Sep 15, 2006

மரணத்தொடக்கம் 2

மரணத் தொடக்கம் மறுமை வரைக்கும் 2
">Link
மண்ணறை வாழ்க்கை

மரணத்திற்குப் பின் உள்ள மண்ணறை வாழ்க்கை என்பது நமக்கு எந்த வகையிலும் அறிமுகம் இல்லாத ஒன்று. அனுபவித்தவர் எவரும் மீண்டு வந்து சொன்னதில்லை. ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தமக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததை அப்படியே நமக்குச் சொன்னார்கள்.அவரது மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அவர் பேசுவது அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. (திருக்குர்ஆன் 52:3,4)அந்த மண்ணறை வாழ்க்கையைப் பற்றி நாம் சுயமாக எதையும் கற்பனை செய்யமுடியாது. அது கற்பனைகளுக் கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கையைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியவை அனைத்தும் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை என்று நாம் உளப்பூர்வமாக நம்புகிறோம்.அந்த மண்ணறை வாழ்க்கை குறித்து நாம் அறியும் செய்திகள் ஆச்சரியமானதாக இருக்கலாம். இதுவரை கேள்விப்படாதவையாக இருக்கலாம். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தவை என்று ஆதாரப்பூர்வமாக அறியும் போது உண்மை விசுவாசிக்கு இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.கண்ணால் காண்பதை நம்புவது பெரிய விஷயமல்ல. காணாததை நம்புவது தான் பெரிய விஷயம். அப்படி ஐம்புலனுக்கும் அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கை தான் மண்ணறை வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையும்.மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டா? அப்படி ஒரு வாழ்க்கையின் அவசியம் தான் என்ன? கற்பனைக் கெட்டாத ஒரு கருப்புச் சிந்தனை தேவைதானா? இறைவனை ஏற்காத நாத்திகர்கள் மட்டுமின்றி, உண்மையான இறைவனை உணராத ஆத்திகர்களும் கூட இப்படிப் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.இவர்களை நோக்கி இறைவனின் திருமறை இப்படி ஒரு கேள்வியை முன் வைக்கின்றது.உங்களை வீணாகப் படைத்துள்ளோhம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா? (திருக்குர்ஆன் 23:115)
உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை கோடானு கோடி மக்கள் தோன்றினார்கள். இனி உலகம் அழியும் நாள் வரை தோன்றுபவர்கள் எத்தனை கோடிகளோ! இவர்களில் ஏக இறைவனை ஏற்றவரும் உண்டு. ஏற்க மறுத்தவரும் உண்டு. பல்வேறு தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப் போரும் உண்டு. நண்மைகள் செய்து நானிலம் போற்ற நற்பெயர் பெற்று நல்வாழ்க்கை வாழ்ந்தவரும் உண்டு. அநீதி இழைத்து, அநியாயங்கள் புரிந்து, கொள்ளை அடித்து, கொலைகள் செய்து கோரத் தாண்டவம் ஆடியவரும் உண்டு.இவர்கள் அனைவரும் ஒரு நாள் மரணிக்கிறார்கள். இவர்கள் அனைவரையுமே இப்படியே விட்டுவிடுவதா?வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா? (திருக்குர்ஆன் 75:36)இல்லை. இவர்களை இப்படியே வெறுமனே விட்டுவதில் அர்த்தமில்லை. இதில் நியாயமும் இல்லை. நீதிபதிகளுக்கெல்லாம் பெரிய நீதிபதியாகிய இறைவன், ஒவ்வொருவருக்கும் உரிய நீதியை நிச்சயம் வழங்குவான்.எனவே எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும் எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:7,8)

மரணம் ஒரு முடிவல்ல!

