Aug 18, 2011

மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!

மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!

பகுத்தறிவற்ற எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே. சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மற்ற பிராணிகளைப் போல் அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு.

இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும்.

நாத்திகர்கள் தாங்கள் தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை. எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர்களா? அல்லது ஐயறிவு பாசறையிலுள்ளவர்களா? என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

உலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு -பூச்சியே – ஒரு பிராணியே ஜீவராசியே! அனைத்து உயிரினங்களும் மடிந்து மண்ணணாகிப் போவது போல் மனிதனும் மடிந்து மண்ணாகி போகின்றவன்தான். மற்றபடி அவனுக்கொரு ஆத்மாவோ, மறுமை வாழ்க்கையோ இல்லை என்பதே நாத்திகர்களின் பகுத்தறிவு வாதம். அதாவது உலக வாழ்வோடு மனித வாழ்வு முற்றுப் பெற்று விடுகிறது. அதன் பின் ஒரு தொடர்ச்சியும் இல்லை என்பதே அவர்களின் வாதம். இப்போது அவர்களின் வாதத்தில் நமக்கு ஏற்படும் ஐயங்கள் இவைதான்.

மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு சராசரி படைப்பினமே மனிதன் எனும் போது மற்ற படைப்பினங்களுக்குரிய சட்டங்களே மனிதனுக்கும் பொருந்த வேண்டும். மற்ற படைப்பினங்களைப் பொருத்தமட்டிலும் “வல்லனவற்றின் வாழ்வு வளம்” (Survival of the fittest) என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. அதாவது வலிமையுள்ளவை வலிமையற்றவற்றை வீழ்த்தி, அல்லது அழித்து தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக பெரிய மீன்கள் சிறிய மீன்களைக் கொன்று தமக்கிரையாக்கி கொள்கின்றன. சிங்கம், புலி போன்றவை மான், மாடு போன்றவற்றைக் கொன்று தமக்கிரையாக்கிக் கொள்கின்றன. இந்த “வல்லனவற்றின் வாழ்வு வளம்” புழு, பூச்சியிலிருந்து, ஊர்வனவற்றிலிருந்து, நாலு கால் பிராணிகள் வரை பொருந்தும், தரையிலுள்ள பிராணிகளுக்கும் பொருந்தும். இந்த சித்தாந்தத்தை நாத்திக பகுத்தறிவாளர்கள் அநீதி என்று தீர்ப்பு அளிப்பதில்லை.

அப்படியானால், அந்த ஜீவராசிகளைப் போன்றதொரு புழு, பூச்சி-மிருகம் போன்ற ஜீவராசிதான் மனிதன் என்று நாத்திக பகுத்தறிவாளர்கள் கூறும் போது, அதே “வல்லனவற்றின் வாழ்வு வளம்” (Survival of the Fittest) என்ற சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்திப் போக வேண்டுமல்லவா? மனிதர்களிலும் வலியவர்கள் வலிமை அற்றவர்களை வீழ்த்தி தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதை அநீதி என்று கூற முடியுமா? இல்லை; இது அநீதி என்று நாத்திகர்கள் கூறுவார்களேயானால், எந்த அடிப்படையில் அநீதி என்று கூறுகிறார்கள்? மற்ற படைப்பினங்களைப் போன்றதொரு, மண்ணோடு மண்ணாகிப் போகும் ஒரு படைப்புத்தானே – புழு பூச்சிதானே, மிருகம் போன்றவன்தானே மனிதனும் நாத்திகர்களின் கூற்றுப்படி அப்படியானால் மற்றப் படைப்பினங்களுக்குப் பொருந்திப் போகும் வல்லனவற்றின் வாழ்வு வளம் (Survival of the fittest) என்ற கோட்பாடு மனிதனுக்கு மட்டும் ஏன் பொருந்திப் போகாது? இதற்குரிய சரியான விளக்கத்தை பகுத்தறிவு அடிப்படையில் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள் நாத்திகர்கள். அது மட்டுமல்ல; மற்ற படைப்பினங்கள் விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் அது நீதியாகும்; மனிதப்படைப்பு விஷயத்தில் மட்டுமே அது அநீதியாகும் என்று பிரித்துச் சட்டம் சொன்ன அதிகாரம் பெற்ற சக்தி எது? இதற்கு பகுத்தறிவு ரீதியாக விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

நீதிக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்களில் பெரும்பாலோர் வறுமையிலும், துன்பங்களிலும் சதா உழன்று மடிகிறார்கள். அவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் உட்பட்டு வாழ்ந்ததற்குரிய நற்பலனை இவ்வுலகில் அனுபவிக்கவில்லையே! அப்படியானால் எங்கே பெறுவார்கள்?

