Sep 11, 2006

மூடப் பழக்கங்கள் 4

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்
பாகம் 4

இறந்தவர் வீட்டில் எத்தனை பாத்திஹாக்கள்!

குடும்பத்தில் எவரேனும் இறந்து விட்டால், மறுநாளிலிருந்து தொடங்கி விடும் பாத்திஹாக்களின் அணிவகுப்பு. 3, 5, 7, 10, 15, 20, இப்படியே 40 ஆம் நாள் தடபுடலாகப் பெரிய பாத்திஹா. பிறகு 6 மாதம், 1 வருடம். பின்னர் வருடந்தோறும்.பாத்திஹாக்கள் ஓதி ஓதியே, இருக்கின்ற பணத்தையெல்லாம் இழந்து கடனாளி ஆனவர் பலர். கையில் பணம் இல்லாவிட்டால் கடன் வாங்கியும், கடன் கிடைக்காவிட்டால் வட்டிக்கு வாங்கியும், பாத்திஹா ஓதும் முட்டாள்களை என்னவென்பது? இதனால் இம்மையிலும் நஷ்டம். மறுமையிலும் ஒரு பயனும் இல்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நமது அனுமதி இல்லாத எரு காரியத்தை எவரேனும் செய்தால், அது ரத்து செய்யப்படும்.(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம். : புகாரி)இந்த பாத்திஹாக்களின் மூலம் எத்தனையோ ஏழைகளுக்கு வயிறார உணவு கிடைக்கின்றதே, என்றும் இது நன்மை தானே என்றும் சிலர் கூறலாம், பசித்தவர்களுக்கு உணவளிப்பதில் புண்ணியம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை பாத்திஹா ஓதி தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை.பாத்திஹா ஓதி விருந்தளிப்பவர்கள் பெரும்பாலும் வசதி படைத்த உறவினர்களைத் தான் அழைக்கின்றனரே தவிர, பசியால் வாடும் ஏழைகளை மனமுவந்து அழைப்பதில்லை. விருந்து சமயத்தில் வரும் ஒரு சில ஏழைகளுக்கு-வேண்டா வெறுப்பாக- அதுவும் மிச்சம் மீதி இருந்தால் மட்டுமே கொடுக்கப்படுகின்றது. எனவே ஏழைக்கு உணவளிக்க பாத்திஹா ஓதுவதாகக் கூறுவது சுத்தப் பொய்.பெற்றோர்கள் இறந்து விட்டால் ஓரிரு நாட்கள் மட்டும் நினைவு நாள் கொண்டாடி பாத்திஹா ஓதுவதில் அர்த்தமில்லை. தினமும் அவர்களுக்காக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.ஒவ்வொரு தொழுகையிலும், தமது பெற்றோர் மண்ணறை வேதனையிலிருந்து காப்பாற்றப் படவும், மறுமையில் நற்பேற்றை அடையவும், இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். இஸ்லாம் கூறும் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தச் செலவும் இல்லை.

