Nov 8, 2007

புனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனை 1


புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்

தல்பிய்யா முழக்கம்!
லப்பைக்- அல்லாஹூம்ம லப்பைக்லப்பைக்- லாஷரீக்க லக லப்பைக்இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக வல் முல்க் லாஷரீக்க லக்.
சமத்துவ மார்க்கம் இஸ்லாம்
இஸ்லாம் ஓர் உலக மார்க்கம். இதன் அனைத்து வணக்க வழிபாடுகளும் உலகளாவிய அளவில் மனித குலத்தை ஒன்றுபடுத்துவதாக இருக்கும். திருமறை குர்ஆனின் போதனைகளும் திரு நபி (ஸல்) அவர்களின் செயல் பாடுகளும் இந்த இனிய மார்க்கத்தின் வழிகாட்டிகள்.
இந்த இனிய இஸ்லாம் இவ்வுலகிற்கு சமத்துவத்தைத் தந்தது. சகோதரத்துவத்தை போதித்தது. முழு மனித சமுதாயத்தையும் ஓரணியில் ஒன்றுபடுத்தும் உன்னத வழியைக் காட்டியது.
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான தொழுகை, வெறும் குனிதலையும், சிரம் பணிதலையும், உதட்டளவில் மந்திரங்கள் மொழிவதையும், கொண்ட சடங்கு அல்ல. நாள் ஒன்றுக்கு ஐந்து நேரம், படைத்த இறைவனை வணங்க பள்ளிவாசலில் ஒன்று கூடும்போது - அங்கு ஏழை, செல்வந்தன் என்னும் ஏற்றத் தாழ்வு களையப் படுகின்றது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் வேற்றுமை வேரறுக்கப் படுகின்றது. முதலில் வந்தவர் முதலில். அடுத்தடுத்து வந்தவர் அடுத்தடுத்த வரிசைகளில். அரசனும் ஆண்டியும் அருகருகில். அவரவர் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ஐந்து நேரமும் ஒன்று கூடும்போது அங்கே ஒரு சமத்துவம்.வாரம் ஒருமுறை வெள்ளிக் கிழமைத் தொழுகையில் ஊரே ஒன்று கூடும்போது அதைவிட சற்று அதிக சமத்துவம்.ஆண்டுக்கு ஒரு முறை புனித மக்காவின் அரபாத் பெருவெளியில், உலக முஸ்லிம்கள் ஒன்று திரளும்போது மாபெரும் சமத்துவம். இதைவிடப் பெரிய சமத்துவம் இப்பாருலகில் வேறு எங்குமே இல்லை.வேறு எதுவுமே இல்லை. இது தான் ஹஜ்.
இனத்தால், குலத்தால், நிறத்தால், தேசத்தால், உண்ணும் உணவால், உடுத்தும் உடையால், பேசும் மொழியால், பின்பற்றும் கலாச்சாரத்தால், வேறு பட்ட அனைவரும்,ஒரே இடத்தில் ஒன்று திரண்டு, ஒரே உடை அணிந்து, ஒரே மறையைப் பின்பற்றி, ஒரே இறையை இறைஞ்சும் உன்னதப் பண்பாடு.
இது தான் ஹஜ்.
உலகின் அனைத்து கண்டங்களும் இங்கே சங்கமம்.உலகின் அனைத்து நாடுகளும் இங்கே சங்கமம்.உலகின் அனைத்து மொழிகளும் இங்கே சங்கமம்.உலகின் அனைத்து நிறங்களும் இங்கே சங்கமம்.உலகின் அனைத்து மனிதர்களும் இங்கே சரிசமம்.
ஆம் இது தான் ஹஜ்.
புண்ணிய சீலர்கள் வருகை
மக்காவில் 'கஃபா' என்னும் புனித இறையாலயத்தை இறைவனின் தோழர் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் அருமந்த மைந்தர், நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் புணர் நிர்மாணம் செய்து முடித்த போது, புனித ஹஜ்ஜூக்குப் புறப்பட்டு வருமாறு மக்களை அழைக்கும் படி, இறைவன் கூறினான்.
'மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் உம்மிடம் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்' என்று கூறினோம். (திருக் குர்ஆன் 22 27)
நடந்தும், ஒட்டகங்களில் சவாரி செய்தும் வந்திறங்கிய காலம் போக- இப்போது- கார்களிலும் பஸ்களிலும் தரை மார்க்கமாக-கப்பல்களில் கடல் மார்க்கமாக- விமானங்களில் ஆகாய மார்க்கமாக-புனித ஹஜ்ஜை நிறைவேற்ற, உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் திரள் திரளாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.
துல் கஅதா மாதம் தொடங்கிவிட்டால் போதும், நாளுக்கு நாள் இறைவனின் விருந்தினர்கள் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே போகின்றது.ஜித்தா 'இஸ்லாமியத் துறைமுகம்' கப்பல்களால் நிரம்பி வழிகின்றது. தீவுகளே இடம் பெயர்ந்து, நீலத் திரைக் கடலில் நீந்தி வந்தனவோ! என வியக்கும் வண்ணம், பெரும் பெரும் கப்பல்களில் புண்ணிய சீலர்கள் வந்திறங்குகின்றனர்.ஜித்தா, மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான தளத்தில், ஆகா! இவையென்ன? பறவைகளின் அணிவகுப்பா? இல்லை இல்லை. பறந்து வந்த விமானங்களின் அணிவகுப்பு.