அடுத்து வலுவில்லாதவர்கள் வலுவானவர்களை அடக்கி ஒடுக்கி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வது அநீதியே என்ற பகுத்தறிவு ரீதியாகவும் மனச்சாட்சியின் படியும் அப்பட்டமாக ஒப்புக் கொண்டிருக்கும் நாத்திகர்களில் பலர், இன்று அதற்கு மாறாக மக்களையும் அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி அல்லது லஞ்சம் கொடுத்து கோடி, கோடியாகக் கொள்ளை அடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்களே? இதற்குக் காரணம் என்ன? அவர்கள் அநீதி என்று ஒப்புக் கொண்டுள்ளதற்கு மாற்றமாக – மக்களிடம் அநீதி என்று அப்பட்டமாக அறிவிப்பதற்கு மாற்றமாக அந்த அநீதியான கொள்ளை அடிக்கும் செயலை செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது? அவர்களது பகுத்தறிவும், மனச்சாட்சியும் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொள்ளும் குடி, விபச்சாரம், சூது போன்ற தீய காரியங்களில் அவர்களில் பலர் மூழ்கி இருக்கிறார்களே? இத்தீய செயல்களைச் செய்ய அவர்களைத் தூண்டும் சக்தி எது?

இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களோ மனிதனின் உடம்பில் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் அவனது பகிரங்கப் பகைவனான ஷைத்தான் ஓடிக்கொண்டு மனிதனை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளி அதை நிரப்ப கங்கணம் கட்டிச் செயல்படுகிறான். அவனது வலையில் சிக்கியே மனிதன், தானே பாவம், அநீதி, அக்கிரமம், ஓழுக்கமற்ற செயல் என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் துர்ச்செயல்களைச் செய்து பாவியாக நேரிடுகிறது என்று கூறிவிடுவார்கள். நிச்சயமாக நாத்திகர்கள் இறைவனையும், மறுமையையும், ஷைத்தானையும் மறுப்பதால் இந்தக் காரணத்தை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்; சொல்லவும் மாட்டார்கள். அப்படியானால் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமற்ற செயல் என்று மனிதனே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டு, அடுத்த கனமே அவற்றைச் செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு செய்வதற்குரிய காரணம் என்ன? பகுத்தறிவு பாதையில் பயிற்சி பெற்ற நாத்திகர்கள் அதற்குரிய காரணம் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்து அவர்களே பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்டு அதற்கு மாறாக அந்த பாவமான செயல்களை, அநீதியான செயல்களை, அக்கிரமமான, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்து கோடி, கோடியாக கொள்ளை அடித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இன்று மக்களுக்கு மத்தியில் பெருஞ்செல்வாக்கு ஆள், அம்பு, பட்டம், பதவி, பலவித அதிகார ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு என்று மன்னாதி மன்னர்கள் போல் உல்லாச புரிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் வாழ்நாள் பூராவும் அவர்கள் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துக்கள் அவர்களுக்கு இவ்வுலகை சுவர்க்கப்பூமியாக ஆக்கித் தருகிறது.

அவர்கள் செய்த அநீதி, அக்கிரமம், பாவச் செயல்கள், கொலை, கொள்ளைகள் இவை காரணமாக இவ்வுலகில் எவ்வித தண்டனையோ, கஷ்டமோ, துன்பமோ அனுபவிக்காமல் சுவர்க்கவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாடையில் வைத்து மண்ணறையில் கொண்டு தள்ளும் வரை அல்லது தீயிலிட்டுப் பொசுக்கும் வரை இன்பமே இன்பம்; மற்றபடி துன்பத்தின் சாயல் கூட படாதபடி வாழ்ந்து மடிகிறார்கள். பகுத்தறிவு நாத்திகர்கள் பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்ட செயல்களைச் செய்தே அவர்கள் இவ்வுலகில் குபேர வாழ்க்கையை- சொர்க்கலோக வாழ்க்கையை அடைந்தார்கள்.

