Jan 10, 2009

சொந்தமாக வலைப் பதிவு தொடங்குவது எப்படி? (பாடம்-1)


இணையத்தில் இனிதே உலாவரும் நீங்கள் எத்தனையோ வலைப்பதிவுகளை பார்க்கிறீர்கள் படிக்கிறீர்கள். ஆன்மீகம், இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பல்வேறு வலைப்பதிவுகளைப் பார்வையிடும்போது உங்களுக்கும் இதுபோன்ற ஒரு வலைப்பதிவு அமைக்கவும் இதன் மூலம் உங்கள் எண்ணத்தில் உதிக்கும் எல்லாவற்றையும் எழுத்தில் வடிக்கவும் ஆசையாக இருக்கும்.
இணையத்தைத் திறந்து வலைப்பதிவுகளை பார்வையிட மட்டும் தெரியும்.. நாமே நம் பெயரில் வலைப்பதிவு எப்படி தொடங்குவது? அதற்கெல்லாம் கம்ப்யூட்டர் பற்றியும் இண்டர் நெட்பற்றியும் அறிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் அந்த அளவுக் கெல்லாம் நமக்கு ஆற்றல் இல்லையே!. நாம் அதிகம் படிக்கவில்லையே! இது தானே உங்கள் கவலை.. இனி கவலையை விடுங்கள்.
வலைப்பதிவு தொடங்குவது மிகவும் எளிது. கம்ப்யூட்டா பற்றிய அறிவும், ஆங்கிலப் புலமையும் இருக்க வேண்டும் என்பதில்லை. கம்ப்யூட்டரை ஆன் செய்து இண்டர் நெட் பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு தெரியும் அல்லவா? அது போதும். சாதாரணமாக ஆங்கிலத்தில் சில எளிமையான வார்த்தைகள் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும். என்றால் அது போதும் அதுகூடத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இப்போது தமிழிலேயே கம்ப்யூட்டர் தொழில் நுணுக்கங்களை புகழ் பெற்ற இலவச வலைப்பதிவு சேவை தரும் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
ஒரு நாள் கூட வேண்டாம் அரை மணி நேரம் போதும் உங்களுக்கென சொந்தமான அழகாக ஒரு ஒரு வலைப்பதிவு உருவாக்கி விடலாம்.. இது மிகையில்லை. இனி நீங்கள் வெறும் வாசகர் என்னும் தரத்திலிருந்து வலைப்பதிவர் என்னும் வட்டத்திற்கு உயர்ந்து விடலாம். வாருங்கள் உங்கள் கரம் பிடித்து நடை பழக்குகிறோம்.
சரி பாடத்திற்கு போவோமா? நீங்கள் தயார் தானே!
-------------------------------------------------------------
இலவச வலைப்பதிவு சேவை வழங்கும் புகழ் பெற்ற பல்வேறு இணைய தளங்கள் இருந்தாலும் அதிகமானோர் பயன்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் BLOGSPOT வலைப்பதிவு ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால் இதையே தேர்ந்தெடுத்துக் கொள்வோம்.
1. ஏற்கனவே உங்களுக்கு ஜி மெயில் மின்னஞ்சல் முகவரி இருக்கிறதா? இது வரை உங்களிடம் இல்லாவிட்டால் இப்போது புதிதாக ஒரு ஜி மெயில் மின்னஞ்சல் முகவரி தொடங்கிக் கொள்ளுங்கள். அதற்கு இங்கே கிளிக்குங்கள்.
https://www.google.com/accounts/NewAccount?service=mail&continue=http%3A%2F%2Fmail.google.com%2Fmail%2Fe-11-11157540184d2b7079bd4a881a1cf5e3-85ee31102207cde94cd0e276879a8bb1c10059f1&type=2

