Dec 25, 2008

ஸஜ்தாச் செய்த நிலையில் மரணித்த நல்லடியார்

'செயல்கள் அனைத்தும் அதன் முடிவைப் பொறுத்ததே' என்னும் கருத்தில் அமைந்த நபி மொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆம் ஒரு நல்லடியார் மதீனாவின் மஸ்ஜிதுன்னபவியில் தொழுது கொண்டிருக்கும் நிலையில் அதிலும் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமான ஸஜ்தா செய்துக் கொண்டிருந்த நிலையிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. சுப்ஹானல்லாஹ். இத்தகைய பெரும்பாக்கியம் கிடைக்கப் பெற்ற இந்த நல்லடியாரை அல்லாஹ் சுவனபதியில் ஆக்கியருள்வானாக என நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
இவ்வரிய புகைப்படத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பித் தந்த சகோதரர் திருப்பந்துருத்தி K. முஹம்மது அமீன் அவர்களுக்கு நன்றி.

Dec 6, 2008

புனித ஹஜ்ஜின் நேரலை HAJJ PROGRAMME LIVE

உலகெங்கும் வாழும் அன்பர்கள் புனித ஹஜ்ஜின் நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளிக்க எமது சகோதர வலைப்பதிவான PEACE TRAIN ஏற்பாடு செய்துள்ளது. அனைவரும் கண்டு பயன் பெறும்படியும் அனைத்து சகோதரர்களுக்கும் அறிமுகம் செய்யும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். கீழக்காணும் சுட்டியைச் சொடுக்கி வலைப்பதிவின் இறுதிப்பகுதிக்குச் செல்லவும்

Oct 28, 2008

இலவச குர்ஆன் மென் பொருள்

குர்ஆன் மென்பொருள்!
குர்ஆன் மென்பொருட்கள் பல கிடைத்தாலும் தொழில்நுட்பக் குறைகள் மிகைத்தே காணப்படுகின்றன. இச்சூழலில் முழுக்க முழுக்க யூனிகோடுத் தமிழ், அரபி, மற்றும் ஆங்கிலத்தில் இணைந்த அருமையான அதுவும் முற்றிலும் இலவச பதிப்பாக ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளும் வசதி கொண்ட இம்மென்பொருள் எனக்கு திருப்தியாக உள்ளது. நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்.
செய்முறை - 1
(சுட்டியை கிளிக்கி நிறுவிக்கொள்க)
செய்முறை - 2
(கீழுள்ள வசனங்களுக்கான சுட்டிகளை கிளிக்கி தானியங்கி முறையில் நிறுவிக்கொள்க)
செய்முறை - 3
(கீழுள்ள விருப்பமொழி சுட்டிகளை கிளிக்கி தானியங்கி முறையில் நிறுவிக்கொள்க)
சிறப்பம்சங்கள்- ஸாஅத் அல் ஹம்தி அவர்களின் அழகிய குரலில்- தமிழ், அரபி, ஆங்கிலம் மற்றும் விரும்பிய 24 மொழிகளில்...-
தேர்ந்தெடுத்த வசனங்களையோ முழுக்குர் ஆனையோ அரபி ஒலியுடன் கூடிய தமிழ் எழுத்தில் பயனடையும் வசதி-
வார்த்தைக்கு வார்த்தை அர்த்தங்களைக் காட்டும் வசதி-
தமிழ் அர்த்தத்துடன் குர் ஆனை மனப்பாடம் செய்து கொள்ள அருமையான வசதி (Ctrl+R)-
முதல் இலவச பதிவிறக்க குர் ஆன் மென்பொருள்நிறுவி துவங்கியபின் வரும் முதல் சாளரம் கீழ்க்கண்டவாறு கிடைக்கும்: இதில் உள்ள கீழ்நோக்கிய அம்பு (down arrow) குறியைப் படத்தில் காட்டியுள்ளவாறு கிளிக்கினால்...
கீழே உள்ளவாறு யூனிகோடுத் தமிழில் அரபி ஒலியுடன் குர் ஆனைக் கேட்டு பார்த்து மகிழலாம். புதிய அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்!
(செயலியை இலவசமாக அளிக்கும் http://www.shaplus.com/ தளத்தினருக்கு நன்றிகள்)பயன் தரக்கூடியதாகத் இருப்பின் இருவரிகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். தவிர சந்தேகங்கள் ஏதுமிருப்பின் எழுதுங்கள்.
நன்றி: அபூ சாலிஹா
மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும்

Sep 30, 2008

பெருநாள் வாழ்த்துக்க்ள்


Aug 27, 2008

தமிழ் முஸ்லிம் நூலகம்

இணைய நேயர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
இணையத்தில் வலைத்தளங்கள்,வலைப்பதிவுகள், மற்றும் மடலாடற்குழுமங்களில் இஸ்லாமிய நூல்களை அவ்வப்போது தாங்கள் படிக்க நேரலாம். இவ்விதம் இணையத்தில் காணக்கிடைத்தால் நன்றாக இருக்குமே என தாங்கள் நினைத்திருந்தால், தங்களைப் போன்றவர்களின் ஆவல் இப்போது புதிய 'தமிழ் முஸ்லிம் நூலகம்' பதிவின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது. கிடைக்கும் இஸ்லாமிய மற்றும் பொது அறிவு நூல்கள் அனைத்தும் ஓரிடத்தில்
இஸ்லாம் பற்றி இணையத்தில் காணக் கிடைக்கும் தமிழ் நூல்கள் அனைத்தையும் ஒருங்கு திரட்டித் தரும் பணியில் 'தமிழ் இஸ்லாம் நூலகம்' தனது புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
பல்வேறு இணைய தமிழ் இஸ்லாமிய நூல்களை வாசிக்க கீழ்க்காணும் பதிவை கிளிக்குங்கள்.

May 20, 2008

அருள் மறை குர்ஆன் பற்றி ஒரு அழகிய தளம்

இறை வேதம் திருக்குர்ஆனை ஒலி ஒளி வடிவத்தில் எத்தனையோ தளங்கள் வெளியிட்டுள்ளன. பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இத்தளத்திற்கு வந்து பாருங்களேன்.
  • அழகிய குரலில் அற்புதமாக பல்வேறு 'காரி'களின் கிராஅத்
  • புகழ் பெற்ற ஹரம்ஷரீபின் ஷேக் சுதைஸ்,ஷேக் ஷிரைமி ஆகியோரின் கிராஅத்
  • 30 பாகங்களும் தனித்தனியாக தரவிறக்கம் செய்யும் வசதி
  • ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் மொழிபெயர்ப்பு
  • வீடியோ மற்றும் ஆடியோ வடிவில் விருப்பப்படி தரவிறக்கம்
  • அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் அரபி உருது ஆங்கில மொழிகளில்
  • திருக்குர்ஆன் பற்றிய பல்வேறு கட்டுரைகள்
  • மக்கா மதீனா இரு புனிதப்பள்ளிகளின் ரமளான் இரவுத் தொழுகைகள்(வீடீயோ)
  • உருது மொழியில் மார்க்கச் சொற்பொழிவுகள்

இன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இத்தளத்திற்குச் செல்ல

இங்கே கிளிக்குங்கள்

நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.

May 18, 2008

கணிணியில் இருந்தபடியே குர்ஆன் ஓத

தினந்தோறும் திருமறை குர்ஆனின் சில பக்கங்களையாவது ஓதுவது உங்கள் வழக்கம் தானே! அல்ஹம்துலில்லாஹ். அப்படியானால் இதற்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம்.
இணையத்தில் இருந்தபடியே கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள். அழகான வடிவமைப்பில் அற்புதத் திருமறை குர்ஆன் பக்கம் பக்கமாக விரிந்து உங்களை வியக்க வைக்கும். ஃபிளாஷ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் உங்கள் இதயத்தைக் கொள்ளை கொள்ளும்.
நீங்கள் விரும்பிய அத்தியாயத்தையோ, விரும்பிய பாகத்தையோ தேர்ந்தெடுத்து விருப்பப்படி ஓதலாம்.
இடது பக்க மூலையில் அம்புக்குறி செல்லும் இடத்தில் மவுஸை வைத்து வலப்பக்கமாக நகர்த்துங்கள், பக்கம் பக்கமாக விரியும்.
வலப்பக்க மூலையில் காணப்படும் கட்டத்தில் வேண்டிய பக்க எண்ணை இடுங்கள் குறிப்பிட்ட பக்கம் திறக்கும்.
more options பகுதியை கிளிக்குங்கள் 30 பாகங்களையும் விரிவாகக் காணலாம். குறிப்பிட்ட பாகத்தைக் கிளிக்குங்கள். அந்த பாகத்தை மட்டும் ஓதலாம்.
show all chapters ஐ கிளிக்குங்கள், 114 அத்தியாயங்களும் தனித்தனியே தெரியும்.
இன்னும் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
எழிலுற வடிவமைத்த இறை நேசரை வாழ்த்துவோம்.

