Oct 25, 2006

எழுத்துக் கடலில்

">Link எழுத்துக் கடலில் என் பயணம்

எழுத்து' என்னும் பரந்து விரிந்த பெருங்கடலில் பலரும் பயணம் செய்கின்றனர். பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரும் கப்பல்கள் நீலத் திரை கடலை நீந்நி வரும்போது நானும் என் பங்காக ஒரு சின்னஞ் சிறு படகினை மிதக்க விட்டிருக்கிறேன். மாபெரும் கப்பல்கள் மிதக்கும் கடலில் சிறு படகுகளும் கூட தம் பணியை செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கின்றன.

எழுத்துக்கலை என்பது ஓர் அற்புதமான கலை. அதிலும் பத்திரிக்கைத் துறை பல அறிஞர்களை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறது, பல இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறது. இந்த எழுத்துலகில் சாதித்தவர்கள் பலர். சாதித்துக் கொண்டிருப்பவர்கள் அநேகம்.நான் சாதித்தவனும் அல்ல, சாதித்துக் கொண்டிருப்பவனும் அல்ல. சாதிக்கத் துடிப்பவன். எனது எழுத்துப் பசிக்குத் தீணி போட்டவர்களுக்கு நன்றிக் கடனாக இந்தக் கட்டுரை.

அதிகமதிகம் நூல்களைப் படிக்கும் போது நாமும் ஒரு நூல் எழுத வேண்டும் என்னும் ஆவல் பிறந்தது. அதிகமதிகம் பத்திரிக்கைகள் படிக்கும் போது இந்தப் பத்திரிக்கைகளில் நமது பெயரும் வராதா? என்று ஏங்கியது உண்டு.பத்திரிக்கைகளில் நமது பெயர் வரும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. நமது பெயரில் உள்ள யாரோ ஒருவர் எழுதியிருந்தால் அதுவே நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அது நாமாகவே இருந்தால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற சாதாரண மான(ண)வர்களுக்கு இது சந்தோஷமானது.

1977 ஆம் ஆண்டு நான் பி.யு.சி படித்துக் கொண்டிருந்த போது, தான் எனக்கும் எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது திருச்சியிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த முபாரக் என்னும் வார இதழுக்கு 'ரமளானின் சிறப்பு' என்னும் தலைப்பில் சிறு கட்டுரை ஒன்று எழுதி அனுப்பினேன். அது ரமளான் மாதம் என்பதால் அந்த ரமளான் முதல் வாரத்தில் எனது கட்டுரையை அந்த வார இதழ் பிரசுரித்து என்னை கௌரவித்தது. இது தான் பத்திரிக்கையில் நான் எழுதிய முதல் கட்டுரை.அதே முபாரக் வார இதழில் அடுத்தடுத்து 'ஆஷூரா தினத்தின் சிறப்பு' என்னும் கட்டுரையும் 'உலகில் மிகப் பெரியவர்கள்' என்னும் கட்டுரையும் எழுதினேன்.

1978 ஆம் ஆண்டு உமராபாத்தில் பயின்றுக் கொண்டிருந்தபோது, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு வெளியிடும் omiet journal மாத இதழின் தமிழ்ப் பிரிவு எனது 'அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி' என்னும் எனது நீண்ட கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அதற்குப் பரிசும் வழங்கியது.

உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் பயின்றுக் கொண்டிருந்த போது தமிழ் மாணவர் அமைப்பின் சார்பாக முதன் முதலாக 'அந்நஸீம்' (தென்றல்) என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிக்கை வெளியிட்டோம். இந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிடும் முழுப் பொறுப்பும் எனக்குத் தரப்பட்டிருந்தது. நானும் ஒரு பத்திரிக்கையாளன் ஆக வேண்டும் என்னும் எனது தீராத தாகத்தை இதன் மூலம் தணித்துக் கொண்டேன்..

கல்லூரியில் அவ்வப்போது நடைபெறும் மாபெரும் விழாக்கள் பற்றிய செய்திகளை, அப்போது சென்னையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த அறமுரசு நாளிதழுக்கு எழுதி அனுப்புவேன். நான் அனுப்பிவைக்கும் செய்திகளை உடனுக்குடன் அந்த நாளிதழ் வெளியிடும்

இது வரை நான் பத்திரிக்கைளுக்கு அனுப்பிய கட்டுரைகள் செய்திகள் அனைத்தும் எனது இயற் பெயரிலேயே எழுதி வந்தேன். 1980 ஆம் ஆண்டு குமுதம் வார இதழுக்கு 'திருப்பந்துருத்தி மஸ்தூக்கா' என்ற புணைப் பெயரில் ஒரு துணுக்கு அனுப்பினேன். சவூதி அரேபியாவில் தொழுகைக்கு அழைப்பதற்கென்றே ஒரு தனித் துறை இருப்பதைப் பற்றி நான் எழுதிய அந்தத் துணுக்குச் செய்தியை குமுதம் வார இதழ் வெளியிட்டிருந்தது. புணைப் பெயரில் எழுதிய முதல் ஆக்கம் இது தான்

1981 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து வெளியிடப்பட்ட 'புரட்சி மின்னல்' மாத இதழ் எனது எழுத்துப் பசிக்குச் சரியாகத் தீணி போட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மாதந்தோறும் பல் வேறு கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள், எழுதுவேன். எழுத்துத் துறையில் என்னை ஊக்கப்படுத்திய பெருமை 'புரட்சி மின்னல்' மாத இதழையே சாரும். தமிழகத்தில் ஏகத்துவக் கொள்கை வேரூன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்த புரட்சி மின்னல் இதழ் தான் பின்னர் அல் முபீன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஏகத்துவக் கொள்கையை ஓங்கி ஒலித்தது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.

