Sep 29, 2007

கால் நூற்றாண்டுக் கவிதை

எனது 20 வயதில் எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார். எனது வயதை இங்கு நான் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. எனது அந்த நண்பரின் வயது அப்போது 70க்கும் அதிகம். இவரை நண்பர் என்று சொல்வதை விட எனது ரசிகர் என்று சொல்லலாம்.
கவிதைகள் எழுதுவதற்கு நான் ஒரு புனைப் பெயரைத் தேர்வு செய்த போது அதே புனைப் பெயரில் வேறொருவர் இருக்கிறார் என்பதறிந்து அவரைத் தேடிப் பிடித்து தொடர்புக் கொண்டேன்.
அப்போது பத்திரக்கைகளில் நான் எழுதிய கவிதைகளை ரசித்து, சில சமயம் விமர்சித்து எனக்கு கடிதம் எழுதுவார். அவர் எனக்கு எழுதும் கடிதங்களும் நான் அவருக்கு எழுதும் கடிதங்களும் பெரும்பாலும் கவிதை நடையிலேயே இருக்கும். சில வருடங்கள் எங்கள் கடிதத் தொடர்பு நீடித்தது. அதன் பின்னர் கடிதத் தொடர்பு நின்று போய்விட்டது. அந்த மாகவிஞரின் புனைப் பெயர் 'வேளாங்கண்ணி சாந்திதாசன்'
இவர் ஒரு ஆலிம் என்பதும் பள்ளியிவாசலில் இமாமாகப் பணிபுரிந்துக் கொண்டிருந்தவர் என்பதும் ஆச்சரியப்படத்தக்க உண்மைகளாகும். கால் நூற்றாண்டு கடந்து விட்டாலும் இவர் வரைந்த கவிதைகள் பல என் நெஞ்சை விட்டு இன்னமும் நீங்கவில்லை.
சுமார் 25 வருடங்களுக்கு முன் இவர் எனக்கு எழுதிய ஒரு கடிதக் கவிதை இது.

நெஞ்சுவந்த நல்லாசி

குன்றாத அன்புடையோய்
குவியாதப் பண்புடையோய்
வன்மையுறு எழுத்தின் மூலம்
வாகுபணியோச்சிடுவோய்
நன்புடைய திருப்பூந்துருத்தி
நாகு அப்துல் சலாம் நண்ப
இன்புற்றேன் இன்றுங்கள்
இனிய மடல் கண்ட பின்னர்

புனித ரியாத்திருந்தோய்
புகழுறும் கவிஞராய் சிறந்தோய்
பணி திரு அரபு நாட்டின்
பல்கலை தொழில் தொடர்ந்தோய்
அணி திரு கஃபத்துல்லா
ஆலயம் கண்டு வியந்தோய்
நனிமிகு நபிகள் நாதர்
நற்பயன் அனைத்தும் கண்டோய்

சாந்தியின் அடிமையானோய்
செயல்வள மஸ்தூக்காவானோய்
ஆய்ந்ததோர் அறிவுத்தாகம்
ஆவண எழுச்சியானோய்
ஏந்தினேன் நுங்கள் நட்பு
எம் நெஞ்சில் புல்லரிப்பு
தோய்ந்ததோர் அன்பு வாஞ்சை
தொடரலாம் இனியும் விஞ்சை

அடிக்கடி தொடர்பு கொள்வோம்
அறிவு மலர் பலவும் கொய்வோம்
தொடக்கம் சில திங்களாக
தகையுறு நாகூர் விட்டு
நடு நிலை திருத்துறைப்பூண்டி
நகருக்கு அருகிலிருக்கும்
திடமுறும் மணலி குரும்பல்
தீன் பள்ளி இமாமாகியுள்ளேன்

பிறந்த ஊர் வேளாங்கண்ணி
பிணைந்த மனம் நாகூர் நண்ணி
சிறந்த பத்தாண்டைக் கடந்தேன்
சிற்சில ஊர் இமாமாகவுமிருந்தேன்
உரம் தரும் சீர் திருத்தம்
உரைத்திட இங்கு வந்தேன்
வரம் தரும் வல்லோன் பாதை
வகுத்திட தனித்தவனாய்

குடும்பமோ அங்குண்டு
குலம் புகழ் இங்குண்டு
கடும்பணி இறைவனுக்காய்
காட்டிடும் உணர்வினுக்காய்
அடியேனை வாழ்த்திடுங்கள்
ஆவனம் வரைந்திடுங்கள்
கடிகமழ் அவனைப் போற்றி
கழறுகின்றேன் நல்லாசி

0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்