Apr 27, 2008

நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்

நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்
தமிழ் மண்ணில் இஸ்லாம் தடம்பதித்து நூற்றாண்டுகள் பல கடந்த பின்பும் இஸ்லாத்தின் ஆணி வேராகிய இறைமறை குர்ஆனும் இறைத் தூதர் போதனைகளும் போதுமான அளவுக்குப் போதிக்கப்படாத காரணத்தால் மூடப் பழக்கங்களில் தங்கள் முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மூழ்கிக் கிடந்த தமிழ் முஸ்லிம் சமுதாயம் 1980 களின் துவக்கத்தில் உறக்கத்திலிருந்து எழுந்து உட்காரத் தொடங்கியது எனலாம்.
உறங்கிக் கிடந்த தமிழ் முஸ்லிம் சமுதாயத்தைத் தட்டி எழுப்பி புரையோடிப் போன மூடப்பழக்கங்களைக் கண்டித்து உண்மையான இஸ்லாத்தை உரத்த குரலில் நம் சம காலத்தில் முழங்கியவர்களில் முதலாமவர்..
தூதுத்துவத்தை விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தவர்களில் பலர் ஏகத்துவத்தைக கண்டுக் கொள்ளாமலேயே இருந்த நிலையை மாற்றி தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏகத்துவத்தையும் தூதுத்துவத்தையும் முறையாகப்போதித்தவர்களில குன்றின் மேலிட்ட விளக்காகப் பிரகாசித்தவர்.
ஆண்டாண்டு காலமாய் ஆழப்பதிந்து போன அறியாமை இருளகற்றி தமிழ் முஸ்லிம் சமுதாயத்தை வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வந்த விடி வெள்ளி
ஏகத்துவக் கொள்கையைத் தன் இதயத்தில் தாங்கி தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பயணம் செய்து ஏகப்பட்ட எதிர்ப்புகளைத் துணிச்சலுடன் எதிர் கொண்டு ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலமாக சத்தியத்தை சமுதாயத்திற்கு மத்தியில் எத்திவைத்த பெருமேதை.
ஏகத்துவக் கொள்கையைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு, கொண்ட கொள்கையின் உறுதியைப் பறைசாற்றி தம் மனைவி மக்களுடன் காயல் பட்டணத்தில் முபாஹலாவைச் சந்தித்த கொள்கைக் குன்று.
முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரசுரங்கள் வாயிலாக அவ்வப்போது விஷமக் கருத்துக்களைப் பரப்பி வந்த கிறிஸ்தவர்களுக்கு பாடம் புகட்ட நெல்லை ஜெபமனியின் சவாலை ஏற்று 4 நாட்கள் விவாதம் நடத்தி வெற்றி கண்டவர்.
எவருமே கண்டு கொள்ளாத காதியானிக் கும்பலுடன் கோவையில் விவாதம் செய்து தூதுத்துவக் கொள்கையில் அவர்களின் குளறுபடிகளை தோலுரித்துக் காட்டியவர்.
தறி கெட்டுத் தடம் மாறிப் போன உமர் அலியையும் அவர் தம் கூட்டாளிகளையும் நேரடியாக இலங்கைக்கே சென்று விவாதம் நடத்தி அவரின் வறட்டுத் தத்துவங்களை தவிடு பொடியாக்கியவர்.
19 என்ற எண்ணை வைத்து பம்மாத்துக் காட்டிய ரஸாத் கலீபா போன்ற அரைக் கிறுக்கர்களின் கிறுக்குத் தனத்தை அம்பலப் படுத்தி அடக்கி வைத்தவர்.
ஊருக்கு ஊர் சவால் விட்டுக் கொண்டுத் திரியும் வாய்ச் சவடால் பேர்வழிகளின சவால்களை ஏற்று பகிரங்கமாக அறைகூவல் விட்டு புறமுதுகிட்டு ஓடவைத்தவர்.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளை பல்வேறு ஊர்களில் நடத்திஇ தவறான புரிதல்களால் இஸ்லாத்தின் மீது அதிருப்தி கொண்டிருந்த எண்ணற்ற பிற சமயத்தவகளின் வித விதமான கேள்விகளுக்கு வியக்கத்தக்க முறையில் விடையளித்து அவர்களின் சந்தேகங்களைக் களைந்து இஸ்லாத்தின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தியவர்.
ஏராளமான பிற சமய சகோதர சகோதரிகள் இஸ்லாம் என்னும் இன்பப் பாசறையில் இணைவதற்குக் தூண்டுகோலாக இருந்தவர்.
மார்க்கச் சொற்பொழிவுகளைக் கேட்டு விட்டு அப்படியே களைந்து போன கூட்டத்தினரை தேள்விகள் கேட்க வைத்து, கேட்கப் பட்ட கேள்விகளுக்கு ஆதாரத்துடன் பதில் தந்து பாமரரையும் மார்க்க ஞானம் பெற்ற பண்டிதராக்கியவர்.
இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவமாகிய ஷிர்க்கிலிருந்து தம்மைக் காத்துக் கொண்டு உண்மை முஸ்லிம்களாக வாழ்வதற்குக் காரணமாக இருந்தவர்.
குர்ஆனும் ஹதீஸ் நூல்களும் அரபிக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெற்ற மெளலவிகளின் ஏகபோக சொத்து என்னும் நிலையை மாற்றி திருக்குர்ஆன் தமிழாக்கத்தையும் ஹதீஸ் நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்பையும் அனைவரும் படித்துப் பார்த்து உண்மை இஸ்லாத்தை உணர்ந்துக் கொள்ள வைத்தவர்.
இஸ்லாமிய சமூகத்தில் புரையோடிப் போன வரதட்சனை என்னும் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாநாடுகள் நடத்தி மக்களுக்கு உணர்த்தி மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
சமுதாயப் பேரியக்கங்களாகத் திகழ்ந்தவை எல்லாம் சரியானச் செயல் பாடுகள் இல்லாமல் மங்கி மறைந்துக் கொணடிருந்த கால கட்டத்தில் செயல் துடிப்புள்ள இளைஞர் பட்டாளத்தை உருவாக்கிச் சரியான பாதையை நோக்கிப் பயணிக்க வைத்தவர்.
பள்ளிவாசல்களின் நான்கு சுவர்களுக்குள்ளேயே அடங்கிப்போன மார்க்கச் சொற்பொழிவுகளை கடல் கடந்து வாழும் பல கோடி மக்கள் கேட்டுப் பயனடையும் விதத்தில் மீடியாக்கள மூலம் கொண்டு சென்றவர்.
சீர் கெடுக்கும் சீரியல்களில் மதி மயங்கிக் கிடந்த மக்களை மாற்றி ஈமானின் கிளைகள்இ நபிமார்கள் வரலாறு பிறப்பு முதல் இறப்பு வரை போன்ற மார்க்கத் தொடர் சொற் பொழிவுகளில் மக்களின் மனதைப் பறிகொடுக்க வைத்தவர்.
தரணியெங்கும் வாழும் தமிழ் பேசும் ஒவ்வொரு முஸ்லிமும் தன்நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும் 'இவர் யார்?'என்று..

Mar 28, 2008

புரட்சி வெடிக்கட்டும்

'உனது கைத்தடியைச் சுழற்ற உனக்கு முழு உரிமை உள்ளது ஆனால் அந்த உரிமை அடுத்தவரின் மூக்கு நுனி வரை மட்டுமே' என்ற ஒரு சொல் வழக்கு ஆங்கிலத்தில் உண்டு.
வீதியில் நடந்தபடி ஒருவர் சுழற்றிய கைத்தடி அருகே சென்றவரின் மூக்கு நுனியைப் பதம் பார்த்து விட்டது. பாதிக்கப்பட்டவர் நீதி மன்றத்தில, கைத்தடியைச் சுழற்றியவர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரனைக்கு வந்தது.. "எனது கைத்தடியை நான் சுழற்ற எனக்கு உரிமையில்லையா? என்று சுழற்றியவர் நீதிமன்றத்தில் வாதிட்டார். அதற்கு நீதிபதி அளித்த தீர்ப்பு தான் இப்படி ஒரு சொல் வழக்கு உருவான கதை.
இப்படித்தான் இப்போது 'கருத்துச் சுதந்திரம்' என்னும் ஒருவார்த்தை பாடாய் படுகிறது. ஆம் டென்மார்க்கில் ஒரு பத்திரிக்கை நபிகள் குறித்து கேலிச் சித்திரம் வெளியிட்டு கொள்ளிக்கட்டையால் தன் அரிப்பைச் சொரிந்து கொண்டுள்ளது.
அப்பத்திரிக்கை பிரச்சினையின் ஆழம் தெரியாமல் கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருக்கலாம். இதற்காக எழந்த எதிர்ப்புகளைக் கண்ட பிறகாவது தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.(நன்றாகத் தெரிந்தே வேண்டுமென்றே தான் கேலிச்சித்திரத்தைப் பிரசுரித்துள்ளது என்பது வேறு விஷயம்) ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? உலகின் 150 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஒரு தலைவரை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரம் வெளியிட்ட அப்பத்திரிக்கையை தடை செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் கண்டித்திருக்கவாவது வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ஆனவம் பிடித்த டென்மார்க் அரசு 'பத்திரிக்கையின் கருத்துச் சுதந்திரத்தில் அரசு தலையிட முடியாது' என்று அகம்பாவத்துடன் அளித்த் பதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருந்தது்.
சில மாதங்களுக்க முன் நடந்த இப்பிரச்சினையை அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கண்டித்தன. உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் டென்மார்க் அரசுக்குத் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன..வளைகுடா நாடுகள் டென்மார்க் நாட்டிலிருந்து இறக்குமதியை நிறுத்தின. முஸ்லிம்கள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கனித்தனர். அதன் காரணமாக டென்மார்க் அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டது.
மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கினர். இன்னும் ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் இப்போது டென்மார்க்கின் சில பத்திரிக்கைள் மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறித்து கேலிச் சித்திரத்தை வெளியிட்டுள்ளன. முதலில் நடந்தது, 'தெரியாமல் நடந்த தவறு' என ஒதுக்கிவிடலாம். ஆனால் இப்போது மறுபடியம் அதே தவறு நடந்திருப்பதைப் பார்க்கும் போது இது திட்டமிட்டு வேண்டுமென்றே நடந்தள்ளது என்பது உறுதியாகின்றது. இதற்குக் காரணம், இவாகளின் கேடுகெட்ட கலாச்சாரத்திற்கு மிகப்பெரும் தடைக்கல்லாக இருக்கும் இஸ்லாத்தின் மீதும், உயரிய பண்பாட்டை உலகு்க்கு உணர்த்திய நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் இவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தான்.
இப்போது தீர்ப்பு முஸ்லிம்களாகிய நம் கையில். இனி இத்தகையவர்களுக்கு எதிரான நமது போராட்டம தொடங்கப்பட்வேண்டும்.. போராட்டம் என்பது வன்முறையற்ற, அதேசமயம் என்றென்றும் இத்தகைய அராஜக அரசுகளுக்கும் பத்திரிகைகளுக்கும் சரியான பாடமாக அமையும் விதத்தில் இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில உலக முஸ்லிம்கள் அனைவரும் டென்மார்க் நாட்டின் அனைத்து தயாரிப்புகளையும் புறக்கணிக்க வேண்டும். வளைகுடா நாடுகளின் வியாபாரச் சந்தையில் பெருமளவில் டென்மார்க் நாட்டின் தயாரிப்புகள் விற்பனையில் உளளன.. அப்பொருட்களைக் கண்டறிந்து அவற்றை நாம் புறக்கனிக்க வேண்டும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களை நமது உயிரினும் மேலாக நாம் மதிக்கிறொம் என்பதை அகில உலகுக்கும் பறைசாற்றும் விதத்தில், நமது நபியை கேவலப்படுத்திய அந்நாட்டின் அனைத்து தயாரிப்புகளையும் அடியோடு புறக்கணித்து சரியான பாடம் புகட்ட வேண்டும். இப்புறக்கணிப்பை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்வதோடு நமது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
நமது இந்த புறகக்ணிப்பு டென்மார்க் நாட்டுக்கு பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தட்டும். அந்நாம்டின் ஒவ்வொரு குடிமகனும் தமது நாட்டின் பொருளாதார வீழ்சிக்குக் காரணமான தமது நாட்டின் திமிர் பிடித் பத்திரிக்கைகளும், அவற்றுக்காக வக்காலத்து வாங்கிய ஆட்சியாளர்களும் தான் என்பதை உணர்ந்து அந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள். அசத்தியத்திற்கெதிரான புரட்சி வெடிக்கட்டும். அயோக்கியர்கள் பாடம் படிக்கட்டும்.
புறக்கணிக்கப்டவேண்டிய டென்மார்க் நாட்டின் தயாரிப்புகள் பற்றி விபரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்
தொடுப்பு திறக்கும்போது save செய்யவும்.


