Jan 23, 2011

தமிழகம் கண்ட தர்ஜுமா புரட்சி

தமிழகத்தில் நம்முடைய தவ்ஹீது பிரச்சாரம் தோன்றிய மாத்திரத்தில் தவ்ஹீது ஜமாஅத் ஆலிம்கள் மக்களிடம் வைத்த அன்பான வேண்டுகோள், 'திருக்குர்ஆனைப் படியுங்கள்' என்பது தான். திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படியுங்கள் என்று மக்களிடம் திரும்பத் திரும்பக் கூறினோம்.

திருக்குர்ஆனைப் படியுங்கள் என்ற வேண்டுகோளைத் தாங்கிய ஸ்டிக்கர்களை தங்கள் வீட்டுக் கதவுகளிலும், வாகனங்களிலும் கொள்கைவாதிகள் ஒட்டினர்.

திருக்குர்ஆனைப் படியுங்கள் என்ற நம்முடைய வேண்டுகோள் மக்களிடம் தீயாய் பரவியது. மக்கள் சாரை சாரையாக திருக்குர்ஆன் தர்ஜுமாக்களை வாங்க ஆரம்பித்தனர்.

உடனே இந்த ஆலிம்கள், குர்ஆன் விளங்காது என்று கோரஸ் பாட ஆரம்பித்தனர்; கூப்பாடு போட்டனர்; குருட்டுச் சிந்தனையைப் பரப்பினர்; கூக்குரல் எழுப்பினர்.

குர்ஆனைப் படிக்க வேண்டும் என்ற மக்களின் ஆர்வ வெள்ளம், இந்த உலமாக்களின் குறுக்குச் சுவர்களைத் தகர்த்தெறிந்தது. புத்தகச் சந்தையில் ஒரு புது சகாப்தம் பூத்தது. தர்ஜுமா விற்பனை சாதனை படைத்து, விண்ணைத் தொட்டது.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறலாம். பி.ஜே. தர்ஜுமா வெளியீட்டுக்கு முன்பு தவ்ஹீது ஜமாஅத் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட தர்ஜுமா, ஜான் டிரஸ்ட் வெளியீடாகும். அதனால் மக்கள் ஜான் டிரஸ்ட் தர்ஜுமாக்களைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். அதன் விற்பனையில், பதிப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்ப்போம்.

1983ம் ஆண்டு 5000 பதிப்புகள் அச்சிட்டு, தனது பணியைத் துவக்கிய ஜான் டிரஸ்ட் நிறுவனம், இரண்டாவது பதிப்பு    5,000 மூன்றாவது பதிப்பு    10,000நான்காம் பதிப்பு    10,000  ஐந்தாம் பதிப்பு    10,000  ஆறாம் பதிப்பு    13,000  ஏழாம் பதிப்பு    10,000  எட்டாம் பதிப்பு 20,000  ஒன்பதாம் பதிப்பு 20,000  பத்தாம் பதிப்பு 20,000  பதினோறாம் பதிப்பு 10,000  12ம் பதிப்பு 10,000  13ம் பதிப்பு 10,000   14ம் பதிப்பு 10,000 என 25 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு விற்பனை செய்தது.

இப்படிப் புனிதக் குர்ஆனைப் புரட்டிப் பார்க்கும் ஒரு புரட்சிக் கூட்டம் புறப்பட்டது. இப்போது தான் ஆலிம்கள் சுதாரித்துக் கொண்டு ஒரு தர்ஜுமாவை சந்தையில் இறக்கினார்கள்.

கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் தமிழாக்கத்தில் 1992ல் ஒரு தர்ஜுமா வெளியிடப்பட்டது.

இந்த தர்ஜுமாவைத் தந்தவர்கள், பாமரனுக்குக் குர்ஆன் விளங்காது என்று பகிரங்கமாகப் பேசியவர்கள்; பேசுபவர்கள். குர்ஆன் மொழியாக்கத்திற்கு மக்களிடத்தில் பலத்த வரவேற்பு என்றவுடன் தற்போது புத்தகச் சந்தையில் இந்த தர்ஜுமாவைக் களமிறக்கியுள்ளனர். 2004ம் ஆண்டு திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

அப்போது மக்களுக்கு விளங்காமல் இருந்த குர்ஆன், தற்போது வியாபாரம் என்று வந்ததும் விளங்க ஆரம்பித்து விட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தவ்ஹீது ஜமாஅத் தடம் பதிப்பதற்கு முன்பு தமிழகத்தில் ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி (முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ்ஸமது அவர்களின் தந்தை) மொழியாக்கத்தில், தர்ஜுமத்துல் குர்ஆன் ஃபி அதபில் பயான் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. முதலில் அரபு மூலத்துடன் வெளிவந்தது. பிறகு அரபு மூலமின்றி இது வெளியிடப்பட்டது. பிறகு மீண்டும் அரபு மூலத்துடன் வெளிவந்தது. இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு.

