Feb 8, 2008

கலாச்சார ஊடுருவல்


வெள்ளி, 08 பெப்ரவரி 2008
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு

உலகின் பல்வேறு இன, மொழி, தேசக் கலாச்சாரங்களிலிருந்தும் வேறுபட்டு அகில உலகத்தையும் தன்பால் ஈர்த்தக் கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரமாகும். இறை வேத வரிகளும் இறைத்தூதர் மொழிகளும் போதித்த இஸ்லாமியக் கலாச்சாரத்தை இம்மியும் பிசகாமல் இஸ்லாமியச் சமுதாயம் கடைப்பிடித்த காலமெல்லாம் அகில உலகுக்கும் முன்மாதிரியாக அது திகழ்ந்தது.

இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டப் பல்வேறு சமுதாய மக்களும் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது, அதுநாள் வரை தாங்கள் பின்பற்றி வந்த சில கலாச்சாரங்களைத் தங்களையும் அறியாமல் சிலர் தங்களுடன் கொண்டு வந்தனர். காலப் போக்கில் அந்த அந்நியக் கலாச்சாரங்கள் வேர்விட்டு, கிளைபரப்பி, முழு இஸ்லாமியச் சமுதாயத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைக் கலாச்சாரத்துக்குக் குழிபறித்து விட்டது எனலாம்.
சிலை வணக்கக் கலாச்சாரம் போன்ற, "பாவம்" என்று பார்வையில் கண்காணத் தெரிந்த சில கலாச்சாரங்கள் நம்மிடம் நுழைய முடியவில்லையே தவிர, நல்லவைதாமே என்ற போர்வையில் நுழைந்த கலாச்சாரங்களைப் பாமர முஸ்லிம்கள் அலட்சியத்தோடு கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு பல சீர்கெட்டக் கலாச்சாரங்களின் ஊடுருவல் நம் இஸ்லாமியச் சமுதாயத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. இந்தக் கலாச்சார ஊடுருவல்களில் பல, ஷிர்க் என்னும் இணைவைத்தலில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை நம் சமுதாயத்தில் பலர் இன்னமும் உணர்ந்ததாகத் தெரிய வில்லை.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான் - (திருக்குர்ஆன் 4;:48)
இந்தக் காலாச்சார ஊடுருவலை அலட்சியம் செய்வோர், மற்றும் அவற்றுக்கு நியாயம் கற்பிப்போர் பின்வரும் நபி மொழியை நினைவிற் கொள்ள வேண்டும்.
"எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" - அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: அபூதாவூத்.
என்னும் நபி மொழியை நன்றாகப் புரிந்து கொண்டால் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வளவு மோசமானது என்பதை உணரலாம். "அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கருத்தாழமிக்க வார்த்தைகளை அலட்சியப் படுத்த எந்த ஒரு முஸ்லிமும் முன்வரமாட்டார்.
நமது அன்றாட வாழ்வில் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வாறெல்லாம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது என்பதைச் சிந்தித்து, ஆராய்ந்து, நல்லுணர்வு பெற வேண்டும்.
பிறப்பில், இறப்பில், வாழ்வில், திருமணத்தில் மற்றும் அன்னறாடப் பழக்க வழக்கங்களில் நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட இந்தக் கேடு கெட்டக் கலாச்சார ஊடுருவலை நாம் வேரோடும் வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் தொடங்கி, பெண் குழந்தைகள் பருவமடைவதிலும் திருமணம் நடத்துவதிலும் புதிய வீடு கட்டுவதிலும், இப்படி அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவலால், "மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் எவ்வகையிலும் வேறுபடவில்லையே" என்று பிற மதத்தவர் விமர்சிக்கும் அளவுக்குப் போய்விட்டது.
பிறமதச் சகோதரர்கள் இஸ்லாத்தைப் படித்து தெரிந்துக் கொள்வதை விட முஸ்லிம்களாகிய நமது நடவடிக்கைகளைப் பார்த்துத் தான் இஸ்லாத்தை தெரிந்துக் கொள்ள முடியும். அப்படியிருக்க நமது நடவடிக்கைகள் இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு முரணாக இருந்தால் உண்மையான இஸ்லாத்தை எவ்விதம் மற்றவர்களால் புரிந்துக் கொள்ள முடியும் என்பதை நாம் உணர வேண்டாமா?
காலமும் நேரமும்
நல்ல காரியங்கள் நடத்துவதற்கு நல்ல நேரம் பார்ப்பது பிற சமூகத்தவர் பின்பற்றும் பழக்கம். இஸ்லாத்தில் "நல்ல நேரம்', "கெட்ட நேரம்' என்று நேரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. காலண்டரைப் பார்த்துக் காலநேரம் பிரிப்பது அறிவுக்கு ஏற்ற செயலும் அல்ல; அல்லாஹ்வுக்கு உகந்த செயலும் அல்ல.
நேரம் காலம் பார்த்து நடத்தப்பட்ட எத்தனையோ திருமணங்கள் விவகாரத்தில் தொடங்கி விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. காலமும் நேரமும் அவர்களுக்குக் கைகொடுக்வில்லை.
ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து "முகூர்த்த நேரம்" என்று பிற சமூகத்தவர் குறிப்பிடுவதை "முபாரக்கான நேரம்" என்று அரபியில் குறிப்பிடுவதால் மட்டும் இஸ்லாமிய அங்கீகாரம் பெற்று விட்டதாக ஆகிவிடாது.
பசிக்கும்போது உணவருந்த எவரும் பஞ்சாங்கம் பார்ப்பதில்லை. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் தாய், தன் குழந்தையைப் பெற்றெடுக்க நல்ல நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, எந்த மருத்துவரும் கால நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை.
வாழ்க்கையில் ஏற்படும் வெற்றியும் தோல்வியும் அல்லாஹ்வின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்று ஈமானில் உறுதி கொள்ள வேண்டும்.நினைத்த காரியம் நடக்காமல் போவதும், தொடங்கிய காரியம் தோல்வி அடைவதும், இதைவிடச் சிறந்ததை நமக்குத் தருவதற்காக அல்லது இதன் மூலம் ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பதற்காக இறைவனுடைய ஏற்பாடாக இருக்கக் கூடும்.அதை விட்டு விட்டு காலத்தின் மீதும் நேரத்தின் மீதும் பழி சுமத்துவது பெரும் பாவம். ஏனனில், இறைவன் கூறுகிறான். "காலத்தை ஏசாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன்." (ஹதீஸ் குத்ஸி)
தொடங்கிய காரியம் தோல்வி அடைந்தால், "நேரம் சரியில்லை" என்று நேரத்தைக் குறை கூறுவதும் பிறமதத்திலிருந்து நம்மிடம் புகுந்து விட்ட ஒரு கலாச்சார ஊடுருவல்தான்.
சகுனம் பார்ப்பது சரியானதல்ல
ஏதேனும் காரியமாக வெளியில் புறப்படும்போது, "எங்கே போகிறீர்கள்?" என்று யாராவது கேட்டு விட்டால் போகிற காரியம் நடக்காது என்று நம்புவதும், நடந்து செல்லும்போது காலில் ஏதேனும் தடுக்கினால் சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வதும், போகிற வழியில் பூனை குறுக்கிட்டால் போகிற காரியம் தடங்கல் ஏற்படும் என்று கருதுவதும்,விதவைப் பெண்கள் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைப்பதும் வடிகட்டிய முட்டாள் தனம்.
நாம் நமது வேலையாகப் போகிறோம். பூனை தனது வேலையாகப் போகிறது. நமது வேலையைக் கெடுப்பது பூனையின் வேலையல்ல என்பதைச் சிந்தித்து உணர வேண்டும்.
பேசிக் கொண்டிருக்கும் போது சுவர்க்கடிகாரம் மணி அடித்தாலோ பல்லி சப்தமிட்டாலோ பேசும் பேச்சு உண்மையானது என்று கடிகாரத்தையும் பல்லியையும் சாட்சிகளாக்குவதும், 'பாலன்ஸ்' தவறி பல்லி விழுந்துவிட்டால், பதறித் துடித்து காலண்டரைத் திருப்பி "பல்லி விழும் பலன்" பார்ப்பதும் ஆகிய இவை யாவும் அந்நியக் கலாச்சார ஊடுருவல்கள் தாம்.
தேதி பார்க்கக் காலண்டர் வாங்கும் போது பல்லி விழும் பலனும், ராசி பலனும் இல்லாத காலண்டர் வாங்கினாலே பெரும்பாலும் இந்த மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடலாம்.மூடக் கொள்கைகளை முற்றிலும் ஒதுக்கிய குர்ஆன் வசனங்களும், பெருமானார் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும், அடங்கிய இஸ்லாமியக் காலண்டர்கள் பரவலாக இப்போது விற்பனைக்கு வந்து விட்டன.
நல்ல சகுனம், கெட்ட சகுனம், எதுவுமே இஸ்லாத்தில் இல்லை. எவ்வித சகுனமும் பார்க்கக்கூடாது. சகுனங்கள் ஒரு போதும் நமது செயல்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தமாட்டா.நல்லதும் கெட்டதும் அல்லாஹ்விடமிருந்தே எற்படுகின்றது என்று நம்புவது, "ஈமான்" என்னும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
அல்லாஹ் விதித்தபடிதான் அனைத்துமே நடக்கும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமாக நமது உள்ளத்தில் வேரூன்ற வேண்டும். அந்த ஈமானின் உறுதி நமது இதயத்தில் இருக்கும் வரை தீமைகள் எதுவும் ஏற்படாது.
"மந்திரிக்கச் செல்லாமலும் சகுனம் பார்க்காமலும் தங்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்த எழுபது ஆயிரம் பேர் எனது சமுதாயத்தில் விசாரனையின்றி சுவர்க்கம் செல்வார்கள்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் புகாரி).
திருமணத்தில் தீய பழக்கங்கள்
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட, 'சீர்திருத்தத் திருமணங்கள்' என்னும் பெயரில், இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் சிலர், இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே!
மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து, மணப்பெண் கழுத்தில் 'தாலிகட்டும்' வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவனுக்குச் சமமான மகிமை அளிப்பதும் திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும், அரிசி அளக்க வைத்து அல்லாஹ்வின் இரணத்தை அள்ளி இறைப்பதும், மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும், பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும், ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும், ஆகிய இவை யாவும் அந்நிய கலாச்சார ஊடுருவல்தான் என்பதில் ஐயமில்லை.
சமுதாயம் சீர் பெற, இதுபோன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப் பிடிக்க வேண்டும்."நீங்கள் மணம் (செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்து விடுங்கள்" (அல்குர்ஆன் 4:4)

என்னும் இறைவசனம் "மஹர் கொடையைக் கொடுத்து மணம் முடியுங்கள்" என்று தெளிவாகக் கூறும்போது இதற்கு நேர் முரணாகப் பெண் வீட்டாரிடம் பணம் கேட்கும் இழி செயலாகிய - தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப் போய்விட்ட வரதட்சணை என்னும் வன்கொடுமை ஒரு கலாச்சார ஊடுருவல்தான்.
இந்தக் கலாச்சாரச் சீர்கேட்டினால் எண்ணற்ற இஸ்லாமிய இளம் பெண்கள் வாழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். பல பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் வரதட்சணை கொடுக்க முடியாமல் வருடங்கள் பல கடந்தும் தம் பெண்மக்களை வாழ வைக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இறையச்சமுள்ள இஸ்லாமிய இளைஞர்களே! நீங்கள் எங்கே சென்றீர்கள்? வரதட்சணை வாங்கித்தான் மணம் முடிக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் பெற்றோர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லுங்கள். மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைவு படுத்துங்கள்.
வீடு கட்டுவதில் மூடப் பழக்கங்கள்
வீடு கட்டுவதற்கு முன், வீட்டு மனையின் அளவையும் அமைப்பையும் பொறுத்து, கட்டடப் பொறியாளரைக் கொண்டோ அல்லது அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ நம் வசதிக்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கட்டுவது நல்லது தான். அதற்காகச் சிலர் வாஸ்து சாஸ்திரம் - மனையடி சாஸ்திரம் என்னும் பெயரில் ஏமாற்றுச் சாஸ்திரங்களில் தங்கள் ஈமானை இழக்கின்றனர். இஸ்லாத்திற்கு எள்ளளவும் தொடர்பில்லாத இந்த வாஸ்து சாஸ்திரமும் ஒரு கலாச்சார ஊடுருவல் தான்.
மனையடி சாஸ்திரத்தில், ஓர் அளவைக் குறிப்பிட்டு இந்த அளவில் வீட்டின் நீள அகலம் இருந்தால் மரணம் ஏற்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படியானால் அந்த அளவைத் தவிர்த்துக் கட்டப்படும் எந்த வீடுகளிலும் யாருமே மரணிப்பதில்லையா?மனையடி சாஸ்திரம் மரணத்தைத் தடுக்காது. இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் இறப்பது நிச்சயம்.
நாம் வசிக்க உருவாக்கும் வீட்டை, நம் வசதிக்கு ஏற்றபடியும், இடத்திற்குத் தக்கபடியும், நீள அகலங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர வாஸ்து சாஸ்திரம் பார்த்து வாசற்படிகளை மாற்றி அமைப்பது, மனித வாழ்க்கையில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்த வல்லதன்று.எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் இன்றி அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் கட்டப் பட்ட வீடுகளில் வசிப்போர் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.இன்னமும் மூட சாஸ்திரங்களை முழுக்க முழுக்க நம்பிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?
கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் அநாச்சாரத்தில் ஆரம்பிக்கப் படுவதும் கட்டுகிற வீடு நமக்கு உரியது என்பதைக் கூட மறந்து நம்மிடம் கூலி வாங்கிக் கொண்டு கட்டுபவர்களின் பிறமதக் கலாச்சாரப்படி அனைத்து வகை ஆச்சாரங்களையும் அனுமதிப்பதும் அங்கீகரிப்பதும் கதவு நிலை வைப்பதற்குக் கூட காலமும் நேரமும் பார்த்து, பூவும் பொட்டும் வைத்து, பூஜை புனஸ்காரங்கள் செய்வதும் காங்கிரீட் போடும் போது ஆடும் கோழியும் அறுத்துப் பலியிடுவதும் கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதும் ஆகிய இவை யாவும் அந்நியக் கலாச்சாரத்தின் ஊடுருவல் தான். இஸ்லாத்துக்கும் இந்தக் கலாச்சாரங்களுக்கும் கடுகளவும் தொடர்பில்லை.
பிறந்தநாள்விழாவும் பெயர் சூட்டு விழாவும்
பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள், ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாக இருப்பின் ஓர் ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும்; இது நபிவழி.ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு, ஒரு பித்அத் உருவாகிவிட்டது.
குழந்தை பிறந்த 40 ஆம் நாள் அன்று தடபுடலாக விருந்து வைத்துப் 'பெயர் சூட்டு விழா' என்று அதற்கொரு பெயர் வைத்து, 'அசரத்தைக்' கூப்பிட்டுப் பெயர் சூட்டப்படுகிறது.
குழந்தை பிறந்தாலும் 40. திருமணத்திலும் 40. இறந்தவர் வீட்டிலும் 40. சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிட ஏற்பட்ட இந்த, 'மண்டல'க் கணக்கிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
பெயர் சூட்டுவதற்கு ஒரு விழா வைத்து அசரத்தைக் கூப்பிட்டுத்தான் பெயர் வைக்க வேண்டும் என்பதில்லை. விருப்பமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்கு அதிக உரிமையுள்ள தாயோ, தந்தையோ கூப்பிட வேண்டியது தான். இதற்கென்று எந்தச் சடங்கும் மார்க்கத்தில் இல்லை.
இன்னும் சிலர் அநாச்சாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தையின் வயதுக் கணக்குப்படி மெழுகுவர்த்தி ஏற்றி, கேக் வெட்டி, "ஹேப்பி பர்த் டே" கொண்டாடுகின்றனர். இது முழுக்க முழுக்க ஓர் அந்நியக் கலாச்சாரம். இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை.
மானங்கெட்ட மஞ்சள் நீராட்டு விழா
பெண்கள் பருவம் அடைந்தால், அதற்காக அழைப்பிதழ் அடித்து, உறவினர்களை அழைத்து, பூமாலை போட்டு, பூப்பு நீராட்டு விழா நடத்துவதும் அதற்காக விருந்து போடுவதும் கேட்பதற்கே கேவலமாக இல்லையா? மறைக்க வேண்டிய ஒரு செய்தியை ஊர் முழுக்கத் தம்பட்டம் அடித்து அறிவிக்க, பிள்ளையைப் பெற்றோருக்கு வெட்கமாக இல்லையா? எங்கிருந்து காப்பியடிக்கப் பட்டது இந்த மானங்கெட்ட கலாச்சாரம்?
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவம் அடைகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் அதற்கும் விழா நடத்த ஆரம்பித்து விடுவார்களோ?
பருவம் அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இறைவன் அளித்த அருட்கொடை. இயற்கையாக ஏற்படும் இந்த மாற்றத்தை பகிரங்கப் படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.தனக்கு ஏற்படும் இயற்கை மாற்றங்களை ஒரு பெண் தன் தாயுடன் பகிர்ந்துக் கொண்டு ஆலோசனைகள் பெறலாம். அதைத் தந்தை கூட அறிய வேண்டும் என்று அவசியமில்லை.
"திருமணத்திற்குத் தயாராக ஒரு பெண் வீட்டில் இருப்பதைப் பலரும் அறிந்தால், பெண் கேட்டு வருவார்கள்" என்று சிலர் காரணம் சொல்வார்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் உறவினர்களுக்கும் அண்டை அயலாருக்கும் தெரியவரும். தாமாகவே பெண் கேட்டு வருவார்கள்.இனியேனும் இதுபோன்ற கேவலமான விழாக்களைத் தவிர்ப்போம். மாற்றுக் கலாச்சாரங்களை ஒதுக்கி இஸ்லாமிய வழி நடப்போம்.
ஜாதகமும் ஜோதிடமும்
எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஏக இறைவனைத் தவிர வேறு எவருமே அறிய முடியாது என்று இறைமறை குர்ஆன் கூறுகிறது:
(இன்னும் நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வைத் தவிர்த்து வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்கள். இன்னும் (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 27 : 65)
ஜாதகம் எழுதி வைப்பதும் ஜோதிடத்தை நம்புவதும் பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கும் புறம்பானவை. இஸ்லாத்திற்கு முரணான இக்கொடிய குற்றங்கள் இன்று பல்வேறு பெயர்களில் பாமரர்களிடம் மட்டுமின்றி படித்தவர்களிடமும் பரவி விட்டன.
பெயர் ராசி, பிறந்தநாள் ராசி, பெண் ராசி, கல் ராசி, கலர் ராசி, இட ராசி, இனிஷியல் ராசி, என்று எத்தனைப் பெயர்களில் அவதாரம் எடுத்தாலும், கைரேகை ஜோதிடம், கம்ப்யூட்டர் ஜோதிடம், கிளி ஜோதிடம், பால் கிதாபு ஜோதிடம், என்று எத்தனைப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இவை அத்தனையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம். இவை அனைத்துமே மூட நம்பிக்கை மட்டுமல்ல, மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும். இவை யாவும் அந்நியக் கலாச்சார ஊடுருவல்தான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்:
"எவர் குறி சொல்பவனிடம் சென்று அவன் சொல்வதை உண்மையென நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது" (அறிவிப்பவர் அபூ ஹுரைரா. ஆதாரம் முஸ்லிம்).
நமது எதிர் காலத்தைக் கணித்துச் சொல்வதாகக் கூறி ஏமாற்றுகிறவன், நாள் முழுவதும் வீதிக்கு வீதி காத்துக் கிடக்கிறான். வீடு வீடாக ஏறி இறங்குகிறான். அன்றைய தினத்தில் எத்தனை பேர் தன்னிடம் ஜோதிடம் பார்ப்பார்கள் என்பதைக்கூட அவனால் கணிக்க முடியவில்லை.தன்னுடைய ஒரு நாள் பொழுதைப் பற்றிக் கூட அறிந்துக் கொள்ள முடியாதவன் அடுத்தவருடைய எதிர்காலத்தை கணித்துச் சொல்வான் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்?
ஜோதிடம் என்றதும், பிற மத ஜோதிடக் காரர்களை மட்டும் என்று பலரும் கருதுகின்றனர். 'பால் கிதாபு' என்பதும் அரபுப் பெயர் தாங்கிய ஒரு வகை ஜோதிடமே! பால் கிதாபு பார்க்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் ஜோதிடக் காரர்களே! என்பதை மறந்து விடக்கூடாது.
பால் கிதாபுப் பார்த்துப் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்பவர்களின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் கவனித்தால் அவர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கும். தமக்குத் தாமே பால் கிதாபு பார்த்துப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வக்கற்றவர்கள், மற்றவர் வாழ்க்கையைச் சீர்படுத்துவார்கள் என்று எப்படி நம்புவது?
"ஒவ்வொருவரும் பிறக்கும்போது ஏற்படும் கோள்களின் சஞ்சாரமே நல்லதும் கெட்டதும் நடப்பதற்குக் காரணம்" என்று நம்பும் புத்தி கெட்டவர்கள், புயல் வெள்ளத்திலும், பூகம்பத்திலும் ஒட்டு மொத்தமாக ஓர் ஊரே அழியும் போது, அந்த ஊரில் வாழ்ந்த, பல்வேறு காலங்களில் பிறந்த அனைவருக்குமே எப்படி ஒரே ஜாதகம் அமைந்தது? என்பதைக்கூட சிந்திக்க வேண்டாமா?
ஜாதகமும் ஜோதிடமும் மூட நம்பிக்கைகளில் முதலிடம் வகிப்பவை என்பதை உணர்ந்து, முஸ்லிம் சமுதாயம் முற்றிலும் விடுபட வேண்டும். இறை நம்பிக்கையில் இன்னும் உறுதி கொள்ள வேண்டும்.
தாயத்தும் தகடுகளும்
அல்லாஹ்வின் வசனங்களை, அரபி எண்களாக உருமாற்றி அப்படியே சுருட்டி அலுமினியக் குழாய்களில் அடைத்து, கருப்பு நூலில் கோர்த்துக் கழுத்திலும் கைகளிலும் இடுப்பிலும் கட்டிக் கொண்டால், பில்லி சூனியம் பேய் பிசாசுகளை விட்டும் பாதுகாப்புக் கிடைக்கும் என்று சில அரைக் கிறுக்குகள் சொன்னதை நம்பி, ஆயத்துகளைத் தாயத்துகளாக்கித் தொங்க விட்டுக் கொண்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்:
"எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ நிச்சயமாக அவர் இறைவனுக்கு இணை வைத்துவிட்டார்" (ஆதாரம்: அஹ்மத்).
தற்காப்புக்காகப் பலரும் கராத்தே கற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டு வெறும் தாயத்துகளில் தற்காப்புத் தேடுபவர்களின் மடமையை என்னவென்பது?
தாயத்துகளை நியாயப் படுத்துவோர், "அதில் குர்ஆன் வசனங்கள்தாமே எழுதப்படுகின்றன" என்று கூறுவர். அப்படியானால், குர்ஆன் ஆயத்துகளைக் கட்டிக் கொண்டு மலம் கழிக்கச் செல்லலாமா? என்று கேட்டால், "ஆயத்துகளுக்கு பதிலாக அரபி எண்கள்தாமே எழுதப்படுகின்றன?" என்று அறிவு(?)ப்பூர்வமான பதில் கேள்வி கேட்பர்.இதிலிருந்து எண்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எண்கள் எப்படி மனிதனைப் பாதுகாக்கும்? என்பதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களாக இருக்கின்றனர்.
சில தாயத்துகளைப் பிரித்துப் பார்த்தால், சினிமா டிக்கட்டுகளும், பஸ் டிக்கட்டுகளும் கூட இருக்கும். இவை அவசரமாகத் தயாரிக்கப்பட்ட, "அர்ஜன்ட்" தாயத்துகள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம் தான்.தங்கள் வயிற்றை நிரப்ப, கயிற்றை விற்று ஏமாற்றுகிறார்கள். இன்னுமா நீங்கள் ஏமாறப் போகிறீர்கள்? ஷிர்க்கை ஏற்படுத்தும் தாயத்துகளை அறுத்து எறியுங்கள்.
இன்னொரு அநாச்சாரக் கலாச்சாரம் உண்டு. அதுதான் அரபி எண்களை குறுக்கெழுத்துப் போட்டிக் கோடுகளில் அடக்கிப் பித்தளைத் தகடுகளை பிரேம் போட்டு மாட்டி வைத்தால், வீட்டுக்குப் பாதுகாப்பு என்று மூளையற்றவர்கள் சொன்னதை நம்பி மூலைக்கு மூலைத் தொங்க விடுவது.
இவர்கள் இறை வணக்கங்களால் தங்கள் இல்லங்களை நிரப்புவதை விட்டு, ஈயம் பித்தளைத் தகடுகளில் தங்கள் ஈமானைப் பறி கொடுத்தவர்கள்; பில்லிச் சூனியத்திலிருந்து பாதுகாக்கும் என்று நம்பிப் படிகாரக் கற்களை வீட்டுப் படிகளில் மாட்டி வைத்தவர்கள்; கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று புத்தி கெட்டுப் போய் பூசணிக்காயைக் கட்டி வைத்தவர்கள்; வீடுகளில் மட்டுமின்றி, வியாபார நிறுவனங்களிலும் இந்த 'அஸ்மா'த் தகடுகளை மாட்டி வைத்தால், வியாபாரம் பெருகும் என்று மூட நம்பிக்கைக் கொண்டவர்கள்.