தமிழ் முஸ்லிம் பத்திரிக்கை உலகில் மிகச் சிறப்பாக இடம் பிடித்த மாதம் இருமுறை இதழான சமரசம் இதழில் எனது கட்டுரைகள் இடம் பெற்று சிறந்த வரவேற்பைப் பெற்றன.

1984 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல ஆண்டுகள் மறுமலர்ச்சி வார இதழில் அடிக்கடி கட்டுரைகள் எழுதினேன். ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பற்றிய செய்திகளையும், மற்றும் சவூதியில் வெளிவரும் பல்வேறு அரபி ஆங்கில நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளையும் தமிழில் மொழி பெயர்த்து அனுப்பிவைப்பேன். 'சவூதியிலிருந்து எமது சிறப்பு நிருபர்' என்று போட்டு எனது செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து மறுமலர்ச்சி வார இதழ் என்னை கௌரவித்தது.

மாத்யமம் மலையாள நாளிதழ் பிரபோதனம் மலையாள மாத இதழ் ஆகியவற்றில் வெளிவரும் மிக முக்கியமான பயனுள்ள கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து மறுமலர்ச்சி வார இதழுக்கு அனுப்பி வைப்பேன். எனது கட்டுரைகளை எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிடும் மறுமலர்ச்சி வார இதழ் அந்தக் காலகட்டத்தில் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரே முஸ்லிம் வார இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முஸ்லிம் மத்தியில் காணப்படும் மூடப் பழக்கங்களைக் கண்டித்து 'கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் போகட்டும்' என்னும் தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிட்டேன். 1986 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற முதல் 'அந்நஜாத்' மாநாட்டில் இது விநியோகிக்கப்பட்டு பரவலாக தமிழகம் முழுவதும் சென்றடைந்தது. கூத்தாநல்லூர் இஸ்லாமியப் பிரச்சார அமைப்பும் மற்றும் சில ஊர்களில் இயங்கும் அமைப்புகளும் இதனை மறுபிரசுரம் செய்தன.

இறையருளால் புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் பெரும் பாக்கியம் கிடைக்கப் பெற்று புனித ஹஜ் செய்து வந்த இனிய அனுபவங்களை 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' என்னும் தலைப்பில் 1987 ஆம் ஆண்டு ஒரு பயணக் கட்டுரை நூலாக எழுதி வெளியிட்டேன். நான் எழுதிய முதல் நூல் இது தான்.எனது திருமணத்தின் போது இது விநியோகிக்கப்பட்டது. எனது வாழ்க்கையில் நானும் ஒரு நூலாசிரியர் ஆக வேண்டும் என்னும் எனது கனவு இறையருளால் நிறைவேறியது. அல்ஹம்து லில்லாஹ்.

பிரசித்தி பெற்ற உணர்வு வார இதழிலும் கட்டுரைகள் புனித ஹஜ் பற்றிய செய்தித் தொகுப்புகள் அடிக்கடி எழுதியிருக்கிறேன். ஆசிரியர்க் குழு தவிர மற்றவர்கள் எழுதும் எதையும் பிரசுரிக்காத உணர்வு இதழ் கூட சில இதழ்களில் எமது ஆக்கங்களைப் பிரசுரித்திருக்கின்றது.

மதுரையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் டைம்ஸ் மாத இதழ் மார்க்கம் சார்ந்த எமது பல்வேறு கட்டுரைகளுக்கு முக்கித்துவம் தந்து பிரசுரித்துள்ளது.

சென்னையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த சாந்தி வளாகம் மாத இதழ் தொடர்ந்து மாதந்தோறும் எமது கட்டுரைகளைப் பிரசுரித்து எமது சொந்த ஊர்க்காரர்கள் பலரும் எமது ஆக்கங்களைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி மகிமைப் படுத்தியதை மறக்க முடியாது.

ஏற்கனவே எழுதிய 'கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் மண்மூடிப் போகட்டும்' என்னும் பிரசுரத்தைப் பார்வையிட்ட பல்வேறு அன்பர்கள் அதை இன்னும் விரிவு படுத்தி தனியொரு நூலாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க 2002 ஆம் ஆண்டு அதே தலைப்பில் 80 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப் பட்டது. தமிழகத்தின் பல ஊர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்நூல் இரண்டே மாதங்களில் 2000 பிரதிகள் தீர்ந்து போயின.

2003 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பும், 2004 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பும் வெளிவந்து சாதனை படைத்தது.மிகக் குறுகிய காலத்தில் 3 பதிப்புகள் கண்ட இந்நூல் இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் 4 ஆம் பதிப்பு வெளிவர உள்ளது. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாகட்டும்.

1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எமது முதல் நூல் 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' புனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனையாக 2004 ஆம் ஆண்டு சில மாற்றங்களுடனும் புதுப் பொலிவுடனும் வெளியிடப்பட்டது.இந்நூல் புனித ஹஜ்ஜின் சிறந்த வழிகாட்டியாக பல்வேறு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு இணைய தள உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. புகழும் பெருமையும் இறைவனுக்கே சொந்தம்.

