Oct 25, 2006

எழுத்துக் கடலில்

">Link எழுத்துக் கடலில் என் பயணம்

எழுத்து' என்னும் பரந்து விரிந்த பெருங்கடலில் பலரும் பயணம் செய்கின்றனர். பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரும் கப்பல்கள் நீலத் திரை கடலை நீந்நி வரும்போது நானும் என் பங்காக ஒரு சின்னஞ் சிறு படகினை மிதக்க விட்டிருக்கிறேன். மாபெரும் கப்பல்கள் மிதக்கும் கடலில் சிறு படகுகளும் கூட தம் பணியை செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கின்றன.

எழுத்துக்கலை என்பது ஓர் அற்புதமான கலை. அதிலும் பத்திரிக்கைத் துறை பல அறிஞர்களை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறது, பல இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறது. இந்த எழுத்துலகில் சாதித்தவர்கள் பலர். சாதித்துக் கொண்டிருப்பவர்கள் அநேகம்.நான் சாதித்தவனும் அல்ல, சாதித்துக் கொண்டிருப்பவனும் அல்ல. சாதிக்கத் துடிப்பவன். எனது எழுத்துப் பசிக்குத் தீணி போட்டவர்களுக்கு நன்றிக் கடனாக இந்தக் கட்டுரை.

அதிகமதிகம் நூல்களைப் படிக்கும் போது நாமும் ஒரு நூல் எழுத வேண்டும் என்னும் ஆவல் பிறந்தது. அதிகமதிகம் பத்திரிக்கைகள் படிக்கும் போது இந்தப் பத்திரிக்கைகளில் நமது பெயரும் வராதா? என்று ஏங்கியது உண்டு.பத்திரிக்கைகளில் நமது பெயர் வரும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. நமது பெயரில் உள்ள யாரோ ஒருவர் எழுதியிருந்தால் அதுவே நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அது நாமாகவே இருந்தால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற சாதாரண மான(ண)வர்களுக்கு இது சந்தோஷமானது.

1977 ஆம் ஆண்டு நான் பி.யு.சி படித்துக் கொண்டிருந்த போது, தான் எனக்கும் எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது திருச்சியிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த முபாரக் என்னும் வார இதழுக்கு 'ரமளானின் சிறப்பு' என்னும் தலைப்பில் சிறு கட்டுரை ஒன்று எழுதி அனுப்பினேன். அது ரமளான் மாதம் என்பதால் அந்த ரமளான் முதல் வாரத்தில் எனது கட்டுரையை அந்த வார இதழ் பிரசுரித்து என்னை கௌரவித்தது. இது தான் பத்திரிக்கையில் நான் எழுதிய முதல் கட்டுரை.அதே முபாரக் வார இதழில் அடுத்தடுத்து 'ஆஷூரா தினத்தின் சிறப்பு' என்னும் கட்டுரையும் 'உலகில் மிகப் பெரியவர்கள்' என்னும் கட்டுரையும் எழுதினேன்.

1978 ஆம் ஆண்டு உமராபாத்தில் பயின்றுக் கொண்டிருந்தபோது, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு வெளியிடும் omiet journal மாத இதழின் தமிழ்ப் பிரிவு எனது 'அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி' என்னும் எனது நீண்ட கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அதற்குப் பரிசும் வழங்கியது.

உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் பயின்றுக் கொண்டிருந்த போது தமிழ் மாணவர் அமைப்பின் சார்பாக முதன் முதலாக 'அந்நஸீம்' (தென்றல்) என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிக்கை வெளியிட்டோம். இந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிடும் முழுப் பொறுப்பும் எனக்குத் தரப்பட்டிருந்தது. நானும் ஒரு பத்திரிக்கையாளன் ஆக வேண்டும் என்னும் எனது தீராத தாகத்தை இதன் மூலம் தணித்துக் கொண்டேன்..