இறந்தவர்களுக்குக் குர்ஆன் ஓதுதல்

திரு மறை குர்ஆன் இறக்கப்பட்ட காரணங்களை இறைவனே திரு மறையின் பல்வேறு வசனங்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.இந்த வேதம் பயபக்தி உடையோருக்கு நேர்வழி காட்டியாகும். (2:2) இது அகிலத்தாருக் கெல்லாம் உபதேசமாகும்.(81:27) அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன் மாராயமாகவும் இருக்கின்றது.(46:12)ஆனால் இதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் இறந்தவர்களுக்கு ஓதி ஹதியாச் செய்வதற்கு இறக்கப்பட்டதாகச் சிலர் ஒதுக்கி வைத்து விட்டனர்.திரு மறையின் ஓர் இடத்தில் கூட, இது இறந்தவர்களுக்கு ஓதுவதற்கு அருளப்பட்டதாகக் கூறப்படவில்;லை. அண்ணல் நபி (ஸல்) அவர்களும் இறந்தவர்களுக்கு ஓதி ஹதியாச் செய்யும்படிக் கூறவில்லை.மார்கத்தின் எந்த ஒரு செயலும், அல்லாஹ் திருமறையில் அறிவித்ததாகவோ, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவோ இருக்க வேண்டும். நாமாக நம் விருப்பப்படி எதையும் முடிவு செய்யக் கூடாது.குர்ஆன் ஓதுவது நன்மை தான். அதில் சந்தேகமேயில்லை.ஆனால் இறந்தவர்களுக்கு ஓத - அதுவும் கூலிக்கு ஆள் பிடித்து ஓத மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றதா? என்றால், இல்லை.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிகவும் அன்புடன் நேசித்த அவர்களின் மனைவி கதீஜா (ரலி) உட்பட ஏராளமானோர், நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே மரணித்துள்ளனர். அவர்களில் யாருக்கேனும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதி ஹதியாச் செய்ததாக எந்த ஹதீஸிலும் காணப்பட வில்லை.நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் எந்த ஒரு நபித் தோழரும் அவர்களுக்காக குர்ஆன் ஓதியதாக ஆதாரம் இல்லை.நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒரு காரியத்தை எவரேனும் செய்தால் அது ரத்து செய்யப்படும். என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி)

சுப்ஹான மவ்லிது

ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால், 12 நாட்களும் பள்ளிகள் தோறும் பக்திப் பரவசத்துடன் மவ்லிது ஓதப் படுகின்றது. பணக்காரர்கள் சிலர் பரக்கத்துக்காகத் தமது வீடுகளிலும் இந்த மவ்லிதை ஓதி விருந்து படைக்கின்றனர்.தமது வயிற்றுப் பிழைப்புக்காக, சில கூலிப் பட்டாளங்கள் உருவாக்கிய இப்பழக்கம், இறைவனாலோ இறைத்தூதர் (ஸல்) அவர்களாலோ, அங்கீகரிக்கப் பட்தல்ல. இந்த மவ்லிதை நிராகரிப்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டுமே போதும்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புகழ் பாடுவதாகச் சொல்பவர்களுக்கு, அந்த மவ்லிதின் அர்த்தம் தெரியாது. பொருள் தெரியாமல் இவர்கள் எப்படி புகழ் பாடுகிறார்கள்?பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ் பாடுவது நன்மை தானே என்று சொல்பவர்களிடம், பணம் கொடுக்காமல் ஒவ்வொருவர் வீட்டிலும் வந்து புகழ் பாடிவிட்டுச் செல்லுங்கள் என்று சொல்லிப் பாருங்கள் காணாமல் போய் விடுவார்கள்.வசதியுள்ள வீட்டுக்கு விடி மவ்லிது. ஏழை வீட்டுக்கு நடை மவ்லிது. என்று தரம் பிரித்து தட்சணைக்குத் தகுந்தபடி வேகமும் ராகமும் வித்தியாசப் படும்.இன்னும் இது போன்ற ஏகப்பட்ட திரு விளையாடல்களால் கேலிக கூத்தாக்கப்பட்ட இந்த மவ்லிது சமாச்சாரம் இஸ்லாத்திற்கு முரணானது என்பதை உணர வேண்டும்.நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) கஃபு இப்னு சுஹைர் (ரலி) போன்ற நபித் தோழர்கள் கவிதை பாடியிருப்பதாகச் சொல்வார்கள்.ஆம் உண்மை தான்.அண்ணல் நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப் பட்ட அந்தக் கவிதைகளையே எந்த நபித் தோழரும் புனிதம் என்றுக் கருதவில்லை. பள்ளிக்குப் பள்ளி பக்திப் பரவசத்துடன் ஓதிக் கொண்டிருக்கவில்லை. வீடுகளில் ஓதினால் பரக்கத் ஏற்படும் என்று நம்ப வில்லை. ராகம் போட்டு ரபீவுல் அவ்வல் மாதத்தில் வீடு வீடாகப் போய் பாடி, காசு வாங்கவில்லை.தமது செயல்களை நியாயப் படுத்த ஆதாரங்களை அள்ளி வீசுவோர் அவற்றின் மறு கோணத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை.-