ஊடகத் துறையில் இப்போது உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் இணைய தளம் மூலம் எமது ஆக்கங்களை உலகத் தமிழர்களுக்கு மத்தியில் கொண்டு சேர்த்த பெருமை இதுதான் இஸ்லாம் டாட் கம் இணைய தளத்தையே சாரும். இஸ்லாமிய தமிழ் இணைய தளங்களிலேயே உலகெங்கும் மிகவும் பிரபல்யமான இந்த இணைய தளம் எமது ஆக்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு எம்மை கௌரவிப்பதை இங்கு நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும்.

எமது ஆக்கங்கள் இடம் பெறும் பிற இணைய தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளின்முகவரிகள்

www.idhuthanislam.com
www.tamilmuslim.com
www.otrumai.com
www.abumuhai.blogspot.com
www.amtc-france.blogspot.com




Oct 8, 2006

ஆக்கூர் ஓரியண்டல்

;
">Link எல்லையில்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும். ஸலவாத்தும் ஸலாமும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் அடியொற்றி வாழ்ந்த நல்லோர் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக ஆமீன்.
உலகில் வாழ்ந்த பல்வேறு அறிஞர்கள் தங்கள் சுய சரிதையை எழுதியிருக்கின்றனர். அவர்கள் தம் இறுதிக் காலத்தில் தங்கள் மலரும் நினைவுகளை மனதில் அசை போட்டவர்களாக, தங்கள் வாழ்வில் தாங்கள் சந்தித்த இன்ப துன்பங்களையும், தாங்கள் பெற்ற படிப்பினைகளையும், எழுத்தில் வடித்திருக்கின்றனர். அடுத்தத் தலைமுறையினருக்கு அதில் பல்வேறு படிப்பினைகள் இருக்கின்றன. அது போல் நானும் எனது சுய சரிதையை எழுதியிருக்கிறேன். அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா

எனது சுய சரிதையிலிருந்து ஒரு பகுதி

பிறந்த மண்ணைப் பிரிந்து...

எனது வெளி உலக வாழ்க்கை முதன் முதலில் ஆக்கூரில் ஆரம்பமாகின்றது. 1970 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல் வாரம் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.
ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் 5 ஆம் வகுப்பு வரை என்னுடன் பயின்ற நண்பர்களின் வாழ்க்கை அதே சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவர்களின் உயர் நிலைப்பள்ளியின் காலகட்டத்திலும் கழிந்திருக்கலாம். ஆனால் அது போல் சுதந்திரமும் மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்க வில்லை என்பது தான் உண்மை.

அந்தப் பள்ளிக்கூட நாட்களில் அப்படி ஒரு சுதந்திரம் எனக்குக் கிடைக்க வில்லை என்று நான் ஏங்கியிருக்கிறேன். ஆனால் கட்டுப்பாடான அந்த ஆக்கூர் வாழ்க்கை எனக்கு அறிவைத் தந்தது, அனுபவங்களைத் தந்தது, அநேக நண்பர்களைத் தந்தது, மனப் பக்குவத்தைத் தந்தது, மார்க்க ஞானத்தைத் தந்தது. இவையெல்லாம் எனது ஆரம்பப் பள்ளித் தோழர்கள் அனைவருக்கும் கிடைத்ததா என்பது எனக்குத் தெரியாது.

மார்க்க விஷயங்களில் ஓரளவேனும் ஞானம் பெறுவதற்கு அந்த ஆக்கூர் வாழ்க்கை தான் எனக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. தமிழில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதும் அளவுக்கு எனக்கு தமிழ் அறிவை ஊட்டியதும், நான் ஒரு எழுத்தாளன் ஆவதற்கு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதும் இந்த ஆக்கூர் வாழ்க்கை தான் என்றால் அது மிகையாகாது.

ஆக்கூரில் பயின்ற 6 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அங்கு பயின்றுக் கொண்டிருந்த காலத்தில் அது ஒரு சிறை வாழ்க்கையாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் அது ஒரு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். மறுபடியும் அந்த வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டோமா? என்று தான் ஏக்கம் வருகின்றது.

மிகவும் கண்டிப்பு நிறைந்த நிர்வாகம், கடுமையான சட்டதிட்டங்கள், மனிதாபிமானம் கொண்ட ஆசிரியர்கள், சிறந்த கல்வி, சிறப்பான நல்லொழுக்கப் பயிற்சி இவற்றின் ஒட்டு மொத்தக் கலவை தான் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி. 'கற்க வாரீர்! சேவை செய்யத் திரும்புவீர்!' என்னும் அற்புதக் கொள்கையை குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஓர் அற்புத நிறுவனம்.

