Sep 14, 2006

மரணத்தொடக்கம்1

மரணத் தொடக்கம் மறுமை வரைக்கும் 1
">Link

பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி

உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள். இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒருவருக்கும் ஒருபோதும் சந்தேகமே இல்லை. ஏக இறைவனை ஏற்றுக் கொண்டோரும், ஏராளமான தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்போரும், இறைவனையே ஏற்க மறுத்தோரும் 'மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம்' என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கண் முன்னே காண்பதை நம்புவதற்கு அறிவும் தேவையில்லை, ஆராய்ச்சியும் தேவையில்லை. 'மரணத்தைத் தடுக்க ஏதேனும் மார்க்கம் உண்டா?' என்று ஆராய்ச்சி செய்தவர்களும் கூட ஒரு நாள் மரணித்துப் போனார்கள். குறைந்த பட்சம் தங்களுக்கு ஏற்பட்ட மரணத்தைத் தள்ளிப் போடக் கூட அவர்களால் இயலாமற் போனது. நாம் அனைவரும் ஒரு நாள் இறப்பது உறுதி. இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் எப்போது இறப்போம்? எப்படி இறப்போம்? எந்த இடத்தில் இறப்போம்? அந்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். ...தாம் எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன். நுட்பமானவன். (திருக்குர்ஆன் 31:34) நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 4:78) மரணம் எங்கும், எப்பொழுதும், எப்படியும் ஏற்படலாம். வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டால் மறுபடியும் வீடு வந்து சேருவது நிச்சயமல்ல. வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றால் சொந்த ஊருக்குத் திரும்பி வருவது நிச்சயமல்ல. எனவே வீட்டை விட்டு வெளியில் புறப்படும்போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி (பொருள்: இறைவனின் பெயரால்...(புறப்படுகிறேன்) இறைவன் மீதே நம்பிக்கை வைத்தேன்) என்று சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டும். எவ்வித ஆபத்துக்களும் விபத்துக்களும் இல்லாமல் அல்லாஹ் கொண்டு வந்து சேர்ப்பான். ஒருபோதும் போயிராத ஒரு இடத்துக்கு ஒருவர் எதிர்பாரா விதமாகப் போக நேரலாம். அந்த இடத்தில் அவர் மரணமடையலாம். 'இறப்பதற்காகவே இவர்; இந்த இடத்துக்கு வந்தாரோ' என்று கூடச் சிலர் சொல்வதுண்டு.ஒருவர் எந்த இடத்தில் மரணிக்க வேண்டும் என்று அல்லாஹ் தீர்மானித்;து விட்டானோ அந்த இடத்துக்கு அவர் போக ஒரு தேவையை ஏற்படுத்துவான்.என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அஸ்ஸா (ரலி) ஆதாரம்: திர்மிதி (2237) இரவில் நன்றாகப் படுத்தவர் காலையில் எழுவதில்லை. உறக்கத்திலேயே சிலருக்கு உயிர் பிரிந்து விடுவதுண்டு. எனவே உறங்கச் செல்லுமுன், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைப்படி பிரார்த்தித்தவராக உறங்கச் செல்ல வேண்டும். எந்த நேரமும் மரணம் ஏற்படலாம். மரணம் ஏற்படும் அந்த நேரம் மகிழ்ச்சியான நேரமாகவோ துக்கமான நேரமாகவோ இருக்கலாம். பலருடன் சேர்ந்திருக்கும் நேரமாகவோ தனித்திருக்கும் நேரமாகவோ இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர் குறித்த நேரத்தில் உயிரை எடுப்பார். கொஞ்சம் கூட முந்தவும் மாட்டார். பிந்தவும் மாட்டார்.