இந்தத் தகடுகளை விற்பனை செய்வோர், தாங்கள் தயாரித்தத் தகடுகள் முழுவதும் விற்றுத் தீரும்படித் தங்களுக்குத் தாங்களே தகடு செய்துக் கொள்ளாமல், கடைக் கடையாய் அலைவதைக் கண்ட பிறகாவது, இது ஏமாற்று வேலை என்பதை உணர வேண்டாமா?இனியேனும், இவைகள் யாவும் இஸ்லாத்திற்கு முரணான மூடப் பழக்கங்கள் என்பதை உணர வேண்டும்
.தரமானப் பொருளும், நியாயமான விலையும், கனிவானப் பேச்சும்தான் வியாபாரத்தைப் பெருக்குமே தவிர, பித்தளைத் தகடுகளும் பிரேம் போட்ட அஸ்மாக்களும் ஒரு போதும் வியாபாரத்தைப் பெருக்காது. மாறாக, பாவப் படுகுழியில் கொண்டு போய் தள்ளும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மரணித்தவர் வீடுகளிலும்
அன்றாட வாழ்க்கையின் அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவல் முஸ்லிமின் மரணத்தைக் கூட விட்டுவைக்கவில்லை.
ஒரு மனிதன் இறந்து விட்டால் இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தி அடைய திதி என்றும் திவசம் என்றும் புரோகிதர்ளைக் கொண்டு பிறமதத்தவர் நடத்தும் காரியங்கள் அவர்களுடைய கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் இவை இஸ்லாத்தில் உள்ளவை அல்லவே!
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த போதே அவர்கள் மிகவும் அன்புடன் நேசித்த அவர்களுடைய மனைவி, நமது அன்னை ஹதீஜா (ரலி) அவர்களும் இன்னும் எத்தனையோ அருமை சஹாபாக்களும் இறந்தனரே! அவர்களுக்கெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 7 ஆம் நாள், 40 ஆம் நாள் என்று எந்த பாத்திஹாவும் ஓதியதாக ஆதாரப்பூர்வமான எந்த நபி மொழியும் நமக்கு அறிவிக்க வில்லையே!
இஸ்லாமியப் பெயர் தாங்கிய புரோகிதர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உருவாக்கிக் கொண்ட இந்த பாத்திஹாக்கள் அனைத்தும் பிறமதக் கலாச்சார ஊடுருவல் தானே தவிர இஸ்லாமியக் கலாச்சாரம் அல்ல.
வணக்கம் கூறுதல்
ஒருவரையொருவர் சந்திக்கும் போது அழகிய முகமன் கூறி அறிமுகம் செய்து கொள்வதற்கு இஸ்லாம், பொருள் பொதிந்த "அஸ்ஸலாமு அலைக்கும் (தங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக)" என்னும் வாக்கியத்தையும் அதனைக் கேட்டவர் மறுமொழியாக, "வஅலைக்குமுஸ்ஸலாம் (அவ்வாறே தங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக)" என்னும் அற்புத பதிலையும் சொல்லித் தருகிறது.ஆனால் சிலர் மாற்று மத நண்பர்களைக் கண்டால், "வணக்கம்" என்று சொல்வதைப் பரவலாகக் காண்கிறோம்.
வணக்கம் என்னும் சொல்லின் பொருள், "நான் உங்களை வணங்குகிறேன்" என்பதாகும். மனிதனை மனிதன் வணங்கலாமா? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகிய லாஇலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமாவுக்கே முரணானதல்லவா?, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை" என்னும் திருக்கலிமாவை மன, மெய், மொழியால் மனதாரச் சொன்ன ஒரு முஸ்லிம் இன்னொரு மனிதனை வணங்குவதாகச் சொல்வது மிகப் பெரிய பாவம் அல்லவா?
நம்மில் பலர் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வணக்கம் என்னும் தமிழ்ச் சொல்லும் 'நமஸ்காரம்', 'நமஸ்தே' என்னும் வடமொழிச் சொற்களும் கூட ஓர் அந்நிய கலாச்சாரம்தான். இவை அனைத்தும் வணங்குதல் என்னும் அதே பொருளையே தருபவையாகும்.
இந்த அந்நிய கலாச்சாரம் நம்மில் ஊடுருவியதால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த அழகிய இஸ்லாமியக் கலாச்சாத்தைப் புறக்கணித்தவர்களாகி விடுகிறோம் என்பது ஒரு புறமிருக்க, 'வணக்கம் கூறுதல்' மனிதனை மனிதன் வணங்கும் ஷிர்க் என்னும் இணைவைத்தலுக்கே கொண்டு போய் சேர்க்கும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் நிறுத்த வேண்டும்.
இஸ்லாமிய சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரிந்து போனதற்கு, அந்நியக் கலாச்சார ஊடுருவல்கூட ஒரு காரணம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம். அந்நியக் கலாச்சாரச்சத்தின் ஊடுருவல் காரணமாகத்தான் நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பல்வேறு காரியங்கள் இஸ்லாத்திற்கு முரணானவையாக இருந்தும், அவற்றை இஸ்லாத்தின் பார்வையில் தவறானவை என்று ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்துச் சொல்லியும் ஏற்றுக் கொள்ள பலர் மறுக்கின்றனர்.
இக்கட்டுரையை முடிப்பதற்கு முன் மகத்துவமிக்க மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியை மறுபடியும் ஒரு முறை நினைவு படுத்திக் கொள்வோம்:
"எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" மற்றொரு அறிவிப்பில், "அவர்களையே சார்ந்தவர்" என கூடுதலாக இன்னொரு வாசகமும் இடம் பெற்றுள்ளது.
இறைவன் தனது திருமறையில் இயம்பியவைகளையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் பொன்மொழிகளில் போதித்தவைகளையும் உள்ளது உள்ளபடி உணர்ந்து, நம்மில் நுழைந்து விட்ட அந்நிய கலாச்சார ஊடுருவல்களைக் கண்டு பிடித்து களையெடுத்தால், அறியாமையால் ஏற்பட்டுப் போன பிரிவுகளும் பிளவுகளும் நீங்கி ஒன்று பட்ட உயரிய சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் திகழும். இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: சகோதரர் அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா

இக்கட்டுரையாசிரியரான தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தியைச் சேர்ந்த சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்கள் தமிழில் இஸ்லாமியக் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார். ஆக்கூர் ஓரியண்டல் மேனிலைப் பள்ளியிலும் பின்னர் உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியிலும் கல்வி பயின்ற இவர் தற்போது சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.

'கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்',
'புண்ணியபூமிக்கு ஒரு பயணம்',
'மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்',
'மரணத் தொடக்கம் மறுமை வரைக்கும்'
என்ற பெயர்களில் நூல்களை எழுதியுள்ள இவர்,
என்ற பெயரில் வலைப்பதிவையும் நடத்தி வருகிறார்.

2007ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! - சத்தியமார்க்கம்.காம்

Feb 3, 2008

புகழ்வதற்கு அதிகத் தகுதி உடையவர்?

உறவினர் இல்லத் திருமண விழா ஒன்றில் சிலர் ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். பேச்சு தவ்ஹீதின் பக்கம் சென்றது. பொதுவாகவே ஏகத்துவக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் உயரிய எண்ணத்தில், எப்போது வாய்ப்பு கிடைக்கும் ஏகத்துவக் கொள்கையை எல்லோருக்கும் எடுத்தியம்புவோம் எனக் காத்திருப்பார்கள் அல்லவா? அவ்வகையில் இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.

எங்கள் உறவினர் மத்தியில் நற்குணத்திலும் நல்லொழுக்கத்திலும் மிகவும் நற்பெயர் பெற்ற எனது நெருங்கிய உறவினர் தமது நண்பர் ஒருவரிடம் என்னைப் பற்றி புகழ்ந்து அறிமுகம் செய்து செய்துக் கொண்டிருந்தார். என்னைப் பற்றி உயர்வான அபிப்பிராயங்களைச் சொல்லி இறுதியில் 'ஆனால் இவர் நஜாத்' என்று முடித்தார். என்னைப்பற்றி உயர்வாகச் சொன்ன அனைத்துக்கும் நான் தகுதியானவனா? என்பது எனக்குத் தெரியாது, ஆனால் என்னை (இவர்கள் மொழியில் நஜாத் நமது மொழியில்) தவ்ஹீத் என்று அறிமுகம் செய்தது மட்டும் எனக்குப் பெருமையாக இருந்தது. ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை தவ்ஹீத் என்று சொல்வதில் தான் பெருமை அடைய முடியும் அல்லவா!

பேச்சு களைகட்டத் தொடங்கியது. எனது உறவினராகிய அவர் தொடர்ந்தார். தனது மைத்துனர் துபாயில் ஒரு பெரிய ஷெய்கிடம் 'நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது தவறா? எனக் கேட்டாராம், அதற்கு அந்த ஷெய்க் 'நபி (ஸல்) அவர்களைப் புகழாமல் வேறு யாரைப் புகழ்வது?' என பதில் சொன்னாராம். அதற்கு இவர் எங்கள் தமிழ் நாட்டில் ஒரு கூட்டம் 'நபி (ஸல்) அவர்களைப் புகழக்கூடாது' எனச் சொல்கிறார்கள் என்று சொன்னாராம்.

இப்படி ஒரு செய்தியைச் சொன்ன இவரும், துபாயில் ஷெய்கிடம் பத்வா கேட்ட இவர் மைத்துனரும் பாமரர்களல்ல. நன்றாகப் படித்தவர்கள், நாலும் தெரிந்தவர்கள், வணக்க வழிபாடுகளில் பேணுதலானவர்கள், இறையச்சம் உடையவர்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது இவர்கள் கூட இன்னும் தவ்ஹீத் என்றால் என்ன வென்று புரிந்துக் கொள்ளவில்லையே! அப்படியிருக்க பாமர மக்களை நாம் குறைபட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை.

எனக்கு ஒரு உதாரணம் சொல்லத் தோன்றுகிறது. 'குழந்தைக்கு பால் கொடுக்கலாமா என்று பண்டிதர் அல்ல பாமரரிடம் கேட்டாலும் 'பாலை குழந்தைக்குக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுப்பது?' என்று தான் பதில் சொல்வர். கையில் வைத்திருக்கும் பாலைக் காண்பித்து 'இந்தப் பாலை குழந்தைக்கு கொடுக்கலாமா?' எனக் கேட்டால் அந்தப் பாலை பரிசோதனை செய்து நல்ல பால் தானா அல்லது கெட்டுப் போனதா? பசும் பாலா, கள்ளிப்பாலா, விஷம் கலந்த பாலா நல்ல பாலா என்பதை யெல்லாம் உறுதி செய்த பின்னர் தானே இந்தப் பாலை குழந்தைக்குக் கொடுக்கலாமா கூடாதா என முடிவு செய்ய இயலும்.

அது போல நபி (ஸல்) அவர்களைப் புகழ்வது தவறா? என்று அவர் கேட்டதை விட, எங்கள் தமிழ் நாட்டில் ரபீவுல் அவ்வல் மாதம் 12 நாளும் பள்ளிவாசலிலும் வீடுகளிலும் சுப்ஹான மௌலிது என்று ஓதுகிறோம். அந்த மௌலிதுப் புத்தகம் இது தான் என்று சுப்ஹான மௌலிது கிதாபையும் காண்பித்து அதை ஓதுவதற்காக கூலிக்கு ஆள்பிடித்து, கும்மாளம் அடிக்கிறோம் என்று விலா வாரியாக விளக்கிச் சொல்லியிருந்தால் அந்த ஷெய்க் சுப்ஹான மௌலிது கிதாபைப் படித்துப் பார்த்து விட்டு கிழித்து வீசியிருப்பார்.

இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? நபி (ஸல்) அவர்களைப் புகழாமல் வேறு யாரைப் புகழ்வது? என்று துபாய் ஷெய்க் சொன்ன வார்த்தைகளை அப்படியே ஒப்புவித்த அந்த எனது உறவினர் அவர்கள், அன்று நாங்கள் அமர்ந்து உரையாடிய அதே ஊரைச் சேர்ந்தவர். சரி இந்த ஊரில் நபி (ஸல்) அவர்கள் எப்படி புகழப்படுகிறார்கள் எனப் பார்ப்போமா?

தஞ்சையை அடுத்துள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர் அது. இவ்வூரில் எனக்குத் தெரிந்து பல வருடங்களாக ரபீவுல் அவ்வல் 12 நாட்களும் பள்ளிவாசலில் மௌலிது ஓதி இரவில் தினமும் தப்ருக் என்ற பெயரில் சாதாரண இனிப்புப் பண்டங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் ரபீவுல் ஆகிர் 12 நாட்களும் முஹ்யித்தீன் ஆண்டவர்(?) மௌலிது ஓதி தினமும் இரவில் அனைத்து மக்களுக்கும் கமகமக்கும் நெய்ச்சோறு நிறையவே வழங்கப்படும்.

இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?

ரபீவுல் அவ்வல் மௌலிது விழா வெறும் பாத்திஹாவுடன் சிம்பிளாக முடிந்து விடும். ரபீவுல் ஆகிர் முஹ்யித்தீன் மௌலிது விழா ஊர் முழுக்க தோரணம் கட்டி, பல்லாயிரம் படி சோறாக்கி பள்ளிவாசலில் வைத்து விநியோகித்து, நான்கு கொடி தூக்கி நகர் முழுதும் வலம் வந்து, இந்த ஊர்க்காரர்கள் கொண்டாடுகிற அழகே அழகு?

இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளாகிய மீலாதுன்னபிக்கு அரசாங்கம் விடுமுறை அளித்ததனால் தான் இவர்கள் ஊரில் உள்ள பள்ளிக் கூடம் விடுமுறை விடப்படுகிறது. அதற்கு முன்பெல்லாம் மீலாது தினத்தன்று இவர்கள் ஊர் பள்ளிக் கூடம் விடுமுறை விட்டதிi;லை. ஆனால் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் பிறந்த நாள் அன்று அந்தக் காலத்திலிந்தே பள்ளிக் கூடம் எல்லாம் விடுமுறை நாளாகும்.

இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?

அயல் நாடுகளில் வாழும் இந்த ஊர்க்காரர்கள் பலரும் தங்கள் விடுமுறை காலத்தை கொடிச் சீலை? என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திரு விழாவில் கலந்து கொள்வதற்கேற்ப மாற்றி வைத்துக் கொள்வாhகள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளாகிய மீலாது நபிக்கு தங்கள் விடுமுறை காலத்தை மாற்றி வைத்து இந்த ஊர்க்காரர்கள் யாரும் அரபு நாடுகளிலிலிருந்து வந்ததாகத் தெரிய வில்லை.

இவர்கள் சொல்கிறார்கள், புகழ்வதற்கு அதிகம் தகுதியானவர் நபி (ஸல்) அவர்களைவிட வேறு யார் இருக்க முடியும் என்று?

இதையெல்லாம் படிப்பவர்கள் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களின் மெளிலிதுக்குப் பதிலாக நபி (ஸல்) அவர்களின் மௌலிதை சிறப்பாக நாம் ஓதச் சொல்வதாகவோ, அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பிறந்த நாளுக்குப் பதிலாக நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கோலாகலமாக கொண்டாடுங்கள் என்று நாம் சொல்வதாகவோ தயவு செய்து நினைத்து விட வேண்டாம். இரண்டையுமே மிகவும் வன்மையாக நாம் கண்டிக்கிறோம். இவை எதுவுமே இஸ்லாத்தில் உள்;ளவை அல்ல என்றும், மிகப் பெரும் பாவங்கள் என்றும் சொல்கிறோம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவர்கள் காட்டித் தராத அனைத்து விழாக்களும் வழி கேடுகள். அனைத்து வழிகேடுகளும் நரகப் படுகுழிக்கு நம்மை இழுத்துச் செல்லும்.







Jan 16, 2008

அரபு நாட்டு வாழ்வு

வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே

உலக வரைபடம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து மற்ற எல்லா நாடுகளையும் போல் வளைகுடா நாடுகளும் அந்த வரைபடத்தில் இருக்கத்தான் செய்தன. ஆனால் எத்துனை பேருக்கு இந்த வளை குடா நாடுகளைப்பற்றி அப்போது தெரியும்? மக்காவும் மதீனாவும் உலக முஸ்லிம்களின் புனித நகரங்களாக இருப்பதால் இவ்விரு நகரங்களைப் பற்றி வேண்டு மானால் முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் இவ்விரு நகரங்களையும் உள்ளடக்கிய சவூதி அரேபியா என்ற நாட்டைப் பற்றிக் கூட முழுமையாக அறிந்தவர் மிகச் சிலரே.


எண்ணெய் வளம் என்னும் மாபெரும் பொக்கிஷம் இந்த பாலைவன மணலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட போது அகில உலகமும் தன் பார்வையை அரபு நாடுகளின் மீது பதித்தது. அகில உலகமும் எண்ணெய் உபயோகத்திற்கு ஆட்பட்டபோது அதன் வளத்தை வறண்ட அரபுப் பாலைவனத்தின் அடியில் உருவாக்கி உலகின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பவர்களாக முஸ்லிம்களை ஆக்கிவைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.


1970 களில் வெளி உலகத்துக்குத் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்ட வளைகுடா நாடுகள், வெகு வேகமாக முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தன. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மேற்கத்திய நாடுகள் அடைந்த முன்னேற்றத்தை விட அதிக முன்னேற்றத்தை ஒரு பத்தாhண்டு காலத்தில் வளைகுடா நாடுகள் அடைந்தன என்றால் அது மிகையாகாது.


வளைகுடா நாடுகள் தங்களின் எதிர்காலத் திட்டங்களை செயல் படுத்து வதற்குத் தேவையான பொருளாதார ஆற்றல் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கப் பெற்றாலும், மனித வள ஆற்றலுக்கு கைகொடுத்த பெருமை மிக்கவர்களில் இந்தியர்களாகிய நம் பங்கு முக்கியமானது என்று சொல்லலாம்.