2.இப்போது உங்கள் பெயரில் ஒரு கூகுள் கணக்கு தொடங்க வேண்டும். வங்கியில் புதிய கணக்கு ஒன்று தொடங்க வேண்டும் என்றால் முதலில் கொஞ்சம் பணம் போடவேண்டுமே. அது போல் கூகுள் கணக்கு தொடங்க பணம் எதுவும் செலுத்த வேண்டுமா? இல்லை பணம் எதுவும் தேவையில்லை. காசு இல்லாமலேயே இந்தக் கணக்கு தொடங்கலாம்.
https://www.blogger.com/start
இந்த சுட்டியை சொடுக்குங்கள். புதிய வலைப்பதிவு தொடங்குவதற்கு இப்பக்கம் உங்களை வழி நடத்திச் செல்லும்.
ஓரளவேணும் உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்றால் இப்படியே தொடரலாம். அல்லது வலது மூலையில் உள்ள பெட்டியில் இருக்கும் English என்னும் வார்த்தைக்கு அருகில் உள்ள அம்புக்குறியை கிளிக்கி தமிழ் மொழியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3.மொழியை தமிழ் என மாற்றிக் கொண்டு விட்டீர்கள் அல்லவா? இப்படி கிடைத்த பக்கதின் இறுதிப் பகுதிக்குச் செல்லுங்கள்.
4.இப்போது (வலைப்பதிவை உருவாக்கு) என்னும் அம்புக் குறியை கிளிக் செய்யுங்கள்.
5.இதில் (வலைப்பதிவு தலைப்பு) என்னும் இடத்தில் உங்கள் வலைப்பதிவுக்கான ஒரு தலைப்பை இடுங்கள். இப்போதைக்கு ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தி தலைப்புக்கு பெயரிடுங்கள். உதாரணமாக YENATHU VALAIP PATHIVU. இத் தலைப்பை தமிழில் எப்படி இடுவது என்பதை பிரிதொரு பாடத்தில் பார்க்க இருக்கிறோம். இக்கட்டத்தில் நீங்கள் இடும் உங்கள் பதிவின் தலைப்பை வேண்டுமானால் பிறகு மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்த கட்டம் தான் மிக முக்கியமானது.
வலைப்பதிவு முகவரி என்று கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் பதிவுக்கான URL முகவரியைக் கொடுக்க வேண்டும். இதை மிகவும் கவனமாக எழுத்துப் பிழை இன்றி எழுத வேண்டும். ஏனெனில் இதில் நீங்கள் பதியும் உங்கள் வலைப்பதிவின் முகவரியை பிறகு மாற்ற முடியாது. எனவே கவனம் தேவை.
http:// என்னும் குறிகளுக்கும் blogspot.com என்னும் வார்த்தைக்கும் இடையில் உள்ள கட்டத்தில் உங்கள் பதிவின் URL முகவரியை இடுங்கள். இதில் கவனிக்க வேண்டியவை
ஒரே வார்த்தையாக இருக்க வேண்டும்
தமிழ் வார்த்தையாகவும் இருக்கலாம் ஆனால் எழுத்தக்கள் ஆங்கிலமாக மட்டுமே இருக்க வேண்டும். உதாரணமாக yenathuvalaippathivu
இயன்றவரை குறைவான எழுத்தக்களைக் கொண்டிருக்க வேணடும். அப்போது தான் மற்றவர்கள் எளிதில் நினைவு வைத்துக் கொள்ள இயலும் உதாரணமாக ypathivu
ஆங்கில எழுத்துக்களில் சிறிய எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
எழுத்துக்களின் இடையில் முற்றுப்புள்ளி, காற்புள்ளி, கோடு போன்ற குறியீடுகளைத் தவிர்க்கவும்..
எழுத்துக்களின் இடையில் எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் உதராணமாக ypathivu123
இப்போது உங்கள் வலைப்பதிவின் யு ஆர் எல் முகவரி ypathivu.blogspot.com என்று இருக்கும். எடுத்துக்காட்டாகத் தான் இந்த வார்த்தையை இட்டுள்ளோம். இதில் ypathivu என்னும் இடத்தில் நீங்கள் விரும்பும் வார்த்தையை இட்டுக் கொள்ளவும்.
உங்களுக்கு விருப்பமான வார்த்தையை இட்டால் மட்டும் போதாது இந்தக் கட்டத்திற்கு அடுத்து இருக்கும் 'உள்ளதா எனப்பார்' என்பதை கிளிகக்வும். இப்போது இதே முகவரியில் வேறு ஏதாவது பதிவு உள்ளதா? என இணையத்தில் தேடிப்பார்க்கும்.
ஏற்கனவே இதே பெயர் பதியப்பட்டிருநதால் அதாவது வேறு எவரேனும் பதிந்திருந்தால்
மன்னிக்கவும், இந்த வலைப்பதிவு முகவரி கிடைக்கவில்லை
தயவுசெய்து பின்வருவனவற்றில் ஒன்றைக் கருத்தில் கொள்க:
என்ற பதிலுடன் நீங்கள் பதிந்த வார்த்தையையே சில மாற்றங்களுடன் காட்டும். அவற்றிலிருந்து ஒன்றை தேர்வ செய்து நீங்கள் தொடரலாம். அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு வார்த்தைகளை இட்டு மறுபடியும் 'உள்ளதா எனப்பார்' என்பதை கிளிக்கவும்.