முஹ்யித்தீன் மவ்லிது

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் தங்கள் பிழைப்பை படுஜோராக நடத்தியவர்கள், அடுத்த ரபீவுல் ஆகிர் மாதத்திற்கான பிழைப்புக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பகடைக் காயாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.அடுத்தடுத்த மாதத்திற்கான வருமானத்துக்குரிய அவ்லியாக்களின் பட்டியல் இன்னும் தயாராக வில்லை போலும்!கொஞ்சம் கூட உண்மை கலக்காமல்- முழுக்க முழுக்க கற்பனைக் கதைகளால் ஹிகாயத் என்னும் சம்பவங்களை உருவாக்கி அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அப்பட்டமான ஷிர்க்கை எதுகை மோனையுடன் கவிதைகளாகப் புனைந்து, அதற்கு முஹ்யித்தீன் மவ்லிது என்று பெயர் சூட்டி - அல்லாஹ்வை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க கட்டப் பட்ட பள்ளிவாசல்களில் ஓதுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணரவில்லை.அரபியில் இருப்பதால் உங்களுக்கு அர்த்தம் புரிய வில்லை. அதன் பொருளை உணர்ந்தால் துடிதுடித்துப் போவீர்கள். அந்த அளவுக்கு முஹ்யித்தீன் மவ்லிதின் படல்கள் முழுவதும், அண்ணல் நபி (ஸல்) அவர்களை விடவும் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் அதிக சிறப்புக்கு உரியவராகவும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தராகவும் வர்ணிக்கப் படுகிறார்கள்.அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத - ஷிர்க் என்னும் கொடும் பாவத்தை ஏற்படுத்தும் - இந்த முஹ்யித்தீன் மவ்லிது நன்மையைத் தருவதற்குப் பதிலாக நரகப் படு குழியில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள். எச்சிக்கை!நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்.(அல் குர்ஆன் 4: 48) -

புர்தாவின் பெயரால் புருடா

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி. சுப்ஹான மவ்லிதை வைத்துப் பிழைப்பு நடத்துவது போதாதென்று, கூடவே கஸீதத்துல் புர்தா என்னும் கவிதையையும் சேர்த்துக் கொண்டனர்;.எதுகையும் மோனையும் இலக்கிய நயமும் இருக்கிறது என்பதற்காகவும், ராகத்துடன் பாடுவதற்கேற்ற ரம்மியமான பாடல் என்பதற்காகவும், இக்கவிதையை ரசிக்கலாம் என்றால், இக் கவிதையில் நபி (ஸல்) அவ ர்களை வரம்பு மீறிப் புகழப்படுகின்றது.கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல என்னை யாரும் வரம்பு மீறிப் புகழவேண்டாம். என்னை அல்லாஹ்வின் அடியார் என்றும், அவனது தூதர் என்றுமே கூறுங்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புகாரி)என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால்- நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழும் இக்கவிதையை புறக்கனிக்க வேண்டும்.இந்தப் புர்தாவை ஓதுவதால் கஷ்டங்கள் நீங்கும், நோய் நொடிகள் விலகும், நாட்டங்கள் நிறைவேறும், என்று கருதுவதும், இதற்காக வெள்ளிக் கிழமை இரவுகளிலும், விசேஷ நாட்களிலும், புனிதமாகக் கருதி இதை ஓதுவதும், மார்க்கத்திற்குப் புறம்பானது.மார்க்கத்தின் பெயரால் இது போன் மடமைகளை அரங்கேற்றி தாமும் வழி கெட்டுப் பிறரையும் வழி கெடுப்பவர்கள், தங்கள் வருமானத்திற்காக மார்க்கத்தில் இல்லாததையெல்லாம் சடங்குகளாக்கி - புதிதாகப் புகுத்துபவர்கள்- புர்தாவின் பெயரால் புருடாக்கள் விட்டு பகாமர மக்களை ஏமாற்றியவர்கள், இனியாவது அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். அறியாமையால் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேட வேண்டும்.