தொடக்கம் தான்ஒரு மனிதன் மரணிப்பதோடு எல்லாம் முடிந்து விடும் என்றால் இவ்வுலகிவ் நல்லவர்கள் நல்வாழ்க்கை வாழ்ந்தற்கு என்ன பொருள்? தீயவர்கள் தம் மனம் போன போக்கில் வாழ்ந்ததற்குத் தகுந்த தண்டனையை அனுபவிக்காமல் போனது என்ன நியாயம்?குற்றங்கள் புரிந்தும் கண்டுபிடிக்கப்படாத குற்றவாளிகள், கண்டுபிடிக்கப்பட்டும் தண்டிக்கப் படாத குற்றவாளிகள், தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டும் செல்வத்தாலும் செல்வாக்கினாலும் தப்பித்து வெளியில் வந்த குற்றவாளிகள், ஆகிய இவர்களைத் தண்டிக்க அந்த வல்ல இறைவனால் மட்டுமே முடியும்.இவ்வுலகில் இவர்கள் தப்பித்து விடலாம். ஆனால் மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்க்கையில் இவர்கள் தப்பிக்க முடியாது.ஒரு கொலை செய்தவனுக்கும், குண்டு வீசி பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டவனுக்கும் ஒரே விதமான தண்டனை என்பது எந்த விதத்தில் நியாயம்? மரண தண்டனை கூட ஒரு முறை தானே நிறவேற்ற முடியும். எனவே இவ்வுலகில் வழங்கப் படும் தண்டனைகள் ஒருபோதும் நியாயத் தீர்ப்பாகாது.மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு. அதில் நியாயத்தீர்;ப்பு உண்டு என்பதை உணர்த்த அறிவுள்ள மனிதனுக்கு இதற்கு மேலும் ஆதாரம் தேவையில்லை.

மறுபடியும் எழுப்பப்படுவோம்

மரணித்து மண்ணறையில் புதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பின்னர் மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்புவது எப்படி சாத்தியமாகும்? ஏக இறைவனை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு ஏற்படும் சந்தேகம் இது. இப்படி ஒரு வினாவை இறைவனின் திருமறை எழுப்பி அதற்கு தானே விடையும் அளிக்கிறது.அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். (அவனை) நாம் படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்வன் யார்? என்று கேட்கிறான். 'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்hன். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்.' என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 36: 78,79)நாம் யார்? நமது தாயின் வயிற்றில் கருவாக உருவாவதற்கு முன் என்னவாக இருந்தோம்? எங்கே இருந்தோம்? கண்ணுக்கே புலப்படாத உயிரணு எப்படிக் கருவாக உருவானது? உருவான கருவில் உயிரைப் புகுத்தியவன் யார்? மரபணுவுக்கு மகிமையைத் தந்தது யார்? நாம் பெற்றெடுத்த குழந்தை வளர்ந்து ஆளாகி அதுவும் குழந்தையைப் பெற்றடுக்கின்றதே! இந்த அற்புதங்கள் எவ்விதம் நிகழ்கின்றன?ஆம்! எல்லாம் வல்ல இறைவன் இந்த அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். எதுவுமாக இல்லாமலிருந்த நம்மை மனிதனாக உருவாக்கிய இறைவனுக்கு, நாம் மரணித்து மண்ணறையில் புதைக்கப் பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பின் மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்புவது இயலாத காரியமல்லவே!மனிதனின் இவ்வுலக வாழ்க்கை பிறப்பிலிருந்து துவங்குகிறது. இறப்பில் முடிகிறது. ஆனால் மறுவுலக வாழ்க்கை மனிதனின் இறப்பிலிருந்து தான் தொடங்குகிறது. முடிவே இல்லாத நீண்ட நெடும் நிரந்தர வாழ்க்கையின் முதற்கட்டம் மண்ணறையிலிருந்து தான் தொடங்குகிறது. மனிதன் இறந்தது முதல் மறுபடியும் இறுதித் தீர்ப்பு நாளில் எழுப்பபடும் வரையுள்ள வாழ்க்கை தான் மண்ணறை வாழ்க்கை. இது ஒரு திரை மறைவு வாழ்க்கை. இதுவே பர்ஸக் உடைய வாழ்க்கை எனப்படும்.இறுதித் தீர்;ப்பு நாளில் அனைவரும் எழுப்பப்பட்டு அவரவர் இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கையைப் பொறுத்து நல்லவர்களாயின் சொர்க்கமும், தீயவர்களாயின் நரகமும் அளிக்கப்படும். அது நிரந்தர வாழ்க்கை. முடிவே இல்லாத வாழ்க்கை.மரணத்திற்குப் பின் உள்ள பர்ஸக் உடைய வாழ்க்கை என்பது மண்ணுக்கடியில் புதைக்கப் பட்டவர்களுக்கு மட்டும் தான் என்று கருதி விடக் கூடாது. கடலில் மூழ்கி இறந்தவர்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்வர்கள், காட்டு மிருகங்களுக்கு இரையாகிப் போனவர்கள், நெருப்பில் எரிந்து கரியாகிப் போனவர்கள், அனைவருக்குமே இந்த கப்ருடைய வாழ்க்கை என்னும் பர்ஸக் உடைய வாழ்க்கை உண்டு.இவர்களுக்கு கப்ருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? கேள்விக் கணக்கு எப்படி இருக்கும்? விசாரணை எப்படி நடக்கும்? என்னும் கேள்விகளெல்லாம் நம் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டவை.மண்ணறை வாழ்க்கை மறுக்கமுடியாத உண்மை. அந்தத் திரை மறைவு வாழ்க்கையில் நல்லவர்கள் புது மணமகனைப் போல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். தீயவர்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். இந்நிலை யுக முடிவு நாள் வரை தொடரும்.மூன்றாவது கலீபா உஸ்மான் (ரலி) அவர்கள் எந்த கப்ருக்கு அருகில் சென்றாலும் தமது தாடி நனையும் அளவுக்கு அழுவார்களாம். அவர்கள் கூறுகிறார்கள்:நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். 'கப்ருதான் மறுமையின் தங்குமிடங்களில் முதலாலதாகும். அங்கு ஒருவர் நிம்மதி அடைந்தால் மறுமையிலும் நிம்மதி அடையலாம். அங்கு ஒருவர் தோல்வி அடைந்தால் மறுமையிலும் தோல்விதான்.அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சொர்க்கவாசி என்று நற்சான்று வழங்ஙகப்பட்ட அந்த உஸ்மான் (ரலி) அவர்களே மண்ணறை வாழ்க்கை எப்படி இருக்குமோ? என்று நினைத்து அழுவார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள்