ஆக்கூர் ஓரியண்டலைப் பற்றி நினைத்துப் பார்க்கும் மாணவர் எவருக்கும் மறக்க முடியாத ஒரு ஆசிரியர் என்றால் சங்கைக் குரிய இக்பால் சார் அவர்கள் தான். மிகச் சில நாட்கள் மட்டுமே இருந்து விட்டுச் சென்ற மாணவனும் நினைவில் வைத்திருக்கும் ஒரு ஆசிரியர் உண்டென்றால் அது இந்த நல்லாசிரியரைத் தான். எங்கள் மீது பரிவும் பாசமும் காட்டிய, நற்கல்வியையும் நல்லொழுக்கத்தையும் போதித்த நல்லாசிரியர் பலர் இருந்தனர். ஒவ்வொருவரைப் பற்றியும் ஓராயிரம் வரிகள் எழுதலாம். ஆனாலும் இக்பால் சார் அவர்களைப் பற்றிக் குறிப்பிடாவிட்டால் ஓரியண்டல் பள்ளி வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிலிருந்தும் நண்பர்கள் கிடைத்தார்கள். 6 ஆம் வகுப்பு என்னும் வண்டி புறப்படும் போது பயணத்தைத் தொடங்கியவர்கள் 90 பேர். வழி நெடுகிலும் பல ஊர்களில் (வகுப்புகளில்) சிலர் தம் பயணத்தை நிறுத்திக் கொண்டனர். சிலர் புதிதாக வண்டியில் ஏறிக் கொண்டனர். போக வேண்டிய ஊராகிய பள்ளி இறுதி வகுப்பை அடையும் போது முதலில் ஏறிய 90 பேர்களில் வெறும் 16 பேர் மட்டுமே எஞ்சினர். இடையில் ஏறிக் கொண்ட 8 பேரையும் சேர்த்து 24 பேர் மட்டுமே 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினோம். அனைவருமே வெற்றி அடைந்து நூறு சதவிகித தேர்ச்சியைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தோம்.

மற்ற மாணவர்கள் இடையில் எங்களை விட்டுச் சென்றதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அதிகமான கட்டுப் பாடுகள், கடுமையான தண்டனை ஆகிய காரணங்கள் இருந்தாலும், மாணவர்கள் சீர் கெட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக இவற்றைக் குறை கூற முடியாது. ஆனால் இதையெல்லாம் விட முக்கிய காரணம் உணவு என்பதில் சந்தேகமில்லை.

ஆக்கூர் ஓரியண்டலின் மகிமையைப் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதாது. அங்கு நாங்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் குறிப்பிட்டாக வேண்டும். குறை சொல்வது எனது நோக்கமல்ல வெனினும் எனது வாழ்க்கையில் நான் பட்ட பாடுகள், சந்தித்த இன்ப துன்பங்கள் அனைத்தையும் எழுத்தில் வடிக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதுகிறேன்.

பொதுவாக 10 வயது முதல் 20 வயது வரை உள்ள பருவம் தான் நன்றாக சாப்பிடவேண்டிய பருவம். ஆனால் அந்தக் கால கட்டத்தில் 6 ஆண்டுகள் வயிற்றுக்குப் போதுமான உணவோ, சத்துள்ள உணவோ எனக்குக் கிடைக்கவில்லை.

ஆரம்பக் காலத்தில் காலை உணவாகக் கஞ்சி கொடுப்பார்கள். அதுவாவது கொஞ்சம் வயிறு நிரம்பும் அளவுக்கு இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு கஞ்சியை நிறுத்தி விட்டு பழைய சோறு (நீராகாரம்) கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு அகப்பை சோறும் ஒரு அகப்பை தண்ணீரும் கிடைக்கும். தொட்டுக் கொள்ள பொட்டுக் கடலை சட்னி தருவார்கள்.தட்டில் நீராகாரத்தை வாங்கிக் கொண்டு நடந்தபடியே குடித்துக் கொண்டு போனால், சட்னி கொடுக்கும் இடம் வரும் போது தட்டில் சோறு தீர்ந்து விடும். சட்னியை கையில் வாங்கி, ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வருவது போல், 'நான் அப்படியே சாப்பிடுவேனே' என்று அப்படியே சாப்பிட்டு விட வேண்டியது தான். 'சட்னி இங்கே சோறு எங்கே?' என்றெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க முடியாது.

மதிய உணவு சாப்பிடும்போது எந்த மாணவனுக்கும் வீட்டு நினைவு வராமல் இருக்காது. அரை வயிற்றுக்குத் தான் உணவு. 'அரை வயிறு உணவு கால் வயிறு தண்ணீர் கால் வயிறு காலி, இது தான் ஆரோக்கியம்' என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதைச் சரியாகக் கடைப் பிடித்தது நாங்கள் தான்.

கட்டி கட்டியாக சோற்றை வெட்டி எடுத்து வைப்பார் எங்கள் சமையல் காரர் கலிய மூர்த்தி. கட்டியை உடைத்துப் பார்த்தால் உள்ளே வேகாத அரிசி இருக்கும். இப்படி ஒரு நூதனமான முறையில் அவரைத் தவிர வேறு யாருக்கும் சமைக்கத் தெரியாது.உலையில் போடுவதற்கு முன் அரிசியல் கல்லைப் பொறுக்க அவருக்கு நேரம் இருக்காது. சாப்பிடும் போது நாங்கள் தான் சாப்பாட்டில் இருக்கும் கல்லை மிகவும் லாவகமாக நாக்கால் எடுத்து விடுவோம். ஆக்கூர் மாணவர்களுக்கு இந்தக் கலை அத்துப்படி.

வருடம் முழுவதும் பருப்புக் குழம்பு தான். அந்த கலர் தண்ணீருக்கு பருப்புக் குழம்பு என்று நாங்கள் தான் பெயர் வைத்துக் கொண்டோம். விஞ்ஞானப் பாடத்தில் படித்த 'வடித்தெடுத்தல்' முறையை எங்கள் விடுதி பருப்புக் குழம்பில் சோதனை செய்து பார்த்தால் இறுதியில் எதுவும் மிஞ்சாது.