துவக்கத்தில் பர்;மா ரங்கூன் போன்ற நாடுகளையும், அதன் பின்னர் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளையும் வளப்படுத்திய பெருமைக்குரியவர்களாகிய நம்மைச் சென்ற நூற்றாண்டில் வளைகுடா நாடுகள் தம் வாசற்கதவுகளைத் திறந்து வைத்து ஆரத்தழுவி வரவேற்றதையும், இன்றளவும் தொடர்ந்து நம்மை வாழவைத்துக் கொண்டிருப்பதையும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.


இன்று நாம் வாழும் செழிப்பான வாழ்வும், நமது பொருளாதார வளமும், வளைகுடா வாழ்க்கையின் மூலம் நாம் அடைந்த பயன்களே. ஏழ்மையிலும் வறுமையிலும் உழன்ற எத்தனையோ சகோதரர்கள் கற்பனையிலும் கண்டிராத வளமான வாழ்க்கை வாழ்வது இறைவன் நமக்களித்த இந்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரத்தினால் தான் என்றால் அது மிகையல்ல.


வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், போன்றவற்றால் விழி பிதுங்கி நின்ற நமக்கு வளை குடா நாடுகள் தம் வாசற்கதவைத் திறந்து வைத்து வரவேற்ற போது இன் முகத்தோடு ஏற்றுக் கொண்டோம். வளை குடா நாட்டில் அடியெடுத்து வைத்த பின்னர் தான் நம்மில் பெரும்பாலானோரின் பொருளாதார வளம் மேம்பாடு அடைந்தது.கற்பனையில் கூட நாம் நினைத்துப் பார்த்திராத எண்ணற்ற வசதிகளை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரமே.


பெற்றோரை, உற்றாரைப் பிரிந்தோம், மனைவியுடன் வாழவேண்டிய இல்லற வாழ்க்கையை மறந்தோம். கொஞ்சிக் குலாவ வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளின் பாசம் நமக்குக் கிடைக்காமற் போனது. இவையெல்லாம் உண்மை தான். பல சுகங்களைப் பெறுவதற்காக சில இழப்புகளை சந்திக்கத்தான் வேண்டும். அனைத்து சுகங்களையும் ஒருங்கே பெற்ற யார் தான் இந்த அவனியில் இருக்கின்றார்?


பொதுவாகவே வறுமை தான் மனிதனை சில சமயம் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது. மற்றவை அனைத்தும் இரண்டாம் பட்சமே. பொருளாதாரத்தில் ஒருவன் ஏற்றம் பெற்றால் மற்றவைகளை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. பொருளாதாரத் தேவை நூறு சதவிகிதம் நிறைவு பெற்றதாக திருப்தி அடைந்த மனிதன் உலகில் யாரும் இல்லை என்றாலும், தமது அத்தியாவசித் தேவைகள் பூர்த்தியடைந்தவர்கள் பலருக்கும் இந்த வளை குடா வாழ்க்கை ஒரு வரமே.


மண் குடிசைகள் மாளிகைகளாக உருவெடுத்தன. மண் வீட்டில் கழித்த நாட்கள் நமக்கு இப்போதும் மறந்து விடவில்லை. ஆனாலும் இறைவனின் பெரும் கிருபையால் வசதிமிக்க மாடி வீடுகளில் இப்போது வசிக்கிறோமே. இதற்குக் காரணம் வளைகுடா வாழ்க்கை அல்லவா? வளைகுடாவில் வந்து மண் சுமந்தோம் என்றாலும் நமது எதிர்காலச் சந்ததியினர் மண் சுமக்கத் தேவையில்லாத அளவுக்கு அவர்களை மாடி வீடுகளில் வாழச் செய்து அவர்களின் துயர் துடைத்தோமே.


உடுத்த ஒரு துணிக்கு மாற்றுத் துணி இல்லாமல் சிரமப்பட்ட காலமெல்லாம் இப்போது போய்விட்டது. புத்தாடை என்றால் நோன்புப் பெருநாளைக்கு மட்டும் தான் அதுவும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் நமது பெற்றோர் வாங்கிக் கொடுத்த விலை குறைந்த ஆடைகளை வேண்டா வெறுப்பாக அணிந்தோம். சக நண்பர்கள் அணிந்த சட்டைகளை ஏக்கத்துடன் பார்த்தோம். இன்று விதவிதமான ஆடைகளை அணிகிறோம்.


கட்டிய மனைவிக்கு ஒரு நல்ல புடவை வாங்கிக் கொடுக்க இதயம் முழுக்க ஆசை இருந்தும் இருக்கின்ற பணம் போதாத நிலையில் இதயத்தை கல்லாக்கி சாதாரணப்புடவை வாங்கிக் கொடுத்தோம். இன்று அவள் விரும்பியபடி விலையுயர்ந்த புடவைகளை வாங்கிக் கொடுத்து அந்த முகத்தில் மகிழ்ச்சியைக் காண்கிறோம். நம் அன்புக் கண்மணிகளுக்கு வகை வகையான உடைகளை வாங்கிக் கொடுக்கிறோம்.


குளிர் சாதனப் பெட்டியும், வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டியும், ஒரு காலத்தில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்துபவை என்ற நிலை மாறி இன்று நம் அனைவரின் வீடுகளையும் இந்த ஆடம்பரப் பொருட்கள் அலங்கரிக்கின்றன. பாழாய்ப் போன சீரியல்களில் மயங்கிப் போனவர்களை விடுங்கள், பயன்மிக்க இஸ்லாமிய நிகழ்ச்சிகளைப் பார்த்து தங்களைப் பக்குவப் படுத்திக் கொள்ள வழிவகுத்த பயனுள்ள தொலைக் காட்சிப் பெட்டிகள் நமக்கு எப்படி வந்தன? இதற்கெல்லாம் தேவையான பொருளாதார வளம் நமக்கு எப்படி வந்தது? வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம் அல்லவா?


மேற்கல்வி கற்க வசதி இல்லாமல் ஆரம்பக் கல்வி கற்றதோடு நமது வாழ்வு அஸ்தமித்து விட்டாலும் நம் அன்புக் குழந்தைகளை இன்று மேற்கல்வி வரை தொடர வைத்தோமே! கல்வி வியாபாரமாகிவிட்ட இக்காலத்தில் நம் குழந்தைகளளை இலட்சக் கணக்கில் செலவு செய்து மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியில் கல்லூரிகளிலும் பட்டம் பெற வைத்தோமே இதற்கெல்லாம் பொருளாதாரம் நமக்கு எப்படி வந்தது? வளைகுடா வாழ்க்கை நமக்குக் கிடைத்த வரம் அல்லவா?


முஸ்லிம்கள் நலனுக்காகப் பாடுபடும் எத்தனையோ இயக்கங்கள் அவர்களின் செயல்பாடுகளைச் சீரிய முறையில் செயல்படுத்தத் தேவையான மிகப் பெரும் பொருளாதார உதவிகளை வளைகுடா நாடுகளில் வசிக்கும் நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் வாரி வாரி வழங்கி வருகின்றோமே. தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உள்ள மக்கள் இதனைக் கொண்டு பயன் பெறுகிறர்hகளே பயன் பெற்ற நெஞ்சங்கள் வளைகுடாவில் பணிபுரியும் நமக்காக இறைவனிடம் இறைஞ்சுகிறார்களே இதற்காகவாவது நாம் சில தியாகங்களைச் செய்தால் தான் என்ன?


புனித ரமளான் மாதம் வந்து விட்டால் போதும் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு இயக்கங்களும் கடமையான ஃபித்ராத் தொகையை வசூலித்து பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள் மகிழ்ச்சியாகப் பெருநாள் கொண்டாடி மகிழ்வதற்காக அனுப்பி வைக்கிறார்களே. நமது சமுதாயம் அடையும் இந்த மகிழ்ச்சிக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை செலுத்துகிறோமே. இதற்குக் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை இறைவன் நமக்கு அளித்த வரம் அல்லவா?


இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்த எத்தனையோ முஸ்லிம் சகோதரர்கள் வளைகுடா நாடுகளுக்கு வந்த பின்னர் தான் இங்கு நடைபெறும் பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டனர். அவரவர் தம் தாயகத்துக்கு விடுமுறையில் செல்லும் போது தத்தம் குடும்பத்தினருக்கும் உண்மையாண இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி தம் குடும்பத்தினரையும் திருத்தினர். அதற்கான அத்துனை வாய்ப்புகளையும் நமக்கு இந்த வளைகுடா வாழ்க்கை தானே ஏற்படுத்தித் தந்தது.


தமிழகத்தின் சில ஊர்களைச் சேர்ந்த மக்கள் ஒரு காலத்தில் குடும்பத்துடன் வேறு ஊர்களுக்குக் குடி பெயர்ந்து கூலி வேலை பார்த்து மிகவும் சிரமத்துடன் தங்கள் வாழ்நாட்களைக் கழித்தவர்கள் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்புகள் தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே வந்து தமது கடின உழைப்பால் அபரிமிதமான பொருளீட்டி இன்று இறைவனின் பேரருளால் வாழ்வாங்கு வாழ்கின்றனர் இதற்குக் காரணமாகிய வளைகுடா வாழ்க்கை இவர்களுக் கிடைத்த வரமல்லவா?


தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் இயங்கி வரும் எத்தனையோ இஸ்லாமியக் கல்வி கூடங்கள் ஒரு காலத்தில் மிகவும் சிரமத்துடன் நாட்களை நகர்த்தின. அந்தக் கல்விக் கூடங்களில் கல்வி பயின்று பின்னர் வளைகுடா நாடுகளுக்கு வந்த, முன்னாள் மாணவர்களில் கொடைத்தன்மை மிக்க எண்;ணற்றோர் செய்த உதவிகள் மூலம் இன்று அந்தக் கல்விக் கூடங்களில் பல மிக நல்ல நிலையில் இயங்குவதுடன் ஏராளமான மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவே இதுவும் இறைவன் நமக்களித்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரம் தானே.


பல்வேறு குண நலன் கொண்டவர்களுடன் பழகும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. நமது மாறுபட்ட குணங்களை மாற்றிக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும், இந்த வளைகுடா வாழ்க்கை நமக்கு பயிற்சியைத் தந்தது. பக்குவத்தை அளித்தது. பெற்றோருக்கு அடங்காமல் தான்தோன்றித் தனமாக தம் வாழ்க்கையைக் கழித்த எத்தனையோ இளைஞர்கள் வளைகுடா நாடுகளுக்கு வந்த பின்னர் தங்கள் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொண்டனர். கட்டுப்பாடான இந்த வாழ்க்கை அவர்களின் எதிர் காலத்தைச் சீர்படுத்திக் கொள்ள வழி வகுத்தது.


நமக்குத் தேவையான உணவை நாமே சமைத்துக் கொள்ளும் போதும், நமது துணிகளை நாமே துவைத்துக் கொள்ளும் போதும் நம் வீடுகளில் நம் தாயோ மனைவியோ உணவு சமைக்கவும் துணி துவைக்கவும் படும் சிரமங்களை நம்மால் உணர்ந்துக் கொள்ளவும், புரிந்துக் கொள்ளவும் முடிந்தது. அதன் மூலம் அவர்கள் மீது நமக்கிருக்கும் அன்பும் பாசமும் அதிகரித்தது.


தத்தம் இல்லங்களில் தமது துணிகளை மட்டுமின்றி தமது மனைவியின் துணிகளையும் துவைத்துக் கொடுத்து மனைவியிடம் நற்சான்று வாங்கிய நல்ல கணவன்மார்களை விட்டு விடுவோம். அப்பாடா! இப்போது நமது துணியை மட்டும் துவைத்தால் போதும் என்று மகிழ்ச்சியில் திளைப்பவர்களும் இருக்கிறார்கள். ('அனுபவம் பேசுகிறது' என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள்) அப்படிப் பட்டவர்களுக்கும் வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே.


தம் வாழ்க்கையில் ஏற்பட்ட சில குறைகளை காரணம் காட்டி வளை குடா வாழ்க்கை ஒரு சாபம் என்று சொல்லக் கூடிய பலரும் இன்னமும் வளைகுடாவில் வாழ்ந்துக் கொண்டு தான் நாக்கூசாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்படிச் சொல்பவர்களை யாரும் நிர்ப்பந்தப் படுத்தி வளைகுடாவில் வாழச் சொல்ல வில்லையே. இதனைச் சாபம் என நினைப்பவர்கள் தாராளமாக அவரவர் நாடுகளுக்கு திரும்பிச் செல்லட்டும். அவர்களை யார் தடுத்தது? அவர்கள் தாங்கள் இந்த வரத்தை அனுபவித்துக் கொண்டே சாபம் என்று கூப்பாடு போடுகின்றனர்.


இதனைச் சாபம் என்று நினைப்பவர்களே தயவு செய்து உங்கள் தாயகங்களுக்குச் சென்று விடுங்கள். வளைகுடா வாழ்க்கை என்னும் வரத்தை அனுபவிக்க இன்னும் இலட்சக் கணக்கானோர் தாயகத்தில் காத்திருக்கின்றனர். தயவு செய்து அவர்களுக்கு வழி விடுங்கள்.


இன்னும் ஏராளனமான சமுதாயப் பணிகள் போதிய பொருளாதாரமின்றித் தேங்கிக் கிடக்கின்றன. நாமும் வளைகுடா நாடுகளுக்குச் சென்று ஈட்டும் பொருளாதாரத்தில் எண்;ணற்ற ஏழைகளை வாழவைப் போம் என்ற நல்ல நோக்கத்துடன் காத்திருக்கும் இளைஞர்கள் இங்கு வருவார்கள். அவர்களின் பொருளாதாரா உதவியால் அந்தந்த நாடுகளில் வாழும் அனைத்து சமுதாயத்தினரும் அளப் பெரும் நன்மைகளை அடையட்டும்.


சில வருடங்கள் வளைகுடா நாடுகளில் தங்கள் வாழ்க்கையைக் கழித்து விட்டு தாங்கள் மனம் திருந்தி (?) விட்டதாகச் சொல்லி பயணத்தை முடித்துக் கொண்டுச் சென்றவர்கள் தாங்கள் கொண்டு சென்ற பணம் முழுவதையும் செலவழித்து முடித்த பின் மேற் கொண்டு கடன் வாங்கிவிட்டு, வாங்கிய கடனை அடைப்பதற்காக தம் முன்னாள் நண்பர்களைத் தொடர்பு கொண்டு மறுபடியும் ஒரு விசாவுக்காக ஏற்பாடு செய்யச் சொல்வதைக் கண்கூடாகக் காண்கிறோம்.


இவ்விதம் சாபம் என்ற கட்சியிலிருந்து வரம் என்ற கட்சிக்கு இடம் மாறியவர்கள் எத்தனையோ. வரம் என்ற கட்சிக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை இந்த வகை மூலம் இன்னும் கூடிக் கொண்டுதான் போகின்றது. இவர்களைக் கேளுங்கள் தாங்கள் அறியாமல் சாபம் என்று சொன்னதற்காக கைசேதப் படுவது மட்டுமின்றி வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்று குன்றின் மீது ஏறி நின்று குரலை உயர்த்திச் சொல்வார்கள்.


குஜராத்தில் நம் இனத்தவர் வீடு வாசல்களை இழந்து, சொத்துக்கள் சூரையாடப்பட்டு வன் கொடுமையை அனுபவித்துத் திக்கற்றவர்களாக திசை தெரியாமல் தத்தளித்தபோது கோடிக் கணக்கில் வாரி வழங்கி அவர்களின் துயர் துடைத்த பெருமை வளைகுடா வாழ் சகோதரர்ளைச் சாரும். சாதி மத வித்தியாசமின்றி வாரிக் கொடுத்த வளைகுடா வாழ் நெஞ்சங்களை வாழ்த்திய அந்த குஜராத் நெஞ்சங்களைக் கேட்டுப் பாருங்கள், இந்த வளை குடா வாழ்க்கை நம்மவருக்குக் கிடைத்த வரம் தான் என்று வாயாரச் சொல்வார்கள்.


கோவையில் ஒரு இனவெறிக் கும்பல் கோரத்தாண்டவம் ஆடி அப்பாவி மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசப்படுத்தியும், சூரையாடியும் நிர்மூலமாக்கிய போது, பொருளாதாரா ரீதியாக அந்நகர மக்களுக்குப் பேருதவி புரிந்தவர்களில் அதிக பங்களிப்பை நல்கியவர்கள் வளைகுடா வாழ் சகோதரர்கள் அல்லவா? வழங்கியவர்களும்,இந்து முஸ்லிம் என்று பேதம் பார்க்காமல் வழங்கினார்கள். அதைப் பங்கிட்டுக் கொடுத்தவர்களும் அவ்விதம் பேதம் பார்க்காமல் கொடுத்தார்கள். அந்தக் கோவை வாழ் மக்களைக் கேட்டுப் பாருங்கள், இந்த வளை குடா வாழ்க்கை நம்மவருக்குக் கிடைத்த வரம் தான் என்று மனமாரச் சொல்வார்கள்.


இந்த நூற்றாண்டில் இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் ஒன்று தான் இணைய தளம் என்னும் அற்புதமான அருட்கொடை. இஸ்லாத்தைப் பற்றி முழுமையான விபரங்களைத் தெரிந்துக் கொள்ளவும், தெரிந்துக் கொண்ட கருத்துக்களைப் பலருக்கும் எடுத்துரைக்கவும் மிக அருமையான ஊடகமான இஸ்லாமிய இணைய தளங்களும், மற்றும் வலைப்பதிவுகளும்,


இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அவ்வப்போது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறுகளுக்கும் உடனுக்குடன் பதில் கொடுத்தும், உண்மையான இஸ்லாத்தை உலகறிய உரத்த குரலில் முழங்கும் இணைய தளங்களும், மற்றும் வலைப் பதிவுகளும்,

அவரவர் தனிப்பட்ட முறையில் தத்தம் கருத்துக்களையும் ஆக்கங்களையும் பிறருடன் பகிர்ந்துக் கொள்ளும் இஸ்லாமிய வலைப்பதிவுகளும் இண்டர் நெட்டில் மலிந்துக் கிடக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படுபவை என்பதை இணைய தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளுடன் அதிகத் தொடர்புடைய பலரும் அறிவர்.

தூய இஸ்லாத்தை தரணியெங்கும் வாழும் முஸ்லிம்கள் அறிந்துக் கொள்ளும் விதத்தில் இந்த அற்புத ஊடகத்தை பயன்படுத்தவும், பலரையும் பயன்பெறச் செய்யவும் காரணமாக அமைந்தது கூட நமக்குக் கிடைத்த வளைகுடா வாழ்க்கை என்னும் வரம் தானே.


வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்பதற்கு அடுக்கடுக்காக இன்னும் பல காரணங்களை எடுத்து வைக்க முடியும். ஆனால் சாபம் என்பதற்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் ஒரே காரணம் இல்லற வாழ்க்கையின் இளமை இங்கேயே பாழாகி விட்டது என்பது தான். மீதமுள்ள அனைத்துக் காரணங்களையும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வார்கள்.


எதிர்காலத் திட்டங்கள் சரியான முறையில் தீட்டப்படாமல் காலமெல்லாம் வளைகுடாவிலேயே கழிக்காமல் அநாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பொருளாதாரச் சேமிப்பை அதிகப்படுத்தி வருமானத்துக்கு ஒருவழியை ஏற்படுத்திக் கொண்டு தத்தமது நாய் நாடுகளுக்குச் சென்று நிரந்தரமாகத் தங்கலாமே. கட்டுரையின் தலைப்பு வளைகுடா வாழ்க்கை வரமா சாபமா என்பது தான். தலைப்பு நிரந்தர வளைகுடா வாழ்க்கை வரமா சாபமா என்பதல்ல. அப்படிப் பார்த்தாலும் சாபம் எனக் கூறுபவர்கள் கூட தங்களின் எதிர்கால வருமானத்துக்கு ஒரு வழியைத் தேடிக் கொள்ளவும், சேமிப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பாகிய வளைகுடா வாழ்க்கை ஒரு வரமே என்பதை மனமார ஒப்புக் கொள்வார்கள்
.

நம்மில் பலர் வறுமை நீங்கி வளவாழ்வு வாழ்வதற்கும், நம் எதிர்காலச் சமுதாயம் சிறந்து விளங்கிட நம்மால் இயன்றவரை நம் பங்களிப்பை நல்கியதற்கும், நமது மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டதற்கும், நமது பழக்க வழக்கங்களைப் பண்படுத்திக் கொண்டதற்கும், நம் சமுதாய இயக்கங்கள் நல்லமுறையில் செயல்படுவதற்கு பொருளாதார ரீதியில் நாம் பேருதவி புரிவதற்கும், இப்படி எத்தனை எத்தனையோ நற்காரியங்கள் நடைபெறுவதற்குக் காரணமாகிய நமது வளைகுடா வாழ்க்கை இறைவன் நமக்களித்த வரம் தான்.


வறுமைக் கோட்டுக் கீழ் வாழுகின்ற எண்ணற்றோர் தாயகத்தில் வேலை வாய்ப்பின்றி அவதிப்படுகின்றனர். தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளவும் வளமான எதிர்காலக் கற்பனைகளோடும் வாடுகின்ற ஏராளமானோர் வளைகுடா வாழ்க்கை என்னும் கொழுக் கொம்பு நமக்குக் கிடைக்காதா? பற்றிப் பிடித்துக் கொண்டு முன்னேறி வர மாட்டோமா என்று ஏங்கிக் கிடக்கின்றனர். சாபம் என நினைப்பவர்களே சற்று ஒதுங்கி வழிவிடுங்கள். வரம் என நினைப்பவர்கள் வந்து அனுபவிக்கட்டும்.



Dec 24, 2007

இணையத்தில் இஸ்லாம்


இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த உலகம் ஒரு மாபெரும் புரட்சியைக் கண்டது. ஆம் அது தான் இணையப் புரட்சி. உலகின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் இப்புரட்சி பரவியது. அனைத்து வகை மக்களிடமும் இப் புரட்சி தன் முத்திரையைப் பதித்தது.