எத்தனை எத்தனை கப்ருகளுக்குப் போயிருக்கிறோம்? பெற்றோரை- உற்றார் உறவினரை- உடன்பிறந்தோரை நாமே முன்னின்று நல்லடக்கம் செய்திருக்கிறோம். நாமும் ஒரு நாள் இவ்விதமே புதைக்கப் படுவோம் என்பதை எப்போதாவது சிந்தித்தோமா? நமது கேள்வி கணக்கு விசாரனை எப்படி இருக்கும்? நமது மண்ணறை வாழ்க்கை எப்படி அமையும்? என்று நினைத்து கவலைப் பட்டது உண்டா? நமது கண்கள் அழுதிருக்கின்றனவா? நமது உள்ளம் உணர்ந்திருக்கின்றதா? அவரவர் பகுதிகளில் உள்ள கப்ருஸ்தான்களுக்கு அடிக்கடிச் செல்வதை இனியேனும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவ்விடத்தில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள் அனைவருக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.உங்கள் பெற்றோர், உற்றார் உறவினர்கள் இறந்து போய் இந்த இடத்தில் புதைக்கப் பட்டதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் அன்பு செலுத்தியவர்கள், உங்கள் மீது அன்பு செலுத்தியவர்கள், உங்களை உருவாக்கி வளர்த்து ஆளாக்கியவர்கள், நீங்கள் உருவாக்கி வளர்த்து ஆளாக்கியவர்கள், உங்கள் வாழ்கைத் துணையாக வந்துசேர்ந்தவர்கள், சகோதரப் பாசம் பொழிந்து சகல இன்ப துன்பங்களிலும் பங்து கொண்டவர்கள், ஆசானாய் இருந்து வழிநடத்திச் சென்றவர்கள், ஆருயிர்;த் தோழராய் உங்கள் இதயத்தில் இடம் பிடித்தவர்கள், அனைவரும் இங்கே புதைக்கப் பட்டுள்ளனர். கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் நினைத்துப் பாருங்கள். உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டும். மறுமையின் நினைவு உங்கள் மனத்திரையில் தோன்றும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கப்ருகளை ஸியாரத் செய்ய நான் தடை செய்திருந்தேன். முஹம்மத் தன் தாயாரின் கப்ரை ஸியாரத் செய்ய அனுமதிக்கப் பட்டுவிட்டார். எனவே நீங்களும் ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் அது மறுமையை நினைவு படுத்தும்.அறிவிப்பவர்: புரைதா (ரலி) ஆதாரம்: திர்மிதி 974அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யச் செல்லும் போது, அங்கு அடக்கப் பட்டுள்ள அனைவருக்கும் ஸலாம் கூற வேண்டும். அடக்கப்பட்டுள்ளவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவேண்டும்.நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் உள்ள அடக்கத்தலங்களைக் கடந்து சென்றபோது அவற்றை நேராக நோக்கி 'அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூர், யஃபிருல்லாஹு லனா வலகும், அன்தும் ஸலஃபுனா வ நஹ்னு பில் அஸர்' எனக் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி 973(இதன் பொருள்) அடக்கத்தலங்களில் உள்ளவர்களே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். எங்களையும் உங்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக. நீங்கள் எங்களை முந்தி விட்டீர்கள். நாங்கள் பின்னால் வரக்; கூடியவர்களாக உள்ளோம்.இவ்விதம் கப்ருகளை ஸியாரத் செய்வது ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி 976தர்காக்கள் என்னும் அடக்கத்தலங்களுக்கு செல்லும் பெண்களே! நபி (ஸல்) அவர்களின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்.

