Sep 22, 2006

ஒரு நல்லடக்கம்

">Link

நானிலம் அதிசயித்த ஒரு நல்லடக்கம்

உலகின் மிகப் பெரிய எண்ணெய் வள நாட்டின் மன்னராக ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் ஆட்சி புரிந்த மன்னர் பஹத் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் மரணித்து விட்டார். அரபு நாடுகளிலேயே மிகப் பெரியதும், மக்கா மதீனா ஆகிய இரு புண்ணியத் தலங்களை உள்ளடக்கியதும், இஸ்லாமிய நாடுகளில் உலக அளவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நாடுமாகிய சவூதி அரேபியாவின் மன்னர் மரணித்து விட்டார் என்றால் இந்த நாடே ஸ்தம்பித்திருக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்களும், கடை அடைப்புகளும், மௌன அஞ்சலி ஊர்வலங்களும், அஞ்சலி செலுத்தி ஆளாளுக்கு அடித்த சுவரொட்டிகளும், பதாகைகளுமாக நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடக்க வில்லை.

முழு சவூதி அரேபியாவும் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தது. வியாபார நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தன. வழக்கமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து திருமறை குர்ஆன் ஓதப் பட்டுக் கொண்டிருந்ததைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. தலை நகர் ரியாதில் மட்டும் அடக்கம் நடைபெறுவதற்குச் சற்று முன் கப்ருஸ்தானை அடுத்துள்ள பகுதிகளில் மட்டும் போக்கு வரத்து திருப்பி விடப்பட்டிருந்தது. அதுவும் சில மணி நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டது.
தேசிய அளவில் அல்ல, மாநில அளவில் ஒரு அரசியல் தலைவர் இறந்து விட்டால் கூட அந்த மாநிலம் முழுவதும் தலை கீழாகப் புரட்டப்படுவதையும் பந்த்களையும் தர்ணாக்களையும் பார்த்தும் கேட்டும் பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு, சவூதி மன்னரின் மரணமும், அதனைத் தொடர்ந்து மறு நாள் நடைபெற்ற நல்லடக்கமும், ஆச்சரியத்தைத் தந்திருக்கும்.

மன்னரின் மரணம் குறித்து அதிகாரப் பூர்வமாக சவூதி தொலைக் காட்சியில் அறிவிக்கப்பட்ட அன்றைய தினம் காலையிலிருந்து அடக்கம் செய்யப் படும் மறுநாள் மாலை வரை மன்னரின் ஜனாஸாவோ, ஜனாஸா இருந்த இடமோ கூட தொலைக் காட்சியில் காண்பிக்கப்படவே இல்லை.
மன்னர் இறந்த மறு நாள் அஸர் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா தொழ வைக்கப்படும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஜனாஸா கொண்டு வந்து இறக்கப்பட்டபோது தான் மன்னரின் ஜனாஸா முதன் முதலாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. அதுவும் மன்னர் வழக்கமாக அணியும் மேலங்கியால் முழுவதும் மூடப்பட்ட நிலையில். இந்தக் காட்சியை நேரடி ஒளிபரப்பில் கண்ணுற்ற உலக மக்கள் அனைவரும் அதிசயித்திருப்பர்.

அலங்ஙார ஊர்தி இல்லை. மலர் வளையங்கள் இல்லை. மனங்கமழும் சந்தனப் பெட்டியில்லை. ஆம்புலன்ஸ் வண்டி திறக்கப்பட்டு அதிலிருந்து மன்னரின் புதல்வர்கள். இறங்கி தங்கள் தந்தையின் ஜனாஸாவைத் தம் தோள்களில் சுமந்த வண்ணம் பள்ளியின் உள்ளே எடுத்துச் சென்றனர்.
மன்னரின் ஜனாஸாவை வைத்து எடுத்துச் சென்ற சந்தூக் பெட்டிக் கூட வழக்கமாக அனைத்து ஜளாஸாக்களையும் வைத்து எடுத்துச் செல்லப் பயன்படுத்தப் படும் ஒரு சாதாரண பழைய சந்தூக் தான். பார்த்தவர்கள் அசந்து போனார்கள்.

அஸர் தொழுகை முடிந்த பிறகு அனைவரும் அப்படியே எழுந்து நிற்க, சவூதியின் தலைமை முப்தி அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள அப்துல்லாஹ் அவர்கள் உட்பட பல இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களும் அணிவகுத்து நின்று தொழுகையை நிறைவேற்றினர்.
இஸ்லாமிய முறைப்படி இறந்தவருக்காகச் செய்யப்படும் இறுதி அஞ்சலி, கண் இமைக்கும் நேரத்தில் கனகச்சிதமாக நடந்து முடிந்தது. தொழுகை முடிந்ததும் அருகில் உள்ள அல்ஊத் பொது மைய வாடிக்கு அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

பீரங்கி வண்டி இல்லை.ராணுவ மரியாதை இல்லை. அதிர்; வேட்டுக்கள் வெடிக்கப்படவில்லை. ஆகாயத்தை நோக்கி குண்டுகள் முழங்கவில்லை. எவ்வித ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியான முறையில், இஸ்லாமிய வழியில் எல்லோருக்கும் பொதுவான மைய வாடியில் எளிமையாக அடக்கம் செய்யப் பட்டதை இந்த உலகமே கண்டு வியந்தது.

தகவல்: அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்