இணையப் புரட்சி தோன்றிய பின்னர் தான் கணிணியின் உபயோகம் வெகுவாக வளர்ந்தது. அதற்கு முன் வரை அரசு அலுவலகங்களிலும் பெரும் நிறுவனங்களிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கணிணிகள் சாதாரண மனிதர்களும் பயன்படுத்தும் அளவுக்கு பரவலான பயன்பாட்டுக்கு வந்தது இணையப் புரட்சிக்குப் பின்னர் தான்.

உலகளாவிய அளவில் தேசங்கள், இயக்கங்கள்;, மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பயன்பட்ட இந்த ஊடகம் தனி மனிதனுக்கும் பயன்பட ஆரம்பித்தபோது இதற்காகவே காத்திருந்தது போல் முஸ்லிம்களும் தமது ஏகத்துவக் கொள்கையை இகமெங்கும் பரப்ப இந்த அற்புத ஊடகத்தை பயன்படுத்தத் தொடங்கினர்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம் வார்த்தைகளை இணைய தேடுதலில் இட்டு தட்டினால் எண்ணற்ற இணைய தளங்கள் நம் பார்வையில் வந்து நம்மைத் திகைக்க வைக்கின்றன.

கணிணியைப் பயன்படுத்தவும் இணைய தளங்களில் உலா வரவும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் அந்தக் காலம். இனிய தமிழில் இஸ்லாத்தைப் பரப்பவும், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இணைய உலகில் எடுத்து வைக்கப்படும் குற்;றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கவும் ஏராளமான இணைய தளங்கள் தம் பணியை இனிய தமிழில் செவ்வனே செய்துக் கொண்டிருக்கின்றன. அல்ஹம்து லில்லாஹ்.

தமிழ் இணைய உலகில் மார்க்கச் சேவை புரியும் இணைய தளங்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலானவை ஏகத்துவக் கொள்கையை எடுத்துவைக்கும் சிறந்த இணைய தளங்களாகத் திகழ்வதும், ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஏகத்துவக் கொள்கைளை எடுத்துரைப்பதில் தமது பங்களிப்பை நல்கி வருவதும் மகிழ்ச்சிக்குரிய செய்திகளாகும்.

பத்திரிகைகளும் மற்றும் தொலை ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்ற இஸ்லாமிய உலகச் செய்திகளை உடனுக்குடன் தருகின்ற பல்வேறு இணைய தளங்கள் ஒரு வகையில் சமுதாயத்துக்கு தொண்டு செய்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

இளைய சமுதாயத்தின் இதயங்களில் வக்கிர எண்ணங்களைத் தோற்றுவிக்கும் தரம் கெட்ட இணைய தளங்களுக்கு மத்தியில் நாகரீகத்துடன் நல்ல பண்பாட்டை வளர்க்கும் இஸ்லாமிய இணைய தளங்கள் நல்ல இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இஸ்லாத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள இஸ்லாமிய இணைய தளங்களைத் தேடுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் களங்கம் கற்பிக்கக் களம் இறங்கிய சில கயவர்கள் பல நூற்றாண்டுகளாக பல்வேறு முயற்சிகள் செய்து தங்கள் முயற்சிகளில் படுதோல்வியைச் சந்தித்த பின்னர் இப்போது இணைய தளம் என்னும் இந்த நவீன ஊடகத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர். இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இஸ்லாமிய கருத்துக்களை தலைப்புகளாகத் தந்து திருமறை வசனங்களையும் திருநபியின் மணிமொழிகளையும் தங்கள் விருப்பத்திற்கு வளைத்தும் திரித்தும் எழுதி ஆலகால விஷத்தை சுவையான இனிப்புப் பண்டங்களைப் போல் தயாரித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்தக் கயவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்து இணைய உலகில் இவர்களை அடையாளம் காட்டும் சிறந்த பணியை சில நல்லோர்கள் செய்து வருகின்றனர். இருந்தாலும் உண்மை வீட்டை விட்டுப் புறப்படுவதற்குள் பொய் ஊரைச் சுற்றி விட்டு வந்து விடும் என்று சொல்வதைப் போல் இந்தக் கயவர்களின் கைவரிசையில் உருவான கள்ள இணைய தளங்கள் அழகான பொய்களுடன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்பதை இணைய தளங்களைப் பார்வையிடும் ஒவ்வொரு முஸ்லிம் சகோதரனும் உணர்ந்து அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு தான் தங்களை மறைத்துக் கொண்டாலும் பத்திரிக்கைள் மற்றுத் தொலைக் காட்சி ஊடகங்களில் வெகு விரைவில் இவர்களின் முகத்திகை; கிழிந்து விடும், ஆனால் இந்த இணைய தளம் என்னும் ஊடகத்தில் தங்களை மறைத்துக் கொண்டு கபட நாடகம் ஆடும் கயவர்களைக் கண்டறிவது சற்று சிரமம். எனவே தான் நேருக்கு நேர் மோதத் திராணியற்றவர்கள் இணையத்தின் மூலம் புறமுதுகில் குத்தும் கோழைத்தனமான செயவ்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனவே இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் இணைய தளங்கள் உண்மையிலேயே இஸ்லாமிய இணைய தளங்கள் தானா? என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அத்தளங்களைப் பார்வையிட வேண்டும். இல்லையேல் நமது பொன்னான நேரமும் பொருளும் விரயம் ஆவது மட்டுமின்றி இருக்கின்ற ஈமானையும் இழக்க நேரிடும்.

பொதுவாகவே இணைய தளங்களை உருவாக்குவதும் அதனைத் தொடர்ந்து நடத்துவதும் அனைவராலும் இயலாத ஒன்று. சமுதாய இயக்கங்கள் அல்லது சேவை மனப்பான்மைக் கொண்ட சிலர் குழுக்களாகச் சேர்ந்து இணைய தளங்களை நடத்தி வருகின்றனர். அத்தகைய புகழ் பெற்ற இணைய தளங்கள் மட்டுமே சரியான தகவல்களை தந்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் மட்டுமே நமது கவனம் இருக்க வேண்டும்.இஸ்லாமியத் தமிழ் இணைய தளங்கள்; சில சமயம் தங்களுக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகளையும் மனமாச்சரியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது வருந்தத்தக்க விஷயமாகும். அப்படிப்பட்ட இணைய தளங்களைப் பார்வையிடும்போது அதில் உள்ள நல்லவற்றை எடுத்தக் கொண்டு அல்லவற்தை; தள்ளிவிடலாம்.
புகழ் பெற்ற அந்த இணைய தளங்களை நடத்துவோருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தயவு செய்து தனிமனித விமரிசனங்களையும் தரம் கெட்ட தாக்குதல்களையும் சற்று ஒதுக்கிவைத்து விட்டு சமுதாயத்திற்குப் பயனுள்ள செய்திகளை, மார்க்க விஷயங்களை, இறை வேத வரிகளை, இறைத்தூதர் மொழிகளை இஸ்லாமிய சமுதாயத்திற்கு மத்தியில் இன்னும் அதிகமாகக் கொண்டு செல்லுங்கள். ஏகத்துவக் கொள்கையை இன்னும் உரத்த குரலில் முழங்குங்கள். எதிர்கால சமுதாயம் இதன் மூலம் பயனடையும். பயனைடந்த உள்ளங்கள் உங்களை மனமார வாழ்த்தும்.

இணைய தளங்கள் என்னும் வலைத் தளங்களின் ஓர் அங்கம் தான் வலைப் பதிவுகள் எனப்பும் வலைப்பூக்கள். பல நிறுவனங்கள் இந்த வலைப்பதிவு சேவையை இலவசமாகவே வழங்குவதாலும், கையாள்வது எளிது என்பதாலும் இணைய உலகில் தொடர்புடைய ஏராளமானேர் வலைப்பதிவுகனை உருவாக்கி தங்கள் கருத்துக்களையும் ஆக்கங்களையும் பதிந்து வருகின்றனர்.

வலைத் தளங்களை விட அதிகமாகவே இந்த வலைப்பதிவுகள் எனப்படும் வலைப்பூக்கள் இணைய உலகில் உலாவந்துக் கொண்டிருக்கின்றனவோ எனக் கருதும் அளவுக்கு நாளுக்கு நாள் புத்தம் புதிய வலைப்பூக்கள் பூத்துக் கொண்டிருக்கின்றன.

வலைத்தளங்களை நல்லவையும் தீயவையும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது போல் அதை விடவும் சற்று அதிகமாகவே வலைப்பூக்களையும் நல்லவையும் தீயவையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன எனலாம். வலைத்தளங்களைப் பற்றிக் குறிப்பிட்ட அனைத்துமே இந்த வலைப்பூக்களுக்கும் பொருந்தும்.

முறையாகப் பதியப்பட்டு நெறிமுறையுடன் நடத்தப்படும் இணைய தளங்களில் தங்கள் மூக்கை நுழைக்க முடியாத முகவரியற்றவர்கள் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தி தங்கள் வக்கிர எண்ணங்களையும் தரம் கெட்ட தகவல்களையும் பதிந்து வருகின்றனர்.

வலைப்பதிவுகளை பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்ட இஸ்லாமிய ஆர்வலர்கள் இதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் பெயரால் இல்லாததையம் பொல்லாததையும் பதிக்கின்ற வலைப்பதிவுகளை அடையாளம் கண்டு அவற்றை அடியோடு புறக்கணிக்க வேண்டும்.

இந்திய மொழிகளிலேயே அதிக அளவில் பதியப்படும் வலைப்பதிவுகள் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் தானோ என நினைக்கும் அளவுக்கு தமிழ் வலைப்பதிவுகள் இணைய உலகில் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. புகழ் பெற்ற வலைத் திரட்டிகளில் சென்று பார்வையிட்டால் நாள் தோறும் புத்தம் புதிய வலைப்பூக்கள் பூத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை ஒன்றுக்கும் உதவாதவை என்பது வேறு விஷயம். பூக்களை நேசிப்பவர்களே நறுமணம் கமழும் நல்ல பூக்களை மட்டுமே நேசியுங்கள். ஆம் நல்ல வலைப் பதிவுகளைத் தேடிப் பிடித்து பயன் பெறுங்கள்.

இணைய உலகில் உலா வந்துக் கொண்டிருக்கும் தமிழ் நேய நெஞ்சங்களே! மிகவும் கவனமாக இருங்கள். நமது எதிரிகள் நம் மீது பன் முனைத் தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள். 'இஸ்லாம்' 'முஸ்லிம்' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி வலைப் பதிவுகளை உருவாக்கி இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எழுதும் எழுத்துக்கள் ஒரு புறம், மறுமொழி இடுகின்ற வசதியைப் பயன்படுத்தி இஸ்லாமிய வலைப்பதிவுகளில் முஸ்லிம் பெயர்களில் நச்சுக் கருத்துக்களைப் புகுத்தும் சதி வேலைகள் மறுபுறம், இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் நம்மைத் தாக்க எதிரிகள் திட்டம் வகுத்து செயல்படுகின்றனர். எனவே வலைப் பதிவுகளை உருவாக்கி பதிப்பவர்கள் உங்கள் பதிவுகளில் பதியப்படும் மறுமொழிகளை ஆய்வு செய்து வெளியிடும் வசதியைப் பயன்படுத்துங்கள் இல்லையேல் தறுதலைகள் தவறான கருத்துக்களை உங்கள் பதிவுகளில் பதிந்து விடுவர் எச்சரிக்கை.

தமிழறிந்த முஸ்லிம்களில் பலர் பல்வேறு பெயர்களில் வலைப்பதிவுகளை பதிக்கின்றனர். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், இவர்களில் சிலர் தமக்கு வேண்டாத, தமக்குப் பிடிக்காத, கொள்கையில் கருத்து வேறுபாடு கொண்ட, தனி நபர்களையும், இயக்கங்களையும் விமர்சித்தும் புழுதி வாரித்தூற்றியும் பதிவுகள் பதிக்கின்றனர்.

இவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று நாலாந்தர நரகல் நடையில், படிப்பவர்கள் வெறுப்படையும் விதத்தில் பதிக்கின்ற பதிவுகளைக் காணும் போது உண்மையிலேயே மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது. உண்மையில் இவர்கள் முஸ்லிம்கள் தானா? என்று சந்தேகம் வருகின்றது. மார்க்க ஞானத்தை வளர்த்துக் கொள்ளவும், அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ளவும் வலைப்பதிவுகளை நோக்கி நாம் பயணித்தால் நம்மை நரகப் படு குழி நோக்கி கொண்டு சேர்க்கும் வேலையை சில வலைப்பதிவர்கள் செய்து வருகின்றனர். இத்தகைய வலைப் பதிவுகள் நல்லவர்களை முகம் சுளிக்க வைக்கின்றன. தனி மனிதத் தாக்குதல் நடத்தும் முஸ்லிம் பெயர் தாங்கிகளாகிய இந்த முனாபிக்குகள் உண்மையான மூமின்களாக மாற இறைவனிடம் பிரார்த்திப்போம்.

வலைப்பதிவுகளை உருவாக்கி பதிந்து வரும் சகோதார்களே! உங்கள் இறையச்சம் எங்கே போனது? உங்கள் இஸ்லாமியப் பண்பாடும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த நற்குணங்களும் எங்கே போயின? பித்னாக்களைப் பரப்பும் உங்கள் முயற்சிகளை ஓரங்கட்டி விட்டு இனியாவது இஸ்லாத்தைப் பரப்பும் வேலையில் உங்கள் பொன்னான நேரத்தைச் செலவிடுங்கள். இஸ்லாம் சென்றடையாத இதயங்களில் இஸ்லாத்தைக் கொண்டு சேர்க்க உங்கள் பதிவுகள் பயன்படட்டும். உண்மை இஸ்லாத்தை உணராத முஸ்லிம்களுக்கு உங்கள் பதிவுகள் வழிகாட்டட்டும்.

மூமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்.(பிறர் குறைகளைத்) துருவித் துருவி ஆராய்ந்துக் கொண்டிராதீர்கள். அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49:12)

உங்கள் சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க நீங்கள் வீரும்புவீர்களா, தினந்தோறும் உங்கள் சொந்த சகோதரனின் மாமிசத்தைப் புசித்துக் கொண்டிருக்கிறீர்களே இந்த இறைவசனம் எப்படி உங்களுக்குத் தெரியாமற் போனது?

நீங்கள் பதியும் தனிமனிதக் குறைகள் உண்மையிலேயே உங்களால் விமர்சிக்கப்படும் நபர்களிடம் இருந்தால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களைத் திருத்துங்கள். அதற்கு மேலும் அவர்கள் திருந்தவில்லையென்றால் இனி அவர்களாகட்டும் இறைவனாகட்டும். அதைவிட்டு விட்டு, நீங்கள் மென்மேலும் பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டும், சமுதாயத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டும்; இருக்காதீர்கள். அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரை விரும்பமாட்டான் (அல்குர்ஆன் 5:64)

இணையத்தின் இன்னொரு சிறப்பம்சம் மின்னஞ்சல் வசதி. தொலைபேசி உபயோகம் பரவலாக வந்துவிட்ட பின்னர் பொதுவாகவே கடிதம் எழுதும் வழக்கம் வெகுவாக குறைந்து விட்டாலும் மின்னஞ்சல் உபயோகம் வெகுவாக வளர்ந்து விட்டது. தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இணைய உபயோகிப்பாளர்கள் மின்னஞ்சல் வசதியை மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.

பொதுவான மற்றும் சமுதாயச் செய்திகளையும் திருமறை வசனங்களையும் நபி மொழிகளையும் பயனுள்ள கட்டுரைகளையும் ஒருவருக் கொருவர் அனுப்பியும் பெற்றும் பயனடைகின்றனர். பயனுள்ள பல செய்திகளுக்காக இந்த மின்னஞ்சல் வசதி பயன்படுத்தப்பட்டாலும் சில சமயம் சில வழிகேடர்களால் இது தவறான நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுபவது வேதனைக்குரியது.

முகம் காணா நண்பர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் பெரும்பாலும் பயனுள்ள பல செய்திகளைத் தாங்கி வந்தாலும் சில மின்னஞ்சல்கள் ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரைச் செய்திகளையும் தாங்கி வந்து கொண்டிருக்கின்றன. வலைத்தளங்கள் மூலமாகவும் வலைப்பதிவுகள் மூலமாகவும் பரப்பிய அவதூறுகளும் அசிங்கங்களும் போதாதென்று சில முனாபிக்குகள் மின்னஞ்சல் மூலமாகவும் பித்னாக்களை பரப்புவதை தமது முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்குத் தான் வேறு வேலை எதுவும் இல்லை என்றால் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை உபயோகிப்பாளர்கள் பலரின், நேரத்தை வீணடித்து, மனதைப் புண்படுத்தி பொருளாதாரத்தைப் பாழ்படுத்தி வெறுப்புக்கும் ஆளாகின்றனர்.

முழுக்க முழுக்க புறம் பேசுவதையும், அவதூறுகளை அள்ளி இறைப்பதையும் தமது முழுநேரத் தொழிலாகக் கொண்ட சிலர் அனுப்பும் மின்னஞ்சல்களில் தப்பித்தவறி கூட நல்ல செய்திகள் இடம் பெறாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றனர். தன் சொந்த சகோதரனின் மாமிசத்தை தான் புசித்தது போதாதென்று மற்றவர்களும் புசிக்க பங்கு வைக்கின்றனர்.

சர்வசாதாரணமாகப் புறம் பேசித்திரியும் சகோதரர்களே கீழ்க்காணும் நபி மொழியை கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்த போது கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள் ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை' என்று சொல்லி விட்டு, இருப்பினும் (அது பெரிய விஷயம் தான்) அவ்விருவரில் ஒருவர் தாம் சிறு நீர் கழிக்கும் போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம் பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று கேட்கப்பட்டதற்கு 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் :புகாரி பாகம் 1 எண் 218)

இப்போதும் கப்ருகளில் பச்சை மட்டையை வைப்பதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்துக் கொள்ளாமல், கப்ரில் வேதனை நடப்பதற்கு அண்ணல் நபி (ஸல்) கூறிய இரண்டு காரணங்களில் ஒன்றாகிய புறம் பேசித்திரிபவருக்குக் கிடைக்கும் தண்டணைக்கு ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்துக் கொள்ளுங்கள். இனியாவது திருந்துங்கள்.

இணைய தளங்களில் அதிகம் உலாவரும் வாய்ப்பும் வசதியும் கொண்டவர்களே! உங்கள் பொன்னான நேரத்தை வீணாகக் கழிக்காமல், நித்திய வாழ்க்கைக்கு சரியான வழிகாட்டி உங்களை நேர்வழியில் நடத்திச் செல்லும் இஸ்லாமிய இணைய தளங்களை பார்வையிடுங்கள்.
இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஆர்வமிக்க எழுத்தாளர்களே! சொந்தமாக வலைப் பதிவுகளை உருவாக்கி சமுதாயம் பயன் பெறத்தக்க உங்கள் ஆக்கங்களைப் பதியுங்கள். உங்களைக் கொண்டு ஒருவர் நேர்வழி பெற்றாலும் அதற்கான உயர்ந்த கூலி இறைவனிடம் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.
உருவாக்கும் இலவச சேவையை பல்வேறு நிறுவனங்கள் செய்து வருகின்றன. நீங்கள் வழக்கமாகப் பார்வையிடும் வலைப்பதிவுகளின் மேற்பகுதியில் (கிரியேட் பிளாக்) என்னும் பகுதியை சொடுக்கினால் மிகச் சுலபமாக உங்கள் பெயரில் சொந்த வலைப்பதிவை உருவாக்கலாம். வலைப்பதிவுகளை எளிதாக உருவாக்கும் வழிமுறைகளை மேற்கண்ட இணைய தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புகள் மூலம் அறியலாம்.
உங்கள் வலைப்பதிவுகளை புகழ் பெற்ற வலைப்பதிவுத் திரட்டிகளில் பதிந்துக் கொள்ளுங்கள், இலகுவாக எவ்லோரையும் உங்கள் பதிவுகள் சென்றடையும். பதிவுகளில் எழுதும் போது பலருக்கும் உபயோகமான நல்ல கருத்துக்களை மட்டுமே எழுதுங்கள்.

பல்வேறு வலைப் பதிவுகளைப் பார்வையிட நேரிட்டால் அவற்றில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான விஷமக் கருத்துக்களைக் காணும்போது உடனுக்குடன் அதற்குப் பின்னூட்டம் இடுங்கள். பின்னூட்டம் இடும்போது நாகரீகத்தையும் நளினத்தையும் கடைப்பிடியுங்கள். அறியாமையாலும் இஸ்லாத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்துக் கொள்ளாததாலும் சிலர் தவறாக எழுதக்கூடும். மென்மையான அணுகுமுறை அவர்கள் திருந்துவதற்கு வழி ஏற்படுத்தும்.

முஸ்லிம் சமுதாயத்தினரிடையே அறியாமை இருளகற்றி அல்லாஹ்வின் திருமறையையும் அவனது திருத்தூதரின் வழிமுறைகளையும் தெளிவாகப் புரியவைப்போம். அழைப்புப் பணிக்கு இந்த இணையம் என்னும் ஊடகத்தைப் பயன்படுத்தி இனிய இஸ்லாத்தை இகமெங்கும் எடுத்துச் செல்வோம். சகோதர சமுதாயத்தினரின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள தவறான புரிதல்களைக் களைந்து உண்மை இஸ்லாத்தை உலகறிய எடுத்துரைப்போம். அஞ்ஞானம் என்னும் இருள் கவ்விக் கிடக்கும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இணையம் என்னும் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி இஸ்லாம் என்னும் ஒளி விளக்கை ஏற்றி வைப்போம். சத்திய மார்க்கம் இஸ்லாம் சகல உலகையும் சரியான வழி நடத்தும் இன்ஷா அல்லாஹ்.

