Aug 14, 2007

அழகிய முகமன்

அஸ்ஸலாமு அலைக்கும்
மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது அழகிய முகமன் கூறித் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது இனம் நிறம் மொழி தேசம் மதம் இவை எல்லாவற்றையும் கடந்த ஓர் அழகிய பண்பாடு.

இவ்விதம் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன், வெறுப்பு குரோதம், பகை, உயர்வு தாழ்வு ஆகிய அனைத்தையும் அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக அன்பு, பாசம், சகோதரத்துவம், ஆகியவற்றை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது எனலாம்.

ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களை வெறுக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரிடம் சென்று அழகிய முகமன் கூறி கை கொடுத்தால் அதுவரை அவருக்கு உங்கள் மீதிருந்த வெறுப்பின் அளவு குறைந்து விடும். மென்மேலும் தொடர்ந்து இதனைக் கடைப் பிடித்தால் வெறுப்பு படிப்படியாகக் குறைந்து இறுதியில் அடியோடு அவர் மாறிப்போவதைக் காணலாம்.

ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் இந்த அழகிய முகமன் எப்படி இருக்க வேண்டும்? அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து நேரத்திலும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் தானே முகமன் கூறுவதன் நோக்கம் நிறைவேறும்.

உலகின் பலதரப்பட்ட மக்கள், பல்வேறு மதத்தினர், பல் வேறு மொழி பேசுவோர், பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றுவோர் எப்படியெல்லாம் முகமன் கூறும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்? கொஞ்சம் அலசி ஆராய்ந்து சரியானதைத் தெர்ந்தெடுப்போமா?

ஆங்கிலேய ஆட்சி ஒரு காலத்தில் உலகின் பெரும் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் உலகம் முழுவதும் அம் மொழி வெகு எளிதில் பரவிற்று. பல்வேறு நாடுகளிலிருந்தும் அவர்கள் அடித்து விரட்டப்பட்டாலும், அவர்களது மொழி மட்டும் பலமாக வேரூன்றி கோலோச்சிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

நாகரிகம் என்று கருதி பலரும் ஆங்கில மொழியில் முகமன் கூறுவதைக் காண்கிறோம். ஒருவரையொருவர் சந்திக்கும் போது குட்மார்னிங் சொல்கிறார்கள்.இதையே மாலைப் பொழுதுக்கு வேறு மாதிரியும் இரவுப் பொழுக்கு வேறு மாதிரியும் சொல்ல வேண்டும். பகல் பொழுதில் ஒருவரைச் சந்திக்கும்போது 12 மணிக்கு முன் ஒரு வார்த்தை, அதன் பின் வேறு வார்;த்தை என்று மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வரை சந்திக்கும்போது அவருக்கு வாழ்த்துச் சொல்வதா? அல்லது மணியைப் பார்த்துக் கொண்டிருப்பதா?

நமது நண்பர் அல்லது உறவினரைச் சந்திக்கிறோம் அல்லது அவர்கள் வீட்டுக்குச் செல்கிறோம். அவர்கள் குடும்பத்தில் ஒரு இறப்பு அல்லது துக்கம் நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு எப்படி குட்மார்னிங் சொல்ல முடியும்? அது அவருக்கு நல்ல காலைப் பொழுதல்லவே! பேட் மார்னிங் என்றல்லவா சொல்ல வேண்டும். இது பழக்கமில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் நாகரிகமும் இல்லையே!

சிலர் ஹலோ என்கிறார்கள், அவரும் பதிலுக்கு ஹலோ என்பார். சிலர் ஹாய் என்பர்கள். பதிலுக்கு ஒரு ஹாய். அதிகம் ஆங்கிலம் படித்தவர்கள் ஹவ் டு யு டு சொல்வார்கள். பதிலுக்கும் அதே ஹவ் டு யு டு தான். இதில் அழகிய முகமன் எங்கே இருக்கிறது?

தமிழ் பேசும் கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலர் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்கிறார்கள். அதனைக்கேட்டவரும் 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்று மறு மொழி சொல்கிறார். ஏசுவைப் புனிதராகக் கருதும் அவர்களைப் பொருத்தவரை இந்த ஸ்தோத்திரம் சரியானதாக இருக்கலாம், அதனை இங்கு நாம் விமரிசிக்கவில்லை. ஆனால் இது எப்படி ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன் ஆக இருக்க முடியும்?

வடநாட்டின் சில பகுதிகளில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ராம் ராம்' என்பர். அதனைக் கேட்பவரும் அதற்கு மறுமொழியாக 'ராம் ராம்' என்பார். அவர்கள் கடவுளாகக் கருதி வணங்கும் இராமரை நினைவு படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் சந்திப்பவருக்கு உரிய வாழ்த்து இதில் என்ன இருக்கிறது?

இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்துச் சகோதரர்கள் பலர் 'நமஸ்தே' என்றோ 'நமஸ்கார்' என்றோ கூறுகின்றனர். மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி பேசும் தென்னாட்டு இந்துச் சகோதரர்கள் 'நமஸ்காரம்' என்று கூறுவர். தமிழர்கள் பலரும் இதையொட்டி 'வணக்கம்' என்கின்றனர். இவை அனைத்தும் 'நான் உங்களை வணங்குகிறேன்' என்ற பொருளையே தருபவை.

யாரை யார் வணங்குவது? அனைவருமே அவர் எம்மதத்தவராயினும் கடவுளை மட்டும் அல்லவா வணங்க வேண்டும்? மனிதரை மனிதர் ஏன் வணங்க வேண்டும்? 'வணங்குதல் என்னும் பொருளில் சொல்வதில்லை முகமன் கூறுமுகமாகத்தான் சொல்கிறோம்' என்று சிலர் வாதிடலாம். அப்படியானால் 'வணக்கம்' என்னும் சொல்லுக்கு வேறு என்ன தான் பொருள்?
முகமன் கூறுமுகாக அவர்கள் சொல்லும் 'வணக்கம்' கூட பெரியவர் சிறியவருக்கோ, ஆசிரியர் மாணவருக்கோ, உயர்ந்தவர் தாழ்ந்தவருக்கோ சொல்வதில்லை. (உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது எந்த முறையிலும் இருக்கலாம்)

இவை எல்லாவற்றையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இஸ்லாம் சொல்லும் அழகிய முகமன் எப்படி என்று பார்ப்போமா?

ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'அஸ்ஸலாமு அலைக்கும்'(இறைவின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!) என்று ஒருவர் சொல்ல அதனைக் கேட்டவர் 'வ அலைக்குமுஸ் ஸலாம்' (அவ்வாறே உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)

ஆகா! என்ன அற்புதமான வார்த்தைகள்! எத்துனைச் சிறந்த முகமன்! உயர்ந்தவர் தாழ்ந்தவர், பெரியவர் சிறியவர், ஆண்கள் பெண்கள், பெற்றோர் குழந்தைகள், ஆசிரியர் மாணவர், முதலாளி தொழிலாளி, அனைவரும் சொல்லலாம் அனைவருக்கும் சொல்லலாம். மகிழ்ச்சி, துக்கம், கோபம், குதூகலம் எந்த நேரத்திலும் சொல்லலாம். எந்த நேரத்திலும் சொல்லாம், யாரும் சொல்லலாம். யாருக்கும் சொல்லலாம். இனம் புரியாத பேரின்பம் அடைவீர்கள். எங்கே! ஒரு முறை சொல்லுங்கள் பார்ப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!)

1 comments:

மஸ்தூக்கா said...
This comment has been removed by the author.

விருப்ப மொழியில் குர்ஆன்