Nov 11, 2007

புனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனை 2


மதீனா நோக்கி ஒரு மகிழ்ச்சிப் பயணம்



உம்ராவை இனிதே நிறைவேற்றிய இறைவனின் விருந்தினர்கள், புனிதப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக புண்ணிய மதீனா நன்னகர் நோக்கி இதோ புறப்பட்டுவிட்டனர்.
14 நூற்றாண்டுகளுக்கு முன் - இறைவனின் தூதுச் செய்தியை, ஓரிறைக் கொள்கையை, உன்னத இஸ்லாத்தை, மக்கத் திருநகரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த போது- அவர்களும், அவர்களின் சத்தியக் கொள்கையை ஏற்றுக் கொண்டோரும், மக்கத்துக் குறைஷிக் கெடுமதியாளர்களால், பல்வேறு துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும், ஆளாக்கப் பட்டார்கள்.பொறுமையின் சிகரமான பூமான் நபி (ஸல்) அவர்கள் பொறுத்துப் பொறுத்து - இதற்கு மேலும் சகித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போது- இறைவனின் ஆணைப்படி- அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் ஆருயிர்த் தோழர் அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களும், தாங்கள் பிறந்து வளர்ந்த மக்காவைத் துறந்து புறப்பட்டனர்.'யத்ரிப்' என்னும் இனிய நகரம், அவ்விருவரையும் இரு கரம் நீட்டி வரவேற்றது. அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் சத்தியக் கொள்கைக்கும், புத்துணர்வு தந்தது.
பண்டைய வரலாற்றில் 'யத்ரிப்' என்ற பெயரால் அழைக்கப்பட்ட அந்த நகரம் தான், பின்னாளில் 'மதீனத்துன்னபி' (நபியின் நகரம்) என்று மரியாதைப் பெற்று, அதுவே இப்போது 'மதீனா' என்று அழைக்கப்படுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இடம் பெயர்ந்து சென்ற அந்த நிகழ்ச்சி 'ஹிஜ்ரத்' எனப்படுகிறது.இஸ்லாமிய ஆன்டு இந்த நாளிலிருந்து தான் தொடங்குகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'யத்ரிபு என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (ஹிஜ்ரத் செய்து செல்லுமாறு) நான் கட்டளை யிடப்பட்டேன்! அது தான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கி விடுவதைப் போல் மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றி விடும்' அறிவிப்பவர்:
அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1871)
பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல், ஈமான்(இறை நம்பிக்கை) மதீனாவில் அபயம் பெறும். அறிவிப்பவர்:
அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1876)
இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1885)
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த மதீனா, இன்று அனைவருக்கும் பிடித்தமான நகரமாக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நபி (ஸல்) அவர்களின் துஆவின் மகிமை இன்றளவும் இந்த மதீனா நகரத்தில் பிரதிபலிக்கிறது.சிந்தைக்கினிய செழுமை மிக்க மதீனா நகர் நோக்கி புறப்பட்டு விட்டனர் ஹாஜிகள்.
வழி நெடுகிலும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பாலைவனமும், இடையிடையே இருபுறமும் மலைக் குன்றுகளும், அரபு நாட்டு இயற்கை அப்படியே பிரதிபலிக்கிறது.அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் அருமைத் தோழர் அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களும், கரடு முரடான பாதைகளில் ஒட்டகத்தின் மீதேறி நாட்கணக்கில் கடந்த தூரத்தை, இப்போது சில மணி நேரங்களில், அகன்று விரிந்த வழவழப்பான சாலைகளில், அதிவேகமாக விரைந்து செல்லும் வாகனங்களில் ஹாஜிகள் சென்றடைகின்றனர்.