Dec 19, 2007

தியாகப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

தரணியெங்கும் வாழும் தமிழ் நேய நெஞ்சங்களுக்கு 'தமிழ் முஸ்லிம் தாரகை' தனது தியாகப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது

Dec 14, 2007

கதையல்ல நிஜம்



பெருநாள் தொழுகை முடிந்து மகிழ்ச்சியைக் கொண்டாட மக்கள் பள்ளிவாசலிலிருந்து அவரவர் வீடுகளுக்கு அவசரமாகப் புறப்பட்டுவிட்டனா. தள்ளாத வயதில் அந்த முதியவர் நிதானமாக கடைசியாகப் பள்ளியிலிருந்து வெளியே வருகிறார்.பள்ளிக்கு வெளியே ஒரு இளைஞன் அந்த முதியவருக்குப் பெருநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக் காத்து நிற்கிறான்.. வெளியில் வந்த முதியவருக்கு கை கொடுத்து பெருநாள் வாழ்த்துக் கூறுகிறான் பதிலுக்கப் பெரியவரும் அந்த இளைஞனுக்குப் பெருநாள் வாழ்த்துத தெரிவிக்கிறார்.. இளைஞன் புறப்படத் தயாராகும் போது அந்தப் பெரியவர் இளைஞனிடம் 'தம்பி! சென்ற வாரம் நான் உங்களிடம் ஒரு விஷயம் குறித்து கூறியிருந்தேன் அல்லவா அது குறித்து என்ன முடிவு செய்தீர்கள்? ஒரு நல்ல பெயராகத் தேர்வு செய்து விட்டீர்களா? எனக் கேட்கிறார்.

ஒரு சின்ன பிளாஷ் பேக்

அந்த ஊரில் அனைவராலும் மிகவும் மதிக்கப்படும் அந்த முதியவர் பல் வருடங்களுக்கு முன்னர் புனித ஹஜ்ஜை நிறைவேற்றியவா என்பதால் ஊர் மக்கள் அனைவராலும் 'ஹாஜியார்' என்றே அழைக்கப்பட்டார். மிகவும் கண்ணியமானவர். தொழுகை இபாதத்துகளில் மிகவும் பேணுதலானவர்.. அனைவரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்தானவர். ஹாஜியார் என்னும் அடைமொழியுடன் அழைக்கப்பட்ட அம்முதியவரின் இயற் பெயர் குலாம் மைதீன்.

சென்ற வாரம் அந்த இளைஞன் அம்முதியவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தான். 'தங்களிடம் ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். தாங்கள் தவறாக நினைக்க் மாட்டீர்களே! என்று அந்த இளைஞன் பீடிகையுடன் தம் பேச்சைத் துவங்கினான்.. அதற்கு அம்முதியவா 'தம்பி தாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். யார் சொன்னாலும் நல்லதை நான் ஏற்றுக் கொள்வேன் எனது தவறுகளைத் திருத்திக் கொள்வேன்' .என்றார்.

தங்கள் பெயர் தவறாக உள்ளது. குலாம் மைதீன் என்றால் மைதீன் எனப்பேச்சு வழக்கில் சொல்லப்படும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி)அவர்களின் (சேவகன்) அடிமை என்று பொருளாகிறது. நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள் அல்லவா? எனக்கேட்டான்.. அதற்கு அம்முதியவர் கோபப்படாமல் மிகவும் நிதானமாக 'தமபி! தாங்கள் சொல்வது நியாயம் தான். இப் பெயர் எனது பெற்றோர் எனக்கு சூட்டிய பெயர். இதில் எனது தவறு எதுவுமில்லையே! எனது தவறு என்றால் நான் திருத்திக் கொள்வேன். அறியாமையால் எனது பெற்றோர் இப்படிப் பெயர் வைத்து விட்டனர். அல்லாஹ் அவர்களின் குற்றத்தை மன்னிக்க வேண்டும். நான் எனது பெயரை இனி மாற்றிக் கொள்கிறேன். தாங்களே ஒரு நல்ல பெயராகத் தேர்வு செய்து எனக்குச் சொல்லுங்கள்" எனக் கூறவே அந்த உரையாடல் அத்துடன் நிறைவு பெற்றது.

இது நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்று தான் அந்த இளைஞன் அம்முதியவரைச் சந்திக்கிறான். அது பற்றித்தான் அம்முதியவா அவ்விளைஞனிடம் வினவுகிறார். .தம்பி! சென்ற வாரம் நான் உங்களிடம் ஒரு விஷயம் குறித்து கூறியிருந்தேன் அல்லவா அது குறித்து என்ன முடிவு செய்தீர்கள்? ஒரு நல்ல பெயராகத் தேர்வு செய்து விட்டீர்களா? எனக் கேட்கிறார்.

அந்த இளைஞன். 'தாங்கள் என்னை விட அதிகம் அறிநதவர் இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்று சொல்லவே அம்முதியவர் அப்படியானால் 'தங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தங்கள் பெயரை நான் வைத்துக் கொள்ள தாங்கள் அனுமதி தருவீர்களா? எனக்கேட்க 'தங்கள் விருப்பப்படி வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு எநத ஆட்சேபனையும் இல்லை என்று சொல்ல, உடனே அந்த முதியவர் 'சரி அப்படியானால் இன்று முதல் இந்த நேரம் முதல் எனது பெயர் குலாம் மைதீன் அல்ல இனி நான் அப்துஸ்ஸலாம்.என அழைக்கப்படுவேன். இது எனக்கும் தங்களுக்கும் தெரியும். இதற்கு அல்லாஹ்வே சாட்சி என்றார்கள். ஒரு அருமையான பெயர் சூட்டு விழா அழகாக நடந்தேறியது.

முதியவரிடம் விடைபெற்ற அந்த இளைஞன் பள்ளிவாசலிலிருந்து மிக அருகிலிருக்கும் தன் வீட்டுக்கு சென்றடைந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். பள்ளிவாசலை நோக்கி சிலர் வேகமாக ஓடுவது தெரிந்து 'என்ன?" என்று விசாரித்தபோது 'பள்ளிவாசல் திண்ணையில் ஹாஜியார் அவாகள் இறந்து விட்டார்கள்'' என்னும் செய்தி அந்த இளைஞனை அதிர்ச்சியுறச் செய்தது

அந்த இளைஞன் ஹாஜியாரைச் சந்தித்து உரையாடியதற்கும் ஹாஜியாரின் மரணச் செய்தியை இளைஞன் செவியுற்றதற்கும் இடைப்பட்ட நேரம் மிகவும் குறைவு. ஹாஜியார் கடைசியாகப் பேசியது அந்த இளைஞனிடம் தான். கடைசியாகப் பேசிய வார்த்தைகள் 'இனி இந்த நேரம் முதல் நான் அப்துஸ்ஸலாம் என அழைக்கப்படுவேன். இதற்கு அல்லாஹ்வே சாட்சி" இந்த இனிய வார்ததைகளுடன் ஒரு இறைநேசரின் ஆன்மா பிரிந்து விட்டது.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

உறவுகளையும் ஊர் மக்களையும் பொறுத்தவரை குலாம் மைதீன் ஹாஜியார் ஆனால் அந்த இளைஞனையும் அல்லாஹ்வையும் பொறுத்தவரை அப்துஸ்ஸலாம் என்னும் ஒரு நல்லடியார் இறந்து விட்டார். அனைத்து வகையிலும் நமக்குத் தெரிந்தவரை ஒரு நல்ல இறைநேசராக வாழ்ந்த அம்முதியவரிடம் இருந்த ஒரு குறையைக்கூட அல்லாஹ் இறுதி நேரத்தில் நிவாத்தி செய்து விட்டான்.

இது கதையல்ல நிஜம்

இச்சம்பவம் நடந்து ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. ஆனால் அந்த மறக்கமுடியாத நினைவு மட்டும் அந்த இளைஞனின் இதயத்தில் நீங்கா இடம் பெற்று விட்டது அந்த நல்ல இறைநேசரை இன்றளவும் அந்த இளைஞன் நினைவு கூர்கிறான். அந்த அற்புத நினைவை இன்ற இந்த வலைப்பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறான்.

ஆம் அந்த இளைஞன் அப்துஸ்ஸலாம் என்னும் நான்.

மரணிப்பதற்குச் சற்றுமுன் வரை குலாம் மைதீனாக இருந்து இறுதி நேரத்தில் தம் பெரை மாற்றிக் கொண்ட அப்துஸ்ஸலாம் என்னும் அந்த முதியவர், 'சாந்திவளாகம்' மாத இதழின் ஆசிரியர் கவிஞர் வஹாப்ஜி என்கிற அப்துல் வஹாப் அவர்களின் தந்தையும், பெரம்பலூர் சர்க்கார் சில்க ஹவுஸ் உரிமையாளர் ஹாமீம் அவர்களின் பாட்டனாரும் ஆவார்.
.

Nov 20, 2007

புனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனை 4

புறப்படத் தயாராகின்றனர்- புனித ஹாஜிகள்
புனித ஹஜ்ஜின் அனைத்துக் கடமைகளையும் பூரணமாக நிறைவேற்றி- புண்ணியம் பெற்ற புனித ஹாஜிகள்- ஒரு சில தினங்கள் புனித மக்காவில் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட விடுதிகளில் வந்து தங்கி இளைப்பாறுகின்றனர்.
புனித மக்காவின் கடை வீதிகள் நிரம்பி வழிகின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்- புனித மக்காவின் கடைகள் முழுதும் குவிந்துக் கிடக்கின்றன.புனித ஹாஜிகள்- ஹஜ்ஜை முடித்து தம் இல்லங்களுக்குத் திரும்பும்போது- தம்மை அன்புடன் எதிர் பார்த்து காத்திருக்கும்- உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும், அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர்.திரு மறை குர்ஆன் பிரதிகள், தொழுகை விரிப்புகள், வாசனைத் திரவியங்கள், சுவையான பேரீத்தம் பழங்கள், புனித ஹஜ்ஜின் நினைவாக- காலமெல்லாம் வைத்துப் பாதுகாக்க- பல்வேறு பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.உறவினர்களுக்கு வழங்க - ஜம்ஜம் தண்ணீரையும் தேவையான அளவு எடுத்து வைக்கத் தவறவில்லை.
(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. (திருக் குர்ஆன் 2:198)
உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ், ஆகியவை அறியாமைக் காலத்தில் கடை வீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும், அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினார்கள். அப்போது உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை (2:198) என்ற வசனம் இறங்கியது.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)ஆதாரம்: புகாரி (2050)
எனவே புனித ஹாஜிகள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதில் தவறில்லை.
'தவாபுல் விதா' எனும் பயணத் தவாபு
யாரேனும் ஹஜ் செய்தால், அவரது கடைசிக் காரியம் பைத்துல்லாஹ்வில் (தவாபு செய்வதாக) அமையட்டும். மாதவிடாய் ஏற்பட்டவர்களைத் தவிர, என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களுக்கு விதிவிலக்கு அளித்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (866)
பயணத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டு- பயணத் தவாபு செய்வதற்கு ஹாஜிகள் தயாராகி விட்டனர்.மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து- ஹஜருல் அஸ்வத் இருக்கும் இடத்திலிருந்து தவாபைத் தொடங்கி- ஏழு முறை கஃபாவை வலம் வந்து- மகாமே இப்ராஹீமில் தொழுது- ஜம்ஜம் நீரருந்தி- தங்கள் பயணத் தவாபை நிறைவு செய்கின்றனர்.
புனிதக் கஃபாவிடமிருந்து பிரியா விடை பெறுகின்றனர். கஃபாவைக் காணக் காண ஹாஜிகளின் கண்கள் குளமாகின்றன. கண்களிலிருந்து குற்றால அருவியெனக் கொட்டுகிறது கண்ணீர். 'இந்தக் கஃபாவை விட்டுப்பிரியப் போகின்றோமே' என்பதை நினைக்க நினைக்க, இனிய இறை நேசர்களின் இதயங்கள் அழுகின்றன. கண்குளிர- உளம் மகிழ- இந்தக் கஃபாவைக் கண்டுக் கொண்டே- இங்கேயே இருந்துவிட மாட்டோமா? என்று இந்த இனியவர்களின் இதயங்கள் ஏங்குகின்றன.
அழிகின்ற இந்த உலகத்தை- இதில் வாழும் மனிதர்களை- அநாச்சாரங்களும், அநியாயங்களும், அட்டூழியங்களும், நிறைந்த சமூகத்தினரையெல்லாம், கண்டு அலுத்துப் போன இதயங்களுக்கு இத்தனை நாட்களும் இங்கே அமைதி கிடைத்தது. ஆறுதல் கிடைத்தது. இதை விட்டுச் செல்லப் போகின்றோம் எனும் போது- கல் நெஞ்சமும் கரையத்தானே செய்யும்.
புனித ஹஜ்ஜை இனிதே நிறைவேற்றும் பெரும் பேற்றைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றனர். ஹஜ்ஜை முடித்து அருளைச் சுமந்த ஹாஜிகளாய் இங்கிருந்து செல்கின்றனர்.பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களாக-
பரிசுத்த மனதோடு-
பக்தி நிறைந்த உள்ளத்தோடு-
நல்ல இன்பத்தின் பொலிவோடு-
இதயத்தின் வலிவோடு-
ஈமானின் நிறைவோடு-
புனித ஹாஜிகளாய்-
புண்ணிய சீலர்களாய்-
இந்தப் புண்ணிய பூமியை விட்டுப் புறப்படுகின்றனர்.ஹாஜிகள் தாயகம் திரும்ப- தத்தம் வாகனங்களில் ஏறி அமர்ந்து விட்டனர்.
தரை வழியாக வந்த வாகனங்கள், சிங்காரச் சாலைகளில் சீறிப் பாய்ந்த வண்ணம் புறப்படுகின்றன.நீலத் திரைக் கடலில் நீந்தி வந்தக் கப்பல்கள், நீரைக் கிழித்த வண்ணம்- இஸ்லாமியத் துறைமுகத்திலிருந்து மிதக்கத் துவங்கி விட்டன.வான் வெளிப் பாதையில் வந்திறங்கிய விமானங்கள் - ஜித்தாவின், மன்னர் அப்துல் அஜீஸ் பன்னாட்டு விமானத் தளத்திலிருந்து, திரும்பும் பயணத்தைத் தொடங்கி விட்டன.
ஹாஜிகள் மனத் திரையில் படக் காட்சிகளைப் போல் ஒவ்வொரு காட்சிகளாக வந்து போகின்றன.
அவரவர் தம் இல்லங்களிலிருந்து
ஆர்வத்துடன் புறப்பட்டதும்-
இஹ்ராம் உடை தரித்து-
இனிய ஹஜ்ஜுக்காகத் தயாரானதும்-
மக்கத் திரு நகரில் மகிழ்ச்சியுடன் இறங்கியதும்-
மஸ்ஜிதுல் ஹராமில் மனம் குளிர நுழைந்ததும்-
மாண்புடன் கஃபாவைத் தவாபு செய்ததும்-
மகாமே இப்ராஹீமில் தொழுததும்-
ஜம்ஜம் நீரருந்தியதும்-
ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடியதும்-
புனித உம்ராவை இனிதே நிறைவேற்றியதும்-
மக்காவைச் சுற்றி ஒரு மகிழ்ச்சிப் பயணம் செய்ததும்-
மதீனத் திரு நகரில் நுழைந்ததும்-
மஸ்ஜிதுன்னபவியில் தொழுததும்-
மாநபியின் மண்ணறையை மாண்புடன் தரிசித்ததும்-
மதீனாவைச் சுற்றி மனம் குளிரக் கண்டதும்-
மீண்டும் புறப்பட்டு மக்காவை வந்தடைந்ததும்-
புனித ஹஜ்ஜுக்கு ஆயத்தமானதும்-
மினாவின் கூடாரங்களில் தங்கியதும்-
அரபாத் பெருவெளியில் நின்றதும்-
அழுதழுது பாவமன்னிப்புக் கேட்டதும்-
முஸ்தலிபாவில் முழு இரவைக் கழித்ததும்-
ஜம்ராவுக்குச் சென்றதும்-
மூன்று நாட்கள் கல்லெறிந்ததும்-
அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டதும்-
தலை முடிக் களைந்ததும்-
தவாபுஸ்ஸியாராச் செய்ததும்-
இறுதியாக இன்றைய தினம்
பிரியா விடை பெற்று பயணத் தவாபுச் செய்ததும்-
பசுமரத்தாணி போல் பதிந்து விட்டநினைவுகளை அசை போடுகிறார்கள் அல்லாஹ்வின் நேசர்கள்.
ஆண்டாண்டு காலமாக வந்து சென்ற- அத்தனை கோடி ஹாஜிகளின்- அங்கீகரிக்கப் பட்ட ஹஜ்ஜுக்கு சாட்சி கூறும் அரபாத் பெருவெளியும்-
உண்மை விசுவாசிகளின் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு மௌன சாட்சி கூறும் முஸ்தலிபா நிலப் பரப்பும்-அடுத்தடுத்த ஆண்டுகளில் வரப் போகின்ற அல்லாஹ்வின் நேசர்களுக்காகக் காத்திருக்கின்றன.
இலட்சோப லட்சம் மக்கள் தங்கிச் சென்ற மினாவின் கூடாரங்கள் வெறிச் சோடிக் கிடக்கின்றன. வரும் ஆண்டுகளில் வரவிருக்கும் புனிதர்களுக்காகக் காத்திருக்கின்றன
இறையில்லம் கஃபாவைச் சுற்றுதல் மட்டும் எப்போதும் எப்போதும் தொடர்;ந்துக் கொண்டே இருக்கும். சங்கிலித் தொடரான இச்சுற்றுதல் சதா சர்வ காலமும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.
தினந் தோறும் வருகின்ற- ஏராளமான மக்கள்- என்றென்றைக்கும் இந்த இறையில்லத்தை சுற்றிக் கொண்டே இருப்பர்.அண்டம் அழியும் வரை, மண் மாயும் வரை, யுகம் முடியும் வரை ஓயாது ஒழியாது சுற்றிக் கொண்டே இருப்பர்.

நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்தோ, ஹஜ்ஜிலிருந்தோ, உம்ராவிலிருந்தோ, திரும்பும் போது- பூமியில் உயரமான பகுதியில் ஏறினால், மூன்று தடவை தக்பீர் கூறுவார்கள். பிறகுலாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, ஸாயிஹூன, லிரப்பினா ஹாமிதூன, ஸதகல்லாஹு வஃதஹு, வ நஸர அப்தஹுவ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (873)
எளிய முறையில் ஹஜ் செய்ய
சில அரிய ஆலோசனைகள்
பலர் சேர்ந்து தவாப் செய்ய வந்தால், தவாப் சுற்றத் தொடங்கும் போது, தொடங்குவதற்கு முன் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளியின் உட் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளம் வைத்துக் கொண்டு, 'தவாபை முடித்து இந்த இடத்தில் வந்து சேர்ந்துவிடவேண்டும்' என்று நிர்ணயம் செய்துக் கொள்ளுங்கள்.கூட்ட நெரிசலில் உடன் வந்தவர் தவறிவிட்டால், மீதியுள்ள சுற்றுக்களை மன நிம்மதியுடன் சுற்ற முடியாது. இவ்விதம் ஒரு குறிப்பிட்ட இடத்தை நிர்ணயம் செய்துக் கொண்டு தவாப் சுற்றத் தொடங்கினால், இடையில் பிரிய நேர்ந்தாலும், ஏழு சுற்றுக்களை நிறைவு செய்த பின் மீண்டும் மற்றவர்களுடன் இணைந்துக் கொள்ளலாம்.
மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே நுழைய, பல வழிகள் உண்டு. ஒவ்வொரு நுழை வாயிலுக்கும் பெயர்கள் உண்டு. அனைத்து பெரிய, மற்றும் சிறிய நுழைவாயில்களுக்கும் எண்கள் உண்டு.பரந்து விரிந்த பள்ளியின் உட்பகுதி- பார்ப்பதற்கு எல்லா இடங்களும் ஒரே மாதிரியாகத் தோன்றும். எனவே நுழைவாயில் எண்களை நினைவு வைத்துக் கொள்ளலாம்.
தவாப் சுற்றத் தொடங்கும் போதும், ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடத் தொடங்கும் போதும் இதே முறையைப் பின்பற்றுங்கள். கடமைகளை நிம்மதியாக நிறைவேற்றலாம்.
உங்கள் தங்குமிடங்களிலிருந்து ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரும்போது, ஒரு குறிப்பிட்ட எண்ணுள்ள நுழைவாயில் வழியே வருகின்றீர்கள். மறுபடியும் திரும்பிச் செல்லும் போது அதே நுழைவாயில் வழியே வெளியேறினால் தான் உங்கள் தங்குமிடங்களுக்கு எளிதாகச் சென்றடைய முடியும்.
பள்ளியின் உள்ளே உங்கள் கடமைகளை முடித்து வெளியே வரும்போது- தவறுதலாக வேறு வழியாக வெளியே வந்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் உள்ளே நுழைந்த குறிப்பிட்ட நுழைவாயிலைத் தேடி, பள்ளியின் வெளிப் புறம் சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். மிக நீண்ட தூரம் சுற்ற வேண்டியிருக்கும். வந்த வழியே மறுபடியும் உள்ளே சென்று, பள்ளியின் உட்பகுதியில் நுழைவாயில் எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து- அதன் வழியே வெளியேறுங்கள். இது தான் எளிதாக இருக்கும்.
தவாப் சுற்றும்போது- தொழுகைக்கான பாங்கு சொல்லப் பட்டுவிட்டால், உடனடியாக தவாபை அப்படியே நிறுத்திவிட்டு- தொழுவதற்கு வசதியான இடத்தைத் தேடி நின்று விடுங்கள். கொஞ்சம் தாமதித்தாலும் நின்று தொழ இடம் கிடைப்பது சிரமமாகிவிடும்.ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு, தவாபின் மீதியுள்ள சுற்றுக்களை பூர்த்தி செய்துக் கொள்ளலாம். மறுபடியும் முதல் தவாபிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்று அவசியமில்லை.
தவாப் சுற்றும் போது நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில், ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுத்தான் ஆக வேண்டும், என்று அவசியமில்லை. ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது சுன்னத் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முதியவர்களையும், பெண்களையும் இடித்துத் தள்ளி இடையூறு செய்வது ஹராம் ஆகும். ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காகப் பல ஹராம்களைச் செய்யக் கூடாது. தூரத்திலிருந்தே ஹஜருல் அஸ்வதை நோக்கி சைகை செய்து தக்பீர் கூறினால் போதுமானது.
தவாபின் முதல் சுற்றுக்காக ஹஜருல் அஸ்வத் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடிக்கவும், ஒவ்வொரு சுற்றின் போதும் சுற்றுக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொள்ளவும், சிரமப்படத் தேவையில்லை. ஹஜருல் அஸ்வத் இருக்கும் பகுதிக்கு நேராகத் தரையில் கருப்புக் கோடு அடையாளமிடப்பட்டுள்ளது. தரைப் பகுதியை கவனித்துக் கொண்டே சுற்றினால் எளிதில் அடையாளம் காண முடியும்.
ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடும்போது- ஒரு குறிப்பிட்டப் பகுதியில் ஆண்கள் சற்று வேகமாக ஓட வேண்டும். அந்தக் குறிப்பிட்டப் பகுதியை அடையாளம் காண பச்சை விளக்குகள் எந்த நேரமும் எரிந்துக் கொண்டே இருக்கும்.
தவாப் சுற்றும் போதும், ஸபா- மர்வாவில் தொங்கோட்டம் ஓடும் போதும், சிலர் கைகளில் புத்தகங்களை வைத்துக் கொண்டு, அவற்றில் எழுதப்பட்டுள்ள குறிப்பிட்ட துஆக்களைத் தான் ஓத வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்கெல்லாம் ஆதாரம் எதுவுமில்லை.இந்தப் புனிதமான நேரங்களில் நமக்குத் தெரிந்த, அண்ணல் நபி (ஸல்) கற்றுத் தந்த எளிமையான திக்ருகளை ஓதலாம். பிரார்த்தனை செய்யலாம். பிரார்த்தனைகள் அவரவர் தாய் மொழியிலேயே கூட இருக்கலாம்.
தவாப் சுற்றும் போதும், தொங்கோட்டம் ஓடும் போதும், அடுத்தவர் மீது இடிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். நம்மைவிட விரைவாகச் செல்பவர்களுக்கு ஒதுங்கி வழிவிட வேண்டும். மெதுவாகச் செல்பவர்கள் ஓரமாகச் செல்லலாம்.
தவாப் சுற்றும் போது, ஹிஜ்ர் இஸ்மாயீல் எனப்படும் அரை வட்டச் சுவற்றின் உட்பகுதியில் சுற்றக் கூடாது.ஏனெனில் அதுவும் கஃபாவின் ஒரு பகுதியாகும்.தவாப் செய்து முடித்த பிறகு, மகாமே இப்ராஹீம் இருக்கும் இடத்திற்கு அருகில் தான் தொழ வேண்டும் என்பதில்லை. அந்த இடத்தில் நின்று தொழுவது- தவாப் சுற்றுபவர்களுக்கு இடையூறாக இருக்கும். தொழுகையையும் முழுமையாக நிறைவேற்ற முடியாது. மஸ்ஜிதுல் ஹராமின் எந்தப் பகுதியிலும் தொழுதுக் கொள்ளலாம்.
மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில் சிலர், மேலும் மேலும் உம்ராக்களைச் செய்துக் கொண்டிருக்கின்றனர். ஆர்வத்தின் காரணமாக இவ்வாறு செய்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவ்வாறு செய்வது விரும்பத் தக்கதல்ல. பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இதை அங்கீகரிக்கவில்லை.நேரம் கிடைக்கும் போதெல்லாம் எத்தனை முறை வேண்டுமானாலும் தவாப் செய்யலாம். மார்க்க வல்லுனர்களும் மாமேதைகளும் இதையே வலியுறுத்துகின்றனர்.
தமத்துவ் வகை ஹஜ் செய்பவர்கள், ஹஜ்ஜுடைய நாள் வந்ததும், தன்யீம் அல்லது ஆயிஷாப் பள்ளி என்ற இடத்துக்குச் சென்று தான் இஹ்ராம் அணிய வேண்டும் என்பதில்லை. மக்காவில் அவரவர் தங்கியிருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம். இதற்கான ஆதாரம் பின் வருமாறு:
நபி (ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல் ஹுலைபாவையும், ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும், யமன் வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த் வாசிகளுக்கு கர்ணையும் நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும், ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும், உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள் தாம் வசிக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்;: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1529)
தனிப்பட்ட முறையில் ஹஜ்ஜுக்கு வரும் சிலர்- மினாவிலும், அரபாவிலும், முஸ்தலிபாவிலும், தங்க வேண்டிய சமயங்களில்- கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, இந்தப் புனிதத் தலங்களின் எல்லைகளைத் தாண்டிச் சென்று விட வாய்ப்பு உண்டு.ஒவ்வொரு பகுதியிலும் கடைசி எல்லையைக் குறிப்பிட்டு மாபெரும் அறிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த எல்லைகளைத் தாண்டிச் சென்று விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
உதாரணமாக, ஹஜ் என்பது அரபாத் எல்லையில் இருப்பது தான். அரபாத் எல்லைக்கு வெளியே சென்று தங்கினால் ஹஜ் கூடாது. எனவே மிகுந்த கவனம் தேவை.
அரபா தினத்தில், சூரியன் மறைந்த பிறகு தான் அரபாவை விட்டுப் புறப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் சூரியன் மறைவதற்குமுன் புறப்படக் கூடாது.அரபாவில் மஃரிபைத் தொழாமல்- முஸ்தலிபா சென்றடைந்த பிறகு தான், இஷாவுடைய நேரத்தில் மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழ வேண்டும்.
ஜம்ராவில் எறிய வேண்டிய கற்களை, முஸ்தலிபாவில் தான் பொறுக்க வேண்டும் என்பதில்லை. எந்தப் பகுதியிலும் பொறுக்கிக் கொள்ளலாம். கற்களைத் தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதில்லை. அப்படியே வைத்துக் கொள்ளலாம்.
கல்லெறியும் போது, சுண்டி விளையாடும் அளவுக்கு சிறிய கற்களையே எறிய வேண்டும். சிலர் கோபமாக ஷைத்தானை அடிப்பது போல் பெரிய கற்களையும், செருப்புகளையும் வீசுகின்றனர். இது தவறாகும். கல்லெறியும் கடமைக்கு முரணானதாகும்.கல்லெறியும் போது ஏழு கற்களையும் ஒன்றாகச் சேர்த்து எறியக் கூடாது.ஒவ்வொரு கல்லாகத் தான் எறிய வேண்டும். அதுவும் தக்பீர் கூறி எறிய வேண்டும்.
இறையில்லம் கஃபாவைத் தவாபு செய்யும் போது, அதன் உள்ளே அல்லாஹ் இருக்கின்றான் எனக் கருதக் கூடாது. அல்லாஹ்வை வணங்க உலகில் கட்டப்பட்ட முதல் இல்லம் இது. அவ்வளவு தான்.
கஃபாவைப் பிரிந்து வரும்போது, சிலர் பின்னோக்கி வருகின்றனர். கஃபாவை நோக்கி முதுகுப் புறத்தைக் காட்டக் கூடாது எனக் கருதுகின்றனர். இது போன்ற மூட நம்பிக்கைகள் மார்க்கத்தில் இல்லை.
கஃபாவை தவாப் சுற்றுவது போல், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தைச் சுற்றி வருவதோ, தொட்டு முத்தமிடுவதோ கூடாது.அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தின் முன்னர் நின்று அவர்களுக்கு ஸலாம் கூற வேண்டுமே தவிர, அவர்களிடம் கையேந்திப் பிரார்த்திப்பதோ, தமது தேவைகளை நிறைவேற்றித் தரும்படிக் கேட்பதோ கூடாது. இது ஷிர்க் ஆகும். ஷிர்;க்கை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான்.
உஹது மலையடிவாரம், ஹிரா குகை, ஆகிய இடங்களிலும், மற்றும் மக்கா மதீனாவின் பிற இடங்களிலும் உள்ள மண்ணைப் புனிதம் என்றுக் கருதி அள்ளி வைத்துக் கொள்வதோ, எடுத்து வருவதோ கூடாது. மக்கா மதீனா நகரங்கள் புனிதமானவை தான். அதில் சந்தேகமில்லை.அதற்காக அங்குள்ள கல்லும் களிமண்ணும் புனிதமானவை என்று பொருள் அல்ல.

புனித ஹஜ்ஜுக்குப் புறப்படுவதற்கு முன்

புனித ஹஜ்ஜுக்குப் போய் வருவதற்கு- ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தை மட்டுமே பயண்படுத்துங்கள். பல்வேறு சிரமங்களுக்குக் கிடையே செய்யும் புனிதப் பயணம், விழலுக்கு இறைத்த நீராக வீணாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், அண்டை அயலார், அனைவரிடமும் விடை பெறும் போது- அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு- பிராயச் சித்தம் தேடியவர்களாப் புறப்படுங்கள்.கடன்கள் இருந்தால்- கொடுத்து முடித்து- அல்லது போய் வந்த பிறகு இன்ஷா அல்லாஹ் தருவதாக வாக்களித்து, கடன் கொடுத்தவுர் அதை மனமார ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ஹஜ்ஜுக்குப் புறப்பட ஆயத்தமாகுங்கள்.
புகழுக்காகவும், பெருமைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் இல்லாமல் மெய்யாகவே இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் எண்ணத்தை இதயத்தில் வைத்துப் புறப்படுங்கள்.
வசதிக்காக அதிகமான உடமைகளை உடன் எடுத்துச் செல்லாதீர்கள். சென்று திரும்பும் வரையுள்ள சில தினங்கள், சின்னஞ்சிறு சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள். குறைவான உடமைகள் உங்கள் பயணத்தை எளிதாக்கும்.
அவசரத்திற்கு தேவைப்படும் மருந்து வகைகளையும், முதலுதவி மருந்துகளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பயணத்தின் போது, வகை வகையான உணவுகளுக்கு முக்கியத்துவம் தராமல், எளிமைளான உணவுப் பழக்கத்தைக் கடைப் பிடியுங்கள். வழிப் பயணம் இலகுவாக இருக்கும்.குறிப்பாக, ஹஜ்ஜுடைய நாட்களில், மினா அரபாத், முஸ்தலிபா, ஆகிய இடங்களில் எளிமையான உணவுகளை உண்ணுங்கள். அதிக நெரிசல் மிகுந்த இடங்களில் உங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்ற அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரும்.
புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து- திரும்பவும் உங்கள் இல்லம் வந்து சேரும் வரை- வழிப் பயணத்திலும், புனிதத் தலங்களில் தங்கியிருக்கும் போதும், சக ஹாஜிகளுடன் அன்பாகப் பழகி, ஒருவருக் கொருவர் உதவியாக இருங்கள். எந்த வகையிலும் பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
பல்வேறு குண நலன்கள் கொண்ட பலருடன் சேர்ந்து பயணம் மேற் கொள்ளும் போது, எல்லா வகையிலும் அணுசரித்துப் போகப் பழகிக் கொள்ளுங்கள். பொறுமையைக் கடைப் பிடியுங்கள்.
உடன் வரும் சக ஹாஜிகள்- முதியவர்களாக இருப்பின், அனைத்து வகையிலும் அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து, அரவணைத்துச் செல்லுங்கள். அப்படி ஒரு முதுமை நமக்கு ஏற்படும்போது- நமக்கு உதவ சிலரை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் பொன்னான வாய்ப்பை அடையப் பெற்றிருக்கிறீர்கள். வீண் பேச்சுக்கள், விதண்டாவாதம், சண்டை சச்சரவுகள், ஆகியவற்றைத் தவிர்த்து, அதிகமதிகம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழியுங்கள்.
மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுன்னபவியிலும், ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் கவனம் செலுத்துங்கள். இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
புறப்படுவோம் வாருங்கள்
இஸ்லாத்தின் இறுதிக் கடமையாம், புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கான பொருள் வளமும், உடல் நலமும், பெற்றவர்களே!இனியும் உங்கள் பொன்னான வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.
'அடுத்தடுத்த ஆண்டுகளில் செய்துக் கொள்ளலாம்' என்று காலம் கடத்தாதீர்கள். அது வரை இருப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது?இன்றைய தினமே இறந்து போய்விட்டால், வங்கிக் கணக்குகளும், வாங்கிவைத்த சொத்துக்களும் உங்களுடையதல்ல. பங்கு போட்டுக் கொள்ள பங்காளிகள் பத்து பேர் தயாராக நிற்கின்றனர். அரும்பாடுபட்டு சேர்த்த சொத்துக்களை அப்படியே போட்டுவிட்டு போகப் போகின்றீர்கள். அதற்கு முன் அல்லாஹ் உங்களுக்கு விதித்த கடமையைச் செய்து விட்டு, மறுமைப் பயணத்துக்குத் தயாராகுங்கள்.
வயோதிகத்தை அடைந்த பிறகு ஹஜ்ஜுக்குச் செல்வதை விட, நல்ல உடல் வலிமை இருக்கின்ற போதே செல்வதற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் தள்ளாத வயதில், ஹஜ்ஜுடையச் செயல்களை- முறையாக- முழுமையாகச் செய்வது சிரமமாக இருக்கும்.இளமையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், இருக்கும் இப்போதே ஹஜ்ஜுக்குச் செல்வது- ஹஜ்ஜின் எல்லாக் கடமைகளையும் சிறப்பாகச் செய்ய வசதியாக இருக்கும்.
புனித ஹஜ்ஜின் நேர் முக வர்ணனையாக நாம் எழுதியிருப்பது மிகவும் குறைவு. நேரடியாக நீங்கள் அனுபவித்துப் பாருங்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதப் பேரின்பம் பெறுவீர்கள்.அல்லாஹ்வின் பேரருளைப் பெற்றுக் கொள்ள 'புனித ஹஜ்ஜுக்குப் போகவேண்டும்' என்னும் ஆர்வம் இன்னுமா உங்கள் இதயத்தில் எழவில்லை?
புறப்படுவோம் வாருங்கள்
புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்