Mar 22, 2008

வலைத்தளங்கள்,வலைப்பதிவுகளை இஸ்லாமிய மயமாக்குவோம்

நீங்கள் சொந்தமாக வலைத்தளம் நடத்துகிறீர்களா? அல்லது வலைப்பதிவு தொடங்கி உங்கள் பதிவுகளைப் பதிக்கிறீர்களா? அப்படியானால் பயனுள்ள பல்வேறு இஸ்லாமிய தொடுப்புகளை உங்கள் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் இணைத்தால் பலருக்கும் பயனாக இருக்கும். இதன் மூலம் உங்கள் தளங்கள் மற்றும் பதிவுகளுக்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை அதிகமாவதுடன் இறைவேத வசனங்களையும் இறைத்தூதர் போதனைகளையும் எல்லோருக்கும் எத்திவைத்த நன்மையும் கிடைக்கும்.
'இல்லாத பொருளே இல்லை
இணையில்லா குர்ஆன் இங்கே
சொல்லாத பொருளே இல்லை
சோபிதம் பாராய் நெஞ்சே!”
என்று கவிஞர் சிராஜ் பாக்கவி அழகாகச் சொல்வார். திருமறை குர்ஆனின் பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளிலிருந்து உங்களுக்குத் தேவையானதை தேடவும், திருத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிப் பேழைகளில் மிகச்சிறந்த தொகுப்பாகிய புகாரியிலிருந்து உங்களுக்குத் தேவையானதைத் தேடி எடுக்கவும், திருமறை குர்ஆனின் பல்வேறு கிராஅத்களைக் கேட்டு இன்புறவும், அவற்றை உங்கள் கைபேசி(செல்போன்)களில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், உலக அளவில் அனைத்து நாடுகள் மற்றும் நகரங்களின் தொழுகை நேரங்களை அறிந்து கொள்ளவும், அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களையும் பொருளுடன் அறிந்து கொள்ளவும், அவற்றை உங்கள் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், இப்படி இஸ்லாம் குறித்த பல்வேறு செய்திகளை உங்கள் வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் வெளியிடவும் இங்கே கிளிக்குங்கள்.அவை அனைத்தும் முழூக்க முழுக்க இலவச சேவை என்பது இதன் சிறப்பம்சம்.இனி நமது வலைத் தளங்களையும் வலைப்பதிவுகளையும் இஸ்லாமிய மயமாக்குவோம்.

Feb 8, 2008

கலாச்சார ஊடுருவல்


வெள்ளி, 08 பெப்ரவரி 2008
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு

உலகின் பல்வேறு இன, மொழி, தேசக் கலாச்சாரங்களிலிருந்தும் வேறுபட்டு அகில உலகத்தையும் தன்பால் ஈர்த்தக் கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரமாகும். இறை வேத வரிகளும் இறைத்தூதர் மொழிகளும் போதித்த இஸ்லாமியக் கலாச்சாரத்தை இம்மியும் பிசகாமல் இஸ்லாமியச் சமுதாயம் கடைப்பிடித்த காலமெல்லாம் அகில உலகுக்கும் முன்மாதிரியாக அது திகழ்ந்தது.

இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டப் பல்வேறு சமுதாய மக்களும் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது, அதுநாள் வரை தாங்கள் பின்பற்றி வந்த சில கலாச்சாரங்களைத் தங்களையும் அறியாமல் சிலர் தங்களுடன் கொண்டு வந்தனர். காலப் போக்கில் அந்த அந்நியக் கலாச்சாரங்கள் வேர்விட்டு, கிளைபரப்பி, முழு இஸ்லாமியச் சமுதாயத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைக் கலாச்சாரத்துக்குக் குழிபறித்து விட்டது எனலாம்.
சிலை வணக்கக் கலாச்சாரம் போன்ற, "பாவம்" என்று பார்வையில் கண்காணத் தெரிந்த சில கலாச்சாரங்கள் நம்மிடம் நுழைய முடியவில்லையே தவிர, நல்லவைதாமே என்ற போர்வையில் நுழைந்த கலாச்சாரங்களைப் பாமர முஸ்லிம்கள் அலட்சியத்தோடு கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு பல சீர்கெட்டக் கலாச்சாரங்களின் ஊடுருவல் நம் இஸ்லாமியச் சமுதாயத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. இந்தக் கலாச்சார ஊடுருவல்களில் பல, ஷிர்க் என்னும் இணைவைத்தலில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை நம் சமுதாயத்தில் பலர் இன்னமும் உணர்ந்ததாகத் தெரிய வில்லை.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான் - (திருக்குர்ஆன் 4;:48)
இந்தக் காலாச்சார ஊடுருவலை அலட்சியம் செய்வோர், மற்றும் அவற்றுக்கு நியாயம் கற்பிப்போர் பின்வரும் நபி மொழியை நினைவிற் கொள்ள வேண்டும்.
"எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" - அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: அபூதாவூத்.
என்னும் நபி மொழியை நன்றாகப் புரிந்து கொண்டால் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வளவு மோசமானது என்பதை உணரலாம். "அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கருத்தாழமிக்க வார்த்தைகளை அலட்சியப் படுத்த எந்த ஒரு முஸ்லிமும் முன்வரமாட்டார்.
நமது அன்றாட வாழ்வில் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வாறெல்லாம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது என்பதைச் சிந்தித்து, ஆராய்ந்து, நல்லுணர்வு பெற வேண்டும்.
பிறப்பில், இறப்பில், வாழ்வில், திருமணத்தில் மற்றும் அன்னறாடப் பழக்க வழக்கங்களில் நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட இந்தக் கேடு கெட்டக் கலாச்சார ஊடுருவலை நாம் வேரோடும் வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் தொடங்கி, பெண் குழந்தைகள் பருவமடைவதிலும் திருமணம் நடத்துவதிலும் புதிய வீடு கட்டுவதிலும், இப்படி அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவலால், "மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் எவ்வகையிலும் வேறுபடவில்லையே" என்று பிற மதத்தவர் விமர்சிக்கும் அளவுக்குப் போய்விட்டது.
பிறமதச் சகோதரர்கள் இஸ்லாத்தைப் படித்து தெரிந்துக் கொள்வதை விட முஸ்லிம்களாகிய நமது நடவடிக்கைகளைப் பார்த்துத் தான் இஸ்லாத்தை தெரிந்துக் கொள்ள முடியும். அப்படியிருக்க நமது நடவடிக்கைகள் இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு முரணாக இருந்தால் உண்மையான இஸ்லாத்தை எவ்விதம் மற்றவர்களால் புரிந்துக் கொள்ள முடியும் என்பதை நாம் உணர வேண்டாமா?
காலமும் நேரமும்
நல்ல காரியங்கள் நடத்துவதற்கு நல்ல நேரம் பார்ப்பது பிற சமூகத்தவர் பின்பற்றும் பழக்கம். இஸ்லாத்தில் "நல்ல நேரம்', "கெட்ட நேரம்' என்று நேரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. காலண்டரைப் பார்த்துக் காலநேரம் பிரிப்பது அறிவுக்கு ஏற்ற செயலும் அல்ல; அல்லாஹ்வுக்கு உகந்த செயலும் அல்ல.
நேரம் காலம் பார்த்து நடத்தப்பட்ட எத்தனையோ திருமணங்கள் விவகாரத்தில் தொடங்கி விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. காலமும் நேரமும் அவர்களுக்குக் கைகொடுக்வில்லை.
ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து "முகூர்த்த நேரம்" என்று பிற சமூகத்தவர் குறிப்பிடுவதை "முபாரக்கான நேரம்" என்று அரபியில் குறிப்பிடுவதால் மட்டும் இஸ்லாமிய அங்கீகாரம் பெற்று விட்டதாக ஆகிவிடாது.
பசிக்கும்போது உணவருந்த எவரும் பஞ்சாங்கம் பார்ப்பதில்லை. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் தாய், தன் குழந்தையைப் பெற்றெடுக்க நல்ல நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, எந்த மருத்துவரும் கால நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை.
வாழ்க்கையில் ஏற்படும் வெற்றியும் தோல்வியும் அல்லாஹ்வின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்று ஈமானில் உறுதி கொள்ள வேண்டும்.நினைத்த காரியம் நடக்காமல் போவதும், தொடங்கிய காரியம் தோல்வி அடைவதும், இதைவிடச் சிறந்ததை நமக்குத் தருவதற்காக அல்லது இதன் மூலம் ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பதற்காக இறைவனுடைய ஏற்பாடாக இருக்கக் கூடும்.அதை விட்டு விட்டு காலத்தின் மீதும் நேரத்தின் மீதும் பழி சுமத்துவது பெரும் பாவம். ஏனனில், இறைவன் கூறுகிறான். "காலத்தை ஏசாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன்." (ஹதீஸ் குத்ஸி)
தொடங்கிய காரியம் தோல்வி அடைந்தால், "நேரம் சரியில்லை" என்று நேரத்தைக் குறை கூறுவதும் பிறமதத்திலிருந்து நம்மிடம் புகுந்து விட்ட ஒரு கலாச்சார ஊடுருவல்தான்.
சகுனம் பார்ப்பது சரியானதல்ல
ஏதேனும் காரியமாக வெளியில் புறப்படும்போது, "எங்கே போகிறீர்கள்?" என்று யாராவது கேட்டு விட்டால் போகிற காரியம் நடக்காது என்று நம்புவதும், நடந்து செல்லும்போது காலில் ஏதேனும் தடுக்கினால் சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வதும், போகிற வழியில் பூனை குறுக்கிட்டால் போகிற காரியம் தடங்கல் ஏற்படும் என்று கருதுவதும்,விதவைப் பெண்கள் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைப்பதும் வடிகட்டிய முட்டாள் தனம்.
நாம் நமது வேலையாகப் போகிறோம். பூனை தனது வேலையாகப் போகிறது. நமது வேலையைக் கெடுப்பது பூனையின் வேலையல்ல என்பதைச் சிந்தித்து உணர வேண்டும்.
பேசிக் கொண்டிருக்கும் போது சுவர்க்கடிகாரம் மணி அடித்தாலோ பல்லி சப்தமிட்டாலோ பேசும் பேச்சு உண்மையானது என்று கடிகாரத்தையும் பல்லியையும் சாட்சிகளாக்குவதும், 'பாலன்ஸ்' தவறி பல்லி விழுந்துவிட்டால், பதறித் துடித்து காலண்டரைத் திருப்பி "பல்லி விழும் பலன்" பார்ப்பதும் ஆகிய இவை யாவும் அந்நியக் கலாச்சார ஊடுருவல்கள் தாம்.
தேதி பார்க்கக் காலண்டர் வாங்கும் போது பல்லி விழும் பலனும், ராசி பலனும் இல்லாத காலண்டர் வாங்கினாலே பெரும்பாலும் இந்த மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடலாம்.மூடக் கொள்கைகளை முற்றிலும் ஒதுக்கிய குர்ஆன் வசனங்களும், பெருமானார் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும், அடங்கிய இஸ்லாமியக் காலண்டர்கள் பரவலாக இப்போது விற்பனைக்கு வந்து விட்டன.
நல்ல சகுனம், கெட்ட சகுனம், எதுவுமே இஸ்லாத்தில் இல்லை. எவ்வித சகுனமும் பார்க்கக்கூடாது. சகுனங்கள் ஒரு போதும் நமது செயல்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தமாட்டா.நல்லதும் கெட்டதும் அல்லாஹ்விடமிருந்தே எற்படுகின்றது என்று நம்புவது, "ஈமான்" என்னும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
அல்லாஹ் விதித்தபடிதான் அனைத்துமே நடக்கும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமாக நமது உள்ளத்தில் வேரூன்ற வேண்டும். அந்த ஈமானின் உறுதி நமது இதயத்தில் இருக்கும் வரை தீமைகள் எதுவும் ஏற்படாது.
"மந்திரிக்கச் செல்லாமலும் சகுனம் பார்க்காமலும் தங்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்த எழுபது ஆயிரம் பேர் எனது சமுதாயத்தில் விசாரனையின்றி சுவர்க்கம் செல்வார்கள்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் புகாரி).
திருமணத்தில் தீய பழக்கங்கள்
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட, 'சீர்திருத்தத் திருமணங்கள்' என்னும் பெயரில், இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் சிலர், இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே!
மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து, மணப்பெண் கழுத்தில் 'தாலிகட்டும்' வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவனுக்குச் சமமான மகிமை அளிப்பதும் திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும், அரிசி அளக்க வைத்து அல்லாஹ்வின் இரணத்தை அள்ளி இறைப்பதும், மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும், பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும், ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும், ஆகிய இவை யாவும் அந்நிய கலாச்சார ஊடுருவல்தான் என்பதில் ஐயமில்லை.
சமுதாயம் சீர் பெற, இதுபோன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப் பிடிக்க வேண்டும்."நீங்கள் மணம் (செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்து விடுங்கள்" (அல்குர்ஆன் 4:4)