உயிரை எடுப்பவர் ஒருவர் அல்ல

உயிரை எடுப்பவர் ஒரு வானவர் தான் என்றும் அவருக்குப் பெயர் இஜ்ராயீல் என்றும் பலரும் தவறாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை. நீண்ட நெடுங்காலமாக சொல்லப் பட்டு வருவதாலோ பெரும்பாலானவர்கள் சொல்லிக் கொண்டிருப்பதாலோ ஒரு செய்தி சரியானதாக ஆகிவிடாது. உதாரணங்களைக் கூறி உலக விஷயங்களை வேண்டுமானால் நியாயப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் மார்க்க விஷயங்களுக்கு அல்லாஹ்வின் வேதத்திலும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலும் ஆதாரம் இருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்போது நமது தூதர்கள் அவரைக் கைப் பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறைவைக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன் 6:61) நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி 'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்' என்று கூறுவார்கள். (திருக்குர்ஆன் 16:32)ஆகிய வசனங்களிலும் இன்னும் பல்வேறு வசனங்களிலும் உயிரைக் கைப்பற்றுபவர்கள் பலர் என்று திருமறை குர்ஆன் கூறுகிறது.உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்' என்று கூறுவீராக (திருக்குர்ஆன் 32:11)என்னும் வசனம் தெளிவாகவே ஒவ்வொருவருக்கும் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவர் நியமிக்கப் பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.உலகில் பிறந்த கோடானுகோடி மக்களுக்கும் தனித்தனி வானவரா? என்று சிலர் கேட்கலாம். இந்தக் கேள்வி அர்த்தமற்றது. அல்லாஹ்வின் வல்லமையை குறைத்து மதிப்பிடுவதாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக) கோடானு கோடி மக்களுக்கும் கோடானு கோடி வானவரை நியமிப்பது அல்லாஹ்வுக்கு இயலாத காரியமல்லவே!

உயிரை எடுக்கும் விதம்

நற்செயல்கள் புரிந்து நல்லவராக வாழ்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவர் மகிழ்ச்சி அடையும் விதத்தில் அவருக்காக நியமிக்கப்பட்ட வானவர் அவரிடம் வருவார். எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி 'அஞ்சாதீர்கள்! கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.' எனக் கூறுவார்கள். (திருக்குர்ஆன் 41:30)இறைவனை நிராகரித்து தீய செயல்கள் புரிந்து தீயவராக வாழ்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவரை பயமுறுத்தும் விதத்திpல் அவருக்காக நியமிக்கப்பட்ட வானவர் அவரிடம் வருவார். அநீதி இழைத்தோர் மரண வேதனையில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். 'உங்கள் உயிர்களை நீங்கள் வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும் அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகிறீர்கள். (எனக்; கூறுவார்கள்.) (திருக் குர்ஆன் 6:93) இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் மரணிக்கும் போது அந்த இறுதி நேரத்தில் அவர்களுக்கு உண்மை உணர்த்தப்படும்.நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும்போது 'அல்லாஹ்வை விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே என்று கேட்பார்கள் 'அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர் என்று கூறுவார்கள். தாம் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவர்கள். (திருக் குர்ஆன் 7:37)

ஷிர்க் என்னும் இணை வைத்தல்

மனிதர்கள் தாம் செய்யும் பாவங்களை உணர்ந்து திருந்தி பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். எவ்வளவு பாவங்கள் செய்திருந்த போதினும் சரியே! ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அது தான் ஷிர்க் என்னும் இணைவைத்தல்.தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)அல்லாஹ் அல்லாத மற்றவர்களை, அவர் எவ்வளவு பெரிய மகானாக ஏன் நபியாகவே இருந்தாலும் அழைத்துப் பிரார்த்திப்பதும் அவர்களிடம் தம் தேவைகளைக் கேட்பதும், ஆபத்தான நேரங்களில் அழைத்தால் ஓடிவந்து உதவுவார்கள் என்று நம்புவதும் கஷ்டங்களையும் சிரமங்களையும் தீர்த்து வைப்பார்கள் என்று கருதுவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மைகளும் தகுதிகளும் மற்றவர்களுக்கும் உண்டு என்று எண்ணுவதும் அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மகான்களுக்கும் உண்டு என்று நினைப்பதும் ஷிர்க் ஆகும். (இது போன்ற ஷிர்க் என்னும் இணை வைத்தலிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக)அல்லாஹ் அல்லாதவரை அழைத்துப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள், அப்படி அழைப்பது தவறல்ல என்று உலக உதாரணங்கனைளக் கூறி சுய வியாக்கியானம் கொடுத்து நியாயம் கற்பித்தவர்கள் அனைவரும் இந்த மரண நேரத்தில் உணர்வார்கள். ஆனால் அந்தோ பரிதாபம்! இப்போது உணர்ந்து பயன் இல்லை. காலம் கடந்து விட்டது.

