Jul 28, 2011

தவ்ஹீத் கொள்கையை உங்கள் ஊரில் எதிர்த்தால்?

Jul 18, 2011

பராஅத் இரவு ‍- பாவமா புண்ணியமா?

நம் இஸ்லாமிய மக்களில் இன்னும் அறியாத நிலையிலுள்ளவர்களுக்கு, ஷஃபான் மாதம் 15ஆம் இரவு, "ஷபே பராஅத்" அல்லது "பராஅத் இரவு" என்று மிக கோலாகலமாக கண்ணியப்படுத்தப்படும் ஒரு விழா கொண்டாட்டம்! இதை கொண்டாடுவதில் அறியாத மக்களோடு சேர்ந்து, ஹஜ்ரத்மார்கள் என்று சொல்லப்படும் ஆலிம்களும்(?) ஆர்வத்துடன் முன்னின்று நடத்தி வருகின்றனர். மார்க்கத்தின் பெயராலும், அமல்களின் பெயராலும் முன்னோர்கள் ஏற்படுத்தியவற்றை எல்லாம், அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொல்லியவைதானா என்று பார்க்காமல், இதற்கும் நன்மையுண்டு என்று தாங்களே தீர்மானித்துக் கொண்டு, அவற்றை குறிப்பிட்ட சில தினத்தில் நம் சமுதாய மக்கள் செய்து வருகின்றனர்.

அன்று காலையிலேயே நம் பெண்கள் வீடு வாசல் கழுவி, கறி வாங்கி சமைத்து வைத்து, ரொட்டி சுட்டு ரெடி பண்ணி, மஃக்ரிப் ஆனவுடன் (காலம் முழுக்க ஃபர்ளான தொழுகையில் அலட்சியம் செய்தவர்கள் கூட‌) ஃபாத்திஹா ஓதும் இடத்தில் பயபக்தியோடு அமர்ந்து, ஃபாத்திஹாவை ஆரம்பித்து, யாஸீன் மூன்று முறை ஓதி முடித்து, துஆ செய்வார்கள். பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் மின் விளக்குகளின் அலங்காரமாக காட்சியளிக்கும். ஆண்களும் சிறுவர்களும் புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று, அங்கே அரங்கேறும் மார்க்கத்திற்கு முரணான இந்த வழிபாட்டில் கலந்துக்கொள்வார்கள். சிலர் அதற்கும் அந்த ஹஜ்ரத்மார்களை எதிர்ப்பார்த்து வீட்டில் காத்திருப்பார்கள். மூன்று தடவை ஓதக்கூடிய யாசீன் சூராவில், முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும், இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், இருப்பவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும், மூன்றாவது யாசீன் பரக்கத் கிடைப்பதற்காகவும் என்று ஓதுவார்கள்.

இந்த நாளை "சீட்டுக் கிழிக்கப்படும் நாள்" என்றும் சொல்வார்கள். அதாவது, இந்த நாளில்தான் அடுத்த ஒரு வருஷத்தில் இறக்கக்கூடியவர்கள் மற்றும் பிறப்பவர்களின் லிஸ்ட்டையும், அந்த வருடத்திற்கான ரிஸ்க்கையும் அல்லாஹ் தீர்மானிப்பானாம்! இந்த இரவுக்கு முந்திய நாளில் யாரும் மரணித்துவிட்டால், இவர்கள் சென்ற வருஷ லிஸ்ட்டின் கடைசி நபர் என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். இந்த நம்பிக்கைகளை ஊட்டியது யார்? இதற்கு வழிகாட்டியது யார்? மேலும் வல்ல அல்லாஹ் வணக்கங்களை இலகுவானதாகவும் வழமையாக செயல்படுத்தும் விதத்திலும் மக்களுக்கு ஆக்கியிருக்கும்போது, இந்த இரவிலோ இதற்காக 100 ரக்அத்கள் கொண்ட விசேஷத் தொழுகைகளையும் தொழுதுக்கொள்வார்கள்.

ஒரு தினத்தை சிறப்பான தினம் அல்லது சிறப்பான இரவு என்று நாம் கூறவேண்டுமானால், அதை நம்மைப் படைத்த இறைவன் நமக்கருளிய வேதத்தில் கூறியிருக்கவேண்டும். அல்லது அவனது திருத்தூதர் நபி(ஸல்) அவர்கள் அதற்கு வழிகாட்டியிருக்க வேண்டும். ஆனால், குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இவற்றுக்கு ஆதாரமிருக்கிறதா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட யோசிக்க‌வில்லை. அதற்காக முயற்சிகளையும்கூட‌ எடுப்பதில்லை. ஏழு வருடங்கள் படித்த ஆலிம்களின் நிலைமையே இப்படியென்றால், மார்க்கத்தை படிக்காத மக்கள் எப்படிதான் உண்மையை உணர்வார்கள்? "பராஅத்" இரவு என்றால், பாவம் நீக்கப்படும் இரவு, அதனால் இரவு முழுதும் இறைவனை வணங்கி, பகல் முழுதும் நோன்பு வைக்கவேண்டும் என்று மக்களுக்கு அந்த ஆலிம்கள் சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால், இந்த நாளுக்கு இப்படியொரு பெயரை அல்லாஹ்வோ, அவனது தூதர்(ஸல்) அவர்களோ சூட்டியதற்கு ஆதாரம் எதுவுமே இல்லை. மாறாக, சுன்னத் என்ற பெயரில் நம் முன்னோர்களில் யாரோ சிலர் பிற்காலத்தில் இதனை உருவாக்கி வைத்த ஒரு பித்அத்தாகும்.

சகோதர, சகோதரிகளே! சற்று சிந்தித்து பாருங்கள்! லைலத்துல் கத்ர் இரவை மகத்தான இரவாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் கூறியிருக்கிறார்கள். அதுபோல், ஜும்ஆ தினத்தை சிறந்த தினமாக அறிவித்துக் கொடுத்த இறைவன், ஹஜ்ஜுடைய தினங்களை கண்ணியமானது என்று அறிவித்த‌ இறைவன், குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதத்தின் சிறப்பை விவரித்த இறைவன், போர் செய்யக்கூடாத மாதங்களை, புனிதமாதங்கள் என்று வரையறுத்துச் சொன்ன இறைவன், இந்த பராஅத் இரவைப்பற்றி எங்காவது சொல்லியிருக்கிறானா?

இரு பெருநாட்களுடைய தினங்களை புனித நாட்களாக அறிவித்த நபி(ஸல்), ஆஷூரா தினத்தின் சிறப்பை பற்றிக்கூறியுள்ள நபி(ஸல்), ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு பற்றி சிலாகித்துச் சொன்ன நபி(ஸல்), பராஅத் இரவு என்ற ஒரு இரவைப்பற்றி எங்குமே ஏன் சொன்னதில்லை? சிந்தித்து பார்க்கவேண்டாமா, என் இஸ்லாமிய‌ சொந்தங்களே?

நன்மை என்ற பெயரில் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட, அல்லாஹ்வும் ரசூலும் காட்டித்தராத‌ நாம் செய்யும் எந்த அமலாக இருந்தாலும், அவை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்றால், நிச்சமயமாக இல்லை. மாறாக அப்படிப்பட்ட அமல்களுக்கு நரகமே கூலி என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:

"செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகளாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்."

(அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560)

"எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது" என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

(அறிவிப்பவர்: அலி (ரழி) நூல்: அபூதாவூது, நஸயீ)

"எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

குர்ஆனில் சொல்லப்படாத‌, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த அமல்களும் இறைவனால் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ்கள் தெளிவாக அறிவிக்கின்றன‌. 'இதில் என்ன தப்பு இருக்கிறது, நல்ல அமல்கள்தானே செய்கிறோம்' என்று சிலர் கூறுகிறார்கள். எதை, எப்படி, எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுவதற்காக‌தான் அல்லாஹ்தஆலா நபி(ஸல்)அவர்களை அனுப்பி வைத்தானே தவிர, அமல் என்றாலே அது எதுவாக இருந்தாலும், எப்படியிருந்தாலும், எந்த நேரத்தில் செய்தாலும் நன்மைதான் என்று நாமாக தீர்மானிப்பதற்கு எந்த அதிகாரத்தையும் இறைவன் நமக்கு வழங்கவில்லை.

ஆனால், பராஅத் இரவு என்பது மார்க்கத்தில் இல்லாத‌ ஒரு புதுமை என்று இவ்வளவு தெளிவாக தெரிந்த பின்னும், பராஅத் இரவுக்கு ஆதாரங்கள் இருப்பதாக, சுன்னத் ஜமாஅத்தின் ஆலிம்கள் கூறிவருகிறார்கள். அவர்கள் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் இஸ்லாம் கூறும் அளவுகோல்களின்படி சரியான ஆதாரங்களாக இல்லை என்பதை சற்று நிதானமாக படித்து சிந்தித்துக்கொள்ளுங்கள். அவர்கள் காட்டும் ஆதாரங்கள் எப்படி உருப்படியில்லாதவை என்பதை அடுத்த பதிவில் தொடர்கிறேன், இன்ஷா அல்லாஹ்!

நன்றி- பயணிக்கும் பாதை

Jul 8, 2011

தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்கள்



Jun 30, 2011

மிஃராஜ் இரவு கொண்டாடலாமா?

Jun 2, 2011

ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ஆஸ்திரேலியாவில், இதுவரை இல்லாத அளவிலான இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தாங்கள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது சிட்னியை தலைமையிடமாக கொண்ட "மை பீஸ் (My Peace)" என்ற அமைப்பு. 

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சிட்னி நகரின் பரபரப்பு மிக்க சாலைகளில் மிகப்பெரிய அளவிலான விளம்பரப்பலகைகளை நிறுவியுள்ளது இந்த அமைப்பு. கடந்த மே 26 ஆம் தேதி நிறுவப்பட்ட இந்த விளம்பரங்கள் இன்னும் நான்கு வார காலத்திற்கு அந்த பகுதிகளில் நீடிக்கும். 

இது குறித்த செய்தி ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க நாளிதழான "சிட்னி மார்னிங் ஹெரால்ட்"டில் வெளிவந்தவுடன் கூடவே பரபரப்பும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. இந்த விளம்பர பலகைகள் பற்றி கருத்து தெரிவிக்கும் இந்த பத்திரிகை "கிருத்துவ நம்பிக்கையின் அடிப்படையிலேயே கை வைப்பதாக உள்ளன இந்த விளம்பரங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது. 

அப்படி என்ன இருக்கின்றது அந்த விளம்பர பலகையில்? 

பின்வருவது தான் அந்த விளம்பர பலகைகளில் உள்ள வாசகம், 
Jesus: A Prophet of Islam - இயேசு : ஓர் இஸ்லாமிய இறைத்தூதர்
மேற்கண்ட வாசகத்திற்கு பக்கத்தில் இந்த அமைப்பின் தொலைப்பேசி எண்கள் மற்றும் வலைத்தள முகவரி கொடுக்கப்பட்டு "குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை" இலவசமாக பெற தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.             



இந்த விளம்பரங்கள் குறித்து விளக்கமளிக்கும் இத்திட்ட அமைப்பாளர் தியா முஹம்மத் (Diaa Mohamed), முஸ்லிம்களையும் கிருத்துவர்களையும் ஒரு பொதுவான பார்வையின் கீழ் கொண்டுவரவும், முஸ்லிம்கள் ஏசுவை நம்புகின்றவர்கள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே இந்த விளம்பரங்கள் என்று கூறியுள்ளார். 

வரும் நாட்களில் மேலும் சில வாசகங்களை கொண்ட விளம்பர பலகைகள் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வாசகங்கள்,  

  • Holy Qur'an: The Final Testament - புனித குர்ஆன் : கடைசி ஏற்பாடு.    
  • Muhammed (s): A Mercy to Mankind - முஹம்மது (ஸல்): மனிதகுலத்தின் கருணை. 
  • Islam: Got Questions? Get Answers - இஸ்லாம்: கேள்விகளா? பதிலை பெற்று கொள்ளுங்கள். 

இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளன. இரு நாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரப்பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

தாங்கள் இதற்காக பின்வாங்க போவதில்லை என்றும், அந்த விளம்பரங்கள் மூலம் தங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை பாசிடிவ்வாகவே இருந்ததாகவும், சுமார் பத்து சதவித அழைப்புகள் மட்டுமே தங்களை தாக்கக்கூடிய எண்ண அலைகளில் இருந்ததாவும் தியா முஹம்மத் தெரிவித்துள்ளார். 

மேலும், சேதப்படுத்தப்பட்ட அந்த பலகை விரைவிலேயே சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். 

இந்நிறுவனத்தின் முதல் செயற்திட்டம் எதிர்ப்புகளை சந்திக்க ஆரம்பித்துள்ள நிலையில் இவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகின்றது. 

அதாவது, நான்கு வார காலத்திற்கு, சிட்னியின் முக்கிய வழித்தடங்களில் ஓடும் சுமார் நாற்பது பேருந்துகள் தங்களது இஸ்லாமிய விளம்பரங்களை தாங்கி செல்லும் என்று அறிவித்துள்ளது இந்த அமைப்பு.

பேருந்துகளின் பின்புறத்திலும், பக்கவாட்டிலும் இருக்கும் இந்த விளம்பரங்கள், "இஸ்லாம் குறித்த கேள்விகளா? தொடர்பு கொள்ளுங்கள் இந்த எண்களில்" என்று இருக்குமாம். இது குறித்த மாதிரியை தன் தளத்தில் வெளியிட்டுள்ளது "My Peace".      



நீங்கள் மேலே பார்த்தது மட்டுமின்றி, தங்களின் அடுத்தக்கட்ட திட்டமாக, தொலைக்காட்சிகள் வழியாகவும் தங்களது இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள போவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்நிறுவனத்தின் வலைத்தளம் பல்வேறு தகவல்களை கொண்டதாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது (தள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). தங்களது செயற்பாடுகளாக இவர்கள் கூறியுள்ளது, 

  • இஸ்லாம் குறித்த தவறான புரிந்துணர்வுகளை கையாள்வது, 
  • சக ஆஸ்திரேலியர்களுக்கு இஸ்லாம் பற்றி எடுத்து சொல்வது, 
  • இஸ்லாம் குறித்த எவ்விதமான கேள்வியையும் முஸ்லிமல்லாதவர்கள் கேட்க முன்வருமாறு அழைப்பது,   
  • குர்ஆன் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை இலவசமாக அளிப்பது, 
  • பள்ளிவாசல்களுக்கு முஸ்லிமல்லாதவர்களை அழைத்து செல்வது, 
  • எந்தவொரு தலைப்பிலும் சொற்பொழிவாற்ற தயாரான நிலையில் அறிஞர்களை வைத்திருப்பது,

மேலே குறிப்பிட்டுள்ளவை மட்டுமின்றி புதிய முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் மிக மும்முரமாக செயல்படுகின்றனர் இந்த இயக்கத்தினர். அல்ஹம்துலில்லாஹ். பெண்களுக்கான பகுதியும் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. 