அகில உலகத்தையும் ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவிலிருந்து -
ஒரு காலத்தில் சூரியனே அஸ்தமிக்காத நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்திலிருந்து -
காணும் இடமெல்லாம் காடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்காவிலிருந்து -
காரல் மர்hக்ஸின் சித்தாந்தக் கற்பனையில் மூழ்கிப்போன கம்யூனிஸ தேசங்களிலிருந்து -
முஸ்லிம்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் இந்தோனேசியாவிலிருந்து
மனங்குளிரும் மரியாதைக்குப் பேர் போன மலேசியாவிலிருந்து -
செல்வச் செழிப்பு மிக்க சிங்கப்பூரிலிருந்து -
இதயம் கவரும் பசுமை நிறைந்த இலங்கையிலிருந்து -
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவிலிருந்து-
பச்சைப் பிறைக் கொடி பாகிஸ்தானிலிருந்து -
பங்காளி நாடாம் வங்காள தேசத்திலிருந்து -இன்னும் இவை போன்ற எண்ணற்ற தேசங்களிலிருந்து -வண்ண வண்ணப் பறவைகளாய் வானவெளிப் பாதையில் பறந்து வந்த விமானங்களிலிருந்து - இலட்சக் கணக்கான இலட்சிய வாதிகள் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வந்திறங்குகின்றனர்
திக்கெட்டும் தல்பிய்யா முழக்கம்
செங்கடலின் மணமகள்' என வார்த்தைகளால் வர்ணிக்கப் படும் ஜித்தா நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.ஆகாய மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் வந்திறங்கிய ஹாஜிகள், பயணக் களைப்புத் தீரச் சற்று ஓய்வெடுத்து விட்டு, புனித மக்காவை நோக்கி பயணிக்கின்றனர்.
ஜித்தாவுக்கும் புனித மக்காவுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 65 கிலோ மீட்டர். அகன்று விரிந்த அதிவிரைவுச் சாலைகளில் கார்களும் பஸ்களும் சீறிப் பாய்கின்றன.அண்டை நாடுகளாம் அரபு நாடுகளின் அனைத்து சாலைகளும் மக்காவை நோக்கி! அகன்ற சாலைகளில் அணி அணியாக வந்துக் கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் மக்காவை நோக்கி!தரை மார்க்கமாக ஹஜ்ஜூக்கு வருபவர்கள் - அலை கடலெனத் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். எல்லாத் திசைகளிலிருந்தும் வருகின்ற ஹாஜிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள், நேரத்துக்கு நேரம், கூடிக் கொண்டே போகின்றது. நூறுகள் ஆயிரங்களாக, ஆயிரங்கள் இலட்சங்களாக, கணிப் பொறியின் கணக்கு கூடிக் கொண்டே போகின்றது. அத்தனை இலட்சம் பேரையும் ஆண்டு தோறும் அரவணைக்கின்றது மக்கத் திரு நகரம்.
அனைவரின் இதயங்களிலும் ஆண்டவனின் பக்தி!அனைவரின் முகங்களிலும் ஹஜ் செய்யும் மகிழ்ச்சி!அனைவரின் நாவுகளிலும் தல்பிய்யா என்னும் மந்திரம்!
லப்பைக்- அல்லாஹூம்ம லப்பைக்லப்பைக்- லாஷரீக்க லக லப்பைக்இன்னல் ஹம்த- வந் நிஃமத்த லக வல் முல்க்லா ஷரீக்க லக்
என்பது நபி (ஸல்) அவர்களின் தல்பிய்யாவாக இருந்தது.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (755)
இலட்சக் கணக்கான ஹாஜிகளின் திரு வாய்கள் அனைத்தும், இரவும் பகலும், இருபத்து நான்கு மணி நேரமும் முழங்கிக் கொண்டிருக்கும் மூல மந்திரத்தின் பொருள் இது தான்.
வந்தேன் இறைவா! வந்தேன் இறைவா!உன் அழைப்பை ஏற்று இதோ வந்தேன் இறைவா!உனக்கு நிகரானவர் எவருமில்லைஅருளும் ஆட்சியும் புகழும் உனக்கே!உனக்கு நிகரானவர் எவருமில்லை.
ஆகா! இந்தத் தாரக மந்திரத்தை ஹாஜிகள் உச்சரிக்கும் போது அவர்களின் உள்ளங்கள் குளிர்கின்றன. கேட்கும் போது நம் செவிகள் குளிர்கின்றன.ஒரு முறையா? இரு முறையா? ஓராயிரம் முறையா? இல்லை. இதற்கு எண்ணிக்கையே இல்லை. புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து, பகலிலும், இரவிலும், காலையிலும், மாலையிலும், நிற்கும் போதும் நடக்கும் போதும் வாய் மொழிகின்றது. உறங்கும் போது கூட உள்ளங்கள் மொழிகின்றனவோ?
அவரவர் இல்லங்களிலிருந்து, புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டது முதல் மொழியத் தொடங்கிய 'தல்பிய்யா' முழக்கம், புனித மக்காவுக்கு வருகின்ற வழி நெடுகிலும், வந்து சேர்ந்த பின்னரும், புனித ஹஜ்ஜின் புண்ணியத் தலங்கள் முழுவதும், எட்டுத் திக்கும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றது.
ஹஜ்ஜின் வகைகள்
ஹஜ் கடமையை மூன்று வகையாக நிறைவேற்றலாம்.
1.ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவதாக முடிவு செய்து அதை நிறைவேற்றுதல். (இது இப்ராத் எனப்படும்)
2.ஹஜ்ஜுடன் உம்ரா என்னும் கடமையையும் சேர்த்து ஒரே இஹ்ராமில் நிறைவேற்றுதல்.(இது கிரான் எனப்படும்)
3.முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து அதை நிறைவேற்றியவுடன் மக்காவில் தங்கியிருந்து, ஹஜ்ஜுடைய நேரம் வந்ததும், மறுபடியும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுதல்.(இது தமத்துவ் எனப்படும்)
இஹ்ராம் உடையுடுத்திய ஏந்தலர்கள்
ஹஜ் அல்லது உம்ராச் செய்ய, புனித மக்காவுக்கு வரும்போது ஒவ்வொரு வழியிலும் ஒரு எல்லையை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்த எல்லைக்கு 'மீக்காத்' என்று பெயர்.ஹஜ் அல்லது உம்ராச் செய்ய வருபவர்கள், இந்த எல்லையை அடையும் போது 'இஹ்ராம்' உடை அணிந்து தான் நுழைய வேண்டும்.