கல்லூரியில் அவ்வப்போது நடைபெறும் மாபெரும் விழாக்கள் பற்றிய செய்திகளை, அப்போது சென்னையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த அறமுரசு நாளிதழுக்கு எழுதி அனுப்புவேன். நான் அனுப்பிவைக்கும் செய்திகளை உடனுக்குடன் அந்த நாளிதழ் வெளியிடும்

இது வரை நான் பத்திரிக்கைளுக்கு அனுப்பிய கட்டுரைகள் செய்திகள் அனைத்தும் எனது இயற் பெயரிலேயே எழுதி வந்தேன். 1980 ஆம் ஆண்டு குமுதம் வார இதழுக்கு 'திருப்பந்துருத்தி மஸ்தூக்கா' என்ற புணைப் பெயரில் ஒரு துணுக்கு அனுப்பினேன். சவூதி அரேபியாவில் தொழுகைக்கு அழைப்பதற்கென்றே ஒரு தனித் துறை இருப்பதைப் பற்றி நான் எழுதிய அந்தத் துணுக்குச் செய்தியை குமுதம் வார இதழ் வெளியிட்டிருந்தது. புணைப் பெயரில் எழுதிய முதல் ஆக்கம் இது தான்

1981 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து வெளியிடப்பட்ட 'புரட்சி மின்னல்' மாத இதழ் எனது எழுத்துப் பசிக்குச் சரியாகத் தீணி போட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மாதந்தோறும் பல் வேறு கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள், எழுதுவேன். எழுத்துத் துறையில் என்னை ஊக்கப்படுத்திய பெருமை 'புரட்சி மின்னல்' மாத இதழையே சாரும். தமிழகத்தில் ஏகத்துவக் கொள்கை வேரூன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்த புரட்சி மின்னல் இதழ் தான் பின்னர் அல் முபீன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஏகத்துவக் கொள்கையை ஓங்கி ஒலித்தது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

தமிழ் முஸ்லிம் பத்திரிக்கை உலகில் மிகச் சிறப்பாக இடம் பிடித்த மாதம் இருமுறை இதழான சமரசம் இதழில் எனது கட்டுரைகள் இடம் பெற்று சிறந்த வரவேற்பைப் பெற்றன.

1984 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல ஆண்டுகள் மறுமலர்ச்சி வார இதழில் அடிக்கடி கட்டுரைகள் எழுதினேன். ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பற்றிய செய்திகளையும், மற்றும் சவூதியில் வெளிவரும் பல்வேறு அரபி ஆங்கில நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளையும் தமிழில் மொழி பெயர்த்து அனுப்பிவைப்பேன். 'சவூதியிலிருந்து எமது சிறப்பு நிருபர்' என்று போட்டு எனது செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து மறுமலர்ச்சி வார இதழ் என்னை கௌரவித்தது.

மாத்யமம் மலையாள நாளிதழ் பிரபோதனம் மலையாள மாத இதழ் ஆகியவற்றில் வெளிவரும் மிக முக்கியமான பயனுள்ள கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து மறுமலர்ச்சி வார இதழுக்கு அனுப்பி வைப்பேன். எனது கட்டுரைகளை எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிடும் மறுமலர்ச்சி வார இதழ் அந்தக் காலகட்டத்தில் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரே முஸ்லிம் வார இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முஸ்லிம் மத்தியில் காணப்படும் மூடப் பழக்கங்களைக் கண்டித்து 'கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் போகட்டும்' என்னும் தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிட்டேன். 1986 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற முதல் 'அந்நஜாத்' மாநாட்டில் இது விநியோகிக்கப்பட்டு பரவலாக தமிழகம் முழுவதும் சென்றடைந்தது. கூத்தாநல்லூர் இஸ்லாமியப் பிரச்சார அமைப்பும் மற்றும் சில ஊர்களில் இயங்கும் அமைப்புகளும் இதனை மறுபிரசுரம் செய்தன.