Nov 16, 2007

புனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனை 3

துல் ஹஜ் எட்டாம் நாள்-
ஹஜ்ஜின் முதல் நாள்
புண்ணிய சீலர்கள், எந்த நோக்கத்திற்காக அவரவர் இல்லங்களிலிருந்து புறப்பட்டு வந்தார்களோ! அந்த ஹஜ் இன்று தான் ஆரம்பம்.உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும்- உள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புனித ஹஜ்ஜை நிறைவேற்று வதற்காக வந்து, மக்காவின் பல்வேறு இடங்களிலும் தங்கியிருந்த ஹாஜிகள்- ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்து இஹ்ராம் அணிந்து இன்று மினா வந்து சேருகின்றனர்.
'இப்ராத்' எனும் வகை ஹஜ் செய்ய, இறுதி நேரத்தில் வருபவர்கள், அவரவர் வரும் வழியில் உள்ள 'மீக்காத்' எல்லையில் குளித்து இஹ்ராம் அணிந்து நேரடியாக மினா வந்து சேருகின்றனர்
மினாவில் சமீப காலம் வரை அனைத்து ஹாஜிகளும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களில் தான் தங்க வைக்கப்பட்டனர். ஹஜ்ஜின் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மினாவில், மணலையும் மலைகளையும் தவிர வேறு எதுவுமே இருக்காது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தற்காலிக கூடாரங்களில் அடிக்கடி தீ விபத்துக்கள் நடற்து கொண்டிருந்தன. தனித்தனியாக கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளை வைத்து அவரவர் சொந்தமாக சமையல் செய்துக் கொண்டிருந்ததால், இவ்விதம் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுவதையொட்டி, கூடாரங்களில் சமையல் செய்வதை சவூதி அரசு முதலில் தடை செய்தது.அதற்குப் பகரமாக, அத்தனை இலட்சம் ஹாஜிகளுக்கும், பாதுகாப்பான தனி இடங்களில், சுகாதார முறைப்படி உணவைத் தயார் செய்து - விநியோகிக்கும் பொறுப்பைப் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டன. இதன் மூலம் உணவுப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்தது.
சில ஆண்டுகளுக்கு முன், துணிகளால் அமைக்கப்படும் கூடாரங்களை அறவே தவிர்த்து விட்டு, சவூதி அரசு அத்தனை இலட்சம் ஹாஜிகளுக்கும், நவீன வசதிகளுடன் கூடிய தீப்பிடிக்காத கூடாரங்கள் அமைத்துக் கொடுத்தது. இதன் மூலம், அடிக்கடி ஏற்பட்ட தீ விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.
மினாவில் ஒவ்வொரு வருடமும் ஹாஜிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப் படுகின்றன. தடையின்றி அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவரவர் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே, பல நூற்றுக் கணக்கான கழிவறை வசதி, ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறையினர், தீ விபத்துக்களிலிருந்து ஹாஜிகளைப் பாதுகாக்க, சகல விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து இரவும் பகலும் கண்காணிக்கின்றனர். கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களில் தீயணைப்புக் கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள் எந்த நேரமும் சுற்றிச் சுற்றி வந்த வண்ணம் உள்ளனர்.
மருத்துவ வசதி
மினாவில் ஹாஜிகளுக்கு, சகல விதமான அதி நவீன மருத்துவ வசதிகளுடன், மிகப் பிரம்மாண்டமான, அரசு மருத்துவ மனை நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. பல நூறு படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இம் மருத்துவ மனையில், அவசர சிகிச்சைப் பிரிவும் இயங்குகிறது. உடனுக்குடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர். எல்லா வகையான மருத்துவ சேவைகளும் இலவசமாகவே செய்யப்படுகின்றன.
பல் வேறு நாடுகளின் தூதரகங்களும், தத்தம் நாட்டினருக்காக மருத்துவ சேவை மையங்கள் அமைத்து சேவை புரிகின்றன. பல் வேறு தனியார் மருத்துவ மனைகள் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு மற்றும் தனியார், நடமாடும் மருத்துவ ஊர்திகள், முதலுதவி வசதிகளுடனும், மருத்துவர்கள் மற்றும் ஆண் பெண் செவிலியர்களுடனும், எப்போதும் மினாவைச் சுற்றி வருகின்றன.ஒவ்வொரு வருடமும், இந்தியா பாகிஸ்தான், உட்பட பல்வேறு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் பல்லாயிரக் கணக்கில் மருத்துவர்களும், உதவியாளர்களும், வரவழைக்கப் பட்டு மருத்துவப் பணியில் ஈடுபடு;த்தப் படுகின்றனர்.
சவூதி செம்பிறைச் சங்கத்தின் மருத்துவச் சேவைகள் மறக்க முடியாதவை. பல்வேறு இடங்களில் தற்காலிக சேவை மையங்கள் அமைத்து செம் பிறைச் சங்கம் ஹாஜிகளுக்கு இலவச மருத்துவச் சேவை செய்கின்றது.ஆபத்தான நிலையில் இருப்போரை- அருகில் உள்ள மக்காவின் பெரிய மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல செம் பிறைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்களும், பல நூற்றுக் கணக்கில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் எப்போதும் தயார் நிலயில் நிற்கின்றன.
சாரணர் படை
சவூதியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உயர் நிலைப் பள்ளிகள், மற்றும் கல்லூரிகளிலிருந்து வந்து குவிந்துள்ள சாரணர் படை மாணவர்களின் பணி மகத்தானது. பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, ஹாஜிகளுக்கு வழிகாட்டிகளாகவும், உதவியாளர்களாகவும், சீருடை அணிந்து சிறப்பப் பணி செய்கின்றனர்.இயலாத மற்றும் வயது முதிர்ந்த ஹாஜிகளை அரவணைத்து அழைத்துச் செல்வதும், தமது இருப்பிடங்களுக்குச் செல்ல வழி தெரியாமல் தவிப்பவர்களை அவர்களிடம் உள்ள அடையாள அட்டைகளைக் கொண்டு - இருப்பிடத்தை அறிந்து - உரிய இடங்களுக்குக் கொண்டு போய் சேர்த்தும் உபகாரம் செய்கின்றனர்.மினாவில் மட்டுமின்றி - ஹாஜிகள் அடுத்தடுத்தக் கடமைகளை நிறைவேற்றச் செல்லும், முஸ்தலிபா, அரபா, போன்ற புண்ணியத் தலங்கள் அனைத்திலும், சாரணர் படை மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் பணி புரிகின்றனர்.
தொலைத் தொடர்பு வசதி
தபால் தந்தித் துறை, மினாவின் பல்வேறு இடங்களில் அஞ்சல் மற்றும் தந்தி வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. தொலை பேசித் துறையினரின் சேவை மிகவும் பாராட்டத் தக்கது. மினாவிலும் மற்றும் புனிதத் தலங்கள் அனைத்திலும், நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன தொலை பேசி மையங்கள்.
உலகின் 180க்கும் அதிகமான நாடுகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளத் தக்க இம் மையங்களின் மூலம் நாளொன்றுக்கு பல இலட்சக் கணக்கான தொலை பேசி அழைப்புகள் செய்யப் படுவதாக சவூதி தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.அவரவர் நாடுகளில் உள்ள உறவினர்களுடன் தொடர்பு கொண்டு - புனித ஹஜ்ஜை இனிய முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ள - மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
காவல் துறையினரின் கண்காணிப்பு
ஆண்டு தோறும் இலட்சக் கணக்கான ஹாஜிகள் ஒன்று கூடும் புனித ஹஜ்ஜில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, காவல் துறை எல்லா வகையானக் கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
பொதுவாகவே முஸ்லிம்கள் ஒன்று கூடும் எந்த ஒரு விழாவிலும் காவல் துறைக்கு எந்த வேலையும் இருக்காது.நியாய உள்ளம் படைத்த எத்தனையோ காவல் துறை அதிகாரிகள் இதற்கு சாட்சி பகர்வர்.கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடமையாகக் கொண்டவர்கள்-அதிலும் புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற வந்த புண்ணிய சீலர்கள்- எவ்வளவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.
காவல் துறையும், ராணுவமும், தீயணைப்புப் படையினரும், சாரணர் படையும், தரையில் தங்கள் கண்காணிப்பைத் தொடர, ஆகாயத்தில் ஹெலிகாப்டர்கள்- அனைத்தையும் கண்காணித்தபடி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல்- அத்தனை இலட்சம் ஹாஜிகளும், இறை வணக்கத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அவரவர் தம் சொந்த ஊர்களில் மாட மாளிகைகளில் வசித்தவர்கள்- சுக போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், இங்கே மினாவில் வந்து கூடாரங்களில் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.மறு உலகின் நிரந்தர வாழ்க்கைப் பயணத்தில்- சற்றுத் தங்கி இளைப்பாறுவது தான் இவ்வுலக வாழ்க்கை. இவ்வுலக வாழ்கைப் பயணத்தில் சற்றுத் தங்கி இளைப்பாறுவது போல் மினாவில் இந்த சின்னஞ்சிறு கூடாரங்களில் தங்கி ஹாஜிகள் இளைப் பாறுகின்றனரோ!
இல்லை. இவர்கள் இங்கு இளைப்பாற வரவில்லை! பொன்னான பொழுதை வீணில் போக்க இங்கு வரவில்லை! காட்சிகளைக் கண்டு களிப்படைய வரவில்லை! இறைவனின் அழைப்பை ஏற்று வந்திருக்கின்றனர். இறைவனுக்காக இங்கு வந்திருக்கின்றனர். இறை வணக்கத்துக்காக இங்கு வந்திருக்கின்றனர்.
குழுக்களாகவும், தனித்தனியாகவும், அமர்ந்து இன்றைய தினத்தை இறை வணக்கத்தில் கழிக்கின்றனர். இறை தியானத்தில் கழிக்கின்றனர். இயன்றவரை திரு மறையை ஓதுவதிலும், நபிலான தொழுகைகளிலும், பிரார்த்தனையிலும் திக்ருகளை மொழிவதிலும் கழிக்கின்றனர்.
துல் ஹஜ் எட்டாம் நாள்-
ஹஜ்ஜின் முதல் நாளாகிய இன்றைய தினத்தின் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஆகிய ஐவேளைத் தொழுகைகளையும் இங்கேயே நிறைவேற்றுகின்றனர்.இன்றைய தினத்தின் இரவுப் பொழுதும் இங்கேயே இறை தியானத்தில் கழிகின்றது. இரவுப் பொழுதிலும் இங்கு உறக்கமா வரும்? உறங்கவா இங்கு வந்தோம்? என்ற எண்ணம் இதயத்தில் எழ- சிறிது நேரமே கண்ணயர்ந்தவர்கள் கூட - நடு நிசித் தொழுகையான தஹஜ்ஜஜுத் தொழுகையை நிறைவேற்றத் தயாராகின்றனர்.
மினாவில் லுஹர், அஸர், இஷா ஆகிய, நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழுவது சிறந்ததாகும்.
மக்கள் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு அச்சமற்ற நிலையிலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலும் இருந்த போது நான் நபி (ஸல்) அவர்களுடன் (நான்கு ரக்அத் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன்.
என்று ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதியில் பதிவாகியுள்ளது. (ஹதீஸ் எண் 808)
நான் நபி (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன்.அபூ பக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோருடனும் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியின் துவக்க காலத்திலும் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். என்று இப்னு மஸ்வூத் கூறியதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மறு நாள், துல் ஹஜ் 9 ஆம் நாள் அதிகாலை பஜ்ருத் தொழுகையையும்- இங்கு மினாவிலேயே நிறை வேற்றி விட்டு - அடுத்தக் கடமையை நிறைவேற்ற அரபாத்தை நோக்கி ஹாஜிகள் புறப்படுகின்றனர்.
துல் ஹஜ் 9 ஆம் நாள்-
ஹஜ்ஜின் 2 ஆம் நாள்
இன்று தான் ஹஜ்.'ஹஜ் என்பது அரபாவாகும்' என்பது நபி மொழி
இது வரை ஹாஜிகள் செய்த செயல்கள் எல்லாம், ஹஜ்ஜுடன் இணைந்த செயல்கள். உண்மையில் ஹஜ் என்பது, துல் ஹஜ் 9 ஆம் நாள் காலையிலிருந்து சூரியன் மறையும் வரை அரபாத் மைதானத்தில் நின்று வணங்குவது தான். அந்தப் புனித நாள் இன்று தான்.
அரபாத் மைதானம் என்பது, பல மைல் சுற்றளவு கொண்ட பரந்து விரிந்த ஒரு பாலைவனத் திடல். ஆனால் இப்போது இந்தப் பாலைவன மைதானம் முழுதும் மரங்கள் வளர்த்து சோலைவனமாக மாற்றப் பட்டுள்ளது. மினா அளவுக்கு முழுக்க முழுக்க கூடாரங்கள் அமைக்கப் படாவிட்டாலும், சில இடங்களில் மட்டும் கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. பெரும் பாலானவர்கள் மரங்களின் நிழல்களில் தங்கி இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.
கடும் கோடைக் காலங்களில்- ஹாஜிகளுக்கு வெயிலின் வெப்பத்தைத் தணிப்பதற்காக- அரபாத் மைதானம் முழுவதும் குழாய்களைப் பொருத்தி, குளிர்ந்த தண்ணீரை நீராவி மாதிரி சன்னமாகத் தெளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பரந்து விரிந்த பாலைவனத் திடல் முழுவதையும் இயற்கையாகவும் செயற்கையாகவும் குளிர வைத்திருக்கிறார்கள். ஹாஜிகளின் மனங்களையும் தான்.
புனித ஹஜ்ஜுக்காக, புண்ணிய பூமிக்கு வந்தவர்கள், வந்த நோக்கத்தில் கண்ணுங்கருத்துமாக இருக்கும்போது, கடும் வெப்பம் கூட ஒரு பொருட்டாகத் தெரியாது. என்றாலும் ஹாஜிகளின் உடல் நலனைப் பேண- சகல ஏற்பாடுகளும் சரியான முறையில் செய்யப் பட்டுள்ளன என்றால் அது மிகையில்லை.
உணவு ஏற்பாடுகளும், மருத்துவ உதவிகளும், தாராளமான தண்ணீர் வசதியும், மினாவைப் போலவே அரபாத்திலும் அழகான முறையில் மிகுந்த அக்கரையுடன் செய்யப் பட்டுள்ளன.எண்ணற்ற தனியார் நிறுவனங்கள், போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நிறுவனங்களின் உணவுப் பொருள் தயாரிப்புகளை- பெரும் பெரும் வாகனங்களில் கொண்டு வந்து வைத்துக் கொண்டு 'ஃபீ ஸபீல்' (இறைவனின் பாதையில் இலவசம்) என்று கூவிக் கூவி அழைத்து வாரி வழங்குகின்றனர்.பழங்கள், பழச்சாறுகள், ரொட்டிகள், குளிர் பானங்கள், உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், இப்படி இலவச விநியோகப் பொருட்களின் பட்டியல் நீள்கிறது. தனி நபர்களும் அவரவர் தம்மால் இயன்றதைக் கொண்டு வந்து- வல்ல இறைவனுக்காக அள்ளி வழங்குகின்றனர்.
சவூதி மன்னர் பஹத் அவர்கள் சார்பாக- ஒவ்வொரு நாளும் ஒரு கோடிக்கும் அதிகமான குளிர்ந்த குடி நீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப் படுகிறது.
மன்னர் பஹத்- திருக் குர்ஆன் வளாகத்தில் அச்சிடப் பட்ட திருக் குர்ஆன் பிரதிகள், உலகின் பல்வேறு மொழிகளில் திருக் குர்ஆன் மொழி பெயர்ப்புகள், மற்றும் ஒலி- ஒளி நாடாக்கள்,ஹஜ் மற்றும் அறநிலையத் துறை சார்பாக, பல்வேறு மொழிகளில் ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல்கள், 'இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையம்' சார்பாக, இஸ்லாமிய கொள்கை விளக்க சிற்றேடுகள், தமிழ், மலையாளம், போன்ற இந்திய மொழிகள் உட்பட பல்வேறு மொழிகளில் மார்க்க விளக்க நூல்கள், இவை அனைத்துமே இலவசமாக வழங்கப் படுகின்றன. இவற்றை ஹாஜிகள் அவரவர் நாடுகளுக்குக் கொண்டு செல்லும்போது, பல கோடி மக்கள் படித்துப் பயன் பெறுகின்றனர்.
லுஹரையும்அஸரையும் சேர்த்துத் தொழுதல்
அரபாத் மைதானத்தில் அமைந்துள்ளது, 'மஸ்ஜிதுன்னமிரா' என்னும் மாபெரும் பள்ளிவாசல். ஆர்வத்துடன் அதிகாலையிலேயே வந்தவர்கள், பக்குவமாகப் பள்ளியின் உட்பகுதிக்குச் சென்று விட்டனர். பல இலட்சம் பேர் பள்ளிக்கு வெளியே அணிவகுத்து நின்று விட்டனர்.
இன்றைய தினம், லுஹரையும் அஸரையும் ஒன்றாக சேர்த்து, லுஹருடைய நேரத்தில் இரண்டிரண்டு ரக்அத்கள் மட்டும் தொழவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அப்படித் தான் தொழுதார்கள்.
இப்னு சுபைர் (ரலி) உடன் தாம் போர் தொடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்த ஹஜ்ஜாஜ், இப்னு உமர் (ரலி) இடம், 'அரபாவில் தங்கும் போது நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு ஸாலிம், நீர் நபி வழியைப் பின்பற்ற நாடினால், அரபா நாளில் நடுப் பகலில் தொழுவீராக! என்றார். அப்போது, இப்னு உமர் (ரலி) 'ஸாலிம் கூறியது உண்மை தான் (நபித் தோழர்கள் அரபாவில்) லுஹரையும், அஸரையும், நபி வழிப்படி சேர்த்தே தொழுபவர்களாக இருந்தனர்' என்றார்.நான் 'நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளர்களா?' என ஸாலிமிடம் கேட்டேன். அதற்கவர், இந்த விஷயத்தில் நபி வழியைத் தவிர வேறு யாருடைய வழிகாட்டுதலை நீங்கள் பின் பற்றுவீர்கள்? எனக் கேட்டார்.
அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் (ரலி) ஆதாரம்: புகாரி (1662)
மஸ்ஜிதுன்னமிராவிலும்- அதன் வெளிப் பகுதியிலும் இடம் பிடித்துக் கொண்டவர்கள், இமாமுடன் சேர்ந்து, லுஹரையும், அஸரையும், ஒன்றாகச் சேர்த்து இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுதுக் கொள்கின்றனர். அரபாவின் பிற பகுதிகளில் தங்கியிருப்போர், அவரவர் தங்கியுள்ள இடங்களில் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து ஜமாஅத்துடன் தொழுகைகளை நிறை வேற்றுகின்றனர்.
மஸ்ஜிதுன்னமிராவில் இமாம் குத்பா உரை நிகழ்த்துகிறார். ஹஜ்ஜின் நிகழ்ச்சிகள் அனைத்தையும்- தொலைக் காட்சியில் நேரடி ஒளி பரப்பு செய்யப் படுகின்றது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் நேரடி ஒளி பரப்பைக் கண்டு களிக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும், இந்த உரையை உலகமே உன்னிப்பாகக் கவனிக்கின்றது. இந்தப் பிரசங்கம் உடனுக்குடன் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் படுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள்- அரபாத் பெருவெளியில் நிகழ்த்திய இறுதிப் பேருரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உரையாகும்.
அதோ! தூரத்தில் தெரிகிறதே! அது தான் 'ஜபலுர் ரஹ்மத்' என்னும் அருட்கொடை மலை. இம் மலையடிவாரத்தில் தான், அண்ணல் நபி (ஸல்) அவர்கள், புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் போது தங்கியிருந்தார்கள்.அங்கு சென்று சிறிது நேரமேனும் நிற்க ஆசைப்பட்டு ஹாஜிகள் கூட்டம் அலை மோதுகிறது.
ஆர்வத்தின் காரணமாக, சிலர் தட்டுத் தடுமாறி மலையின் மீது ஏறுகின்றனர். மலை முழுதும் மனிதத் தலைகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது மனிதக் குவியல் போல் தெரிகிறது.அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இந்த மலையின் அடிவாரத்தில் தான் தங்கியிருந்தார்கள். ஆர்வம் என்ற பெயரில் அறியாமையால் மக்கள் மலையின் மீது ஏறுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.
அந்திச் சூரியன் அஸ்தமிக்கும் வரை, இந்த அரபாத் பெருவெளியில் நின்று- இறைவனை வணங்க வேண்டும்.மாலைப் பொழுது நெருங்க நெருங்க, தல்பிய்யா முழக்கம் எட்டுத் திக்கும் எதிரொலிக்கிறது.
தனித் தனியாக, சிறு சிறு குழுக்களாக, எப்படியெல்லாம் இறை தியானத்தில் ஈடுபட முடியுமோ அப்படியெல்லாம் அமர்ந்து பிரார்த்தித்த வண்ணம், இந்தப் பொன் மாலைப் பொழுதில் ஹாஜிகள்- பெறற்கரியப் பேற்றைப் பெறுகின்றனர். இதயம் திறந்து இறைவனிடம் மன்றாடுகின்றனர். இனியொரு வாய்ப்பு எப்போது கிடைக்கும்? இதுவே இறுதி வாய்ப்பாகி விடுமோ? இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.
அவரவர் மொழிகளில் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறார்கள். இரு கண்களும் கண்ணீர் மல்க இரு கரங்களும் ஏந்தி நின்று இறைஞ்சுகிறார்கள். இந்த அரபாத் பெருவெளியில் கோடாணு கோடிப் பேர்களுடன் கூடி நின்று இறைஞ்சும் பெரும் பேற்றைப் பெற்றதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதயங்கள் அழுகின்றன. கண்கள் கண்ணீரை வடிக்கின்றன. கல் நெஞ்சங்கள் கூட இங்கே கரைந்து போகின்றன.
மஹ்ஷர் மைதானத்தில்- நிராயுத பாணிகளாக நிற்கப் போகும் நாளை நினைத்து அழுகிறார்கள்.
வாய்களுக்கு முத்திரையிடப்பட்டு, கரங்களைப் பேசவும், கால்களை சாட்சி சொல்லவும் வைக்கப்படும்- அந்த ஒரு நாளை நினைத்து அழுகிறார்கள்.
அறியாமையால் வாழ்க்கையில் செய்து விட்ட தவறுகளை நினைத்து அழுகிறார்கள்.
மறுமையில் வலக்கரத்தில் பட்டோலை வழங்கப்பட வேண்டுமே என்று வேண்டி அழுகிறார்கள்.
அறிந்தும் அறியாமலும் செய்து விட்ட பாவங்களை நினைத்து அழுகிறார்கள்.
அழுதழுது பாவமன்னிப்புக் கேட்கிறார்கள்.
அருகில் உள்ளவர் அழுகின்றார்;.
அல்லாஹ்விடம் ஏதோ கேட்கின்றார்.
ஆப்கானிய மொழி நமக்குப் புரியவில்லை.
கதறி ஒருவர் அழுகின்றார்.
கருப்பு நிறத்து ஹபஷி அவர்.
பக்கத்தில் ஒருவர் பிரார்த்திக்கிறார்.
பாகிஸ்தானிய ஹாஜி அவர்.
உருது மொழியில் கேட்கின்றார்.
அங்கே ஒருவர் அழுகின்றார்.
அரபி மொழியில் இறைஞ்சுகிறார்.
இங்கே ஒருவர் அழுகின்றார்.
இனிய தமிழில் இறைஞ்சுகிறார்.
எல்லோரும் இறைஞ்சுகிறார்கள்.
எல்லோருக்காகவும் இறைஞ்சுகிறார்கள்.
தமக்காக இறைஞ்சுகிறார்கள்.
தம் பெற்றோருக்காக இறைஞ்சுகிறார்கள்.
உடன் பிறந்தவர்களுக்காக,
உற்றார், உறவினர்களுக்காக,
உலக முஸ்லிம்களுக்காக இறைஞ்சுகிறார்கள்.
பரந்து விரிந்த இந்த அரபாத் பெருவெளி முழுவதும்
ஏங்கிய நெஞ்சங்களும்,
ஏந்திய கரங்களும்,
அழுத கண்களும்,
பிரார்த்தித்த வாய்களும் தான்.
இத்தனை மனிதர்களின், இத்தனை மொழிப் பிரார்த்தனைகளையும் ஒரே நேரத்தில், ஒரே ஒருவன் கேட்கின்றான். பாவமன்னிப்புக் கேட்டவர்களின் பாவங்களை மன்னிக்கிறான். அருட் கொடைகளைக் கேட்டவர்களுக்கு அள்ளி வழங்குகிறான். இப்புனித நன்னாளில், இப்புனித இடத்தில், இப்புனித நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என்பதில் எள்ளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.
ஹலாலான உணவுண்டு, ஹலாலான உடையுடுத்தி, ஹலாலான முறையில் ஈட்டிய பொருளில் செலவு செய்து வந்தவர்களின் நேரிய பிரார்த்தனைகளும், நியாயமான கோரிக்கைகளும் அங்கீகரிக்கப்படும் என்பதில் கடுகளவும் நமக்குச் சந்தேகம் இல்லை.ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கமே கூலி என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வாக்கில் நமக்கு அணுவளவும் சந்தேகம் இல்லை.
இன்று முதல்- இந்த நேரம் முதல்- தூய்மையானவர்களாக- பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களாக- கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக- குறைகள் மறைக்கப் பட்டவர்களாக- குற்றங்கள் நீக்கப் பட்டவர்களாக- இவர்களை இறைவன் ஆக்கியருள்வானாக. ஆமீன்.
துல் ஹஜ் 9 ஆம் நாள்- அரபா நாளாகிய இன்றைய தினம், சூரியன் உச்சியை விட்டு சாய்ந்ததிலிருந்து- மறையும் வரை- எவர் சிறிது நேரமேனும், இந்த அரபாத் பெருவெளியில் நிற்க வில்லையோ- அவருக்கு ஹஜ் இல்லை.ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயலே- இந்த நேரத்தில்- இந்தத் திடலில் நின்று பிரார்த்திப்பது தான். ஏனெனில், 'ஹஜ் என்பது அரபாவாகும்' என்பது நபி மொழி.