ஆகாய மார்க்கமாக வருபவர்கள், 'மீக்காத்' எல்லையைக் கடந்தே வரவேண்டியிருப்பதால், புறப்படும் இடத்திலிருந்தே குளித்து இஹ்ராம் அணிந்து வந்து விடுகின்றனர்.
கடல் மார்க்கமாக, கப்பலில் வருபவர்கள், 'மீக்காத்' எல்லையை அடையும் போது, கப்பல் நிறுத்தப் பட்டு அறிவிப்பு செய்யப் படுகின்றது. ஹாஜிகள் கப்பலிலேயே குளித்து இஹ்ராம் உடை அணிந்து தயாராகி விடுகின்றனர்.
தரை மார்க்கமாக வருபவர்கள், அவரவர் வரும் வழியில் உள்ள 'மீக்காத்' எல்லையில் குளித்து இஹ்ராம் அணிய வசதியாக, ஒவ்வொரு 'மீக்காத்' எல்லையிலும், பல நூற்றுக் கணக்கில், நவீன வசதிகளுடன் கூடிய குளியலறைகள் கட்டப் பட்டு, வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
உள் நாட்டிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும், தரை மார்க்கமாக ஹஜ்ஜின் நாட்களுக்கு முன்னதாகவே புனித மக்காவுக்கு வரும் ஹாஜிகள் இந்த எல்லையை அடைந்ததும் குளித்து இஹ்ராம் உடை தரித்து, முதலில் உம்ராச் செய்வதற்கு தயாராகின்றனர்.
எல்லையைக் கடந்து வரும் எல்லோரும் இது வரை அணிந்திருந்த ஆடம்பர ஆடைகளைக் களைந்து 'இஹ்ராம்' என்னும் இரு வெண் துணிகளை ஆண்கள் அணிந்துக் கொள்கின்றனர். (பெண்கள் அவரவர் வழக்கமாக உடுத்தும் உடைகளை உடுத்திக் கொள்ளலாம்)
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுக்காக தையல் இல்லாத ஆடையை அணிந்ததை நான் பார்த்துள்ளேன்.மேலும் (இஹ்ராமுக்கு முன்னால்) குளித்தார்கள்.அறிவிப்பவர்: ஸைத் பின் தாபித் (ரலி) ஆதாரம்: திர்மிதி (760)
இஹ்ராம் உடையை அணிந்தவர்களாக-
இவ்வுலக இன்பங்களைத் துறந்தவர்களாக-
நித்திய வாழ்க்கையை நினைத்தவர்களாக-
இறை பக்தியை இதயத்தில் தேக்கியவர்களாக-
இறைவனின் அருளுக்கு ஏங்கியவர்களாக-
ஈருலக நற்பேற்றுக்கு இறைஞ்சியவர்களாக-
இறைவனிடம் இரு கரம் ஏந்தியவர்களாக-புறப்பட்டு விட்டனர், புண்ணிய சீலர்கள், புனித மக்காவை நோக்கி! மீள ஒலிக்கிறது 'தல்பிய்யா' முழக்கம், முன்னை விட பன்மடங்கு உயர்ந்த தொணியில்.
லப்பைக்- அல்லாஹூம்ம லப்பைக்லப்பைக்- லா ஷரீக்க லக லப்பைக்இன்னல் ஹம்த வந் நிஃமத்த லக வல் முல்க்லா ஷரீக்க லக்.'
என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து தல்பிய்யாவின் போதும், இஹ்ராம் கட்டும் போதும், உரத்த குரலில் கூறுமாறு என் தோழர்களுக்குக் கட்டளையிடக் கூறினார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் (ரலி) ஆதாரம்: திர்மிதி (759)
மக்காவை நோக்கி வரும் மாபெரும் சாலைகளில் வாகனங்கள் அசுர வேகத்தில் பறக்கின்றன. வாகனங்களின் வேகத்தை விட, வந்திருப்போரின் இதயத்தின் வேகம் இப்போது அதிகம்.
மக்காவை நோக்கி வரும் அனைத்து பிரதான சாலைகளிலும் மக்கா நகர எல்லைக்கு வெளியே பரிசோதனை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் நிறுத்தப் பட்டு அனைவரும் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளனரா? என பரிசோதிக்கப் படுகின்றனர்.சமீப காலம் வரை உள் நாட்டிலிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும், தரை மார்க்கமாக ஹஜ்ஜூக்கு வருபவர்கள் அவரவர் தம் சொந்த வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர். இதனால் மக்கா நகரின் சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது.மக்கா நகரப் போக்கு வரத்துத் துறை - சகல வசதிகளையும் செய்திருந்தாலும் கூட, பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் ஒரே சமயத்தில் மக்காவின் உள்ளே நுழைந்தால் கட்டுப் படுத்துவது கடினமானக் காரியம் அல்லவா?எனவே சில ஆண்டுகளுக்கு முன்பு, சவூதி அரசு ஒரு புதிய ஏற்பாட்டை நடை முறைக்குக் கொண்டு வந்தது. அதன்படி மக்கா நகர எல்லைக்கு வெளியே ஒவ்வொரு வழியிலும்'கார் நிறுத்துமிடங்கள்' அமைத்து சிறிய வாகனங்கள் அனைத்தும் இங்கேயே நிறுத்திவிட ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்தக் கார் நிறுத்துமிடங்களில் அனைத்து சிறிய வாகனங்களும் வரிசை வரிசையாக ஒரு ஒழுங்கு முறையுடன் நிறுத்தப் பட்டு, உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப் படுகின்றது. ஹஜ்ஜின் அனைத்து செயல்களையும் முடித்து விட்டு இங்கு வந்து, தமது அடையாள அட்டையைக் காண்பித்து உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.இந்தத் தீவுத் திடல் முழுவதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்கள் மயம். உலகின் அனைத்து நாட்டுத் தயாரிப்புக் கார்களும், அனைத்து மாடல்களும், இங்கே அணிவகுத்து நிறுத்தப் பட்டிருக்கும் அழகே அழகு.