என்னும் இறைவசனம் "மஹர் கொடையைக் கொடுத்து மணம் முடியுங்கள்" என்று தெளிவாகக் கூறும்போது இதற்கு நேர் முரணாகப் பெண் வீட்டாரிடம் பணம் கேட்கும் இழி செயலாகிய - தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப் போய்விட்ட வரதட்சணை என்னும் வன்கொடுமை ஒரு கலாச்சார ஊடுருவல்தான்.
இந்தக் கலாச்சாரச் சீர்கேட்டினால் எண்ணற்ற இஸ்லாமிய இளம் பெண்கள் வாழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். பல பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் வரதட்சணை கொடுக்க முடியாமல் வருடங்கள் பல கடந்தும் தம் பெண்மக்களை வாழ வைக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இறையச்சமுள்ள இஸ்லாமிய இளைஞர்களே! நீங்கள் எங்கே சென்றீர்கள்? வரதட்சணை வாங்கித்தான் மணம் முடிக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் பெற்றோர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லுங்கள். மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைவு படுத்துங்கள்.
வீடு கட்டுவதில் மூடப் பழக்கங்கள்
வீடு கட்டுவதற்கு முன், வீட்டு மனையின் அளவையும் அமைப்பையும் பொறுத்து, கட்டடப் பொறியாளரைக் கொண்டோ அல்லது அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ நம் வசதிக்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கட்டுவது நல்லது தான். அதற்காகச் சிலர் வாஸ்து சாஸ்திரம் - மனையடி சாஸ்திரம் என்னும் பெயரில் ஏமாற்றுச் சாஸ்திரங்களில் தங்கள் ஈமானை இழக்கின்றனர். இஸ்லாத்திற்கு எள்ளளவும் தொடர்பில்லாத இந்த வாஸ்து சாஸ்திரமும் ஒரு கலாச்சார ஊடுருவல் தான்.
மனையடி சாஸ்திரத்தில், ஓர் அளவைக் குறிப்பிட்டு இந்த அளவில் வீட்டின் நீள அகலம் இருந்தால் மரணம் ஏற்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படியானால் அந்த அளவைத் தவிர்த்துக் கட்டப்படும் எந்த வீடுகளிலும் யாருமே மரணிப்பதில்லையா?மனையடி சாஸ்திரம் மரணத்தைத் தடுக்காது. இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் இறப்பது நிச்சயம்.
நாம் வசிக்க உருவாக்கும் வீட்டை, நம் வசதிக்கு ஏற்றபடியும், இடத்திற்குத் தக்கபடியும், நீள அகலங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர வாஸ்து சாஸ்திரம் பார்த்து வாசற்படிகளை மாற்றி அமைப்பது, மனித வாழ்க்கையில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்த வல்லதன்று.எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் இன்றி அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் கட்டப் பட்ட வீடுகளில் வசிப்போர் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.இன்னமும் மூட சாஸ்திரங்களை முழுக்க முழுக்க நம்பிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?
கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் அநாச்சாரத்தில் ஆரம்பிக்கப் படுவதும் கட்டுகிற வீடு நமக்கு உரியது என்பதைக் கூட மறந்து நம்மிடம் கூலி வாங்கிக் கொண்டு கட்டுபவர்களின் பிறமதக் கலாச்சாரப்படி அனைத்து வகை ஆச்சாரங்களையும் அனுமதிப்பதும் அங்கீகரிப்பதும் கதவு நிலை வைப்பதற்குக் கூட காலமும் நேரமும் பார்த்து, பூவும் பொட்டும் வைத்து, பூஜை புனஸ்காரங்கள் செய்வதும் காங்கிரீட் போடும் போது ஆடும் கோழியும் அறுத்துப் பலியிடுவதும் கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதும் ஆகிய இவை யாவும் அந்நியக் கலாச்சாரத்தின் ஊடுருவல் தான். இஸ்லாத்துக்கும் இந்தக் கலாச்சாரங்களுக்கும் கடுகளவும் தொடர்பில்லை.
பிறந்தநாள்விழாவும் பெயர் சூட்டு விழாவும்
பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள், ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாக இருப்பின் ஓர் ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும்; இது நபிவழி.ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு, ஒரு பித்அத் உருவாகிவிட்டது.
குழந்தை பிறந்த 40 ஆம் நாள் அன்று தடபுடலாக விருந்து வைத்துப் 'பெயர் சூட்டு விழா' என்று அதற்கொரு பெயர் வைத்து, 'அசரத்தைக்' கூப்பிட்டுப் பெயர் சூட்டப்படுகிறது.
குழந்தை பிறந்தாலும் 40. திருமணத்திலும் 40. இறந்தவர் வீட்டிலும் 40. சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிட ஏற்பட்ட இந்த, 'மண்டல'க் கணக்கிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
பெயர் சூட்டுவதற்கு ஒரு விழா வைத்து அசரத்தைக் கூப்பிட்டுத்தான் பெயர் வைக்க வேண்டும் என்பதில்லை. விருப்பமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்கு அதிக உரிமையுள்ள தாயோ, தந்தையோ கூப்பிட வேண்டியது தான். இதற்கென்று எந்தச் சடங்கும் மார்க்கத்தில் இல்லை.
இன்னும் சிலர் அநாச்சாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தையின் வயதுக் கணக்குப்படி மெழுகுவர்த்தி ஏற்றி, கேக் வெட்டி, "ஹேப்பி பர்த் டே" கொண்டாடுகின்றனர். இது முழுக்க முழுக்க ஓர் அந்நியக் கலாச்சாரம். இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை.
மானங்கெட்ட மஞ்சள் நீராட்டு விழா
பெண்கள் பருவம் அடைந்தால், அதற்காக அழைப்பிதழ் அடித்து, உறவினர்களை அழைத்து, பூமாலை போட்டு, பூப்பு நீராட்டு விழா நடத்துவதும் அதற்காக விருந்து போடுவதும் கேட்பதற்கே கேவலமாக இல்லையா? மறைக்க வேண்டிய ஒரு செய்தியை ஊர் முழுக்கத் தம்பட்டம் அடித்து அறிவிக்க, பிள்ளையைப் பெற்றோருக்கு வெட்கமாக இல்லையா? எங்கிருந்து காப்பியடிக்கப் பட்டது இந்த மானங்கெட்ட கலாச்சாரம்?
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவம் அடைகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் அதற்கும் விழா நடத்த ஆரம்பித்து விடுவார்களோ?
பருவம் அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இறைவன் அளித்த அருட்கொடை. இயற்கையாக ஏற்படும் இந்த மாற்றத்தை பகிரங்கப் படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.தனக்கு ஏற்படும் இயற்கை மாற்றங்களை ஒரு பெண் தன் தாயுடன் பகிர்ந்துக் கொண்டு ஆலோசனைகள் பெறலாம். அதைத் தந்தை கூட அறிய வேண்டும் என்று அவசியமில்லை.
"திருமணத்திற்குத் தயாராக ஒரு பெண் வீட்டில் இருப்பதைப் பலரும் அறிந்தால், பெண் கேட்டு வருவார்கள்" என்று சிலர் காரணம் சொல்வார்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் உறவினர்களுக்கும் அண்டை அயலாருக்கும் தெரியவரும். தாமாகவே பெண் கேட்டு வருவார்கள்.இனியேனும் இதுபோன்ற கேவலமான விழாக்களைத் தவிர்ப்போம். மாற்றுக் கலாச்சாரங்களை ஒதுக்கி இஸ்லாமிய வழி நடப்போம்.
ஜாதகமும் ஜோதிடமும்
எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஏக இறைவனைத் தவிர வேறு எவருமே அறிய முடியாது என்று இறைமறை குர்ஆன் கூறுகிறது:
(இன்னும் நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வைத் தவிர்த்து வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்கள். இன்னும் (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 27 : 65)
ஜாதகம் எழுதி வைப்பதும் ஜோதிடத்தை நம்புவதும் பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கும் புறம்பானவை. இஸ்லாத்திற்கு முரணான இக்கொடிய குற்றங்கள் இன்று பல்வேறு பெயர்களில் பாமரர்களிடம் மட்டுமின்றி படித்தவர்களிடமும் பரவி விட்டன.
பெயர் ராசி, பிறந்தநாள் ராசி, பெண் ராசி, கல் ராசி, கலர் ராசி, இட ராசி, இனிஷியல் ராசி, என்று எத்தனைப் பெயர்களில் அவதாரம் எடுத்தாலும், கைரேகை ஜோதிடம், கம்ப்யூட்டர் ஜோதிடம், கிளி ஜோதிடம், பால் கிதாபு ஜோதிடம், என்று எத்தனைப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இவை அத்தனையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம். இவை அனைத்துமே மூட நம்பிக்கை மட்டுமல்ல, மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும். இவை யாவும் அந்நியக் கலாச்சார ஊடுருவல்தான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்:
"எவர் குறி சொல்பவனிடம் சென்று அவன் சொல்வதை உண்மையென நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது" (அறிவிப்பவர் அபூ ஹுரைரா. ஆதாரம் முஸ்லிம்).
நமது எதிர் காலத்தைக் கணித்துச் சொல்வதாகக் கூறி ஏமாற்றுகிறவன், நாள் முழுவதும் வீதிக்கு வீதி காத்துக் கிடக்கிறான். வீடு வீடாக ஏறி இறங்குகிறான். அன்றைய தினத்தில் எத்தனை பேர் தன்னிடம் ஜோதிடம் பார்ப்பார்கள் என்பதைக்கூட அவனால் கணிக்க முடியவில்லை.தன்னுடைய ஒரு நாள் பொழுதைப் பற்றிக் கூட அறிந்துக் கொள்ள முடியாதவன் அடுத்தவருடைய எதிர்காலத்தை கணித்துச் சொல்வான் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்?
ஜோதிடம் என்றதும், பிற மத ஜோதிடக் காரர்களை மட்டும் என்று பலரும் கருதுகின்றனர். 'பால் கிதாபு' என்பதும் அரபுப் பெயர் தாங்கிய ஒரு வகை ஜோதிடமே! பால் கிதாபு பார்க்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் ஜோதிடக் காரர்களே! என்பதை மறந்து விடக்கூடாது.
பால் கிதாபுப் பார்த்துப் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்பவர்களின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் கவனித்தால் அவர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கும். தமக்குத் தாமே பால் கிதாபு பார்த்துப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வக்கற்றவர்கள், மற்றவர் வாழ்க்கையைச் சீர்படுத்துவார்கள் என்று எப்படி நம்புவது?
"ஒவ்வொருவரும் பிறக்கும்போது ஏற்படும் கோள்களின் சஞ்சாரமே நல்லதும் கெட்டதும் நடப்பதற்குக் காரணம்" என்று நம்பும் புத்தி கெட்டவர்கள், புயல் வெள்ளத்திலும், பூகம்பத்திலும் ஒட்டு மொத்தமாக ஓர் ஊரே அழியும் போது, அந்த ஊரில் வாழ்ந்த, பல்வேறு காலங்களில் பிறந்த அனைவருக்குமே எப்படி ஒரே ஜாதகம் அமைந்தது? என்பதைக்கூட சிந்திக்க வேண்டாமா?
ஜாதகமும் ஜோதிடமும் மூட நம்பிக்கைகளில் முதலிடம் வகிப்பவை என்பதை உணர்ந்து, முஸ்லிம் சமுதாயம் முற்றிலும் விடுபட வேண்டும். இறை நம்பிக்கையில் இன்னும் உறுதி கொள்ள வேண்டும்.
தாயத்தும் தகடுகளும்
அல்லாஹ்வின் வசனங்களை, அரபி எண்களாக உருமாற்றி அப்படியே சுருட்டி அலுமினியக் குழாய்களில் அடைத்து, கருப்பு நூலில் கோர்த்துக் கழுத்திலும் கைகளிலும் இடுப்பிலும் கட்டிக் கொண்டால், பில்லி சூனியம் பேய் பிசாசுகளை விட்டும் பாதுகாப்புக் கிடைக்கும் என்று சில அரைக் கிறுக்குகள் சொன்னதை நம்பி, ஆயத்துகளைத் தாயத்துகளாக்கித் தொங்க விட்டுக் கொண்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்:
"எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ நிச்சயமாக அவர் இறைவனுக்கு இணை வைத்துவிட்டார்" (ஆதாரம்: அஹ்மத்).
தற்காப்புக்காகப் பலரும் கராத்தே கற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டு வெறும் தாயத்துகளில் தற்காப்புத் தேடுபவர்களின் மடமையை என்னவென்பது?
தாயத்துகளை நியாயப் படுத்துவோர், "அதில் குர்ஆன் வசனங்கள்தாமே எழுதப்படுகின்றன" என்று கூறுவர். அப்படியானால், குர்ஆன் ஆயத்துகளைக் கட்டிக் கொண்டு மலம் கழிக்கச் செல்லலாமா? என்று கேட்டால், "ஆயத்துகளுக்கு பதிலாக அரபி எண்கள்தாமே எழுதப்படுகின்றன?" என்று அறிவு(?)ப்பூர்வமான பதில் கேள்வி கேட்பர்.இதிலிருந்து எண்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எண்கள் எப்படி மனிதனைப் பாதுகாக்கும்? என்பதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களாக இருக்கின்றனர்.
சில தாயத்துகளைப் பிரித்துப் பார்த்தால், சினிமா டிக்கட்டுகளும், பஸ் டிக்கட்டுகளும் கூட இருக்கும். இவை அவசரமாகத் தயாரிக்கப்பட்ட, "அர்ஜன்ட்" தாயத்துகள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம் தான்.தங்கள் வயிற்றை நிரப்ப, கயிற்றை விற்று ஏமாற்றுகிறார்கள். இன்னுமா நீங்கள் ஏமாறப் போகிறீர்கள்? ஷிர்க்கை ஏற்படுத்தும் தாயத்துகளை அறுத்து எறியுங்கள்.
இன்னொரு அநாச்சாரக் கலாச்சாரம் உண்டு. அதுதான் அரபி எண்களை குறுக்கெழுத்துப் போட்டிக் கோடுகளில் அடக்கிப் பித்தளைத் தகடுகளை பிரேம் போட்டு மாட்டி வைத்தால், வீட்டுக்குப் பாதுகாப்பு என்று மூளையற்றவர்கள் சொன்னதை நம்பி மூலைக்கு மூலைத் தொங்க விடுவது.
இவர்கள் இறை வணக்கங்களால் தங்கள் இல்லங்களை நிரப்புவதை விட்டு, ஈயம் பித்தளைத் தகடுகளில் தங்கள் ஈமானைப் பறி கொடுத்தவர்கள்; பில்லிச் சூனியத்திலிருந்து பாதுகாக்கும் என்று நம்பிப் படிகாரக் கற்களை வீட்டுப் படிகளில் மாட்டி வைத்தவர்கள்; கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று புத்தி கெட்டுப் போய் பூசணிக்காயைக் கட்டி வைத்தவர்கள்; வீடுகளில் மட்டுமின்றி, வியாபார நிறுவனங்களிலும் இந்த 'அஸ்மா'த் தகடுகளை மாட்டி வைத்தால், வியாபாரம் பெருகும் என்று மூட நம்பிக்கைக் கொண்டவர்கள்.