சக்ராத் என்னும் மரண வேதனை

மரணத்திற்குச் சற்று முன் ஏற்படும் சக்ராத் என்னும் மரண வேதனை அனைவருக்கும் உண்டு. இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. மரண வேதனையைப் பற்றித் திருமறை குர்ஆன் கூறுகிறது.மரண அவஸ்தை உண்மையாகவே வந்து விட்டது. எதை விட்டு ஓடிக் கொண்டிருந்தாயோ அது இதுவே. (திருக் குர்ஆன் 50:19)இந்த சக்ராத் வேதனையிலிருந்து யாருக்கேனும் விதி விலக்கு அளிக்கப் பட்டிருக்க வேண்டுமானால் அது அண்ணல் நபி (ஸல்) அவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் சக்ராத் என்னும் மரண வேதனை இருந்தது. நபி (ஸல்) அவர்கள் மரணத்தை நெருங்கிய போது அவர்களை நான் பார்த்தேன். அவர்களுக் கருகே தண்ணீர்ப் பாத்திரம் ஒன்று இருந்தது. அவர்கள் அப்பாத்திரத்தில் தமது கையை நுழைத்துத் தமது முகத்தில் தடவிக் கொண்டே இருந்தார்கள். 'இறைவா! மரணத்தின் கொடிய வேதனையிலிருந்து விடுபட எனக்கு உதவி செய்வாயாக' என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதி 900அந்த இறுதி நேரத்தில் அவர்கள் அனுபவித்த அந்த வேதனையைப் பற்றி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், 'இப்படி ஒரு வேதனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுபவித்ததை நான் கண்டதே இல்லை.' என்று கூறுகிறார்கள்.அனைத்துப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப் பட்டவர் என்று அல்லாஹ்வே நற்சான்று வழங்கிய - அல்லாஹ்வின் பிரியத்திற்கும் நேசத்திற்கும் உரித்தான அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கே இந்த சக்ராத் வேதனை இருந்தது என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? நபி (ஸல்) அவர்கள் கடும் வேதனையுடன் மரணித்ததை நான் பார்த்த பின் இலேசான சிரமத்துடன் யாரும் மரணிக்க வேண்டும் என்று நான் விரும்ப மாட்டேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம்: திர்மிதி 900)இந்த சக்ராத் என்னும் மரண வேதனையை இலேசாக்கித் தரும்படி இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
மனிதனுக்கு அவனுடைய வயது அறுபதாகின்றவரை அல்லாஹ் அவனுடைய ஆயுளைப் பிறபடுத்தி வைத்து (பாவமன்னிப்புத் தேட) சந்தர்ப்பத்தை வழங்குகின்றான்;;. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)மனிதனின் சராசரி வயது அறுபதாக இருப்பதால் நபி (ஸல்) பொதுவாக அறுபது வயது என்று கூறினார்கள். நாம் எந்த வயதினராக இருப்பினும் இப்போது இந்த நேரம் வரை பாவமன்னிப்புத் தேட நமக்கு அல்லாஹ் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளான் என்பதை உணர்ந்து அதிகமதிகம் பிழை பொறுக்கத் தேட வேண்டும். மரணத் தருவாயில் ஒருவர் இருப்பது தெரிய வந்தால் அருகில் இருப்பவர் அவருக்குக் கலிமாவைச் சொல்லிக் கொடுக்கவேண்டும். உலகப் பேச்சுக்களை ஒதுக்கி வைத்து விட்டு இறை நினைவை ஏற்படுத்தும் ஈமானை அவர் இதயத்தில் பதிய வைக்க முயற்சிக்க வேண்டும்.உங்களில் மரணத்தை நெருங்கியவருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ்வை எடுத்துச் சொல்லுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஸயீத் குத்ரிலி) ஆதாரம்: மிர்மிதி 893ஈமானுடனும், இனிய கலிமாவை மொழிந்த வண்ணமும், நற்செயல்கள் செய்துக் கொண்டிருக்கும் நிலையிலும், நல்லதொரு மூமினாக முஸ்லிமாக நமது இறுதி நேரம் அமைய இறைவனை இறைஞ்சுவோமாக!