ஸலவாத்துன்னாரியா

நோய் நொடிகள் நீங்க, கஷ்டங்கள் தீர, நாட்டங்கள் நிறைவேற ஸலவாத்துன்னாரியா என்னும் புதிய ஸலவாத்தைக் கண்டு பிடித்து அதை 4444 ஓத வேண்டும் என்று எண்ணிக்கையையும் நிர்ணயித்திருக்கின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நிர்ணயித்திருப்பதன் நோக்கமே, தனியொரு நபராக ஓதுவது சிரமம், பலரையும் கூப்பிட்டு ஓதச் சொல்வார்கள், கணிசமான ஒரு தொகையைக் கறந்து விடலாம் என்பது தான். தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, மவ்லிது, புர்தா, ஸலவாத்துன்னாரியா, என்று இந்தக் கூலிப் பட்டாளங்களின் கண்டு பிடிப்புகள் தொடருகின்றன.இந்த ஸலவாத்தின் கருத்துக்கள் முழுவதும் தவறானவை. அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் கொண்டுதான் நாட்டங்கள் நிறைவேறுவதாகவும், கஷ்டங்கள் தீருவதாகவும், இந்த ஸலவாத்தில் காணப்படுகின்றது. இதற்கெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை.இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். மூமின்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல் குர்ஆன் 33 : 56)என்னும் திருமறை வசனம் அருளப்பட்ட போது, நபித் தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் 'நாங்கள் எப்படி ஸலவாத் சொல்வது?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் என்று துவங்கும், அத்தஹிய்யாத்தில் ஓதுகின்ற ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.அரபியைத் தாய் மொழியாகக் கொண்ட நபித் தோழர்கள், ஸலவாத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளாமல், நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுத் தான் தெரிந்துக் கொண்டார்கள்.அப்படியிருக்க, யாரோ உருவாக்கிய, அதுவும் குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் முரணான கருத்துக்களை உள்ளடக்கிய ஸலவாத்தை, புனிதம் என்று கருதுவதும், அதைக் கொண்டு நாட்டங்கள் நிறைவேறும், கஷ்டங்கள் தீரும் என்று நம்புவதும், மார்க்கத்திற்கே விரோதமானது என்பதை மறந்து விடக் கூடாது.

திக்ரு செய்வது எப்படி?

வெள்ளிக் கிழமை இரவுகளிலும், மற்றும் புனித நாட்களிலும், பள்ளிகளில் திக்ரு செய்யப் படுகின்றது. ராத்திபு என்னும் பெயரில் அழைக்கப்படும் இந்த திக்ருகளில் காதிரியா, ஷாதுலியா, ஜலாலியா, என்று எத்தனை பாகுபாடுகள்!அல்hஹ்வின் பள்ளிகளில் ஒலி பெருக்கியை வைத்துக் கொண்டு, உரத்த சப்தத்துடன் கூச்சல் போடுவது திக்ரு செய்யும் முறையல்ல. எப்படி திக்ரு செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக அல்லாஹ்வே கூறுகிறான்.(நபியே) நீர் உம் மனதிற்குள் பணிவோடும், அச்சத்தோடும், (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும், உம் இறைவனின் (திரு நாமத்தை) திக்ரு செய்துக் கொண்டு இருப்பீராக. (அல் குர்ஆன் 7:205)நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் சென்றோம். அப்போது ஓடைகளைக் கடக்கும் போதெல்லாம் சப்தமாகத் தக்பீர் கூறினோம்.உடனே நபி (ஸல்) அவர்கள் 'உங்களுடைய சப்தத்தைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் செவிடனையோ எங்கோ இருப்பவனையோ அழைக்கவில்லை. மாறாக செவியேற்பவனும் அருகில் இருப்பவனுமாகிய அல்லாஹ்வையே அழைக்கிறீர்கள்.' எனக் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூ மூஸல் அஷ்அரி (ரலி) ஆதாரம்: புகாரி)குர்ஆனின் அடிப்படையிலும் நபி மொழி அடிப்படையிலும் உரத்த சப்தமின்றி மெதுவாகத் தான் திக்ரு செய்ய வேண்டும்.இல்லல்லாஹ் என்றும் ஹூ ஹூ என்றும் சிலர் திக்ரு செய்கின்றனர். 'இல்லல்லாஹ்' என்றால் 'அல்லாஹ்வைத் தவிர' என்று பொருள். ஹூ ஹூ என்றால் அவன் அவன் என்று பொருள். இது போன்ற வாக்கியம் முழுமை பெறாத, அர்த்தமற்ற திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. யாரோ அடையாளம் தெரியாத ஆசாமிகள் உருவாக்கிய இது போன்ற அர்த்தமற்ற திக்ருகளை அடியோடு ஒதுக்கி விட்டு, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த திக்ருகளை, அவர்கள் கற்றுத் தந்த முறைப்படி மட்டுமே செய்ய வேண்டும். மார்க்க விஷயங்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை விடவும் அதிகம் அறிந்தவர் எவரும் இல்லை என்பதை உணர வேண்டும்