இந்தத் தகடுகளை விற்பனை செய்வோர், தாங்கள் தயாரித்தத் தகடுகள் முழுவதும் விற்றுத் தீரும்படித் தங்களுக்குத் தாங்களே தகடு செய்துக் கொள்ளாமல், கடைக் கடையாய் அலைவதைக் கண்ட பிறகாவது, இது ஏமாற்று வேலை என்பதை உணர வேண்டாமா?இனியேனும், இவைகள் யாவும் இஸ்லாத்திற்கு முரணான மூடப் பழக்கங்கள் என்பதை உணர வேண்டும்
.தரமானப் பொருளும், நியாயமான விலையும், கனிவானப் பேச்சும்தான் வியாபாரத்தைப் பெருக்குமே தவிர, பித்தளைத் தகடுகளும் பிரேம் போட்ட அஸ்மாக்களும் ஒரு போதும் வியாபாரத்தைப் பெருக்காது. மாறாக, பாவப் படுகுழியில் கொண்டு போய் தள்ளும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மரணித்தவர் வீடுகளிலும்
அன்றாட வாழ்க்கையின் அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவல் முஸ்லிமின் மரணத்தைக் கூட விட்டுவைக்கவில்லை.
ஒரு மனிதன் இறந்து விட்டால் இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தி அடைய திதி என்றும் திவசம் என்றும் புரோகிதர்ளைக் கொண்டு பிறமதத்தவர் நடத்தும் காரியங்கள் அவர்களுடைய கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் இவை இஸ்லாத்தில் உள்ளவை அல்லவே!
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த போதே அவர்கள் மிகவும் அன்புடன் நேசித்த அவர்களுடைய மனைவி, நமது அன்னை ஹதீஜா (ரலி) அவர்களும் இன்னும் எத்தனையோ அருமை சஹாபாக்களும் இறந்தனரே! அவர்களுக்கெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 7 ஆம் நாள், 40 ஆம் நாள் என்று எந்த பாத்திஹாவும் ஓதியதாக ஆதாரப்பூர்வமான எந்த நபி மொழியும் நமக்கு அறிவிக்க வில்லையே!
இஸ்லாமியப் பெயர் தாங்கிய புரோகிதர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உருவாக்கிக் கொண்ட இந்த பாத்திஹாக்கள் அனைத்தும் பிறமதக் கலாச்சார ஊடுருவல் தானே தவிர இஸ்லாமியக் கலாச்சாரம் அல்ல.
வணக்கம் கூறுதல்
ஒருவரையொருவர் சந்திக்கும் போது அழகிய முகமன் கூறி அறிமுகம் செய்து கொள்வதற்கு இஸ்லாம், பொருள் பொதிந்த "அஸ்ஸலாமு அலைக்கும் (தங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக)" என்னும் வாக்கியத்தையும் அதனைக் கேட்டவர் மறுமொழியாக, "வஅலைக்குமுஸ்ஸலாம் (அவ்வாறே தங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக)" என்னும் அற்புத பதிலையும் சொல்லித் தருகிறது.ஆனால் சிலர் மாற்று மத நண்பர்களைக் கண்டால், "வணக்கம்" என்று சொல்வதைப் பரவலாகக் காண்கிறோம்.
வணக்கம் என்னும் சொல்லின் பொருள், "நான் உங்களை வணங்குகிறேன்" என்பதாகும். மனிதனை மனிதன் வணங்கலாமா? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகிய லாஇலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமாவுக்கே முரணானதல்லவா?, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை" என்னும் திருக்கலிமாவை மன, மெய், மொழியால் மனதாரச் சொன்ன ஒரு முஸ்லிம் இன்னொரு மனிதனை வணங்குவதாகச் சொல்வது மிகப் பெரிய பாவம் அல்லவா?
நம்மில் பலர் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வணக்கம் என்னும் தமிழ்ச் சொல்லும் 'நமஸ்காரம்', 'நமஸ்தே' என்னும் வடமொழிச் சொற்களும் கூட ஓர் அந்நிய கலாச்சாரம்தான். இவை அனைத்தும் வணங்குதல் என்னும் அதே பொருளையே தருபவையாகும்.
இந்த அந்நிய கலாச்சாரம் நம்மில் ஊடுருவியதால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த அழகிய இஸ்லாமியக் கலாச்சாத்தைப் புறக்கணித்தவர்களாகி விடுகிறோம் என்பது ஒரு புறமிருக்க, 'வணக்கம் கூறுதல்' மனிதனை மனிதன் வணங்கும் ஷிர்க் என்னும் இணைவைத்தலுக்கே கொண்டு போய் சேர்க்கும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் நிறுத்த வேண்டும்.
இஸ்லாமிய சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரிந்து போனதற்கு, அந்நியக் கலாச்சார ஊடுருவல்கூட ஒரு காரணம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம். அந்நியக் கலாச்சாரச்சத்தின் ஊடுருவல் காரணமாகத்தான் நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பல்வேறு காரியங்கள் இஸ்லாத்திற்கு முரணானவையாக இருந்தும், அவற்றை இஸ்லாத்தின் பார்வையில் தவறானவை என்று ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்துச் சொல்லியும் ஏற்றுக் கொள்ள பலர் மறுக்கின்றனர்.
இக்கட்டுரையை முடிப்பதற்கு முன் மகத்துவமிக்க மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியை மறுபடியும் ஒரு முறை நினைவு படுத்திக் கொள்வோம்:
"எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" மற்றொரு அறிவிப்பில், "அவர்களையே சார்ந்தவர்" என கூடுதலாக இன்னொரு வாசகமும் இடம் பெற்றுள்ளது.
இறைவன் தனது திருமறையில் இயம்பியவைகளையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் பொன்மொழிகளில் போதித்தவைகளையும் உள்ளது உள்ளபடி உணர்ந்து, நம்மில் நுழைந்து விட்ட அந்நிய கலாச்சார ஊடுருவல்களைக் கண்டு பிடித்து களையெடுத்தால், அறியாமையால் ஏற்பட்டுப் போன பிரிவுகளும் பிளவுகளும் நீங்கி ஒன்று பட்ட உயரிய சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் திகழும். இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: சகோதரர் அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா

இக்கட்டுரையாசிரியரான தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தியைச் சேர்ந்த சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்கள் தமிழில் இஸ்லாமியக் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார். ஆக்கூர் ஓரியண்டல் மேனிலைப் பள்ளியிலும் பின்னர் உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியிலும் கல்வி பயின்ற இவர் தற்போது சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.

'கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்',
'புண்ணியபூமிக்கு ஒரு பயணம்',
'மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்',
'மரணத் தொடக்கம் மறுமை வரைக்கும்'
என்ற பெயர்களில் நூல்களை எழுதியுள்ள இவர்,
என்ற பெயரில் வலைப்பதிவையும் நடத்தி வருகிறார்.

2007ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! - சத்தியமார்க்கம்.காம்

Feb 3, 2008

புகழ்வதற்கு அதிகத் தகுதி உடையவர்?

உறவினர் இல்லத் திருமண விழா ஒன்றில் சிலர் ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். பேச்சு தவ்ஹீதின் பக்கம் சென்றது. பொதுவாகவே ஏகத்துவக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் உயரிய எண்ணத்தில், எப்போது வாய்ப்பு கிடைக்கும் ஏகத்துவக் கொள்கையை எல்லோருக்கும் எடுத்தியம்புவோம் எனக் காத்திருப்பார்கள் அல்லவா? அவ்வகையில் இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.

எங்கள் உறவினர் மத்தியில் நற்குணத்திலும் நல்லொழுக்கத்திலும் மிகவும் நற்பெயர் பெற்ற எனது நெருங்கிய உறவினர் தமது நண்பர் ஒருவரிடம் என்னைப் பற்றி புகழ்ந்து அறிமுகம் செய்து செய்துக் கொண்டிருந்தார். என்னைப் பற்றி உயர்வான அபிப்பிராயங்களைச் சொல்லி இறுதியில் 'ஆனால் இவர் நஜாத்' என்று முடித்தார். என்னைப்பற்றி உயர்வாகச் சொன்ன அனைத்துக்கும் நான் தகுதியானவனா? என்பது எனக்குத் தெரியாது, ஆனால் என்னை (இவர்கள் மொழியில் நஜாத் நமது மொழியில்) தவ்ஹீத் என்று அறிமுகம் செய்தது மட்டும் எனக்குப் பெருமையாக இருந்தது. ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை தவ்ஹீத் என்று சொல்வதில் தான் பெருமை அடைய முடியும் அல்லவா!

பேச்சு களைகட்டத் தொடங்கியது. எனது உறவினராகிய அவர் தொடர்ந்தார். தனது மைத்துனர் துபாயில் ஒரு பெரிய ஷெய்கிடம் 'நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது தவறா? எனக் கேட்டாராம், அதற்கு அந்த ஷெய்க் 'நபி (ஸல்) அவர்களைப் புகழாமல் வேறு யாரைப் புகழ்வது?' என பதில் சொன்னாராம். அதற்கு இவர் எங்கள் தமிழ் நாட்டில் ஒரு கூட்டம் 'நபி (ஸல்) அவர்களைப் புகழக்கூடாது' எனச் சொல்கிறார்கள் என்று சொன்னாராம்.

இப்படி ஒரு செய்தியைச் சொன்ன இவரும், துபாயில் ஷெய்கிடம் பத்வா கேட்ட இவர் மைத்துனரும் பாமரர்களல்ல. நன்றாகப் படித்தவர்கள், நாலும் தெரிந்தவர்கள், வணக்க வழிபாடுகளில் பேணுதலானவர்கள், இறையச்சம் உடையவர்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது இவர்கள் கூட இன்னும் தவ்ஹீத் என்றால் என்ன வென்று புரிந்துக் கொள்ளவில்லையே! அப்படியிருக்க பாமர மக்களை நாம் குறைபட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை.

எனக்கு ஒரு உதாரணம் சொல்லத் தோன்றுகிறது. 'குழந்தைக்கு பால் கொடுக்கலாமா என்று பண்டிதர் அல்ல பாமரரிடம் கேட்டாலும் 'பாலை குழந்தைக்குக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுப்பது?' என்று தான் பதில் சொல்வர். கையில் வைத்திருக்கும் பாலைக் காண்பித்து 'இந்தப் பாலை குழந்தைக்கு கொடுக்கலாமா?' எனக் கேட்டால் அந்தப் பாலை பரிசோதனை செய்து நல்ல பால் தானா அல்லது கெட்டுப் போனதா? பசும் பாலா, கள்ளிப்பாலா, விஷம் கலந்த பாலா நல்ல பாலா என்பதை யெல்லாம் உறுதி செய்த பின்னர் தானே இந்தப் பாலை குழந்தைக்குக் கொடுக்கலாமா கூடாதா என முடிவு செய்ய இயலும்.

அது போல நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது தவறா? என்று அவர் கேட்டதை விட, எங்கள் தமிழ் நாட்டில் ரபீவுல் அவ்வல் மாதம் 12 நாளும் பள்ளிவாசலிலும் வீடுகளிலும் சுப்ஹான மௌலிது என்று ஓதுகிறோம். அந்த மௌலிதுப் புத்தகம் இது தான் என்று சுப்ஹான மௌலிது கிதாபையும் காண்பித்து அதை ஓதுவதற்காக கூலிக்கு ஆள்பிடித்து, கும்மாளம் அடிக்கிறோம் என்று விலா வாரியாக விளக்கிச் சொல்லியிருந்தால் அந்த ஷெய்க் சுப்ஹான மௌலிது கிதாபைப் படித்துப் பார்த்து விட்டு கிழித்து வீசியிருப்பார்.

இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? நபி (ஸல்) அவர்களைப் புகழாமல் வேறு யாரைப் புகழ்வது? என்று துபாய் ஷெய்க் சொன்ன வார்த்தைகளை அப்படியே ஒப்புவித்த அந்த எனது உறவினர் அவர்கள், அன்று நாங்கள் அமர்ந்து உரையாடிய அதே ஊரைச் சேர்ந்தவர். சரி இந்த ஊரில் நபி (ஸல்) அவர்கள் எப்படி புகழப்படுகிறார்கள் எனப் பார்ப்போமா?

தஞ்சையை அடுத்துள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர் அது. இவ்வூரில் எனக்குத் தெரிந்து பல வருடங்களாக ரபீவுல் அவ்வல் 12 நாட்களும் பள்ளிவாசலில் மௌலிது ஓதி இரவில் தினமும் தப்ருக் என்ற பெயரில் சாதாரண இனிப்புப் பண்டங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் ரபீவுல் ஆகிர் 12 நாட்களும் முஹ்யித்தீன் ஆண்டவர்(?) மௌலிது ஓதி தினமும் இரவில் அனைத்து மக்களுக்கும் கமகமக்கும் நெய்ச்சோறு நிறையவே வழங்கப்படும்.

இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?

ரபீவுல் அவ்வல் மௌலிது விழா வெறும் பாத்திஹாவுடன் சிம்பிளாக முடிந்து விடும். ரபீவுல் ஆகிர் முஹ்யித்தீன் மௌலிது விழா ஊர் முழுக்க தோரணம் கட்டி, பல்லாயிரம் படி சோறாக்கி பள்ளிவாசலில் வைத்து விநியோகித்து, நான்கு கொடி தூக்கி நகர் முழுதும் வலம் வந்து, இந்த ஊர்க்காரர்கள் கொண்டாடுகிற அழகே அழகு?

இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளாகிய மீலாதுன்னபிக்கு அரசாங்கம் விடுமுறை அளித்ததனால் தான் இவர்கள் ஊரில் உள்ள பள்ளிக் கூடம் விடுமுறை விடப்படுகிறது. அதற்கு முன்பெல்லாம் மீலாது தினத்தன்று இவர்கள் ஊர் பள்ளிக் கூடம் விடுமுறை விட்டதிi;லை. ஆனால் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் பிறந்த நாள் அன்று அந்தக் காலத்திலிந்தே பள்ளிக் கூடம் எல்லாம் விடுமுறை நாளாகும்.

இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?

அயல் நாடுகளில் வாழும் இந்த ஊர்க்காரர்கள் பலரும் தங்கள் விடுமுறை காலத்தை கொடிச் சீலை? என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திரு விழாவில் கலந்து கொள்வதற்கேற்ப மாற்றி வைத்துக் கொள்வாhகள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளாகிய மீலாது நபிக்கு தங்கள் விடுமுறை காலத்தை மாற்றி வைத்து இந்த ஊர்க்காரர்கள் யாரும் அரபு நாடுகளிலிலிருந்து வந்ததாகத் தெரிய வில்லை.

இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?

இதையெல்லாம் படிப்பவர்கள் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களின் மெளிலிதுக்குப் பதிலாக நபி (ஸல்) அவர்களின் மௌலிதை சிறப்பாக நாம் ஓதச் சொல்வதாகவோ, அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பிறந்த நாளுக்குப் பதிலாக நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கோலாகலமாக கொண்டாடுங்கள் என்று நாம் சொல்வதாகவோ தயவு செய்து நினைத்து விட வேண்டாம். இரண்டையுமே மிகவும் வன்மையாக நாம் கண்டிக்கிறோம். இவை எதுவுமே இஸ்லாத்தில் உள்;ளவை அல்ல என்றும், மிகப் பெரும் பாவங்கள் என்றும் சொல்கிறோம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவர்கள் காட்டித் தராத அனைத்து விழாக்களும் வழி கேடுகள். அனைத்து வழிகேடுகளும் நரகப் படுகுழிக்கு நம்மை இழுத்துச் செல்லும்.







Jan 16, 2008

அரபு நாட்டு வாழ்வு

வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே

உலக வரைபடம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து மற்ற எல்லா நாடுகளையும் போல் வளைகுடா நாடுகளும் அந்த வரைபடத்தில் இருக்கத்தான் செய்தன. ஆனால் எத்துனை பேருக்கு இந்த வளை குடா நாடுகளைப்பற்றி அப்போது தெரியும்? மக்காவும் மதீனாவும் உலக முஸ்லிம்களின் புனித நகரங்களாக இருப்பதால் இவ்விரு நகரங்களைப் பற்றி வேண்டு மானால் முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் இவ்விரு நகரங்களையும் உள்ளடக்கிய சவூதி அரேபியா என்ற நாட்டைப் பற்றிக் கூட முழுமையாக அறிந்தவர் மிகச் சிலரே.


எண்ணெய் வளம் என்னும் மாபெரும் பொக்கிஷம் இந்த பாலைவன மணலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட போது அகில உலகமும் தன் பார்வையை அரபு நாடுகளின் மீது பதித்தது. அகில உலகமும் எண்ணெய் உபயோகத்திற்கு ஆட்பட்டபோது அதன் வளத்தை வறண்ட அரபுப் பாலைவனத்தின் அடியில் உருவாக்கி உலகின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர்களாக முஸ்லிம்களை ஆக்கிவைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.