இந்த இடத்திற்கு அப்பால், பெரிய வாகனங்கள்- பேருந்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும். சிறிய வாகனங்களில் வந்து - தங்களது வாகனங்களை இங்கே நிறுத்தியவர்கள் - இங்கிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகளில் மக்காவை நோக்கிப் பயணிக்கின்றனர்.மீண்டும் தொடங்குகிறது பயணம்!மீள ஒலிக்கிறது தல்பிய்யா முழக்கம்!
லப்பைக்- அல்லாஹூம்ம லப்பைக்லப்பைக்- லாஷரீக்க லக லப்பைக்இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக வல் முல்க்லா ஷரீக்க லக்.
மக்கத் திரு நகரில்'இறைவனின் விருந்தினர்களை வரவேற்பதில் மக்கத் திரு நகரம் மகிழ்ச்சி அடைகிறது' என்னும் 'உம்முல் குரா' பல்கலைக் கழக அலங்கார வளைவு, ஹாஜிகள் புனித மக்காவில் நுழைந்து விட்டனர் என்பதை உணர்த்துகிறது.
எந்த நகரைச் சிறப்பித்து இறைவன் தன் திரு மறையில் இயம்பினானோ!
இறைவனை வணங்க, உலகின் முதல் இறையாலயம் எழுப்பப்பட்டச் சிறப்பு எந்த நகருக்குக் கிடைத்ததோ!
எந்த நகரில், ஈருலக வேந்தர் இறைத் தூதர் நபி (ஸல்) அவர்கள் அவதரித்தார்களோ!
இஸ்லாம் என்னும் கதிரவனின் ஒளிக் கதிர்கள், எந்த நகரிலிருந்து ஒளி வீசத் தொடங்கியதோ!
உடலுக்கு இதயத்தைப் போல உலகுக்கு இதயமான கஃபாவை எந்த நகர் தன்னகத்தே கொண்டு திகழ்கிறதோ!அந்த மக்கத் திருநகருக்குள் ஹாஜிகள் நுழைந்து விட்டனர்.
மஸ்ஜிதுல் ஹராமுக்கு மிக அருகில் சென்று வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன.கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மஸ்ஜிதுல் ஹராமைக் கண்ட வண்ணம், புனித மண்ணில் அடியெடுத்து வைக்கின்றனர் புண்ணிய ஹாஜிகள். விண்ணோக்கி உயர்ந்த மினாராக்களிலிருந்து கம்பீரமாகக் கேட்கிறது பாங்கொலி.
கணக்கிலடங்கா பள்ளிகளில் காலமெல்லாம் கேட்ட சப்தம் தான். இந்தப் பள்ளியின் ஒலி பெருக்கியில் மட்டும் எப்படி இத்தனை ஒரு கம்பீரம்! ஆர்ப்பரித்து எழும் கடல் அலை படிப்படியாக இறங்குவது போல் செவிகளில் ஓர் உணர்வு. 'பாலைகளில், காடுகளில், பணிபடர்ந்த நாடுகளில், சோலைகளில், தீவுகளில்,' இந்தப் பாங்கோசைக் கேட்காத இடமில்லை இப்பாருலகில். இறைவனை வணங்க உலகம் முழுவதும் ஒரே மாதிரியான அழைப்பு. இஸ்லாத்திற்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு.மொழி தெரிந்தவர்- தெரியாதவர்- பொருள் புரிந்தவர்- புரியாதவர்- எல்லோருக்கும் தெரியும், இது 'அல்லாஹ்வை வணங்க அனைவரும் வாருங்கள்' என விடுக்கும் அழைப்பு
நாள் ஒன்றுக்கு ஐவேளைத் தொழுகை. நானிலமெங்கும் உள்ள பள்ளிவாசல்களில், நாள் தவறாமல் நடக்கும் இந்த இறை வணக்கத்திற்காக, நாள் ஒன்றுக்கு ஐந்து முறை அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு தொழுகையின் நேரமும் சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு ஊருக்கு ஊர், மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு மாறுபடும். ஒவ்வொரு தொழுகைக்கும் அழைக்கப்படும் இந்தப் பாங்கோசை உலகம் முழுவதும் ஏதேனும் ஒரு பகுதியில் கேட்டுக் கொண்டே இருக்கும். யுக முடிவு நாள் வரை இந்த சங்க நாதம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
மனங்கவரும் மஸ்ஜிதுல் ஹராம்புனித ஹாஜிகள் தாங்கள் வந்த நோக்கத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். மஸ்ஜிதுல் ஹராமின் அனைத்து வாசல் வழியாகவும் அணி அணியாக ஆர்வத்துடன் நுழைகின்றனர். இந்த மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியில் ஒரு ரக்அத் தொழுவது மற்றப் பள்ளிகளில் ஒரு இலட்சம் ரக்அத்கள் தொழுவதற்குச் சமம்.