உலகளவில் பல இஸ்லாமிய இயக்கங்களை கண்டு நான் வியந்துண்டு. தங்கள் மார்க்கத்தின் மீதான ஆழ்ந்த பற்று, எவ்வித கேள்விக்கும் தங்களிடம் பதில் உண்டு என்ற அசராத நம்பிக்கை, அதனை வெளிப்படுத்தும் விதமான விவாதங்கள், நேர்த்தியான முறையில் வடிவமைப்பட்ட செயற்திட்டங்கள் என்று இந்த இயக்கங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அந்த வரிசையில் இப்போது "My Peace"சும் சேர்ந்துள்ளது. மாஷாஅல்லாஹ்...

குறிப்பு: 

நாம் மேலே பார்த்தது போன்ற செயல்திட்டத்தை "Gain peace" என்ற அமைப்பு கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் செயல்படுத்தி வருவது இங்கே நினைவுகூறத்தக்கது

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

MY PEACE official website:
1. mypeace.com.au. link

Gain Peace official website:
1.gainpeace.com. link

References:
1. Press release - mypeace.com.au. link 
2. He's not the son of God, just the support act - Sydney Morning Herald, dated 28th May, 2011. link
3. Billboard loses prophet margin - Sydney Morning Herald, dated 30th May, 2011. link


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹமத் 

May 30, 2011

நபிவழித் திருமணத்தில் சோதனைகளா? - முஸ்லிம்கள் கவனத்திற்கு...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் நபிவழியில் திருமணம் செய்ய மனஉறுதி கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளா நீங்கள்? 

அப்படியென்றால் இந்த பதிவின் முதல் இலக்கு நீங்கள் தான். உங்களின் மனஉறுதியை அதிகப்படுத்தி, உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ். 

பதிவிற்குள் செல்லும்முன்,  நம் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காக, நபிவழி திருமணம் குறித்து சுருக்கமான விளக்கம்.

பெண்ணிடம் இருந்து வரதட்சணை/சீதனம் எதையும் (எவ்வழியிலும்) வாங்காமல், மணப்பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்து, எவ்வித சடங்குகளும் இன்றி எளிய முறையில் நடைபெறுவதே நபிவழி திருமணங்கள் ஆகும். விருந்து அளிக்க விருப்பமிருந்தால் அந்த செலவு மணமகனுடையதே.

பதிவிற்குள் செல்வோம். 

திருமணங்கள் குறித்த ஒரு உரையாடலின் போது, நபிவழி திருமணம் செய்த சகோதரி ஒருவரிடம் கருத்தை கேட்க, தன்னுடைய அனுபவத்தை மெயிலாக அனுப்பியிருந்தார் அவர். 

அந்த கடிதம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு களைய சில நிமிடங்கள் ஆனது. 

பலவித தடைகள் ஏற்பட்ட போதும், நபிவழியில் மட்டுமே திருமணம் செய்வோம் என்று இந்த மணமக்கள் எவ்வளவு உறுதிப்பாட்டோடு இருந்திருக்கின்றார்கள்!!!! சுப்ஹானல்லாஹ்(1). 

நபிவழியில் திருமணம் செய்ய உறுதி பூண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இவர்களின் அனுபவம் பெரும் உற்சாகமாக இருக்குமென்பதால் அந்த கடிதம் சகோதரியின் அனுமதி பெற்று இங்கே பதிக்கப்படுகின்றது. 

---------------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ.

எனக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்த அன்றே நான் சொன்னது, 
'நபிவழித் திருமணம் மட்டுமே எனக்கு சம்மதம், அதனால் நீங்கள் எந்தநிலையிலும் கொள்கைச் சகோதரர்கள் அன்றி வேறு மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடாது, எந்த ஒரு துரும்பும் கணவன் வீட்டாருக்கு நீங்கள் கொடுக்கக் கூடாது, எனக்கு தேவையானதை நான் விரும்பி, எனக்காக மட்டும் கேட்பதை நீங்கள் எனக்குத் தந்தால் போதும்' 
என் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் நபிவழிக் கொள்கையுடையவர்களே என்பதால், 'இதில் என்ன சந்தேகம், இன்ஷா அல்லாஹ் அதுபோலவே முடிப்போம்' என்றார்கள். பிறகு நான் எதற்கு அதுபோல் சொல்லி வைத்தேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஏதாவது இடையில் வரக்கூடிய சின்ன சின்ன சோதனைக்கூட, மனித மனங்களை மாற்றிவிடும் என்று அஞ்சியிருந்தேன். அதனால் என் திருமணத்தை முடிவு செய்வதில் நான்தான் உறுதியாக இருக்கவேண்டும் என்று உறுதிசெய்து என் விருப்பத்தை முன்கூட்டியே கோரிக்கையாக வைத்துவிட்டேன். நான் அதில் உறுதியாக இருப்பதும் என் வீட்டார்களுக்கு நன்றாகவே தெரியும்.

திருமணப் பேச்சுக்கள் வருவதும், தவ்ஹீத்(2) மாப்பிள்ளை(?)யென வந்தும்கூட (அவர்களின் தாய்மார்களின் பேராசையால்) என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அளவு தடங்கல் ஏற்படுவதும், அந்தப் பேச்சு அப்படியே நின்று கேன்சல் ஆவதுமாக வருடங்கள் ஓடின. ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, 6 வருடங்கள்! (அப்போது எங்கள் ஊர் மற்றும் சுற்றுப்புறங்களில் தவ்ஹீத் சிந்தனையுள்ள‌ மாப்பிள்ளை அவ்வளவாக‌ இல்லாததும், நெடுதூர சம்ப‌ந்தத்தை நானும், என் பெற்றோரும் விரும்பாததும் இத்தனை வருஷங்கள் ஆனத‌ற்கு மேலும் சில‌ காரணங்கள்). 

இதற்கிடையில் மனதைக் கஷ்டப்படுத்தும் (சுற்றத்தாரின்) பேச்சுக்களும், செயல்களும் என் பெற்றோரை கலக்கப்பட வைத்தது. திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண் என்ற அடிப்படையில், நானும் மிகுந்த வேதனையடைந்தேன் என்றாலும், என்னுடைய கொள்கையில் சற்றும் மாறாத மன உறுதியை அல்லாஹுதஆலா எனக்குக் கொடுத்திருந்தான், அல்ஹம்துலில்லாஹ். 

ஆனால் என் பெற்றோர்கள் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், பேசிவரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் எனக்குத் தெரியாமலே கொஞ்சம் வளைந்துக் கொடுக்க முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்பளிப்பாக‌(?) சில பொருட்கள் கொடுக்க சம்மதித்ததும், ஒரு இடத்தில் தவ்ஹீத்(?) மாப்பிள்ளை முடிவானது. சில நாட்களிலேயே இந்த விஷயம் எனக்குத் தெரியவரவே 'நீங்கள் என்ன காரணம் சொல்லி இதைக் கேன்சல் பண்ணுவீர்களோ தெரியாது, தன் திருமண விஷயத்தில் தன் தாயையும், உடன் பிறந்தவர்களையும் கட்டுப்படுத்தத் தெரியாத மாப்பிள்ளை எனக்கு வேண்டவே வேண்டாம்' என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.

ஒருவாறாக அதையும் கேன்சல் பண்ணிவிட்டு, என் தாயார் அழுதுக் கொண்டே இருந்தார்கள். 'ஆண்கள் உறுதியாக இருந்தால் பரவாயில்லமா, பெண் இப்படி பிடிவாதமாக இருந்தால் நான் எப்போதுதான் உனக்கு திருமணம் முடித்து பார்ப்பேனோ, உன்னைவிட சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே' என்று பலமுறை கண்ணீரோடு மன்றாடினார்கள் என் தாயார். அவர்களின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னை ரணப்படுத்தியதே தவிர, கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தேன். தந்தையோ மிகவும் பொறுமை! அவர்கள் இருவருக்கும் மன தைரியத்தைக் கொடுக்க அல்லாஹ்விடம் துஆ(3) செய்துவிட்டு, 

'இந்த முறையில் திருமணம் செய்ய இறைவன் எனக்கு நாடியிருந்தால் மட்டுமே என் திருமணம் நடக்கும்; இல்லாவிட்டால் எத்தனை வயதானாலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் சொன்னபடி வாழ்க்கை அமையும்வரை இப்படி காத்திருந்தே என் வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டுவேன். ஒருவேளை எனக்குத் தெரியாமல் விட்டுக்கொடுத்து இதுபோல் நீங்கள் மீண்டும் மாப்பிள்ளையை முடிவு பண்ணி, அது கடைசி நேரத்தில் எனக்கு தெரிய வந்தாலும், திருமணத்தன்று சம்மதக் கையெழுத்து தரமாட்டேன், கல்யாணத்திற்கு பிறகு தெரிந்தாலும் அதற்காக கணவரிடமோ அவங்க வீட்டாரிடமோ போராடாமல் விடமாட்டேன், வாங்கியதை திருப்பிக் கொடுக்காவிட்டால் அது தலாக் வரை சென்றாலும் எனக்குக் கவலையில்லை, அல்லாஹ் சொன்ன மணவாழ்க்கைதான் எனக்கு முக்கியம்' என்று சொல்லிவிட்டேன். 

என் கொள்கையை ஒத்த‌ கணவரை அல்லாஹ் அமைக்கும் அந்த நாளும் வந்தது :) இருவீட்டாரும் மாப்பிள்ளை/பெண்ணைப் பார்த்த பிறகு அவரவர் ஊரில் (வெளி மக்களிடம்) மாப்பிள்ளை/பெண் பற்றிய‌ இருதரப்பு விசாரணைகளும் நடந்து முடிந்த‌து.

பிறகு கல்யாண நாள் மற்றும் (அவர்கள் வெளியூர் என்பதால் அதற்கான) முன்னேற்பாடுகள் போன்றவைக் குறித்தவற்றை பேசி முடிவு பண்ணிக் கொள்வதற்காக இருதரப்பு பெரியவர்கள் கூடியபோதே, எனக்கான மஹர்(4) 10 பவுனுக்குரிய‌ தொகை, எங்க ஊரில் திருமணம் என்பதால் வலிமா விருந்தை ஏற்பாடு செய்து வைப்பதற்காக அதற்குரிய தொகை, கல்யாணப் புடவைகள் வாங்கிக் கொள்வதற்கான தொகை என கைநிறைய‌ பணக்கட்டுகளை என்னவர் அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல், 'அந்த 10 பவுனுக்கும் நகை இருக்கவேண்டும், அதற்கான செய்கூலியைக்கூட அந்த பணத்திலிருந்து எடுக்கக் கூடாது, அதற்கான கூலி எவ்வளவு என்று (நகை வாங்கிய பிறகு) சொன்னால் அந்தப் பணத்தையும் நான்தான் தருவேன்' என்றும் என்னவர் சொல்லி அனுப்பிவிட்டார் :)

அப்போது நான் இருந்த அந்த குதூகல மனநிலை, அதை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கு மட்டுமே புரியும். கொடுக்கும் நிலை இல்லாமல் வாங்கும் நிலையை அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தினானே என்ற சந்தோஷத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்துக் கொண்டே இருந்தேன். புன்னகையைத் தவிர, யாரிடமும் எந்த வார்த்தையும் பேசக்கூட வரவில்லை. இப்படியொரு நிலை எனக்கு என்று மட்டுமில்லை, எத்தனையோ தவ்ஹீத் பெண்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் சந்தித்த சோதனைகளையும், அதற்கான போராட்டங்களையும் சொன்னால் அதை எழுத‌ பல பக்கங்கள் தேவைப்படும். அவ்வளவு கஷ்டங்களிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, அவனுக்காக உறுதியாக இருந்ததின் பலனை இன்றுவரை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்! 

(முன்பு நான் சொல்லியிருந்ததுபோல் பலவிதமாக தூற்றிய) எங்களின் சுற்றத்தார்கள் இந்த திருமண முடிவுகளைப் பார்க்கவேண்டும் என்பதால், (திருமணத்தை முடிவு செய்த அன்று) என் தந்தை அதுபோன்றவர்களை வலுக்கட்டாயமாக அழைத்திருந்தார்கள். அவர்களின் முன்னிலையில் அந்த ரூபாய்க் கட்டுகளை 'இது பெண்ணுக்காக மாப்பிள்ளை அனுப்பி வைத்துள்ளது' என்று சொல்லி, என் தந்தை என்னை அழைத்து வரச்செய்து என் கையில் கொடுத்ததும் அப்படியே அவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள். அன்றிலிருந்து அவர்களும் தன் பிள்ளைகளுக்கு தவ்ஹீத் மாப்பிள்ளை வேண்டும் என்று தேட ஆரம்பித்தது தனிக் கதை :) 

அல்ஹம்துலில்லாஹ்(5), திருமணம் நல்லபடி/நினைத்தபடி/நபிவழிப்படி நடந்தேறியது. இவையெல்லாம் மிக குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்தன. நினைக்காத புறத்திலிருந்து தன் அடியார்களுக்கு அருள்செய்யும் வல்ல ரஹ்மான், என் எண்ணம்போல் வாழ்வு அமைத்துக் கொடுத்தான். அவனுக்கே புகழனைத்தும்!

என் மாமியாரும், வீட்டார்களும் நபிவழிக் கொள்கைக் கிடையாது என்று திருமணத்திற்கு பிறகுதான் தெரியும். 
'எனக்கு தவ்ஹீத் கொள்கையில் வாழும் பெண்தான் வேண்டும். சீர், நகையெல்லாம் எனக்குத் தெரியாமல் வாங்க ஆசைப்பட்டு நீங்களாகவே யாரையாவது முடிவு பண்ணி வந்தால் அந்த திருமணம் நடக்காது' 
என்று என்னவர் தன் வீட்டாரை ஏற்கனவே மிரட்டி வைத்திருந்ததால் :) திருமணம் முடியும்வரை எதற்கும் வாய் திறக்காமல் இருந்திருக்கிறார்கள் என் மாமியார் வீட்டார்கள். 

மேலும், 
'அவர்கள் பெண்ணுக்கு விரும்பிப்போட அவர்களுக்குத் தெரியும். அவர்களால் இயலாவிட்டால் உடுத்திய துணியோடுகூட மகளை அனுப்புவார்கள்தான். அதைக் கேட்க நமக்கு உரிமையில்லை. எனவே உங்கள் பெண்ணுக்கு போடுவதை நீங்கள் போடுங்கள் என்ற வார்த்தைக்கூட‌ வரக்கூடாது' 
என்பதும் என்னவர் அவர் வீட்டருக்கு இட்டிருந்த‌ கட்டளை :) அதனால் திருமணம் முடியும்வரை மகனுக்கு பயந்து வாய்மூடி இருந்தவ‌ர்கள் திருமணத்துக்கு பிறகு சில பெரிய பிரச்சனைகளை எல்லாம் ஆரம்பித்தார்கள். 

ஆரம்பத்தில் என் கணவருக்கும் என் பெற்றோருக்கும் தெரியாமல் நானே சமாளித்தேன். போகப்போக நான் மறைத்து வந்ததையும் மீறி அவர்கள் எனக்குத் தந்த‌ பிரச்சனைகள் (நான் சொல்லாமலே) என் கணவருக்கு தெரிய ஆரம்பித்தன. 