இதோ! மதீனா முனவ்வராவின் எல்லைப் பகுதி.அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதிக்கப் படுகின்றன. மதீனா நகரின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் இவ்விதம் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடையான அட்டைகள் சரி பார்க்கப்பட்ட பின்னர், அனைத்து ஹாஜிகளும் அகம் குளிர, முகம் மலர, மதீனா நகரில் நுழைகின்றனர்.இதயம் கவரும் பசுமை நிறைந்த, இங்கித நகரில் நுழைகின்றனர். மாநபிகள் வாழ்ந்த மதீனத் திரு நகரில் நுழைகின்றனர்.
மதீனா நகரின் மையப் பகுதியை நெருங்க நெருங்க, மஸ்ஜிதுன்னபவியின் வானளாவிய மினாராக்களை வெகு தொலைவிலிருந்தே காண முடிகிறது.நள்ளிரவு நேரத்திலும், கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது இப்புனிதப் பள்ளி.
சமீப காலம் வரை மஸ்ஜிதுன்னபவியைச் சுற்றி ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெரும் பெரும் அடுக்கு மாடிக் கட்டடங்கள் கூட, உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கொடுத்து அப்புறப்படுத்தப்பட்டு இப்போது மிகப் பெரிய அளவில் பள்ளி வளாகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பள்ளி வெளிப்புற வளாகத்தின் பெரும் பகுதியில் தரை மட்டத்திற்குக் கீழ் கார் நிறுத்துமிடமும், கழிவறைகளும், அமைக்கப்பட்டுள்ளன.எல்லா நுழைவாயில்களுக்கு அருகிலும்- அடித்தளப் பகுதியில் உலூச் செய்யும் குழாய் வசதிகளும், கழிவறைகளும் அமைக்கப்பட்டு - உள்ளே சென்று வர தானியங்கிப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இயலாதவர்களும். முதியவர்களும் கூட எளிதில் சென்று வர முடியும்.பள்ளியின் வெளிப்புற வளாகத்திலேயே, பல இலட்சம் பேர் நின்று தொழ முடியும். பளீரென்ற வெள்ளைப் பளிங்குக் கற்களால் தரை முழுவதும் இழைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டுப் பெருகி வரும் கூட்டத்திற்கு ஏற்றபடி - பள்ளி மிகவும் விசாலமாக இப்போது வடிவமைக்கப் பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் எந்நேரமும் - பள்ளியின் உள்ளேயும், வெளியேயும் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கின்றனர். தரையை சுத்தம் செய்வதற்காகவே சிறப்பான முறையில் வடிவமைக்கப் பட்ட இயந்திரங்கள் சுத்தம் செய்துக் கொண்டே இருக்கின்றன.
பரந்து விரிந்த பள்ளியின் உட்பகுதி முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப் பட்டு, கடும் கோடையிலும் கூட இதமான குளுமையை அனுபவிக்க முடிகிறது. உட்பகுதியின் ஒரு பக்கம் மாபெரும் தானியங்கிக் குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெயில் மற்றும் மழை நேரங்களில் இந்த ராட்சதக் குடைகள் விரிந்துக் கொள்ளும். மற்ற நேரங்களில் குடைகள் சுருங்கி காற்றோட்டத்தை ஏற்படுத்தும்.
மற்றொரு பக்கம்- காங்கிரீட் மேற் கூரை- தனித்தனிப் பகுதிகளாக அப்படியே நகர்ந்து- திறந்துக் கொள்ளும். வெயில் மற்றும் மழை நேரங்களில் மூடிக் கொள்ளும். கற்பனைக் கெட்டாத கட்டடக் கலையின் அற்புத வடிவமைப்புகள் காண்போரை பிரமிக்கச் செய்கின்றன.
பள்ளியின் உட்பகுதி முழுவதும்- பல்லாயிரக் கணக்கில் குடி நீர் பிளாஸ்குகள் வைக்கப்பட்டு, மக்காவிலிருந்து ஜம்ஜம் நீர் கொண்டு வந்து தினந்தோறும் நிரப்பப்படுகிறது.
மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில், இரவும் பகலும் மக்கள் கஃபாவைத் தவாபு செய்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த மஸ்ஜிதுன்னபவியில், இரவு இஷாத் தொழுகை முடிந்ததும், அனைவரும் வெளியேற்றப் படுகின்றனர். பள்ளியின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் இரவில் யாரையும் உறங்க அனுமதிப்பதில்லை.இஷாத் தொழுகை முடிந்து அடைக்கப்பட்ட பள்ளியின் கதவுகள், தஹஜ்ஜுத் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டவுடன் திறக்கப்படுகின்றன.எல்லா நாட்களிலும் தஹஜ்ஜுத் தொழுகையை நிறைவேற்ற ஹாஜிகள் ஆர்வத்துடன் வந்து விடுகின்றனர். பஜ்ருத் தொழுகை வரை இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனையப் பள்ளிகளில் தொழுவதை விட எனது பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்தது.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1190)
இந்த ஹதீஸின் கருத்தை உணர்ந்த ஹாஜிகள், தஹஜ்ஜுத் தொழுகையைக் கூடத் தவற விடுவார்களா? மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில் மஸ்ஜிதுன்னபவியில் அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட்டு நன்மைகளை சேர்ப்பதில் கவனமாக இருக்கின்றனர்.
இன்றைய தினம் பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றி விட்டு மக்கள் கூட்டம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத்தலத்தை ஜியாரத் செய்ய அலைமோதுகிறது.பள்ளியின் உட்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி நகருகின்றனர். இதோ! முதலில் தெரிவது 'சுவர்க்கப் பூங்கா'
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:'எனது வீட்டிற்கும் எனது மிம்பருக்கும் இடைப்பட்டப் பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.'
அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1195)
இந்த இடத்திற்கு அடையாளமாக, அழகான பச்சைக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நபி மொழி அரபியில் 'மா பைன பைத்தீ வ மிம்பரீ ரவ்லதன் மின் ரியாலில் ஜன்னா' என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் நின்று தொழவைத்த இடமும் (மிஹ்ராபுன்னபி) பிரசங்கம் செய்வதற்காக நின்ற மேடையும், அருகருகே அமைந்துள்ளன. பாக்கியம் பெற்ற இந்த இடங்களுக்கருகில் நிற்கவும், நின்று தொழவும் ஹாஜிகள் அலைமோதுகின்றனர்.
அடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் துயில் கொண்டுள்ள புனித அடக்கத்தலத்தை நோக்கி!
இதோ! தூய நபியவர்கள் துயில் கொண்டுள்ள தூய்மைத் தலம். உண்மை நபியவர்கள் உறங்கும் உன்னத அடக்கத் தலம். மனங்கவரும் இஸ்லாத்தை மனங்குளிர போதித்த மனித குல மாணிக்கத்தின் மறைவிடம்.புவியெங்கும் மக்கள் புகழ் பாடிக் கொண்டாடும், புனிதரின் பூத உடல் இங்கே தான். யுகம் யுகமாய் திருந்தாதக் காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களை, இருபத்து மூன்றே ஆண்டுகளில் இகமே போற்றும் இனிய தோழர்களாய் மாற்றியமைத்த இனியவரின் புனித உடல் இங்கே தான்.கண்கள் காணக் காண, நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன.
1400 ஆண்டுகளுக்கு முன்- அகிலம் முழுவதும், அநியாயமும், அட்டூழியமும், தலை விரித்தாடியபோது, அகிலத்தின் அருட்கொடையை, அரேபியப் பாலையில் அல்லாஹ் அவதரிக்கச் செய்தான்.