திருக் கஃபாவை உள்ளடக்கிய இப் புனிதப் பள்ளி, பல்வேறு கால கட்டங்களிலும், விரிவு படுத்தப் பட்டு வந்திருக்கிறது.இறுதியாக, இப்போதைய ஆட்சியாளர்களால், மிகப் பிரம்மாண்டமான அளவில் விரிவு படுத்தப் பட்டுள்ளது. அதி நவீன வசதிகளுடன், அழகான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், ஏக காலத்தில் இருபது இலட்சம் பேர், எந்தச் சிரமமுமின்றித் தொழ முடியும். கட்டடக் கலையின் சகல விதமானத் தொழில் நுட்பங்களும் இங்கே கையாளப் பட்டுள்ளன.
பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் சீருடை அணிந்து சுழற்சி முறையில் பகலும் இரவும் பணிபுரிகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் - எந்த நேரமும் ஒவ்வொரு பகுதியிலும் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.மஸ்ஜிதுல் ஹராமின் மையப் பகுதியில் இதோ நம் கண்களைப் பறிக்கின்றதே! இது தான் கஃபா!
கஃபா என்னும் முதல் இறையாலயம்அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.(திருக் குர்ஆன் 3: 96)
கஃபா. சொல்லுக்கடங்காத புகழுக்குரிய இறையில்லம். இறைவனை வணங்க, உலகில் முதன் முதல் உருவாக்கப்பட்ட இறையாலயம். உலகில் இப்போது வாழும் 120 கோடி முஸ்லிம்களின் ஒரே இதயம். ஐயாயிரம் ஆண்டுகளாக அத்தனை புயல்களையும் மழைகளையும் எதிர்த்து நின்று காலத்தால் அழியாமல் அப்படியே நிமிர்ந்து நிற்கும், அல்லாஹ்வின் அருள் இல்லம்.
அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக!
(திருக் குர்ஆன் 2:125)
ஆம்! உலக முஸ்லிம்கள் ஒன்று கூடுமிடமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்தை பாதுகாப்பு மையமாக இறைவன் அறிவித்து 14 நூற்றாண்டுகள் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும், அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
1400 ஆண்டுகளுக்கு முன் அப்ரஹா என்னும் அரசன் யானைப் படையுடன், இப்புனிதக் கஃபாவை அழிக்க வந்த போது 'அபாபீல்' என்னும் சின்னஞ்சிறு பறவைகளைக் கொண்டு அல்லாஹ் பாதுகாத்தான். திரு மறையின் 105 ஆவது அத்தியாயம் இச்சம்பவத்தை அழகாக எடுத்தியம்பு கின்றது. அது போலவே, எல்லாக் கால கட்டத்திலும், எதிரிகளிடமிருந்தும், இயற்கையின் தாக்குதல்களிலிருந்தும். இதனை இன்று வரை இறைவன் காப்பாற்றி வருகிறான்.
கண்ணைப் பறிக்கும் வண்ணப் படங்களாகக் காலண்டர் அட்டைகளில் மட்டுமே கண்டு களிப்படைந்தக் கஃபாவை இதோ கண் முன்னே ஹாஜிகள் காண்கின்றனர். களிப் பேருவகைக் கொள்கின்றனர். கற்பனையில் கூடக் கண்டிராதக் காட்சியைக் கண்டு கண்கள் அகல விரிகின்றன. இதயம் நடுங்குகிறது. மெய் சிலிர்க்கிறது. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஓர் உணர்வு. பன்னூலாசிரியர் M.R.M அப்துற்றஹீம் அவர்கள் பாணியில் சொல்வதானால், 'உச்சியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்குகிறது.
'இந்தக் கஃபா, விலையுயர்ந்த கருப்புத் திரையால் மூடப் பட்டுள்ளது. திரை முழுவதும் தங்க இழைகளால் திருமறை வசனங்கள் தீட்டப் பட்டுள்ளன. இந்தக் கருப்புத் திரையை உருவாக்கு வதற்கென்றே - தனியாக ஒரு தொழிற்கூடம் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்தக் கருப்புத் திரை மாற்றப் பட்டு, புதிய திரை போர்த்தப் படுகின்றது.
தவாபுல் குதூம் என்னும் முதல் தவாப்
பொதுவாக எந்தப் பள்ளியில் நுழைந்தாலும், முதலில் 2 ரக்அத் நபில் தொழுவது சிறந்தது. ஆனால் மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே நுழைந்ததும் கடமையான ஜமாஅத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் முதலில் தவாப் செய்வதே சிறந்தது. அதுவே முறையும் கூட.ஹஜ் அல்லது உம்ராச் செய்ய, புனித மக்காவுக்கு வரும்போது முதலில் செய்யும் தவாபுக்கு 'தவாபுல் குதூம்' என்று பெயர். கஃபாவை ஏழு முறை சுற்றி வருவது ஒரு தவாப் ஆகும்.
மஸ்ஜிதுல் ஹராமுக்கு ஏராளமான நுழைவாயில்கள் உள்ளன. எந்த வழியாகவும் உள்ளே நுழையலாம். அவரவர் வந்து சேரும் வழிகளில் உள்ள நுழைவாயில் வழியே உள்ளே நுழைகின்றனர். அவரவர் தம் தவாபுல் குதூமை அழகாகத் தொடங்குகின்றனர்.
'நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்தார்கள். ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். பின்பு வலப்புறமாக (கஃபாவை) சுற்றலானார்கள்.மூன்று சுற்றுக்கள் விரைவாகவும் நான்கு சுற்றுக்கள் சாதாரணமாகவும் நடந்து சுற்றினார்கள். பிறகு மகாமே இப்ராஹீம் எனும் இடத்திற்கு வந்தார்கள். மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் (2:125) என்ற வசனத்தை ஓதிவிட்டு, தமக்கும் கஃபாவுக்கும் இடையே மகாமே இப்ராஹீம் இருக்குமாறு 2 ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் ஹஜருல் அஸ்வதுக்கு வந்து அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு ஸஃபாவுக்குச் சென்றார்கள். 'நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவையாகும் (திருக் குர்ஆன் 2: 158) என்ற வசனத்தை அவர்கள் ஓதியதாக எண்ணுகிறேன்'
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (784)
ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் இடத்திலிருந்து ஹாஜிகள் தவாபைத் தொடங்குகின்றனர். இயன்றால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டும், இயலாவிட்டால் தூரத்திலிருந்தே கைகளால் சைகை செய்தும் தவாபைத் தொடங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீதமர்ந்து தவாப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதுக் கருகே வந்த போது அதை நோக்கி சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (793)'
ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து இறங்கியதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கறுப்பாக்கி விட்டன' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)ஆதாரம்: திர்மிதி (803)
கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும், பேசும் நாவு கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை (அல்லாஹ்) எழுப்புவான். யார் இதை முத்தமிட்டரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: திர்மிதி (884)
தவாபின் ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதை முத்தமிடவோ அல்லது அதை நோக்கி சைகை செய்யவோ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஃபாவை தவாப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1612)
ஹாஜிகள் தவாபைத் தொடங்குகிறார்கள். ஒரே சீராக, ஒழுங்கு முறையுடனும், மிகுந்த கட்டுப்பாட்டுடனும் சுற்றி வருகிறார்கள்.
இலட்சக் கணக்கான மக்கள் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
இரவும் பகலும் இடைவிடாது சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
அரசர்களும், ஆண்டிகளும்,
ஆட்சி செய்யும் அதிகாரிகளும்,
முதலாளிகளும், தொழிலாளிகளும்,
ஏழைகளும், செல்வந்தர்களும்,
ஏற்றத் தாழ்வின்றி சுற்றுகிறார்கள்.
படித்தவர்களும், பாமரர்களும்,
பாகுபாடின்றி சுற்றுகிறார்கள்.
ஆண்களும். பெண்களும்,
சிறியோரும், பெரியோரும்,
வாலிபர்களும், வயோதிகரும்
அனைத்து வகை மனிதர்களும்
அழகாகச் சுற்றுகிறார்கள்.
தள்ளாத வயதில் பெற்றோரைத்
தம் முதுகில் சுமந்தபடி-
தாம் பெற்றக் குழந்தைகளைத்
தம் தோளில் சுமந்தபடி-
வளரும் சிசுக்களைத்
தம் வயிற்றில் சுமந்தபடி-
மறுமை பயத்தைத்
தம் மனதில் சுமந்தபடி-
இறையச்சத்தைத்
தம் இதயத்தில் சுமந்தபடி-
திருமறை குர்ஆனைத் தம்
கரங்களில் சுமந்தபடி-
திக்ருகளைத்
தம் நாவுகளில் மொழிந்த படி-
பாவ மன்னிப்புக் கேட்டுத்
தம் கைகள் ஏந்தியபடி-
கவலையுடன் அழுதழுது
கண்ணீர் சொரிந்தபடி-
சுற்றுகிறார்கள். சுற்றுகிறார்கள். சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.1400 ஆண்டுகளாக, ஆயிரமாயிரம் கோடிப் பேர்கள் சுற்றினார்கள். இந்தக் கணப் பொழுதிலும் இலட்சக் கணக்கானோர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இறுதி நாள் வரை இன்னும் எத்தனை எத்தனை கோடிகளோ! எண்ணிக்கை எந்த எண்ணிலும் அடங்காது. ஏட்டிலும் அடங்காது.
ஏழு முறை கஃபாவைச் சுற்றுவது ஒரு தவாப் ஆகும். ஏழு சற்றுக்களை நிறைவு செய்தவர்கள், எவ்வளவு இதமுடன் வெயியேறுகின்றனர்! தவாபை முடித்தவர்கள், சிறுகச் சிறுக வெளியேற - தவாபைத் தொடங்குபவர்கள் பக்குவமாக நுழைகின்றனர். சங்கிலித் தொடராக இந்தச் சுற்றுக்கள் தொடர்கின்றன.தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன.
முதல் தவாபில் முதல் மூன்று சுற்றுக்களில் மட்டும் தோள்களைக் குலுக்கியவாறு கொஞ்சம் வேகமாக (ஆண்கள்) ஓட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள், ஹஜ்ஜிலும் உம்ராவிலும் முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள்.(மீதமுள்ள) நான்கு சுற்றுக்களில் நடந்து செல்வார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம்: புகாரி (1604)
தவாபை முடித்ததும், அடுத்த செயல் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத் தொழவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்த போது கஃபாவை ஏழு முறை வலம் வந்தார்கள். பிறகு மகாமே இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பிறகு ஸஃபாவி(ல் ஓடுவத)ற்காகப் புறப்பட்டார்கள்.'நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது' என இறைவன் கூறுகிறான். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரி(1627)
மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
(திருக் குர்ஆன் 2:125)
தவாபை நிறைவு செய்த ஹாஜிகள், மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று இரண்டு ரக்அத் தொழுகின்றனர். மகாமே இப்ராஹீமுக்கு மிக அருகில் தான் நின்று தொழ வேண்டும் என்பதில்லை.
நபி (ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜை முடித்து) மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள். தவாப் செய்யாத நிலையில் நானும் புறப்பட ஆயத்தமானேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'சுப்ஹூத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டவுடன் மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது நீ ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாப் செய்துக் கொள்' எனக் கூறினார்கள். அவ்வாறே நான் செய்தேன். இதனால் (இரண்டு ரக்அத்துகளை) பள்ளிக்கு வெளியே வந்த பிறகே தொழுதேன். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) ஆதாரம்: புகாரி(1626)
மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று தொழுவது, தவாபு சுற்றுபவர்களுக்கு இடையூறாக இருக்கும். நெரிசலில் சிலர் அவசர அவசரமாக, ருகூவு செய்யவும் முடியாமல், ஸஜ்தாச் செய்யவும் முடியாமல், சிரமப்பட்டு தொழுவதைக் காணலாம். தொழுகை என்பது நிறுத்தி நிதானமாகச் செய்ய வேண்டிய ஒரு வணக்கமாகும்.
எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப் படுத்த மாட்டோம்
(திருக் குர்ஆன் 23:62)
என்று அல்லாஹ்வின் திருமறை கூறுகிறது. எனவே கடுமையான சிரமத்துக்கு மத்தியில் அந்த மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹராமின் எந்தப் பகுதியிலும் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.விபரம் அறிந்த ஹாஜிகள், தவாபின் இரண்டு ரக்அத் தொழுகையை மஸ்ஜிதுல் ஹராமில் வசதிப் பட்ட இடங்களில் நிறைவேற்றுகின்றனர்.
கஃபாவின் வட பகுதியில் அரை வட்டத்துக்குச் சிறிய சுவர் ஒன்று எழுப்பப் பட்டுள்ளது. இதற்கு ஹிஜ்ர் இஸ்மாயீல் என்று பெயர்.
நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்து, ஆலயத்தின் உள்ளே நுழைய விரும்பினால் இங்கே தொழுவாயாக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டிய போது அதைச் சுருக்கி விட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப் படுத்திவிட்டனர்.' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்:திர்மிதி: (802)
ஹாஜிகளில் பலர், இந்த ஹிஜ்ருக்குள் நுழைந்து தொழுதுக் கொள்கின்றனர். இங்கு நின்று பிரார்த்திக்கின்றனர். கஃபாவின் மேற்குப் பகுதியில் மழை நீர் வடிவதற்காகக் குழாய் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதற்கு 'மீஜாபுர் ரஹ்மத்' என்று பெயர். இதுவும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் இடங்களில் ஒன்றாகும். ஹாஜிகள் இந்த இடத்திலும் நின்று பிரார்த்திக்கின்றனர்.
ஜம் ஜம் கிணறு
இப்போது மக்கா நகரமாக இருக்கும் இந்த இடம் ஊராக உருவாவதற்கு முன், முதன் முதலில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப் படி இங்கே குடியமர்த்தினார்கள்.
குழந்தை தாகத்தால் தவித்த போது இஸ்மாயீலின் தாயார், ஸஃபா மர்வா என்னும் இரு மலைக் குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி, ஏதாவது வணிகக் கூட்டம் செல்கின்றதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தை தணிக்க எண்ணினார்கள். அதற்கிடையே அல்லாஹ், குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான்.
எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இந்த ஜம்ஜம் நீருக்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் இந்தக் கிணறு ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது.
தோண்டுகின்ற இடமெல்லாம் எண்ணெய்க் கிணறுகள் தோன்றுகின்ற இந்தப் பாலைவன மணலில், இது ஒரு வரலாற்று அற்புதம்.நாள் தோறும் வருகின்ற பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும், ஆண்டு தோறும் கூடுகின்ற அத்தனை இலட்சம் பேருக்கும் தாகம் தணிக்கிறது இக்கிணறு. அதிக சக்தியுள்ள இயந்திரங்கள் மூலம் அனுதினமும் நீர் வெளியேற்றப் படுகிறது. அள்ள அள்ளக் குறையாத இப்பேரற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவன் பேராற்றலுடையவன்.
சுற்றிலும் கண்ணாடித் தடுப்புகளால் அரண் அமைத்து பாதுகாக்கப் பட்டுள்ள இக்கிணற்றின் மிக அருகில் சென்று பார்க்கும் ஹாஜிகள் இறைவனின் மாபெரும் அற்புதத்தை எண்ணி வியக்கின்றனர். இந்த ஜம்ஜம் கிணறு இருக்கும் பகுதியும், பிரார்த்தனை அங்கீகரிக்கப் படும் இடங்களில் ஒன்றாகும்.தரைப் பகுதியில் படிகள் அமைத்து உள்ளே சென்று பார்க்கவும், தண்ணீர் அருந்தவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித் தனியாக பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன. தவாபை முடித்து - தொழுகையையும் நிறை வேற்றிய ஹாஜிகள், கூட்டம் கூட்டமாகச் சென்று தண்ணீர் அருந்துகின்றனர். பிரார்த்தனை அங்கீகரிக்கப் படும் இந்த கிணற்றடியில் நின்று பிரார்த்திக்கின்றனர். வயிறும் மனதும் நிறைந்தவர்களாக- ஹாஜிகள் அடுத்த செயலை நிறைவேற்ற அவசரமாகச் செல்கின்றனர்.இனி அடுத்தக் கடமை ஸஃபா மர்வா மலைகளுக்கிடையே ஸயீ என்னும் ஓட்டம்.
ஸயீ என்னும் தொங்கோட்டம்
ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன். அறிந்தவன்.(திருக் குர்ஆன் 2:158)
அன்று நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னையார் தண்ணீர் தேடி ஓடியதை நினைவு கூறும் விதமாக இன்றளவும் ஹஜ்ஜுக்கு வரும் அனைவரும் ஓடுகின்றனர்.
ஸஃபா, மர்வா என்பது இரு சின்னஞ்சிறு மலைக் குன்றுகளின் பெயர். இப்போது அந்த இடங்களில் மலைக் குன்றுகள் இல்லை. சற்று உயரமான இடத்தில்- மலைக் குன்றுகளை நினைவு படுத்தும் விதமாகக் கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.ஸஃபா, மர்வா இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதி, நீண்ட அரங்கம் போல் அமைக்கப் பட்டு, குளு குளு வசதி செய்யப் பட்டுள்ளது. ஆங்காங்கே மாபெரும் மின் விசிறிகள் காற்றோட்டத்தை ஏற்படுத்துகின்றன.