சீர் இல்லாமல் வந்ததால் நான் படும் துயரங்களை கண்ட என்னவர், எடுத்த எடுப்பிலேயே கடுமையாக தன் வீட்டாரை எதிர்க்க ஆரம்பித்தார். நடுவில் நானே சமாதானம் பண்ண வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் என் பெற்றோருக்கும் இவை தெரிய வந்ததும், அவர்கள் 'அல்லாஹ் தந்த உன் மாப்பிள்ளைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, மற்றவர்களின் தொல்லைகளை எவ்வளவு நாட்களுக்குதான் நீ தாங்கமுடியும்?' என்று சொல்லி, என்னை சும்மா பார்க்க வருவதுபோல் வந்து, சில பொருட்களை கொண்டு வந்தார்கள். வந்த என் பெற்றோர்கள் வீட்டிலிருந்து திரும்ப புறப்படும் முன்பே அதற்கான தொகையைக் கணக்கு பண்ணி (தன் வீட்டாருக்கு தெரியாமல்) வலுக்கட்டாயமாக திணித்து அனுப்பினார் என்னவர் :) இப்படியே ஓடியது. 

என்னவர் பயணம் போய்விட்டு வந்ததும், 'நாங்க வேண்டாம் என்று சொன்னாலும் அவங்க பிள்ளைக்காக‌ கொடுப்பதற்கு அவங்களுக்கல்லவா அறிவு வேணும்?' என்று யார் மூலமோ என் மாமியார் வீட்டார் (என்னவருக்கு தெரியாமல்) சொல்லியனுப்ப, ஆஹா.. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களா என்று பயந்து, சிலபல பொருட்களுடன் மருமகன் பயணத்தை வரவேற்க வந்திறங்கினார்கள் என் பெற்றோர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் விலை அதிகம். அதற்குரிய தொகையைக் கொடுத்தால் என் பெற்றோர்கள் பிடிவாதமாக மறுக்கிறார்கள். என்னவருக்கோ கோபம்!

'பிள்ளைக்கு உதவும் என்றுதான் இவற்றை வாங்கி வந்தோம்' என்று சமாளிக்கிறார்கள். 'எனக்குத் தேவை என்று நான் கேட்டேனா? இந்த சமாளிப்பெல்லாம் எனக்கு ஆகாது என்று உங்களுக்குத் தெரியும்' என்று சொல்லி, கொண்டு வந்தவற்றை எடுத்துச் செல்லும்வரை நீங்கள் போகக்கூடாது என்று நான் பிடிவாதம் பிடிக்க, 'வாங்கி வந்தபிறகு திருப்பிக் கொடுப்பது சரியல்ல, அதற்கான தொகையை நாம் கொடுத்துவிட்டு இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டிலிருந்து வந்ததாகவே காட்டிக் கொள்வோம், அப்போதாவது கொஞ்சம் இவர்கள் அடங்குவார்கள்' என்று என்னவர் சமாதான முடிவு சொன்ன பிறகு, மீண்டும் அதற்கான‌ தொகை என் பெற்றோரின் கைக்கு வலுக்கட்டாயமாக மாறுகிறது :) மருமகனை மறுத்துப் பேசமுடியாத என் பெற்றோர், வேறு வழியின்றி அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாகிப் போனது.

'அவர்கள் எது சொன்னாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை, நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்' என்று சொல்லி என் பெற்றோர்களை அனுப்பி வைத்தோம். இப்படியே என் மாமியார் வீட்டார் எதற்குமே சரிபட்டு வராததால், கடைசியாக என்னைத் தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றார் என்னவர். அப்போதும் அவர்களின் தாயையும், குடும்பத்தாரையும் கவனிப்பதை சிறிதும் நாங்கள் குறைத்துக் கொள்ளவில்லை. 

பிறகுதான் எங்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்களே மனம் திருந்தி, இப்போது அவர்களும் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்). பிறகு என் மாமியார் மௌத்தாகிவிட்டார்கள். அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து, ரஹ்மத் செய்வானாக! இதுதான் என் நபிவழித் திருமணக் கதை :) 

குறிப்பு: 

மாப்பிள்ளை வெளியூர் என்பதால், (போக்குவரத்து கஷ்டம் கருதி) கல்யாணத்தன்றுதான் வலிமா(6) விருந்து கொடுத்தார்கள். (அன்றே கொடுப்பதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.) எங்கள் குடும்பம் பெரியது என்பதால், கூடுதலாக நாங்களே அழைப்புக் கொடுத்தவர்களுக்கான விருந்து செலவை மட்டும் என் தந்தை செய்தார்கள். 

(திருமணத்திற்கு முன்பே) நானே என் பெற்றோரிடம் விரும்பிக்கேட்ட சில நகைகள், புதிய ஆடைகள், பெண்களுக்கான சில அலங்காரப் பொருட்கள், நான் யூஸ் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பீரோ இவற்றை நான் என் பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே என்னுடையதாக இருந்தது. மாமியார் வீட்டிற்கு அந்த பீரோவைக்கூட எடுத்து செல்லக்கூடாது என்று தனிக்குடித்தனம் செல்லும்வரை, எங்க வீட்டிலேயே அதை வைத்துவிட்டேன். 

மற்றபடி என் மாமன்மார்கள், உறவினர்கள், தோழிகள் எனக்கு திருமணத்தில் செய்த அன்பளிப்பு நகைகளும் என்னிடமே. இன்றுவரை என்னிடம் எத்தனை பவுன் நகை உள்ளது என்ற விபரமும் என்னவருக்கு தெரியாது. நான் இஷ்டப்பட்டால் அதை விற்பேன், என் கணவருக்கு தேவைப்பட்டால் அவர் கேட்காமலே கொடுத்து உதவுவேன். அதேபோன்று நான் கேட்காமலே மீண்டும் அதை வாங்கித் தந்துவிடுவார்கள். சில நகைகள் வேண்டாம் என்று என்னவருக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறேன். அப்படி விட்டுக் கொடுத்ததையும்கூட, 'அல்லாஹ் பரக்கத் கொடுத்தால் அதைவிட அதிகமாகவே உனக்கு வாங்கித் தருவேன், இன்ஷா அல்லாஹ்' என்று (நான் மறந்ததையும்) அவர் மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார் :)

மேலும் இங்கு நான் குறிப்பிட்டுள்ள எதுவும் தற்பெருமைக்காக சொல்லவில்லை என்பதை அல்லாஹ் பார்க்கிறான். என் வாழ்க்கை சொல்லும் பாடம் மற்ற‌ யாருக்காவது, பயன்பட‌லாமே என்ற நல்ல நோக்கில்தான் கூறியுள்ளேன்.

என் மகனின் திருமணம் சமயம் இன்ஷா அல்லாஹ்(7) நான் உயிரோடு இருந்தால், அன்றைக்கு அல்லாஹ் எங்களுக்கு வைத்திருக்கும் தகுதிக்கு எவ்வளவு அதிகமாக‌ முடியுமோ அந்த‌ளவு மணப்பெண்ணுக்கு செய்து, அவர்களிடமிருந்து எதையும் கேட்காமல்/எதிர்ப்பார்க்காமல் மணமுடித்து வைக்க நிய்யத்(8) உள்ளது. நிறைவேற துஆ செய்யுங்கள்.

மஅஸ்ஸலாமா!(9)

அன்பு சகோதரி.
--------------------------

அல்ஹம்துலில்லாஹ். 

இஸ்லாமிற்குள் தங்களை முழுமையாக அர்பணித்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை அப்படியே பிரதிபலிக்க விரும்புவார்கள். 

  • பெண் வீட்டார் தாங்களாகவே விருப்பப்பட்டு (??) வரதட்சணை/சீதனம் கொடுக்க முன்வந்தாலும், இவையெல்லாம் நபியவர்கள் காட்டி தந்த வழிமுறைக்கு எதிரானது என்று கூறி தங்கள் எண்ணத்தில் உறுதியோடு நிற்கும் சகோதரர்களுக்கும், 
  • தாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செயல்படாத மணமகன் தங்களுக்கு தேவையில்லை என்பதில் உறுதிப்பாட்டோடு இருக்கும் சகோதரிகளுக்கும்,    
  • இவை அனைத்திற்கும் மேலாக, இறைவன் சொல்லாத ஒன்றை, நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒன்றை நாங்கள் செய்யமாட்டோம் என்ற எண்ணத்தில் நங்கூரம் பாய்த்து உட்கார்ந்திருக்கும் பெற்றோருக்கும், 

இந்த பதிவு எவ்விதத்திலாவது உதவியிருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக... 

இறைவா, நபிவழி திருமணத்தில் உறுதியோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மனவலிமையை அளித்து அவர்கள் தங்கள் எண்ணங்களில் வெற்றி பெற உதவுவாயாக...ஆமீன். 

Please Note:

ஒரு உரையாடலின் போது, சகோதரர் ஒருவர், தான் ஒரு தளத்தில் படித்ததாக பின்வருவதை கூறினார்.

அதாவது, தன் மகள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு, அவர்களது திருமணத்தின் போது, நாயகம் (ஸல்) அவர்கள் பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியதாக கூறினார் அவர்.

இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல். பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியது உண்மைதானென்றாலும் அதன் பின்னணி வேறு.

பின்வருவது தான் அந்த பின்னணி.

நாயகம் (ஸல்) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்களுக்கான மஹராக தன் மருமகன் அலி (ரலி) அவர்களிடம் இருந்து அவரது கவசத்தை பெற்றார்கள். பிறகு அதனை விற்க சொன்னார்கள். வந்த பணத்தை மூன்றாக பிரித்தார்கள். ஒரு பகுதியை பிலால் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஒரு வாசனை திரவியத்தை வாங்கி கொள்ள சொன்னார்கள். மற்ற இரு பகுதியை கொண்டு பாத்திமா (ரலி) அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து அனுப்பினார்கள்.

ஆக, நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தது மஹராக வந்த பணத்தில். இதற்கும், வரதட்சனை/சீதனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன், 


நன்றி-எதிர்க்குரல்

May 17, 2011

- சுவனப்பிரியன்: உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்!

- சுவனப்பிரியன்: உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்!

வலையுகம்: கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

வலையுகம்: கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு

May 16, 2011

மாணவர்களே! சலுகைகளைப் பெறத் தவறாதீர்கள்!


கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்வி மற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய‌, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவ சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சில வருடங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டங்கள், சரியான அளவில் எல்லா மக்களின் கவனத்திற்கும் இன்னும் சென்றடையவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மை! எனவே இந்தக் கல்வியாண்டிலாவது நம‌க்கு இயன்றவரை நம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுதியுடைய மாணவர்களை பயனடையச் செய்வோம்.


கல்லூரி மாணவர்களுக்கான‌ உதவித் தொகைகள்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை/அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 10 வகையான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன‌.

மாணவிகளுக்கு: முதுநிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களின் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விவசாயிகள் பிள்ளைகள்: இத்திட்டத்தின் கீழ், இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் பிள்ளைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,750 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை ஆவணத்துடன் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குந‌ர்களுக்கு எழுதி அனுப்பவேண்டும். இவர்களின் அலுவலகங்கள் சென்னை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ளன.

படை வீரர்களின் பிள்ளைகள்: பாதுகாப்புப் படை வீரர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குன‌ருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம். முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், அனைத்து வகையான பட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். பணிக் காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு, விடுதிச் செலவுகளும் வழங்கப்படுகின்றன. இவை கல்லூரிக் கல்வி இயக்குநர் மூலம் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர்களின் பிள்ளைகள்: முதுநிலைப் பட்டப் படிப்புகள், எம்.பில்., பி.எச்டி. படிக்கும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம்.

வகுப்பு வாரியாக: இது தவிர, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மூலம், அந்தந்த நலத்துறைகளின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் கீழ் உதவித்தொகைப் பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ஒரே பெண் குழந்தை: தவிர, குடும்பத்தின் முதல் பட்டதாரி/ஒரே ஒரு பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகையைப் பெற சேப்பாக்கத்தில் உள்ள பி.சி./எம்.பி.சி. நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும், ஒரு மாணவர் ஒரு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் மட்டுமே பெற முடியும். இது தொடர்பாக மேலும் விவரங்களை அறியவும், உதவித் தொகைகளைப் பெறுவதில் ஏதேனும் பிரச்ச‌னை இருந்தாலோ அது குறித்து ஆலோசனைப் பெறவும்,

தொலைபேசி எண்கள்: 044 -28271911/6792/28212090 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இலவசக் கல்வி:

குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும்போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை சென்ற கல்வியாண்டில் பிறப்பிக்கப்பட்டது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும்போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், 'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்விப் படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்' என சென்ற வருடம் ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ/மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக்கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் ஏற்கனவே சேர்ந்து படித்துவரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களைச் சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

'குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை' என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்கவேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெறவேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்த‌து.

குறிப்பு: மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இவை அனைத்தும் பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து சேகரித்து தொகுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் உள்ள இந்த தகவல்களைப் பார்க்க முடியாத/அறிய வாய்ப்பில்லாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு, அவரவர்களுக்கு முடிந்தவரை இந்தச் செய்திகளை கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
 

May 12, 2011

- சுவனப்பிரியன்: ஏர்வாடி தர்ஹாவில் திரும்பவும் மனநலம் பிறழ்ந்தவர்கள்!

- சுவனப்பிரியன்: ஏர்வாடி தர்ஹாவில் திரும்பவும் மனநலம் பிறழ்ந்தவர்கள்!

May 10, 2011

இந்து வேதங்களைப் பற்றி ஜாகிர் நாயக்!



நன்றி-சுவனப்பிரியன்

Apr 19, 2011

மக்கா இமாமைப் போலவே மற்றொரு குரல் -மாஷா அல்லாஹ்

Mar 15, 2011

ஜப்பான் சுனாமி வீடியோ

Feb 24, 2011

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:

முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.

உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...

1. opera mini browser open செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)

3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். இந்நேரம்.காம் செய்தித் தளத்தினை அனுபவித்து மகிழவும்.

பின்குறிப்பு: நாம் கூறிய Use bitmap fonts  என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.

Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்.

Jan 23, 2011

தமிழகம் கண்ட தர்ஜுமா புரட்சி

தமிழகத்தில் நம்முடைய தவ்ஹீது பிரச்சாரம் தோன்றிய மாத்திரத்தில் தவ்ஹீது ஜமாஅத் ஆலிம்கள் மக்களிடம் வைத்த அன்பான வேண்டுகோள், 'திருக்குர்ஆனைப் படியுங்கள்' என்பது தான். திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படியுங்கள் என்று மக்களிடம் திரும்பத் திரும்பக் கூறினோம்.

திருக்குர்ஆனைப் படியுங்கள் என்ற வேண்டுகோளைத் தாங்கிய ஸ்டிக்கர்களை தங்கள் வீட்டுக் கதவுகளிலும், வாகனங்களிலும் கொள்கைவாதிகள் ஒட்டினர்.

திருக்குர்ஆனைப் படியுங்கள் என்ற நம்முடைய வேண்டுகோள் மக்களிடம் தீயாய் பரவியது. மக்கள் சாரை சாரையாக திருக்குர்ஆன் தர்ஜுமாக்களை வாங்க ஆரம்பித்தனர்.