குர்ஆனின் அரபி மூலத்துடன் உள்ள தர்ஜுமாவை, முஸ்லிமல்லாத மக்களிடம் கொடுக்கக் கூடாது என்ற தவறான நம்பிக்கை தான்.

இருப்பினும், குர்ஆனை மூலத்துடன் வெளியிட வேண்டுமா? மூலமில்லாமல் வெளியிட வேண்டுமா? முஸ்லிமல்லாதவர் களுக்குக் கொடுக்கலாமா? கொடுக்கக் கூடாதா? என்று மயிர் பிளக்கும் சர்ச்சைகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு நல்ல தமிழ் நடையில் இந்தத் தமிழாக்கம் வெளிவந்தது.

இது வெளியாவதற்காக மறைந்த அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள் சவூதியிலிருந்து நிதி பெற்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் தான் ஜான் டிரஸ்ட் சார்பில் அப்துல் வஹ்ஹாப் அவர்களால் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது.

ஜான் டிரஸ்ட் நிர்வாகம் இந்த தர்ஜுமாவில் திருத்தம் செய்வதற்காக பி.ஜே., அப்துல் காதர் மதனீ ஆகியோரை நியமித்தது. அப்போது, திருக்குர்ஆனின் 3:7 வசனத்திற்குச் செய்யப்பட்ட மொழி பெயர்ப்பு கடும் ஆட்சேபணைக்கு உள்ளானது. பின்னர் மீண்டும் பழைய மொழி பெயர்ப்பின்படியே அந்த வசனம் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, அந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக பி.ஜே. அவர்கள், 'முதஷாபிஹாத்' என்ற தொடரை அவரது சொந்தப் பத்திரிகையான அல்ஜன்னத்தில் எழுதினார்.

அல்குர்ஆன் மனிதர்களுக்காக அருளப்பட்டது; அதில் மனிதர்கள் யாருக்குமே விளங்காத வசனங்கள் எதுவும் இல்லை என்பதே அந்தத் தொடரின் சாராம்சம். இது தற்போது புதிய வடிவில் ஏகத்துவத்திலும் வெளியிடப்பட்டு வருகின்றது.

சங்கை மிக்க குர்ஆன்

இது ஒரு சவூதிய வெளியீடு. இலவசம் என்பது இதன் தனிச் சிறப்பு. எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய நடையைக் கொண்டிருக்கவில்லை என்பது இதன் குறைபாடு. முஸ்லிம்களுக்கே புரியாது எனும் போது முஸ்லிமல்லாதவர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. அதிலும் குறிப்பாக கிறித்தவர்களிடம் கொடுப்பதற்குத் துளியும் தகுதியில்லை. காரணம், இந்த தர்ஜுமாவின் தோற்றுவாயை எடுத்துப் படிக்கும் மாத்திரத்திலேயே அதை மூடி வைத்து விடுவர்.

எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக) (அது உன்) கோபத்திற் குள்ளானவர்கள(ளின் யூதர்களின் வழிய)ல்ல. அன்றியும் வழிகேடர்கள(ளின் கிறிஸ்தவர்களின் வழியும)ல்ல.

இவ்வாறு மொழிபெயர்க்கப் பட்டிருக்கும். இதைப் படிக்கும் ஒரு கிறித்தவர் எப்படி இஸ்லாத்திற்கு வருவார் என்று நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

இவை அனைத்தும் தர்ஜுமாக்கள். தவ்ஹீது ஜமாஅத் தனது பயணத்தைத் தொடங்கும் போது தப்ஸீர்களும் வெளியாகியிருந்தன.

1. தப்ஸீருல் ஹமீது ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்

இது 1958ல் வெளியானது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். முஹம்மது அப்துல் காதர் பாகவி ஆலிம் அவர்கள் இதை எழுதினார்கள்.