மரணத்தின் நினைவு

மரணத்தைப் பற்றிய நினைவு நம்மில் பலருக்கும் மிகவும் குறைவாகவே ஏற்படுகின்றது எனலாம். தமக்கும் ஒரு நாள் மரணம் வரும் என்பதைப் பலரும் வசதியாக மறந்து விடுவதுதான் வேடிக்கை.ஒவ்வொருவரும் தம் குடும்பத்தில் ஒருவர்- அதிலும் தமக்கு மிகவும் பிரியமான ஒருவர் மரணிக்கும் போது துக்கம் அடைகின்றனர். ஆனால் அந்த துக்கத்தின் தாக்கம் நாட்கள் செல்லச் செல்லக் குறைந்து பின்னர் மறைந்தும் போகின்றது. இனி இன்னொருவர் மரணிக்கும் போதுதான் மறுபடியும் மரணத்தைப் பற்றிய நினைவு வருகின்றது.அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் சந்திக்க விரும்கிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் 'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம்' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'அவ்வாறல்ல! ஒரு மூமினுக்கு இறைவனின் அருள், அவனது சொர்க்கம், அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப் பட்டால், அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான்' என்று விளக்கம் அளித்தார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதி 987

ஒப்பாரி வைத்து அழக் கூடாது

குடும்பத்தில் எவரேனும் இறந்து விட்டால் ஏற்படும் இழப்பு தாங்கிக் கொள்ள முடியாதது தான். நம்மையும் அறியாமல் பொங்கி வரும் அழுகையைக் கட்டுப் படுத்துவது கடினமான காரியம் தான். அழுவதில் தவறில்லை. ஏனெனில் அழுகை மனிதனின் இயற்கையான குணங்களில் ஒன்றாகும்.நபி (ஸல்) அவர்களின் மகள் ஜைனப் (ரலி) அவர்களின் குழந்தை ஒன்று மரணத் தருவாயில் இருந்தது. மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் அக்குழந்மையைக் கண்ட நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. 'அல்லாஹ்வின் தூhரே! என்ன இது! (அழுகிறீர்கள்)' என ஸஅது (ரலி) அவர்கள் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்' என்றார்கள். (ஆதாரம்: புகாரி 1284) எனவே மரணம் போன்ற துக்கமான நேரங்களில் அழுவதில் தவறில்லை. ஆனால் ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவதும், கன்னத்தில் அறைந்துக் கொள்வதும், ஆடைகளைக் கிழித்துக் கொள்வதும், கூடாது.(துன்பத்தின் காரணமாகக்) கன்னத்தில் அறைந்துக் கொள்பவனும் ஆடையைக் கிழித்துக் கொள்பவனும், அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி) ஆதாரம்: புகாரி 1297காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் மரணத்தின் போது பெண்கள் அழுதுக் கொண்டிருந்த சமயம், உமர் (ரலி) அவர்கள் 'இப் பெண்களை இந்நிலையிலேயே (தடுக்காமல்) விட்டு விடுங்கள், தம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டாலோ அல்லத சப்தமிட்டு அழுதாலோ அவர்களைத் தடுத்து விடுங்கள்' என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி பாடம் 33)