உடனே இந்த ஆலிம்கள், குர்ஆன் விளங்காது என்று கோரஸ் பாட ஆரம்பித்தனர்; கூப்பாடு போட்டனர்; குருட்டுச் சிந்தனையைப் பரப்பினர்; கூக்குரல் எழுப்பினர்.

குர்ஆனைப் படிக்க வேண்டும் என்ற மக்களின் ஆர்வ வெள்ளம், இந்த உலமாக்களின் குறுக்குச் சுவர்களைத் தகர்த்தெறிந்தது. புத்தகச் சந்தையில் ஒரு புது சகாப்தம் பூத்தது. தர்ஜுமா விற்பனை சாதனை படைத்து, விண்ணைத் தொட்டது.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம். பி.ஜே. தர்ஜுமா வெளியீட்டுக்கு முன்பு தவ்ஹீது ஜமாஅத் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட தர்ஜுமா, ஜான் டிரஸ்ட் வெளியீடாகும். அதனால் மக்கள் ஜான் டிரஸ்ட் தர்ஜுமாக்களைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். அதன் விற்பனையில், பதிப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்ப்போம்.

1983ம் ஆண்டு 5000 பதிப்புகள் அச்சிட்டு, தனது பணியைத் துவக்கிய ஜான் டிரஸ்ட் நிறுவனம், இரண்டாவது பதிப்பு    5,000 மூன்றாவது பதிப்பு    10,000நான்காம் பதிப்பு    10,000  ஐந்தாம் பதிப்பு    10,000  ஆறாம் பதிப்பு    13,000  ஏழாம் பதிப்பு    10,000  எட்டாம் பதிப்பு 20,000  ஒன்பதாம் பதிப்பு 20,000  பத்தாம் பதிப்பு 20,000  பதினோறாம் பதிப்பு 10,000  12ம் பதிப்பு 10,000  13ம் பதிப்பு 10,000   14ம் பதிப்பு 10,000 என 25 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு விற்பனை செய்தது.

இப்படிப் புனிதக் குர்ஆனைப் புரட்டிப் பார்க்கும் ஒரு புரட்சிக் கூட்டம் புறப்பட்டது. இப்போது தான் ஆலிம்கள் சுதாரித்துக் கொண்டு ஒரு தர்ஜுமாவை சந்தையில் இறக்கினார்கள்.

கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் தமிழாக்கத்தில் 1992ல் ஒரு தர்ஜுமா வெளியிடப்பட்டது.

இந்த தர்ஜுமாவைத் தந்தவர்கள், பாமரனுக்குக் குர்ஆன் விளங்காது என்று பகிரங்கமாகப் பேசியவர்கள்; பேசுபவர்கள். குர்ஆன் மொழியாக்கத்திற்கு மக்களிடத்தில் பலத்த வரவேற்பு என்றவுடன் தற்போது புத்தகச் சந்தையில் இந்த தர்ஜுமாவைக் களமிறக்கியுள்ளனர். 2004ம் ஆண்டு திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

அப்போது மக்களுக்கு விளங்காமல் இருந்த குர்ஆன், தற்போது வியாபாரம் என்று வந்ததும் விளங்க ஆரம்பித்து விட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தவ்ஹீது ஜமாஅத் தடம் பதிப்பதற்கு முன்பு தமிழகத்தில் ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி (முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ்ஸமது அவர்களின் தந்தை) மொழியாக்கத்தில், தர்ஜுமத்துல் குர்ஆன் ஃபி அதபில் பயான் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. முதலில் அரபு மூலத்துடன் வெளிவந்தது. பிறகு அரபு மூலமின்றி இது வெளியிடப்பட்டது. பிறகு மீண்டும் அரபு மூலத்துடன் வெளிவந்தது. இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு.

குர்ஆனின் அரபி மூலத்துடன் உள்ள தர்ஜுமாவை, முஸ்லிமல்லாத மக்களிடம் கொடுக்கக் கூடாது என்ற தவறான நம்பிக்கை தான்.

இருப்பினும், குர்ஆனை மூலத்துடன் வெளியிட வேண்டுமா? மூலமில்லாமல் வெளியிட வேண்டுமா? முஸ்லிமல்லாதவர் களுக்குக் கொடுக்கலாமா? கொடுக்கக் கூடாதா? என்று மயிர் பிளக்கும் சர்ச்சைகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு நல்ல தமிழ் நடையில் இந்தத் தமிழாக்கம் வெளிவந்தது.

இது வெளியாவதற்காக மறைந்த அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள் சவூதியிலிருந்து நிதி பெற்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் தான் ஜான் டிரஸ்ட் சார்பில் அப்துல் வஹ்ஹாப் அவர்களால் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது.

ஜான் டிரஸ்ட் நிர்வாகம் இந்த தர்ஜுமாவில் திருத்தம் செய்வதற்காக பி.ஜே., அப்துல் காதர் மதனீ ஆகியோரை நியமித்தது. அப்போது, திருக்குர்ஆனின் 3:7 வசனத்திற்குச் செய்யப்பட்ட மொழி பெயர்ப்பு கடும் ஆட்சேபணைக்கு உள்ளானது. பின்னர் மீண்டும் பழைய மொழி பெயர்ப்பின்படியே அந்த வசனம் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, அந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக பி.ஜே. அவர்கள், 'முதஷாபிஹாத்' என்ற தொடரை அவரது சொந்தப் பத்திரிகையான அல்ஜன்னத்தில் எழுதினார்.

அல்குர்ஆன் மனிதர்களுக்காக அருளப்பட்டது; அதில் மனிதர்கள் யாருக்குமே விளங்காத வசனங்கள் எதுவும் இல்லை என்பதே அந்தத் தொடரின் சாராம்சம். இது தற்போது புதிய வடிவில் ஏகத்துவத்திலும் வெளியிடப்பட்டு வருகின்றது.

சங்கை மிக்க குர்ஆன்

இது ஒரு சவூதிய வெளியீடு. இலவசம் என்பது இதன் தனிச் சிறப்பு. எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய நடையைக் கொண்டிருக்கவில்லை என்பது இதன் குறைபாடு. முஸ்லிம்களுக்கே புரியாது எனும் போது முஸ்லிமல்லாதவர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. அதிலும் குறிப்பாக கிறித்தவர்களிடம் கொடுப்பதற்குத் துளியும் தகுதியில்லை. காரணம், இந்த தர்ஜுமாவின் தோற்றுவாயை எடுத்துப் படிக்கும் மாத்திரத்திலேயே அதை மூடி வைத்து விடுவர்.

எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக) (அது உன்) கோபத்திற் குள்ளானவர்கள(ளின் யூதர்களின் வழிய)ல்ல. அன்றியும் வழிகேடர்கள(ளின் கிறிஸ்தவர்களின் வழியும)ல்ல.

இவ்வாறு மொழிபெயர்க்கப் பட்டிருக்கும். இதைப் படிக்கும் ஒரு கிறித்தவர் எப்படி இஸ்லாத்திற்கு வருவார் என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

இவை அனைத்தும் தர்ஜுமாக்கள். தவ்ஹீது ஜமாஅத் தனது பயணத்தைத் தொடங்கும் போது தப்ஸீர்களும் வெளியாகியிருந்தன.

1. தப்ஸீருல் ஹமீது ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்

இது 1958ல் வெளியானது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். முஹம்மது அப்துல் காதர் பாகவி ஆலிம் அவர்கள் இதை எழுதினார்கள்.

ஆதாரமற்ற ஹதீஸ்கள், வரலாறுகள், அறிவுக்குப் பொருந்தாத கற்பனைகளின் தொகுப்பாகவே இந்த தப்ஸீர் அமைந்திருந்தது. அந்தக் காலத்தில் நிலவிய தமிழ் நடைக்கொப்ப இது வெளியானது. இப்போது அந்த நடை மக்களுக்குப் புரியாது.

2. அன்வாருல் குர்ஆன்

இந்த தப்ஸீரும் எஸ்.எஸ். அப்துல் காதர் அவர்களின் தப்ஸீரைப் போன்றது தான். எனினும் உள்ளடக்கத்தில் இது ஓரளவுக்கு வேறுபட்டுள்ளது. அந்த தப்ஸீரைப் போன்று பெருமளவில் கதைகள் இதில் இடம் பெறவில்லை. இதன் ஆசிரியர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் தான் இன்றைய தவ்ஹீது ஆலிம்கள் களத்தில் இறங்குவதற்குத் தூண்டுகோலாகவும் துணையாகவும் இருந்தவர்கள்.

தமிழகத்தில் உலமாக்கள் பொதுக் கூட்டங்களில் பேசிய ஹதீஸ்களில், மக்களை மவ்ட்டீகத்திற்கு இழுத்துச் செல்லும் படுபாதகமான, படுமோசமான ஹதீஸ்களை அப்துர்ரஹ்மான் அவர்களிடம் எடுத்துக் கூறிய போது, 'அந்த ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள்' என்று ஆணித்தரமாக அடையாளம் காட்டினார்கள்.

இப்படிப்பட்ட அறிவு ஞானம் கொண்ட அவாகள், தமது தப்ஸீரிலும் ஹதீஸ் கலையின் தர வரிசைக்கு மாற்றமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பதைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்கள்.

மவ்லிதுகள், மீலாதுகள், கப்ரு வணக்கங்கள் போன்றவற்றில் மாறுபட்ட, அதாவது நாம் இன்று கொண்டிருக்கும் தவ்ஹீதுக் கருத்தைக் கொண்டதால் வஹ்ஹாபி என்ற முத்திரையை வாங்கிக் கொண்டவர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

3. தாவூத்ஷாவின் தப்ஸீர்

இதுவும் தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வருவதற்கு முன் நடமாடிக் கொண்டிருந்த ஒரு தப்ஸீராகும். இவருடைய தப்ஸீரில் காதியானி வாடை வீசும்.

குர்ஆன் முழுவதையும் பொருளுரையும் விரிவுரையும் சேர்த்துத் தமிழில் வெளியிட வேண்டும் என்பது தாவுத் ஷாவின் கனவு. தமது இறுதிக் காலத்துக்குள் திருக்குர்ஆன் முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு விட வேண்டும் என்ற ஆர்வம் அவரது நெஞ்சில் முள் போல்
உறுத்திக் கொண்டிருந்தது. அவருக்கு 70 வயதான போது தாருல் இஸ்லாமி இதழை நிறுத்தி விட்டு முழுமையாக குர்ஆன் மொழிபெயர்ப்பில் இறங்கினார்.

அன்றைய உலமாக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதையும் மீறி அவர் அச்சேற்றினார்.

'இது காதியானி மொழிபெயர்ப்பு; காபிர் மொழி பெயர்ப்பு இதனை முஸ்லிம்கள் வாங்கக் கூடாது'' என்று அன்றைய உலமாக்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தொடர்ந்து தொகுதிகளை வெளியிட முட்டுக் கட்டை விழுந்தது. நான்காம் தொகுதியை வெளியிட தைக்கா சுஐபு ஆலிம் அவர்கள் 13000 கொடுத்தார்கள்.

1967ல் ஐந்தாம் தொகுதி வெளிவந்தது. இதற்குள் உலமாக்களின் தாக்குதல் அதிகமாயிற்று. தாவுத் ஷாவும் நோயில் படுத்துவிட்டார்.

4. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் தப்ஸீர்

1996ல் திருக்குர்ஆன் என்ற பெயரில் இந்தத் தப்ஸீர் வெளியிடப்பட்டது. பொதுவாக தமிழில் வெளியான தப்ஸீர்கள், தர்ஜுமாக்கள் பிற மதத்தவர்கள் வாங்கிப் படித்து விளங்கிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக இந்த தப்ஸீர் அமைந்தது என்று சொல்லலாம்.

5. தற்போது ரஹ்மத் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இப்னு கஸீர் தமிழாக்கம்.


பி.ஜே. தர்ஜுமா

மூன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள இதை மொழியாக்கம் செய்தவர் பி.ஜே. அவர்கள். முஸ்லிமல்லாதவர்களிடம் இது போய்ச் சேர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டது என்பதை இந்த தர்ஜுமாவை எடுத்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.

காரணம், பெரும்பாலும் தர்ஜுமாக்கள் எல்லாமே வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாகப் படிக்கும் வாக்கில் அமைந்துள்ளன. அதாவது அரபி நூல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் இந்த தர்ஜுமாவோ தமிழ், ஆங்கில நூல்களின் அடிப்படையில் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் வெளியான தர்ஜுமாக்கள் பெரும்பாலும் பிற மதத்தவர்களைக் கருத்தில் கொள்ளவே இல்லை. ஆனால் இந்த தர்ஜுமா பிற மதத்தவர்களையும் கவரும் வண்ணம் அதன் தமிழ் நடையில் முழு எளிமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

பின் குறிப்புகள்

இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் இஸ்லாத்தை நோக்கி வீசுகின்ற ஏவுகணைகள் பலதார மணம், விவாகரத்து போன்றவையாகும். எனவே இது தொடர்பான வசனங்களைப் படிப்பவர்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்குப் பொருத்தமான, எளிதில் புரியம்படியான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அது போல் அறிவியல் சம்பந்தப்பட்ட வசனங்களுக்கும் மன நிறைவைத் தரும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஏகத்துவக் கொள்கை, வணக்கங்கள், சட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தமிழக முஸ்லிம்கள் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களை தயவு தாட்சண்யம் இன்றி அல்லாஹ்வுக்குப் பயந்து மிகத் தெளிவாக இதன் பின் குறிப்புகளில் போட்டு உடைக்கின்றது.

கலப்படமின்மை

அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீது ஜமாஅத் தமிழகத்தில் தோன்றி, வணக்கங்களில் உள்ள பித்அத்கள், கலப்படங்கள், சேர்மானங்கள் ஆகியவற்றைக் களைந்து, இஸ்லாத்தைத் தூய வடிவில் செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

வணக்கங்களில் பித்அத் கூடாது என்று தத்துவார்த்தமாகச் சொன்ன போது, மக்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தனர். இன்று அதே மக்கள் செயல்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது அதை ஏற்றுச் செயல்படவும் ஆரம்பிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வாறு வணக்கங்களில் கலந்து விட்ட கலப்படங்களைக் களைந்து விட்டோம். ஆனால் குர்ஆனில் உள்ள கலப்படங்களை நாம் இதுவரைக் களையவில்லை. குர்ஆனில் கலப்படமா? என்று கொதிப்புடனும், ஆச்சரியத்துடனும் நீங்கள் இங்கு கேள்வி எழுப்பலாம். அதற்கான விடை கீழே இடம் பெற்றுள்ளது.  தமிழகம் மட்டுமல்ல! சவூதியின் வெளியீடுகளில் கூட இந்தச் சேர்மானங்கள் இடம் பெறத் தவறவில்லை.

இந்தச் சேர்மானங்களைக் களைவதற்கு அல்லாஹ் ஓர் அரிய வாய்ப்பை வழங்கினான். அது தான் இந்தத் தமிழாக்கமாகும்.

1. மன்ஜில்

2. ருகூவுக்கள்

3. ஸஜ்தா அடையாளங்கள்

4. நிறுத்தல் குறியீடுகள்.