1970 களில் வெளி உலகத்துக்குத் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்ட வளைகுடா நாடுகள், வெகு வேகமாக முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தன. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மேற்கத்திய நாடுகள் அடைந்த முன்னேற்றத்தை விட அதிக முன்னேற்றத்தை ஒரு பத்தாhண்டு காலத்தில் வளைகுடா நாடுகள் அடைந்தன என்றால் அது மிகையாகாது.


வளைகுடா நாடுகள் தங்களின் எதிர்காலத் திட்டங்களை செயல் படுத்து வதற்குத் தேவையான பொருளாதார ஆற்றல் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கப் பெற்றாலும், மனித வள ஆற்றலுக்கு கைகொடுத்த பெருமை மிக்கவர்களில் இந்தியர்களாகிய நம் பங்கு முக்கியமானது என்று சொல்லலாம்.


துவக்கத்தில் பர்;மா ரங்கூன் போன்ற நாடுகளையும், அதன் பின்னர் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளையும் வளப்படுத்திய பெருமைக்குரியவர்களாகிய நம்மைச் சென்ற நூற்றாண்டில் வளைகுடா நாடுகள் தம் வாசற்கதவுகளைத் திறந்து வைத்து ஆரத்தழுவி வரவேற்றதையும், இன்றளவும் தொடர்ந்து நம்மை வாழவைத்துக் கொண்டிருப்பதையும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.


இன்று நாம் வாழும் செழிப்பான வாழ்வும், நமது பொருளாதார வளமும், வளைகுடா வாழ்க்கையின் மூலம் நாம் அடைந்த பயன்களே. ஏழ்மையிலும் வறுமையிலும் உழன்ற எத்தனையோ சகோதரர்கள் கற்பனையிலும் கண்டிராத வளமான வாழ்க்கை வாழ்வது இறைவன் நமக்களித்த இந்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரத்தினால் தான் என்றால் அது மிகையல்ல.


வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், போன்றவற்றால் விழி பிதுங்கி நின்ற நமக்கு வளை குடா நாடுகள் தம் வாசற்கதவைத் திறந்து வைத்து வரவேற்ற போது இன் முகத்தோடு ஏற்றுக் கொண்டோம். வளை குடா நாட்டில் அடியெடுத்து வைத்த பின்னர் தான் நம்மில் பெரும்பாலானோரின் பொருளாதார வளம் மேம்பாடு அடைந்தது.கற்பனையில் கூட நாம் நினைத்துப் பார்த்திராத எண்ணற்ற வசதிகளை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரமே.


பெற்றோரை, உற்றாரைப் பிரிந்தோம், மனைவியுடன் வாழவேண்டிய இல்லற வாழ்க்கையை மறந்தோம். கொஞ்சிக் குலாவ வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளின் பாசம் நமக்குக் கிடைக்காமற் போனது. இவையெல்லாம் உண்மை தான். பல சுகங்களைப் பெறுவதற்காக சில இழப்புகளை சந்திக்கத்தான் வேண்டும். அனைத்து சுகங்களையும் ஒருங்கே பெற்ற யார் தான் இந்த அவனியில் இருக்கின்றார்?


பொதுவாகவே வறுமை தான் மனிதனை சில சமயம் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது. மற்றவை அனைத்தும் இரண்டாம் பட்சமே. பொருளாதாரத்தில் ஒருவன் ஏற்றம் பெற்றால் மற்றவைகளை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. பொருளாதாரத் தேவை நூறு சதவிகிதம் நிறைவு பெற்றதாக திருப்தி அடைந்த மனிதன் உலகில் யாரும் இல்லை என்றாலும், தமது அத்தியாவசித் தேவைகள் பூர்த்தியடைந்தவர்கள் பலருக்கும் இந்த வளை குடா வாழ்க்கை ஒரு வரமே.


மண் குடிசைகள் மாளிகைகளாக உருவெடுத்தன. மண் வீட்டில் கழித்த நாட்கள் நமக்கு இப்போதும் மறந்து விடவில்லை. ஆனாலும் இறைவனின் பெரும் கிருபையால் வசதிமிக்க மாடி வீடுகளில் இப்போது வசிக்கிறோமே. இதற்குக் காரணம் வளைகுடா வாழ்க்கை அல்லவா? வளைகுடாவில் வந்து மண் சுமந்தோம் என்றாலும் நமது எதிர்காலச் சந்ததியினர் மண் சுமக்கத் தேவையில்லாத அளவுக்கு அவர்களை மாடி வீடுகளில் வாழச் செய்து அவர்களின் துயர் துடைத்தோமே.


உடுத்த ஒரு துணிக்கு மாற்றுத் துணி இல்லாமல் சிரமப்பட்ட காலமெல்லாம் இப்போது போய்விட்டது. புத்தாடை என்றால் நோன்புப் பெருநாளைக்கு மட்டும் தான் அதுவும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் நமது பெற்றோர் வாங்கிக் கொடுத்த விலை குறைந்த ஆடைகளை வேண்டா வெறுப்பாக அணிந்தோம். சக நண்பர்கள் அணிந்த சட்டைகளை ஏக்கத்துடன் பார்த்தோம். இன்று விதவிதமான ஆடைகளை அணிகிறோம்.


கட்டிய மனைவிக்கு ஒரு நல்ல புடவை வாங்கிக் கொடுக்க இதயம் முழுக்க ஆசை இருந்தும் இருக்கின்ற பணம் போதாத நிலையில் இதயத்தை கல்லாக்கி சாதாரணப்புடவை வாங்கிக் கொடுத்தோம். இன்று அவள் விரும்பியபடி விலையுயர்ந்த புடவைகளை வாங்கிக் கொடுத்து அந்த முகத்தில் மகிழ்ச்சியைக் காண்கிறோம். நம் அன்புக் கண்மணிகளுக்கு வகை வகையான உடைகளை வாங்கிக் கொடுக்கிறோம்.


குளிர் சாதனப் பெட்டியும், வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டியும், ஒரு காலத்தில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்துபவை என்ற நிலை மாறி இன்று நம் அனைவரின் வீடுகளையும் இந்த ஆடம்பரப் பொருட்கள் அலங்கரிக்கின்றன. பாழாய்ப் போன சீரியல்களில் மயங்கிப் போனவர்களை விடுங்கள், பயன்மிக்க இஸ்லாமிய நிகழ்ச்சிகளைப் பார்த்து தங்களைப் பக்குவப் படுத்திக் கொள்ள வழிவகுத்த பயனுள்ள தொலைக் காட்சிப் பெட்டிகள் நமக்கு எப்படி வந்தன? இதற்கெல்லாம் தேவையான பொருளாதார வளம் நமக்கு எப்படி வந்தது? வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம் அல்லவா?


மேற்கல்வி கற்க வசதி இல்லாமல் ஆரம்பக் கல்வி கற்றதோடு நமது வாழ்வு அஸ்தமித்து விட்டாலும் நம் அன்புக் குழந்தைகளை இன்று மேற்கல்வி வரை தொடர வைத்தோமே! கல்வி வியாபாரமாகிவிட்ட இக்காலத்தில் நம் குழந்தைகளளை இலட்சக் கணக்கில் செலவு செய்து மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியில் கல்லூரிகளிலும் பட்டம் பெற வைத்தோமே இதற்கெல்லாம் பொருளாதாரம் நமக்கு எப்படி வந்தது? வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம் அல்லவா?


முஸ்லிம்கள் நலனுக்காகப் பாடுபடும் எத்தனையோ இயக்கங்கள் அவர்களின் செயல்பாடுகளைச் சீரிய முறையில் செயல்படுத்தத் தேவையான மிகப் பெரும் பொருளாதார உதவிகளை வளைகுடா நாடுகளில் வசிக்கும் நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் வாரி வாரி வழங்கி வருகின்றோமே. தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உள்ள மக்கள் இதனைக் கொண்டு பயன் பெறுகிறர்hகளே பயன் பெற்ற நெஞ்சங்கள் வளைகுடாவில் பணிபுரியும் நமக்காக இறைவனிடம் இறைஞ்சுகிறார்களே இதற்காகவாவது நாம் சில தியாகங்களைச் செய்தால் தான் என்ன?


புனித ரமளான் மாதம் வந்து விட்டால் போதும் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு இயக்கங்களும் கடமையான ஃபித்ராத் தொகையை வசூலித்து பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள் மகிழ்ச்சியாகப் பெருநாள் கொண்டாடி மகிழ்வதற்காக அனுப்பி வைக்கிறார்களே. நமது சமுதாயம் அடையும் இந்த மகிழ்ச்சிக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை செலுத்துகிறோமே. இதற்குக் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை இறைவன் நமக்கு அளித்த வரம் அல்லவா?


இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்த எத்தனையோ முஸ்லிம் சகோதரர்கள் வளைகுடா நாடுகளுக்கு வந்த பின்னர் தான் இங்கு நடைபெறும் பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டனர். அவரவர் தம் தாயகத்துக்கு விடுமுறையில் செல்லும் போது தத்தம் குடும்பத்தினருக்கும் உண்மையாண இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி தம் குடும்பத்தினரையும் திருத்தினர். அதற்கான அத்துனை வாய்ப்புகளையும் நமக்கு இந்த வளைகுடா வாழ்க்கை தானே ஏற்படுத்தித் தந்தது.


தமிழகத்தின் சில ஊர்களைச் சேர்ந்த மக்கள் ஒரு காலத்தில் குடும்பத்துடன் வேறு ஊர்களுக்குக் குடி பெயர்ந்து கூலி வேலை பார்த்து மிகவும் சிரமத்துடன் தங்கள் வாழ்நாட்களைக் கழித்தவர்கள் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்புகள் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே வந்து தமது கடின உழைப்பால் அபரிமிதமான பொருளீட்டி இன்று இறைவனின் பேரருளால் வாழ்வாங்கு வாழ்கின்றனர் இதற்குக் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை இவர்களுக் கிடைத்த வரமல்லவா?


தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் இயங்கி வரும் எத்தனையோ இஸ்லாமியக் கல்வி கூடங்கள் ஒரு காலத்தில் மிகவும் சிரமத்துடன் நாட்களை நகர்த்தின. அந்தக் கல்விக் கூடங்களில் கல்வி பயின்று பின்னர் வளைகுடா நாடுகளுக்கு வந்த, முன்னாள் மாணவர்களில் கொடைத்தன்மை மிக்க எண்;ணற்றோர் செய்த உதவிகள் மூலம் இன்று அந்தக் கல்விக் கூடங்களில் பல மிக நல்ல நிலையில் இயங்குவதுடன் ஏராளமான மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவே இதுவும் இறைவன் நமக்களித்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரம் தானே.


பல்வேறு குண நலன் கொண்டவர்களுடன் பழகும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. நமது மாறுபட்ட குணங்களை மாற்றிக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும், இந்த வளைகுடா வாழ்க்கை நமக்கு பயிற்சியைத் தந்தது. பக்குவத்தை அளித்தது. பெற்றோருக்கு அடங்காமல் தான்தோன்றித் தனமாக தம் வாழ்க்கையைக் கழித்த எத்தனையோ இளைஞர்கள் வளைகுடா நாடுகளுக்கு வந்த பின்னர் தங்கள் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொண்டனர். கட்டுப்பாடான இந்த வாழ்க்கை அவர்களின் எதிர் காலத்தைச் சீர்படுத்திக் கொள்ள வழி வகுத்தது.