தட்டில் சோற்றை வாங்கிக் கொண்டு அடுத்த கவுண்டருக்குச் சென்றால் அங்கே குழம்பு என்று நாங்கள் பெயர் வைத்த கலர் தண்ணீர் ஊற்றுவார்கள். நமக்கு ஒரு துண்டு உருளைக் கிழங்கு விழாதா? என்று துஆச் செய்துக் கொண்டே தட்டை நீட்டினால், துஆ கபூலானவர்களின் தட்டில் ஒரு துண்டு உருளைக் கிழங்கு வந்து விழும். ஒரு துண்டு உருளைக் கிழங்கு கிடைக்கப் பெற்றவன் பெரிய அதிர்ஷ்டசாலி. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவன் நடக்க, பின்னால் வருபவர்களுக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.

அது சரி, தொட்டுக் கொள்ள என்ன என்று தானே கேட்கிறீர்கள்? பக்கத்தில் உள்ளவரைத் தான் தொட்டுக் கொள்ள வேண்டும். பொரியல், கூட்டு என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம். நாங்கள் பார்த்தது கூடக் கிடையாது. கறி, மீன் என்பதெல்லாம் கனவில் கூடக் கண்டது கிடையாது.

இரவு சாப்பாட்டுக்கு வருடம் முழுவதும் ரசம் தான். எங்கள் விடுதி ரசம் வெள்ளையாக இருக்கும். அது தேங்காய்ப்பால் ரசம் என்று எங்கள் சமையல் காரர் சொல்வார். ஒரு நாள் மாலை நேரத்தில் சோறு சமைக்க அரிசி களையும் போது சமையல்காரர் தன் உதவி ஆளிடம் 'தேங்காய்ப்பால் எடுத்து வைக்க ஒரு பாத்திரம் கொண்டு வா' என்று சொன்ன போது தான், தேங்காய்ப்பால் எதிலிருந்து எடுக்கப்படுகிறது என்னும் உண்மையைப் புரிந்துக் கொண்டோம்.

பல்வேறு சுக துக்கங்களுடன் ஆக்கூர் வாழ்க்கை மெது வாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இடையிடையே மகிழ்ச்சியான நாட்கள் என்றால் ஆக்கூரின் பணக்கார வீடுகளில் நடக்கும் திருமணம் நடக்கும் நாட்கள் தான். பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருத்தளிப்பார்கள். மிகப் பிரமாதமான 5 கறிச் சோறு. இன்றும் அதன் ருசி மறக்கவில்லை. வாழ்க அந்தப் பேருள்ளங்கள்.

இறந்தவர்களின் வீடுகளில் குர்ஆன் மௌலூது ஓதக் கூப்பிடுவார்கள். நன்றாக ஓதும் சில மாணவர்களுக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும். வகைவகையான திண்பண்டங்களும் வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். இடையிடையே கிடைக்கும் இது போன்ற விருந்துகள் தான் அந்தப் பாலைவன வாழ்க்கையில் வசந்தமாக வீசும்

ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் எங்களுக்குக் கொண்டாட்டம் தான். தினமும் இரவில் பெரியப் பள்ளிவாசலிலிருந்து அனைவருக்கும் நெய்ச்சோறு வந்து விடும். களி போன்ற சோற்றுக்கும் கண்ணீரை வரவழைக்கும் ரசத்துக்கும் 12 நாட்கள் விடுதலை. நபி (ஸல்) அவர்களுக்காக வருடமெல்லாம் மௌலூது ஓத மாட்டார்களா? எனத் தோன்றும். இது மார்க்கத்திலேயே இல்லாத செயல் என்றும் மாபெரும் பாவம் என்றும் அப்போது தெரியாதல்லவா?

ஆறு ஆண்டுக் காலம் உணவுக்காக நாங்கள் பட்ட பாட்டை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இதையெல்லாம் எழுதியிருக்கிறேன தவிற எங்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல ஆறு ஆண்டுகள் இலவசமாக சோறு போட்டு வளர்த்த ஒரு நிறுவனத்தைக் குறை கூறுவது எனது நோக்கமல்ல.

ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு உணவளிக்கவே பல பெற்றோர்கள் படாத பாடு படும்போது, கிட்டதட்ட 400க்கும் அதிகமான மாணவர்களுக்கு தினமும் மூன்று வேளை காலமெல்லாம் சோறு போடுவதற்கு அந்த நிர்வாகம் தான் என்ன செய்யும். அவர்களைச் சொல்லிக் குறற்மில்லை.

இப்போதாவது மதிய உணவை அரசாங்கம் தருகிறது. அப்போது அதுவும் இல்லை. முழுக்க முழுக்க நிர்வாகம் தான் பொறுப்பு. ஒரு நாள் கூட எங்களைப் பட்டினி போடாமல் ஒவ்வொரு வேளையும் உணவளிக்க அதன் நிர்வாகிகள் என்ன பாடுபட்டிருப்பர்கள்! ஓரியண்டலின் தாளாளர்களாக தன்னலம் கருதாது பாடுபட்ட கண்ணியத்திற்குரிய ஜனாப், ஓஜே முஹம்மது காசிம், மற்றும் சங்கைக்குரிய ஜனாப் அப்துல் ஹமீத் போன்றவர்களின் சேவைக்கு அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுமையில் நற்கூலி தருவானாக என்று அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக துஆச் செய்வார்கள்.