அடக்கப்பட்ட பின் கப்ர் நெருக்கும்

எந்த மனிதரையும் கப்ரில் அடக்கிய பின், முதலில் அந்த மனிதரை கப்ர் நெருக்கும். அவர் கெட்டவராயினும் நல்லவராயினும் சரியே! கப்ருடைய இந்த முதல் நெருக்குதலிலிருந்து யாருமே தப்ப முடியபது. நல்லவராயின் முதல் நெருக்குதலிலிருந்து கப்ர் தனது நெருக்கத்தைத் தளர்த்தும். தீயவராக இருப்பின் கப்ர் தொடர்ந்து நெருக்கிக் கொண்டே இருக்கும்.கப்ருடைய இந்த நெருக்குதலிலிருந்து யாருமே தப்ப முடியாது என்பதற்கு பின் வரும் நபி மொழியே சான்று. நிச்சயமாக ஒவ்வொரு கப்ரும் நெருக்கக் கூடியதாக இருக்கின்றது. அதிலிருந்து ஒருவர் மீட்சி பெற முடியும் என்றால் ஸஅது மீட்சி பெற்றிருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: அஹ்மத்வானத்திலும் பூமியிலும் உள்ளவர்களை கவலையடையச் செய்யக் கூடிய ஒருவர் மரணித்து விட்டார். அதனால் அல்லாஹ்வுடைய அர்ஷ் கூட நடுங்குகிறது என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவர்தான் ஸஅது (ரலி) அவர்கள்.இவ்வளவு மேன்மைப் பெற்ற அந்த ஸஅது (ரலி) அவர்களையே கப்ர் நெருக்காமல் விட்டதில்லை என்றால் மற்றவர்களின் நிலை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையை விட்டும் காப்பானாக!' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! மண்ணறை வேதனை உள்ளது என்று கூறினார்கள்.மேலும் ஆயிஷா அவர்கள் கூறுகிறார்: அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்ததே இல்லை.அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரலி) ஆதாரம்: புகாரி 1372