சிறிய செயல்கள் ஆனால் பெரிய பாவங்கள்

சமுதாயத்தில் பரவலாகக் காணப்படும் மூட நம்பிக்கைகளையும், மூடப் பழக்கங்களையும் மட்டுமே இங்கு பட்டியலிட்டுள்ளோம். இவை போக ஊருக்கு ஊர், இன்னும் ஏராளமானவை இருக்கின்றன.பெண் குழந்தைகளுக்கு காது குத்த காணி விழா நடத்துவதும், கர்ப்பினிப் பெண்களுக்கு வளை காப்பு நடத்துவதும், வெள்ளி திங்கள் இரவுகளில் ஊதுபத்தி கொளுத்துவதும், சாம்பிராணிப் புகை போடுவதும், இரவு நேரங்களில் சில பொருட்களை அடுத்தவருக்குக் கொடுக்கக் கூடாது என்பதும், வீட்டைப் பெருக்கக் கூடாது என்பதும், கண் திருஷ்டிக்காகச் சுற்றிப் போடுவதும், ஆரத்தி எடுப்பதம், நாட்டங்கள் நிறைவேற 16 நோன்பு வைத்துப் பாத்திஹா ஓதுவதும், வீட்டுக்கு பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துக்கள் வந்தால் சுலைமான் நபி பாத்திஹா ஓதுவதும், குறிப்பிட்ட கிழமைகளில் எவரேனும் இறந்து விட்டால், கோழி வாங்கிக் கொடுப்பதும், இறந்தவர் வீட்டுக்கு ஆறுதல் கூற குறிப்பிட்ட கிழமைகளில் போகாமல் தவிர்ப்பதும், குர்ஆனைத் திறக்கும் போது கண்களில் ஒற்றிக் கொள்வதும், கை தவறி குர்ஆன் கீழே விழுந்து விட்டால் எடுத்து முத்தம் போடுவதும், எடைக்கு எடை உப்பு வாங்கிக் கொடுப்பதும், விதவப் பெண்கள் வெள்ளைத் துணி தான் உடுத்த வேண்டும் என்பதும், அவர்களை அபசகுனமாகக் கருதுவதும், காசு பணத்தை லட்சுமி என்று சொல்வதும், காலில் பட்டால் முத்தம் போடுவதும், பிறை நட்சத்திரத்தை இஸ்லாமிய சின்னமாகக் கருதுவதும், அம்மை நோய் ஏற்பட்டால் தாலாட்டுப் படுவதும், தலை பாத்திஹா ஓதுவதும், அம்மை நோய் கோபப்படும் என்று நம்புவதும், அப்பப்பா! எழுத எழுத இந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்தில் எங்கிருந்து வந்தன இத்தனை மூடப் பழக்கங்கள்? இவை அனைத்தும் அந்நிய கலாச்சாரங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர் அல்ல.இவை அனைத்தும் சிறிய செயல்கள் தான். ஆனால் பெரும் பாவத்தை ஏற்படுத்தும்.-

என்னருமைச் சகோதரா!என்ன பதில் சொல்கிறாய்?