5. வேண்டாத ஆய்வுகள்

6. மக்கீ, மதனீ

7. குர்ஆனை முடிக்கும் துஆ
மேற்கண்ட இந்தச் சேர்மானங்களை நீக்கி வெளியிட்டிருப்பதன் மூலம் இந்த தர்ஜுமா தனிச் சிறப்பைப் பெறுகின்றது. அல்லாஹ்வைப் பயந்து, உலகத்தில் யாருக்கும் பயப்படாமல் ஒரு தூய வடிவைக் கையாண்டதற்காக இது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

குர்ஆன் மொழியாக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் மட்டுமின்றி, குர்ஆனில் இருந்த இந்தக் கலப்படங்களை மக்களிடம் அடையாளம் காட்டி, அப்புறப்படுத்தியதும் தவ்ஹீது ஜமாஅத் செய்த சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது.
              நன்றி_ DUBAI TNTJ

தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி!!!


வெளிவந்தவுடன் சமுதாய, அரசியல் ரீதியிலான பிரச்சனைகளையும் நாம் கையில் எடுத்தாக வேண்டும் என்ற நம்முடைய வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கானது. பற்பல ஊர்களில் பற்பல அமர்வுகள்!
சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பது காலத்தின் கட்டாயம், ஒட்டுமொத்த தமிழகத்தில் அரசியல் ரீதியிலான பிரச்சனைகளில் முஸ்லிம்களுக்கு ஒரு வெற்றிடம் உள்ளது; அதை நம்மைத் தவிர வேறு யாரும் நிரப்ப முடியாது என்று விளக்கி, அதற்குக் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இன்னின்ன ஆதாரங்கள் என்று சமர்ப்பணம் செய்தோம்.

ஒவ்வொரு அமர்விலும் ஆமாம், ஆமாம் என்று தலையாட்டி விட்டு, அமர்விலிருந்து அப்பால் சென்றதும் சறுகி விடுவதே அந்த இயக்கத் தலைவரின் வாடிக்கையாக இருந்தது.

இவர்கள் அழைப்புப் பணி செய்வது அரபு நாட்டுச் சம்பளத்திற்கு செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்குத் தான்!

'சமுதாயப் பிரச்சனைகளில் தலையிட்டால் உளவுத் துறையின் ஆந்தைப் பார்வைக்கு ஆளாக நேரிட்டு அபாயத்தில் சிக்கிக் கொள்ள வேண்டும்! அது நம்முடைய அரபக வருவாய்க்கு ஆப்பு வைத்து விடும். அதனால் நமக்கு ஏன் இந்த வம்பு?''

இது தான் இவர்களின் செயல்பாடுகளிலிருந்து முடிவாக நாம் கண்டதும், கவனித்ததும் ஆகும்.

அதனால் ஆன்மீகத்தை மட்டும் வைத்துக் காலத்தைத் தள்ளுவோம் என்பது தான் அவரது கணக்கு!

சத்தியப் பணிக்கு ஓரமைப்பு

சமுதாயப் பணிக்கு ஓரமைப்பு

உலகாதாயத்தை மட்டும் லட்சியமாகக் கொண்ட இவர்களிடம் மறுமை லாபத்தை எதிர்பார்ப்பது இலவு காத்த கிளி கதை தான் என்றெண்ணி, சமுதாயப் பாதைக்கு ஓர் அமைப்பு, சத்தியப் பாதைக்கு அதாவது ஏகத்துவ அழைப்புப் பணிக்கு ஓர் அமைப்பு என்று கண்டோம்.

சமுதாயப் பணிக்காகக் கண்ட இயக்கம் காலப் போக்கில் தவ்ஹீதுப் பணியை ஜீரணிக்கவில்லை.

சத்தியத்திற்குக் கிடைத்த கிரெடிட்டை, பலனை மட்டும் அனுபவித்து விட்டு, சாறை உறிஞ்சி விட்டு நம்மை சக்கையாக வெளியே தள்ளியது. முகத்துக்கு நேராகப் புகழ்ந்து தள்ளிய அந்த முனாஃபிக்குகள் முதுகில் குத்தினார்கள்.
ஏகத்துவம் எனும் வட்டத்திற்குள் நாங்கள் வர மாட்டோம்; நாங்கள் வகுக்கும் வட்டத்திற்குள் தான் ஏகத்துவம் வர வேண்டும் என்ற நிலைபாட்டை நிறுவினர்.

இனி ஈரமைப்பில்லை! ஓரமைப்பு தான்!

இது தான் நம்மைச் சிந்திக்க வைத்தது. சத்தியத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அதில் மதனிகள் சம்பளத்தைக் கவனத்தில் கொண்டு சமுதாயப் பிரச்சனைகளை மறுத்தார்கள்.
சமுதாயத்துக்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அவர்கள் சத்தியத்திற்குக் கதவைச் சாத்துகிறார்கள். இனி மேல் நமக்கு முன் இருப்பது, சத்தியத்திற்கு ஓரமைப்பு, சமுதாயத்திற்கு வேறமைப்பு என்ற அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதி விட்டு, இரண்டிற்கும் ஒரே அமைப்பு என்ற புதிய அத்தியாயத்தைத் துவங்க வேண்டியத தான் என்று முடிவெடுத்தோம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அது தான் இன்று நம்மை அரவணைத்துக் கொண்டிருக்கின்ற ஓர் இயக்கம். அந்தப் பேரியக்கம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இப்போது சத்தியம், சமுதாயம் என்ற இரு சக்கரங்களுடன் இந்த இயக்கம் தமிழகத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வேளையில் ஒரு வேதனையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

சமுதாயப் பிரச்சனையை நாங்கள் கையில் எடுக்க மாட்டோம் என்று கூறிய அந்த இயக்கமும், ஏகத்துவம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் என்று நம்மை வெளியே அனுப்பிய பங்காளி இயக்கமும் நாம் வெளியே வந்த பிறகு, பக்காவாகக் கூட்டாளிகளாகிக் கொண்டன. எதற்கு? நம்மை எதிர்ப்பதற்கு!

அத்தனையையும் தாண்டித் தான் அல்லாஹ்வின் மகத்தான கருணையால் சத்தியப் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் ஒருங்கே செய்து தவ்ஹீது ஜமாஅத் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது

சத்திய, சமுதாயப் பாதைகளில் நாம் கண்ட சாதனைகளை இங்கே நாம் காணவிருக்கின்றோம்.

முதலில் சத்தியப் பாதையில் நாம் கண்ட சாதனைகளைப் பார்ப்போம்.

சாதனைகள் என்று நாம் குறிப்பிடும் போது இந்தச் சாதனைகள் 1980களுக்குப் பிந்தைய காலத்திலிருந்தே துவங்குகின்றன. இயக்கங்கள் பலவாக இருந்தாலும், அன்றிலிருந்து இன்று வரை எடுத்து வைக்கும் கொள்கை ஒன்று தான். அந்தக் கொள்கையைத் தடம் புரளாமல் எடுத்துச் சொல்லும் ஆட்களும் அதே ஆட்கள் தான். அதனால் 80களிலிருந்தே இந்தச் சாதனைப் பட்டியலைத் தொடங்குவதற்கு நமக்கு எல்லா வகையான தார்மீக உரிமையும் உள்ளது என்ற விளக்கத்தைத் தெரிந்து கொண்டு இந்த சாதனைப் பட்டியலைப் பார்வையிடச் செல்வோம்.

தலைகீழாகக் கிடந்த ஷரீஅத் வரைபடம்

1980க்கு முன்பு தமிழகத்தில் தவ்ஹீது என்ற வார்த்தை கூட அறிமுகமாகி இருக்கவில்லை. ஆனால் ஆலிம்களிடம் அறிமுகமாகி இருந்தது. இன்றைக்கு நாம் விளங்கி வைத்திருக்கும் அர்த்தத்தில் அல்ல! 'இறந்து விட்ட எந்தப் பெரியாரிடமும் உதவி தேடக் கூடாது; அவர்கள் ஒரு போதும் செவியேற்க மாட்டார்கள்; அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும்' என்று நாம் இன்று விளங்கி வைத்திருக்கும் அர்த்தத்தில் அன்று இந்த வார்த்தை அறிமுகமாகவில்லை. இறந்து விட்ட பெரியார்களிடமும் பிரார்த்திக்கலாம், அதுவும் தவ்ஹீதில் உள்ளது தான் என்று விளங்கி வைத்திருந்தோம்.

84, 85 கால கட்டத்தில் சங்கரன்பந்தலில் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது அந்த மதரஸாவுக்கு அரபகத்திலிருந்து ஒரு நூல் தொகுப்பு வந்து இறங்கியது. ஒன்பது அல்லது பத்து பாகங்கள் கொண்ட இந்தத் தொகுப்பு புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களுக்குரிய அட்டவணையாகும்.

இந்நூற்களில் இடம் பெற்றுள்ள ஓர் அரபி வார்த்தை தெரிந்திருந்தால் போதும்! அந்த வார்த்தை இந்த  நூற்களில் எந்தப் பாடத்தில், எந்தப் பாகத்தில், எந்தப் பக்கத்தில், எத்தனை இடங்களில் பதிவாகியுள்ளது என்று அந்த அட்டவணை துல்லியமாகச் சொல்லி விடும்.

கம்ப்யூட்டர் இல்லாத காலத்தில் அந்த அட்டவணை நூல் ஒரு புதிய புரட்சிப் படைப்பு தான். இத்தனைக்கும் அந்த நூலின் ஆசிரியர் ஒரு யூதர்.

கற்ற இஸ்லாம் ஒன்று!

கண்ட இஸ்லாம் வேறு!

அந்த அட்டவணையில் ஒரு சோதனை முயற்சியாக கப்ர் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு அட்டவணை காட்டும் பாகம், பக்கத்தில் தேடினோம்.

பாகம், பக்கமெல்லாம் சரியாக இருந்தது.

ஆனால் எங்கள் பார்வைக்குக் கிடைத்த கப்ர் தொடர்பான ஹதீஸ்கள் எங்களை அதிர்ச்சியில் உறைய வைத்தன.

படிக்கும் காலத்தில் பார்வைக்குத் தட்டுப்படாத ஹதீஸ்கள்... பல ஆயிரம் வோல்ட்டேஜ் மின்சாரம் தாக்கிய உணர்வை அடைந்தோம்.

அதுவும் அந்த ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில்!

இவை நமக்குத் தெரியாமல் ஆகி விட்டனவே என்று அதிர்ந்தோம். புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களிலும் யூதர்களின் கைவரிசை நுழைந்து விட்டதா? என்றெல்லாம் ஐயப்பாடு எழுந்தது.

ஒருவாறாக உறைவிலிருந்து ஒரு சுய உணர்விக்கு வந்தோம். அப்போது எங்களுக்குத் தெரிந்த உண்மை, மார்க்கம் தூய்மையான வடிவில் தரப்படவில்லை என்பது தான்.

கலப்பற்ற மார்க்கம் கலப்படமாகி உள்ளது. ஷரீஅத்தின் வரைபடம் தலைகீழாக மாறிக் கிடக்கின்றது.
இந்த நிலையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டது.

அப்போதிருந்து சத்தியப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தலை கீழாகக் கிடக்கும் ஷரீஅத் வரைபடத்தை, தலை மேலாக மாட்ட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினோம். இன்றும் அந்தப் பயணத்தில் தொடர்ந்து செல்கிறோம்.

மார்க்கத்தை அதன் தூய வடிவத்தில் எப்படியெல்லாம் அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தர்ஹாக்கள் - சாபத்திற்குரிய தலங்கள்

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்கüடம் அதைப் பற்றிக் கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், '(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்கüடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாüல் அல்லாஹ்விடம் மக்கüலேயே மிக மோசமானவர்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 427

கப்ருகள் அருகில் தொழத் தடை

நீங்கள் கப்ருகள் மீது அமராதீர்கள். கப்ருகளை நோக்கித் தொழாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமர்ஸத் அல்ஃகனவீ  நூல்: முஸ்லிம் 1613

கப்ருகளைக் கட்டாதீர்

கப்ரு பூசப்படுவதையும் அதன் மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 1610

கப்ருகள் பூசப்படுவதையும், அதன் மீது எழுதப்படுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அதை மிதிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: திர்மிதீ 972

தரைமட்டமாக்கப்பட வேண்டிய தர்ஹாக்கள்

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ நூல்: முஸ்லிம் 1609

எங்களை அன்று அதிர்ச்சியில் உறைய வைத்த ஹதீஸ்கள் இவை தான்! இவை அன்றைய தினம் எங்களுக்குத் தெரியாதவை. அந்த அளவுக்கு ஹதீஸ்கள் மறைக்கப்பட்டு இருந்தன. இந்த ஹதீஸ்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து இதன் படி மக்களை இன்று செயல்பட வைத்திருக்கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்!

கப்ருகள், விண்ணைத் தொடும் மினாராக்களுடன் கட்டப்பட்ட தர்ஹாக்கள் தகர்க்கப்படவும், தரை மட்டமாக்கப்படவும் வேண்டிய பணியை மட்டும் நம்மால் செய்ய முடியவில்லை. காரணம், இது ஆட்சியாளர்களால் செய்யப்பட வேண்டியதாகும். எல்லோரும் மொத்தமாக ஏகத்துவத்தில் இணைந்த சகோதரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கப்ருகளைத் தரை மட்டமாக்கிய வரலாறும் உண்டு.

ஆனால் அதே சமயம் தர்ஹாக்களே கதி என்று குடியிருந்தவர்கள் எல்லாம் தவ்ஹீதே கதி என்றாகி விட்டனர். குறிப்பாகப் பெண்களிடம் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது அல்லாஹ்வின் மகத்தான கருணையாகும்.

பெண்கள் தான் அதிகமாக தர்ஹா வழிபாட்டில் மூழ்கிக் கிடந்தவர்கள். அவர்கள் இன்று தவ்ஹீதைத் தங்கள் உள்ளங்களில் ஏந்திக் கொண்டு தவ்ஹீதுக் கூட்டங்களில் தேனீக்கள் போன்று மொய்க்கும் காட்சி தமிழகம் காணாத வரலாற்றுப் புரட்சியாகும்.

தலாக் - நடைமுறைக்கு வந்த நபிவழிச் சட்டம்

மனைவி மீது ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு ஒருவர் ஒரே மூச்சில் முத்தலாக் சொல்லி விட்டால், அவள் ஒரேயடியாக விவாகரத்தாகி விடுவாள். இனி அவளை இன்னொருவர் மணமுடித்து, விவாகரத்துச் செய்த பின்னர் தான் முதல் கணவர் திருமணம் முடிக்க வேண்டும்.

இது மத்ஹபுகள் கூறும் முத்தலாக் முறையாகும்.

காலங்காலமாக பல நூற்றாண்டு காலமாக மக்களிடமிருந்த இந்த மத்ஹப் தலாக் முறையை மயானத்திற்கு அனுப்பி விட்டு, குர்ஆன் கூறும் தலாக்கை மக்களிடம் நிலை நாட்டினோம்.

இதனால் கசங்கிப் போகவிருந்த மங்கையர் மறுவாழ்வு பெற்றனர். கருகிப் போகவிருந்த அவர்களது வாழ்வு மறுமலர்ச்சி பெற்றது. இங்கே மார்க்க அடிப்படையிலான தலாக்கை சுருக்கமாக உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு இஸ்லாம் காட்டும் நெறியாகும்.

விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.அல்குர்ஆன் 2:229

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு தடவை என்பது திரும்பப் பெறுவதற்குரிய இரண்டு தலாக்குகள் ஆகும். அதாவது இவ்விரு தலாக்குகளுக்குப் பிறகு மூன்றாவது முறை தலாக் விட்டால் அவர் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாது. எனவே இத்தலாக் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ வேண்டும் என்பதை இந்த வசனம் விளக்குகிறது.

தடவை என்பதன் பொருளைத் தவறாக விளங்கிக் கொண்டதால் ஒருவன் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புக்களையும் பயன்படுத்தி விட்டான், அவன் மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்று மத்ஹபுகளில் சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு தலாக்குகள் என்று கூறவில்லை. மாறாக தலாக் என்பது இரண்டு தடவைகள் என்று கூறுகின்றான். குறிப்பிட்ட காலக் கெடு முடிவடையாத வரை ஒரு தடவை என்பது பூர்த்தியாகாது.

ஒருவர் தன் மனைவியை நோக்கி ஒரே சமயததில், உன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் முன்னூறு முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் அவர் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான் பொருள்.

தடவை என்பதன் பொருளை விளங்கிக் கொள்ள சில உதாரணங்களைக் கூறலாம்.

ஒருவர் ஒரு மணி நேரம் குளித்துக் கொண்டேயிருக்கின்றார். அதன் பிறகு அவர் தலையைத் துவட்டிக் கொள்கிறார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் நாம் ஒரு தடவை என்று தான் கூறுவோம்.

இன்னொருவர் பத்து நிமிடம் குளிக்கின்றார். பிறகு வெளியே வந்து தலையைத் துவட்டிக் கொள்கிறார். மீண்டும் போய்க் குளிக்கின்றார். இப்படியே ஒரு மணி நேரத்தில் 5 தடவை இது போன்று செய்கின்றார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் 5 தடவை என்று கூறுவோம்.

ஒருவர் சாப்பிடுவதற்கு அமர்ந்து 10 இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். இவர் ஒரு தடவை சாப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அமர்ந்து இரண்டு இட்லி சாப்பிடுகின்றார். இவர் முன்னவரை விடக் குறைவாகச் சாப்பிட்டிருந்தாலும் இரண்டு தடவை சாப்பிட்டார் என்று தான் கூறுவோம்.

இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒரு தடவை என்றால் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்.

இது போலத் தான் தலாக்கின் தடவை என்பதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தலாக் விட்டால் மூன்று மாத விடாய்க்குள்ளாக மீட்டி விட்டால் ஒரு தடவை தலாக் நிறைவேறி விட்டதாகப் பொருள். ஒரு தலாக் கூறி விட்டு, உரிய காலக் கெடுவுக்குள் மீட்டாமல் ஒருவர் ஆயிரம் முறை தலாக் என்று கூறினாலும் அது ஒரு தலாக் தான். ஏனென்றால் ஒரு தடவை என்பது இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதை எத்தனை முறை கூறினாலும் ஒரு தடவை தான்.

இது தான் மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இடம் பெறும் தடவை என்பதன் பொருள்.

இதை வெறும் அறிவுப்பூர்வமாக நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தின் நடைமுறையை ஆராய்ந்து தான் கூறுகின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தது என்னவெனில், ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் ஒருவன் தலாக் கூறத் தனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாய்ப்புக்களில் ஒரு வாய்ப்பைத் தான் பயன்படுத்தியிருக்கிறான் என்பது தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2689

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டு காலத்திலும் மூன்று (தலாக் என்பது) ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று அபுஸ்ஸஹ்பா என்பவர் இப்னு அப்பாஸிடம் கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: தாவூஸ்நூல்: முஸ்லிம் 2690, 2691

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டிய ஷரீஅத் வரைபடத்தில், முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்துள்ளது.

இதற்கு மாற்றமாக மத்ஹபுகள் கொண்டு வந்த முத்தலாக் முறையை மாற்றி, ஷரீஅத் சட்டத்தை அல்லாஹ்வின் தூதர் காட்டிய முறையில் நடைமுறைப்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபெரும் சாதனையாகும்.

மஸ்ஜிதுக்கு வரும் மகளிர்

'தொழுகையை நீட்டித் தொழ வேண்டும் என்று எண்ணி தொழுகையில் நான் நிற்கின்றேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலைச் செவிமடுக்கின்றேன். அக்குழந்தையின் தாயை நான் சங்கடப்படுத்துவதை வெறுத்து, உடனே எனது தொழுகையை சுருக்கி விடுகின்றேன்'' என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)  நூல்: புகாரி 868, 707

வல் முர்ஸலாத்தி உர்பன் என்ற 77வது அத்தியாயத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதும் போது செவிமடுத்த உம்முல் பழ்லு (ரலி) அவர்கள், 'என்னருமை மகனே! இந்த சூராவை ஓதி எனக்கு (பழைய) நினைவை ஏற்படுத்தி விட்டாய். இதுதான் அல்லாஹ்வின் திருத்தூதர் மக்ரிபில் ஓதும்போது நான் செவிமடுத்த கடைசி அத்தியாயமாகும்'' என்று கூறினார்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 763, திர்மிதி 283

'(தொழுகையில் இமாம் தவறிழைத்தால்) சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்கு உரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1203, திர்மிதி 337

நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன்  பெண்கள் எழுந்து விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி) நூல்: புகாரி 837, 866, 875

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுது முடிந்தவுடன் பெண்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தினால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 867, 372, 578, 872

நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலி) அவர்கள் கூறியதும் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். 'இப்பூமியில் வசிப்பவர்கள் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர்பார்த்திருக்கவில்லை'' என்றார்கள். அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 864, 866, 569, 862

'உங்களில் ஒருத்தி பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது'' என்று எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜைனப் (ரலி) நூல்: முஸ்லிம் 674

'உங்களுடைய மனைவிமார்கள் (தொழுவதற்காக) பள்ளிவாசலுக்குச் செல்ல  உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களைத் தடுக்காதீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன் என் இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது மகனுக்கு) கூறினார்கள். (அதற்கு அவருடைய மகன்) பிலால் பின் அப்தில்லாஹ், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களைத் தடுப்பேன்'' என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரை முன்னோக்கி மிக மோசமாகத் திட்டினார்கள். அது போன்று திட்டியதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. பிறகு 'நான் நபியவர்களிடமிருந்து உனக்கு அறிவிக்கின்றேன். நீயோ அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தடுப்பேன் என்று கூறுகின்றாய்'' என்று கூறினார்கள்'  அறிவிப்பவர்: ஸாலிம் பின் அப்தில்லாஹ் நூல்: முஸ்லிம் 666

இப்னு உமர் (ரலி) அவர்கள், 'இரவில் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்'' என்று சொன்னதும் இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனார், 'பெண்களை வர விட மாட்டோம் இதை (அப்பெண்கள்) குழப்பம் ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பாக ஆக்கிக் கொள்வார்கள்'' என்று பதில்சொன்னார். உடனே அவரைக் கடுமையாக வெறுத்தார்கள். 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்கிறேன்.  நீ வர விட மாட்டேன் என்கிறாயா?'' என்றும் தன் மகனை நோக்கிக் கூறினார்கள்.அறிவிப்பவர்: முஜாஹித் நூல்: முஸ்லிம் 670

அடுக்கடுக்காகத் தொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஹதீஸ்களெல்லாம் மகளிருக்கும் மஸ்ஜிதுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன.

ஷரீஅத் வரைபடத்தில் உள்ள இந்தச் சட்டப் பகுதி சமுதாயத்தில் நடைமுறையில் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெண்கள் அறவே அனுமதிக்கப் படுவதில்லை. விதிவிலக்காக எங்காவது ஒரு சில பள்ளிகளில் ரமளானில், அதுவும் தனியாக ஜமாஅத் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கலாம். இது தவிர ஏனைய அனைத்துப் பள்ளிகளிலும் பெண்களுக்குக் கதவு சாத்தப்பட்டுத் தான் உள்ளன.

'பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்யாதீர்கள். அவர்களது வீடுகளில் தொழுவது அவர்களுக்குச் சிறந்தது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: அபூதாவூத் 480

இந்த ஹதீஸைத் தங்கள் நிலைபாட்டிற்கு ஆதாரமாகக் காட்டி பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கின்றனர். சிறந்தது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், பெண்கள் வந்தால் தடை செய்யக் கூடாது என்று கூறியிருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

பெண்களுக்கான இந்த வாசல் அடைக்கப்பட்டதால் தான் அவர்கள் தர்ஹாக்களின் பக்கம் சென்றனர். இந்த நிலையை மாற்றி அல்லாஹ்வின் அருளால் இன்று பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியுள்ளது. தலைகீழாகிக் கிடந்த ஷரீஅத் வரைபடத்தை நேராக்கியுள்ளது.

திடலுக்கு வந்த  பெருநாள் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாüலும் ஹஜ்ஜுப் பெருநாளும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 956

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான  ஹதீஸும் இல்லை.

'மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது இந்தப் பள்üயில் (மஸ்ஜிதுத் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1190

இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரண பள்üகüல் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளை பள்üயில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயத்தில் நன்மைகள் அதிகமோ அதைத் தான் நடைமுறைப்படுத்துவார்கள். அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை திடலில் தொழுதிருக்கும் போது, அதைப் புறக்கணித்து விட்டு பள்ளியிலேயே தொழுவது நபிவழிக்கு மாற்றமானது ஆகும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பாலான பகுதிகüல் திடலில் தொழும் நடைமுறை இல்லை. பள்ளிவாசலிலேயே பெருநாள் தொழுகையைத் தொழுது வருகிறார்கள். இவ்வாறு பள்ளிவாசலில் தொழும்போது மாதவிடாய்ப் பெண்களுக்கு பெருநாள் சந்தோஷங்கüல் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதன் மூலம் அவர்களுடைய உரிமையை நாம் மறுப்பதோடு பரக்கத்தும் புனிதமும் மிக்க அந்த நாüல் அவர்கள் (குத்பா) உரையைக் கேட்பது, தக்பீர் கூறுவது, துஆச் செய்வது போன்ற நற்செயல்கüல் ஈடுபடுவதை விட்டும் தடுத்தவர்களாகி விடுகிறோம். அதிலும் குறிப்பாக ஹனபி மத்ஹப் பகுதிகளில் பெண்களுக்கு சுத்தமாக பெருநாள் தொழுகையே கிடையாது.
ஷாபி மத்ஹப் பகுதிகளில் பெண்கள் தனி ஜமாஅத்தாகத் தொழும் வழக்கம் உள்ளது. ஹனபி மத்ஹப் பகுதிகளில் இந்த வாய்ப்பு பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது.

இந்தக் கலாச்சாரத்தைத் தகர்த்தெறிந்து ஹனபி, ஷாபி மத்ஹப் பகுதிகளில் ஆண்களும், பெண்களும் பெருநாள் தொழுகையில் பங்கேற்கும் வகையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகம் இதுவரை காணாத மற்றொரு வரலாற்றுப் புரட்சியாகும்.

ஏழு தக்பீர்கள்  அறிமுகமும், அமலாக்கமும்

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்றால், அதற்கு நேர் மாற்றமாக நின்று செயல்படும் மத்ஹப் ஹனபி மத்ஹபாகும். அந்த மத்ஹபுக்காரர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் மூன்று தக்பீர்களும், அடுத்த ரக்அத்தில் மூன்று தக்பீர்களும் ஆக 3+3 ஆறு தக்பீர்கள் மட்டுமே அதிகமாகச் சொல்லும் முறையை இதுவரை காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த நடைமுறையை மாற்றி நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த 7+5 தக்பீர்கள் கூடுதலாகச் சொல்லும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அமலாக்கம் செய்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்கள்: திர்மிதி 492, அபூதாவூத்

ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு, 'நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)'' என்றார். அறிவிப்பவர்: தல்ஹாநூல்: புகாரீ 1335

இது தான் ஷரீஅத் வரைபடத்தில் உள்ள வரைகோடாகும். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைக்கு நேர்முரணாக ஹனபி மத்ஹபில் ஜனாஸா தொழுகையில் 'ஸனா'வை மட்டும் ஓதும் வழக்கம் உள்ளது.

இதை மாற்றி ஷரீஅத் வரைபடத்தில் உள்ளபடி ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதும் நபிவழியை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைப்படுத்தியது.

ஒரு பாங்கு தான்!     இரண்டு பாங்கில்லை!

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது. அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி) நூல்: புகாரீ 916

ஜுமுஆ அன்று ஒரு பாங்கு சொல்வது தான் நபிவழியில் உள்ளது. இதற்கு மாற்றமாக தமிழகத்தில் இரண்டு பாங்கு சொல்லும் நடைமுறை உள்ளது.

ஷரீஅத் வரைபடத்திலுள்ளது ஒரு பாங்கு தான் என்பதைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது தவ்ஹீது ஜமாஅத்.

சப்தமின்றி திக்ரு செய்தல்

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! அல்குர்ஆன் 7:205

திக்ரு செய்வதில் திருக்குர்ஆன் கூறும் வழிமுறை இது தான். அது போன்று நபவழியில் காணும் நடைமுறையும் இது தான்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, 'லா இலாஹ இல்லல்லாஹ் லிவணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்றும், 'அல்லாஹு அக்பர் லி அல்லாஹ் மிகப் பெரியவன்'' என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில்,  நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. அவன்உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகில் இருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூசா அஷ்அரீ (ரலி)நூல்: புகாரி 2992

குர்ஆன், ஹதீஸின் இந்த வழிகாட்டுதலுக்கு மாற்றமாக, பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் சப்தமிட்டு திக்ரு செய்வது இதுவரை நடந்தேறும் வரம்பு மீறல்களாகும்.

இந்த வரம்பு மீறலை மாற்றி, வரைபடத்தில் உள்ளதைப் போல் மனதிற்குள் திக்ர் செய்யும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் செய்தது.

சத்தியப் பாதையில் தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்த்திய சாதனைகள் இவை மட்டுமல்ல! இன்னும் ஏராளம் உள்ளன.

ஸஹர் பாங்கு அறிமுகம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்கüல் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்கüல் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற் காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி 621

இது ஷரீஅத் வரைபடத்தில் உள்ள வணக்க வழிபாடாகும். ஆனால் இந்த வழிபாடு சமுதாயத்தில் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத் தான் தமிழக இஸ்லாமிய வரலாற்றிலேயே பள்ளிவாசல்களில் ஸஹர் பாங்கை அறிமுகப்படுத்தி, ரமளான் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உள்ளது போன்று உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கிறது.

எட்டுத் திக்கும் எட்டு ரக்அத் இரவுத் தொழுகை

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழ மாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'' என்றுவிடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர் ரஹ்மான்  நூல்: புகாரி 1147

இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இரவுத் தொழுகை. ரமளானிலும், ரமளான் அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) அவர்கள் 8+3 ரக்அத் இரவுத் தொழுகை தொழுதுள்ளார்கள். சில ஹதீஸ்களில் வித்ருடன் சேர்த்து 13 ரக்அத் தொழுததாகவும் இடம் பெற்றுள்ளது.