மண்ணறை வேதனையும் மணமகனின் உறக்கமும்

மைய்யித் அடக்கம் செய்யப்பட்டவுடன் நீல நிறக் கண்களுடைய இரண்டு கருப்பு நிற மலக்குகள் அவரிடம் வருவார்கள். அவர்களில் ஒருவர் முன்கர், மற்றொருவர் நகீர். அவ்விருவரும் (அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறித்து) 'இந்த மனிதர் பற்றி நீர் என்ன கூறிக் கொண்டிருந்தீர்?' என்று கேட்பார்கள்.'இவர் அல்லாஹ்வின் அடியார், அவனது தூதர், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார்' என்று தான் கூறிக் கொண்டிருந்ததாகக் கூறுவார். அதற்கு அவ்விருவரும் 'இவ்வாறே நீர் கூறிவந்தீர் என்பதை நாம் அறிவோம்' என்று கூறுவர். பின்னர் அவரது அடக்கத் தலம் எழுபதுக்கு எழுபது முழமாக விரிவு படுத்தப்பட்டு அதில் ஒளி ஏற்றப் படும். பிறகு அவரிடம் 'நீர் உறங்குவீராக' என்று கூறப்படும். அப்பேது அவர் 'நான் என் குடும்பத்தினரிடம் சென்று இதைக் கூறவேண்டும்' என்பார். அப்போது அவ்விருவரும் 'நெருக்கமான குடும்பத்தினர் தவிர மற்றவர் எழுப்பமுடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் உனது இந்த இடத்திலிருந்து அல்லாஹ் உன்னை எழுக்கும் வரை உறங்குவீராக!' என்று கூறுவர். அவன் முனாஃபிக்காக இருந்தால் (மேற்கண்ட அதே கேள்விக்கு விடையளிக்கும்போது) 'மக்கள் சொல்வதைச் செவியுற்று அதையே நானும் கூறினேன். (வேறெதுவும்) எனக்குத் தெரியாது' என்று கூறுவான். அதற்கு அவ்விருவரும் 'நீ அவ்வாறுதான் கூறி வந்தாய் என்பதை நாம் அறிவோம்' என்று கூறுவர். பூமியை நோக்கி 'இவரை நெருக்கு' என்று கூறப்படும். அது அவனை நெருக்கும். அதனால் அவனது விலா எலும்புகள் இடம் மாறும். அவனை அல்லாஹ் அங்கிருந்து எழுப்பும் வரை அதிலேயே வேதனை செய்யப் பட்டுக் கொண்டிருப்பான்.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி 991ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப் பட்டு அவனது தோழர்கள் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களது செறுப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரு மலக்குகள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்காரவைத்து 'இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்? என்று நபி (ஸல்) அவர்கள் குறித்துக் கேட்hதர்கள். அவன் மூமினாக இருந்தால் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்று கூறுவான்.அவனிடம் (நீ கெட்டவனாக இருந்திருந்தால் உனக்கு கிடைக்கவிருந்த) 'நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான். அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும். என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இதன் அறிவிப்பாளரான கதாதா(ரலி) குறிப்பிடுகிறார். அவன் நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால், 'இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' என அவனிடம் கேட்கப் படும்போது 'எனக் கொன்றும் தெரியாது மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' எனக் கூறுவான்.உடனே 'நீ அறிந்திருக்கவுமில்லை, (குர்ஆனை) ஓதி(விளங்கி)யதுமில்லை, என்று கூறப்படும். மேலும் இரும்புச் சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரம்: புகாரி 1374உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் இருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்) மேலும் 'அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்பும் வரை இதுவே (கப்ரே) உனது தங்குமிடம்' என்றும் கூறப்படும்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம்: புகாரி 1379