இஸ்லாம் இறைவனின் மார்க்கம். இது எல்லோருக்கும் சொந்தம். சத்திய மார்க்கத்தின் பால் - அதன் உயர்ந்த கோட்பாடுகளாலும், உன்னதக் கொள்கைகளாலும், கவரப்பட்ட மக்கள் சமத்துவத்தைத் தேடி - சகோதரத்துவத்தை நாடி வந்துக் கொண்டிருக்கின்றனர்.ஊருக்கு ஊர் நடை பெறும் அழைப்புப் பணிகளால், ஈர்க்கப் பட்டு - ஏராளமான பிற சமய சகோதர சகோதரிகள், திறந்த மனதுடன் கேள்விகள் கேட்டுத் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துக் கொள்வதை தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கண்டு வியப்படைகிறோம். நல்லதொரு விடியலை நோக்கி பலரும் நகர்ந்து வருகின்றனர்.இந்த இனிய மார்க்கத்தை நாடி வரும் சகோதர சகோதரிகளை இரு கரம் நீட்டி வரவேற்கும் அதே வேளையில் அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? கேள்வி இது தான்.உண்மையான மார்க்கத்தின் பால் அழைப்பதாகச் சொல்கிறீர்கள். எங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? எல்லாச் செயல்களும் நடை முறைகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. பெயர்கள் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். செயல்கள் எல்லாம் ஒன்று தான். ஏற்கனவே இருந்துக் கொண்டிருக்கும் வழியிலேயே இருந்து விடலாமே. புதிய வழிக்கு வரவேண்டிய அவசியம் என்ன? எந்தப் பழக்கங்களிலும் எந்த வித்தியாசமும் இல்லையே!நாங்கள் திதி திவசம் செய்கிறோம்.நீங்கள் பாத்திஹா ஓதுகிறீர்கள்.நாங்கள் தேர் இழுக்கிறோம்.நீங்கள் கூடு இழுக்கிறீர்கள்.நாங்கள் சோதிடம் பார்க்கிறோம்.நீங்கள் பால் கிதாபு பார்க்கிறீர்கள்.எங்களுக்கு ஊருக்கு ஊர் குல தெய்வங்கள்.உங்களுக்கு ஊருக்கு ஊர் தர்காக்கள்.கோயில்களில் கும்பாபிஷேகம்.தர்காக்களில் சந்தனாபிஷேகம்.எங்களுக்கு சாமியார்கள்.உங்களுக்கு ஷெய்குமார்கள்.இந்தக் கேள்விகளுக்கு என்னருமைச் சகோதரா என்ன பதில் சொல்கிறாய்.இவையெல்லாம் இஸ்லாத்தில் உள்ளவை அல்ல. இஸ்லாத்திற்கும் இந்த மூடப் பழக்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புனித இஸ்லாம் இது போன்ற அனைத்து மூடப் பழக்கங்களுக்கும் அப்பாற்பட்டது. இதில் இறைவனின் பெயரால் ஏமாற்றுதல் இல்லை. ஏய்த்துப் பிழைக்கும் இழி செயல்கள் இல்லை. என்று பதில் சொல்லத் தயாராகி விட்டாயா?இஸ்லாமிய மார்கத்தின் இணையற்ற தத்துவங்களை, ஒப்பற்ற ஒழுக்க நெறிகளை, வாழ்வின் வளமார் நடைமுறைகளை, சாந்தி வழியை, சமத்துவக் கொள்கையை, சகோதரத்துவ வாஞ்சையை, சத்தியக் கருத்துக்களை, நமது சொல்லால், செயலால், நடைமுறையால் வாழ்ந்துக் காட்டுவோம். இறைவன் காட்டிய வழியில், இறைத் தூதர் போதித்த நெறியில் நாமும் நடப்போம். பிறரையும் அழைப்போம்.

