும் வாக்கியங்களும், வார்த்தைகளும் சிதைவு படாமல் முழுமையாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் கவனமாக எழுத்துக்கள் உட்படச் சரியாகக் கையாளப் பட்டுள்ளன. இப்படி ஒரு சிறந்த மொழி நடையில் தமிழ் மொழியின் வரலாற்றில் வேறு எந்த மொழி பெயர்ப்பும் வெளி வந்ததில்லை எனக் கூறலாம்.
---------------------------
தமிழிலும் பிற மொழிகளிலும் வெளிவந்த, திருக் குர்ஆனின் அனைத்து மொழி பெயர்ப்புகளும் மூல மொழியாகிய அரபியுடன் இணைத்தே வெளியிடப் பட்டுள்ளன. ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் மொழி பெயர்ப்பு ஒரு முறை தமிழ் மொழியில் மட்;டும் வெளியிடப் பட்டது. 'அரபி மொழியுடன் சேர்த்தே வெளியிடுவது தான் குர்ஆனை சங்கைப் படுத்தும்' என பல்வேறு அறிஞர்கள் கேட்டுக் கொண்டதற் கிணங்க, தமிழில் மட்டும் வெளி வந்த அந்தப் பதிப்பு, ஒரே பதிப்புடன் நிறுத்தப் பட்டது.
-----------------------------
தின மணி நாளிதழில், தினந்தோறும் திரு மறை குர்ஆனின் வேத வரிகளை முன் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு இறை வேத வரிகள் எல்;லா மக்களையும் சென்றடையும் ஒரு வித்தியாசமான மார்க்கச் சேவையைச் செய்தது, சென்னை இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்.
---------------------------
திருக் குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை, மிக மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு பரவலாக தமிழ் கூறு நல்லுலகில் பரவச் செய்த பெருமை ஜான் ட்ரஸ்ட் நிறுவனத்தைச் சேரும். தொடர்ந்து வருடந் தோறும் பல்லாயிரம் பிரதிகள் பதிப்பித்த அந்நிறுவனத்;தின் சாதனையே இதற்குச் சான்றாகும்.
--------------------------
தமிழில் வெளிவந்த திருக் குர்ஆனின் மொழி பெயர்ப்புக்கள் அனைத்துமே அரபி மொழி நடையின் படி வலமிருந்து இடமாகத் தான் பக்கங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். தற்காலத்தில் உள்ள திருக் குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் சில, தமிழ் மொழி நடையின் படி இடமிருந்து வலமாக பக்கங்கள் வரிசைப் பட்டுள்ளன.
--------------------------
தானும் ஒரு நபியெனத் தன்னைப் பிரகடனப் படுத்;திக் கொண்ட முஸைலமாவுக்கு எதிராக அபூபக்கர் (ரலி) அவர்ளின் ஆட்சிக்காலத்தில் ஹிஜ்ரி 12 ஆம் ஆண்டு 'யமாமா' என்னுமிடத்தில் நடை பெற்ற போரில் திருக் குர்ஆனை மனனம் செய்திருந்த 70 நபித் தோழர்கள் கொல்லப் பட்டார்கள்.
----------------------------
திருக் குர்ஆனில் சட்ட திட்டங்கள் காலத்திற்கும், சூழ் நிலைக்கும் தக்கவாறு படிப்படியாக அருளப்பட்டன. உதாரணமாக மது விலக்குக் கொள்கை மூன்று கட்டங்களாக அமுல் படுத்தப் பட்டிருக்கிறது.முதற் கட்டம்: (நபியே!) மது பானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் 'அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம், அவ்விரண்டிலும் உள்ள பலனை விடப் பெரிது.....(2:219) இரண்டாம் கட்டம்:நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்துக் கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்....(4:43)
இறுதிக் கட்டம்: ஈமான் கொண்டோரே! மது பானமும், சூதாட்டமும், கற் சிலைகளை வழி படுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அறுவறுக்கத் தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றி யடைவீர்கள்.(5:90)
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மது பானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி, அல்லாஹ்வின் நனைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களை தடுத்து விடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (5:91)
---------------------------
இறை நிராகரிப்பாளர்களுக்கு (காஃபிர்களுக்கு) உதாரணமாக, நூஹ் நபியுடைய மனைவி, லூத் நபியுடயை மனைவி ஆகிய இரு பெண்களைக் குறிப்பிடும் அல் குர்ஆன்(66:10)
இறை நம்பிக்கையாளர்களுக்கு (மூமின்களுக்கு) முன்னுதாரணமாக ஃபிர்அவ்னுடைய மனைவியையும், இம்ரானின் புதல்வியாகிய மர்யமையும் (66:11,12) குறிப்பிடுகிறது.