சமுதாயத்தின் பெரும் செல்வந்தர்கள் எவரேனும் இக்கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் தயவு செய்து இது போன்ற தரமான மார்க்கக் கல்வி ஸ்தாபனங்களுக்கு உங்கள் ஜகாத் ஸதகா போன்ற தருமங்களைச் செய்யுங்கள். ஏழை மாணவர்களின் துஆ எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும்.'

ஆக்கூரில் ஆறு வருடங்கள் பயின்ற மாணவன் உலகின் எந்தத் தீவுக்குப் போனாலும் பிழைத்துக் கொள்வான்' என்று தலைமை ஆசிரியர் முருகேசன் அய்யா அவர்கள் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. அதன் பிறகு சென்ற எந்த இடத்திலும் நாங்கள் உணவை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. எங்களை இப்படி ஒரு பக்குவத்துக்கு ஆளாக்கியது ஆக்கூர் வாழ்க்கை.

சாப்பிடுவதற்காக வாழ்பவர்கள் இந்த உணவை காரணம் காட்டி வெளியேறி விட்டனர். வாழ்வதற்காக சாப்பிடும் கொள்கையைக் கொண்டவர்கள் இந்த உணவுப் பிரச்சினையை ஒரு பொருட்டாக நினைக்காமல் தாங்கள் வந்த நோக்கமாகிய கல்வியைக் கற்பதில் கவனம் செலுத்தினார்கள். ஏனெனில் அவ்வளவு தரமாக கல்வி அந்த ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியில் எங்களுக்குக் கிடைத்தது. ஆக்கூரில் கற்று வெளியேறியவர்கள் பெரும் பாலும் நல்ல நிலையியே இருக்கின்றனர் என்பதைப் பிற்காலத்தில் காண நேர்ந்தது.

சமீபத்தில் சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துக் கொள்ள ஆக்கூர் சென்றிருந்தேன். இப்போதைய தாளாளர் சங்கைக்குரிய ஜனாப் அல்ஹாஜ் முஹம்மது இக்பால் அவர்களின் நிர்வாகத்தின கீழ் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. மிகவும் தரமான உணவு. சகல வசதிகளுடன் கூடிய விடுதி. சிறப்பான கவனிப்பு. பல்வேறு புதிய கட்டடங்கள். பள்ளியின் முன்னேற்றத்தைக் கண்டு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

'மன்பவுல் பயான் மாணவர் மன்றம்' என்ற பெயரில் இயங்கி வந்த மன்றத்தின் வாரந்திரக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவுகளில் நடக்கும். ஒவ்வொரு வாரமும் பேச வேண்டிய மாணவர்களின் பட்டியல் அறிவிப்புப் பலகையில் எழுதி ஒட்டப்படும். பல மாணவர்கள் பெயர் வரும் போது லீவு போட்டு விடுவார்கள். 8 ஆம் வகுப்பு வரை நானும் அப்படித்தான்.

9 ஆம் வகுப்பு படிக்கும் போது, முதல் வாரமே மன்றத் தலைவரிடம் சென்று நானாகவே என் பெயரைப் போடும்படிச் சொன்னேன். 'நபிகள் நாயகம்' என்ற தலைப்பைத் தேர்வு செய்திருந்தேன். பேச வேண்டிய நாள் வந்தது. என் பெயர் கூப்பிடப்பட்டது. மேடையில் ஏறினேன். கை கால்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன. நாக்கு உலர்ந்து போனது. ஒரு வாறு சமாளித்துக் கொண்டு என் உரையைத் தொடங்கினேன்.

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். அவர்களது தாயார் பெயர் ஆமினா. தந்தை பெயர் அப்துல்லா. 25 ஆம் வயதில் திருமணம் செய்தார்கள். 40 ஆம் வயதில் நபிப்பட்டம் பெற்றார்கள். 53 ஆம் வயதில் ஹிஜ்ரத் சென்றார்கள். 63 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன்'

என்று சொல்லி விட்டு ஓடிப் போய் உட்கார்ந்துக் கொண்டேன்.எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்தார்கள். ஒவ்வொரு மாணவரும் பேசிய பிறகு தலைவர் விமரிசனம் செய்வது வழக்கம். நான் பேசிய பின்னர் தலைவர் எழுந்தார், அவர் செய்த விமரிசனம் அற்புதமானது. 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பலர் பேச நான் கேட்டிருக்கிறேன், ஆனால் இதைவிடச் சுருக்கமாக வேறு யாரும் பேச முடியாது' விமரிசனத்தைக் கேட்டு எனக்கே சிரிப்பு வந்து விட்டது. அன்று முதல் ஒரு வைராக்கியம் பிறந்தது. நானும் ஒரு பேச்சாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

வாரம் தவறாமல் பெயர் கொடுத்து பேசினேன். அதன் பின்னர் 3 ஆண்டுகள் தொடர்ந்து பேசினேன். நான் எப்போது பேசுவேன் என்று சக மாணவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு என் பேச்சின் தரம் உயர்ந்தது. இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் பேசத் தொடங்கினேன். பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றேன்.