நபி (ஸல்) அவர்கள் கன்ட கனவு

நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா? என்று கேட்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். யாராவது கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள்.இவ்வாறே ஒரு நாள், 'உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் 'இல்லை' என்றோம். அவர்கள் 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன். அதில் இருவர் என்னிடம்வந்து என் கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றுக் கொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்;திருப்பவரின் கீழ் தாடையின் ஒரு புறம் குத்த, அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும், அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர்.அப்படியே நடந்தபோது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலைமாட்டிலே பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர் அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும் போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள், சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே 'இவர் யார்?' என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர்.எனவே நடந்தோம். அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்புஎரிந்துக் கொண்டிருந்தது. நெருப்பின் உஷ்ணம் அதிpகமாகும் போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாக இருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும், பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்து விட்டார்கள்.அதில் ஆண்களும் பெண்களும் நிர்வானமாகக் கிடந்தார்கள்.நான் 'இவர்கள் யார்?' எனக் கேட்டேன். அதற்கும் அவர்கள் 'நடங்கள்' என்றனர்.மேலும் நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். அவருக்கு முன்பாகக் கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்றுக் கொண்டிருந்தார். அந்த மனிதர் ஆற்றை விட்டு வெளியேற முயலும் போது இவர் அவரது வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்குத் தள்ளப் பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும் போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க அவர் மீண்டும் பழயை இடத்துக்கே சென்றார். அப்போது 'என்ன இது?' எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர்.மேலும் நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். அதில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு வயோதிகரும் சில சிறுவர்களும் இருந்தனர். அந்த மரத்திற்கு அருகில் ஒருவர் இருந்தார். அவருக்கு முன்னால் நெருப்பு எரிந்துக் கொண்டிருந்தது. அதை அவர் மூட்டிக் கொண்டிருந்தார். பிறகு அவ்விருவரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள்.நான் இதுவரை அப்படி ஒரு அழகான வீட்டைப் பார்த்ததே இல்லை. அதில் சில ஆண்களும் வயோதிகர்களும், இளைஞர்களும், பெண்களும், சிறுவர்களும், இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் 'இரவு முழுதும் என்னை சுற்றிக் காண்பித்தீர்களே அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விபரங்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டேன்.அதற்கு அவ்விருவரும், ஆம்! முதலில் தாடை சிதைக்கப் பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட் நிலையில் நீர் பார்த்தீரே அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார். பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! வட்டி வாங்கித் தின்றவர்கள். மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த பெரியவர் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள். அவரைச் சுற்றியிருந்த சிறுவர்கள் (முஸ்லிம்) மக்களின் குழந்தைகள். நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவர் நரகக் காவலாளியான மாலிக் (அலை) அவர்கள்.நீர் நுழைந்த முதல் முதல் மாளிகை சராசரி மூமின்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர்;த்தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயீல்' என்று கூறிவிட்டு இப்போது உமது தலையை உயர்த்தும் என்றனர். நான் எனது தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது. அப்போது இருவரும் இதுவே (மறுமையில்) உமது இருப்பிடம் என்றதும், நான் 'எனது இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்' என்றேன்.அதற்கு இருவரும் 'உமது வாழ்நாள் இன்னும் மிச்சமிருக்கிறது அதை இன்னும் நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உமது இருப்பிடம் வருவீர் என்றனர்' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) ஆதாரம்: புகாரி 1386 மேற்கண்ட நபி மொழியும், இன்னும் ஆதாரப் பூர்வமான பல்வேறு நபி மொழிகளும் மண்ணறை வேதனை குறித்து நமக்கு தௌ;ளத் தெளிவாக உணர்த்துகின்றன.

மண்ணறையில் நடைபெறும் விசாரனை, நல்லவர்களுக்கு கிடைக்கவிருக்கும் நிம்மதி, தீயவர்களுக்கு கிடைக்கவிருக்கும் தண்டனை ஆகியவற்றில் எவ்வித சந்தேகமும் இல்லை.திடீர் மரணத்தை விட்டும் காப்பாற்றும்படி இறைவனிடம் இறைஞ்சுங்கள். சக்ராத் என்னும் மரண வேதனையை இலகுவாக்கித் தரும்படி அடிக்கடி பிரார்த்தியுங்கள். மரண வேளையில் கலிமாவை மொழியவும், ஷிர்க் என்னும் இணைவைத்தல், குஃப்ர் என்னும் இறை நிராகரிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும்படியும் எந்நேரமும் இறைவனிடம் வேண்டுங்கள். மண்ணறை வேதனையை நினைத்து அஞ்சுங்கள். மறுமை என்னும் நிரந்தர வாழ்க்கையின் முதல் நுழைவாயில் மண்ணறை என்பதை மறந்து விடாதீர்கள். ஈமானுடனும் இனிய கலிமாவை மொழிந்த வண்ணமும், அறிந்தும் அறியாமலும் செய்து விட்ட பாவங்களுக்கு பாவமன்னிப்புத் தேடியவர்களாக, நமது இறுதி நேரம் அமையவும், மறுமையில் இன்ஷா அல்லாஹ் கிடைக்கவிருக்கும் சுவனபதியின் சுந்தரக் காட்சிகளை அனுதினமும் கண்டு ஆனந்தம் அடைந்தவர்களாக, மறுபடியும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் இறுதி நாள் வரை புது மணமகனைப் போல் ஆழ்ந்த உறக்கத்தில் நம்மை ஆக்கியருள இறைவனிடம் இறைஞ்சுவோமாக! அதற்கேற்ற வகையில் இம்மை வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக!

0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்