முடிவுரை

திருமறை குர்ஆனும், திரு நபி (ஸல்) அவர்களின் ஆதாரப் பூர்வமான பொன் மொழிப் பேழைகளாம், புகாரி முஸ்லிம் திர்மிதி போன்ற நூல்களும் தெளிவான தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு விட்ன.பொருள் தெரிந்து படித்தால் தெளிவான வழிகாட்டுதல் கிடைக்கும். நம்மிடம் இருக்கின்ற பழக்க வழக்கங்களில் எவை எவை இஸ்லாத்தில் இல்லாதவை என்பதைச் சுலபமாக இனம் கண்டு விட்டொழிக்க முடியும்.மார்க்க விஷயங்களில் புதிது புதிதாக உருவாக்குபவைகளை உங்களுக்கு நான் எச்சரிக்கிறேன். அனைத்துப் புதியவைகளும் பித்அத் ஆகும். அனைத்து பித்அத்துகளும் வழிகேடாகும். அனைத்து வழிகேடுகளும் நரகிற்கே இட்டுச் செல்லும். என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். (ஆதாரம். அபூ தாவூத்- திர்மிதி) எனவே மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப் பட்ட எல்லா மூடப் பழக்கங்களை விட்டும், நூதன செயல்களை விட்டும், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மார்க்க விஷயங்களை அறிந்துக் கொள்ள அரபிக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெறிமுறைகளையும், அடுத்த தலைமுறையினருக்கு அழகாக எடுத்துச் சொன்ன நபித் தோழர்கள் எவரும் மவ்லவி பட்டம் வாங்கியவர்களல்ல. அண்ணல் நபி (ஸல்) என்னும் ஆன்மீகப் பல்கலைக் கழகத்தில் நேரடியாகப் காடம் பயின்றவர்கள்.அந்தப் பல்கலைக் கழகம் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அணு அணுவாக ஆராயப் பட்டு ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்யப் பட்டு அருமையான நூல்களாக நம்மிடம் இருக்கின்றன.அனைத்தையும் படித்து அறிந்துக் கொள்ள நமக்கேது ஞானம்? நமக்கேது நேரம்? என்று இருந்து விடக் கூடாது. இருக்கின்ற அறிவை இன்னும் அதிகப் படுத்தும்படி இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாமும் இறங்க வேண்டும்.இருக்கின்ற நேரத்தில் எவ்வளவோ சாதனைகள் நிகழ்த்த முடியும். மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள - மாநபி வழியை அறிந்துக் கொள்ள - சரியான வழியில் நாமும் நடக்க - நம்மைச் சார்;ந்தோருக்கும் போதிக்க - சிறிது நேரத்தையேனும் செலவிட வேண்டும்.தூய்மையான இஸ்லாத்தில், இடைக் காலத்தில் புகுந்து விட்ட மடமைகளை, பித்அத்துகளை, அநாச்சாரங்களை, மூடப் பழக்கங்களைத் தூக்கி எறிந்து விட்டு முழுமையான முஸ்லிம்களாக வாழ்வோம்.பிறகு நிச்சயமாக உம் இறைவன், எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) பிழை பொறுக்கத் தேடி தங்களை சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்) நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபை யுடையவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 16:119)திருக் குர்ஆன் காட்டிய திருவழியில்திரு நபி வாழ்ந்த பெரு வழியில்நபித் தோழர்கள் வாழ்ந்த நல்வழியில்அவ்லியாக்கள் வாழ்ந்த அறவழியில்இஸ்லாத்தை அதன் தூய வடிவில்பின்பற்றி வாழ்வோம். இனியேனும்
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்
">Link


0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்