திரு மறை குர்ஆனின்- சட்டங்கள் பற்றிய இறுதி வசனம் இன்றைய தினத்தில் இந்த அரபாத் பெருவெளியில் தான் அருளப்பட்டது
.....இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல் வறுமையின் காரணமாக நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன்.
(திருக் குர்ஆன் 5:3)
அரபாத்தை விட்டுப் புறப்படுதல்
மஃரிபுடைய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரேபியப் பாலையில், அரபாத் பெருவெளியில்- ஆதவன் தனது அரும் பணியை நிறைவு செய்து விட்டு- அந்திவானத்தில் மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது. விலை மதிக்கவொன்னா பொன் மாலைப் பொழுது முடியப் போகிறது. வாழ்வில் கிடைத்தற்கரிய இச்சந்தர்ப்பத்தின் இறுதி நேரம் வரை ஹாஜிகள் பிரார்த்தனையில் ஈடு படுகின்றனர்.
சிலர் அவசரப்பட்டு, அரபாவை விட்டுப் புறப்படத் தயாராகின்றனர். சூரியன் நன்றாக மறைந்த பிறகு தான் அரபாவை விட்டுப் புறப்பட வேண்டும். மஃரிபுடைய நேரம் முடியும் வரை இருந்து விட்டு, மஃரிபைத் தொழாமல் இங்கிருந்து புறப்பட வேண்டும். முஸ்தலிபாவுக்குச் சென்று- மஃரிபையும் இஷாவையும்- இஷாவுடைய நேரத்தில் முஸ்தலிபாவில் தொழவேண்டும். இது தான் நபி வழி.
இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவில் மஃரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) ஆதாரம்: புகாரி (1674)
இப்னு உமர் (ரலி) முஸ்தலிபாவில் (மஃரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளை ஒரு இகாமத் கூறி சேர்த்துத் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன் எனவும் அவர் கூறினார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்: திர்மிதி (813)
இதோ மாலைக் கதிரவன் மறைந்து விட்டான். புனித ஹாஜிகளும் அரபாவை விட்டு விடை பெறுகின்றனர். அழுதழுது கேட்ட பாவமன்னிப்பை அடையப் பெற்றவர்களாக- அல்லாஹ்வின் பேரருள் கிடைக்கப் பெற்றவர்களாக- அல்லாஹ்வின் நேசர்கள் அனைவரும் புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை நோக்கி! புனித ஹாஜிகளாக- புண்ணிய சீலர்களாக புறப்படுகின்றனர் முஸ்தலிபாவை நோக்கி! கூட்டம் கூட்டமாக மக்கள்- குதூகலத்துடன் முஸ்தலிபாவை நோக்கி!வரிசை வரிசையாக வாகனங்கள்- அனைத்துமே முஸ்தலிபாவை நோக்கி!
திக்கெட்டும் கேட்கிறது தல்பிய்யா முழக்கம்.
மஷ்அருல் ஹராம்
மஷ்அருல் ஹராம் என்பது முஸ்தலிபாவில் இருக்கும் ஒரு மலைக் குன்றின் பெயராகும். புனித ஹாஜிகள் முஸ்தலிபா வரும்போது இந்த இடத்தில் நின்று இறைவனை நினைவு கூறுகிறார்கள். ஏனெனில் இது இறைவனின் கட்டளையாகும்
.....அரபாத் பெரு வெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள். அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் நீங்கள் வழி தவறி இருந்தீர்கள். (திருக் குர்ஆன் 2:198)
மஷ்அருல் ஹராம் என்னும் மகிமை மிக்க இடத்தில் இறைக் கட்டளைப்படி- இறைவனை நினைவு கூர்ந்த ஹாஜிகள், முஸ்தலிபாவுக்கு வந்து-இந்த இரவுப் பொழுதை இங்கேயே கழிக்கிறார்கள். இரவின் பிற்பகுதியில், எங்கு நோக்கினும் பாங்கு சப்தம். இது தஹஜ்ஜுத் என்னும் நடுநிசித் தொழுகைக்கான பாங்கு. தனித்தனியாகவும், கூட்டமாகவும் நடுநிசித் தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.
பொழுது புலரப் போகின்றது. அதற்கு முன் மறுபடியும் பாங்கோசை. ஆம் இது வழக்கம் போல் பஜ்ர் என்னும் அதிகாலைத் தொழுகைக்கான பாங்கு சப்தம்.களைப்புத் தீர சற்று நேரம் உறங்கி ஓய்வெடுத்தவர்கள் ஆர்வத்துடன் எழுகின்றனர். பஜ்ருத் தொழுகையை நிறைவேற்றத் தயாராகின்றனர்.
இங்கே முஸ்தலிபாவிலும், தண்ணீர் வசதி, கழிவறை வசதிகள் அனைத்தும் சிறப்பாகச் செய்யப் பட்டுள்ளன. பஜ்ருத் தொழுகையை முடித்து விட்டு இனி அடுத்தடுத்தக் கடடைகளை நிறைவேற்ற அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர்.
முஸ்தலிபாவில், பஜ்ருத் தொழுகையை அதன் முன் நேரத்திலேயே தொழுது விட வேண்டும். இது தான் நபி வழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை. இரண்டு தொழுகைகளைத் தவிர. ஒன்று (முஸ்தலிபாவில்) மஃரிபையும், இஷாவையும் சேர்த்துத் தொழுதது. இன்னொன்று பஜ்ரை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிபாவிலேயே) தொழுதது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) ஆதாரம்: புகாரி (1682)
பஜ்ருத் தொழுகையை சீக்கிரமே முடித்து விட்டு சூரியன் உதிப்பதற்கு முன்பே முஸ்தலிபாவை விட்டு புறப்பட வேண்டும் என்பதால் ஹாஜிகள் அவசர அவசரமாகப் புறப்படுகின்றனர் மினாவை நோக்கி!
நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிப்பதற்கு முன்பே முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (819)
பெண்கள், குழந்தைகள், இயலாத முதியோர்கள், சற்று முன் கூட்டியே புறப்பட்டுச் செல்வது தவறில்லை. அப்படியே முன் கூட்டியே மினா சென்றடைந்தவர்கள்- சூரியன் உதிக்கும் வரை கல்லெறியக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள், தமது குடும்பத்தினரில் பலவீனர்களை முன் கூட்டியே அனுப்பி வைத்தார்கள். 'சூரியன் உதிக்கும் வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம்' எனவும் கூறியனுப்பினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: திர்மிதி (817)
துல் ஹஜ் 10 ஆம் நாள்-
ஹஜ்ஜின் 3 ஆம் நாள்
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு, இன்று தான் ஹஜ்ஜுப் பெருநாள். ஈதுல் அல்ஹா என்னும் தியாகத் திரு நாள். உலக முஸ்லிம்கள் இன்று பெருநாள் தொழுகைத் தொழுவார்கள். ஆனால் ஹஜ் செய்பவர்களுக்கு இன்று பெருநாள் தொழுகை கிடையாது. இன்று காலை பஜ்ருத் தொழுகையை, முஸ்தலிபாவில் முடித்து விட்டு மினாவுக்குச் செல்கின்றனர்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தம் அருமந்த மைந்தர், இஸ்மாயீல் அவர்களை- அல்லாஹ்வின் ஆணைப்படி அறுத்துப் பலியிடுவதற்காக அழைத்துச் சென்ற போது, ஷைத்தான் வழி மறித்து தடுக்கப் பார்த்தான். உறுதியான உள்ளத்துடன் சென்ற நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், அவன் மீது கல் வீசி விரட்டினார்கள். அதன் நினைவாக- ஹஜ்ஜுக்கு வருபவர்கள், அந்த இடத்தில் இன்றளவும் கல் எறிகின்றனர். இது ஹஜ்ஜின் கடமைகளில்
ஒன்றாகும்.இன்றைய தினம், ஹாஜிகள் முற் பகல் நேரத்தில் கல் எறிகிறார்கள். இன்று 'ஜம்ரத்துல் அகபா'வில் மட்டும் கல்லெறிய வேண்டும். இந்த ஜம்ரத்துல் அகபாவுக்கு 'ஜம்ரத்துல் ஊலா' என்றும் சொல்லப்படும்.
பத்தாம் நாளில் முற்பகல் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் கல்லெறிந்தார்கள். அதன் பிறகுள்ள நாட்களில் சூரியன் உச்சியிலிருந்து விலகிய பின் கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (818)
ஏழு பொடிக் கற்களை எறிய வேண்டும். அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூற வேண்டும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
அத்தனை இலட்சம் ஹாஜிகளும் கல் எறிகிறார்கள். சிலர் கோபமாக ஷைத்தானை அடிப்பது போல் பெரிய கற்களையும்- செருப்புகளையும் வீசுகிறார்கள். இது தவறு. கல் எறியும் கடமைக்கு இவை முரணானதாகும்.
நபி (ஸல்) அவர்கள், சுண்டி விளையாடும் அளவு சிறிய கற்களையே எறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி ) ஆதாரம்: திர்மிதி (821)
கல் எறியும் இடத்தில் நெரிசல் அதிகம். அரபா, மினா, முஸ்தலிபா ஆகிய இடங்கள் பரந்து விரிந்த மாபெரும் திடல்கள். அத்தனை இலட்சம் ஹாஜிகளும் பரந்தத் திடலில் தங்கியிருப்பதில் சிரமம் இல்லை. ஆனால், ஜம்ரா என்னும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அத்தனை இலட்சம் பேரும் கல் எறிய வேண்டும் என்பதால் இங்கு நெரிசல் அதிகம்.
கல்லெறியும் இடத்துக்கு செல்லும் போது- கையில் பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் செல்லக் கூடாது. கூட்ட நெரிசலில் தவறிவிட வாய்ப்புண்டு. கையில் இருக்கும் பொருள் தவறி கீழே விழுந்து விட்டால்- குனிந்து எடுக்க முயலக் கூடாது. முன்னேறி வரும் கூட்டம் கீழே தள்ளிவிடலாம்.
கூட்டத்தை சமாளிக்க- 'கல்லெறியும் இடம்' இப்போது, மக்கள் போவதற்கும், வருவதற்குமாகத் தனித்தனிப் பாதைகள் அமைக்கப் பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர்; பலமானத் தடுப்புகளை ஏற்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அனுப்புகின்றனர். பல் வேறு வருடங்களில்- கூட்ட நெரிசலில் இந்த ஜம்ராவில் தான் விபத்துக்கள் நடந்துள்ளன. சில சமயங்களில் உயிர்ச் சேதங்களும் கூட ஏற்பட்டதுண்டு. இப்போது நெரிசலின்றி மக்கள் சென்று வர பல் வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கூட்டம் கூட்டமாகச் சென்று- ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து திரும்புகின்றனர் ஹாஜிகள்.
கல்லெறி நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுவரை முழங்கிக் கொண்டிருந்த தல்பிய்யாவை நிறுத்தி விடுகின்றனர். இதுவே நபி வழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஜம்ராவில் கல்லெறிகின்றவரை தல்பிய்யா கூறிக் கொண்டே இருந்தார்கள்.
அறிவிப்பவர்: பள்ல் பின் அப்பாஸ் (ரலி) ஆதாரம்: புகாரி (1685)
குர்பானி கொடுப்பது
இனி அடுத்த செயல், அறுத்து பலியிடுவதாகும்.
ஹஜ்ஜின் செயல்களில் சிறப்பானது எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'தல்பிய்யாவை உரத்த குரலில் கூறுவதும், ஒட்டகத்தை அறுத்து பலியிடுவதும்,' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ பக்ர் (ரலி) ஆதாரம்: புகாரி (757)
தனியொரு நபர் ஒரு ஆட்டையோ, அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ, ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம்.
ஹுதைபிய்யா வருடத்தில் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையும், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் அறுத்துள்ளோம் அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி (828)
ஹாஜிகள் குர்பானி கொடுக்கும் இடத்திற்கு வந்து குர்பானிக்காகப் பிராணிகளை வாங்கி அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர்.
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (திருக் குர்ஆன் 22:37)
ஆண்டு தோறும்- வெளி நாடுகளிலிருந்து இலட்சக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், ஒட்டகங்களும், இறக்கு மதி செய்யப் படுகின்றன.இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பிராணிகளும், கால் நடை மருத்துவர்களால், முறையாகப் பரிசோதிக்கப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன.ஹாஜிகள் நேரடியாகச் சென்று, பிராணியைத் தேர்ந்தெடுத்து, விலை கொடுத்து வாங்கி அவரவர் தம் கரங்களால் அறுக்கின்றனர். இயலாதவர்கள், அடுத்தவர்களை நியமித்து அறுக்கச் செய்கின்றனர்.இது போக, ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து- வங்கிகளில் கூப்பன்கள் விற்கப்படுகின்றன. வங்கிகளில் பணம் செலுத்திவிட்டால், துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாளன்று பிராணிகள் அறுக்கப் பட்டு உரிய முறையில் பக்குவப் படுத்தப்பட்டு- வெளி நாடுகளில் உள்ள ஏழை முஸ்லிம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அரசு கண்காணிப்பில், பல்வேறு இஸ்லாமிய சங்கங்கள் இப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்படுகின்றன.புனிதத் தலங்கள் அனைத்திலும், சிறப்புக் கிளைகளை அமைத்து அல்ரஜ்ஹி வங்கி குர்பானி கூப்பன்களை விற்க ஏற்பாடு செய்துள்ளது. ஹாஜிகளுக்காக இச்சேவையை அல்ரஜ்ஹி வங்கி இலவசமாகச் செய்கிறது.
ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான டன் இறைச்சி- பதப்படுத்தப்பட்டு- இந்த முறையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எத்தனையோ நாடுகளில் வாழும் ஏழை முஸ்லிம்கள் இதனால் பயன் பெறுகின்றனர்.
அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிட்டு- அளப்பெறும் நன்மையை அடைந்த புனித ஹாஜிகள், தமது அடுத்த செயலாகிய- தலை முடியைக் களையத் தயாராகின்றனர்.
தலை முடி களைதல்
ஆண்கள் தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொள்ளவோ, கத்தரித்துக் கொள்ளவோ செய்யலாம், தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொள்வதே சிறந்தது.
நபி (ஸல்) அவர்கள் 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!' எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள், 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்' என்றனர். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!' என்று பிரார்த்தித்தபோது தோழர்கள், 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்' என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது தடவையாகவும், அதைக் கூறிய போது 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம்: புகாரி (1728)
தலை முடியை முழுவதுமாக மழித்துக் கொண்டோ, அல்லது குறைத்துக் கொண்டோ, ஹாஜிகள் இஹ்ராமிலிருந்து விடுபடுகின்றனர். இது வரை அணிந்திருந்த இஹ்ராம் உடைகளைக் களைந்து விட்டு- வழக்கமாக அணியும் ஆடைகளை அணிந்துக் கொள்கின்றனர்.இனி அடுத்தக் கடமை 'தவாபுஸ் ஸியாரா' செய்வதாகும்.
தவாபுஸ் ஸியாரா
ஹஜ்ஜின் மிக மிக முக்கியமான செயல்களில் இந்தத் தவாபுஸ் ஸியாராவும் ஒன்று. இந்தத் தவாபைச் செய்யாதவரை ஹஜ் நிறைவு பெறாது.ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து, குர்பானி கொடுத்து, தலை முடி நீக்கி, இஹ்ராமிலிருந்து விடுபட்ட ஹாஜிகள், தவாபுஸ்ஸியாராச் செய்வதற்கு கஃபத்துல்லாஹ்வை நோக்கி புறப்படுகின்றனர்.
இன்றைய தினம் செய்யும் இந்தத் தவாபுஸ்ஸியாரா என்பது மிகவும் சிரமமானது தான். இது நாள் வரை ஹாஜிகள், எத்தனையோ முறை- புனிதக் கஃபாவை தவாப் செய்திருக்கலாம். அப்போதுள்ள கூட்ட நெரிசலே அதிகமாக இருந்திருக்கும். ஆனால் இன்று பெரும்பாலும் அத்தனை இலட்சம் ஹாஜிகளும், தவாபுஸ்ஸியாராவை நிறைவேற்ற மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து விடுகின்றனர்.
இன்றைய தினம், மஸ்ஜிதுல் ஹராமில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. சுப்ஹானல்லாஹ்! இன்று தவாபை முடித்து வெளியில் வருவது என்பது இலேசான காரியமல்ல.கஃபா என்னும் இறையாலயத்தை- இன்றைய தினம் புனித ஹாஜிகள் சுற்றி வரும் காட்சியை- மஸ்ஜிதுல் ஹராமின் இரண்டாவது- மூன்றாவது தளங்களில் நின்று பார்த்தால்- பார்த்துக் கொண்டே இருக்கலாம். கண்கொள்ளாக் காட்சி! ஏறக் குறை இருபது இலட்சம் பேர் சுற்றுகிறார்கள். கடல் அலையைப் போல் - மனித வெள்ளம் சுற்றிச் சுற்றி வட்டமிடுகின்றது.
ஏழுச் சுற்றுக்களை முடித்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். புதிதாக நுழைபவர்கள் தங்கள் சுற்றுக்களைத் தொடங்குகின்றனர்.இன்று காலை முதல் தொடங்கிய நெரிசல்- இன்று பகல் முழுவதும் நீடிக்கின்றது. இரவு முழுவதும் தொடர்கின்றது. உணவை மறந்து, உறக்கத்தை மறந்து, எப்படி இவர்கள்- கொஞ்சம் கூடக் களைப்பு இல்லாமல் சுற்றுகிறார்கள்.
இன்றைய தினம் காலையிலிருந்து ஒவ்வொரு செயலாகச் செய்து முடித்து விட்டு- எவ்வளவு சுறுசுறுப்பாக தவாபும் செய்கின்றனர்! இயலாமையும் சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போக- இளமையும் வலிமையும் எங்கிருந்து இவர்களுக்கு வந்தது?இறைவனின் கட்டளையை சிரமேற் கொண்டு வந்தவர்களுக்கு, உற்சாகமும், உத்வேகமும் தாமாக வந்து விடுமோ!
இன்றைய தினத்தின் செயல்களை, தவறுதலாகவோ, அறியாமையாலோ, முன் பின் மாற்றிச் செய்து விட்டாலும் குற்றமில்லை.
நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது நான் வந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, 'நான் இதற்கு முன் இது என நினைத்தேன்!' என்றார். இன்னொருவர் எழுந்து 'நான் இதற்கு முன் இது என நினைத்தேன்! பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்! கல்லெறிவதற்கு முன் பலியிட்டு விட்டேன்.' என இது போன்றவற்றைக் கூறலானார். அவ்வனைத்திற்குமே, நபி (ஸல்) அவர்கள், 'குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்' என்றே கூறினார்கள். அன்றைய தினம் வினவப்பட்ட எல்லாவற்றிற்குமே அவர்கள் 'குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்' என்றே கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) ஆதாரம்: புகாரி (1737)
துல் ஹஜ் 11 ஆம் நாள் -
ஹஜ்ஜின் 4 ஆம் நாள்
தவாபுஸ்ஸியாராவை முடித்த ஹாஜிகள். ஏற்கனவே 8 ஆம் நாள் மினாவில் தங்கியிருந்த கூடாரங்களுக்கு- மறுபடியும் வந்து சேருகின்றனர்.இன்று முதல், மூன்று தினங்கள், ஒவவொரு நாளும், சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு- மூன்று ஜம்ராவுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாளில் (தல் ஹஜ் 10 ஆம் நாள்) முற்பகல் நேரத்தில் கல்லெறிந்தார்கள்.மறு நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிந்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: புகாரி (பாடம் 134)
ஹாஜிகள் அவரவர் தம் கூடாரங்களிலிருந்து, ஜம்ராவுக்குச் சென்று கல்லெறிகிறார்கள். இன்று முதல், மூன்று தினங்களுக்கு தினமும் ஜம்ரத்துஸ் ஸுக்ரா, ஜம்ரத்துல் உஸ்தா, ஜம்ரத்துல் அகபா, ஆகிய மூன்று ஜம்ராக்களிலும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும் போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்று கைகளை உயர்;த்தி துஆச் செய்வார்கள். பிறகு இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு இடது பக்கமாகப் பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நின்று கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள் பின்பு அங்கிருந்து திரும்பி விடுவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள். அறிவிப்பவர்: ஸுஹ்ரி (ரலி) ஆதாரம்: புகாரி (1753)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செய்துக் காட்டிய அதே முறையைப் பின்பற்றி ஹாஜிகள் ஜம்ராக்களில் கல் எறிகிறார்கள்.
முதல் நாள் இருந்த அளவுக்கு மக்கள் நெரிசல் அடுத்தடுத்த நாட்களில் இல்லை. அவரவர் தம் வசதிப்பட்ட நேரங்களில் வருவதால்- கூட்டம் சற்று குறைவாகத் தெரிகிறது.ஒவ்வொரு நாளும் கல்லெறிந்து விட்டு மினாவில் அவரவர் கூடாரங்களில் சென்று ஹாஜிகள் ஓய்வெடுக்கின்றனர். கிடைக்கின்ற நேரமெல்லாம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழிக்கின்றனர்.
மினாவில், பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கும் அந்தந்த நாட்டு ஹஜ் கமிட்டியினராலும்- தனியார் ஹஜ் சர்வீஸ்கள் மூலம் வந்தவர்களுக்கு அந்தந்த நிறுவனத்தினராலும், தனித்தனியே கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன.ஒவ்வொரு நாட்டினருக்காகவும், அமைக்கப்பட்டுள்ள கூடாரப் பகுதிகளில் அந்தந்த நாட்டு தேசியக் கொடி அடையாளத்துக்காக பறக்கவிடப்பட்டுள்ளது.
உள் நாட்டிலிருந்து தனிப்பட்ட முறையில் வந்தவர்கள் கூடாரங்களை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்கின்றனர்.கூடாரங்கள் கிடைக்கப் பெறாதவர்கள், தங்குவதற்கென- நீண்ட பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கங்களில் இலவசகமாகத் தங்கிக் கொள்ளலாம். எல்லா இடங்களிலும் தாராளமாகத் தண்ணீர் வசதியும் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
துல் ஹஜ் 12 ஆம் நாள்
ஹஜ்ஜின் 5 ஆம் நாள்
முன் தினத்தைப் போலவே - இன்றும் ஹாஜிகள் சூரியன் உச்சியை விட்டு சாய்ந்த பிறகு தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டு மூன்று ஜம்ராக்களிலும், முறையே ஏழு கற்கள் வீதம் எறிகின்றனர்.
முதியவர்கள் மற்றும், இயலாதவர்களுக்குப் பகரமாக மற்றவர்கள் கல்லெறியலாம். பகரமாக எறிபவர்கள், முதலில் தமக்காக எறிந்துக் கொள்ள வேண்டும். பிறகு தம்மைப் பகரமாக நியமித்தவர்களுக்காக எறிய வேண்டும்.வழக்கம் போல் ஹாஜிகள் ஒவ்வொரு கல்லாக எறிகின்றார்கள். ஒவ்வொரு கல் எறியும் போதும் தக்பீர் கூறுகிறார்கள். முதல் இரண்டு ஜம்ராக்களிலும் நின்று துஆச் செய்து விட்டு மூன்றாவது ஜம்ரவாகிய ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்ததும், நின்று துஆச் செய்யாமல் திரும்பி விடுகின்றனர்.
துல் ஹஜ் 13 ஆம் நாள்
ஹஜ்ஜின் 6 ஆம் நாள்
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை.(இது இறைவனை) அஞ்சுவோருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவனிடம் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்! (திருக் குர்ஆன் 2:203)
11 ஆம் நாளும், 12 ஆம் நாளும் ஆகிய இரு தினங்கள் மட்டும் கல்லெறிந்து விட்டு புறப்படுபவர்கள் புறப்படலாம். ஆனால் மஃரிபுக்கு முன் புறப்பட்டு விட வேண்டும். இன்று மினாவில் தங்கினால், 13 ஆம் நாளும் கல்லெறிந்து விட்டுத் தான் புறப்படவேண்டும்.
இரண்டு நாட்கள் மட்டும் கல்லெறிந்து விட்டு புறப்படுபவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள் 13 ஆம் நாளும் கல்லெறிந்து பூரணமாகத் தங்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றி விட்டுத் தான் புறப்படுகின்றனர்.
இன்றைய தினத்துடன் புனித ஹஜ்ஜின் அனைத்து செயல்களும் நிறைவடைகின்றன.எந்தப் புனிதக் கடமையை நிறைவேற்ற- இப்பூவுலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும்- இப்புனித பூமிக்கு வந்தனரோ! அந்தப் புனிதக் கடமையின் அனைத்து செயல்களும் இன்றோடு முடிவடைந்து விட்டன. அல்ஹம்து லில்லாஹ்

ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவனத்தைத் தவிர வேறில்லை என்பது நபி அமாழி

புனிதப் பயணம் தொடரும் இன்ஷா அல்லாஹ்

விருப்ப மொழியில் குர்ஆன்