அடுக்கடுக்காக மூன்று தளங்கள், ஹாஜிகள் சிரமமின்றி ஓடுவதற்கு வசதியாக அமைக்கப் பட்டுள்ளன. போவதற்கும், வருவதற்குமாக இரு தனித்தனிப் பாதைகள். ஓட இயலாதவர்களைத் தள்ளு வண்டியில் வைத்து, தள்ளிக் கொண்டு செல்வதற்கும் நடுவில் தனிப்பாதை அமைக்கப் பட்டுள்ளது.
ஓட்டத்தை, ஸஃபாவில் துவக்க வேண்டும். ஸஃபாவிலிருந்து மர்வா சென்று சேருவது ஒரு ஓட்டம்.மீண்டும் மர்வாவிலிருந்து புறப்பட்டு ஸஃபா வந்து சேருவது இரண்டாவது ஓட்டம். இவ்விதம், ஸஃபாவில் தொடங்கிய முதல் ஓட்டம், ஏழாவது ஓட்டத்துடன் மர்வாவில் நிறைவு பெறும்.
ஸஃபாவிலிருந்து மர்வா வரை வேகமாக ஓட வேண்டும் என்று அவசியமில்லை. நடந்து சென்றால் போதும். இடைப்பட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் மட்டும் ஆண்கள் சற்று வேகமாக ஓட வேண்டும். இந்த இடத்திற்கு 'மீலைனில் அக்லரைன்' என்று பெயர். இந்த இடத்திற்கு அடையாளமாக இரு புறமும் பச்சை விளக்குகள் எரிகின்றன.
நபி (ஸல்) அவர்கள் முதல் தவாப் செய்யும் போது மூன்று சுற்றுக்களில் வேகமாக ஓடுவார்கள். நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா மர்வாவுக்கிடையே தவாப் செய்யும் போது ஓடைப் பகுதியில் மட்டும் ஓடுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரி (1644)
ஸஃபா மர்வா குன்றுகளுக்கிடையே, மனித வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஹஜ் அல்லது உம்ராச் செய்ய வந்த அத்தனை இலட்சம் புனிதர்களும் ஓடுகிறார்கள்.
ஒருவரையொருவர் இடிக்க வில்லை.
வீண் பேச்சுக்கள் இல்லை.
உலக நினைவுகள் இல்லை.
மெதுவான குரலில் துஆக்கள் ஓதுவதைத் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை.
மரணத்தை நினைத்து ஓடுகிறார்கள்!
மறுமையை நினைத்து ஓடுகிறார்கள்!
மஹ்ஷரை நினைத்து ஓடுகிறார்கள்!
மண்ணறை வாழ்வை நினைத்து ஓடுகிறார்கள்!
கால்கள் ஓடுகின்றன!
கண்கள் அழுகின்றன!
நாவுகள் பிரார்த்திக்கின்றன!
ஸஃபாவில் முதல் ஓட்டத்தைத் தொடங்கிய ஹாஜிகள், தமது ஏழாவது ஓட்டத்தை மர்வாவில் நிறைவு செய்து - தங்கள் முதல் கடமையான - புனித உம்ராவை இத்துடன் இனிதே நிறைவு செய்கின்றனர்.
'ஒரு உம்ராச் செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி (855)
தமத்துவ் என்னும் ஹஜ் செய்ய நிய்யத் செய்தவர்கள், தலைமுடி நீக்கி அல்லது கத்தரித்து இஹ்ராமிலிருந்து விடுபடுகின்றனர். கிரான் என்னும் ஹஜ் செய்ய நிய்யத் செய்து இஹ்ராம் அணிந்தவர்கள் - இதே இஹ்ராமுடன் ஹஜ்ஜை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர்.
புனித மதீனாவுக்குப் புறப்படுதல்
உம்ராவை இறையருளால் இனிதே நிறைவேற்றிய புனித இறைநேசர்கள்- மக்காவில் தங்குவதற்காக- அவரவர் வழிகாட்டிகளால், ஏற்பாடு செய்யப் பட்டுள்ள தங்கும் விடுதிகளுக்குச் சென்று ஓய்வெடுக்கின்றனர்.ஹரம் ஷரீபுக்கு மிக அருகிலேயே தங்குமிடம் கிடைக்கப் பெற்றவர்கள் ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் ஹரம் ஷரீபுக்கு வந்து - தங்கள் வாழ்வில் கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். சற்றுத் தொலைவில் தங்கியிருப்பவர்களும் முன் கூட்டியே ஹரம் ஷரீபுக்கு வந்து ஜமாஅத் தொழுகையின் பாக்கியத்தை அடைந்துக் கொள்கின்றனர்.
புனித ஹஜ்ஜை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கும் புண்ணிய சீலர்கள், மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில் வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களைக் கண்டு, கடந்த கால இஸ்லாமிய வரலாற்றை நினைவு கூறுகின்றனர்.புனித ஹஜ்ஜுக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால்- அதற்குள் புனித மதீனாவுக்குப் போய் வரலாமே! ஹஜ்ஜை முடித்தபின் மதீனாவுக்குச் செல்வதென்றால் - அங்கேயும் அதிக மக்கள் நெரிசலாக இருக்கும்.அதுமட்டுமின்றி ஹஜ்ஜின் அனைத்து செயல்களையும் செய்து முடித்து களைப்பு அடைந்து விடலாம் என்பதால் பெரும் பாலானவர்கள் இப்போதே புனித மதீனாவுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர
புனிதப் பயணம் தொடரும் இன்ஷா அல்லாஹ்

0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்