ஆனால் அவர்கள் செய்து முடித்த எந்த பாவமான செயலுக்கும், அநீதியான செயலுக்கும், அக்கிரமமான செயலுக்கும், ஒழுக்கமற்ற செயலுக்கும் அணுவத்தனை கூட தண்டனையோ துன்பமோ அனுபவிக்கவில்லை. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு வாழ்வு உண்டு என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களோ நிச்சயமாக அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகளில் மக்களையும், அரசுகளையும், அதிகாரிகளையும் ஏமாற்றித் தப்பிக் கொண்டாலும் இறைவனுடைய தர்பாரில் தப்பவே முடியாது. அங்கு வசமாக மாட்டிக் கொள்வார்கள். கடுமையான தண்டனைகள் அவர்களது குற்றச் செயல்களுக்குக் காத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள் இப்படிச் சொல்ல முடியாது.

அப்படியாயின் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைப்படி இப்படிப்பட்ட பாவமான, அநீதியான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்து வளமான வாழ்வை அமைத்துக் கொண்ட கொடியவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பது எப்போது? பகுத்தறிவு ரீதியாக விடை தரக்கடமைப் பட்டிருக்கிறார்கள். ஒன்று புழு, பூச்சி, மிருகம் போன்ற படைப்பினங்களைப் போல், மனிதனும் “வல்லனவற்றின் வாழ்வு வளம்” (Survival of the fittest) என்ற கோட்பாட்டின்படி வாழக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை அது பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று சொன்னால் இந்த சட்டத்தை வகுத்தளித்த சக்தி எது என்பதையாவது தெளிவு படுத்த வேண்டும்.

மேலும் அவர்களே அவர்களது மனட்சாட்சிப்படி பாவம், அநீதி, அக்கிரமம், ஒழுக்கமின்மை என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டுவிட்டு மறைமுகமாக அவற்றைச் செய்யத் தூண்டும் சக்தி எது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இப்படி மனட்சாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு சொத்துக்களை குவித்து உலகில் குபேர வாழ்க்கை, சொர்க்கலோக வாழ்க்கை வாழ்ந்து மடியும் சண்டாளர்கள் தங்களின் குற்றங்களுக்குரிய தண்டனைகளை அனுபவிப்பது எப்போது? எங்கே? என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். இந்த எமது சந்தேகங்களுக்கெல்லாம் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை அவர்கள் தரவேண்டும், அப்படியானால் மட்டுமே அவர்களைப் பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்களாக உலகம் ஒப்புக் கொள்ளும். இல்லை என்றால் புறக்கண்ணால் பார்த்தே கடவுளை, மறுமையை ஏற்பேன் என்ற ஐயறிவு வாதத்தையே அவர்கள் முன் வைக்கிறார்கள் என்ற முடிவுக்கே முறையான பகுத்தறிறவை- நுண்ணறிவை உடையவர்கள் வர நேரிடும்.

பாவமான, அநீதமான, அக்கிரமமான, ஒழுக்கமற்ற செயல்களைச் செய்கிறவனின் மனச்சாட்சியே அவனைக் கொள்ளாமல் கொன்று கொண்டிருக்கும்; அதுவே அவனுக்குரிய தண்டனையாகும் என்ற பிதற்றலான, மழுப்பலான, நழுவலான பதிலை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை. காரணம் இந்த வாதம் உண்மையானால், இவ்வுலகிலும் அதே வாதப்படி அக்குற்றச் செயல்களுக்கு அரசுகளும் எவ்விதத் தண்டனையும் அளிக்கக் கூடாது. அவர்களின் மனட்சாட்சியே அக்கயவர்களை கொல்லாமல் கொள்வதே போதுமானதாகும் என்பதையும் நாத்திகர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்? எதைச் சரிகாணப்போகிறார்கள் நாத்திகர்கள்?

அபூ ஃபாத்திமா

நன்றி- Readislam.net



0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்