இறையருளால் புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் பெரும் பாக்கியம் கிடைக்கப் பெற்று புனித ஹஜ் செய்து வந்த இனிய அனுபவங்களை 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' என்னும் தலைப்பில் 1987 ஆம் ஆண்டு ஒரு பயணக் கட்டுரை நூலாக எழுதி வெளியிட்டேன். நான் எழுதிய முதல் நூல் இது தான்.எனது திருமணத்தின் போது இது விநியோகிக்கப்பட்டது. எனது வாழ்க்கையில் நானும் ஒரு நூலாசிரியர் ஆக வேண்டும் என்னும் எனது கனவு இறையருளால் நிறைவேறியது. அல்ஹம்து லில்லாஹ்.

பிரசித்தி பெற்ற உணர்வு வார இதழிலும் கட்டுரைகள் புனித ஹஜ் பற்றிய செய்தித் தொகுப்புகள் அடிக்கடி எழுதியிருக்கிறேன். ஆசிரியர்க் குழு தவிர மற்றவர்கள் எழுதும் எதையும் பிரசுரிக்காத உணர்வு இதழ் கூட சில இதழ்களில் எமது ஆக்கங்களைப் பிரசுரித்திருக்கின்றது.

மதுரையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் டைம்ஸ் மாத இதழ் மார்க்கம் சார்ந்த எமது பல்வேறு கட்டுரைகளுக்கு முக்கித்துவம் தந்து பிரசுரித்துள்ளது.

சென்னையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த சாந்தி வளாகம் மாத இதழ் தொடர்ந்து மாதந்தோறும் எமது கட்டுரைகளைப் பிரசுரித்து எமது சொந்த ஊர்க்காரர்கள் பலரும் எமது ஆக்கங்களைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி மகிமைப் படுத்தியதை மறக்க முடியாது.

ஏற்கனவே எழுதிய 'கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் மண்மூடிப் போகட்டும்' என்னும் பிரசுரத்தைப் பார்வையிட்ட பல்வேறு அன்பர்கள் அதை இன்னும் விரிவு படுத்தி தனியொரு நூலாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க 2002 ஆம் ஆண்டு அதே தலைப்பில் 80 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப் பட்டது. தமிழகத்தின் பல ஊர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்நூல் இரண்டே மாதங்களில் 2000 பிரதிகள் தீர்ந்து போயின.

2003 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பும், 2004 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பும் வெளிவந்து சாதனை படைத்தது.மிகக் குறுகிய காலத்தில் 3 பதிப்புகள் கண்ட இந்நூல் இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் 4 ஆம் பதிப்பு வெளிவர உள்ளது. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாகட்டும்.

1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எமது முதல் நூல் 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' புனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனையாக 2004 ஆம் ஆண்டு சில மாற்றங்களுடனும் புதுப் பொலிவுடனும் வெளியிடப்பட்டது.இந்நூல் புனித ஹஜ்ஜின் சிறந்த வழிகாட்டியாக பல்வேறு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு இணைய தள உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. புகழும் பெருமையும் இறைவனுக்கே சொந்தம்.

ஊடகத் துறையில் இப்போது உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் இணைய தளம் மூலம் எமது ஆக்கங்களை உலகத் தமிழர்களுக்கு மத்தியில் கொண்டு சேர்த்த பெருமை இதுதான் இஸ்லாம் டாட் கம் இணைய தளத்தையே சாரும். இஸ்லாமிய தமிழ் இணைய தளங்களிலேயே உலகெங்கும் மிகவும் பிரபல்யமான இந்த இணைய தளம் எமது ஆக்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு எம்மை கௌரவிப்பதை இங்கு நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும்.

எமது ஆக்கங்கள் இடம் பெறும் பிற இணைய தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளின்முகவரிகள்

www.idhuthanislam.com
www.tamilmuslim.com
www.otrumai.com
www.abumuhai.blogspot.com
www.amtc-france.blogspot.com
0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்