பள்ளிக்கூடம் விடுமுறை விடும் போது ஊருக்கு வருவதற்கு ஆக்கூரை விட்டு பஸ் புறப்படும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். கனத்த இதயம் இலேசானது போல் தோன்றும். அது போல் விடுமுறை முடிந்து மறுபடியும் ஆக்கூர் திரும்பும் போது பஸ் ஆக்கூரை நெருங்க நெருங்க உலகத்து வேதனையும் ஒன்றாக மனதில் வந்து சேரும். இது வெல்லாம் அங்கு படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தான்.

ஆக்கூரில் நாங்கள் கற்ற கல்வியால் அளப்பெரும் நன்மைகளை பிற்காலத்தில அடையப் பெற்றோம். உயர் கல்வி கற்க அடுத்தடுத்து பல்வேறு கல்வி நிலையங்களுக்கு நாங்கள் சென்ற போது, மற்ற கல்வி நிறுவனங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களை விட உயர்ந்த அந்தஸ்தில் மதிக்கப்பட்டோம்.ஆக்கூர் ஓரியண்டலில் கற்ற கல்வியின் மகிமையை அப்போது தான் நாங்கள் புரிந்துக் கொண்டோம். நாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நொடிப் பொழுதில் எங்களுக்கு மறந்து போனது.

உலகக் கல்வியையும், மார்;க்கக் கல்வியையும் ஒரு சேரப் பயிலும் அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது போல் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. 11 ஆம் வகுப்பை முடித்து நாங்கள் வெளியேறிய போது கிட்டத்தட்ட அரபிக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற ஒரு மௌலவியின் தரத்தில் பாதியாவது எங்களிடம் இருந்தது என்று சொல்லாம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் வந்து ஆக்கூரில் சங்கமித்த நாங்கள், ஒருவருக் கொருவர் உறுதுணையாய், உற்ற நண்பர்களாய், அண்ணன் தம்பிகளாய், காலம் கழித்தோம். நட்பின் உண்மையான பொருள் புரிந்து நண்பர்கனைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் இந்த வயதில் தானே வரும்.எத்தனையோ நண்பர்களுடன் பழகும் வாய்;ப்பு கிடைத்தது. அந்த நண்பர்கள் அனைவரைப் பற்றியும் எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. பள்ளி வாழ்க்கை முடிந்த பின்னர் அவரவரும் தம் எதிர் காலக் கனவுகளுடன் வாழ்க்கை எனும் வானத்தில் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விட்டனர்.

சிலர் மனதில் நின்றனர். சிலர் மறந்து போயினர். சிலரைப் பார்த்தால் ஞாபகம் வரும், சிலரின் பெயர்கள் மட்டும் நினைவில் நின்றன, நிகழ்வுகள் மறந்து போயின. பிரிந்து சென்று 30 ஆண்டுகள் ஆனபின்பும் இன்றளவும் தொடர்;ந்து தொடர்பு வைத்திருக்கும் அற்புத நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

என் வாழ்க்கையில் முதன் முதல் நட்பு என்ற வார்த்தைக்குப் பொருள் சொன்ன வித்தகன், இன்றளவும் என்னால் மறக்க முடியாத நண்பன்,என்றென்றும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ஏற்காட்டுச் செம்மல் எஸ்ஸென்கே என்று நான் அன்புடன் அழைக்கும் காஜா மைதீன்,வகுப்பில் தொடர்ந்து முதல் ரேங்கைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்த, தற்சமயம் பிரான்ஸில் குடும்பத்துடன் வசிக்கும் கோட்டைக்குப்பம் நூஹ், மறக்காமல் அடிக்கடி கடிதம் எழுதும் சேலம் உஸ்மான், ஜமால் முஹம்மது கல்லூரில் பெருமைப் படத்தக்க விதத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் நல்லொழுக்கத்திற்குப் பேர் போன முஹ்யித்தீன் அப்துல் காதர், எழுத்துத் துறையில் எனக்கு ஆர்;வமூட்டிய கோட்டைக்குப்பம் அக்பர் அலி, ரியாதில் ஒரு பெரும் நிறுவனத்தில் உயர்ந்த பதவி வகித்துக் கொண்டு இன்றளவும் என் மீது உயர்வான அபிப்பிராயம் வைத்திருக்கும் திண்டுக்கல் சுகர்னோ என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீத், குடும்பத்தில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொண்டு விட்ட அப்துல் ஹாதி, பள்ளப்பட்டி உபைதுர்ரஹ்மான்.உயர்ந்த நிலையை அடைந்தும் உள்ளத்தால் மறக்காத முத்துப் பேட்டை ஷாஹ-_ல் ஹமீத், மாபெரும் தொழில் அதிபராக வளர்;ந்த பின்னும் நட்பை மறக்காத திருமுல்லைவாசல் அலி ஹூஸைன் என இந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.
சம காலத்தில் பயிலாவிட்டாலும் சநதிக்கும் நேரமெல்லாம் தாமும் ஆக்கூரில் பயின்ற இன்ப நினைவுகளை எமக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கும் அன்பு நண்பர் திண்டுக்கல் சேக் அலி போன்றவர்களையும் மறக்க முடியாது.