மைய்யித்தை விரைவில் அடக்கம் செய்தல்

எவரேனும் இறந்து விட்டால் ஜனாஸாவை எவ்வளவு விரைவில் கொண்டு போய் அடக்க முடியுமோ அவ்வளவு விரைவில் அடக்க வேண்டும். மிக நீண்ட நேரம் ஜனாஸாவைக் காக்க வைப்பது விரும்பத்தக்கதல்ல.ஜனாஸா (பெட்டியில்) வைக்கப் பட்டு அதை ஆண்கள் அவர்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் 'என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்' என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?' என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரி(ரலி) ஆதாரம்: புகாரி 1314அது போல் ஜனாஸாவைச் சுமந்து செல்லும்போது வேகமாகக் கொண்டு செல்வது சிறந்தது என்று பின்வரும் நபி மொழி நமக்கு அறிவிக்கிறது.ஜனாஸாவை(ச் சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மைய்யித்) நல்லறங்கள் புரிந்ததாக இருந்தால் அதை நன்மையின் பால் விரைந்து கொண்டு செல்கிறீர்கள். அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களது தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி 1315

ஜனாஸாத் தொழுகை

யார் ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு. யார் அடக்கம் செய்யும் வரை கலந்துக் கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு, என்று நபி (ஸல்) கூறினார்கள். அப்போது கீராத் என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை) என்றார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி 1325இவ்வளவு அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் இந்த ஜனாஸாத் தொழுகை விஷயத்தில் நம்மில் பலரும் அலட்சியமாக இருப்பதைக் காணமுடிகின்றது.ஜனாஸாவைத் தூக்கிக் கொண்டு வரும்போது உடன் வருபவர்கள் ஜனாஸாத் தொழுகைக்காக தொழுமிடத்தில் இறக்கி வைத்துவிட்டு, பலரும் ஓரமாக ஒதுங்கி நின்றுக் கொள்வதைப் பரவலாகப் பல ஊர்களிலும் காண்கிறோம்.இறந்து போய் இங்கு கொண்டு வரப்பட்டுள்ள மைய்யித் அவர் தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருப்பினும் அவருக்காகப் பிரார்த்திப்பதும், அந்த ஜனாஸாத் தொழுகை என்னும் பிரார்த்தனையில் பங்கு கொள்வதும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையல்லவா? இனியும் ஒதுங்கி நிற்காதீர்கள்.ஒரு முஸ்லிம் மரணித்தவுடன் நூறுபேர் அளவுக்கு எட்டக் கூடிய முஸ்லிம்கள் தொழுகை நடத்தி அவருக்காகப் பரிந்துரை செய்தால், அவர்களின் பரிந்துரை ஏற்கப் படாமல் இருப்பதில்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதி 950ஒதுங்கி நிற்பவர்களே! உணர்ந்துக் கொள்ளுங்கள்! நீங்களும் ஒரு நாள் இப்படி ஜனாஸாவாக இங்கே கொண்டு வரப்படுவீர்கள்.