-----------------------------
திருக் குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே நபித் தோழர் ஜைத் (ரலி) அவர்கள் மட்டுமே. வேறு எந்த நபித் தோழரின் பெயரும் குர்ஆனில் குறிப்பிடப் படவில்லை.
-------------------------------
தமிழில் 'தேருவருதே' என்பதையும், ஆங்கிலத்;தில் MALAYALAM என்று எழுதியும் இடமிருந்து வலமாகப் படித்தாலும், வலமிருந்து இடமாகப் படித்தாலும் ஒரே மாதிரி வரும். இத போல் திருக் குர்ஆனிலும் இரு சொற்றொடர்கள் இடம் பெற்றுள்ளன. குல்லுன் ஃபீ பலக்(36:40) ரப்பக்க ஃகப்பிர்(74:3) என்னும் இரு சொற்றொடர்களையும் அரபியில் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் படித்தால் ஒரே மாதிரி வரும்.
------------------------------
ஒரு போதும் நடை பெற முடியாத செயலுக்கு 'ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் இது நடக்காது' என்று தமிழில் ஒரு சொற் பிரயோகம் உண்டு. இது திருக் குர்ஆன் கூறும் உதாரணம். எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (7:40)
---------------------------
9 ஆவது மாதம்(செப்டம்பர்) 11 ஆம் நாள் அமெரிக்க மக்களின் மறக்க முடியாத நாள். ஆம் 2001 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் அமெரிக்காவின், 110 அடுக்கு மாடி உலக வர்த்தக மையக் கட்டடம் அடியோடு தரை மட்டமாகி தவிடு பொடியானது. 'செய்தது யார்?' என்பது இது வரை ஆதாரத்துடன் நிரூபிக்கப்ட வில்லை. பல்லாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொண்ட இச் சம்பவம் அமெரிக்க மக்களின் நெஞ்சங்களில் ஆறாத ரணமாக இருந்துக் கொண்டே இருக்கும். 9 ஆவது மாதம், 11 ஆம் நாள், 110 அடுக்கு மாடிக் கட்டடம் இம் மூன்றையும் நினைவில் நிறுத்தி- திருக் குர்ஆனின் 9 ஆவது அத்தியாயம், 11 ஆம் பாகம், 110 ஆவது வசனத்தைப் புரட்டுங்கள். ஆச்சரியத்தில் உங்கள் கண்கள் அகல விரியும். அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது) அவர்கள் உள்ளங்களில் ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும் வரை(அதாவது மரணிக்கும் வரை) அல்லாஹ் நன்கறிந்தவன். ஞானம் மிக்கவன் (9:110)
------------------------------
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்;தை ஆட்சி செய்த கொடுங்கோலன் பிர்அவ்னுக்கு எதிராக, இறைத் தூதர் நபி மூஸா அலைஹிஸ்ஸலம் அவர்கள் கிளர்த் தெழுந்தார்கள். இறுதியில் ஃபிர்அவனும் அவனது படையினரும் கடலில் மூழ்கடிக்கப் பட்டனர். இது குறித்து இறை மறை குர்ஆனில் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்(10:92) என்று அல்லாஹ் கூறுகிறான். சென்ற நூற்றாண்டில் அந்த உடல் கண்டெடுக்கப் பட்டு இது 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஃபிர்அவ்னின் உடல் தான் என ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப் பட்டு இப்போது எகிப்து அருங்காட்சி யகத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது. குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இது ஒரு சான்று.
--------------------------------
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களைப் பின் பற்றியோரும் இறை ஆணைப்படி ஏறிக் கொண்ட கப்பல் மாபெரும் வெள்ளப் பிரளயத்துக்குப்பின் இறுதியில் ஜுதி மலையில் தரை ஒதுங்கியதாகக் குர்ஆன் கூறுகிறது(11:44) துருக்கியின் எல்லையில் அமைந்துள்ள இந்த மலையின் உச்சியில் பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டன. மரக்கலம் மலை உச்சிக்கு போனது எப்படி? என்று தொல்லியல் நிபுனர்கள் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்க, திரு மறை குர்ஆன் தெளிவான விடையை முன் வைக்கிறது. நிச்சயமாக நாம் (வருங் காலத்திற்கு இ(ம்மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத் தோம். (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:15) சம்பவம் நடை பெற்று பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து விட்ட பின்னர், இப்போது மிகச் சமீபத்தில் தான் இவை கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இத்துனை காலம் இது எப்படி மனிதக் கண்களுக்கு புலப்படாமல் போனது? புராதனப் பொருட்கள் எவ்வளவு பழமையானவை? என்பதை மனிதன் ஆராய்ச்சியின் மூலம் கண்டறியும் அறிவைப் பெறுகின்றவரை இறைவன் இதனைப் பாதுகாத்து வைத்துள்ளான் என்பதை உணர முடிகிறது. 'விட்டு வைத்தோம்;' என்னும் இறைவேத வரிகள் இதற்கு மேலும் வலு சேர்க்கிறது.