ஆதாரமற்ற ஹதீஸ்கள், வரலாறுகள், அறிவுக்குப் பொருந்தாத கற்பனைகளின் தொகுப்பாகவே இந்த தப்ஸீர் அமைந்திருந்தது. அந்தக் காலத்தில் நிலவிய தமிழ் நடைக்கொப்ப இது வெளியானது. இப்போது அந்த நடை மக்களுக்குப் புரியாது.

2. அன்வாருல் குர்ஆன்

இந்த தப்ஸீரும் எஸ்.எஸ். அப்துல் காதர் அவர்களின் தப்ஸீரைப் போன்றது தான். எனினும் உள்ளடக்கத்தில் இது ஓரளவுக்கு வேறுபட்டுள்ளது. அந்த தப்ஸீரைப் போன்று பெருமளவில் கதைகள் இதில் இடம் பெறவில்லை. இதன் ஆசிரியர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் தான் இன்றைய தவ்ஹீது ஆலிம்கள் களத்தில் இறங்குவதற்குத் தூண்டுகோலாகவும் துணையாகவும் இருந்தவர்கள்.

தமிழகத்தில் உலமாக்கள் பொதுக் கூட்டங்களில் பேசிய ஹதீஸ்களில், மக்களை மவ்ட்டீகத்திற்கு இழுத்துச் செல்லும் படுபாதகமான, படுமோசமான ஹதீஸ்களை அப்துர்ரஹ்மான் அவர்களிடம் எடுத்துக் கூறிய போது, 'அந்த ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள்' என்று ஆணித்தரமாக அடையாளம் காட்டினார்கள்.

இப்படிப்பட்ட அறிவு ஞானம் கொண்ட அவாகள், தமது தப்ஸீரிலும் ஹதீஸ் கலையின் தர வரிசைக்கு மாற்றமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பதைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்கள்.

மவ்லிதுகள், மீலாதுகள், கப்ரு வணக்கங்கள் போன்றவற்றில் மாறுபட்ட, அதாவது நாம் இன்று கொண்டிருக்கும் தவ்ஹீதுக் கருத்தைக் கொண்டதால் வஹ்ஹாபி என்ற முத்திரையை வாங்கிக் கொண்டவர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் என்பதை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

3. தாவூத்ஷாவின் தப்ஸீர்

இதுவும் தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வருவதற்கு முன் நடமாடிக் கொண்டிருந்த ஒரு தப்ஸீராகும். இவருடைய தப்ஸீரில் காதியானி வாடை வீசும்.

குர்ஆன் முழுவதையும் பொருளுரையும் விரிவுரையும் சேர்த்துத் தமிழில் வெளியிட வேண்டும் என்பது தாவுத் ஷாவின் கனவு. தமது இறுதிக் காலத்துக்குள் திருக்குர்ஆன் முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு விட வேண்டும் என்ற ஆர்வம் அவரது நெஞ்சில் முள் போல்
உறுத்திக் கொண்டிருந்தது. அவருக்கு 70 வயதான போது தாருல் இஸ்லாமி இதழை நிறுத்தி விட்டு முழுமையாக குர்ஆன் மொழிபெயர்ப்பில் இறங்கினார்.

அன்றைய உலமாக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதையும் மீறி அவர் அச்சேற்றினார்.

'இது காதியானி மொழிபெயர்ப்பு; காபிர் மொழி பெயர்ப்பு இதனை முஸ்லிம்கள் வாங்கக் கூடாது'' என்று அன்றைய உலமாக்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தொடர்ந்து தொகுதிகளை வெளியிட முட்டுக் கட்டை விழுந்தது. நான்காம் தொகுதியை வெளியிட தைக்கா சுஐபு ஆலிம் அவர்கள் 13000 கொடுத்தார்கள்.

1967ல் ஐந்தாம் தொகுதி வெளிவந்தது. இதற்குள் உலமாக்களின் தாக்குதல் அதிகமாயிற்று. தாவுத் ஷாவும் நோயில் படுத்துவிட்டார்.

4. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்டின் தப்ஸீர்

1996ல் திருக்குர்ஆன் என்ற பெயரில் இந்தத் தப்ஸீர் வெளியிடப்பட்டது. பொதுவாக தமிழில் வெளியான தப்ஸீர்கள், தர்ஜுமாக்கள் பிற மதத்தவர்கள் வாங்கிப் படித்து விளங்கிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக இந்த தப்ஸீர் அமைந்தது என்று சொல்லலாம்.

5. தற்போது ரஹ்மத் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் இப்னு கஸீர் தமிழாக்கம்.