இந்த வலைப்பதிவு முகவரி உள்ளது.

என பதில் கிடைக்கும் வரை இச்செயலை தொடரவும். 'இந்த வலைப்பதிவு முகவரி உள்ளது' என பதில் கிடைத்துவிட்டால். உங்கள் பெயரில் வலைப்பதிவு யுஆர்எல் முகவரி ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது எனப் பொருள்.
இனி அடுத்த பகுதிக்குச் செல்லலாம்.

6.சொல் சரிபார்ப்பு என்னும் கட்டத்திற்கு மேல் உள்ள ஆங்கில எழுத்துக்களை அப்படியே அந்தக் கட்டத்தில் தட்டச்ச வேண்டும். அதன் பின்னர் தொடருக என்னும் அம்புக் குறியை கிளிக்குங்கள். நீங்கள் தட்டச்சு செய்த எழுத்துக்கள் பொருத்தமாக இல்லாவிட்டால் அல்லது படத்தில் நீங்கள் பார்க்கும் எழுத்தக்கள் தெளிவாக இல்லாவிட்டால் அதே பக்கம் மறுபடியும் வரும். ஆனால் இப்போது வேறு எழுத்துக்கள் காட்டப்படும். தொடருக என்னும் அம்புக் குறியை நீங்கள் கிளிக் செய்யும் போது அடுத்த பக்கத்திற்கு உங்களை இட்டுச் செல்லும் வரை இதைத் தொடர வேண்டும்.