இது தான் ஷரீஅத் வரைபடத்தின் சரியான வடிவம். ஆனால் இது தலைகீழாக மாற்றப்பட்டு 20+3 ரக்அத்துகள் தொழும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.

தராவீஹ் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த பித்அத்தை மாற்றி நபிவழியை நடைமுறைப் படுத்த தவ்ஹீது ஜமாஅத் முயன்ற போது சந்தித்த எதிர்ப்பைப் போன்று வேறு எதற்கும் எதிர்ப்பைச் சந்தித்திருக்காது. அந்த அளவுக்கு, எட்டு ரக்அத் இரவுத் தொழுகை என்று அறிவித்ததும் தமிழகமே அமர்க்களப்பட்டது; ஆர்ப்பாட்டம் அடைந்தது. இந்த அமர்க்களம், ஆர்ப்பாட்டம் எப்போது அடங்கியது? 8+3 ரக்அத்களை தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்திக் காட்டிய பிறகு தான் அடங்கியது.

இருபது ரக்அத் தொழுவோரிடம் காணப்படுகின்ற அவசரம், எட்டு ரக்அத் தொழுவோரிடம் இல்லை. இருபது  ரக்அத்களும் அரை மணி நேரத்தில் முடிகின்றது என்றால் எட்டு ரக்அத் தொழுவதற்கு ஒரு மணி நேரத்தைத் தாண்டுகிறது. அவ்வளவு அமைதி! அந்த அளவுக்கு நிதானம்!

அவசர கதியில் குர்ஆனை ஓதி முடிக்காமல் நிறுத்தி, நிதானமாக கிராஅத் ஓதப்படுகின்றது. நிலையில், ருகூவில், ஸஜ்தாவில் நிறுத்தி நிதானமாகத் தொழும் இந்த இரவுத் தொழுகையில் கலந்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அப்படியொரு மாற்றத்தை, மறுமலர்ச்சியை, வணக்க வழிபாட்டுப் புரட்சியை தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் ஏற்படுத்தியது.

பத்து இரவுகளும் பட்டப்பகலான அதிசயம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2017

அல்லாஹ்வின் தூதரின் இந்த உத்தரவு ஷரீஅத் வரைபடத்தின் சட்ட வடிவமாகும். ஆனால் இதற்கு மாற்றமாக 27ம் இரவில் மட்டும் அதுவும் முன்னேரத்தில் மக்கள் கூடி விட்டு, புரோட்டா கறி, பிரியாணிப் பொட்டலம், சேமியா பாயாசம் சகிதத்துடன் கலைந்து விடும் வழக்கம் இருந்து வந்தது. ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை அடையும் விஷயத்தில் மக்களிடம் இருந்த அலட்சியப் போக்கை மாற்றி, ஒரு சரித்திர மாற்றத்தைக் கொண்டு வந்தது தவ்ஹீது ஜமாஅத்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்கும் விதமாக, ரமளானின் பிந்திய பத்து இரவுகளும் பட்டப் பகலானது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களில் இந்த நாட்களில் பின்னிரவு நேரத்தில் இரவுத் தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் நள்ளிரவில் நடைபெறும் இரவுத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு இரவு 12 மணிக்கே பெண்கள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கின்றனர். பிந்திய பத்தில் நடைபெறும் இந்த இரவுத் தொழுகையில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்கள் திரண்டு வருகின்றனர். ஏன்? லைலத்துல் கத்ரை, அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான நேரத்தில் தேடுகின்ற புரட்சியை தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டு வந்தது.

தவ்ஹீது பள்ளிகளில் உள்ள ரம்மியமிகு ரமளானின் பிந்திய இரவுகளின் சிறப்புகளைப் பார்த்து விட்டு, சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகளிலும் அந்த நேரத்தில் தஹஜ்ஜத் என்று கூறி மேலதிகமாக 8 ரக்அத்கள் தொழ ஆரம்பித்துள்ளனர். அந்த அளவுக்கு மாற்றத்தை, தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது.

மக்ரிபுக்கு முன் சுன்னத்

நபி (ஸல்) அவர்கள் 'மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்' (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும் போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, 'இது விரும்பியவர்களுக்கு மட்டும் தான்'' என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி) நூல்: புகாரி 1183

ஷரீஅத்தின் வரைபடத்திலுள்ள இந்த வணக்க வழிபாடு இன்று நடைமுறையில் இல்லை. ஷாஃபி மத்ஹபிலாவது ஒரு சில இடங்களில் மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதைப் பார்க்க முடியும். ஆனால் ஹனபி மத்ஹபில் மருந்துக்குக் கூட இதைப் பார்க்க முடியாது. மக்ரிப் பாங்கு முடிந்தவுடன் இகாமத் சொல்லி தொழுகையை ஆரம்பித்து விடுவர். தொழுகை நேர அட்டவணையில் கூட 'மக்ரிப் இகாமத்' என்ற இடத்தில், 'உடன்'' என்று தான் போட்டிருப்பார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இன்று மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதை மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

பள்ளிவாசலில் நுழைந்தால் ஒரு காணிக்கைத் தொழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் பள்üவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.  அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி) நூல்: புகாரி 444

ஷரீஅத்திலுள்ள இந்த வணக்கம் சமுதாயத்தின் செயல்பாட்டில் இல்லை. இந்த வணக்கத்தை, தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் அறிமுகப்படுத்தி, செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தது.

ஃபித்ரு ஸதகாவில்  ஒரு புரட்சி

பெருநாள் தர்மம் என்ற ஒன்று தமிழகத்தில் அறவே இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் அந்தந்த ஊர்களில் பள்ளிவாசலில் பணி புரியும் ஆலிம்கள், பணி புரியாத ஆலிம்கள், முஅத்தின்கள், குழி தோண்டும் பக்கீர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கொடுப்போரும் சிலர் தான் இருந்தனர். பெறுவோரும் சிலர் தான். ஃபித்ரு ஸதகா கொடுக்கக் கடமைப்பட்ட ஆலிம்களே அதைப் பெறுபவர்களாக இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம்.

இப்படி அல்லறை, சில்லறையாக சிதறிச் சிதறி வழங்கப்பட்ட ஃபித்ரு ஸதகா என்ற வணக்கத்தை தமிழக முஸ்லிம்களிடம் முறையாக அறிமுகப்படுத்தி, முழுமையாகச் செயல்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்!

தமிழக முஸ்லிம்களிடம் கோடிக்கு மேல் ஃபித்ரு ஸதகாவைத் திரட்டி, சமுதாயத்தின் கோடியில் கிடக்கும் ஏழை எளியவர்களுக்கு வழங்கும் புரட்சி நடைமுறைக்கு வந்தது தவ்ஹீத் ஜமாஅத்தினால் தான்.

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 1503

பெருநாள் இரவுகளில் கேலிக் கூத்துகளில் ஈடுபட்டுக் கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருந்த இளைஞர் பட்டாளம், இன்று இந்த ஹதீஸைச் செயல்படுத்தும் விதமாக அரிசி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு, ஏழைகளின் வீடு தேடிச் சென்று வழங்கும் தூய பணியில் ஈடுபட்டுள்ள காட்சி, இது வரை தமிழகம் காணாத காட்சியும் மாட்சியுமாகும். புனித மிக்க ஒரு புரட்சியாகும்.

தற்கொலை செய்தவருக்கு தொழுவதற்குத் தடை

ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அவர் இறந்து விட்டார்'' என்று சொன்னார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், 'அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். 'நான் அவரைப் பார்த்தேன் (அவர் இறந்து விட்டார்)'' என்று அம்மனிதர் கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'அவர் இறக்கவில்லை'' என்று கூறினார்கள். பிறகு அம்மனிதர் (நோயாளியிடம்) வந்த போது, அவர் கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அவர் இறந்து விட்டார்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'அவர் தன்னிடமிருந்த கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதை நான் பார்த்தேன்'' என்று கூறினார். 'நீ பார்த்தாயா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அம்மனிதர், ஆம் என்றார்.  நபி (ஸல்) அவர்கள், 'அப்படியானால் அவருக்கு நான் தொழுவிக்க மாட்டேன்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி) நூல்: அபூதாவூத் 2770

இது தான் ஷரீஅத் சட்டம். இந்தச் சட்டத்தில் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை. ஆனால் மத்ஹபுகளில் இதற்கு மாற்றமாக, தொழுகை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஜனாஸா தொழுகை என்பது முஸ்லிம்களுக்குத் தானே தவிர, நரகம் என்று தெளிவாகி விட்டவருக்கு இல்லை. தற்கொலை செய்தவர் காஃபிராகி விடுகின்றார் என்பதைப் புகாரியில் இடம்பெறும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் இருந்தவர்கüடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர்காயமடைந்தார். அவரால் வலி பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ், 'என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப் பட்டு) என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன்'' என்று கூறினான். அறிவிப்பவர்: ஜுன்தப் (ரலி) நூல்: புகாரி 3463

இந்த அடிப்படை விபரம் கூடத் தெரியாமல் மத்ஹபுவாதிகள், தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தத் தடை என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

பயனுள்ள பயணத் தொழுகை

நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாக உள்ளனர். அல்குர்ஆன் 4:101

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ, அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத்களை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்நூல்: முஸ்லிம் 1230

பயணத்தின் போது தொழுகையைச் சுருக்கிக் கொள்ளும் வழிமுறையை அல்குர்ஆனும், ஹதீசும் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. ஆனால் மத்ஹபு ஆலிம்களோ, பொருத்தமில்லாத காரணங்களைக் கூறி இந்த உரிமையைத் தட்டிப் பறித்து விட்டனர். தவ்ஹீத் ஜமாஅத் தலையெடுத்த பின்னர் தான் இந்தச் சலுகை மக்களிடம் சென்றடைந்தது.

சூரியன் சாய்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரீ 1111

பயணத்தின் போது தொழுகையின் ரக்அத்களைக் குறைத்துக் கொள்வதற்குச் சலுகை வழங்கிய மார்க்கம் தான் சேர்த்துத் தொழுவதற்கும் அனுமதி அளித்திருக்கின்றது. ஆனால் இந்த ஆலிம் வர்க்கம் இந்த உரிமையை அநியாயமாகப் பறித்து விட்டது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை மீட்டு, ஷரீஅத்
வரைபடத்தைச் சரியாக்கி சாதனை படைத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்!

களாத் தொழுகை

ஒருவர் பருவ வயதை அடைந்ததும் அவருக்குத் தொழுகை கடமையாகின்றது. அவர் ஐம்பது வயது வரை தொழாமல் இருந்து விட்டு, பிறகு திருந்தி தொழத் துவங்குகின்றார். இப்போது இந்த மத்ஹபுவாதிகள், இவ்வளவு காலம் தொழாமல் இருந்ததையும் சேர்த்து களாவாகத் தொழ வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதற்குப் பயந்து அவர் தொழுவதையே விட்டு விடுகின்றார். இப்படி மார்க்கத்தில் இல்லாத களா தொழுகையை மக்களிடம் திணித்துக் கொண்டிருந்தார்கள்.

'யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1217

தூக்கம், மறதி ஆகிய இரண்டிற்கு மட்டும் தான் களா உண்டு. மற்றபடி, தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று திருக்குர்ஆன் (4:103) கூறுவதை மக்களிடம் விளக்கி, களாத் தொழுகை என்ற சுமையை சமுதாயத்திலிருந்து தவ்ஹீது ஜமாஅத் அகற்றியது. வாழ் நாள் களாவுக்குப் பயந்து தொழாமலே இருந்த பலரைத் தொழுகையாளிகள் ஆக்கியது.

மாற்றப்பட்ட ஸஹர் நேரம்

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! (அல்குர்ஆன்2:187)

சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வலியுறுத்துகின்றன.

பிலால் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இப்னு உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்'' என்று கூறினார்கள். அறிவிப்போர்: ஆயிஷா (ரலி)இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1918, 1919

திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் இவ்வளவு தெளிவாக இருந்தும், ஃபஜ்ரு நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹர் நேரம் முடிந்து விடுவதாக பரவலான நம்பிக்கை மக்களிடம் உள்ளது.  நோன்புக் கால அட்டவணைகளை அச்சிட்டு மக்களிடம் விநியோகிப்பவர்களும் ஸஹர் முடிவு நேரம் என்று காலை 4 மணியிலிருந்து 4.30க்குள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த நிலையை மாற்றி, ஃபஜ்ருடைய பாங்கு சொல்லப்படும் வரை ஸஹர் செய்யலாம் என்ற நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த ஸஹர் நேரத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அமல்படுத்தவும் செய்தது.

நோன்பு துறப்பதில் கால தாமதம்

'சூரியன் மறைந்து இந்தத் திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையிலிருந்து பகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புகாரி 1954

'நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) நூல்: புகாரி 1957

சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இதை மாற்றியமைத்து, சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்கும் நடைமுறையை ஏற்படுத்தியது.

உச்சி வெயிலில் பெருநாள் தொழுகை

பெருநாளன்று திடலில் தொழும் போது மக்களை வெயில் தாக்கும். இதனால் அதிகாலையிலேயே பெருநாள் தொழுகையை முடித்து விட வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

இந்த ஹதீஸிலும், இது போன்ற பல்வேறு ஹதீஸ்களிலும் பெருநாள் தொழுகையை காலையில் முதல் காரியமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர், பெருநாள் தொழுகையை காலை பத்து மணி வரை தாமதமாகத் தொழுது கொண்டிருந்தனர்.

இறைவனின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத், பெருநாள் தொழுகையை அதிகாலை நேரத்தில், சூரியன் உதயமான சிறிது நேரத்திலேயே தொழுது வழிகாட்டியது. குறிப்பாக ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுகை முடித்து விட்டு அறுத்துப் பலியிட வேண்டும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இந்த நபிவழியைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

இதனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் திடலில் நடத்தும் பெருநாள் தொழுகைகளில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. இதைக் கண்டு சுன்னத் வல் ஜமாஅத்தினரும் கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக அதிகாலையில் தொழ ஆரம்பித்துள்ளனர்.

இப்படி ஷரீஅத் என்ற வரைபடத்தில் உள்ள அத்தனை வழிபாடுகளையும் உள்ளதை உள்ளபடி செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

மார்க்கப் பிரச்சாரத்தில் ஒரு மறுமலர்ச்சி

நாம் இது வரை கண்டது, வணக்க வழிபாடுகளை குர்ஆன், ஹதீஸ்  அடிப்படையில் மாற்றியமைத்து தவ்ஹீது ஜமாஅத் கொண்டு வந்த மறுமலர்ச்சி ஆகும். தலைகீழாகக் கிடந்த ஷரீஅத் வரைபடத்தை நேராக்கிக் காட்டிய சாதனைகளில் சிலவற்றைத் தான் நாம் கண்டோம்.