கப்ரின் மீது கட்டடம் கட்டுவதும் கப்ரை பூசுவதும் கூடாது

சமுதாயத்தில் நல்லவராகவும் வணக்கசாலியாகவும் வாழ்ந்த ஒருவர் இறந்து விட்டால் அவரை அடக்கம் செய்து அந்த கப்ரின் மீது கட்டடம் கட்டுவதும் ஆண்டு தோறும் நினைவு நாள் கொண்டாடுவதும் பல ஊர்களிலும் காணப்படுகின்றது.பல்வேறு ஊர்களிலும் பவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நல்லடியார்கள் இறப்பெய்திய போது இப்படி உருவான கட்டடங்கள் தான் இன்று தர்காக்கள் என்னும் பெயரில் பட்டி தொட்டிகளிலெல்லாம் காட்சி தருகின்றன. பல்வேறு அநாச்சாரங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் தோன்ற மூலக் காரணங்களாக அமைந்தன.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக்கிவிட்ட யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக!அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம்நபிமார்களின் கப்ருகளையே வணக்கத் தலங்களாக்கி விட்டவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள் என்றால் நல்லடியார்கள் என நம்பப்பட்டவர்களின் கப்ருகளை புனிதத் தலங்களாகக் கருதிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்கவேண்டும்.நல்லடியார்கள் எனக் கருதப்பட்டவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டுவது எப்போதாவது நடைபெற்றாலும், சாதாரணமாணவர்கள் இறந்து அடக்கம் செய்யப் பட்டால் அவர்களின் கப்ருகளைப் பூசி மெழுகி வைப்பதும், பூமாலைகள் வைத்து அலங்கரிப்பதும் பரவலாகச் சில பகுதிகளில் காணப்படுகின்றது.கப்ருகள் பூசப்படுவதையும் அவற்றின் மீது எழுதப்படுவதையும் அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி

சொர்க்கவாசியா? நரகவாசியா?

இறந்து போன எவரையும் அவர் சொர்க்கவாசி தான் என்றோ, நரகவாசி தான் என்றோ நம் சொந்த விருப்பத்துக்கு முடிவு செய்யக் கூடாது. நமக்குத் தெரிந்தவரை ஒருவர் நல்லவராக வாழ்ந்து மரணித்திருந்தாலும் கூட, அவர் நிச்சயம் சொர்க்கவாசி தான் என்று உறுதியாகக் கூற நமக்கு அதிகாரம் இல்லை. 'இறைவா! இவரை சொர்க்கவாசியாக ஆக்குவாயாக!' என்று இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.'நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: உம்முல் அலா (ரலி) ஆதாரம்: புகாரி 1243அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு 'இவர்கள் சொர்க்கவாசிகள்' என்று கூறியுள்ளார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சுவனத்தின் சுபச்செய்தி வழங்கப்பட்ட அந்த புண்ணிய சீலர்களைத் தவிர மற்றெவரையும் சொர்க்கவாசிதான் என்று உறுதியாகக் கூற யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஷஹீத் என்னும் வீர மரணம்

அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்து அதில் கொல்லப் பட்டவர் ஷஹீத் என்னும் உயிர்த்தியாகி ஆவார்.உயிர்;த்தியாகிகள் ஐவராவர். காலராவில் மரணித்தவர், வயிற்றோட்டத்தில் இறந்தவர், தண்ணீரில் மூழ்கி இறந்தவர், இடிபாடுகளில் (சிக்கி) இறந்தவர், அல்லாஹ்வின் பாதையில்(அறப்போரில்) உயிர்த்தியாகம் செய்தவர். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்;மிதி 983போரில் கொல்லப் பட்டவர் மட்டுமின்றி தனது குடும்பத்தினரை எதிரிகளிடமிருந்து காப்பதற்காகப் போரிட்டு அதில் கொல்லப் பட்டவரும், தனது செல்வத்தை, உடமைகளைக் காப்பதற்காகப் போரிட்டு அதில் கொல்லப் பட்டவரும், ஷஹீத் என்னும் உயிர்;த்தியாகிகள் ஆவர் என்று ஆதாரப் பூர்வமான நபி மொழிகள் நமக்கு அறிவிக்கின்றன.ஷஹீத் என்னும் வீர மரணம் எய்தியவர்கள் குறித்து இறைவனின் திருமறை கூறுகின்றது.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள். மாறாக அவர்கள் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப் படுகின்ஙறனர். (திருக்குர்ஆன் 3:169) உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி? என்று நபித் தோழர்கள் கேட்ட போது அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும், அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும் என்று இந்த வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். (ஆதாரம்: முஸ்லிம் 3500)

0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்