தாயின் வயிற்றில் கருவாக இருந்த போதே தந்தையை இழந்து, தமது ஆறாம் வயதில், தாயையும் இழந்து, பாட்டனார் அப்துல் முத்தலிபின் பராமரிப்பில் வளர்ந்து,'அல் அமீன்' என்றும் 'அஸ்ஸாதிக்' என்றும் அன்புடன் அழைக்கப் பட்ட நம்பிக்கைக்குரிய இளைஞராக-
செல்வச் சீமாட்டி கதீஜாவின் சிறப்பு மிகு வணிகராக-
இருபத்தைந்தாம் வயதில் எழில் மணம் புரிந்து-
நாற்பதாம் வயதில் இறைத்தூதராக நபித்துவம் பெற்று-
மக்கத்துக் குறைஷிகளால் பலவித துன்பங்களுக்குள்ளாகி-
53 ஆம் வயதில், இறைவனின் ஆணைப்படிதாம் பிறந்து வளர்ந்த மக்காவைத் துறந்து-
மதீனத் திரு நகருக்கு மாண்புடன் ஹிஜ்ரத் செய்து-
மதீனத்து அன்ஸாரிகளின் மதிப்புக்கு உரியவராக-
மன்னாதி மன்னர்களும் தமக்கு முன்னே அணிவகுத்து நிற்கும் அளவுக்கு மாண்பையும் மரியாதையையும் பெற்று-
மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை மதீனாவில் நிறுவி-
ஏகத்துவக் கொள்கையை இகமெங்கும் பரவச் செய்து-
தமது 63 ஆம் வயதில் - அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று- இம் மண்ணுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு - மறுமை நாள் வரை துயில் கொண்டுள்ள தூய இடம் இது தான்.
கண் இமைக்கும் நேரத்தில்- வள்ளல் நபியின் வாழ்க்கைச் சரிதம் நம் கண் முன்னே தோன்றி மறைகிறது. இந்தப் புனித அடக்கத்தலத்தைக் காணக் காண, அனைவரின் கண்களும் கண்ணீர் வடிக்கின்றன. அனைவரின் நாவுகளும் அழகாக ஸலாம் உரைக்கின்றன.
நபியே ஸலாம் உண்டாக!
இறைவனின் தூதரே ஸலாம் உண்டாக!
அனைவரும் ஸலாம் கூறுகிறார்கள்.
அமைதியாக ஸலாம் கூறுகிறார்கள்.
இதன் உள்ளே கல்லறை கட்டப்படவில்லை.
கண்ணைப் பறிக்கும் அலங்காரம் இல்லை.
'எண்ணெய் விளக்கு' எரியவில்லை.
உண்டியல் இல்லை.
ஊது பத்தி- சாம்பிரானி இல்லை.
மயிலிறகு இல்லை.
மலர் வளையம் இல்லை.
ஏமாற்றும் இடைத் தரகர்கள் இல்லை.
பாத்திஹா ஓத யாரும் இல்லை.
பைத்தியங்கள் சங்கிலிகளால் பிணைக்கப் படவில்லை.
பூமாலைக் கட்டி போடமுடியாது.
போர்வை வாங்கி போர்த்த முடியாது.
சந்தனம் பூச முடியாது.
கொடியேற்றம் இல்லை.
கூத்தும் கும்மாளமும் இல்லை.
பாட்டுக் கச்சேரியும் இல்லை.
பரத்தையர் நாட்டியமும் இல்லை.
'எனது கப்ரை திரு விழா நடத்தும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளிச் சென்ற வார்த்தை இன்றளவும் இங்கே பேணப் படுகின்றது.
அர்ச்சனைகளிலிருந்தும், ஆராதனைகளிலிருந்தும், அனைத்து வகை அநாச்சாரங்களிலிருந்தும், ஆடல் பாடல் கச்சேரிகளிலிருந்தும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத்தலத்தை அல்லாஹ் காப்பாற்றி விட்டான்.
அறியாiயால் சிலர், கையேந்தி பிரார்த்திக்கவும், அடக்கத்தலத்தின் சுவர்களைத் தொட்டு முத்தமிடவும் முயற்சிக்கின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாகத் தான் இவ்வாறு செய்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மார்க்கத்தில் அதற்கு அனுமதி இல்லை என்பதை இவர்கள் உணரவில்லை.
காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும், அறிவிற் சிறந்த ஆன்றோரும், அருகில் நின்று கண்காணிக்கின்றனர். அறியாமையால் அநாச்சாரங்களில் ஈடுபட முனைவோரைத் தடுக்கின்றனர்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள், கப்ர் ஜியாரத் எப்படிச் செய்யவேண்டும் என்று மொழிந்தார்களோ! அவர்களின் அடியொற்றி நடந்த ஸஹாபாக்கள் எவ்விதம் ஜியாரத் செய்தார்களோ! அந்த முறை தான் இன்றளவும் இங்கே கடைபிடிக்கப்படுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைத்தபடியே, மக்கள் கூட்டம் மெதுவாக நகருகின்றது. அவர்களுக்கு அடுத்து அடக்கம் செய்யப் பட்டிருக்கும், அண்ணலாரின் அருமைத் தோழர், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு துன்ப துயரத்திலும் பங்கு கொண்ட பண்பாளர், அண்ணலாருடன் சேர்ந்து ஹிஜ்ரத் செய்யும் பேறு பெற்ற பெருந்தகை, நபிமார்களுக்குப் பின் மனிதர்களில் சிறந்தவர் என்று புகழப்பட்ட புண்ணிய சீலர், அண்ணல்நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களின் அரசியல் தலைமையை அலங்கரிக்கும் பொறுப்புக்கு அனைவராலும் ஏகோபித்து அங்கீகரிக்கப் பட்ட அருந்தவ ஞானி, அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு ஸலாம் உரைக்கின்றனர்.
மக்கள் கூட்டம் மேலும் முன்னோக்கி நகருகின்றது.அவர்களை அடுத்து அடக்கம் செய்யப்பட்டுள்ள, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர், வீரத்தின் விளை நிலம், இஸ்லாமிய கிலாபத் ஆட்சியின் இரண்டாவது கலீபா, நீதி மிக்க ஆட்சிக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய நீதி மான், உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களுக்கு ஹாஜிகள் ஸலாம் உரைக்கின்றனர்.
ஜியாரத்தை முடித்து வெளியில் வந்த ஹாஜிகள், வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும் பேற்றைப் பெற்றதற்காக ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஹஜ்ஜுடைய காலங்களில், மஸ்ஜிதுன்னபவியில் உள்ளே நுழைந்து ஜியாரத்தை முடித்து வெளியே வருவது என்பது சிரமமான காரியம் தான். நின்று காண்பதற்கு நேரம் இல்லை. கடல் அலையைப் போல் ஹாஜிகள் கூட்டம், கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துக் கொண்டே வருகின்றது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத்தலத்தை தரிசிக்கும் பேறு பெற்றோம் என்னும் மகிழ்ச்சிக்கு முன்னால்- அதற்காகப் பட்ட சிரமங்கள் யாருக்கும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.புண்ணியம் கிடைக்கப் பெற்றவர்களின் திரு முகங்களில் புன்னகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த மதீனத் திரு நகரில் தங்கியிருக்கும் நாட்களிலெல்லாம், இன்னும் ஒரு முறை, இன்னும் ஒரு முறை - எவ்வளவு சிரமங்கள் இருந்தாலென்ன? இன்னும் ஒரு முறை - மறுபடியும் இந்த பொன்னான வாய்ப்பு எப்போது கிடக்கும்? எனவே இன்னும் ஒரு முறை ஜியாரத் செய்ய வேண்டும் என்னும் ஆசையே அனைவரின் மனதிலும் மேலோங்குகிறது.
இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தம் இன்னுயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் இனிய இதயங்களுக்கு இப்படி ஓர் ஆர்வம் ஏற்படுவதில் வியப்பில்லை.
புனித அடக்கத்தலத்தை ஜியாரத் செய்து முடித்த புண்ணிய சீலர்கள் இதோ மஸ்ஜிதுன்னபவிக்கு அருகில் இருக்கும் ஜன்னத்துல் பகீஃ என்னும் புனிதர்களின் பூஞ்சோலை நோக்கி புறப்பட்டு விட்டனர்.