இவையல்லாமல் மார்க்கச் சொற்பொழிவு ரீதியிலும் தவ்ஹீது ஜமாஅத், வல்ல இறைவனின் அருளால் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

நாதியற்றுப் போன பேச்சாளர்கள்

தமிழகத்தைச் சார்ந்த ஒவ்வொரு தவ்ஹீதுவாதியும் ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்கூடாகக் காணலாம். கடந்த காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் மார்க்கக் கூட்டம் நடைபெறும்.

அதிலும் குறிப்பாக நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதமென்றால் போதும்! மவ்லிதுப் பாடல்களுக்கும் மீலாது மேடைகளுக்கும் மவுசு உண்டாகி விடும். ஊருக்கு ஊர் போட்டி போட்டுக் கொண்டு மீலாது சொற்பொழிவுகளை நடத்துவார்கள்.

இம்மேடைகளில் இரண்டு ரகமான பேச்சாளர்கள் விளாசித் தள்ளுவார்கள்.

ஒரு ரகம் உலமாக்கள்! மற்றொரு ரகம், இந்த உலமாக்களின் கொச்சைப் பேச்சைக் கிண்டல் செய்து பேசும் உலகக் கல்வி கற்ற பட்டதாரிகள்; பண்டிதர்கள்! இவர்களில் அரசியல்வாதிகளும் உண்டு. அரசியலில் கலக்காதவர்களும் உண்டு.

இவ்விரு பேச்சாளர்களுமே பொய்யான ஹதீஸ்களை வைத்துப் பின்னியெடுத்து விடுவார்கள். இவ்விரு ரகத்தினருமே போட்டி போட்டுக் கொண்டு நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யான செய்திகளை அவிழ்த்து விடுவார்கள்.

உலமாக்களிலும் மூன்று சாரார் உள்ளனர். ஒரு சாரார் கப்ரு வணக்கத்தை ஆதரிப்பவர்கள்; தரீக்கா மற்றும் தர்ஹாவாதிகள். ஷப்பீர் அலீ பாகவி, கலந்தர் மஸ்தான் ரஹ்மானி போன்றவர்கள் இந்தத் தரப்பில் உள்ளவர்கள்.

மற்றொரு சாரார் தப்லீக்வாதிகள். காயல்பட்டிணம் ஹைதுரூஸ் ஆலிம், நிஜாமுத்தீன் மன்பஈ, கலீல் அஹ்மது கீரனூரி போன்றவர்கள் இதில் அடக்கம்.

இந்த இரு சாராரும் ஒருவரையொருவர் காஃபிர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதிர்க் கருத்து கொண்டவர்கள். ஒருவரின் கொள்கையை மற்றவர் குஃப்ரு என்று விமர்சனம் செய்வார்கள்.

மூன்றாவது சாரார் இரண்டும் கெட்டான்கள். மறைந்த ஷம்சுல்ஹுதா, தற்போதுள்ள டி.ஜே.எம். ஸலாஹுத்தீன், கான் பாகவி போன்றவர்கள். இவர்கள் எந்தப் பக்கம் என்று சொல்ல முடியாது. தடுமாற்றத்திலும், தத்தளிப்பிலும் உள்ளவர்கள்.

ஆனால் ஓர் உண்மை! தமிழகத்தில் தவ்ஹீது கருத்து உருவானவுடன் இச்சாரார் அனைவருமே தவ்ஹீதுக்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்டு நம்மை எதிர்த்தனர். இப்போதும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் அவர்கள் அனைவரும் மத்ஹபுவாதிகள். அந்த அடிப்படையில் ஒன்று சேர்ந்து கொண்டு நம்மை எதிர்க்கத் துவங்கினர். விதிவிலக்காக அவர்களில் நம்மை எதிர்க்காதவர்களும் உண்டு.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஒரு காலத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களாக, நாவலர்களாக, உலமாக்களின் நாயகர்களாக வலம் வந்தவர்களில் பலர் தற்போது பேர் மட்டுமல்ல, வேரும் அறுந்து போனார்கள்.

கவ்ஸர் அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுவது போன்று சத்தியத்திற்கு எதிராகக் கிளம்பிய அவர்கள் சந்ததியற்றுப் போனார்கள்.

இன்று இவர்கள் போடும் கூட்டத்திற்குப் பொதுமக்கள் வருவதில்லை. ஒப்பு சப்புக்காகச் சிலர் வருகின்றனர். அல்லது மதரஸா மாணவர்களைக் கொண்டு இருக்கைகளை நிரப்புகின்றனர்.

மார்க்கப் பிரச்சாரத்திற்குக் கூட்டம் வரவில்லை என்பதால் சமுதாயப் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு அதற்காகக் கூட்டம் போட்டுப் பார்த்தனர். அதற்கும் மக்கள் வருவதில்லை.

இன்று மக்கள் அலையலையாக வருவது தவ்ஹீதுக் கூட்டத்திற்கு மட்டும் தான். இந்த அற்புதத்தை நமது வாழ்நாளிலேயே அல்லாஹ் நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறான்.

அது மட்டுமல்ல! ஏகத்துவப் பிரச்சார உரைகள் ஆடியோ, வீடியோ கேஸட்டுகளாகவும், குறுந்தகடுளாகவும் வெளியிடப்பட்டு, அவையும் மக்களிடம் பிரச்சாரமாகச் சென்று கொண்டிருக்கின்றன.

சினிமாப் படங்களையும், பாடல்களையும் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், இன்று மார்க்கப் பிரச்சாரங்களைக் கேட்டு, பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் தவ்ஹீது ஜமாஅத் சொற்பொழிவு ரீதியில் ஏற்படுத்திய பெரும் புரட்சியாகும்.

மேலும் இந்த மார்க்கச் சொற்பொழிவுகள் தனியார் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு உலகம் முழுவதும் சென்று கொண்டிருக்கின்றது.

தொலைக்காட்சி என்றாலே அது கேளிக்கை தான் என்ற நிலையை மாற்றி, இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கும் அதைப் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்தது தவ்ஹீது ஜமாஅத்தின் சாதனையாகும்.

எடுபடாமல் போன இலக்கியப் பேச்சு

உலமாக்கள் அல்லாத சாராரில் ஆ.கா. அப்துஸ்ஸமது, அப்துல் லத்தீப், மறுமலர்ச்சி ஆசிரியர் யூசுப் ஆகியோர் அடங்குவர். ஒரு காலத்தில் இவர்களது பேச்சுக்களைக் கேட்பதற்கென்று ஒரு கூட்டம் கூடும்.

ஆனால் ஏகத்துவம் வந்த பிறகு இவர்களின் பேச்சுக்கள் எடுபடாமல் போனது. அதுவும் இவர்களது இலக்கியப் பேச்சுக்கள் மதிப்பிழந்து போனது.

காரணம் என்ன? இவர்களும் உலமாக்களுடன் சேர்ந்து கொண்டு சத்தியத்தை எதிர்த்தது தான்.

ஆதாரம் கேட்கும் அற்புதக் காலம்

எந்தப் பேச்சாளரும் எந்த மேடையிலும் எதையும் பேசி விட்டுப் போகலாம்; பொய்யான ஹதீஸ்களை மேடையில் புளுகி விட்டுப் போகலாம் என்று அந்தக் காலம் அமைந்திருந்தது.

நூர் மஸாலா என்ற பெயரில் பக்கீர்ஷாக்கள், நபிமார்கள் வரலாறு என்று கூறி ஆயிரக்கணக்கான பொய்களை அள்ளி வீசிய காலம் அது!

அந்தக் காலத்தை அப்படியே புரட்டியெடுத்து, சரியான ஹதீஸை மட்டும் பேச வைக்கும் காலத்தை உருவாக்கியது தவ்ஹீது ஜமாஅத்!

பேச்சாளர்கள் பேசி முடித்ததும், நீங்கள் பேசியதற்குக் குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உள்ளதா? என்று ஆண்கள் மட்டுமல்ல! பெண்களும் பேச்சாளர்களைக் கடித்துக் குதறும் புரட்சியை தமிழகம் கண்டது.

மகளிர் பெற்ற மறுவாழ்வு

தமிழகத்தில் தவ்ஹீது என்ற பாக்கியம் ஆரத் தழுவிய பிறகு முஸ்லிம்கள் கண்ட பயன்கள் ஏராளம். இதில் பெண்கள் கண்ட பயன்கள் அளவிட முடியாது என்று கூறலாம். ஒரே அமர்வில் மூன்று தலாக் சொன்னால் அதை மீட்ட முடியாது என்ற மத்ஹபு வெறியைத் தகர்த்தெறிந்து, அது ஒரு தலாக் தான், அதை மீட்டிக் கொள்ள முடியும் என்று தவ்ஹீது ஜமாஅத் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதைக் கடந்த இதழில் கண்டோம்.

முத்தலாக் விஷயத்தில் பெண்களுக்கு மறு வாழ்வு வழங்கியது போன்று மற்றொரு விஷயத்திலும் பெண்களுக்கு மிகப் பெரிய நிம்மதியை வழங்கியது. அது தான் குல்உ சட்டமாகும்.

பிடிக்காத கணவனை விட்டும் பிரிந்து கொள்வதற்காக இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய ஓர் உரிமை தான் 'குல்உ' ஆகும். இது ஷாபி மத்ஹபுச் சட்டத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தாலும் நடைமுறைக்கு வராத வறட்டுத் தத்துவமாகவே நீடிக்கின்றது. ஹனபீ மத்ஹபில் இது அறவே கிடையாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்'' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி 'சரி'' என்றார். உடனே நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் 'தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு'' என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 5273, நஸயீ 3409

இந்த ஹதீஸின் அடிப்படையில் காட்டுமிராண்டித்தனமான கணவன்களிடமிருந்து பிரிந்து, தனக்கு விருப்பமான வேறு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களிடம் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதன் மூலம், பிடிக்காத கணவனிடம் அல்லது கொடுமைக்காரக் கணவனிடம் இருந்து கொண்டு கசங்கி, உருகி, கருகிப் போகும் கோர நிலையிலிருந்து பெண்களைக் காத்து, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கியது தவ்ஹீது ஜமாஅத்!

சுன்னத் வல்ஜமாஅத்தின் முக்கியப் பிரமுகர்கள் கூட, தங்களுடைய குடும்பப் பெண்களுக்கு இது போன்ற சோதனைகள் ஏற்பட்டால் மத்ஹபுச் சட்டங்களையோ அல்லது மத்ஹபு ஆலிம்களையோ நாடுவதில்லை. ஏனென்றால் தங்கள் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமையிலிருந்து அவர்களால் காப்பாற்ற முடியாது என்பதை அறிந்து, தவ்ஹீது ஜமாஅத்தைத் தான் நாடுகிறார்கள் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

புர்கா போடும் புரட்சி

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வாழும் பெண்கள் குறிப்பாக நெல்லை, குமரி மாவட்டங்களில் பிற மதத்தினரைப் போலவே சேலை, தாவணி, துப்பட்டா போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு தான் காட்சியளிப்பார்கள். மதுரை, ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் ஒரு விதமான கோஷா! தஞ்சையில் ஒரு விதமான கோஷா என்றாலும் அதில் கவர்ச்சிகரமான கோஷா!

மார்க்கம் கூறியபடி தங்கள் உடல் அழகை மறைக்காத நிலை தான் பெரும்பாலான முஸ்லிம் பெண்களிடம் இருந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஏகத்துவப் பிரச்சாரம் வீரியமடைந்த பிறகு, பெண்கள் தங்கள் முகம், முன் கைகளைத் தவிர ஏனைய பகுதிகளை மறைக்கும் புர்கா அணியத் துவங்கினர். தவ்ஹீது ஜமாஅத் பெண்கள் மட்டுமல்லாது தற்போது பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்கா அணிகின்றனர். இது உண்மையில் ஒரு புரட்சியாகும்.

புரட்சி என்றால் ஏற்கனவே இருக்கும் ஒரு நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் மாற்றத்தையே குறிக்கும். அப்படித் தான் தவ்ஹீத் ஜமாஅத் இந்தச் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டது. ஒரு சில ஊர்களைத் தவிர மற்ற பகுதிகளில் ஹிஜாப் முறை நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதைத் தவ்ஹீது ஜமாஅத், ஷரீஅத் வரைபடத்தில் உள்ளது போன்று வாழ்க்கைப் பாடத்தில் கொண்டு வந்தது.

வரதட்சணைக் கொடுமை

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை, கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அல்குர்ஆன் 4:4

இது அல்லாஹ்வின் கட்டளை. இது தான் ஷரீஅத் வரைபடத்தில் உள்ளது. ஆனால் இவர்களோ பெண்களிடம் வாங்குகின்றனர். இலட்சக்கணக்கில் பணமாகவும், நகையாகவும், பொருட்களாகவும் வாங்கும் இந்தக் கொடுமையை எதிர்க்கக் கடமைப்பட்ட ஆலிம்கள், அதற்குப் போய் அல்ஃபாத்திஹா சொல்லி ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் ஒரு பெரும் யுத்தத்தையே அன்றிலிருந்து இன்று வரை நடத்திக் கொண்டிருக்கின்றது. அதன் பலனாக, அல்லாஹ் சொல்வது போன்று லட்சக்கணக்கில் மஹர் கொடுத்து மணம் முடிக்கும் இளைஞர்களை தவ்ஹீத் ஜமாஅத் உருவாக்கியுள்ளது. இந்தக் கருத்தை ஏற்பதற்கு முன் ஏற்கனவே வரதட்சணை வாங்கியவர்கள் கூட திருப்பிக் கொடுத்த வரலாறும் உண்டு.

தமிழகத்தில் பெரும்பான்மையான ஊர்களில் தலைப் பிரசவத்தைப் பெண் வீட்டுக்காரர்கள் தான் பார்க்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் அமலில் உள்ளது. பிள்ளைக்கும் தாய்க்கும் செலவளிப்பது ஆண்களின் கடமை என்ற (2:233) வசனத்தின் அடிப்படையில் தலைப் பிரசவம் மட்டுமல்லாமல் எல்லா பிரசவச் செலவையும் ஆண்களே செய்யும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது.

கூலி வேலை செய்யும் மாப்பிள்ளைக்கு ஒரு விலை, அரசு உத்தியோகம் பார்க்கும் மாப்பிள்ளைக்கு ஒரு விலை என்று மாட்டுச் சந்தையில் விற்பது போல் மணமகனை விற்கும் நிலை தமிழகத்தில் உள்ளது. இதையெல்லாம் உடைத்தெறிந்து, பெண்களுக்கு மனமுவந்து கொடுக்கும் மாபெரும் வரலாற்றுப் புரட்சியை தவ்ஹீத் ஜமாஅத் படைத்துள்ளது.

ஒரு காலத்தில் மார்க்கத்தின் இந்த நடைமுறைகளை வெறும் தத்துவார்த்தமாகப் பேசிய போது மக்கள் வெகுண்டு எழுந்தனர். சிலர், 'இதெல்லாம் பேசுவதற்கு நல்லாயிருக்கும், நடைமுறைக்கு சாத்தியமா?' என்று கேட்டனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அவற்றைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்த போது மக்களும் பின்பற்ற முன்வருகின்றனர். உண்மையில் அல்லாஹ்வின் பேரருளால் இது தமிழகம் காண்கின்ற வரலாற்றுப் புரட்சியாகும்.
                   நன்றி -TNTJ DUBAI

விருப்ப மொழியில் குர்ஆன்