நமக்குத் தேவையான உணவை நாமே சமைத்துக் கொள்ளும் போதும், நமது துணிகளை நாமே துவைத்துக் கொள்ளும் போதும் நம் வீடுகளில் நம் தாயோ மனைவியோ உணவு சமைக்கவும் துணி துவைக்கவும் படும் சிரமங்களை நம்மால் உணர்ந்துக் கொள்ளவும், புரிந்துக் கொள்ளவும் முடிந்தது. அதன் மூலம் அவர்கள் மீது நமக்கிருக்கும் அன்பும் பாசமும் அதிகரித்தது.


தத்தம் இல்லங்களில் தமது துணிகளை மட்டுமின்றி தமது மனைவியின் துணிகளையும் துவைத்துக் கொடுத்து மனைவியிடம் நற்சான்று வாங்கிய நல்ல கணவன்மார்களை விட்டு விடுவோம். அப்பாடா! இப்போது நமது துணியை மட்டும் துவைத்தால் போதும் என்று மகிழ்ச்சியில் திளைப்பவர்களும் இருக்கிறார்கள். ('அனுபவம் பேசுகிறது' என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள்) அப்படிப் பட்டவர்களுக்கும் வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே.


தம் வாழ்க்கையில் ஏற்பட்ட சில குறைகளை காரணம் காட்டி வளை குடா வாழ்க்கை ஒரு சாபம் என்று சொல்லக் கூடிய பலரும் இன்னமும் வளைகுடாவில் வாழ்ந்துக் கொண்டு தான் நாக்கூசாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்படிச் சொல்பவர்களை யாரும் நிர்ப்பந்தப் படுத்தி வளைகுடாவில் வாழச் சொல்ல வில்லையே. இதனைச் சாபம் என நினைப்பவர்கள் தாராளமாக அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் செல்லட்டும். அவர்களை யார் தடுத்தது? அவர்கள் தாங்கள் இந்த வரத்தை அனுபவித்துக் கொண்டே சாபம் என்று கூப்பாடு போடுகின்றனர்.


இதனைச் சாபம் என்று நினைப்பவர்களே தயவு செய்து உங்கள் தாயகங்களுக்குச் சென்று விடுங்கள். வளைகுடா வாழ்க்கை என்னும் வரத்தை அனுபவிக்க இன்னும் இலட்சக் கணக்கானோர் தாயகத்தில் காத்திருக்கின்றனர். தயவு செய்து அவர்களுக்கு வழி விடுங்கள்.


இன்னும் ஏராளனமான சமுதாயப் பணிகள் போதிய பொருளாதாரமின்றித் தேங்கிக் கிடக்கின்றன. நாமும் வளைகுடா நாடுகளுக்குச் சென்று ஈட்டும் பொருளாதாரத்தில் எண்;ணற்ற ஏழைகளை வாழவைப் போம் என்ற நல்ல நோக்கத்துடன் காத்திருக்கும் இளைஞர்கள் இங்கு வருவார்கள். அவர்களின் பொருளாதாரா உதவியால் அந்தந்த நாடுகளில் வாழும் அனைத்து சமுதாயத்தினரும் அளப் பெரும் நன்மைகளை அடையட்டும்.


சில வருடங்கள் வளைகுடா நாடுகளில் தங்கள் வாழ்க்கையைக் கழித்து விட்டு தாங்கள் மனம் திருந்தி (?) விட்டதாகச் சொல்லி பயணத்தை முடித்துக் கொண்டுச் சென்றவர்கள் தாங்கள் கொண்டு சென்ற பணம் முழுவதையும் செலவழித்து முடித்த பின் மேற் கொண்டு கடன் வாங்கிவிட்டு, வாங்கிய கடனை அடைப்பதற்காக தம் முன்னாள் நண்பர்களைத் தொடர்பு கொண்டு மறுபடியும் ஒரு விசாவுக்காக ஏற்பாடு செய்யச் சொல்வதைக் கண்கூடாகக் காண்கிறோம்.


இவ்விதம் சாபம் என்ற கட்சியிலிருந்து வரம் என்ற கட்சிக்கு இடம் மாறியவர்கள் எத்தனையோ. வரம் என்ற கட்சிக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை இந்த வகை மூலம் இன்னும் கூடிக் கொண்டுதான் போகின்றது. இவர்களைக் கேளுங்கள் தாங்கள் அறியாமல் சாபம் என்று சொன்னதற்காக கைசேதப் படுவது மட்டுமின்றி வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்று குன்றின் மீது ஏறி நின்று குரலை உயர்த்திச் சொல்வார்கள்.


குஜராத்தில் நம் இனத்தவர் வீடு வாசல்களை இழந்து, சொத்துக்கள் சூரையாடப்பட்டு வன் கொடுமையை அனுபவித்துத் திக்கற்றவர்களாக திசை தெரியாமல் தத்தளித்தபோது கோடிக் கணக்கில் வாரி வழங்கி அவர்களின் துயர் துடைத்த பெருமை வளைகுடா வாழ் சகோதரர்ளைச் சாரும். சாதி மத வித்தியாசமின்றி வாரிக் கொடுத்த வளைகுடா வாழ் நெஞ்சங்களை வாழ்த்திய அந்த குஜராத் நெஞ்சங்களைக் கேட்டுப் பாருங்கள், இந்த வளை குடா வாழ்க்கை நம்மவருக்குக் கிடைத்த வரம் தான் என்று வாயாரச் சொல்வார்கள்.


கோவையில் ஒரு இனவெறிக் கும்பல் கோரத்தாண்டவம் ஆடி அப்பாவி மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசப்படுத்தியும், சூரையாடியும் நிர்மூலமாக்கிய போது, பொருளாதாரா ரீதியாக அந்நகர மக்களுக்குப் பேருதவி புரிந்தவர்களில் அதிக பங்களிப்பை நல்கியவர்கள் வளைகுடா வாழ் சகோதரர்கள் அல்லவா? வழங்கியவர்களும்,இந்து முஸ்லிம் என்று பேதம் பார்க்காமல் வழங்கினார்கள். அதைப் பங்கிட்டுக் கொடுத்தவர்களும் அவ்விதம் பேதம் பார்க்காமல் கொடுத்தார்கள். அந்தக் கோவை வாழ் மக்களைக் கேட்டுப் பாருங்கள், இந்த வளை குடா வாழ்க்கை நம்மவருக்குக் கிடைத்த வரம் தான் என்று மனமாரச் சொல்வார்கள்.


இந்த நூற்றாண்டில் இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் ஒன்று தான் இணைய தளம் என்னும் அற்புதமான அருட்கொடை. இஸ்லாத்தைப் பற்றி முழுமையான விபரங்களைத் தெரிந்துக் கொள்ளவும், தெரிந்துக் கொண்ட கருத்துக்களைப் பலருக்கும் எடுத்துரைக்கவும் மிக அருமையான ஊடகமான இஸ்லாமிய இணைய தளங்களும், மற்றும் வலைப்பதிவுகளும்,


இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அவ்வப்போது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறுகளுக்கும் உடனுக்குடன் பதில் கொடுத்தும், உண்மையான இஸ்லாத்தை உலகறிய உரத்த குரலில் முழங்கும் இணைய தளங்களும், மற்றும் வலைப் பதிவுகளும்,

அவரவர் தனிப்பட்ட முறையில் தத்தம் கருத்துக்களையும் ஆக்கங்களையும் பிறருடன் பகிர்ந்துக் கொள்ளும் இஸ்லாமிய வலைப்பதிவுகளும் இண்டர் நெட்டில் மலிந்துக் கிடக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவை என்பதை இணைய தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளுடன் அதிகத் தொடர்புடைய பலரும் அறிவர்.

தூய இஸ்லாத்தை தரணியெங்கும் வாழும் முஸ்லிம்கள் அறிந்துக் கொள்ளும் விதத்தில் இந்த அற்புத ஊடகத்தை பயன்படுத்தவும், பலரையும் பயன்பெறச் செய்யவும் காரணமாக அமைந்தது கூட நமக்குக் கிடைத்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரம் தானே.


வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்பதற்கு அடுக்கடுக்காக இன்னும் பல காரணங்களை எடுத்து வைக்க முடியும். ஆனால் சாபம் என்பதற்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் ஒரே காரணம் இல்லற வாழ்க்கையின் இளமை இங்கேயே பாழாகி விட்டது என்பது தான். மீதமுள்ள அனைத்துக் காரணங்களையும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வார்கள்.


எதிர்காலத் திட்டங்கள் சரியான முறையில் தீட்டப்படாமல் காலமெல்லாம் வளைகுடாவிலேயே கழிக்காமல் அநாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பொருளாதாரச் சேமிப்பை அதிகப்படுத்தி வருமானத்துக்கு ஒருவழியை ஏற்படுத்திக் கொண்டு தத்தமது நாய் நாடுகளுக்குச் சென்று நிரந்தரமாகத் தங்கலாமே. கட்டுரையின் தலைப்பு வளைகுடா வாழ்க்கை வரமா சாபமா என்பது தான். தலைப்பு நிரந்தர வளைகுடா வாழ்க்கை வரமா சாபமா என்பதல்ல. அப்படிப் பார்த்தாலும் சாபம் எனக் கூறுபவர்கள் கூட தங்களின் எதிர்கால வருமானத்துக்கு ஒரு வழியைத் தேடிக் கொள்ளவும், சேமிப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பாகிய வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்பதை மனமார ஒப்புக் கொள்வார்கள்
.

நம்மில் பலர் வறுமை நீங்கி வளவாழ்வு வாழ்வதற்கும், நம் எதிர்காலச் சமுதாயம் சிறந்து விளங்கிட நம்மால் இயன்றவரை நம் பங்களிப்பை நல்கியதற்கும், நமது மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டதற்கும், நமது பழக்க வழக்கங்களைப் பண்படுத்திக் கொண்டதற்கும், நம் சமுதாய இயக்கங்கள் நல்லமுறையில் செயல்படுவதற்கு பொருளாதார ரீதியில் நாம் பேருதவி புரிவதற்கும், இப்படி எத்தனை எத்தனையோ நற்காரியங்கள் நடைபெறுவதற்குக் காரணமாகிய நமது வளைகுடா வாழ்க்கை இறைவன் நமக்களித்த வரம் தான்.


வறுமைக் கோட்டுக் கீழ் வாழுகின்ற எண்ணற்றோர் தாயகத்தில் வேலை வாய்ப்பின்றி அவதிப்படுகின்றனர். தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளவும் வளமான எதிர்காலக் கற்பனைகளோடும் வாடுகின்ற ஏராளமானோர் வளைகுடா வாழ்க்கை என்னும் கொழுக் கொம்பு நமக்குக் கிடைக்காதா? பற்றிப் பிடித்துக் கொண்டு முன்னேறி வர மாட்டோமா என்று ஏங்கிக் கிடக்கின்றனர். சாபம் என நினைப்பவர்களே சற்று ஒதுங்கி வழிவிடுங்கள். வரம் என நினைப்பவர்கள் வந்து அனுபவிக்கட்டும்.



விருப்ப மொழியில் குர்ஆன்