சொல் சரிபார்ப்பு சரியாக அமைந்து விட்டால் தொடருக என்னும் அம்புக் குறியை நீங்கள் கிளிக் செய்யும் போது அடுத்த பக்கம் திறக்கும்.
(சரியாக அமைய வில்லையெனில் மீண்டும் மீண்டும் அதே பக்கம் தான் வரும்.) அடுத்த பக்கம் திறந்து விட்டால் நீங்கள் இதுவரைச் சரியாக செய்திருக்கிறீர்கள் எனப் பொருள்.
உங்கள் வலைப் பதிவை உருவாக்குவதற்கான முதல் கட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். இப்போது உங்களுக்கே மகிழ்ச்சியாக இருக்குமே.
சரி இப்பொது இரண்டாம் கட்டத்தில் நுழைவோம் வாருங்கள்.
7.இப்போது உங்கள் வலைப் பதிவின் வடிவமைப்பு (டெம்பிளேட்)எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறிர்களோ அது போன்று ஒரு வடிவமைப்பை நீஙகள் தேர்ந்தெடுக்கவும்.. வலது பக்கம் உள்ள ஸ்குரோல் பாரை நகர்த்துவதன் மூலம் பல்வேறு மாதிரி வடிவமைப்புகளை பார்வையிட்டு அவற்றில் விருப்பானதை தேர்வு செய்யலாம்.
நீங்கள் தேர்வு செய்த வடிவமைப்பு எப்படி இருக்கும்? என்பதை வடிவமைப்பின் அடிப்பகுதியில் காணப்படும் 'டெம்பிளேட்டை முன்னோட்டமிடு' என்பதை கிளிக்குவதன் மூலம் தெளிவாகப் பார்க்கலாம். முன்னோட்டததை பார்த்த பின்னர் அந்த விண்டோவை மூடிவிடுங்கள். (புதிதாகத் திறந்த விண்டோவின் வலது பக்க மூலையில் உள்ள X குறியை கிளக்குங்கள்) இந்த வடிவமைப்பு உங்களுக்கு திருப்தி இல்லையெனில் வேறு வடிவமைப்பைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்போதைக்கு ஏதேனும் ஒரு வடிவமைப்பைத் தேர்வு செய்து விட்டு பிறகு எப்போது வேண்டுமானாலும் இதை மாற்றிக் கொள்ளலாம் கவலைப்படாதீர்கள். வடிவமைப்பில் மாற்றங்கள் செய்வதுவது பற்றி பிரிதொரு பாடத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பைத் தேர்வு செய்து விட்டீர்கள் தானே இப்போது பக்கதின் இறுதியில் காணப்படும் தொடருக என்னும் அம்புக் குறியை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் வலைப் பதிவு உருவாக்கப்பட்டுவிட்டது
என்னும் தகவல் உங்களை வரவேற்கும்.

ஆம் உங்கள் வலைப்பு பதிவு உருவாக்கப்பட்டு விட்டது. இப்போது மகிழ்ச்சி தானே.
உங்களுக்கென வலைப் பதிவு உருவாக்கப்பட்டு விட்டது. இடுகைகளை இட வேண்டும். அவ்வளவு தான்.
இப்போது வலைப் பதிவிடலைத் தொடங்கு என்னும் நீண்ட அம்புக் குறியை கிளிக் செய்யவும். நேராக உங்கள் வலைப் பதிவின் புதிய இடுகை இடுதல் பக்கம் திறக்கும். உங்கள் இடுகைகளை இட வேண்டியது தான்.
இனி இணைய உலகில் நீங்களும் ஒரு வலைப் பதிவர். இப்போது திருப்தி தானே.
இனி வலைப் பதிவில் என்னென்ன இணைக்கலாம்? வலைப்பதிவை எவ்வாறெல்லாம் அலங்கரிக்கலாம்? மாற்றங்கள் செய்வது எப்படி? இடுகைகள் இடுவது எப்படி? திருத்தங்கள் செய்வது எப்படி? என்பன போன்ற அனைத்து விபரங்களையும் அடுத்தடுத்த பாடங்களில் பார்க்கலாம்.
இந்தப் பதிவை படிக்க ஆரம்பிக்கும் போது சற்று மலைப்பாக இருக்கலாம். நிதானமாக மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். மிகவும் எளிமையாக இருக்கும். வலைப்பதிவு தொடங்குவது என்பது இவ்வளவு தான். முயன்று பாருங்கள். வெற்றி பெருவீர்கள்.
------------------------------------------------------
மேற்கொண்டு விபரங்கள் அறிய நாடினால், சந்தேகங்கள் எழுந்தால் எமது மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளுங்கள். அவசரப்பட வேண்டாம் மேலதிக விபரங்களை அடுத்தடுத்த பாடங்களில் காண்போம்.
அன்புடன்
மஸ்தூக்கா
உங்கள் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்

1 comments:

ராஜா said...

நன்றி மிகவும் பயனுள்ள குறிப்புகள்

விருப்ப மொழியில் குர்ஆன்