பி.ஜே. தர்ஜுமா

மூன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள இதை மொழியாக்கம் செய்தவர் பி.ஜே. அவர்கள். முஸ்லிமல்லாதவர்களிடம் இது போய்ச் சேர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டது என்பதை இந்த தர்ஜுமாவை எடுத்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.

காரணம், பெரும்பாலும் தர்ஜுமாக்கள் எல்லாமே வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாகப் படிக்கும் வாக்கில் அமைந்துள்ளன. அதாவது அரபி நூல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் இந்த தர்ஜுமாவோ தமிழ், ஆங்கில நூல்களின் அடிப்படையில் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் வெளியான தர்ஜுமாக்கள் பெரும்பாலும் பிற மதத்தவர்களைக் கருத்தில் கொள்ளவே இல்லை. ஆனால் இந்த தர்ஜுமா பிற மதத்தவர்களையும் கவரும் வண்ணம் அதன் தமிழ் நடையில் முழு எளிமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

பின் குறிப்புகள்

இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் இஸ்லாத்தை நோக்கி வீசுகின்ற ஏவுகணைகள் பலதார மணம், விவாகரத்து போன்றவையாகும். எனவே இது தொடர்பான வசனங்களைப் படிப்பவர்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்குப் பொருத்தமான, எளிதில் புரியம்படியான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அது போல் அறிவியல் சம்பந்தப்பட்ட வசனங்களுக்கும் மன நிறைவைத் தரும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஏகத்துவக் கொள்கை, வணக்கங்கள், சட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தமிழக முஸ்லிம்கள் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களை தயவு தாட்சண்யம் இன்றி அல்லாஹ்வுக்குப் பயந்து மிகத் தெளிவாக இதன் பின் குறிப்புகளில் போட்டு உடைக்கின்றது.

கலப்படமின்மை

அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீது ஜமாஅத் தமிழகத்தில் தோன்றி, வணக்கங்களில் உள்ள பித்அத்கள், கலப்படங்கள், சேர்மானங்கள் ஆகியவற்றைக் களைந்து, இஸ்லாத்தைத் தூய வடிவில் செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

வணக்கங்களில் பித்அத் கூடாது என்று தத்துவார்த்தமாகச் சொன்ன போது, மக்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தனர். இன்று அதே மக்கள் செயல்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது அதை ஏற்றுச் செயல்படவும் ஆரம்பிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வாறு வணக்கங்களில் கலந்து விட்ட கலப்படங்களைக் களைந்து விட்டோம். ஆனால் குர்ஆனில் உள்ள கலப்படங்களை நாம் இதுவரைக் களையவில்லை. குர்ஆனில் கலப்படமா? என்று கொதிப்புடனும், ஆச்சரியத்துடனும் நீங்கள் இங்கு கேள்வி எழுப்பலாம். அதற்கான விடை கீழே இடம் பெற்றுள்ளது.  தமிழகம் மட்டுமல்ல! சவூதியின் வெளியீடுகளில் கூட இந்தச் சேர்மானங்கள் இடம் பெறத் தவறவில்லை.

இந்தச் சேர்மானங்களைக் களைவதற்கு அல்லாஹ் ஓர் அரிய வாய்ப்பை வழங்கினான். அது தான் இந்தத் தமிழாக்கமாகும்.

1. மன்ஜில்

2. ருகூவுக்கள்

3. ஸஜ்தா அடையாளங்கள்

4. நிறுத்தல் குறியீடுகள்.

5. வேண்டாத ஆய்வுகள்

6. மக்கீ, மதனீ

7. குர்ஆனை முடிக்கும் துஆ
மேற்கண்ட இந்தச் சேர்மானங்களை நீக்கி வெளியிட்டிருப்பதன் மூலம் இந்த தர்ஜுமா தனிச் சிறப்பைப் பெறுகின்றது. அல்லாஹ்வைப் பயந்து, உலகத்தில் யாருக்கும் பயப்படாமல் ஒரு தூய வடிவைக் கையாண்டதற்காக இது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

குர்ஆன் மொழியாக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் மட்டுமின்றி, குர்ஆனில் இருந்த இந்தக் கலப்படங்களை மக்களிடம் அடையாளம் காட்டி, அப்புறப்படுத்தியதும் தவ்ஹீது ஜமாஅத் செய்த சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது.
              நன்றி_ DUBAI TNTJ

0 comments:

விருப்ப மொழியில் குர்ஆன்