----------------------------------
விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞான வேதம்
வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள்,மனிதனின் தோலில் தான் உள்ளன, என்பது மிகச் சமீபத்;திய விஞ்ஞானக் கண்டு பிடிப்பு. ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த விஞ்ஞான உண்மையைக் குர்ஆன் கூறுகிறது. நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம், அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றுவோம். (4:56)
------------------------------
ஆகாய விமானத்தில் பயணம் செய்யும் போது, இதயம் சுருங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அன்றே சொன்னது அல் குர்ஆன். யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படி செய்கிறான். (6:125) -----------------------------
நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்துக் கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காண வில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள் (21:44) என்று திருக் குர்ஆன் குறிப்பிடுவதை, இன்றைய புவியியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்தி வருகின்றனர். இன்றைக்கு பூம்புகார் எனப்படும் முன்னாள் காவிரிப் பூம்பட்டிணத்தின் பெரும் பகுதி, கடல் ஊடுருவி நிலப் பகுதி குறைந்து விட்டதாக ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர். இவ்விதம் பல் வேறு நாடுகளில், கடற்கரையோரங்களில் பூமி குறைந்துள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தீவு இந்தியாவின் தென் பகுதியுடன் முற் காலத்தில் இணைந்திருந்து, காலப் போக்கில் கடல் நீர் உட்புகுந்து இரண்டு நாடுகளாகப் பிரிந்திருக்கக் கூடும், என்று, இரு நாட்டு மக்களின் மொழியும், கலாச்சாரமும், உருவ ஒற்றுமையும் ஒரு போல் இருப்பதை ஆராய்ந்த புவியியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
---------------------------
இரண்டு கடல்கள் ஒன்று சேரும் இடங்களில் இரு கடல்களின் நீரும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை, என்று கடல் ஆய்வாளர்கள் கண்டறிந்ததை அப்போதே திருக் குர்ஆன் அறிவித்து விட்டது. அவனே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது. அதை அவை மீற மாட்டா.(55:19,20)
----------------------------
தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி தனது கூட்டில் கொண்டு போய் சேமித்து வைக்கின்றன என்ற தான் பொதுவாகப் பலரும் நம்புகின்றனர். ஆனால் தேனீக்கள் மலர்களிலிருந்து உறிஞ்சும் குளுக்கோஸ் தேனீக்களின் வயிற்றினுள் சென்று மாற்றமடைந்து அதன் வயிற்றிலிருந்து வெளிவரும், கழிவு தான் தேன் என்று விஞ்ஞானம் இப்போது கண்டறிந்துள்ளது. ஆனால் அப்போதே திருக் குர்ஆன் இதைத் தெளிவு படுத்திவிட்டது. ....அதன் வயிற்றிலிருந்து பல வித நிறங்களையுடைய ஒரு பானம்(தேன்) வெளியாகிறது. அதில் மக்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு. (16:69) இரத்தம் தான் பாலாக மாறுவதாக நம்பப்பட்டு வந்த கருத்தை இந்த நூற்றாண்டில் விஞ்ஞானம் மறுக்கிறது. உண்ணப்பட்ட உணவு குடலுக்குச் சென்று கூழாக அரைக்கப் பட்டு இரத்தம் உற்பத்தியாவதற்கு முன்பே பால் உற்பத்தியாவதை விஞ்ஞானம் இப்போது கண்டறிந்துள்ளது. விஞ்ஞானத்தின்;;;; முன்னோடியான மெஞ்ஞான வேதம் சுற்றி வளைக்காமல் நேரடியாகத் தெளிவாகவே சொல்கிறது. நிச்சயமாக உங்களுக்கு, கால் நடைகளிலும்(தக்க) படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக புகட்டுகிறோம்.(16:66)
---------------------------------------
">Link
0 comments:
Post a Comment