ஜன்னத்துல் பகீஃ
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியரில் பலரும், அருமைத் தோழர்களில் பல்லாயிரக் கணக்கானோரும், இங்கு தான் அடக்கப் பட்டுள்ளனர்.திரு மறைiயின் முழுமையான மூலப் பிரதியை உருவாக்கித் தந்தவரும், மூன்றாவது கலீபாவுமான உஸ்மான் இப்னு அப்பான் (ரலி) அவர்கள்,பெருமானாரின் எண்ணற்ற பொன் மொழிகளை அகிலத்திற்கு அறிவித்த, அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள்,அண்ணலாருக்கு அமுதூட்டிய அருமை அன்னை, ஹலீமா ஸஃதிய்யா (ரலி) அவர்கள், அண்ணலாரின் அருமந்த மைந்தர், இப்ராஹீம் (ரலி) அவர்கள், பிக்ஹுச் சட்டங்களை இயற்றிய பெருமேதை, இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், திருத்தமுடன் திரு மறையை ஓதுவதில் தனிச் சிறப்புப் பெற்ற காரி, இமாம் நாபிஃ (ரஹ்) அவர்கள்,ஆகியோரும், இன்னும் ஏராளமான நபித் தோழர்களும், இறை நேசர்களும், ஆன்றோரும், சான்றோரும், இந்தப் புனித மண்ணில் தான் அடக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
திரளாகக் கூடி நின்று, ஹாஜிகள் இந்தப் புனித மண்ணில் அடக்கப் பட்டிருப்பவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றனர்.இந்த அடக்கத் தலத்திலும், இன்னும் இங்குள்ள எந்த அடக்கத் தலங்களிலும் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. ஏனெனில்,
கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக! என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி
இந்த ஜியாரத்தை முடித்துக் கொண்டு, ஹாஜிகள் மதீனாவைச் சுற்றியுள்ள, சரித்திரப் புகழ் பெற்ற இடங்களைப் பார்த்து வரப் புறப்படுகின்றனர். மதீனாவைச் சுற்றிலும் பார்க்க வேண்டிய இடங்களை - அவரவர் தம் வழிகாட்டிகளின் வழிகாட்டுதலின்படி சென்று பார்த்து வருகின்றனர்.
மதீனாவின் மகத்துவத்தையும், மாண்பையும் பறை சாற்றிக் கொண்டு- வரலாற்று ஆதாரங்களாக நிலைத்து நிற்கும் இடங்களையும், சரித்திரச் சான்றுகளையும், காணுகின்ற கண்கள் பேறு பெற்றவை.
அண்ணல் நபி (ஸல்) அவர்களை வரவேற்று உபசரித்து, அகிலமெங்கும் இஸ்லாம் பரவ, அடித்தளம் அமைத்துக் கொடுத்த - மதீனத் திரு நகரை மகிழ்ச்சியுடன் தரிசிக்கும் உள்ளங்கள் பேறு பெற்றவை.
அண்ணல் நபி (ஸல்) அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அழகுத் திரு நகரில் தங்கி - ஆத்ம திருப்தி அடையும் இதயங்கள் பேறு பெற்றவை.
இந்தப் புனித மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில் இயன்றவரை மஸ்ஜிதுன்னபவிக்கு வந்து, ஜமாஅத்துடன் தொழுது அளப்பெரும் நன்மைகளை அடைகின்றனர் ஹாஜிகள்.மனம் குளிர மஸ்ஜிதுன்னபவியில் தொழுது, மன நிறைவடைந்த மாண்பாளர்கள், இதோ புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றப் புறப்பட்டு விட்டனர்.புறப்பட்டுப் போகின்ற இறுதி நேரத்திலும் கூட மீண்டும் ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித அடக்கத் தலத்தை ஜியாரத் செய்யத் தவறவில்லை. உயிரினும் மேலான உண்மை நபியவர்களுக்கு ஸலாம் உரைத்து, புறப்பட்டு விட்டனர் புனித மக்கா நன்னகர் நோக்கி!


புனிதப் பயணம் தொடரும். இன்ஷா அல்லாஹ்

0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்