ஏகப்பட்ட சோகங்களுடனும் இடையிடையே சில சந்தோஷங் களுடனும் ஒரு வாராகப் பள்ளி இறுதி வகுப்பாகிய 11 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாகிவிட்டது. இது தான் இறுதி ஆண்டு எங்கள் படிப்புக்கும் சரி நாங்கள் பட்;ட சிரமங்களுக்கும் சரி. அதிலும் அரசாங்கப் பொதுத் தேர்வல்லவா? வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர் அனைவரும் பாடம் மட்டும் எடுக்க வில்லை. எங்களைப் பிழிந்தும் எடுத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது எங்கள் நன்மைக்குத் தானே என்று இப்போது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அப்போது எங்களுக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு பாட நேரமும் மாற மாற வௌ;வேறு ஆசிரியர்கள் வருவார்கள். வருபவர்கள் அனைவருமே ஒருவருக் கொருவர் சளைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருக்கும் மாணவர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும்.தமிழ் ஆசிரியர் வரும் போது மட்டும் கொஞ்சம் எங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வோம். அந்த வருடம் எங்கள் தமிழாசிரியர் சிவசங்கரன் அய்யா அவர்கள் டாக்டர் பட்டம் பெற சென்று விட்டதால் புதிதாக ஆபிரகாம் லிங்கன் அய்யா அவர்கள் வந்தார்கள். என்னமோ தெரிய வில்லை தமிழாசிரியர் அனைவருமே மென்மையாகத் தான் இருப்பார்களோ! இவரும் எங்களை அன்புடன் நடத்தினார். தமிழ் வகுப்பைத் தவிர மற்ற வகுப்புகள் அனைத்தும் போர்க்களத்தைத் தான் நினைவு படுத்தும்.

அந்த ஒரு வருடம் நாங்கள் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னர் பொதுத் தேர்வு வரும் வரை நாங்கள் நிம்மதியாக உண்டதும் இல்லை, உறங்கியதும் இல்லை. இரவும் பகலும் படித்தோம். எதிர் காலத்தை நினைத்துப் படித்தோம். எங்களைக் கசக்கிப் பிழிந்த ஆசிரியர்கள் மீது எங்களுக்கு கோபம் வரவில்லை. நாங்கள் நல்ல மதிப்பெண் பெற்று எங்கள் எதிர் காலம் சிறப்பாக அமைய எல்லா வகையிலும் பாடுபட்ட அந்த ஆசான்களை இன்றளவும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

ஒரு வழியாக பொதுத் தேர்வு எழுதி முடித்து நிம்மதிப் பெரு மூச்சு விட்டோம். நாங்கள் பட்ட சிரமங்களிலிருந்தும், ஆறு ஆண்டுக் காலம் உடலாலும் உள்ளத்தாலும் நாங்கள் பட்ட வேதனை களிலிருந்தும், விடுதலைக் கிடைத்து விட்டது. அன்றை தினம் நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போல் ஒரு மகிழ்ச்சயை அது வரை எங்கள் வாழ் நாளில் நாங்கள் அனுபவித்ததே கிடையாது.

சிரமங்களிலிருந்து விடுதலைப் பெற்ற மகிழ்ச்சி ஒரு புறம் என்றால் நண்பர்கள் அனைவரும் பிரியப் போகிறோம் என்னும் வேதனை மறுபுறம். ஆறு ஆண்டுக் காலம் ஒன்றாக உண்டோம், உறங்கினோம், கூடிக் களித்தோம், சுக துக்கங்களைப் பகிர்ந்துக் கொண்டோம், இன்று இதோ இன்னும் சிறிது நேரத்தில் பிரியப் போகிறோம். இனி எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பறந்து செல்கின்றோம்- நாமே
பிரிந்து செல்கின்றோம்
இவை எங்களுக்காகவே எழுதப்பட்;ட வரிகளோ!

பிரியா விடை பெற்றோம். ஒருவரையொருவர் ஆரத்தழுவியபடி அழுதோம். அவ்வப்போது ஏற்பட்ட மனக்கசப்புகளுக்காக மன்னிப்புக் கேட்டோம். மாலைக் கதிரவன் மறைந்துக் கொண்டிருக்கிறான். எவரும் புறப்பட்டதாகத் தெரியவில்லை. எங்களுக்கு அறிவமுதூட்டிய அன்னையைப் போன்ற எங்கள் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியை விட்டு, நாங்கள் ஓடி விளையாடிய திடலை விட்டு, உட்கார்ந்து படித்த இடத்தை விட்டு, உறங்கிய அறையை விட்டு, தொழுத பள்ளியை விட்டு, பேசப்பழகிய மாணவர் மன்றத்தை விட்டு, அறிவுக் குருடர்களாக வந்த எங்களின் அகக் கண்களைத் திறந்து வைத்த ஆசிரியப் பெருந்தகைகளை விட்டு, ஆயிரமாயிரம் கனவுகளுடன் இதோ புறப்பட்டு விட்டோம்.
கற்க வந்தோம் சேவை செய்யத் திரும்புகிறோம்

அபுல் கலாம் ஆஸாத் கிராமம்
ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி
ஆக்கூர்
என்னும் கண்ணைப் பறிக்கும் அழகிய தோரண வாயில் வளைவு எங்கள் கண்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. எங்கள் இதயத்திலிருந்து அல்ல.
பின் குறிப்பு:1976 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவு வெளியானபோது தேர்வு எழுதிய அனைவருமே வெற்றி அடைந்து நூறு சதவிகித தேர்ச்சி பெற்று எங்கள் பள்ளிக்குப் பெருமை சேர்த்தோம். அல்ஹம்து லில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனுக்கே.









விருப்ப மொழியில் குர்ஆன்